World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

War in Sri Lanka heightens tensions with India

இலங்கையில் நடைபெறும் யுத்தம் இந்தியாவுடன் பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குகிறது

By Wije Dias
10 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமைகளை தணிப்பதற்கு கொழும்பும் புதுடில்லியும் முயற்சித்த போதிலும், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முறிக்கின்றது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் பெற்றுள்ள முன்னேற்றங்கள், 200,000 யுத்த அகதிகளின் தலைவிதி தொடர்பாக தென்னிந்தியாவில் எதிர்ப்புக்களை தூண்டிவிட்டுள்ளது மட்டுமின்றி, புலிகளின் தோல்வியினால் உருவாகும் சிக்கல்களை பற்றி இந்திய ஸ்தாபனங்களின் கவலைகளையும் எழுப்பிவிட்டுள்ளன.

அக்டோபர் 26 அன்று இந்தியத் தலைவர்களை சந்திப்பதற்காக புதுடில்லிக்கு தனது சகோதரரான பசில் இராஜபக்ஷவை இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அனுப்பி வைத்தார். யுத்தத்தை நிறுத்துமாறு இலங்கையை இந்திய அரசாங்கம் நெருக்காவிட்டால் தேசிய பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் விடுத்துள்ள அச்சுறுத்தலே இந்த பயணத்திற்கான உடனடி தூண்டுகோலாகும். பல தமிழ் நாட்டுக் கட்சிகள் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற நிலையில், அத்தகைய நகர்வு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை கீழறுக்கக் கூடும். இந்த அச்சுறுத்தல், யுத்த அகதிகள் தொடர்பாக தமது "ஆழமான கவலையை" வெளிப்படுத்துவதன் பேரில் இலங்கை தூதருக்கு அழைப்பு விடுக்க சிரேஷ்ட இந்திய அதிகாரிகளை நெருக்கியது.

பசில் இராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜியை சந்தித்ததோடு இருவரும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அந்த அறிக்கை, "பயங்கரவாதம் உறுதியுடன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளதாக" தெரிவித்த அதே சமயம், "வடக்கு உட்பட தீவில் சமாதானப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றை நோக்கி நகர வேண்டிய தேவையை பற்றியும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாகவும்" பிரகடனம் செய்தது. "இலங்கையில் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மீது அக்கறை செலுத்துவதாக" முகர்ஜிக்கு இராஜபக்ஷ உறுதியளித்ததோடு வட இலங்கைக்கு 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்புவதாகவும் இந்தியா அறிவித்தது.

யுத்த அகதிகளின் அவலம் தொடர்பாக இந்தியாவில் நிலவும் கவலை பற்றி வாயில் உபசாரம் செய்த அதே வேளை, அந்த அறிக்கை இராஜதந்திர மொழியின் மூலம் "பயங்கரவாத" புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தொடர்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பச்சை கொடி காட்டுகின்றது. "அரசியல் தீர்வு" பற்றி குறிப்பிடப்பட்டாலும், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தம் மற்றும் சர்வதேச ரீதியில் அனுசரனையளிக்கப்பட்ட புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்புவது பற்றி யோசனைகள் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. 2006 நடுப் பகுதியில் யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறி தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்த ஜனாதிபதி இராஜபக்ஷ, இறுதியாக இந்த ஆண்டு ஜனவரியில் அதை கிழித்தெறிந்துவிட்டார்.

இந்த சத்திப்பை அடுத்து, இராஜினாமா அச்சுறுத்தலை விலக்கிக் கொள்ளுமாறு முதலமைச்சர் எம். கருணாநிதியை அறுவுறுத்துவதற்காக முகர்ஜி தமிழ் நாட்டுக்கு விரைந்தார். கருணாநிதி இதற்கு உடனடியாக உடன்பட்டதானது, அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோரனை இலங்கையில் தமிழ் மக்கள் மீதான உண்மையான அக்கறையினால் உருவானதை விட, தமிழ் நாட்டில் யுத்த விரோத ஆர்ப்பாட்டங்களை கலைப்பதையே இலக்காகக் கொண்டிருந்தது என்பதை தெளிவாக்கியது.

கருணாநிதியின் முடிவானது தி.மு.க.வின் பங்காளியான பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) ஆத்திரம் கொண்ட பிரதிபலிப்பை தூண்டிவிட்டது. முதலமைச்சர் இலங்கை யுத்தத்தை நிறுத்துவதற்கு புது டில்லியை நெருக்கத் தவறிவிட்டார் என பா.ம.க. ஸ்தாபகர் எஸ். இராமதாஸ் விமர்சித்தார். "இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு இந்தியாவிற்கு கட்டுப்பாடுகள் உள்ளது" என பிரகடனம் செய்வதன் மூலம் தனது நடவடிக்கையை உடனடியாக நியாயப்படுத்திய கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதன் விளைவைப் பற்றி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த அரசியல் நெருக்கடி உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளதாக தோன்றிய போதிலும், புதுடில்லி முன்னர் முன்னெடுத்த கவனமான சமநிலைப்படுத்தும் செயலை இலங்கையில் நடைபெறும் யுத்தம் குழப்பிவிட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான தமிழீழ அரசுக்கான புலிகளின் கோரிக்கை இந்தியாவில் பிரிவினைவாத இயக்கங்களை மட்டுமே ஊக்குவிக்கும் என அஞ்சும் இந்திய அரசாங்கம் அந்தக் கோரிக்கையை எதிர்த்தது. அதே சமயம், தமிழ் நாட்டில் வெகுஜனங்களின் உணர்வைத் தணிப்பதன் பேரில் இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக்கொள்ள புதுடில்லி நெருக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4 அன்று இராணுவத் தளபதிகளின் முப்படை சேவைகளின் மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் நிலைப்பாட்டை சுருக்கமாகத் தெரிவித்தார். "இலங்கைத் தமிழர்களின் நலன்பற்றி இந்தியா எப்போதும் கவனம் செலுத்துகின்ற அதே வேளை, இலங்கையின் ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது" என அவர் பிரகடனம் செய்தார்.

எவ்வாறெனினும், இந்த யுத்தமானது புதுடில்லிக்கு தொடர்ந்தும் தர்ம சங்கடத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். தமிழ் நாட்டை அமைதியின்மையில் இருந்து மீட்பதன் பேரில், "மரணம் விளைவிக்காத உபகரணங்களை" மட்டும் வழங்குவதற்கு இந்தியா இலங்கைக்கான அதன் இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, இலங்கை ஆயுதங்களுக்காக இந்தியாவின் பிராந்திய எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனா உட்பட வேறு நாடுகள் பக்கம் திரும்பியுள்ளமை, இலங்கையை தனது செல்வாக்கின் ஒரு பாகமாக கருதும் புதுடில்லியின் கவலையை கிளறிவிட்டுள்ளது.

அக்டோபர் கடைசியில் இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் முகர்ஜி, "[யுத்த அகதிகள் தொடர்பான] எங்களது ஆர்வத்தில், அந்த தீவின் மூலோபாய முக்கியத்துவத்தையும் மற்றும் அது அவர்களது பாதுகாப்பு மட்டுமல்ல, அது எங்களது பாதுகாப்புடன் நெருக்கமாக பிணைந்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது," எனக் கூறினார். "நிச்சயமாக நாம் எமது கொல்லைப் புறத்தில் சர்வதேச விளையாட்டு வீரர்களின் மைதானத்தை வைத்திருக்கக் கூடாது," எனவும் அவர் தெரிவித்தார்.

பசில் இராஜபக்ஷ உடனான பேச்சுவார்த்தை பற்றி கருத்துத் தெரிவித்த முகர்ஜி, இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தனது ஆதரவை நன்கு வழங்கலாம் என்பதை சமிக்ஞை காட்டினார். "அவர்களது பாதுகாப்புத் தேவைகளை எங்களால் வழங்க முடியும், அங்கும் இங்கும் [பாகிஸ்தானில் மற்றும் சீனாவில்] பார்க்க வேண்டாம் என நாம் அவர்களுக்கு கூறியுள்ளோம்" என அவர் தெரிவித்தார். சிறிய மட்டத்திலான குண்டுத் தாக்குதல்களை நடத்த புலிகள் பயன்படுத்தும் இலகு ரக விமானங்களை கண்டு பிடிப்பதற்கு புதிய ராடார் அமைப்பு வசதிகளையும் புலனாய்வு தகவல்களையும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஏற்கனவே இரகசியமாக வழங்கி வருகின்றது.

2006 ஜூலையில் இருந்து, இலங்கை இராணுவம் புலிகளை தீவின் கிழக்கில் அவர்களின் கோட்டைகளில் இருந்து வெளியேற்றியுள்ளதோடு வடக்கில் வன்னிப் பிராந்தியத்திலும் புலிகளின் கோட்டைகளுக்குள் குறிப்பிடத்தக்களவு முன்னேறியுள்ளது. மாதக்கணக்கான கடுமையான மோதல்களின் பின்னர், புலிகளின் நிர்வாக மற்றும் இராணுவ மையமான கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகரத் தயாராகின்றது. கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்டால் அது புலிகளுக்கு அரசியல் பேரிடியாக மட்டுமன்றி அதன் இராணுவப் படைகளை பிளவுபடுத்த அச்சுறுத்துவதாகவும் இருக்கும்.

மோதல்களின் விளைவை உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலிகளிடம் 2000 ஆண்டில் ஒரு தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த இராணுவத்தை விட, இப்போது பிரமாண்டமான அளவில் ஆயுதமயப்படுத்தப்பட்ட இலங்கை இராணுவத்தை நிச்சயமாக புலிகள் எதிர்கொள்கின்றனர். அப்போதிருந்தே இலங்கை அரசாங்கம் குறிப்பாக அமெரிக்காவின் ஆதரவுடன் புலிகளை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தியதுடன் நிதி சேகரிக்கவும் ஆயுதங்களை கொள்வனவு செய்யவும் அதற்கிருந்த இயலுமையை மட்டுப்படுத்தி வந்தது.

எவ்வாறெனினும், மோதல்களைத் தீர்ப்பதற்கு மாறாக, வரம்புக்குள் கட்டுப்படுத்துதல் அல்லது புலிகள் மீதான இராணுவ வெற்றி என்பது இலங்கையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குவதோடு புதுடில்லி எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளையும் மேலும் அதிகரிக்க மட்டுமே செய்யும். 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமானது "பயங்கரவாதத்திற்கு எதிராகவோ" அல்லது "ஜனநாயகத்தை முன்னேற்றவோ" அன்றி, தமிழ் சிறுபான்மையினர் மீதான தீவின் சிங்கள தட்டுக்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை அடைவதை இலக்காகக் கொண்டு நடைபெற்று வந்துள்ளது. யுத்தத்தை தூண்டிவிட்ட தமிழர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இன பாரபட்சங்கள், பெளத்தத்தை நாட்டின் அரச மதமாக ஸ்தாபித்த அரசியலமைப்பு உட்பிரிவில் தொகுத்துக் காணப்படுகிறது.

"விடுவிக்கப்பட்ட" கிழக்கு மாகாணத்தில் இராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு சமமான மாகாண நிர்வாகத்தின் தலைமையிலான ஒரு ஆட்சியை திணித்துள்ளது. இந்த மாகாண நிர்வாகமானது கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் படுகொலைகளுக்கு பேர் போன தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி) என்ற ஆயுதக் குழுவின் தலைவரால் நிர்வகிக்கப்படுகின்றது. அத்தகைய ஒரு ஆட்சியை தீவின் வடக்குக்கும் விரிவுபடுத்துவதானது இந்தியாவுக்குள் தமிழ் அகதிகள் அலை அலையாக நுழைவதை மட்டுமன்றி, இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவது தொடர்பாக தமிழ் நாட்டில் புதுப்பிக்கப்பட்ட ஆத்திரத்தையும் தூண்டி விடும்.

புலிகளை இலங்கை இராணுவம் வெல்வது இந்தியாவில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதே புதுடில்லியின் கவலை. இதன் விளைவாக, தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகைகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்கும் ஒரு வழிமுறையாக மோதல்களுக்கு "அரசியல் தீர்வு" காண வேண்டும் என்ற வலியுறுத்தலை இந்திய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ரொபட் பிளேக், தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய போது, இந்தியாவுக்கு கொஞ்சம் பக்க ஆதரவை வழங்கினார். நீண்டகால கொரில்லா யுத்தத்தை தொடரும் புலிகளின் இயலுமையை பொறுத்தளவில் இலங்கை இராணுவம் முழுமையாக வெற்றி பெறுவது "மிக மிகக் கடினம்" என அவர் வலியுறுத்தினார். "ஐக்கிய இலங்கை என்ற வரம்புக்குள் மோதல்களுக்கு அரசியல் தீர்வு காண்பதை ஏற்றுக் கொள்ளுமாறு" இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவும் பெரும் வல்லரசுகளும் அழுத்தம் கொடுக்கும் என்பதை அவர் சமிக்ஞை செய்தார்.

வாஷிங்டனின் அரசியல் ஆதரவில் ஆழமாகத் தங்கியுள்ள அதே வேளை, ஜனாதிபதி இராஜபக்ஷ தனது அரசியல் எதிர்காலத்தை புலிகள் மீதான இராணுவ வெற்றியில் பணயமாக வைத்துள்ளார். யுத்தம் தீவின் பொருளாதார நெருக்கடியை குவித்துள்ள நிலையில், அரசாங்கம் சிங்களப் பேரினவாதத்தை கிளறிவிட்டுள்ளது. அது விமர்சகர்களை துரோகிகள் என கண்டனம் செய்வதோடு எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு மேலும் மேலும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடுகின்றது. தமிழ் மக்களுக்கு எந்தவொரு சலுகையையும் அரசாங்கம் வழங்கினால், அது இராஜபக்ஷவின் கூட்டணியில் உள்ள சிங்கள அதி தீவிரவாதிகளை தூர விலக்கிவிடும்.

இலங்கையில் இந்தியத் தலையீட்டை அனுமதிப்பதாக பசில் இராஜப்கஷவின் புதுடில்லி விஜயம் விமர்சனத்திற்கு உள்ளாகியது. "இலங்கை அரசாங்கமும் இந்திய அழுத்தத்துக்கு விட்டுக்கொடுக்கின்ற அதே சமயம் இலங்கையின் தேசிய விவகாரத்தில் தலையீடு செய்வதற்கு வழியமைப்பதற்கே தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கிவிட்டுள்ளது" என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் டில்வின் சில்வா பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். உத்தியோகபூர்வமாக எதிரணியில் இருந்தாலும், ஜே.வி.பி. மீண்டும் மீண்டும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கும் அவசரகால அதிகாரங்களுக்கும் மற்றும் பிரமாண்டமான இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளிக்கின்றது.

அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஜே.வி.பி. யில் இருந்து பிரிந்து சென்று அமைக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியும் இதே போன்று கூச்சலிடுகின்றது. அதன் தலைவர் விமல் வீரவன்ச கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்றைக் கோரினார். "இந்த சமயத்தில் இந்தியா தலையிட்டால், அது புலிகளை காப்பாற்றுவதற்கு மட்டுமேயான முயற்சியாகும்... இந்த விடயத்தில் முழு இனமும் கவனம் செலுத்த வேண்டும்," என அவர் அறிவித்தார்.

இந்த இந்திய எதிர்ப்பு வாய்வீச்சு கொஞ்சமேனும் யதார்த்தத்துடன் தொடர்புபடவில்லை. புதுடில்லி புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தொடர்ந்தும் அரசியல் ரீதியில் ஆதரவளிப்பதோடு இராணுவ உதவிகளையும் வழங்குகிறது. ஆனால், இலங்கை இராணுவத்தின் முன்னேற்றமும் அதன் விளைவாக ஏற்படும் மனிதாபிமான அழிவுகளும் இந்திய அரசாங்கத்தால் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாத அரசியல் பதட்ட நிலைமைகளை தோற்றுவிக்கும்.