World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் 

France: Alain Krivine explains the role of the "New Anti-Capitalist Party"

"புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின்" பங்கை அலன் கிறிவின் விளக்குகிறார்

By Peter Schwarz
21 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் Médiapart இன் வலைத் தள பதிப்பு நீண்ட காலமாக பிரெஞ்சு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) தலைவராக இருக்கும் அலன் கிறிவினுடன் நடாத்திய பேட்டி ஒன்றை வெளியிட்டது. இப்பேட்டி ஜனவரி இறுதியில் LCR நிறுவத் திட்டமிட்டுள்ள NPA எனப்படும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் வேலைத்திட்டம், அரசியல் பற்றி எடுத்துக் கூறுகிறது.

மூன்று விஷயங்களை கிறிவின் தெளிவாக்குகிறார்: முதலில், புதிய கட்சி ஒரு புரட்சிகரக் கட்சி என்பதைவிட ஒரு சீர்திருத்த கட்சியாக இருக்கும், அதன் நோக்கம் ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைப்பது அல்ல, மாறாக இருக்கும் முதலாளித்துவ முறையை செப்பனிட்டு சீராக்குவது என்பதாகும். இரண்டாவதாக, புதிய கட்சி பழைய, திவாலாகிவிட்ட தொழிலாளர் அமைப்புக்களுடன் முறித்துக் கொள்ளுவது என்பதை பிரதிபலிக்காமல் ஏமாற்றமடைந்துள்ள சீர்திருத்த வாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் குட்டி முதலாளித்துவ "இடதுகள்" ஆகியோருக்கு உறைவிடம் போல் ஆகும். மூன்றாவது, புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் மரபுகளை பற்றி அவநம்பிக்கையான, உதறித்தள்ளும் பார்வையை கட்சி வளர்த்துக் கொள்ளும்.

தன்னுடைய முதல் விடையில், கிறிவின் முதலாளித்துவ அரசியல் பரப்பிற்குள் இருப்பதாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். "முதலாளித்துவ முறையின் தற்போதைய "நெருக்கடி" பற்றி எப்படி LCR பகுத்தாய்கிறது?" என்று வினாவப்பட்டதற்கு, அவர் கூறும் பதில்; "இலாப முறை உந்துதலின் மேலாதிக்கம் செய்யப்படும் ஒரு முறையை அவ்வப்பொழுது தாக்கும் பெரிய நெருக்கடிகளில் இதுவும் ஒன்று."

இது தவறானது என்பதுடன் முற்றிலும் தவறான அரசியல் முடிவுகளுக்கும் வழிவகுக்கிறது.

இந்த நெருக்கடி முதலாளித்துவத்தை முறையான இடைவெளிகளில் பிடித்து பின்னர் ஒரு புதிய எழுச்சிக்கு வழிவகுக்கும், சுழற்சி முறையிலான கீழ்நோக்கிய சரிவுகளில் ஒன்று அல்ல. இது ஏற்கனவே நிதிப் பிரிவில் இருந்து உற்பத்திப் பிரிவிற்கு பரவி விட்டது; இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகளாவிய பொருளாதர பின்னடைவுக்கு வழிவகுத்துள்ளது. உலக முதலாளித்துவ முறையின் சரிவில் ஒரு புதிய கட்டத்தை இது குறிக்கிறது என்பதோடு 1914ல் இருந்து 1945 வரை உலகை புரட்சிகர வர்க்கப் போராட்டங்கள், பாசிச காட்டுமிராண்டித்தனம் மற்றும் இரு உலகப் போர்களுக்கு வகை செய்த அனைத்து வரலாற்று முரண்பாடுகளையும் கொண்டுவருகிறது.

இந்த நெருக்கடியின் இதயத்தானத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவு உள்ளது; அதன் பொருளாதார மேலாதிக்கம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தய உலக முதலாளித்துவ முறைக்கு ஒரு தற்காலிக உறுதிப்பாட்டை கொடுத்திருந்தது. இப்பொழுது தன் பொருளாதாரச் சரிவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னுடைய இராணுவ சக்தியை ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்கா பயன்படுத்த முற்பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பு உலகையும் அதன் வளங்களையும் மறு பங்கீடு செய்வதற்கு அதன் இராணுவ வலிமையை மீட்டுக் கொண்டு அதன் சொந்த முன்முயற்சிகளை எடுப்பதாக உள்ளது. இராணுவவாதம் மற்றும் சமூகப் பிற்போக்கின் வளர்ச்சி என்பவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும்.

இது தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரப் பணிகளை எதிர்கொள்ள வைக்கிறது. தொழிலாள வர்க்கம் சீர்திருத்தவாத அல்லது தொழிற்சங்க வழிமுறைகளின் அடிப்படையில் இனியும் தன்னை காத்துக் கொள்ள முடியாது; அவை தேசிய அரசு என்ற பின்னணிக்குள் வர்க்க சமரசத்தை சாதிக்கத்தான் முற்பட்டுள்ளன. உற்பத்தி பூகோளமயமாக்கல் என்பது தேசிய அரசு எல்லைகளை காலத்திற்கொவ்வாததாகவும் பிற்போக்கானதாகவும் முற்றிலும் மாற்றி முன்னேறிவிட்டது. அனைத்து சீர்திருத்தவாத அமைப்புக்களின் சீரழிவும் இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. இந்த நெருக்கடி முதலாளித்துவ சமுதாயத்தின் கட்டமைப்புக்குள்ளே தீர்க்கப்பட முடியாதது ஆகும். இது தொழிலாள வர்க்கத்தை பழைய சீர்திருத்தவாத அமைப்புக்களுடன் முறித்துக் கொள்ளும் பணியை எதிர்கொள்ள வைத்துள்ளது மற்றும் அரசியல் அதிகாரத்திற்காக போராடவும் அரசியல் முன்முயற்சியை எடுக்கவும் வைத்துள்ளது. இல்லாவிடின் சர்வாதிகாரத்திற்கும் போருக்கும்தான் இறங்கவைக்கும் நிலை எதிர்கொள்ளும். தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிசமா அல்லது காட்டிமிராண்டித்தனமா என்ற மாற்றீட்டை தீர்வுக்கு முன்வைக்கிறது.

கிறிவினுடைய முன்னோக்கு அவ்விதத்தில் இல்லை. பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி அல்லது ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் போல முதலாளித்துவ அரசியல்வாதிகளின் நெருக்கடி பற்றிய மதிப்பீட்டில் இருந்து இவருடையது கணிசமாக வேறுபடவில்லை. அவர்கள்தான் "உண்மை பொருளாதாரம்" அடித்தளத்தில் நன்றாக இருப்பதாகவும் தற்போதைய நிதிய நெருக்கடி ஒரு சில ஊக வணிகர்களின் செயலால் விளைந்தது என்றும் பிரச்சினை கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் தீர்க்கப்பட முடியும் என்றும் கூறுகின்றனர். இவர்கள் கருத்தை எதிரொலிக்கும் வகையில் கிறிவின் "உண்மையான செல்வத்தை ஒத்திராத நிதிய சொத்து" இருக்கும் நிலையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

"உடனடி நடவடிக்கைகள்" தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டும் --ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு பொது வங்கி முறை நிறுவுதல், இலாப நிறுவனங்களில் பணி நீக்கங்களுக்கு தடை, பெருநிறுவனங்களின் கணக்குப் புத்தகங்கள் பொதுப் பார்வைக்கு வைக்கப்படல், வங்கிகளின் இரகசியங்கள் வெளியிடப்பட வேண்டும், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் இவற்றை அதிகப்படுத்துவதின் மூலம் வாங்கும் திறனை அதிகப்படுத்துதல் போன்றவற்றை இவர் முன்வைக்கிறார்.

இந்த நடவடிக்கைகள் தீவிரமானதாக தோன்றினாலும், இவற்றை கிறிவின் தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான ஒரு வேலைத்திட்டத்துடன் பிணைக்கவில்லை. கட்சிகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து இவை கூறப்படுகின்றன. NPA யின் பணி தொழிலாள வர்க்கத்தை தவிர்க்க முடியாத வர்க்க மோதல்களுக்கு தயாரித்தல் என்பதற்காக சீர்திருத்த, ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்க கருவிகளின் முடக்கும் செல்வாக்கில் இருந்து முறிப்பது என்று இல்லாமல் உள்ளது. மாறாக இது இக்கருவிகளுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களுடைய நலன்களுக்கு சாதாகமாக இருக்கும் கொள்கைகளை ஏற்கச் செய்யலாம் என்ற போலித்தோற்றத்தை துல்லியமாக வளர்ப்பது என்பதாகத்தான் இருக்கிறது.

எந்த அளவிற்கு LCR/NPA பழைய அதிகாரத்துவ அமைப்புக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது என்பது பேட்டியின் அடுத்த பத்தியில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

NPA ஏற்கனவே பழைய கட்சிகள் மீது ஒரு சாதகமான பாதிப்பை செலுத்தி வருவதாக கிறிவின் பறைசாற்றிக் கொள்ளுகிறார்: "இது தோன்றுவதற்கு முன்பே, ஏற்கனவே அனைத்து பழைய நைந்துவிட்ட இடது கட்சிகளை மீண்டும் NPA விற்கு அல்லது [LCR/NPA வின் முக்கியஸ்தரான] ஒலிவியே பெசன்ஸநோவின் அறிக்கைகளுக்கு இணக்கமான முறையில் தங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு செய்துள்ளது. ஏற்கனவே இது பயனுடையது என்பதை நிரூபித்துக் கொண்டுவிட்டது."

பழைய அமைப்புக்கள் வலதிற்கு திரும்பிவிட்ட நிலையில் திகைத்து நடுவழியில் இடது புறத்தில் நிறுத்தப்பட்டுவிட்டவர்களுக்குத்தான் குறிப்பாக கிறிவினுடைய முறையீடுகள் உள்ளன. "NPA வேலைத்திட்டம் அனைத்து சிந்தனைப் போக்குகளுக்கும் ஒரு அரசியல் நெறிகொடுக்கும் வகையை கொண்டுள்ளது; முதலாளிகள் மற்றும் சார்க்கோசி அரசாங்கத்தின் இணையற்ற தாக்குதல்களை எதிர்க்கும் அனைவருக்கும் "எல்லோரும் ஒன்றாக ஐக்கியப்படுவோம்" என்ற அணுகுமுறையை ஒருங்கிணைத்து கொடுக்கிறது."

இந்த முறையீட்டிற்கு பலரும் ஆர்வத்துடன் விரும்பியது பற்றி இவர் களிப்படைந்துள்ளார்: "இன்னும் நிறுவப்படக்கூட இல்லாத இக்கட்சி ஏற்கனவே சோசலிஸ்ட் கட்சியில் இருந்து கூட அனுபவம் நிறைய இருக்கும் உறுப்பினர்களை கொண்ட சிறு குழுவை உள்ளீர்த்துள்ளது (எதிர்பார்த்ததைவிட அதிகமானது..) அதே போல் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும், தொழிற்சங்க இயக்கத்தில் இருந்து வலுவான உறுப்பினர்களும் குடிமக்களின் "முன் முயற்சி" அமைப்புக்களில் இருந்தும் பலர் குழுமியுள்ளனர்."

அராசங்கத்தில் பங்கு பெறுதல் உட்பட எவ்வித அரசியல் உத்திமுறை, கூட்டுக்கள் ஆகியவற்றை ஏற்பதற்கும் கிறிவின் தயாராக உள்ளார்--. "NPA, போராட்டங்களுக்கு, அரசியல் மாற்றீட்டை வளர்ப்பதற்கு, ஏன் ஒரு சில இருக்கும் உறுதியான நிலைப்பாடுகளில் அதிகாரத்தை செலுத்துவதற்கும் கூட பயனுடைய ஒரு கருவி ஆகும். எதுவும் இயலாதது என்று உலகில் இல்லை; ஒரு புதிய அத்தியாயம் திறந்து கொண்டுவிட்டது."

ஒத்துழைப்பதற்கும், மற்ற அரசியல் சிந்தனைப் போக்கு உடையவர்களின் வேட்பாளர்களுடன் இணைந்த பட்டியலை தயாரிக்கவும் தன் விருப்பத்தை கிறிவின் அறிவித்துள்ளார். இவருடைய ஒரே நிபந்தனை: "சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அரசாங்கங்களில் பங்கு கூடாது" என்பதாகும்; இத்தாலியில் Refounded Communism, ஜேர்மனியில் இடது கட்சி ஆகியவை கூட்டணி அரசாங்கங்களில் சேர்ந்து கொள்ள இதேபோன்ற நிபந்தனைகள்தான் போட்டன.

இத்தகைய அறிக்கைகளுக்கு அதிக அர்த்தம் கிடையாது. இத்தகைய உறுதிமொழிகளுக்கான காலக் கெடு மிகக் குறைவுதான் இதைத்தவிர, பலவித ஒத்துழைப்பு வடிவமைப்புக்களும் உள்ளன. 1936ம் ஆண்டு பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிரப்போக்குடைய கட்சிகளுடன் கூட்டு கொண்டிருந்த Léon Blum தலைமையிலான மக்கள் முன்னணி அரசாங்கத்தில் நேரடியாக பங்கு கொள்ளவில்லை. ஆயினும்கூட Blum இன் முக்கியமான தூணாக CP செயல்பட்டது; பாராளுமன்றத்தில் அவருடைய அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்து, அக்காலக்கட்டத்தில் இருந்து மிகச் சக்தியவாய்ந்த வேலைநிறுத்த இயக்கத்தை நெரிக்கும் வகையில், பிரெஞ்சு முதலாளித்துவ முறை தப்பிப் பிழைப்பதற்கு உதவும் வகையில் ஆதரவைக் கொடுத்தது.

ஒரு வருங்கால பிரெஞ்சு அரசாங்கத்தில் NPA பங்கு ஏற்குமா என்பதற்கு காலம்தான் விடையிறுக்க முடியும். தற்பொழுது இதன் மிக முக்கியமான பணி ஒரு புதிய தொழிலாளர்கள், இளைஞர்கள் தலைமுறையை புரட்சிகர தொழிலாளர்கள் இயக்கத்தின் மரபியத்தை பெற்றுக் கொள்வதில் இருந்து துண்டித்து விடுவது என்பதாகத்தான் உள்ளது. இவ்விதத்தில் இது ஸ்பெயின் நாட்டின் POUM செயற்பாட்டை ஒத்துள்ளது; ட்ரொட்ஸ்கி அதன் பங்கை கீழ்க்கண்ட விதத்தில் விளக்கினார்; "ஒரு பொது "இடது" சூத்திரத்தின் மூலம் POUM தலைவர்கள் ஸ்பெயினில் ஒரு புரட்சிகரக் கட்சி உள்ளது என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி உண்மையான தொழிலாள வர்க்க, வளைக்க முடியாத போக்குகள் தோன்றுவதை தடுத்து நிறுத்தினர்." இவ்விதத்தில் செயல்படுகையில், "POUM, "ஸ்பானிய பெரும் துன்பியலுக்கு ஒரு மகத்தான பொறுப்பைக் கொண்டது." என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார்.(1)

மார்க்சிச இயக்கத்தின் மரபியம் பற்றி முற்றிலும் உதறித்தள்ள கிறிவின் தயாராக உள்ளார். மிகப் பெரிய கோட்பாட்டு மற்றும் அரசியல் விவாதங்கள் எப்படி காலம் கடந்துவிட்ட "இசம்கள்" பற்றிய விவாதத்தினால் மில்லியன் கணக்கான மக்களுடைய விதியை நிர்ணயித்தன என்பதை அவர் இகழ்வுடன் எள்ளி நகையாடுகிறார்.

"இதுகாறும் ஸ்ராலினிசம், மாவோவிசம், அராஜகவாதம், ட்ரொட்ஸ்கிசம் இன்னுமை பலவித "இசம்கள்" பற்றி கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களை உறுப்பினர்களை கொள்வதில் எங்களுக்கு இடர்பாடுகள் இருந்தன. இன்று, புரட்சியாளர்கள் மில்லியன் கணக்கான மக்களால் கேட்கப்படுகின்றனர்; அவர்களுடைய போராட்டங்கள் மறுக்கப்படவில்லை என்றாலும், ஒரு மக்கள் கட்சியை வளர்க்க முற்படுகின்றனர்; இது எங்களை கூட்டாகச் சேர்ந்து சொல்லாட்சியை மாற்றவும், நாங்கள் செயல்படும் வழிவகைகள், முறைகள் ஆகியவற்றை மாற்றவும் கட்டாயப்படுத்தியுள்ளது" என்று கிறிவின் கூறினார்.

ட்ரொட்ஸ்கியின் மரபியத்தையும் கிறிவின் உறுதியாக உதறித்தள்ளியுள்ளார்; இதுவரை அதைத்தான் (போலித்தனமாக) LCR இன் நிலைப்பாடு எனக் கூறி வந்தது. "சமூகத்தை புரட்சிகரமாக்க முற்பட்டும் ஒரு கட்சி என்ற முறையில் NPA "ட்ரொட்ஸ்கிச கட்சியாக" இருக்காது. மாறாக, தொழிலாளர் இயக்கத்தில் உள்ள பல மரபியங்களில் இருக்கும் சாதகக் கருத்துக்களை இணைக்கும்; அத்துடன் உலகந்தழுவிய முறை, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பெண்ணுரிமை வாதிகள் மற்றும் சிறிதும் மதிப்பில் குறைவில்லாத மரபார்ந்த கட்சிகள் மற்றும் குழப்ப இயக்கத்தில் இருந்து வருபவரின் அனுபவங்கள் ஆகியவற்றின் சிறப்பான அளிப்பும் ஒருங்கிணைக்கப்டும்."

இத்தகைய சமரசத்திற்கு இடமில்லாத அரசியல் போக்குகளை ஒரு அரசியல் கலவையாக சந்தர்ப்பவாத முறையில் இணைப்பது என்பது ஒரு பிற்போக்குத்தன செயல் ஆகும். ஸ்ராலினிசத்தையும், ட்ரொட்ஸ்கிசத்தையும் கலந்த முறையில் இணைக்க முடியாது. அவற்றைப் பிரிப்பது கருத்து வேறுபாடுகள் மட்டும் இல்லை; ஒரு குருதி வெள்ளம் என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார். இத்தாலிய பாசிச தலைவர் முசோலினியே ஸ்ராலினிச ஆட்சி பாசிஸ்ட்டுக்களைவிட அதிக கம்யூனிஸ்ட்டுக்களை கொன்றது என கூறினார். ட்ரொட்ஸ்கிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையே இருக்கும் மோதல் என்பது சர்வதேச தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மிக உயர்ந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் வெளிப்பாடு என்பது அறியப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் தோல்விகளுக்கு ஸ்ராலினிசம்தான் பொறுப்பு; அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடித்தது. இதே கருத்தாய்வு சீர்திருத்த வாதிகள் மற்றும் அராஜகவாதிகள் மார்க்சிச இயக்கத்தின்மீது கொண்டிருந்த மோதல் பற்றியும் கூறமுடியும்.

ஒரு புரட்சிகர சோசலிச மூலோபாயம் என்பது கடந்தகாலப் போராட்டங்களின் படிப்பினைகளை உய்த்துணர்ந்த விதத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட முடியும். வரலாற்றில் இருந்து படிப்பினைகளை கற்று, முந்தைய வெற்றி தோல்விகளில் இருந்து படிப்பினைகளை பற்றி எடுக்கும் விதத்தில்தான் தொழிலாள வர்க்கம் ஒரு புதிய புரட்சிகர போராட்ட காலத்திற்கான தயாரிப்பை கொள்ள முடியும். இப்படிப்பினைகளின் இதயத்தானத்தில் ஸ்ராலினிசம், சீர்திருத்த வாதம், பப்லோவாதத் திருத்தல்வாதம் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதிகள் பலவற்றிற்கும் எதிராக நான்காம் அகிலம் நடத்திய போராட்டங்களின் படிப்பினைகள் உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிப்பினைகள் இம்மரபில் சுருக்கமான நிறைந்துள்ளன.

LCR/NPA அரசியலில் இருந்து பற்றி எடுக்கப்பட வேண்டிய வரலாறு மற்றும் அரசியல் அறிவில் இருந்து தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேண்டுமென்றே துண்டிக்கப் பார்க்கிறது. அது சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின் வளர்ந்துள்ள ஒரு புதிய தலைமுறையின்பால் தன்னுடைய கவனத்தை செலுத்துகிறது; இக்காலக்கட்டத்தில் "சோசலிசத்தின் தோல்வி" எனக் கூறப்பட்ட விதத்தில் பிரச்சார முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தலைமுறைக்கு தொழிலாள இயக்கங்களின் புரட்சிகர மரபுகளை பற்றி ஏதும் தெரியாது. ஆனால் இப்புதிய கட்சி இதைச் செய்வதற்கு காரணம் அரசியல் அளவில் இத்தலைமுறைக்கு பயிற்சி கொடுப்பது என்று இல்லாமல், தத்துவம், வரலாறு பற்றி இத்தலைமுறை இழிவான கருத்தைக் கொள்ள வேண்டும் என்பதாக உள்ளது. இத்தகைய இயக்கம் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர வளர்ச்சி கொள்ளுவதற்கு ஒரு பெரும் தடையாகத்தான் இருக்கும் என்பதுடன் முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முண்டுகோலாகவும் இருக்கும்.

--------------------------------------

1) Leon Trotsky, "Centrism and the 4th International," 10 March 1939.