World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Global recession threatens mass lay-offs in China

உலகளாவிய மந்தநிலை சீனாவில் பெரும் வேலை இழப்புக்கு அச்சுறுத்துகிறது

By John Chan
28 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

உலகளாவிய பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு சீனாவை தாக்கியுள்ள நிலையில், அங்கு வேலை இழந்த தொழிலாளர்களால் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் அடுத்து வர இருப்பதன் அறிகுறியைக் காட்டுகிறது. வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகின் பிற எந்த பகுதியிலும் உள்ள தங்களது சக தொழிலாளர்களை போலவே, சீன தொழிலாளர்களும் அதிகரிக்கும் ஆலை மூடல்களால், குறிப்பாக பெரும் ஏற்றுமதி தொழிற்துறையில், பெரிதும் தாக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய உதாரணம், தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள டாங்குவான் நகரத்தில் உள்ள மிகப்பெரும் பொம்மை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஸ்மார்ட் யூனியன். அமெரிக்காவின் விளையாட்டு பொம்மை விற்பனையில் பெருநிறுவனங்களாக திகழும் மாட்டேல் மற்றும் டிஸ்னி போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்ததான இந்த நிறுவனம் அக்டோபர் 17 அன்று திவாலடைந்ததை அடுத்து சுமார் 7,000 பேர் தங்களது வேலைகளை இழந்திருக்கின்றனர்.

தொழிலாளர்கள் தங்களது சம்பளங்கள், துண்டிப்பு தொகை மற்றும் பிற சலுகைகளை கோரி உடனடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - 2,000 பேர் உள்ளூர் சங்மோட்டு மாவட்ட அரசாங்க அலுவலகம் முன்னால் கூடினர் மற்றும் 100 பேர் ஆலை வாசலில் கூடினர். கலக தடுப்பு போலிசார் கவசங்கள் மற்றும் லத்திகளுடன் அரசாங்க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆலை வாசலில் உள்ளூர் அரசாங்கம் ஒரு எச்சரிப்பு பலகையை மாட்டியிருந்தது, சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கோ அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தரவுகளை புறக்கணிப்பதற்கோ தொழிலாளர்கள் 10-15 நாட்கள் வரை சிறையிலடைக்கப்படலாம் என்பதாக. வழங்கப்படாத இரண்டு மாத சம்பளங்களுக்கு 24 மில்லியன் யுவான்களை (3.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்குவதற்கான உறுதியை அரசாங்கம் அளித்த பின்னரே இந்த மோதல் முடிவுக்கு வந்தது.

42 வயது தொழிலாளி ஒருவர் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது: "அமெரிக்காவின் இந்த பொருளாதார நெருக்கடி எங்களை கொல்லப் போகிறது. இது ஏற்கனவே எங்கள் வாய்க்கு உணவு கிட்ட முடியாதபடி செய்து விட்டது". அநேக தொழிலாளர்கள் கிராமப் பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். 25 வயது சாங் சியோகுவான் ஏஜென்சி ஃபிரான்ஸ்-பிரெஸ் (AFP) செய்தி நிறுவனத்திடம் கூறினார்: "நாங்கள் சென்ஸென் அல்லது சாங்காய்க்கு கூட சென்று விடலாமா என்று யோசித்தோம். ஆனால் அங்கும் இப்போது ஆலைகள் எல்லாம் மூட ஆரம்பிக்கின்றன". டாங்குவான் மாகாணத்தை விடவும் ஃபியூஜியான் மாகாண பொருளாதார சூழல் மோசமாக இருக்குமென்றும், அங்கு திரும்ப நேர்வது குறித்து தான் அஞ்சுவதாகவும் மற்றுமொரு தொழிலாளி தெரிவித்தார். "கடன்பட்ட ஒரு ஏழையாக, எனது குடும்பத்திற்கு உணவளிக்க முடியாத ஒருவனாக வீடு திரும்ப நான் விரும்பவில்லை" என்றார் அவர்.

ஸ்மார்ட் யூனியன் நிறுவன கலைப்பினை தொடர்ந்து தேவை குறைந்தது மற்றும் அதிகரித்த செலவு இவற்றின் காரணமாக 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு அதற்கு வந்தது - இது அநேக ஏற்றுமதி நிறுவனங்களை எதிர்கொண்டுள்ளதொரு ஒரு நிலையாகும். இந்த மாத ஆரம்பத்தில், டாங்குவான் மேயரான லீ யுக்வான் அயல்நாட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், நகரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 400 ஆலைகளுக்கும் அதிகமாக மூடப்பட்டு இருப்பதாகவும், இது கடுமையான வேலையில்லா திண்டாட்ட பிரச்சினையை முன்நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் விளையாட்டு பொம்மை ஏற்றுமதி நிறுவனங்களில் 52.7 சதவீதம் - மொத்தமாக 3,631 - ஆண்டின் முதல் ஏழு மாத காலங்களில் செயல்பாடுகளை நிறுத்தியிருப்பதாக சீனாவின் சுங்கத்துறை அமைப்பு சென்ற வாரம் அறிவித்தது.

டாங்குவான், நாட்டின் பெரிய உற்பத்தி மண்டலங்களில் ஒன்றான முத்து ஆறு சமவெளியில் (Pearl River Delta) அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் மேற்கத்திய சந்தைகளுக்கு பொம்மைகள், ஆடைகள், காலணிகள், துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற குறைந்த விலை நுகர்வு பொருட்களை பெரும் அளவுகளில் உற்பத்தி செய்கிறது. ஹாங்காங், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்தான அந்நிய முதலீட்டாளர்கள் 1980கள் முதலே இந்த பிராந்தியத்தில் ஆலைகள் நிறுவ படையெடுத்திருக்கிறார்கள்.

உற்பத்தி வளர்ச்சியுற்ற காலத்திலேயே தொழிலாளர்கள் அடக்குமுறை சூழ்நிலைகளுக்குள் நீண்ட மணித்தியாலங்களுக்கு குறைவான ஊதியத்திற்கு வேலை செய்ய தள்ளப்பட்டிருந்தனர். இப்போது மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையும் போகிறது. ஹாங்காங் தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தலைவரான சென் செங்செனின் கூற்றுப் படி, முத்து ஆறு சமவெளி பகுதியில் இருக்கும் ஹாங்காங் முதலீட்டு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் கால்வாசி அடுத்த ஜனவரிக்குள் மூடப்பட்டு விடும், 2.5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பார்கள்.

அக்டோபர் மத்தி முதல், குவாங்டாங் மாகாணமெங்கிலும் மூடப்பட்ட ஆலைகள் பலவற்றின் தொழிலாளர்களும் நெடுஞ்சாலைகள் மற்றும் பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களில் அடங்கியவை: ஒரு டாங்குவான் வளர்ப்பு பிராணிகளுக்கான பொருள் உற்பத்தி நிறுவனத்திலிருந்தான 1,000 தொழிலாளர்கள், ஒரு டாங்குவான் ஷூ உற்பத்தி ஆலையில் இருந்தான 700 தொழிலாளர்கள், ஃபுஷானில் ஒரு மின்னணு ஆலையில் இருந்தான 500 தொழிலாளர்கள் மற்றும் ஒரு பான்யு ஆடை நிறுவனத்தில் இருந்தான 500 தொழிலாளர்கள் நடத்தியவை. அக்டோபர் 13 அன்று, மூன்று மாதங்களாக வழங்கப்படாதிருக்கும் சம்பளத்தை வழங்கக் கோரி டாங்குவானின் டாங்செங் மாவட்டத்தில் மூடப்பட்ட ஒரு தைவானிய ஆலையின் 1,000 தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை கலைக்க கலக தடுப்பு போலிசார் வரவழைக்கப்பட்டு, அவர்கள் 20 க்கும் அதிகமான பேரை கைது செய்தனர்.

முத்து ஆறு சமவெளி பகுதியின் ஒரு பெரும் உற்பத்தி நகரமான ஷென்செனும் கிளர்ச்சி வளர்ச்சியுறுவதைக் காணத் தொடங்கியுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான BEP சமீபத்தில் திவால் நிலை அறிவித்து, 1,500 தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் செய்தது. தொழிலாளர்கள் அக்டோபர் 20-21 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதோடு, கடன் கொடுத்தவர்கள் மற்றும் மூலப்பொருள் விநியோகம் செய்தவர்கள் சொத்துகளை சூறையாடி விடாமல் காக்க ஆலையை காவல் காக்கும் பணியையும் செய்தனர். ஷென்சென் தொழிலாளர் வாரியம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வெறும் 300 யுவான்களை (44 அமெரிக்க டாலர்கள்) இழப்பீடாக அளித்தது.

கடிகார உற்பத்தி நிறுவனமான பீஸ் மார்க் பொறிவு கண்டதையடுத்து, ஷென்செனின் பவோன் மாவட்டத்தில் உள்ள அதன் ஆலையில் இருந்து 800க்கும் அதிகமான தொழிலாளர்கள் 4 மில்லியன் யுவான்களை வேலை துண்டிப்பு தொகையாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாங்குவா மாவட்டத்தில் இருக்கும் அதன் ஆலையில் இருந்து இன்னுமொரு 600 தொழிலாளர்கள் நகரசபை அரசாங்க அலுவலகம் முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசாங்கம் தங்களுக்கு வழங்கப்படாத சம்பளத்திற்குரிய இழப்பீட்டை தர வேண்டும் என்று கோரி லாங்காக் மாவட்டத்தில் உள்ள கேங்ஷெங் என்னும் திவாலான மின்னணு நிறுவனத்தின் 900க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஹாங்காங் டிரைவர் ஒருவரை அக்டோபர் 20 அன்று கடத்தி சென்று கோரிக்கை வைத்தனர்.

பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய போக்கு

குவாங்டாங் தொழிலாளர் கிளர்ச்சி சீன அரசாங்கம் ஏன் வளர்ச்சியை 8 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் பராமரிப்பதற்கான ஒரு அவநம்பிக்கையுடனான முயற்சியாக பொருளாதார ஊக்க பொதியை சமீபத்தில் அறிவித்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. ஒன்று வளர்ச்சியுறும் தொழிலாளர் எண்ணிக்கையை உட்சேர்க்கும் வண்ணம் போதுமான வேலைகளை உருவாக்கும் எண்ணமாக இருக்க வேண்டும், அல்லது அது ஒரு சமூக வெடிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மூன்றாவது காலாண்டுக்கான வளர்ச்சி விகிதம் ஏற்கனவே 9 சதவீதமாக மந்தப்பட்டு விட்டது - இது சென்ற ஆண்டின் சுமார் 12 சதவீதம் என்பதில் இருந்து சரிவுற்றதாகும்.

முதல் மூன்று காலாண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி 22 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவுற்றது - ஆனால் கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த அளவு 4.8 சதவீதம் வீழ்ச்சியுற்றுள்ளது. ஸ்டாண்டர்ட் சார்டர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பொருளாதார நிபுணரான ஸ்டீபன் கிரீன், ஏற்றுமதிகள் "சுழிநிலை அல்லது அதற்கும் கீழான வளர்ச்சிக்கு" கூட 2009ல் சரிவுறக் கூடும் என்று கணித்திருக்கிறார். உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஒவ்வொரு 1 சதவீத சரிவும் சீனாவின் ஏற்றுமதிகளில் 5.7 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று JP Morgan Chase சமீபத்தில் தனது மதிப்பீட்டில் தெரிவித்திருந்தது.

குவாங்டாங்கின் ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெறும் 14 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது - இது கடந்த வருடத்தின் இதே காலத்தில் இருந்த 27 சதவீதம் என்பதில் இருந்து சரிவுற்றிருக்கிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் தொழிற்துறை இலாபம் வெறும் 4 சதவீதம் மட்டுமே உயர்வைக் கண்டிருக்கிறது - கடந்த வருடத்தின் இதே காலத்தில் இது 49 சதவீதமாக இருந்தது.

ஏற்றுமதியில் சுணக்கம் என்பது முழு பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கிறது, குறிப்பாக ஒரு சமயத்தில் விலை உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருந்ததான கடற்கரை நகரங்களில் வீடுகளின் விலைகளை தாழ்வுறச் செய்திருக்கிறது. யான் யு என்னும் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்வியாளர் ஒருவர் USA Today க்கு அக்டோபர் 21 அளித்த நேர்முகத்தின் போது சொத்து குமிழி உடைவுறத் தொடங்குவதாக தெரிவித்தார். உதாரணமாக, டாங்குவானில் வீட்டு விலைகள் இந்த ஆண்டில் மட்டும் 50 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது, பல குடும்பங்கள் வீட்டின் மதிப்பை விடவும் அதன் மீதான கடனை அதிகம் கொண்டிருக்கின்றன. சீனாவில் இருந்து வெளிச்சென்றதான ஊக மூலதனம் அதிகரித்ததும் ஒரு பகுதி காரணமாக அமைந்து வித்திட்டதான வீட்டுமனை துறையில் இந்த தலைகீழான போக்கு உள்ளூர் தேவையை பலவீனப்படுத்துவதோடு பொருளாதாரத்தை கூடுதலாக மந்தப்படுத்தும்.

சமூக அறிவியலுக்கான குவாங்டாங் அகாடமியை சேர்ந்த தொழிலாளர் நிபுணர் ஷெங் ஷிசன் அக்டோபர் 17 அன்று South China Morning Post வசம் பேசும்போது, உற்பத்தியின் "பெரும் கப்பல்கள்" அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார தேக்க நிலையால் மூழ்கிக் கொண்டிருப்பதாக கூறினார். "மற்றவர்கள் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது. அது அவர்கள் எவ்வளவு வலிமையுறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது, எனவே சாத்தியமுள்ள தொழிலாளர் பிரச்சினைகளை சமாளிக்க அரசாங்கம் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று அவர் எச்சரித்தார்.

மற்றுமொரு முக்கிய பெரிய உற்பத்தி பகுதியான சாங்காயை சுற்றிய பிராந்தியத்திலும் நிலைமை வேறுபாட்டுடன் இல்லை. சீனாவின் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றான Zhejiang River Dragon Textile Printing & Dyeing Co அக்டோபர் 7 அன்று மூடி விட்டது. சாவோசிங் நகரத்தின் 4,000 தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போனது. விநியோகஸ்தர்களும் கடன் கொடுத்தவர்களும் வளாகத்தில் இருந்து சொத்துகளை சுருட்டுவதில் கவனமாய் இருக்க, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் முழு தாக்கமும் செப்டம்பரில் வெளியாகும் முன்னரே கூட சீனா முழுவதிலுமாக 10,000க்கும் அதிகமான பின்னலாடை நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்து விட்டிருந்தன.

செப்டம்பர் 13 அன்று அரசாங்கத்தால் நடத்தப்படும் CCTV ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று ஜியாங்சு மாகாணத்தில் "சில்க் தலைநகரம்" என்று அழைக்கப்படுவதான செங்ஸியின் சூழ்நிலையை மையப்படுத்தி இருந்தது. இங்கு 2,400 துணி ஆலைகளில் 250,000 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். செய்தியாளர் விளக்கினார்: "நீங்கள் நிறைய சிறிய ஆடை நிறுவனங்களை செங்ஸில் பார்க்கலாம். இவற்றில் பலவும் 30 முதல் 40 எந்திரங்கள் வரையும் 10 முதல் 20 தொழிலாளர்களையும் கொண்டு இயங்குபவை. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு பெரும் சிரமப்படுகின்றன; சில ஒரு காலத்திற்கு மூடி இருந்து விட்டு பின் மீண்டும் தொடங்குகின்றன. சில தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கின்றன என்றாலும், எனக்கு பின்னால் நீங்கள் காணும் நிறுவனத்தை போலவே அவை உற்பத்தி செய்து உற்பத்தி செய்த கையிருப்பை அதிகரிப்பதை மட்டுமே செய்கின்றன. உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, சீன புத்தாண்டுக்கு பின்னர் [பிப்ரவரி மாதம்] அவை செயல்படவில்லை. இது போன்ற நிறுவனங்களுக்கு, யார் வாங்குவார்கள் என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது".

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் நிலைமை சீரடையும் என்கிற நம்பிக்கையில் தொடர்ந்து இருக்கிறார்கள். எந்த ஷிப்டுகள் கிடைத்தாலும் அவர்கள் வேலை செய்யத் தயாராய் இருக்கிறார்கள். Hengli Chemical Fibre என்னும் ஒரு பெரிய நிறுவனத்தில் உற்பத்தி திறன் அதிகரிப்பு நுட்பங்கள் மூலம் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்கனவே 1,500 பேர் வேலை வெட்டு நிகழ்ந்திருந்தது. பெரிய நிறுவனங்கள் குறைவான தொழிலாளர்களை பணியமர்த்துவதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் வேளையில், நிறைய பேரை வேலையில் அமர்த்தியிருக்கும் சிறு நிறுவனங்கள் செலவுகளையும் சம்பளங்களையும் தான் குறைத்தாக வேண்டும், அல்லது திவாலாக வேண்டியது தான். "இது புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிரமமான சூழலில் இருத்தியுள்ளது" என்று CCTV விளக்கியது.

சில்க் ஆடைகள் தொழிலை நம்பியே தனது 90 சதவீத பொருளாதாரத்தை கொண்டிருப்பதான ஷெங்ஸ், ஒற்றை உற்பத்தி பொருளை சார்ந்திருக்கும் கிழக்கு சீனாவின் பல உற்பத்தி நகரங்களில் ஒன்று மட்டுமே. இதே போல், "ஷூ நகரங்கள்", "ஸிப்பர்" நகரங்கள், "ஏர் கன்டிஷனர்" நகரங்கள் மற்றும் "ஸாக்" நகரங்கள் என்று ஒற்றை உற்பத்தி பொருள் உற்பத்தியை சார்ந்து நூறாயிரக்கணக்கான இன்னும் சொல்லப்போனால் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வெற்றிகரமான புதிய தொழில்முனைவோர் பெரும் எண்ணிக்கையில் இருப்பதற்காக கொண்டாடப்பட்டதான இந்த நகரங்களும் பெருநகரங்களும் இப்போது உலக மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருக்கின்றன.

பொருளாதார சுனாமியின் முழு வீச்சும் வரும் மாதங்களில் சீனாவை தாக்குகிற சூழ்நிலையில், வேலை நீக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆலை முதலாளிகளுடனும், போலிசாருடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் மோதலில் ஈடுபடத் தொடங்கும் நிலை தோன்றி, பல புதிய தொழில் நகரங்களும் பொருளாதார அதிசயங்களாக பார்க்கப்பட்டதில் இருந்து மாறி அரசியல் குழப்பங்களுக்கான மையங்களாக மாற இருக்கின்றன.