World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Clashes and tensions in southern Iraq

தெற்கு ஈராக்கில் மோதல்களும், பதட்டங்களும்

By James Cogan
17 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

பிரதம மந்திரி நெளரி அல்-மலிக்கியின் ஈராக்கிய அரசாங்கத்திற்குள் இருக்கும் முக்கிய ஷியைட் கட்சியான ஈராக் இஸ்லாம் உயர் கழகத்திற்கும் (ISCI), போட்டி ஷியைட் கட்சிகளுக்கும் மற்றும் போராளிகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதற்கிடையில் தெற்கு ஈராக்கின் முக்கிய நகரங்களில் சண்டை மூண்டிருக்கிறது. அமெரிக்க படைகள் வெளிப்படையாகவே ISCI உடன் அணி சேர்ந்திருக்கின்றன.

ஷியைட் மக்கள் மீதான ஆளுமையை கோரும் ISCIஐ எதிர்க்க மறுத்ததுடன், ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுடன் கூட்டு சேர்ந்ததால் மொக்டதா அல் சதர் அணியிலிருந்து பிரிந்து வந்த ஷியைட் அடிப்படைவாத சதரிய இயக்கம் மற்றும் அதன் மஹ்தி இராணுவ போராளிகளின் பிரிவுகளே அமெரிக்க இராணுவத்தினதும் மற்றும் ISCI இனதும் முக்கிய இலக்காகவுள்ளன.

போர்நிறுத்தத்தை பயன்படுத்திக்கொண்டு சதரிய கட்டுப்பாட்டு பகுதிகளில் எதிர்பாராத தேடுதல் நடவடிக்கையை அமெரிக்க படைகளும் மற்றும்/அல்லது ஈராக்கிய அரசாங்க பாதுகாப்பு மேற்கொண்டபோது, அவைகளுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என சதர் தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு கடந்த ஆகஸ்ட்டில் தடை விதித்திருந்தார். இதில் நூற்றுக்கணக்கான அல்லது ஏறத்தாழ ஆயிரக்கணக்கான மஹ்தி போராளிகள் கொல்லப்பட்டதுடன் பலர் பாக்தாத் சிறைகளிலும், ISCI ஆல் கட்டுப்படுத்தப்படும் ஷியைட் மத நகரங்களான நஜாஃப் மற்றும் கர்பாலாவிலும் ஆல் சிறை வைக்கப்பட்டனர்.

பெப்ரவரி 23ல், போர்நிறுத்தத்தை தொடரும்படி சதர் ஆணையிட்டார். அவரின் இந்த முடிவு அவர் இயக்கத்தின் ஒரு முக்கிய பிரிவால் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. பாஸ்ரா விமானத்தளத்திலுள்ள பிரிட்டிஷ் தளத்தின் மீது, பெப்ரவரி 29 அன்று, சதரிய போராளிகளால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு ராக்கெட் குண்டுவீச்சில், பிரிட்டிஷ் இராணுவம் இந்த ஆண்டிற்கான தனது முதல் துரதிஷ்டவசமான உயிரிழப்புக்களை சந்தித்தது. கடந்த திங்களன்று, சதரிய இயக்கத்துடன் தொடர்புடைய போராளிகள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் குட் நகருக்கு வெளியே அமைந்திருந்த ஓர் அமெரிக்க தளத்தின் மீது சிறுபீரங்கியால் குண்டுவீசப்பட்டது. செவ்வாயன்று, திவானியாஹ் அருகில் தானாக வெடிக்கும் சாதனம் ஒன்றால் ஓர் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் அதில் காயமடைந்தனர். அதற்கடுத்த நாளில், நசிரியாஹ் அருகிலுள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ராக்கெட் தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.

குட் நகரின் தொழிலாள வர்க்க நகர்புறங்களில் வலுவாக இருக்கும் மஹ்தி இராணுவ உறுப்பினர்களை அங்கிருந்து விரட்டியடிக்க அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளும், ISCI கட்டுப்பாட்டிலுள்ள போலீஸூம் மற்றும் ஈராக்கிய இராணுவப்படையும் செவ்வாய் முதல் ஒரு பெரிய தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் பதிலடி கொடுத்திருக்கின்றன. குறைந்தபட்சம் 13 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஒரு போலீஸ் தளபதி ராய்டரிடம் தெரிவித்ததாவது: "நாங்கள் நான்கு குடியிருப்பு பகுதிகளில் வெளியேற்றி மற்றும் ஒரு மூத்த தலைவர் உட்பட துப்பாக்கி சுடும் மஹ்தி இராணுவ குழு ஒன்றையும் கைது செய்தோம்." என அவர் தெரிவித்தார். ஐந்தாவது குடியிருப்பு பகுதி "சுற்றி வளைக்கப்பட்டதாகவும்" அவர் தெரிவித்தார். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக போலீஸால் அறிவிக்கப்பட்ட நகர்புறத்தில் இருந்து, அமெரிக்க தளங்கள் மீது புதனன்று 11 கட்யுஷா ராக்கெட்களை வீசி போராளிகள் தாக்கினர். அமெரிக்க துருப்புகள் எதிர் நடவடிக்கையாக சிறு பீரங்கி குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசினர்.

வார இறுதியில் குட்டில் நிறைய மோதல்கள் நிகழ்ந்தன. போலீசின் திடீர் சோதனையில் குற்றஞ்சாட்டப்பட்ட பல சதரிய ஆதரவாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகிறது.

போராளிகளின் எதிர்ப்பை குற்றஞ்சாட்டியும், தமது போர்நிறுத்தத்தை மதிக்கவும்கோரி வியாழனன்று சதர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அவரின் ஆணைகள் மதிக்கப்படும் என்பது சந்தேகத்திற்குரியதே. பெப்ரவரியில், சதரிய இயக்கத்திற்குள்ளான பிரிவுகள் குறித்த ஆய்வை வெளியிட்ட சர்வதேச நெருக்கடி குழுமத்தின் பீட்டர் ஹார்லிங் ராய்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்: "கீழ்மட்ட சதரியர்களிடையே பாரிய வெறுப்பு நிலவுகிறது." எனத் தெரிவித்தார். சதரியர்களை அழிக்க ISCIக்கு அமெரிக்க இராணுவம் உதவி வருவதாக பல சதரியர்கள் அஞ்சுவதாக ஹார்லிங் கண்டறிந்தார். சதரின் போர்நிறுத்தம் அதற்கு இன்னும் அதிகமாக உதவி வருகிறது.

ISCI மற்றும் சதரிய இயக்கத்திற்கிடையிலான முரண்பாடுகள் மிகவும் ஆழமாக உள்ளன. ஷியைட் அணியின் ஒரு பிரிவையும் மற்றும் 1980களில் சதாம் ஹுசேனின் பாதிஸ்டு ஆட்சியின் போது ஷியைட் அடிப்படைவாத இயக்கத்திற்கு எதிரான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து செழிப்படைந்த மேற்தட்டையும் ஆதரிக்கும் ISCI, ஈராக்கில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற ஈரான் பக்கம் திரும்பி இருக்கிறது. 1980-1988களின் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக ஈரானிய துருப்புகளுக்கு ஆதரவாக ISCIன் பாதரிய போராளிகள் அமைப்பு சண்டையிட்டது. 2003ம் ஆண்டின் அமெரிக்க தாக்குதலுக்கு பின்னர், ஆக்கிரமிப்புக்கு ISCI அதன் முழு ஒத்துழைப்பை வழங்கியதுடன் அப்போதிருந்து பாக்தாத்தில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அரசாங்கத்திலும் பங்கெடுத்து வருகிறது.

இதற்கு மாறாக, ஷியைட் கட்டமைப்பின் சதரிய பிரிவு, அரேபிய தேசியவாதத்தின் அடிப்படையில் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது ஈராக்கிய வெற்றிக்கு ஆதரவளித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் உருவாக்கப்பட்ட எந்த பொம்மை அரசாங்கத்திலும் பங்கெடுப்பதை அது முதலில் நிராகரித்து வந்தது. 2004ல், அமெரிக்க படைகளுக்கு எதிராகவும், முன்னாள் பாதிஸ்டான ஐயத் அலாவியின் ஈராக்கிய "பாரம்பரிய அரசாங்கத்திற்கு" எதிராகவும் ஒரு குறுகிய கால கிளர்ச்சியை மேற்கொண்டது. அதில் பெறும் இழப்புக்களை சந்தித்த பின்னர், மொக்டதா அல் சதர் அமெரிக்காவுடனான ஒரு போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டு, 2004 செப்டம்பரில் ஆயுத மேந்திய எதிர்ப்பை கைவிட்டார். அவரின் இயக்கம் 2005ம் ஆண்டு தேர்தல்களுக்கு பின்னர் பாக்தாத்தில் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களில் ஷியைட் செல்வாக்கை உறுதிப்படுத்த ISCI உடனும் டாவா கட்சியுனும் கூட்டணி ஏற்படுத்த முயன்றது.

எவ்வாறிருப்பினும், ISCI இனையும் சதரியவாதிகளையும் இரண்டு பிரச்சனைகள் தொடர்ச்சியாக பிரிக்கின்றன. கர்பாலா மற்றும் நஜாஃப்பிலுள்ள முக்கிய ஷியைட் ஆலயங்களையும் மற்றும் உலகளவில் உள்ள யாத்ரீகர்களிடம் இருந்து வரும் பெருமளவிலான நன்கொடைகளையும் மத குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான அதிகாரப்போட்டியில் அவர்கள் இருக்கிறார்கள். 1999ல் சதரின் தந்தை மொஹம்மது சதக் சதர் பாதிஸ்டு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதற்கு ஆதரவாக இல்லாதிருந்தாலும், சதரிய மதகுருமார்களின் பிரிவு தமது கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்பதன் காரணமாகவே ஈரானில் பிறந்த மற்றும் ISCI ஆல் ஆதரவளிக்கப்படும் அயாதொல்லாஹ் அலி அல்சிஸ்தானி நகரங்கள் மீதான ஆதிக்கத்திற்கான விருப்பமாகும். 2004ல் சதரியவாதிகளின் தோல்வியடைந்த கிளர்ச்சியின் போது, மஹ்தி இராணுவம் ISCIயிடமிருந்து ஆலயங்களை தற்காலிகமாக கைப்பற்றியது, ஆனால் போர்நிறுத்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் அவைகளை திருப்பி அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டது.

இரண்டாவதாக, இவ்விரண்டு அணிகளும் ஈராக்கிய தேசிய அரசு சம்பந்தமாக நிலைப்பாட்டை எதிர்த்திருக்கின்றன. ஈராக்கை ஒரு வலுவான மத்திய அரசாக வைத்திருக்க சதரியர்கள் வலியுறுத்தும் போது, தன்னாட்சி பிராந்தியங்களை கொண்ட ஒரு கட்டுப்பாடுகுறைந்த கூட்டமைப்பாக ஈராக்கை உருவாக்க வேண்டும் என்ற குழுவாத நோக்கத்தை ISCI கொண்டிருக்கிறது. வெளிப்படையாக குறிப்பிடப்படாத பிராந்தியவாத நோக்கம் என்னெவெனில், ஷியைட்டின் தெற்கு ஈராக்கிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவால் கிடைக்கும் வருவாய்களை மத்திய அரசாங்கத்திற்கு அளிக்காமல் முடிந்தவரை ஷியைட் மேற்தட்டின் கைகளில் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கும். சதரியவாதிகள் பெரும்பான்மையான தங்களின் ஆதரவைப் பாக்தாத்திலுள்ள ஷியைட் மக்களிடமிருந்து பெறுகிறார்கள் என்பதால், எண்ணெய் மற்றும் எரிவாயு பலன்களின் ஒட்டுமொத்த உரிமையும் மற்றும் வருவாய் பகிர்வு குறித்த முடிவுகளும் தேசிய அரசிடம் இருக்க வேண்டும் எனக் கோரலாம்.

2006 அக்டோபரில் கொண்டு வரப்பட்ட ஒரு கூட்டமைப்பு சட்டம் அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதனால், "ஒரு பிராந்தியத்தை" உருவாக்க மாகாணங்கள் பிற மாகாணங்களுடன் இணைய விரும்புகின்றனவா என்ற பொதுஜன வாக்கெடுப்பை நடத்த மாகாணங்களுக்கு உரிமை வழங்குவதை அரசியல் அமைப்பு அனுமதிக்கும். தெற்கிலுள்ள ஒன்பது பெரும்பான்மை ஷியைட் மாகாணங்களை ஒன்றிணைத்து ஒரு சுயாட்சி கூட்டமைப்பு ஆட்சியை ஏற்படுத்துவது ISCI குறிப்பிட்ட திட்டமாகும்.

ISCIக்கு வெளிப்படையாகவே தடைகள் இருக்கின்றன. 2005, ஜனவரி 30ல் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் நடந்த முதல் மாகாணத் தேர்தல்களில், முதன்மையாக சதரியர்கள் ஒரு அமைப்பு முறையிலான அணியாக இந்த வாக்கெடுப்பில் போட்டியிடாததால், ISCI அல்லது மலிக்கியின் தாவா கட்சி ஒன்பதில் ஏழு ஷியைட் மாகாணங்களில் வெற்றி பெற்றது. எவ்வாறிருப்பினும், சதரிய ஆதரவாளர்கள் மேசானின் மார்ஷ் அரபு மாகாணத்தின் கட்டுப்பாட்டை வென்றார்கள்.

ISCIன் மற்றொரு மிகப் பெரிய பின்னடைவில், பாஸ்ராவை சேர்ந்த உடைந்து சென்ற சதரியர்களான ஃபதிலா அல்லது இஸ்லாமிய நல்லெண்ண கட்சியை, ஈராக்கின் மிகப்பெரிய எண்ணெய் சுரங்கங்களும் மற்றும் ஒரேயொரு துறைமுகமும் இருக்கும் எண்ணெய் வளமிக்க பாஸ்ரா மாகாணத்தின் ஆளுனர் பதவியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தெற்கு ஈராக்கின் மீதமுள்ள பகுதிகளுக்கு அப்பாற்பட்டு பாஸ்ராவை ஒரு தனிபிராந்தியமாக உருவாக்க வேண்டும் என்று ஃபாதிலாவிற்குள் உள்ள போக்குகள் விரும்புகின்றன. தெற்கு பகுதி பற்றிய ஒரு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த எந்தவொரு அரசாங்கமும் ஒத்துக்கொள்ளாது. எவ்வாறிருப்பினும், பாஸ்ராவை உட்கொள்ளாமல், எண்ணெய் தொழில்துறை வளங்களுடன் கர்பாலா மற்றும் நஜாஃப்பை தமது அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிரும்பும் ISCIன் விருப்பங்கள் நிறைவேறாது.

ஆனால் ISCIக்கு சில வாய்ப்புகளே இருக்கின்றன. அடுத்த மாகாண தேர்தல்கள் நடத்தப்படும் வரை மற்றும் அனைத்து ஒன்பது தெற்கு மாகாணங்களின் கட்டுப்பாட்டையும் கையில் எடுக்கும் வரை அது அதன் திட்டங்களை தள்ளிப் போடலாம். கடந்த மாதம் ஈராக்கிய பாராளுமன்றத்தில் நிறைவேறிய மாகாண தேர்தல் சட்டப்படி புதிய தேர்தல்கள் 2008, அக்டோபர் 1ல் நடத்தப்பட இருக்கின்றன.

ஒரு ஜனநாயக ரீதியான வாக்கெடுப்பின் மீதான நம்பிக்கை என்பது பிரச்சனைக்குரியதாகும். அமெரிக்க ஆக்கிரம்மிப்புடனான ISCIன் கூட்டுறவாலும் மற்றும் ஷியைட் மக்களின் சீரழிந்த வாழ்க்கை தரத்தாலும் அதற்கு பெருமளவிலான அதிருப்தி நிலவுகிறது. மொக்டதா அல் சதரின் ஆசியுடனோ அல்லது இல்லாமலோ, சதியர்கள் அடுத்த வாக்கெடுப்பில் போட்டியிடுவார்கள் என்பதுடன் மேசானில் மட்டுமின்றி கொடிசிய்யாஹ் (திவானியாஹின் தலைநகரம்), தி குவார் (நசிரியாஹின் தலைநகரம்) மற்றும் வாசிட் (குட்டின் தலைநகரம்) ஆகிய மாகாணங்களிலும் சிறப்பாக வெற்றி பெறக்கூடும். பாஸ்ராவின் கட்டுப்பாட்டை ஃபாதிலா தக்க வைத்துக் கொள்ளலாம்.

ISCI இன் முன்னுள்ள நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்றீடாக தோன்றுவது என்னவென்றால் சுதந்திரமாக மற்றும் நேர்மையான விதத்தில் எவ்வகையிலும் தேர்தல் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்.

மாகாண தேர்தல் சட்டம் மாகாணங்களின் மீது மத்திய அரசிற்கு நிறைய அதிகாரங்களை வழங்குவதால் அடிமட்டத்திலேயே அதை தடுப்பதற்கு பெப்ரவரி 25ல், ஈராக்கிய துணை ஜனாதிபதி மற்றும் ISCIன் தலைவர் அடெல் அப்துல் அல் மதி ஈராக்கிய ஜனாதிபதி குழுவில் அவரின் வாக்கைப் பயன்படுத்தினார். அச்சட்டம் மீண்டும் மார்ச் 18ல் பாராளுமன்றத்திற்கு வரும் போது அது மறுபரிசீலனை செய்யப்படும். அந்த சட்டம் அதன் மூலவடிவத்தின் படியே அமுலாக்கப்படவில்லையானால் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்போம் என பாக்தாத்திலுள்ள சதரிய பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் குழப்பம் மற்றும் பதட்டங்களுக்கு இடையில், தெற்கு ஈராக்கில் சதரியர்களை மறைவிடங்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதையே இந்த வாரம் குட்டில் நடந்த செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. பாஸ்ராவில் சதரியர்களையும், ஃபாதிலாவையும், எண்ணெய் சுரங்கங்கள் மற்றும் துறைமுகங்களிலுள்ள ஃபாதிலாவுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களையும் முடக்குவதற்கான முயற்சிகள் நடப்பதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன.

''சட்டவிரோத கும்பல்கள்'' மற்றும் ''போராளிகள்'' என குறிப்பிடப்படும் ஃபாதிலாவின் துணைப்படைகள் மற்றும் மஹ்தி இராணுவப்பிரிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வாரம் ISCI பிரதிநிதிகள், நகரத்தில் தினசரி ஆர்ப்பாட்டங்களை தொடங்கி இருந்தனர். மார்ச் 13ல் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரை, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புகளின் ஆதரவுடன் ISCIன் கோரிக்கைகளை நிறைவேற்ற ஈராக்கிய இராணுவத்திலுள்ள அதன் (ISCI) அதிகாரத்திலுள்ள பிரிவுகளால் பாஸ்ராவில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளை நிழலிட்டு காட்டியது.

டைம்ஸ் இதழ் குறிப்பிட்டதாவது: "இந்நகரத்தின் அழிந்துபோயுள்ள ஆனால் முக்கிய துறைமுகத்தின் கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்ள பொருட்களை நகர்த்துவதும் திறமையைவிட ஊழல் மற்றும் உள்நிலை பயங்கரவாதத்திற்கு பெயர்போன அரசியலுடன் தொடர்புடைய போராளிகளிடமிருந்து முக்கிய துறைமுகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அரசாங்கம் ஈராக்கிய அரசாங்க இராணுவ துருப்புகளை விரைவில் பயன்படுத்தும் என புதனன்று பல மூத்த ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்." என குறிப்பிட்டது.

ISCIன் ஒரு குர்திஷ் நண்பரான ஈராக்கிய துணை பிரதமமந்திரி பர்ஹாம் சாலிஹ் நகரத்தில் நடந்த ஒரு முதலீட்டு மாநாட்டில் கூறியதாவது: "இந்த போராளிகளை வேருடன் களைந்தெறிய பாஸ்ராவில் ஒரு மிக வலுவான இராணுவம் நிறுத்தப்பட வேண்டும்." என்றார். இராணுவம் தலையிடும் என கடந்த டிசம்பரில் ஃபாதிலாவை எச்சரித்திருந்த தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் மோவாபதாக் அல் ரூபே, "எங்களைப் பிடித்துள்ள தீய மூலங்களை துடைத்தொழிக்க பாக்தாத் ஒரு பிரசாரத்தை மேற்கொள்ளும்" என்று கூறியதுடன் "உள்ளூர் அரசாங்கத்தின் பலவீனங்களையும்" பகிரங்கமாக அவர் குற்றஞ்சாட்டினார்.

பாஸ்ராவின் உம் குவாஸ்ர் துறைமுகத்தில் போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு தொழிற்சங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என டைம்ஸ் கட்டுரை வெளிப்படையாகவே குறிப்பிட்டுக் காட்டியது. 2007ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ISCIஆல் வெளியேற்ற முயற்சிக்கப்பட்டு வரும் ஃபாதிலா ஆளுநர் மொஹம்மத் அல் வாய்லியைக் குறிப்பிட்டு ரூபே "இந்த வழியில் குறுக்கிடும் எவரும் விரைவாகவும், முடிவாகவும் கருணையின்றி ஓரங்கட்டப்படுவார்கள்" என ஒரு எச்சரிக்கையை வெளியிட்டார்.