World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Commemoration of the first anniversary of the death of Raveenthiranathan Senthil Ravee held in Paris

ரவீந்திரநாதன் செந்தில் ரவி காலமான முதலாம் ஆண்டு நிறைவு பாரிசில் கடைப்பிடிக்கப்பட்டது

By our reporter
3 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான ரவீந்திரநாதன் செந்தில்ரவி (செந்தில்) மரணம் அடைந்த ஓராம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி வட பாரிஸ் புறநகர் பகுதியான La Courneuve இல் பெப்ருவரி 24ம் தேதி நடைபெற்றது. 2007 பெப்ருவரி 28 அதிகாலையில் லண்டன் செல்லும் எம் 20 கார்ப்பாதையில் ஒரு கார் விபத்தில் அவர் காலமானார். அக்டோபர் 12, 1969 ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த செந்தில், லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) காட்டிக் கொடுப்பிற்கு பெரும் விலை கொடுக்க நேர்ந்த தலைமுறையை சேர்ந்தவர். LSSP பப்லோவாத திருத்தல்வாதத்தின் கலைப்புவாத அரசியலை, அதன் தர்க்கரீதியான முடிவிற்கு எடுத்துச் சென்று, 1964ம் ஆண்டு திருமதி பண்டாரநாயக்கவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்தது.

பிரான்சில் இருந்தும் ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் கிட்டத்தட்ட 150 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தோழர்கள் என நினைவுக் கூட்டத்தில் பங்கேற்றனர்; செந்திலின் தகப்பனார் ஆறுமுகம் ரவீந்திரநாதனுடன், செந்திலின் தாயார் ரவீந்திரநாதன் ராசம்மா, செந்திலின் மனைவி அன்பரசி, அவர்களின் குழந்தைகள் துர்பின், அஜன் மற்றும் லெயோன், அவருடைய மூத்த சகோதரி திருமதி இரத்தினராஜா கருணாதேவி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மூன்று தலைமுறைகளை சேர்ந்தவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்; ஆனால் பெரும்பாலானவர்கள் 20, 30 வயதினராகவே இருந்தனர்.

ஒரு குடும்ப நிகழ்வாக இருந்த போதிலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் செந்தில் முன்னெடுத்திருந்த அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். உள்நாட்டு யுத்தத்தாலும் துன்புறுத்தலாலும் தமது தாயகத்தைவிட்டு விரட்டப்பட்ட ஒரு புலம்பெயர்ந்த அகதியின் பிரச்சினைகள், தன்னுடைய மக்களுக்கு ஒரு நோக்குநிலை வழங்குவதற்கும் ஏகாதிபத்தியத்தின் சூறையாடலுக்கு எதிரான உலக இயக்கத்திற்குள் அவர்களை ஒன்றிணைப்பதற்குமான செந்தில் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி அவர்கள் முழுமையாக அறியமுடியாமல் செய்துள்ளது. இந்நிகழ்வில் அவர்களுடன் கலந்து உரையாடியதில், அதனைப்பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அவர் எதற்காக போராடினார் என்பதை அதிகம் அறியவும், அவர்கள் விரும்பியதன் காரணமாக இங்கு வருகைதந்துள்ளனர் என்பது நன்கு புலப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் செயலாளரான கிறிஸ் மார்ஸ்டன் ஆகியோர்களின் அனுதாபக் கடிதங்கள் கூட்டத்தில் வாசிக்கப் பெற்றன. அவை குடும்பத்திற்கும், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கும் அவ்வளவு இளவயதில் காலமான செந்திலின் பிரிவினால் நேர்ந்துள்ள வேதனைக்கு பரிவுணர்வை வெளிப்படுத்தியிருந்தன.

செந்தில் மனைவி மற்றும் குழந்தைகளை "பிரிட்டனில் உள்ள நாங்கள் எங்களுடையவர்களாக மதிக்கிறோம்" என வலியுறுத்தி கிறிஸ் மார்ஸ்டன் எழுதியிருந்தார்: "அமைதியான நம்பிக்கையையும், பொறுப்பையும் பரவவிட்ட ஒரு உண்மையான மனிதராக திகழ்ந்தார்; ஏனெனில் அவர் ஆழ்ந்த நம்பிக்கைகளால் உந்தப்பட்டார்; அந்த நம்பிக்கைகள் இலங்கையின் தேசியவாத இயக்கத்துடன் ஏற்பட்ட அவரது சொந்த கசப்பான அனுபவங்கள் மற்றும் இதன் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினால் அவர் பெற்றுக்கொண்ட அரசியல் கல்வி இவற்றின் விளைவுகளாக இருந்தன."

"இலங்கையிலும் இந்திய துணைக்கண்டத்திலும் ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களிடையேயும் இன்று சோசலிச சர்வதேசியவாதம், உலகத் தொழிலாளர்களின் ஐக்கியம் ஆகியவற்றிற்கான போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் தமிழ் இளைஞர் தலைமுறையினர் மத்தியில் அவர் முதலாவதாகத் திகழ்ந்தார்."

மேலும், மிகத் தெளிவாகி இருப்பதுபோல், தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்ட பெரும் துன்பியலின் விளைவாக வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டோரிடமிருந்து பெரும்பாலும் சேர்க்கப்பட்டிருந்தோரிடையே ஒரு காரியாளரை வளர்த்தெடுப்பதில் அவருடைய பங்கு, அனைத்துலக் குழுவின் வளர்ச்சியிலும், பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜேர்மனிய தொழிலாள வர்க்கத்திடையே அதன் செல்வாக்கிலும் தொடர்ந்து சக்தி வாய்ந்த பாதிப்பைக் கொள்ள இருந்தது.

"அதற்காக செந்தில் தொடர்ந்து கெளரவப்படுத்தப்படுவார்; அவருடைய தோழர்கள் மட்டும் இல்லாமல் அவரை அறிந்திருந்தவர்கள் அனைவரும் பெருமிதம் அடையலாம். தங்களுடன் சக போராளியாகவும், அரசியல் வழிகாட்டி என்ற விதத்திலும் அவர் இருந்தார் என்ற வகையில் செந்திலுக்குக் கடமைப்பட்டுள்ள பலர் உங்களிடையே இருக்கிறார்கள். நாங்கள் எப்படி அவரைப் பற்றி பெருமிதம் கொண்டுள்ளோமா, அதே போல் அவர்களைப் பற்றி அவர் பெருமிதம் கொண்டிருந்தார்."

பீட்டர் சுவார்ட்ஸ் எழுதியிருந்தார்: "செந்தில் மறைந்த ஓராண்டிற்கு பின்னரும் கூட, நாம் அவரை இழந்து விட்டோம் என்று மனம் ஏற்றுக்கொள்வதற்கு மிகக் கடினமாக உள்ளது. அவர் எம்முடன் 15 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார், எப்பொழுதும் உடன் இருந்தார், நம்பிக்கைக்குரியவராக இருந்தார், அசையா உறுதிகொண்டவராக இருந்தார்.

"செந்திலின் வாழ்வு அர்த்தமுள்ளதாக திகழ்ந்தது, ஏனெனில் அவர் ஓர் குறிக்கோளுக்காக போராடினார். தொழிலாள வர்க்கம் தேசிய பிளவுகளை கடந்து சோசலிசத்திற்கான பொது சர்வதேச போராட்டத்தில் ஐக்கியப்பட்டால் மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதில் அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஒரு நம்பிக்கை நிறைந்த சோசலிசவாதியாகவும், சர்வதேசியவாதியாகவும் அவர் இருந்தார்." "செந்திலின் பெயர் எப்பொழுதும் அனைத்துலகக் குழுவினால் போற்றப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

செந்திலுக்கு புகழுரை ஆற்றியும் அவரது வாழ்வின் முக்கியத்துவம், மற்றும் அதன் பொருத்தம் இவற்றைப் பற்றிய ஒரு மதிப்பீட்டைக் கொடுக்கும் வகையில் தோழர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து உரைகள் நிகழ்ந்நதன. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கத்தின் தலைமை ஆசிரியரான அமுதன் தன்னுடைய ஆரம்ப உரையில் கூறினார்: "செந்திலை கெளரவிப்பது என்பது அவர் போராடிய முன்னோக்கின் முக்கியத்துவத்தையும் அதன் சரியான தன்மையையும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கொண்டு செல்வதே ஆகும்."

"செந்திலின் வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் அவர் முகம்கொடுத்த அரசியல் சூழலை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால், இலங்கையின் அரசியல் நிகழ்வுகளை ஒரு தேசிய கண்கொண்டு அல்ல மாறாக சர்வதேசிய கண்கொண்டு பார்க்கவேண்டும். உலக ஏகாதிபத்திய மையங்களிலும், ஸ்ராலினிச அதிகாரத்துவ மையங்களிலும் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றங்களுமே இலங்கையின் உள்நாட்டு அரசியலை வடிவமைத்ததே அன்றி உள்நாட்டு தலைவர்களின் அகவய விருப்பு வெறுப்புக்கள் அல்ல. இதற்கு சிங்கள, தமிழ் தலைவர்கள் யாரும் விதிவிலக்கல்ல" என்று அமுதன் வலியுறுத்தினார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் செந்தில் எமது இயக்கத்தை நோக்கி வந்தபோது அவர் எழுப்பிய கேள்விகள் முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் முகங்கொடுத்த பிரச்சனைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இலங்கையில் சமாதானத்தை நிரந்தரமாக கொண்டுவருவது எப்படி? யுத்தத்தை எவ்வாறு நிறுத்துவது? தேசியவாத இனவாத வேறுபாடின்றி சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்கம் ஏன் ஒன்றுபட்டு போராட முடியாமல் உள்ளது? தேசிய விடுதலை இயக்கங்கள் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? சோவியத் யூனியன் ஏன் இந்த துயர முடிவுக்கு வந்தது? என்றவாறாக இருந்தது.

"செந்தில் தான் விளங்கிக்கொள்ளும் வரையிலும் இலகுவில் எதையும் ஏற்றுக் கொள்பவர் அல்லர். மூன்று வருடங்களுக்கும் மேலாக இவை தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டோம்."

"இறுதியில் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதற்கான போராட்டம் என்பது இந்திய உபகண்டத்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தை சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதுடனும் அந்தப் போராட்டத்தின் பாகமாக தமிழ், சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் சொந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கும் எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும் என்பதுடனும் உறுதியாக உடன்பட்டார்.

"இலங்கை முதலாளித்துவத்தின் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எமது பாதுகாப்பானது, எந்தவகையிலும் குட்டிமுதலாளித்துவ தேசிய விடுதலை இயக்கங்களின் வேலைத்திட்டங்களுக்கு ஆதளவளிப்பதில் தங்கியிருக்கவில்லை. எமது முன்னோக்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒவ்வொரு குட்டி தேசிய அரசு அமைப்பதல்ல. இதற்கு நேர் எதிரானது. காலாவதியாகிப்போன முதலாளித்துவ தேசிய அரசமைப்பு முறையை உலக அளவில் தூக்கிவீச தொழிலாளர்களையும், மாணவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதாகும்."

"இந்த வரலாற்று பொறுப்பிற்குத்தான் செந்தில் தன்னை அர்ப்பணித்திருந்தார். சோசலிச சர்வதேசிய முன்னோக்கிற்காக போராடிய போராளியாக என்றும் செந்தில் நினைவுகூரப்படுவார்" என்று அமுதன் உரையை நிறைவு செய்தார்.

பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பில் பேசிய ஸ்ரெபான் உகிஸ், செந்திலுடன் பதினைந்து ஆண்டுகள் தான்பணியாற்றியது பற்றிய குறிப்பை எடுத்துரைத்தார்: "1992 வசந்த காலத்தில் பாரிஸ் Boulevard Sebastopol இல் உள்ள ஒரு சிறிய பூங்காவில் நான் செந்திலை முதன் முதலில் சந்தித்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் தமிழ் தேசிய இயக்கங்களின் காட்டிக் கொடுப்பு ஆகியவற்றை செந்தில் எதிர் கொண்டிருந்தார். முதலாளித்துவ தேசிய இயக்கம் திவாலடைந்துவிட்டது என்பதை அவர் புரிந்து கொண்டார், ஆனால் ஏன் என்று அவருக்கு தெரியவில்லை.

"ICFI உடன் விவாதித்ததில் அவர் வரலாற்றுப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள தொடங்கி ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டங்கள் பால் திரும்பினார். இந்த முன்னோக்கின் மையத்தில் நிரந்தரப் புரட்சி தத்துவம் இருந்தது; இது ட்ராட்ஸ்கியினால் 1905/06 ல் பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து 100 ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்ததில் வளர்க்கப்பட்டிருந்தது. இத்தத்துவம் பூர்ஷ்வாக்கள் ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்திருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டு அது ஆங்கில, பின் பிரெஞ்சுப் புரட்சிகளை வழி நடத்தியது என்பதையும் ஒப்புக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இருந்து, பிரான்சின் 1830ல் புரட்சி மற்றும் ஐரோப்பா முழுவதும் 1848ல் நடந்த புரட்சிகள் மற்றும் 1871 பாரிஸ் கம்யூன் ஆகியவற்றில் பூர்ஷ்வாக்களின் பங்கு ஆழ்ந்த மாற்றத்தைக் கண்டது என்பதை ட்ரொட்ஸ்கி தெளிவாக்கினார். தேசிய புரட்சிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு புரட்சிகர வர்க்கம் என்பதில் இருந்து அவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளை சுரண்டுபவர்களாக ஆகியிருந்தனர். இப்பொழுது ஜனநாயகம் மற்றும் அனைவருக்குமான உரிமைகள் ஆகியவற்றிற்கு போராடுவதைவிட இதுகாறும் உள்ள நிலையை காக்கின்றது.

"மார்க்சை அடிப்படையாக கொண்டு ட்ரொட்ஸ்கி முதலாளித்துவத்தை ஒரு உலக அமைப்பு என்று புரிந்து கொண்டார். உலக அளவில் முதலாளித்துவத்தின் பாத்திரம் என்ன என்பதை நிரந்தரப் புரட்சி தத்துவம் ஆராய்ந்தது. முன்னேறிய நாடுகள் பின்தங்கிய நாடுகள் இரண்டிலும் முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் மக்களுக்காக போராடுவதற்கு திறனற்றதாகி விட்டது. இவ்விதத்தில் ரஷ்யாவில் பூர்ஷ்வா செயல்திறனற்று தன்னுடைய சொந்த புரட்சிக்குக்கூட தலைமை தாங்க முடியாமல் போயிற்று. ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடும் தொழிலாள வர்க்கம்தான் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமை தாங்க முடியும்; இலங்கையை போல் தொழிலாள வர்க்கம் சிறிய சிறுபான்மையாக இருந்தாலும் அதே நிலைமைதான்.

"இன்று ஜனநாயகம் மற்றும் நல்வாழ்வு என்பது ஒரு உலகந்தழுவிய அளவில்தான் அடையப்பட முடியும்.

"இதை செந்தில் புரிந்து கொண்டபின், முதலாளித்துவ தேசியவாதத்தின் நெருக்கடி இன்னமும் தெளிவாயிற்று. LTTE இப்பிரச்சினைகளை தீர்க்க திறனற்றதாக இருந்தது. அது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க முதலாளித்துவத்துடனான தன்னுடைய உறவைப் பற்றித்தான் அதிகம் கவலை கொண்டிருந்தது. ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் சிங்கள முதலாளித்துவத்தின் நலனுக்கு சேவைசெய்வதுபோல்தான் LTTE தமிழ் முதலாளித்துவத்தின் சுயநலன்களுக்கு சேவைசெய்கிறது.

"PLO போன்ற முன்னர் மதிப்புடைய, தீவிரப் போக்குடைய தேசிய இயக்கங்கள் கூட இப்பொழுது செல்வாக்கிழந்துவிட்டன. அரசியல் முன்னோக்கு பிரச்சினை மிகவும் அடிப்படையானது ஆகும். செந்தில் இதை உணர்ந்து கொண்டார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு முழு அமைப்பையும் தூக்கியெறியும் முன்னோக்கு ஒன்றுதான் உகந்த முன்னோக்கு என்பதை அவர் புரிந்து கொண்டார். அதாவது முதலாளித்துவம் பாதையின் முடிவிற்கு வந்துவிட்டது வரலாற்று ரீதியாக திவாலடைந்து விட்டது. தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் உலக மக்கள்மீது முழு முதலாளித்துவ அமைப்பும் கொண்டிருக்கும் மரணப் பிடியை உடைத்தெறிய முடியும்.

"இதைச் செய்வதற்கு தொழிலாள வர்க்கம் வரலாற்று அவசியம் பற்றி, அதாவது எமது கட்சி, WSWS ஆகியவற்றின் பங்கு பற்றி கட்டாயம் நனவுடன் இருக்க வேண்டும். இதை நான் கூறுவதற்கு காரணம் இதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பியிருப்பார். அவர் இங்கு இப்பொழுது இருந்திருந்தால், செந்தில் இதைத்தான் கூறியிருப்பார். இவ்விதத்தில் 1992ம் ஆண்டு அந்தச் சிறிய பூங்காவில் நடந்த சந்திப்பு அவருடைய வாழ்வில் மிக முக்கியமானது ஆகும்."

பிரான்ஸ் தமிழ் சமூகத்தில் ICFI ன் முக்கிய உறுப்பினராக இருக்கும் அதியன் கூட்டத்தில் செந்திலின் நினைவை கெளரவிக்கும் வகையில் அவருடைய வாழ்வு பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டதை கூறினார். "இன்றைய சகாப்தத்தில், பூகோள ரீதியாக பொருளாதாரம் ஒருங்கிணைக்கப்பட்ட நிலைமையில், இலங்கையில் உள்ள தமிழ் ஒடுக்கப்படும் மக்களின் உண்மையான விடுதலை என்பது, ஒரு சிறிய தமிழ் அரசை உருவாக்குவதன் மூலம் சாத்தியமாகாது என்பதை செந்தில் விஞ்ஞான பூர்வமாக விளங்கிக் கொண்டார்" என்று அதியன் வலியுறுத்தினார். ஒரு புரட்சிகர முன்னோக்குத்தான் சரியான முறை என்பதை செந்தில் விடையாகக் கொடுத்தார்: அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கை தவிர வேறு ஏதும் அல்ல.

அதியன் பின்வரும் வினாவை முன்வைத்தார்: "ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பும், ஈரான் மீதான அதன் ஆத்திரமூட்டலும் எமக்கு எதைக் கற்பிக்கின்றது? அது ஒட்டுமொத்த மனித குலத்தையும் அடுத்த பாரிய மனித அழிவுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது. இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்த நெருக்கடிக்கான தீர்வு உலகத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வதிலும் அதன் சொந்தக் கட்சியை கட்டி அமைப்பதிலும் இருக்கிறது. தன்னுடைய சுரண்டலை தொடர முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தை இனம், மதம், சாதி, நிறம் மற்ற வேறுபாடுகள் மூலம் பிரித்து அதை தேசிய எல்லைகளுக்குள் அடக்கி வைத்துள்ளது."

"தமிழ் தேசிய வாதம் என்பது தமிழ் மக்களை பிடிக்கும் ஒரு பொறி என்ற முன்னோக்குத்தான் என்பதை குறிப்பாக செந்தில் உணர்ந்தார்; இந்தியத் துணைக்கண்ட மக்களுக்கு ஒரு முன்னோக்கை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையில் உறுதியாக இருந்தார். இலங்கையில் இருக்கும் இனவாத அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் இந்திய மற்றும் உலக ஏகாதிபத்திய சக்திகள் தூக்கி வீசப்படும் வரை, இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடையாது. இந்தப் போராட்டத்தில்தான் செந்தில் ஒரு சர்வதேசியவாதியாக உயர்ந்து நிற்கிறார்."

செந்திலின் நெருக்கமான நண்பரும் தோழரும், செந்தில் இறக்கும்போது அவருடன் இருந்தவருமான செழியன் கூட்டத்தில் உரையாற்றியதாவது: "நானும், செந்திலும் ஒரு மார்க்சிச இயக்கத்தை நோக்கி நகரும்போது, எமக்கு முன்னால் இருந்த கேள்வியானது, சோவியத் யூனியனின் உடைவிற்கும், இலங்கை தமிழ் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் வங்குரோத்திற்குமான காரணங்களை அறிவதாக இருந்தது. அத்துடன் ஒடுக்கப்படும் மக்களின் உண்மையான விடுதலை என்பது எந்த அடித்தளத்தில் வென்றெடுக்கப்படும் என்பதும் எமக்கு முன்னால் இருந்த கேள்விகளாகும். இப்பிரச்சினைகளில் எங்களுக்கு தெளிவு ஏற்பட்டபொழுது நாங்கள் ICFI ல் சேர்ந்தோம்."

"இறுதி நிமிடம் வரைக்கும் செந்தில் மனித குலத்தின் எதிர்காலம் பற்றி தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். அவர் தனது நம்பிக்கைகளில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தார். அவர் தன்னை உருவாக்கியவர்களை நேசித்தார். எமது வாகனம் விபத்துக்குள்ளாகும் வரைக்கும் அவர் இந்திய உபகண்டத்தில் எமது கட்சியை கட்டுவது எப்படி என்பது பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எமது ஒவ்வொரு வெற்றியினூடாகவும் அவர் எம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார்" என்று செழியன் நினைவு கூர்ந்தார்.

செந்திலின் சகோதரி போராட்டத்தில் அவரது தோழர்களின் துயரத்தை உறுதிப்படுத்தும் வகையில், "செந்திலுடன் 15 வருடங்கள் பழகியவர்களே அவரை மறக்கமுடியாமல் இருக்கும்போது, அவரை சிறுவயதிலிருந்தே தெரிந்த நான் எப்படி மறக்க முடியும்?" என்று கேட்டார். "அவர் தாயார் அவரை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் எப்பொழுதும் பொறுமையுடன் அனைத்தையும் கேட்பார்." அவரது மறைவு பேரிழப்பாகும். அவர் தமிழ்க்கலாச்சார மரபியம் மீதான மதிப்பினை முன்வைத்து, சுட்டிக்காட்டியதாவது, "இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இலங்கை பிரிந்ததாக வரலாறுகள் கூறுகின்றது. அதே போன்று தமிழ் மொழி மிகவும் பழமையான மொழியாகும். இந்த மொழி ஒரு சமயம் இமயம் வரை பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. 50,000 ஆண்டுகள் பேச்சு மொழியாகவும் 3,000 ஆண்டுகள் எழுத்து மொழியாகவும் இருந்து வந்திருக்கின்றது."

"இறந்த பின்னும் நிலைப்பதற்கு ஒருவர் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அதுதான் சோசலிசம்", என்றார். ஒரு அறக்கட்டளை நிறுவி செந்திலின் மனைவி, குழந்தைகளை காக்க வேண்டும்" என்றும் அவர் முன்மொழிந்தார்.

செந்திலுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலான வலுவான நட்பைக் கொண்டிருந்ததாக கந்தா கூறினார். உலகில் இருக்கும் மகத்தான சமத்துவமின்மைக்கு எதிராக செந்தில் இருந்தார். "1997ம் ஆண்டு, உலகின் உயர்மட்ட ஐந்தில் ஒரு பங்கினர் உலகின் வருமானத்தில் 86 சதவிகித்தை பெற்றனர்; வறிய ஐந்தில் ஒரு பங்கினர் 1.3 சதவிகிதம் மட்டுமே பெற்றனர். 1.3 பில்லியனுக்கும் மேலான மக்கள் நாள் ஒன்றுக்கு 1 டாலருக்கும் குறைவில் வாழும் கட்டாயத்தில் உள்ளனர்--இது வாழ்வை அச்சுறுத்தும் நிலையாகும்." இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு "நிரந்தரப் புரட்சி தத்துவம் முன்னோக்கால்தான் முடியும் என்று செந்தில் நம்பினார். எனவே அவர் உலக சோசலிசப் புரட்சிக்காக போராடினனார்; அது ஒன்றுதான் உலகளவில் இருக்கும் சமூக சமத்துவமின்மையை ஒட்டி விளைந்துள்ள இடர்பாடுகளில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிக்கும். எனவே அவர் பெருமிதத்துடன் ICFI ல் சேர்ந்து உலக சோசலிச முன்னோக்கிற்காக போராடினார்."

இந்த உரைகளுக்கு பின்னர் உணவு அளிக்கப்பட்டது; விவாதங்கள் பரபரப்புடன் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றி நடந்தன. LTTE தலைமை தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலனை பிரதிநிதித்துவம் செய்கின்றது, ராஜபக்ஷ அசாங்கம் ஒரு சிறிய சலுகை பெற்ற சிங்கள உயரடுக்கின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது, இலங்கையின் பரந்துபட்ட மக்களின் நலன்களை அல்ல என்று ஸ்ரெபான் உகிஸ் கூறிய கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்பட்டன.

செந்திலின் தந்தையாருடன் நிகழ்விற்கு பின்னர் பேசியபோது அவர் தான் அரசியலில் ஈடுபடவில்லை என்றார். செந்தில் நிறையப் படிக்க வேண்டும் என்று அவர் ஊக்கம் கொடுத்ததாக கூறினார். தானே செந்திலின் நூல்கள் சிலவற்றை படிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என பல சமயங்கள் உள்ளன, ஆனால் சிந்தித்து அவற்றில் விஞ்ஞானபூர்வமாக இருப்பதை வெளியே கொண்டுவருவது அவசியமானது என்றார். நான்காம் அகிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தான் நினைப்பதாகவும் கூறினார்.

அவர் ஒரு பள்ளி முதல்வராக இருந்து, தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார். அவர் முன்னர் ட்ரொட்ஸ்கிசம் பற்றி அறிந்திருந்ததில்லை; அறிந்திருந்தால் அவருடைய மாணவர்களை தேசியவாதிகளாக செல்வதற்கு அனுமதித்திருக்கமாட்டார், மாற்றீட்டிற்கு அனுப்பியிருப்பார்; ஆனால் ஒரு மாற்றீடு இருந்தது என்பதை அவர் அறியாதிருந்தார்.

இலங்கையின் வடபுறத்தில் உள்நாட்டுப் போர் நிலை உள்ளது; ஆனால் மக்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளுவது முக்கியம் என்று தான் கருதுவதாக அவர் கூறினார். இதற்காக நாம் WSWS ஐ மக்களிடையே கொண்டுவரும் வழிவகையைக் காணவேண்டும் என்றும் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அதைப் படிப்பதற்காக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

செந்தில் எப்படிப்பட்டவர் என்பதை நினைவுக் கூட்டம் காட்டியது என்றும் அவர் கூறினார். செந்திலின் தகப்பனார் WSWS ஐ படிக்கிறார்; ஏற்கனவே ட்ரொட்ஸ்கியின் "லெனினுக்குப் பின் மூன்றாம் அகிலம்" என்பதில் இரு அத்தியாயங்களை படித்து விட்டார்; இது கீர்த்தி பாலசூரியா மறைந்து இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டிய நிகழ்வுப் பொருத்தமாக முதல் தடவையாக தமிழில் உலக சோசலிச வலைதள தமிழ்ப் பகுதியின் ஆசியர் குழுவினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது அவரை தன்னுடைய மகனின் சாதனைகளை பற்றி பெருமிதம்கொள்ள வைக்கிறது. அவரது ஐந்தாம் நினைவு தினத்தின்போது செந்திலின் வளர்ச்சி பற்றிய அறிக்கையை தயாரித்து அளிக்க இருப்பதாக அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் இருக்கும் பலரும் தங்கள் குடும்பங்கள், சமூகங்களில் 25 ஆண்டுகளாக இறப்பைக் கண்டு வருகின்றனர் என்று விவாதத்தின்போது அமுதன் சுட்டிக் காட்டினார். இலங்கை SEP யில் இருந்த ஒரு தோழர் தன்னுடைய குடும்பத்தில் இருந்த 8 பேர்களை இழந்த செய்தி அப்பொழுதுதான் வந்திருந்தது; இது LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் பொறுப்பற்ற முறையில் இலங்கை விமானப் படை நடத்திய குண்டு வீச்சினால் ஏற்பட்டது ஆகும்.

ஆயினும், அவர் முன்னெடுத்து வந்த போராட்டத்தின் காரணமாக செந்திலின் மரணம் ஒரு குறிப்பிடத்தக்க துன்பியல் மற்றும் இழப்பு ஆகும் என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். பலரும் பாலசூரியாவின் மரணத்தின் 20 வது நிறைவு நிகழ்ச்சி பாரிசில் மார்ச் 16 அன்று நடக்கும் போது அதில் கலந்துகொள்வதாக கூறினர்.