World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

South Asian leaders meet under shadow of intensifying tensions

தெற்காசியத் தலைவர்கள் உக்கிரமடையும் பதட்ட நிலைமைகளின் நிழலின் கீழ் கூடினர்

By Saman Gunadasa and K.Ratnayake
7 August 2008

Use this version to print | Send this link by email | Email the author

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய எட்டு தெற்காசிய நாடுகளின் அரசியல் தலைவர்கள் கடந்த வாரக் கடைசியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த பிரந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடடில் சந்தித்தனர். கமராக்களுக்கு முன்னால் புன்னகைத்துக் கைகுலுக்கிக்கொண்ட போதிலும் உத்தியோகபூர்வ பிரகடனத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் சம்பந்தமாக கூர்மையடைந்துவரும் பதட்ட நிலைமைகளையும், இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தையும் மற்றும் சகல நாடுகளும் எதிர்கொண்டுள்ள ஆழமடைந்துவரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் தீர்ப்பதில் ஒத்துழைப்பின்மையை மூடிமறைக்க முடியாமல் போனது.

கொழும்பில் முன்னெப்போதும் இல்லாத பிரமாண்டமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியிலே மாநாடு நடைபெற்றது. இலங்கை அரசாங்கம் 19,000க்கும் அதிகமான துருப்புக்களையும் பொலிசாரையும் நகரில் நிறுத்தி, பெரும் பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்து சாதாரண மக்களை தொலைவில் தள்ளி வைத்ததோடு சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டைகளில் டசின்கணக்கான தமிழர்களையும் கைது செய்தது.

இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகொப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறப்புத் துருப்புக்களுடன் கொழும்பு கடற்பகுதியில் இரண்டு யுத்தக் கப்பல்களை நிறுத்தி வைத்திருந்தது. தமிழ் நாட்டு கடற்கரையை சூழ இராணுவத் தளங்கள் விழிப்புடன் இருத்தப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்தன. இலங்கை அரசாங்கத்தை போலவே, இந்திய அரசாங்கமும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலி கெரில்லாக்களின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க இந்த ஏற்பாடுகள் தேவை என நியாயப்படுத்தியது. ஆனால் இந்த அசாதாரணமான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் இந்தியாவின் இராணுவ வலிமையை வெளிப்படுத்தும் காட்சியும் கூட.

இந்த மாநாட்டில், "பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதை முதன்மைப் பணியாக பிரகடனப்படுத்துவதாக இருந்தது. கூட்டறிக்கையானது சகல நாடுகளையும் தமது குற்றவியல் சட்டங்களின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டமியற்றுமாறு அழைப்புவிடுத்ததுடன் பிரேரிக்கப்பட்டுள்ள "பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச சாசனத்தை" துரிதமாக நிறைவேற்ற ஐ.நா. வுக்கும் அழைப்புவிடுத்தது.

"பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற மோசடி மீது மாநாடு குவிமையப்படுத்தப்பட்டமை, குறிப்பாக 2006ல் புலிகளுக்கு எதிராக தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு ஒரு உந்துதலை வழங்கியுள்ளது. "பயங்கரவாதத்தை எதிர்துப் போரிடும்" சாக்குப் போக்கில், எதேச்சதிகாரமான தடுத்துவைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கானவர்களை காணாமல் ஆக்கிய அல்லது கொலை செய்த இராணுவத்தின் அனுசரணையிலான கொலைப்படைகளின் செயற்பாடுகள் உட்பட ஜனாநாயக உரிமைகள் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் பொறுப்பாளியாகும். இனவாத யுத்தத்தை புதுப்பித்தமை ஒருபுறமிருக்க எந்தவொரு அரசியல் தலைவரும் இந்த வன்முறைகளை விமர்சிக்கவில்லை.

அதேபோல், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எவரும் குரல் எழுப்பவில்லை. மாறாக, காபுலில் அமெரிக்காவின் பொம்மை அரசாங்கத்தின் தலைவரான ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் சட்டப்பூர்வமான அரசியல் பிரதிநிதியாக கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பிரதேசங்களில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க விரோத கிளர்ச்சிக்காரர்கள் ஊடுருவுவதை நிறுத்த மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்திக்கொள்வதில் கர்ஸாயுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்துகொண்டார் -இவை அனைத்தும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற பதாகையின் கீழேயே இடம்பெறுகின்றன.

ஜூலை 7ம் திகதி காபுலில் இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்டதாக பாகிஸ்தானின் ஒற்றர் படையான உள்நாட்டு புலனாய்வு சேவை (ஐ.எஸ்.ஐ.) மீது இந்தியா மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டியது. இந்தத் தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் பிரிவினர் உட்பட 54 பேர் கொல்லப்பட்டனர். இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதற்கு மேலும் எண்ணெய் வார்க்கும் வகையில், ஐ.எஸ்.ஐ. உறுப்பினர்களின் உதவியுடனேயே தலிபான்களால் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 28 அன்று, பிரிக்கப்பட்டுள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையில் ஒரே வாரத்தில் மூன்றாவது தடவையாக மோதல்கள் வெடித்துள்ளன. இதில் ஒரு இந்திய சிப்பாய் கொல்லப்பட்டார். இரு அரசாங்கங்களும் இந்தத் தாக்குதலை முதலில் தொடுத்தது யார் என்பது பற்றி மாறி மாறி குற்றஞ்சாட்டிவருகின்றன.

பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், "பயங்கரவாதம் அதன் அசிங்கமான தலையை எமது பிராந்தியத்தில் நீட்டுகிறது" என சிங்க மாநாட்டில் தெரிவித்தார். அவர் காபுலில் இந்திய தூதரகம் மீதான தாக்குதலையே சுட்டிக்காட்டினார். வாஷிங்டனின் அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ஃ ரஸா கிலானி, மாநாட்டின் ஒரு ஒரத்தில் சிங்கை சந்தித்து அந்தத் தாக்குதல் தொடர்பாக "விசாரணை" செய்வதாக வாக்குறுதியளித்ததன் மூலம் பதட்ட நிலைமையை தணிக்க முற்பட்டார். இரு நாடுகளும் பல ஆண்டுகளாக இழுபட்டுவரும் "சமாதான முன்னெடுப்புகளையும்" தொடர உடன்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

எவ்வாறெனினும், பதட்டநிலைமை சாதாரணமாக இல்லாமல் போய்விடாது. இரு அரசுகளுக்கும் இடையிலான பகைமை, இந்திய துணைக்கண்டத்தை 1947ல் இந்து-முஸ்லிம் இன அடிப்படையிலும் இரு நாடுகளதும் ஆளும் வர்க்கங்களின் பூகோள-அரசியல் குறிக்கோள்களின் அடிப்படையிலும் பிற்போக்குத்தனமாக பிரித்ததன் விளைவேயாகும். காபுலில் இந்தியத் தூதரகத்தின் மீதான தாக்குதலை யார் மேற்கொண்டிருந்தாலும், ஆப்கானிஸ்தானில் புது டில்லியின் செல்வாக்கு வளர்ச்சி காண்பதை தமது பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாவகே இஸ்லாமாபாத் நோக்குகிறது. இந்தியா தமது பங்குக்கு பாகிஸ்தானை கீழறுக்கவும் மத்திய ஆசியா உட்பட பிராந்தியத்தில் தமது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ளவும் முயற்சிக்கின்றது.

பதட்ட நிலைமையை கோட்டுக்காட்டும் வகையில், இந்தியாவுக்குள் 800 இஸ்லாமிய தீவிரவாதிகளை அனுப்பியுள்ளதாக புது டில்லி ஐ.எஸ்.ஐ. மீது செவ்வாய்க் கிழமை குற்றஞ்சாட்டியது. இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் தலைவர் எ.கே. மித்ரா இந்து பத்திரிகைக்கு தெரிவித்ததாவது: "ஐ.எஸ்.ஐ. எல்லை கடந்த பயங்கரவாதத்தை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றது".

ஆப்கான் ஜனாதிபதி கர்ஸாய், ஆப்கானிஸ்தானுக்குள் ஆக்கிரமிப்புக்கு விரோதமான கிளர்ச்சிகளை தூண்டிவிடுவதாக பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தினார். தலிபான் மற்றும் அல் கைடா போராளிகளை ஒழிக்க பாகிஸ்தானின் எல்லைக்கருகில் உள்ள பழங்குடியினரின் பிரதேசத்திற்கு ஆப்கான் இராணுவத்தை அனுப்பப்போவதாக அச்சுறுத்துவதில் அவர் சாதனை படைத்தவராவார்.

"ஆப்கானிஸ்தான் அல்லது இந்தியாவுக்கு மட்டும் அன்றி, முழு சார்க் பிராந்தியத்துக்குமே பயங்கரவாதத் தாக்குதல்கள் துரித வளர்ச்சிகாணும் அச்சுறுத்தலாக இருக்கின்றது" என மாநாட்டில் கர்ஸாய் பிரகடனம் செய்தார். கர்ஸாய் மாநாட்டின் தொடக்கத்தில் கிலானியுடன் கைகுலுக்கக் கூட மறுத்த போதிலும், இரு தலைவர்களும் "பயங்கரவாத்தை எதிர்க்க" ஒத்துழைக்க உடன்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

சார்க் மாநாடுகளின் பின்னர் உடனடியாகவே இந்தியாவுடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள திங்கட் கிழமை கர்ஸாய் புது டில்லி பயணமானார். கர்ஸாயை சந்தித்த பின்னர், காபுலில் இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலானது இரு நாடுகளுக்கும் இடையிலான "நட்பின் மீதான தாக்குதலாகும்" என சிங்க அறிவித்தார். அவர் ஆப்கானிஸ்தானுக்கான நிதி உதவியாக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 750 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை அறவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றதை கர்ஸாய் குறிப்பாய் தெரிவித்தார். "தமது பாதுகாப்பு நிறுவனங்களில் பலவித துறைகளிலும் எமது சிப்பாய்களைப் பயிற்றுவிப்பதில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவால் நிறையவே வழங்க முடியும்" என டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்தார.

"பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" போலவே, பிராந்தியம் பூராவும் நிலவும் ஆழமடைந்துவரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அணுக ஒரு தொகை வெற்று வாககுறுதிகளை மாநாட்டுப் பிரகடனம் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்து அரசாங்கங்களும், உணவுப் பொருள் மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் சீரழிவு சம்பந்தமாக வளர்ச்சிகண்டுவரும் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்கின்றன.

சார்க் பிரகடனம் தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (எஸ்.ஏ.எப்ஃ.ஏ.டீ.ஏ.) துரிதமாக நிறைவேற்ற மீண்டும் ஒருமுறை வாக்குறுதியளித்துள்ளது. பிராந்தியத்தில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பெரும் வர்த்தகர்களும் சர்வதேச முதலீட்டாளர்களும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், இந்த நாடுகள் பகைமை மற்றும் பதட்ட நிலைமையில் மூழ்கிப் போயுள்ளன. தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான இலக்கு 2012ல் முழுமைபடுத்தப்பட இருந்தாலும், பிரதான தடைகள் இருந்துகொண்டுள்ளன.

எகோனமிஸ்ட் சஞ்சிகை தெரிவித்திருப்பதாவது: "சார்க் அதன் பிரதான இலக்கான பிராந்தியத்தில் பொருளாதார ஒருங்கிணைப்பை முன்நிலைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்கவாறு தோல்வி கண்டிருப்பது ஏன் என்பதை விளக்க இது (பகைமை) நீண்ட தூரம் சென்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான உலக வங்கி அறிக்கையில், உலகில் மிக அற்பமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பிராந்தியம் தெற்காசியாவாகும். சார்க் உறுப்பினர்களுக்கு இடையிலான வர்த்தகம், அவர்களது மொத்த தேசிய உற்பத்தியில் 2 வீதத்துக்கும் குறைவாகவே உள்ளது."

இந்த மாநாட்டுப் பிரகடனம் "வறுமையை தணிக்கவும்" பங்களாதேஷில் ஒரு பிராந்திய உணவு வங்கியை ஸ்தாபிக்கவும் பெயரளவில் அழைப்புவிடுத்தது. உணவு வங்கிக்கான பிரேரணை 2005 சார்க் மாநாட்டில் முதல் முறையாக முன்வைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளின் பின்னரும் அது திட்டமிடலாகவே இருந்துவருகின்றது. இறுதியாக உணவு வங்கி ஸ்தாபிக்கப்பட்டாலும், துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொண்டுள்ள அவநம்பிக்கையான நிலைமையை தணிக்க அது மிகச் சிறியளவே சேவை செய்யும்.

தெற்காசியாவின் மொத்த ஜனத்தொகை உலக சனத்தொகையில் 25 வீதம். அல்லது 1.5 பில்லியன் மக்களாகும். இந்த ஜனத்தொகையில் சுமார் 40 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு 1 டொலருக்கும் குறைவான வருமானத்தை பெற்று வறுமையில் வாழ்கின்றனர். உலக வங்கியின்படி, 75 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு 2 டொலர்களுக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.

உலகில் எடை குறைந்த மக்கள் வாழும் பிராந்தியங்களில் அதி உயர்ந்த மட்டத்தில் இருப்பது தெற்காசியாவாகும் -மொத்த ஜனத்தொகையில் 42 வீதமானவர்கள் எடை குறைந்தவர்களாக உள்ளனர். இந்திய ஜனத்தொகையில் சுமார் 43 வீதமானவர்கள் போசாக்கின்மையால் வாடுகின்றனர். இலங்கையின் சுகாதார அமைச்சு, ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 13.5 வீதமானவர்கள் நிரந்தர போசாக்கின்மையாலும் 30 வீதமானவர்கள் இரத்தச் சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் முன்தருவாயில் ஏற்றுக்கொண்டது.

உணவு மற்றும் எரி பொருள் விலை ராக்கட் வேகத்தில் உயர்ந்து செல்கின்ற நிலையில் வாழ்க்கைத் தரம் சீரழிந்துவருகின்றது. இராணுவச் செலவு விலைவாசி ஏற்றத்தில் கணிசமான பங்கு வகிக்கின்ற இலங்கையில் பணவீக்கம் 30க்கும் அதிகமாகும். பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் பணவீக்கமானது முறையே 21, 12, 10 மற்றும் 11 வீதமாக உள்ளன. எவ்வாறெனினும், உணவு விலைகள் 30 முதல் 60 வீதம் வரை மிகவும் வேகமாக அதிகரிக்கின்றன.

சமூக நெருக்கடிகளை தீர்க்க இலாயக்கற்ற இந்ந நாடுகளின் ஆளும் தட்டுக்கள் மேலும் மேலும் ஜனநாயக விரோத முறையிலான ஆட்சியை நாடுகின்றன. பங்களாதேஷ் இராணுவத்தின் உதவியுடனான அரசாங்கத்தின் கீழ் உள்ளது. நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் மிகவும் பலவீனமான மற்றும் ஸ்திரமற்ற தேர்வுசெய்யப்பட்ட அரசாங்கங்களே ஆட்சியில் இருப்பதோடு இரு நாடுகளிலும் திரைக்குப் பின்னால் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அச்சுறுத்தும் நிலையில் ஆட்டங்க கண்டுப் போயுள்ளன. இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஜனநாயகவாதிகள் என சொல்லப்படுபவர்கள், எதிர்ப்புக்களையும் சமூக அமைதியின்மையையும் நசுக்குவதற்காக பொலிஸ் அரச வழிமுறைகளின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளின் பின்னர், இந்தப் பிராந்தியம் பூராவும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஜனத்தொகையில் பெரும்பான்மையானவர்களின் அடிப்படை ஜனநாயக அபிலாஷைகளை அல்லது சமூகத் தேவைகளை அனுகுவதில் பிறப்பிலேயே இலாயக்கற்றவை என்பதை நிரூபித்துள்ளன. ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்களும் தமது செல்வாக்குக்காக போட்டியிடுகின்ற நிலையில், பெரும் வல்லரசுகளின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த முரண்பாடானது, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடு, தொடர்ந்தும் இன்னுமொரு அழிவுகரமான யுத்தத்திற்காக அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலையில், இந்த சார் மாநாடு, நெருங்கிய ஒத்துழைப்புக்கான வழியாக இருப்பதற்கு பதிலாக, பொருளாதார மற்றும் மூலோபாய நிலைக்கான போராட்டத்தின் இன்னுமொரு அரங்காக இருந்துள்ளது.