World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Colombo under security siege for South Asian summit

இலங்கை: தெற்காசிய மாநாட்டுக்காக கொழும்பு பாதுகாப்பு முற்றுகையின் கீழ் இருந்தது

By our correspondents
11 August 2008


Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், ஆகஸ்ட் 2-3ம் திகதிகளில் நடத்தப்பட்ட பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் (சார்க்) மாநாட்டுக்காக கொழும்பையும் மற்றும் அதற்கு நெருக்கமான புறநகர் பகுதிகளையும் ஒரு வாரம் பூராவும் பொலிஸ் மற்றும் இராணுவ முற்றுகையின் கீழ் வைத்திருந்தது. முன்னெப்போதும் இல்லாதவாறு மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக நாடு ஏற்கனவே அவசரகால சட்டத்தின் கீழ் உள்ளது.

சுமார் 12,000 ஆயுதம் தரித்த பொலிஸாரும் 7,000 துருப்புக்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரதான வீதிகள் ஒவ்வொன்றிலும் 25 மீட்டர் இடைவெளியில் சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருந்ததோடு தலை நகர் பூராவும் துருப்புக்கள் 24 மணி நேரமும் வாகனங்களிலும், நடந்தும் ரோந்தில் ஈடுபட்டனர். இந்தக் கிழமை பூராவும், மத்திய பிரதேசங்களில் பல மேலதிக உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அங்கு "வெளியார்" செல்வது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மாநாடு நகரின் ஒதுக்குப்புறத்தில், வீதிகளில் இராணுவத்தினரும் பொலிசாரும் மட்டுமே இருக்க நடத்தப்பட்டது. நகரில் வாழும் பொதுமக்கள் வீடுகளுக்கு சிறைப்படுத்தப்பட்டனர்.

"சட்டவிரோத" கட்டிடங்களை அகற்றுதல் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் மற்றும் வீதியில் உள்ள வியாபாரத் தட்டுகளும் அகற்றப்பட்டன. தெரு வியாபாரிகள் 10 நாட்களுக்கு தமது வர்த்தக இடங்களை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர். பிச்சைக்காரர்கள் சுற்றிவளைக்கப்பட்டு அகற்றப்பட்டனர். அட்டவணைப்படி திட்டமிடப்பட்டுள்ள விடுமுறைகள் முன்தள்ளப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்டன.

கொழும்பு நகரைச் சூழவும் மற்றும் அயலில் நீர்கொழும்பு கடல் ஏரியைச் சூழவும் மீன் பிடிப்பதை ஐந்து நாட்களுக்கு கடற்படை தடை செய்தது. இதனால் 3,000 குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்தன. அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படவில்லை. அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களை மத்திய கொழும்புக்கு வெளியில் வைப்பதற்காக அவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டது.

பண வசதியில்லாத அரசாங்கம் சார்க் மாநாட்டுக்காக 2.8 பில்லியன் ரூபாய்களை தாராளமாய் செலவிட்டது. ஒதுக்கப்பட்ட நிதியில் 75 வீதம் பாதுகாப்புக்காக செலவிடப்படும் என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மேலும் 2.1 பில்லியன் ரூபாய்கள், மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் மட்ட அதிகாரிகள் பயணிப்பதற்காக குண்டு துளைக்காத வாகனங்களை இறக்குமதி செய்வதன் பேரில் செலவிடப்பட்டது.

இந்த பிரமாண்டமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சாக்குப் போக்காக புலிகளின் "பயங்கரவாத" தாக்குதலை தடுப்பது விளங்கியது. எவ்வாறெனினும், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4ம் திகதி வரை "மாநாடு வெற்றி அடைவதற்கான தமது ஒத்துழைப்பை" வெளிக்காட்டுவதன் பேரில் புலிகள் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவளித்துவரும் எட்டு தெற்காசிய நாடுகளின் தலைவர்களதும் மற்றும் பெரும் வல்லரசுகளதும் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியின் பாகமாகவே புலிகளின் நடவடிக்கை இருந்தது.

இந்த யுத்த நிறுத்தத்தை உதறித்தள்ளிய அரசாங்கம், அதனை ஒரு தந்திரம் என கூறிக்கொண்டு அந்த கிழமை பூராவும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் பல பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்காக தமது தாக்குதலை தொடர்ந்தும் முன்னெடுத்தது. வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஆத்திரம் வளர்ச்சிகண்டுவரும் நிலையில், அவர்களை அடக்கியாளுவதற்கான திடீர் திட்டங்களின் ஒரு ஒத்திகையாகவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தன.

தமது சொந்த நாட்டின் பலத்தை வெளிக்காட்டுவதற்காக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கனமான பாதுகாப்பு பரிவாரங்களுடன் வந்தார். கொழும்புக்கு அருகில் இரு இந்திய யுத்தக் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்தன. இதில் ஐ.என்.எஸ். மைஸ்ரோ என்ற கப்பல், தொலைதூர ஏவுகனைகளுடன் ஆகாய, தரை மற்றும் நீருக்கு அடியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுமளவு உபகரணமயப்படுத்தப்பட்டதோடு, ஐ.என்.எஸ். ரன்விர் என்ற கப்பல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள் மற்றும் ரஷ்யத் தயாரிப்பான கே.ஏ. 28 ஹெலிகொப்டர்களாலும் உபகரணமயப்படுத்தப்பட்டிருந்தது. சிங்கின் உடனடி பாதுகாப்புக்காக பல நூறு இந்திய விசேட கமாண்டோக்கல் நிறுத்தப்பட்டிருந்தனர்.

கொழும்பில் இராணுவமும் பொலிசும் நடத்திய தேடுதல் வேட்டைகளின் போது டசின் கணக்கான தமிழர்கள் "சந்தேகத்தின்" பேரில் கைதுசெய்யப்பட்டனர். ஆகஸ்ட் 1ம் திகதி கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் கட்டிடத் தொழிலாளி எமது உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்ததாவது: "என்னால் எனது தேசிய அடையாள அட்டையை காட்ட முடியாமல் போனதால் நான் கைதுசெய்யப்பட்டேன். நான் அதை தற்செயலாக கொண்டுவர மறந்துபோனதோடு என்னை போகவிடுமாறு பொலிசாரை கெஞ்சினேன், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். மூன்று நாட்களின் பின்னர் எனது தாயார் அடையாள அட்டையை கொடுத்த பின்னரே நான் விடுதலை செய்யப்பட்டேன். அடுத்த முறை 14 நாட்களுக்கு சிறை வைப்பதாக பொலிசார் என்னை அச்சுறுத்தினர். இந்த நாட்டில் ஒரு தமிழனாக இருப்பதே ஒரு சாபக்கேடு."

ஜூலை 28 அன்று, வடக்கு புறநகர் பகுதியான வத்தளையில் அல்விஸ்வத்தையைச் சேர்ந்த 64 வயதான மேரி பேர்ல் ஜயதிலக என்ற மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தாய் ஒருவரை வைத்தியசாலைக்கு எடுத்தும் செல்லும் போது, கொழும்பு-நீர்கொழும்பு வீதியை கடக்க பொலிசார் வாகனத்தை அனுமதிக்காமையினால் அவர் உயிரிழந்தார். பொலிசார் பாதுகாப்பு ஒத்திகைக்காக வீதியை மூடியிருந்தனர்.

"பொலிஸ்-இராணுவ முகாம்"

சார்க் மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் போது தாம் அனுபவித்த அடக்குமுறைகளைப் பற்றி பலர் எமது வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்தனர்.

உள்நாட்டு வருவாய்துறை ஊழியர் தெரிவித்ததாவது: "நான் தெஹிவலையில் இருந்து பயணிக்கின்றேன். பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவென்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வழமையாக ரயிலிலேயே பயணிப்பார்கள். ஆனால் கடந்த வாரம் அது மிகவும் சிரமமானதாக இருந்தது. பொலிசார் அனைத்து பயணிகளையும் கீழிறங்குமாறு கட்டளையிட்டதோடு அனைவரும் உச்சிமுதல் அடிவரை சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

"சார்க் மாநாட்டை நடத்துவது நாட்டுக்கும் மக்களுக்கும் உயர்ந் நன்மையை அளிக்கும் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் மக்கள் குற்றவாளிகளைப் போல் அடக்கப்பட்டதோடு இந்த மாநாட்டில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமது நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளில் எதனையும் தீர்க்கத் தவறியுள்ள அந்த நாடுகளால் எப்படி எமக்கு உதவ முடியும்? அரசாங்கத்துக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கட்டுமான வேலைகள், திருத்தம், வீதி சுத்தம் செய்தல், சுவர்கள் மற்றும் வேலிகளுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் உணவுத் தயாரிப்பு போன்ற ஒப்பந்தங்களின் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்."

மக்கள் வங்கி ஊழியர் ஒருவர்: "பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாங்கள் வேலை செய்யும் வங்கி கட்டிடத்தின் உள்ளே 30 பொலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர். வங்கிக்குள் வந்த அனைவரும் சோதனையிடப்பட்டனர். பல வங்கி கிளைகளின் ஊழியர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

"புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் காரணமாக நாங்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பல ஆண்டுகளாக அனுபவித்துள்ளோம். ஆனால் கடந்த வாரம், நகரில் மக்களின் நடமாட்டம் ஏறத்தாழ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. கொழும்பு நகரம் உண்மையிலேயே ஒரு பொலிஸ்-இராணுவ முகாமாக இருந்தது. இந்த மாநாட்டுக்காக பில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தலைவர்கள் இலங்கையில் அல்லது இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு கொடுத்தது என்ன? இலங்கையில் யுத்தத்துக்கு அல்லது வேலையின்மை மற்றும் வறுமைக்கு அவர்களிடம் தீர்வு கிடையாது" என்றார்.

டாக்சி வாகன சாரதிகளுக்கு பல பிரதேசங்களுக்கு செல்ல முடியாமல் போனதால் அவர்களது சம்பாத்தியம் பாதிக்கப்பட்டது. "இப்போது கொழும்பு நகரின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன," என ஒரு சாரதி முறைப்பாடு செய்தார்.

ஒரு தனியார் பஸ் நடத்துனர் தெரிவித்ததாவது: "வெள்ளி முதல் திங்கள் வரை நாங்கள் பஸ்ஸை ஓடவிடவில்லை. பொலிஸர் எந்தவொரு கொடுப்பணவும் இன்றி எங்களுக்கு சொந்தமான சில பஸ்களை வீதியை தடுப்பதற்காக பயன்படுத்தினர். நட்டத்தை எங்களுக்கு யார் கொடுப்பது? யுத்தத்தின் காரணமாக நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். எங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எண்ணெய் விலையும் ஏனைய பொருள்களின் விலையும் அதிகரிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாங்கள் ஒவ்வொரு நாளும் 4,200 ரூபா எரிபொருளுக்காக செலவிட்டோம். இப்போது இந்த தொகை 6,000 ரூபாயாக அதிகரித்துவிட்டது. யுத்தம் முடியும் வரை பொறுமையாக இருக்குமாறு அரசாங்கம் கூறுகிறது. எத்தனை ஆண்டுகளாக இந்த யுத்தம் நடக்கின்றது? எத்தனை ஆண்டுகள் இது தொடரும்? யாருக்கும் தெரியாது. வறியவர்களே அதற்கு விலை கொடுக்கவேண்டியுள்ளது."

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகொம் ஊழியர், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்துவதற்கு செய்யப்பட்டது என்று தான் நினைப்பதாகத் தெரிவித்தார். "அரசாங்கம் மிகப் பெருந்தொகையான பணத்தை யுத்தத்துக்கு செலவிடும் அதே வேளை, விலைவாசி அதிகரிப்பு மற்றும் புதிய வரிகளை அறிமுகப்படுத்தல் ஊடாக யுத்தத்தின் சுமை மக்கள் மீது சுமத்தப்படுகிறது. இப்போது செல்லிடத் தொலைபேசிகளுக்கு 2 வீத வரி உட்பட பல சுற்றுச்சூழல் வரிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.

"தொழிலாளர்கள் தமது வாழ்க்கை நிலைமைகளை பாதுகாப்பதற்காக எதிர்த்துப் போராடும் போது, அவர்களை அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டுகிறது. கடந்த மாதம் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களாகவும் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளை தடுப்பவர்களாகவும் முத்திரை குத்தப்பட்டனர்."

உணவு வங்கி ஒன்றை ஸ்தாபிக்கும் சார்க் தீர்மானம் பற்றிய அரசாங்கத்தின் பிரச்சாரத்தை வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவையை சேர்ந்த விவசாயி ஒருவர் நிராகரித்தார். "எனக்கு 56 வயது. நான் கடந்த 30 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செய்கின்றேன். விவசாயிகளின் நிலைமை கெட்டதில் இருந்து மோசமான நிலைமைக்குச் சென்றுள்ளது என்பதே எனது அனுபவம். நாட்டில் உள்ள விவசாயிகள் பற்றிய செய்தியை நானும் வாசிப்பேன் அல்லது பார்ப்பேன். இலங்கையைப் போல், இந்தியாவில் உள்ள விவசாயிகளும் கடன் மற்றும் தற்கொலை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

"விவசாயிகளுக்கு உதவுவதாக அரசாங்கம் பறைசாற்றுகிறது. அது பொய். விவசாயிகளால் தமது உற்பத்திகளை தக்க விலைக்கு விற்க முடியாமல் உள்ளது. மார்ச் மற்றும் ஏப்பிரல் மாதங்களில், நெல் விலை கிலோ, 32 முதல் 38 ரூபா வரை சென்றது. இப்போது 20 முதல் 22 ரூபா வரை குறைந்துவிட்டது. விலை அதிகரிப்பின் நன்மைகள் எதுவும் விவசாயிகளை சென்றடையவில்லை. அவை வர்த்தகர்களுக்கே சென்றன. இப்போது அரசாங்கம் உர மானியத்தை வெட்ட முயற்சிக்கின்றது.

"நான் இலங்கையில் யுத்தம் முடிவடைய வேண்டும் என விரும்புகிறேன். யுத்தத்தின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளனர். இந்த அழிவுகரமான யுத்தத்தால் எத்தனைபேர் இறக்கின்றனர். இந்த பிரதேசத்தில் இராணுவத்தில் இணைந்த இளைஞர்கள் 15 பேர் அண்மையில் கொல்லப்பட்டனர். எனக்கு இரு மகன்மார் உள்ளனர். எனது மூத்த மகன் உயர்தரம் வரை கற்றார். அவர் தொழில் கிடைக்காததால் பல தடவை இராணுவத்தில் சேர முயற்சித்த போதும் நான் அவரை தடுத்துவிட்டேன்" என்று அவர் குறிப்பிட்டார்.