World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Beijing Olympic Games opening ceremony blacks out most of twentieth century

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடக்கவிழா இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியை இருட்டடிப்பு செய்கிறது

By John Chan
12 August 2008

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வெள்ளியன்று நடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தொடக்கவிழா, முதலாளித்துவ ஆதரவு ஆட்சி என்ற அதன் தோற்றத்தை நவீனப்படுத்த, "சோசலிச" அல்லது "புரட்சிகர" பாரம்பரியம் கொண்டவர்கள் என்ற அதன் கூற்றுகளை நீண்ட காலத்திற்கு முன்பே விட்டுவிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியால் (CCP) ஏற்பாடு செய்யப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மக்கள் தொடர்பு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

90,000 பார்வையாளர்கள் கூடியிருந்த ஒரு புதிய "Bird's Nest" அரங்கில், தொடக்க காலத்திலிருந்து நவீனகாலம் வரையிலான சீனாவின் 5,000 ஆண்டு வரலாற்றின் பெரும்பகுதி வியத்தகு முறையில் காணப்பட்டது. ஒரு பிரம்மாண்ட வானவேடிக்கை உட்பட மாயவொளி, வண்ணம் மற்றும் கண்கவரும் காட்சிகளில் சுமார் 20,000 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். சீனாவின் ஆடம்பரமான இந்த முழு நிகழ்ச்சியும், பண்டைய சீனாவின் பண்பாட்டை விளக்கி காட்டுவதிலும், தேசிய பெருமையை எடுத்துக்காட்டுவதிலும் மற்றும் நாட்டின் உயர்ந்து வரும் பொருளாதார சக்தியை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி இருந்தது.

ஒரு மாபெரும் வரலாற்று சுழற்சி முறை மூலம், சீனாவின் பண்டைய எழுத்துச்சிறப்பு, கலை ஆகியவற்றுடன் அதன் கண்டுபிடிப்புகளான காகிதம், அச்சு, வெடிமருந்து மற்றும் திசை காட்டும் கருவி ஆகியவையும் குறிப்பிடத்தக்களவில் விளக்கி காட்டப்பட்டன. ஆனால் பின்னர், விளக்க முடியாத வகையில், நிகழ்ச்சி திடீரென சீன விண்வெளியாளர்கள் மற்றும் புல்லட் இரயில்களின் சாகசங்களுடன், கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு தாவிவிட்டது. இதில் முற்றிலுமாக தவிர்க்கபட்டவை இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வுகளாகும்: அதாவது, 1911, 1925-27 மற்றும் 1949இல் ஏற்பட்ட முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சீன புரட்சிகளும், கொந்தளிப்பு நிறைந்த மவோவின் ஆட்சி தசாப்தங்களும் முற்றிலுமாக நீக்கப்பட்டிருந்தன.

சீனாவின் வரலாறு மற்றும் வலிமை குறித்த காட்சிகளை கண்டுகளிக்க மிக முக்கிய விருந்தினர்களாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உட்பட, 80க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் (எந்த ஒலிம்பிக் விளையாட்டிற்கும் இல்லாத அளவில் மிக அதிகமான தலைவர்கள்) தொடக்கவிழாவில் வரவேற்கப்பட்டிருந்தார்கள். முக்கிய முதலாளித்துவ சக்திகளுக்கிடையே சீனாவிற்கான இடத்தை பெற பாடுபட்டு கொண்டிருக்கும் பெய்ஜிங்கிற்கு, 1949ம் ஆண்டு புரட்சி, மாவோ சேதுங் அல்லது சோசலிசம் பற்றிய எந்த குறிப்பும் பெரும் சங்கடத்தை அளித்திருக்கும்.

நாடு முழுவதிலுமுள்ள பல மில்லியன்கணக்கான மக்களின் சமூக பதட்டங்களை ஒடுக்கியதால், ஏதோவொரு வகையில் சோசலிசத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) யின் போலீஸ் அரசாங்கம் நிலைநாட்டி இருப்பதாக அது போலி நம்பிக்கையை பல தசாப்தங்களாக தக்கவைத்திருந்தது. எவ்வாறிருப்பினும், தற்போது, 1949க்கு பின்னர், மிக குறைந்த சீர்திருத்தங்கள் கூட கைவிடப்பட்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களில், குறைந்தளவிலான செல்வந்தர்கள் மற்றும் நாளொன்றுக்கு ஒருசில டாலர்கள் அல்லது அதற்கும் கீழாக பெற்று உயிர்தப்பி இருப்பதற்கே போராடும் மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைக்களுக்கு இடையிலான பாரிய சமூக ஏற்றத்தாழ்வுகளுடன், இந்த ஆட்சி சீனாவை உலகின் மிக பெரிய உழைப்புகூடமாக மாற்றிவிட்டுள்ளது.

Forbes இன் கருத்துப்படி, 2007ல் சீனாவின் 400 பணக்காரர்களின் மொத்த சொத்துமதிப்பு 288 பில்லியன் டாலர்; 2006ல் 116 பில்லியனாக இருந்ததை விட இது இருமடங்கு அதிகம். ஒலிம்பிக்கில் 43 பில்லியன் டாலர் ஆடம்பரமாக செலவிடப்பட்டிருக்கிறது, குறிப்பாக புதிய முதலாளித்துவ மேற்தட்டு அதன் வெற்றியை கொண்டாடவும் மற்றும் உலகிற்கு அதை எடுத்துக்காட்டவும் இது பயன்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், விளையாட்டுகள் தொடங்குவதற்கு முன்னதாக, அதிகாரிகள் மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும், நகர்புற ஏழைகளையும் பெய்ஜீங்கை விட்டு விரட்டிவிட்டனர். பெய்ஜீங் காட்ட விரும்பும் மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட தோற்றத்தை எந்த எதிர்ப்புகளும் குலைத்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய நூறாயிரக்கணக்கான போலீஸ் மற்றும் துருப்புகள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதுடன் 300,000 கண்காணிப்பு கேமிராக்களும் நிறுவப்பட்டிருந்தன.

தொடக்கவிழா கற்பனைகாட்சிகளை பார்த்த பலருக்கு, மாவோவிச முன்னோக்கின் முழுமையான மறுப்பாகவே இது தோன்றியிருக்கும். உண்மையில் அது, சோசலிசமோ அல்லது கம்யூனிசமோ அல்லதா, 1949 புரட்சியில் ஏற்பட்ட ஆட்சியின் தர்க்கபூர்வ இறுதி விளைவாகும். அது தொழிலாள வர்க்கத்தை அல்லாமல் விவசாயிகளை அடிப்படையாக கொண்டிருந்தது. சர்வதேச சோசலிசத்தை கைவிட்டிருக்கும் CCP இன் நிலைப்பாடு, 1925-27ல் பரந்த மக்கள் இயக்கத்தை நசுக்க சியாங் கேய் ஷேக்கை அனுமதித்த இரண்டாம் சீன புரட்சியில் முதலாளித்துவ Kuomintang இடம் CCPஐ அடிபணிய வைத்த ஸ்ராலினிச கொள்கையுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.

தொழிலாள வர்க்கத்துடன் எவ்வித தொடர்பையும் துண்டித்த பின், கம்யூனிஸ்ட் கட்சியானது 1949ல் அதன் விவசாயி படைகள் முக்கிய நகரங்களுக்குள் நுழைந்த போது, தொழிலாளர்களினாலான எந்த நடவடிக்கைகளும் நசுக்க உத்திரவிடப்பட்டது. மேலிடத்திலிருந்து திணிக்கப்பட்ட ஒரு இராணுவ "விடுதலை" விரைந்து போலீஸ் அரசு இயந்திரமாகப் பரிணாமம் அடைந்தது. இது முதலாவதாக முதலாளித்துவத்தின் தனியார் சொத்துரிமைகளையும் மற்றும் பின்னர் புதிய ஆட்சியின் அதிகாரம் பெற்ற அதிகாரத்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கும் கொண்டிருந்தது. மில்லியன்கணக்கான மக்கள் வாட்டி வதைக்கப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர்; இன்னும் பலர் மாவோவின் பொருளாதாரப் பேரழிவு நடவடிக்கைகளில் மடிந்து போயினர்.

கொரியப் போரால் உருவான பொருளாதார சீரழிவுக்கு மாவோவின் பிரதிபலிப்பாக, 1950களில் தொழில்துறை தேசியமயமாக்கப்பட்டது மற்றும் விவசாயம் கூட்டுமுறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவோவின் சொந்த விவசாய தீவிரப்போக்குடன் இணைந்த வகையில், "தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டியமைப்பது" எனும் ஸ்ராலினின் தேசியவாத சூத்திரத்தின் அடிப்படையில் CCP ஒரு இறக்குமதி இல்லாத பொருளாதாரத்தை உருவாக்கியது. இதன் விளைவாய் உருவான பொருளாதார சீரழிவுகள் மற்றும் பெரியளவிலான பஞ்சங்கள் இறுதியில், ஆட்சிக்குள் சந்தை ஆதரவு கூறுபாடுகள் வெளிப்படையாக மேலாதிக்கம் செலுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்கியது.

மாவோவின் அடிப்படை வர்க்க நோக்குநிலை, 1966ன் "கலாச்சார புரட்சியில்" தெளிவாக காட்டப்பட்டது. இதில் அவர், தொழிலாள வர்க்கம், அறிவியல், கலை மற்றும் கல்வி என நவீன தொழில்துறை சமுதாயத்துடன் தொடர்பு கொண்டிருந்த அனைத்தின் மீதும் யுத்தம் தொடுப்பதாக அறிவித்தார்: இதையொட்டி ஏற்பட்ட பொருளாதார முறிவு மற்றும் அரசியல் எழுச்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியை ஒடுக்குவதற்கு இராணுவத்தின் தலையீடு தேவைப்பட்டது. 1971ஐ ஒட்டி, சோவியத் ஒன்றியத்துடன் ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் ஒரு தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிக்கு இடையில், நிக்சன் நிர்வாகத்தின் கீழ் மாவோ அமெரிக்காவுடனான ஒரு சமாதான உறவிற்கு தள்ளப்பட்டார்.

அந்த வரலாற்று நிகழ்வு நிச்சயமாக கடந்த வாரம் நினைவுபடுத்தப்பட்டது. தொடக்கவிழாவிற்கு சற்று முன்னதாக, ஜனாதிபதி புஷ், அவருடைய தந்தை, முன்னாள் ஜனாதிபதி புஷ் மற்றும் நிக்சனின் அரசுத்துறை செயலாளர் ஹென்ரி கிசிங்கர் பெய்ஜிங்கில் ஒரு புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைத்தனர். 1971ல் கிசிங்கரின் சீன தலைநகருக்கான இரகசிய விஜயத்தாலும், அந்த தசாப்தத்தில் மூத்த புஷ் சீனாவில் உயர்மட்ட அமெரிக்க இராஜாங்க அதிகாரியாக பங்காற்றியதாலும், சீனத் தலைவர்கள் இவர்களை "பழைய நண்பர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

சீனாவை வெளிநாட்டு முதலீட்டிற்கு திறந்துவிடுவதற்கான முதல் நடவடிக்கைகள் மாவோவின் கீழ் தொடங்கப்பட்டன; ஆனால் அது அவருடைய இறப்பிற்கு பின் டெங் சியாவோபிங்கின் கீழ் பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதான பாசாங்கை கூட அநேகமாக கைவிட்டபின், எழுந்துவரும் மத்தியதர வர்க்கத்திடையே சமூக அடிப்படையில் ஆதரவை தேடுவதற்கும், கடுமையான சமூக பதட்டங்களை நிர்வகிப்பதற்கும் CCP சீன தேசியவாதத்தை தான் பாரியளவில் நம்பியிருந்தது. வளர்ச்சிபெற்ற முதலாளித்துவத்தை போலவே, சிறப்பான ஊதியம் பெற்றுவந்த மில்லியன்கணக்கான தொழில் வல்லுனர்களும், பேராசை மிக்க தொழில்முனைவோர்கள் மற்றும் ஊக வியாபாரிகளும் தங்களின் எதிர்காலம் சீன வளர்ச்சியுடன் பிணைந்திருப்பதாக கண்டார்கள்.

தேசியவாதமும், கன்பூசியஸ்வாதமும்

சீன தேசியவாதத்தின் மையமாக ஹன் தேசிய வெறியுணர்வு இருக்கிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் ஹன் சீனர்கள் இருந்த போதினும், 100 மில்லியனுக்கும் மேலான 56 பிற தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் மீதியிடத்தை பிடிக்கின்றனர். தொடக்கத்தில் இருந்தே, மாவோயிச ஆட்சி இந்த தேசிய சிறுபான்மையினர்களை ஒருங்கிணைப்பதில் முற்றிலும் திறமையற்றிருந்ததை நிரூபித்ததுடன், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கலாச்சார உணர்வுகள் மீதும் கடுமையாக நடந்து கொண்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த திபெத்திய போராட்டங்கள் மற்றும் விளையாட்டுக்களை சீர்குலைக்க ஜிங்ஜியாங்கிலிருந்த முஸ்லிம் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல்கள் தான் பெய்ஜிங்கின் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட சமீபத்திய அதிருப்தி மற்றும் விரோத போக்கின் வெளிப்பாடுகளாகும்.

தேசிய ஐக்கியத்தை காட்டுவதற்கான முயற்சிகள் இருந்த போதிலும்கூட, ஹன் தேசிய வெறியுணர்வு தான் தொடக்கவிழாவின் முக்கிய கூறுபாடாக இருந்தது. ஓர் இளம் சீன பெண் விழாவைத் தொடங்கி வைக்கும் வகையில் "Ode to Motherland" எனும் பாட்டு பாடினார். அவருடைய அழகிய தோற்றம் பிற சீன தேசிய இன குழந்தைகளிலிருந்து தனித்து நின்ற தன்மையை மறைக்க முடியவில்லை. சர்வதேச பார்வையாளர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற போதினும், ஹன் சீனர்களுக்கு முக்கிய இடம் அளிக்கும் வகையில் கவனமாக செய்யப்பட்ட இந்த பின்னணி குரல்அளிப்பு செயல் உள்ளூர் மக்களுக்கு இந்த சேதியைக் கொண்டு சென்று சேர்க்க தவறவில்லை.

இதேபோன்று, ஆயிரக்கணக்கானவர்களால் அணியப்பட்டிருந்த பண்டைய ஹன் இன ஆடைகள், ஹன் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏகாதிபத்திய சீனாவின் பொற்காலத்தை நினைவுபடுத்த, டாங் பாரம்பரியத்தை சேர்ந்த அரண்மனை மகளிர் போன்று அவ்விழாவில் பெண்கள் உடையணிவிக்கப்பட்டிருந்தனர். இந்த விழா, நவீன காலத்திற்கு முன்னதாக, மேற்கு நாடுகளை விட அதிகளவில் தொழில்நுட்ப அளவில் வளர்ச்சி பெற்றிருந்த "இடைகால அரசர்காலங்களின்" தோற்றங்களையும் வெளிப்படுத்திக் காட்டியது. கிழக்கு ஆரிக்காவிற்கும் மற்றும் ஐரோப்பியர்கள் சென்றடைவதற்கு முன்னதாகவே கூட அமெரிக்காவிற்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படும் சீன கடற்பயணி ஜெங் ஹியின் கதையில், ஒரு கடற்படையில் வலிமையான நாடாக வேண்டும் என்ற சீனாவின் விருப்பம் தெளிவாக பிரதிபலித்தது.

விண்வெளி தொழில்நுட்பம் மீதான இவ்விழாவின் வெளிப்பாடுகள், 500 ஆண்டுகளுக்கு முன்னர் கடற்படையில் வலிமைமிக்க நாடாக உருவாவதில் தோல்வியுற்றபோது, ஒரு முதலாளித்துவ சக்தியாக சீனா உருவாக தவறிய போதினும், எதிர்கால மூலோபாய யுத்தகளமாக விளங்கயிருக்கும் விண்வெளிக்கு வெளியிலான போட்டியில் வெற்றிபெற சீனா தற்போது தவறாது என்ற ஆளும் வட்டாரங்களில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை பிரதிபலித்தது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிவடைந்த பின்னர், விண்கலம் ஒன்று மிகப்பெரிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது. இது 2005ல் இருந்து, மனிதர்களுடன் செல்லும் மூன்றாவது விண்கலமாக இருக்கும். தேசிய உணர்வை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முறை விண்வெளி நடைபயணமும் இதில் சேர்க்கப்படலாம்.

19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் சீனாவின் மீது ஆதிக்கம் செலுத்திய சக்திகளுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக வேண்டும் என்ற சீனாவின் நோக்கத்திற்கு, மத்திய வர்க்க அடுக்குகளின் ஆதரவை பெற பெய்ஜிங் விரும்புகிறது. பெய்ஜிங்கின் ஒரு பகுதியில் இந்த விழாவை பார்த்து கொண்டிருந்த Ci Lei எனும் ஓர் இளைஞர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறியதாவது: "பெரும்பாலான வெளிநாட்டினருக்கு, சீனாவை பற்றிய ஒரு தோற்றம் பழைய திரைப்படங்களில் இருந்து தான் கிடைக்கிறது. அவை எங்களை ஏழைகளாகவும், பரிதாபத்திற்கு உரியவர்களாவும் காட்டுகின்றது. இப்பொழுது எங்களை பாருங்கள். புதிய சுரங்கபாதைகள் மற்றும் அற்புதமான நவீன கட்டிடங்களை எங்களாலும் கட்ட முடியும் என்று நாங்கள் உலகிற்கு காட்டியிருக்கிறோம். மக்கள் எங்களைப் பார்க்கும் விதத்தை இந்த ஒலிம்பிக் மாற்றி அமைக்கும்." என்றார்.

உண்மை என்னவென்றால், சீன முதலாளித்துவம் ஆட்டக்காணும் அஸ்திவாரங்களில், பெரியளவிலான சமூக பதட்டங்களை உருவாக்கி கொண்டு தொழிலாள வர்க்கத்தை சுரண்டி கொண்டிருக்கிறது. ஜனாதிபதி ஹு ஜின்டோவிற்கு "இணக்கமான சமூகத்தை" ஊக்குவிக்க, நாட்டின் தத்துவார்த்த பாரம்பரியத்தின் பிரதிநிதியாக தொடக்கவிழா கன்பூசியத்தை ஏற்றிருந்தது. நூற்றுக்கணக்கான விழா காட்சியாளர்கள் கன்பூசியஸ் சிந்தனையாளர்களை போன்று உடையணிந்து மூங்கில் சுவடிகளை ஏந்தி, அந்த ஆசானின் வார்த்தைகளை படித்து காட்டினர். பண்டைய கிரேக்கர்கள் உண்மையான ஒலிம்பிக் பந்தயங்களை நடத்திய போது, சீனாவிலிருந்த "நூற்றுக்கணக்கான பள்ளிகளில்" கன்பூசியவாதமும் கூட்டத்தில் ஒன்றாக மட்டுமே இருந்தது. பின்னர், கடுமையான சமூக அடுக்கு கோட்பாடு, ஏற்றத்தாழ்வு மிக்க நீதிநெறிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை நியாயப்படுத்திய அதிகாரிகளுக்கு முற்றிலும் அடிபணிதல் ஆகியவற்றை கன்பூசியம் கொண்டிருந்ததால், ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் அது உத்தியோகபூர்வ கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சீன மக்களிடையே ஜனநாயக விழிப்புணர்வு மேம்படுவதற்கு கன்பூசிசம் ஒரு முக்கிய தடையாக இருப்பதாக உணர்ந்த பின்னர், 1910களில், புரட்சிகர ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளும் கன்பூசிசவாதத்தின் மீது போர் தொடுத்தனர். 1990கள் வரைகூட, சோசலிசத்தில் அதன் பங்களிப்பை கூறி கொள்வதற்காக, பெய்ஜிங் ஆட்சி பிற பண்டைய பள்ளிகளின் மீது வலியுறுத்தல் செய்தது; அதிலும் குறிப்பாக பண்டைய சடவாதம் அல்லது சமூக சமத்துவ சிந்தனைகளை பிரதிநிதித்துவம் செய்தவற்றிற்றின் மீது வலியுறுத்தல் செய்தது. 1989ல் டியானன்மென் சதுக்கத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீதான கடுமையாக அடக்குமுறையை தொடர்ந்து கன்பூசியவாதம் மீண்டும் திரும்பியயது. அது சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார முறைமைகளை நியாயப்படுத்தும் ஒரு கோட்பாடாகும். அதன்மூலம் அது, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முற்றிலும் விரோதமான சீன ஆளும் மேற்தட்டின் மற்றும் மத்திய வர்க்க அடுக்குகளின் உணர்வுகளுடன் ஒத்து போகிறது.

இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிமிக்க பிரச்சினைகளை மறைக்கும் அனைத்து முயற்சிகளில், இன்னும் ஒன்றுகூட தீர்க்கப்படவில்லை. ஒலிம்பிக் தொடக்கவிழாவின் பெரும் ஆடம்பர அலங்கார நிகழ்வின் பின்னணியில், சீன முதலாளித்துவத்தின் ஆழ்ந்த முரண்பாடுகள் தான் வளர்ந்து வருகின்றன. அவை வரவிருக்கும் காலத்தில் மிகப் பெரிய சமூக போராட்டங்களாக தவிர்க்கமுடியாமல் வெடித்தெழலாம்.