World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Fighting in Sri Lanka continues unabated as ceasefire expires

யுத்த நிறுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் மோதல்கள் தணியாது தொடர்கின்றன

By Sarath Kumara
26 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கை ஜனவரி 16ம் திகதி உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்தமை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அன்றாட மோதல்களால் குறிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிந்ததோடு இந்த ஆண்டு முடிவில் வடக்கில் எஞ்சியுள்ள புலிகளின் கோட்டையான வன்னிப் பிரதேசத்தை கைப்பற்றும் தமது நோக்கத்தை இராணுவ உயர் மட்டத்தினர் பிரகடனம் செய்துள்ளனர்.

2006 நடுப்பகுதியில் இருந்து கிழக்கில் 2,300 பேரையும் மற்றும் வடக்கில் சுமார் 1,500 பேரையும் கொன்ற பின்னர் புலிகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 4,500 ஆக இராணுவம் குறைத்துள்ளது என ஜனவரி 11 அன்று வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அரசாங்கத் துருப்புக்கள் அவசரப்படவில்லை என அவர் பிரகடனம் செய்தாலும், "இந்த விவகாரத்தை அடுத்த இராணுவத் தளபதியிடமும் கையளிக்க நான் விரும்பவில்லை," என அவர் மேலும் தெரிவித்தார். பொன்சேகா டிசம்பர் மாதம் ஓய்வுபெறவுள்ளார்.

தரைமட்டமாக்கும் கொடூர யுத்தத்தைப் பற்றியே பொன்சேகா விவரிக்கின்றார். சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி புலிகளின் விநியோகப் பாதைகளை துண்டிப்பதும், எதிர்த் தாக்குதல்களை மட்டுப்படுத்தி புலிகளை பலவீனமாக்குவதும், இடைவிடாத விமானத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதும் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிரதேசத்திற்குள் தொடர்ந்தும் முன்னேறுவதே இராணுவத்தின் இலக்காகும். இராணுவம் தமிழ் துணைப்படைகளுடன் சேர்ந்து, புலிகளை கீழறுப்பது மற்றும் நாட்டின் தமிழ் சிறுபான்மையினரை பீதிக்குள்ளாக்கும் நோக்குடன் கடத்தல் மற்றும் படுகொலைகள் போன்ற இழிந்த யுத்தத்தையும் முன்னெடுக்கின்றது.

ஜனவரி 2 அன்று, யுத்த நிறுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான தமது அரசாங்கத்தின் முடிவை நடைமுறைப்படுத்த இரண்டு வாரகால காலக்கெடு விதித்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு கட்டுப்படும் பாசாங்கையும் கைவிட்டுவிட்டார். உண்மையில், 2006 ஜூலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலான மாவிலாறு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவம் முதலாவது தாக்குதலைத் தொடுத்ததில் இருந்தே, அது யுத்த நிறுத்தத்தை மீறிவந்துள்ளது. யுத்தநிறுத்த உடன்படிக்கை ஜனவரி 16 அன்று உத்தியோகபூர்வமாக இரத்து செய்யப்பட்டதோடு நோர்வே தலைமையிலான இலங்கைக் கண்காணிப்புக் குழுவும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டது.

கிழக்கில் புலிகளின் பிரதான தளங்கள் அனைத்தையும் கைப்பற்றிய இராணுவம், இப்போது வடக்கில் கவனம் செலுத்துகின்றது. புலிகளின் தலைமையகங்கள் கிளிநொச்சி நகரிலேயே உள்ளன. மோதல்கள் நான்கு பிரதான பிரதேசங்கள் மீது குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. வடமேற்கில் மன்னார், கிளிநொச்சிக்கு வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் முகமாலை, கிளிநொச்சிக்கு தெற்கே வவுனியா மற்றும் புலிகளின் பிரதான தளம் உள்ள முல்லைத்தீவுக்கு அருகில் கிழக்குப் பிரதேசமான வெலி ஓயா ஆகியவையே இந்த நான்கு பிரதேசங்களாகும்.

யுத்தம் பற்றிய சுயாதீனமான செய்திகள் கிடையாது. இராணுவம் முன்னரங்கு நிலைகளில் ஊடகவியலாளர்களை தடைசெய்துள்ளதோடு எந்தவொரு விமர்சனப் பூர்வமான செய்தியையும் வெளியிடாமல் செய்வதற்காக அச்சுறுத்தலான சூழ்நிலை ஒன்றையும் உருவாக்கிவிட்டுள்ளது. புலிகளின் செய்திகளைப் போல், இராணுவத்தின் சொந்த செய்தி அறிக்கைகளும் சுயமானவையாக இருப்பதோடு அவை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" வெற்றி காண்பதாக கூறும் அரசாங்கத்தின் கூற்றை ஊதி பெருக்கச்செய்ய வடிவமைக்கப்பட்டவையாகும். ஜனவரி முற்பகுதியில் திவயின பத்திரிகைக்கு பேட்டியளித்த பொன்சேகா, இராணுவம் எதிர்கொள்ளும் "மிகப் பெரிய பிரச்சினை" "தேசப்பற்று இல்லாத ஊடகங்களே" என பிரகடனம் செய்தார்.

ஜனவரி 8 வெளியான டைம் சஞ்சிகை விளக்கியதாவது: "இலங்கை அரசாங்கப் படைகளும் மற்றும் தமிழ் புலி போராளிகளும் நாட்டின் வடக்கில் தமது கட்டுப்பாட்டு பகுதியில் நிலைகொண்டிருக்கின்றமை, அடுத்து வரும் வாரங்களில் தவிர்க்க முடியாத மோதல்களை உக்கிரமாக்கும் என்பதையே தற்போது கிடைக்கின்ற செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. பிரதேசத்தில் உள்ள மக்கள், கடந்த வராம் பூராவும் கடுமையான செல் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல் சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கின்றனர். 2008ம் ஆண்டின் முதல் வாரத்தில் நடந்த மோதல்களில், புலிகளின் இராணுவப் புலணாய்வுத் துறை துணைத் தலைவரான சன்முகநாதன் ரவிசங்கர் உட்பட 70 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்."

யுத்த நிறுத்தத்திற்கு முடிவுகட்டப்பட்ட பின்னர் மன்னார் பிரதேசத்திலேயே கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரதேசத்தை கடந்த ஜூலையில் இருந்தே புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சித்துள்ளது. ஏனைய வடக்குப் பிரதேசங்களில் போலவே, புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்தியிருப்பதோடு வடகிழக்கு பருவமழையால் எந்தவொரு முன்னேற்றமும் மந்தமாக உள்ளது. பள்ளிகுழி, அடம்பன், உயிலங்குளம் மற்றும் பரப்பங்கண்டல் கிராமங்களுக்கு அருகிலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

புலிகளின் விநியோகப் பாதையை துண்டிக்கும் முயற்சியின் பாகமாகவே இராணுவம் மன்னாரை இலக்கு வைத்துள்ளது. இந்தப் பிரதேசம் குறுகிய பாக்கு நீரினைக்கு அருகில் உள்ள தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பக்கமாக உள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு பாதுகாப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதும் இக்பால் அத்தாஸ் கடந்த வாரம் தனது "நிலவர அறிக்கையில்" மடுப் பிரேதசத்தில் இராணுவத்தின் உந்துதலானது விடத்தல் தீவில் உள்ள கடற் புலிகள் தளத்தை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டதாகும், என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மீன்பிடி கிராமமான சிலாவத்துறையை இராணுவம் கைப்பற்றியது. இது தென்னிந்தியாவில் இருந்து ஆயுதங்களைக் கடத்தும் பிரதான பாதை என இராணுவம் கூறியது.

"விடத்தல் தீவில் உள்ள கடற் புலிகளின் தளத்தைக் கைப்பற்றுவதானது மேலும் ஒரு தறையிரங்கும் பிரதேசத்தையும் நடவடிக்கை தளத்தையும் கெரில்லாக்களுக்கு இல்லாமல் ஆக்கும் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறியளவில் இராணுவ மற்றும் மருத்துவ விநியோகங்கள் கிடைக்கும் தமிழ் நாட்டுக்கான இலகுவான பாதையையும் இது இல்லாமல் செய்யும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். விநியோகங்களை சேகரித்து அவற்றை சிறிய அளவில் கடத்துவதற்காக கெரில்லாக்கள் பாதுகாப்பு அரண்களை ஸ்தாபித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன," என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தால் புலிகளின் பெரும் விநியோகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது உட்பட, கடந்த ஆண்டு புலிகள் குறிப்பிடத்தக்க இராணுவ நிர்வாக பின்னடைவுகளை ஏற்கனவே சந்தித்துள்ளனர்.

சிறியளவிலான மோதல்கள் இடம்பெறுவதை இராணுவ செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. "பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள்" தாக்கப்பட்டுள்ளன. சிறிய ஆயுதக் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு ஆங்காங்கே புலிகளின் பழிவாங்கும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வாரத்தில் ஜனவரி 17 அன்று யாழ்ப்பாணத்திலும் வெலி ஓயாவிலும் நடந்த இரு வேறு சம்பவங்களில் ஐந்து "பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாகவும், மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் ஜனவரி 18 அன்று 19 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 19 அன்று 2 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 20 அன்று பிரதானமாக மன்னாரில் நடந்த பல மோதல்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 21 மன்னாரிலும் வவுனியாவிலும் 34 பேர் கொல்லப்பட்டதாகவும், ஜனவரி 22 மன்னார், வவுனியா மற்றும் வெலி ஓயாவில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் ஜனவரி 23 அன்று 3 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் தொடர்பான அரசாங்கத்தினதும் புலிகளதும் அறிக்கைகளுக்கு இடையில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. அத்தாஸ் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய "நிலவர அறிக்கையில்" இராணுவம் அநேகமாக எண்ணிக்கைகளை பொய்மைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். "அண்மைய ஆண்டுகளில் கெரில்லாக்களுக்கு எதிரான நீண்டகால தாக்குதல்களில், மன்னாரில் இருந்து முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ உந்துதலுக்கு உரிய ஏனைய விபரங்களை கடுமையான வற்புறுத்தல்களின் கீழ் வெளியிட முடியாதுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் களத்தில் துருப்புக்களின் அர்ப்பணிப்பும் அடங்கும். பின்னையதைப் பொறுத்தளவில் இந்தகைய நகர்வுகள் சிரேஷ்ட உறுப்பினர்களின் கோபத்தை சம்பாதிப்பதாக இருக்கும்."

கடந்த மாத கடைசியில் அரசாங்கத்திற்கு சொந்தமான FùIù செய்தித்தாளில் கருத்துத் தெரிவித்திருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இராணுவம் ஒரு நாளைக்கு 10 புலி உறுப்பினர்களைக் கொல்லுவதை இலக்காகக் கொண்டுள்ளது, என விளக்கினார். அன்றாட சாவு எண்ணிக்கையை பெரிதாக்குவதற்காக உள்ளூர் தளபதிகள் உயிரிழந்த பொதுமக்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த இனவாத யுத்தத்தில், இராணுவம் அனைத்து தமிழர்களையும் "பயங்கரவாதிகளாவே" நடத்துகிறது. அரசாங்கப் படைகள் 21 சிப்பாய்களை மட்டுமே இழந்துள்ள அதே சமயம் 592 "பயங்கரவாதிகள்" இந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது.

நேற்று, கிளிநொச்சிக்கு அருகில் செல்வநகரில் உள்ள புலிகளின் போக்குவரத்து தளம் என சொல்லப்படுவதை இராணுவ விமானம் தாக்கியது. புலிகளுக்கு சார்பான செய்தி ஊடகங்களின் படி குறைந்த பட்சம் ஒரு பொதுமகன் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். தனது இராணுவ உட்கட்டமைப்பை அழிக்கவும் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தவும் இலங்கை விமானப் படை பயன்படுத்தப்படுவது அதிகரிக்கப்படுகின்ற நிலையில் அதற்கு விளபயனுள்ள வகையில் பதிலளிக்க புலிகளால் முடியாதுள்ளது. அதன் சொந்த "விமானப் படைக்கு" பல இலகு ரக விமானங்கள் உள்ளன. அவை பெருமளவில் கொழும்பில் அடையாளத் தாக்குதல்களை முன்னெடுக்கவும் கடந்த அக்டோபரில் வடக்கில் உள்ள விமானப் படைத் தளத்தின் மீது நேரடித் தாக்குதல்களை நடத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலிகளின் செய்தியின் படி, ஜனவரி 17ம் திகதி, கனகபுரம் மஹா வித்தியாலயத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் விமானப் படை ஜெட்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த பாடசாலையில் 790 மாணவர்களும் 22 ஆசிரியர்களும் இருந்தனர். சுமார் 5,000 மாணவர்கள் அந்தப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து வெளியேறினர். அந்தத் தாக்குதலில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதோடு ஏழு பேர் காயமடைந்ததுடன் ஆறு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை பாதுகாப்பு அமைச்சு மறுக்கவில்லை.

வடக்கு பிரதேசங்களில் இராணுவ அழுத்தங்களை குறைக்கும் முயற்சியாக, கொழும்புத் தலைநகர் உட்பட தீவின் தென் பிரதேசத்தில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் தொடுக்க புலிகள் முயற்சிப்பதாகத் தோன்றுகிறது.

கிழக்கு மாவட்டமான மொனராகலையில் உள்ள புத்தலயில் கடந்த வாரம் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கம் புலிகள் மீது குற்றஞ்சாட்டியது. இந்தத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேர் வரை காயமடைந்திருந்தனர். புலிகள் கடந்த காலத்தில் சாதாரண சிங்கள மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ள அதே வேளை, இனவாத மோதல்களை கிளறுவதற்காக இராணுவமும் நேரடியாகவோ அல்லது துணைப்படையின் ஊடாக மறைமுகமாகவோ அத்தகைய அட்டூழியங்களை ஏற்பாடு செய்யும் இயலுமை கொண்டுள்ளன.

யுத்தத்தின் பொருளாதார தாக்கத்தால் வளர்ச்சி கண்டுவரும் பரந்த எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள இராஜபக்ஷ அரசாங்கம், புதுப்பிக்கப்பட்ட "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" நியாயப்படுத்துவதற்காக இந்த குண்டுத்தாக்குதலை உடனடியாக சுரண்டிக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை அந்தப் பிரதேசத்திற்கு பயணித்த இராஜபக்ஷ பல கிராமத்தவர்களின் மரண வீடுகளுக்கு சென்றார். அரசாங்கம் உள்ளூர் கிராமத்தவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிளை விநியோகித்துள்ளதோடு மொனராகல மாவட்டத்தில் தேடுதல் நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான படையினரும் பொலிசாரும் அணிதிரட்டப்பட்டுள்ளனர்.

யுத்தத்தை மீண்டும் தொடங்குவதில், அரசாங்கம் பெருமளவில் சர்வதேச ஆதரவிலேயே தங்கியிருந்தது. 2002 யுத்த நிறுத்தத்தை அடுத்து வந்த "சமாதான முன்னெடுப்புகளின்" அனுசரணையாளர்கள் என சொல்லப்பட்ட அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வேயும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு மெளனமாக ஆதரவு வழங்கின. ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி கடந்த வாரம் கொழும்புக்கு விஜயம் செய்து யுத்த நிறுத்தம் இரத்து செய்யப்பட்டது பற்றி "ஆழமான கவலையை" வெளிப்படுத்திய போதிலும், அரசாங்கத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தள்ளுவதன் பேரில் நிதி உதவிகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முன்னர் விடுத்த அச்சுறுத்தலை டோக்கியோ விடுக்கும் என்ற சமிக்ஞையை கூட அவர் செய்யவில்லை.

இந்தியாவும் அமெரிக்காவும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இராணுவ உதவிகளையும் அதே போல் அரசியல் ஆதரவையும் சத்தமின்றி வழங்கி வருகின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜி ஜனவரி 12ம் திகதி ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்ததாவது: "இலங்கை படையினருக்கும் புலிப் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதுவரை பயங்கரவாதம் சம்பந்தமாக எமது நிலைப்பாடானது பொறுத்துக்கொள்ளும் அளவு பூஜ்ஜியமாகும். ஆகவே பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எந்தவொரு நாடும் தமது சட்ட அமைவுக்குள் அதைச் செய்ய சுதந்திரம் உடையதாகும்."

புலிகளுக்கு எதிராக இந்திய கடற்படை இலங்கையில் உள்ள தமது சமதரப்பினருக்கு உதவியதாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரால் சுரேஷ் மெஹ்தா ஏற்றுக்கொண்டதாக ஜனவரி 16ம் திகதி இந்தியாவின் என்.டி.டீ.வி. தெரிவித்தது. புலிகளின் முதுகெலும்பை உடைப்பதற்கு இராணுவ உதவி வழங்கியமைக்காக இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் வசந்த கரன்னகொட புது டில்லிக்கு நன்றி தெரிவித்தார்.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியில், அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய தளபதி அட்மிரால் ரொபட் வில்லார்ட் ஜனவரி 17 அன்று இலங்கைக்கு விஜயம் செய்தார். கடற்படை பயிற்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்கள் உட்பட தற்போது நடைபெற்றுவரும் கடற்படை நடவடிக்கைகளையும் அட்மிரால் ஆராய்ந்ததாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் இராஜபக்ஷவையும் நாட்டின் இராணுவ உயர் மட்டத்தினரையும் சந்தித்ததோடு "புலிப் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க-இலங்கை ஒத்துழைப்பு" பற்றி கலந்துரையாட கிழக்கில் திருகோணமலை கடற்படை தளத்திற்கும் சென்றிருந்தார்.

இந்திய "இராணுவ விநியோக ஆதரவு" மற்றும் அமெரிக்க "ஒத்துழைப்பு" ஆகியவற்றின் உண்மையான பண்பு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு, செயற்திறம் கொண்ட உதவிகள் மற்றும் புலணாய்வுகள் இன்றி, தீவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் புலிகளின் விநியோக படகுகளை கண்டுபிடித்து மூழ்கடிக்க இலங்கையிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட கடற்படை வளங்களால் முடிந்தது எனக் கருத முடியாது.

இந்த மோதல்களில் இராணுவ வெற்றிகள் நிச்சயமில்லாததாக இருக்கும் அதே வேளை, பாதுகாப்பு செலவில் ஏற்படுத்திய பிரமாண்டமான அதிகரிப்பு பணவீக்கத்தை குவித்துள்ளதால், ஆட்டங்கண்டு போயுள்ள ஆளும் கூட்டணி எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடியை யுத்தம் உக்கிரமடையச் செய்கின்றது. அதிகரித்துவரும் எண்ணெய் விலை மற்றும் வளர்ச்சி கண்டுவரும் சர்வதேச நிதி ஸ்திரமின்மை ஏற்கனவே பணவீக்கத்தை உண்டுபண்ணியிருந்தன. கடந்த டிசம்பரில், நாட்டின் பணவீக்க வீதம் வருடாந்த அடிப்படையில் ஆகக்கூடிய புள்ளியான 26 வீதத்தை எட்டியிருந்தது. அரசாங்கம் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தேசத்துரோகத்துக்கு சமமானது என கண்டனம் செய்யும் அதே வேளை, அதன் செயற்பாடுகள் சமூகப் போராட்டங்களை பெருமளவில் வெடிப்பதற்கான களத்தையும் அமைக்கின்றது.