World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan independence: 60 years of communalism, social decay and war

இலங்கை சுதந்திரம்: 60 ஆண்டுகால இனவாதமும் சமூக அழிவும் யுத்தமும்

By the Socialist Equality Party (Sri Lanka)
4 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக சுதந்திரம் அடைந்த 60வது ஆண்டை 2008 பெப்பிரவரி 4ம் திகதி குறிக்கின்றது. இன்றைய உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களின் உண்மையான பண்பானது, இலங்கை ஆளும் தட்டின் முழு அரசியல் வங்குரோத்திற்கும் அத்தாட்சியாகும். கொழும்பில் இறுக்கமான பாதுகாப்பு சுற்றிவளைப்புகள் நடைபெறுகின்ற மற்றும் வடக்கில் உள்நாட்டு யுத்தம் உக்கிரமாக்கப்படுகின்ற ஒரு நிலைமையின் கீழ், ஒரு இராணுவ அணிவகுப்பு இடம்பெறுகின்றது. சுதந்திரத்தை அடுத்து வந்த 60 ஆண்டுகள், இனவாத மோதல்கள், ஆழமடைந்துவரும் சமூகத் துயரங்கள் மற்றும் ஜனநாயக-விரோத முறையிலான ஆட்சியின் வளர்ச்சியைத் தவிர சாதாரண உழைக்கும் மக்களுக்கு வேறு எதனையும் கொண்டுவந்துவிடவில்லை.

கடந்த 60 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அரைப் பகுதியில், தமிழ் சிறுபான்மையினர் மீது சிங்கள பெளத்த தட்டுக்களின் மேலாதிக்கத்தை பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட யுத்தத்தால் தீவு மூழ்கிப் போயுள்ளது. இந்த மோதல்களில் 70,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதோடு மில்லியன் கணக்காணவர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். உடன்பிறப்பைக் கொல்லும் மோதலில் நாட்டின் பெரும் பிரதேசங்கள் அழிந்து போயுள்ள அதேவேளை பொருளாதார வளங்கள் வீண் விரயமாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி மேலாதிக்கம் செலுத்த சுதந்திரத்தில் இருந்தே ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட இனவாத அரசியலால் சமாதான உடன்படிக்கைகளை ஸ்தாபிப்பதற்கான சகல முயற்சிகளும் தகர்த்தெறியப்பட்டன.

இன்றைய நிகழ்வுகளுக்கு தலைமை வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிற்கு தேசியவாத வெற்றுரைகளைத் தவிர வழங்குவதற்கு வேறொன்றும் கிடையாது. 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தத்தை அவரது அரசாங்கம் ஒரு மாதத்திற்கு முன்னர் கிழித்தெறிந்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒட்டு மொத்த யுத்தத்தையும் அது பிரகடனம் செய்தது. அவர் தனது உடனடி இராணுவ இலக்குகளை சாதித்தாலும், தசாப்த காலங்களான தமிழர் விரோத பாரபட்சங்களால் உருவாக்கப்பட்ட இனவாத பதட்ட நிலைமைகளுக்கு இராஜபக்ஷவால் தீர்வு காண முடியாது.

2006ல், ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வளர்ச்சி கண்டுவரும் சமூக அதிருப்திக்கு பிரதிபலிப்பாக இராஜபக்ஷ நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் மூழ்கடித்துள்ளார். ஜனாதிபதி தனது முன்னோடிகளைப் போலவே, இனப் பகைமைகளை கிளறிவிட இந்த யுத்தத்தைப் பயன்படுத்தியதோடு எதிர்ப்பை அடக்குவதற்காக கொடூரமான அவசரகால அதிகாரங்களை அமுல்படுத்துவதையும் நியாயப்படுத்தினார். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஊடக விமர்சகர்கள் ஆகிய அனைவரும் "புலி" ஆதரவாளர்கள் அல்லது பயங்கரவாதிகள் என வகைப்படுத்தப்பட்டனர். இராணுவத்துடன் ஒத்துழைக்கும் நிழல் கொலைப் படைகள் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுள்ளன அல்லது "காணாமல்" ஆக்கியுள்ளன.

பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் தாங்க முடியாததாகியுள்ளது. அதிகரித்துவரும் எண்ணெய் விலையுடன் இராணுவச் செலவிலான பிரமாண்டமான அதிகரிப்பு மாற்றமில்லாத பணவீக்கத்தை உருவாக்கிவிட்டுள்ளது. இப்போது 26 வீதமாக இருக்கும் பணவீக்கம், சாதாரண மக்களுக்கு அடிப்படை பொருட்களின் விலையை எட்டாத இடத்திற்கு உயர்த்தியுள்ளது. வரி அதிகரிப்பு மற்றும் பொதுத் துறை தொழில்கள் மற்றும் சேவைகள் வெட்டிக் குறைக்கப்படுவதால் மக்களின் துன்பம் அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவிலும் பூகோள ரீதியிலும் வளர்ந்து வரும் மந்தநிலை தீவின் பொருளாதார பிரச்சினைகளை குவிக்கும். அது சமூக மற்றும் அரசியல் வெடிப்புக்கு களம் அமைக்கும்.

கடந்த 60 ஆண்டுகால பதிவுகள், இலங்கை ஆளும் வர்க்கத்தின் மீது குற்றச்சாட்டை விடுக்கின்றது. இலங்கை ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாலேயே உருவாக்கப்பட்ட அழிவுகளில் இருந்து விடுபட அவர்களால் வழி காட்ட முடியாது. இலங்கையின் வரலாறானது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையான உண்மையை துன்பகரமான முறையில் ஒப்புவிக்கின்றது: முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்து போன நாடுகளில் உள்ள முதலாளித்துவம் தீர்க்கப்படாத எந்தவொரு ஜனநாயக மற்றும் சமூகப் பணிகளையும் தீர்ப்பதற்கு பிறப்பிலேயே இலாயக்கற்றது. யுத்தம், அடக்குமுறை மற்றும் ஆழமாக விரிவடைந்துவரும் சமூக சமத்துவமின்மை மட்டுமே கொழும்பில் உள்ள அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் வழங்கப்படும்.

இலங்கையானது ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள காலனித்துவத்திற்குப் பிந்திய திட்டங்களின் தோல்விக்கு தெளிவான உதாரணங்களில் ஒன்றாகும். இந்தப் பிராந்தியத்தில், துணைக் கண்டத்தை 1947ல் பிற்போக்கான முறையில் பிரித்ததன் விளைவாக உருவான இந்தியா மற்றும் பாகிஸ்தானும் ஏற்கனவே மூன்று முறை யுத்தம் செய்துள்ளன. "உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில்" "பொருளாதார அற்புதத்தைப்" பற்றி உயர்த்திப் பேசிக்கொண்டிருக்கும் இந்தியாவின் விலைபோகும் அரசியல்வாதிகள், 400 மில்லியன் மக்கள் வறுமையில் வாழும் நிலையில் ஒரு கரடுமுரடான சமூக நேரக் குண்டின் மீது அமர்ந்துகொண்டுள்ளனர். எதிர்ப்புகளை அடக்குவதற்கு பொலிஸ் அரச வழிமுறைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கு எந்தவொரு தயக்கமும் கிடையாது. தமது நாடுகளில் நிலவும் வெடிக்கும் நிலையிலான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளை அடக்குவதற்கு வேறு வழிகளும் கிடையாது என்பதை உள்ளூர் ஆளும் கும்பல்கள் கண்டுகொண்டுள்ளன என்ற உண்மையை மட்டுமே பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மாவில் உள்ள இராணுவத்தை ஆதாரமாகக் கொண்ட அரசாங்கங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இலங்கையிலும் மற்றும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள தற்போதைய முட்டுக்கட்டையை, சோசலிச மற்றும் அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பதற்கு இலாயக்கான ஒரே சமூக சக்தி தொழிலாளர் வர்க்கமேயாகும். ஆனால், கடந்த 60 ஆண்டுகால வரலாற்று இருப்பு நிலையை புரிந்துகொள்வதன் அடிப்படையிலேயே சோசலிச இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும். இந்திய போல்ஷவிக் கட்சியினதும், பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியினதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், தொழிலாளர்களில் மிகவும் நனவான தட்டினரின் நம்பிக்கையின் மீது செல்வாக்கு செலுத்திய இலங்கையில் நிச்சயமாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) சீரழிவின் அரசியல் படிப்பினைகள், இலங்கை தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமன்றி ஆசியாவிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கு மகத்தான முக்கியத்துவம் உடையதாகும். 1964ல் ல.ச.ச.க. தலைவர்கள் ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளை காட்டிக்கொடுத்துவிட்டு, ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டமையே யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் மொத்தத்தில் 1983ல் யுத்தம் வெடிப்பதற்கே வழிவகுத்த இலங்கை முதலாளித்துவத்தின் இனவாத அரசியலுக்கு அனுமதியளித்தது.

சுதந்திரம் - உண்மையானதா அல்லது போலியானதா?

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பி.ஐ.) கொழும்பு காலிமுகத் திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அது இன்று அதே இடத்தில் இராஜபக்ஷ அரசாங்கத்தால் நடத்தப்படும் வெட்கங்கெட்ட இராணுவவாத காட்சிப்படுத்தலிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். லண்டனில் பிரித்தானிய காலனித்துவ அலுவலகத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒழுங்கு செய்யப்பட்ட போலி சுதந்திரத்தை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நிராகரித்தார்கள். 1948 பெப்பிரவரி 4ம் திகதி, சோசலிசத்துக்கும் மற்றும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் ஊடாக உண்மையான சுதந்திரத்துக்காவும் தொடர்ந்தும் போராடுவதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த பி.எல்.பி.ஐ. 50,000 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை காலிமுகத் திடலில் அணிதிரட்டியிருந்தது.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை ஆழமாக புரிந்துகொண்டதன் அடிப்படையில், பி.எல்.பி.ஐ. தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா, இலங்கையில் பிரித்தானிய கையளிப்பு தொடர்பாக தூரதிருஷ்டியான திறனாய்வை மேற்கொண்டிருந்தார். அது யுத்தத்திற்குப் பிந்திய காலத்தின் காலனித்துவத்திற்கு பிந்திய அரசாங்கங்கள் அனைத்துக்கும் பரந்தளவில் பொருத்தமானதாகும். "சுதந்திரம் உண்மையானதா அல்லது போலியானதா" என்ற தலைப்பிலான அறிக்கையில டி சில்வா விளக்கியதாவது: "இந்த மாற்றத்தின் உட்பொருளானது இலங்கையின் எந்தப் பகுதியும் காலனித்துவ நிலையில் இருந்து சுதந்திரமான நிலையை அடைந்ததில் தங்கியிருக்கவில்லை, மாறாக, இலங்கையில் உள்ள பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது நேரடியான ஆட்சி முறையை மறைமுகமான ஆட்சி முறைக்கு மாற்றியுள்ளதிலேயே தங்கியிருக்கின்றது... இலங்கையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களை நிர்வகிக்கும் பணி, முற்றிலும் அருகிலேயே உள்ள உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஓய்வு பெற்று பின்னணிக்கு சென்றிருந்த போதிலும், அது முற்றிலும் தமது உரிமையை துறந்துவிடவில்லை."

இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்க, சுதந்திரத்திற்கு பி.எல்.பி.ஐ. யின் எதிர்ப்பால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆபத்தையிட்டு விழிப்புடன் இருந்தார். அவர் உத்தியோகபூர்வ கையளிப்பு விழாவுக்கு வருகை தருமாறு மன்றாட்டமான கடிதமொன்றை பி.எல்.பி.ஐ. க்கு அனுப்பியிருந்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்திற்கு முடிவுகட்டவும் மற்றும் பிரித்தானியாவின் யுத்த முயற்சிகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைக் கீழ்ப்படுத்தவும் மறுத்தில் இருந்து பி.எல்.பி.ஐ. யின் அரசியல் புகழ் ஊற்றெடுத்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஸ்டாலினிஸ்டுகளைப் போலன்றி, யுத்தம் பாசிசத்திற்கு எதிரான "ஜனநாயகப்" போராட்டம் என்ற கூற்றை பி.எல்.பி.ஐ. நிராகரித்ததோடு ஏகாதிபத்திய சக்திகளின் இரு எதிரிக் கும்பல்கள் உலக மேலாதிக்கத்திற்காக போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன, என அது வலியுறுத்தியது.

யுத்தத்தின் போது பி.எல்.பி.ஐ. 1945ல் தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், அது இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் முக்கிய கூறாய் தோன்றியிருந்தது. அது 1946 மற்றும் 1947 இலும் நடந்த பொது வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்ததோடு 1947 தேர்தலில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டிருக்காத போதிலும், சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை (யூ.என்.பி.) பலவித சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தள்ளினர். கிளர்ச்சியடையும் தொழிலாளர் வர்க்கத்தை எதிர்கொண்ட யூ.என்.பி. ஆரம்பத்தில் இருந்தே பிரிவினையை ஏற்படுத்தும் இனவாத அரசியலை நாடியது.

1948ல் சேனநாயக்க அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கைகளில் ஒன்று, ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறிப்பதாக இருந்தது. இந்த தோட்டத் தொழிலாளர்கள் முன்னைய நூற்றாண்டில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். சுருக்கமாக சொல்வதெனில், தீவின் ஜனத்தொகையில் 10 வீதமானவர்களது பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. பி.எல்.பி.ஐ. இந்த இனவாத நடவடிக்கைகயை எதிர்த்ததோடு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் தீவில் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் இந்த பாரபட்சம் தவிர்க்க முடியாத விதத்தில் அவர்களுக்கு எதிராக விரிவுபடுத்தப்படும் எனவும் எச்சரிக்கை செய்தது.

1953 தீர்க்கமான திருப்பு முனையை குறிக்கின்றது. ஆகஸ்ட்டில், ல.ச.ச.க. அழைப்புவிடுத்த ஒரு நாள் ஹர்த்தால் அல்லது பொது வேலை நிறுத்தம் மிகப்பெரும் வெகுஜன எழுச்சியாக வெடித்ததோடு முதலாளித்துவ ஆட்சியின் இதயத்தையே நடுங்கச் செய்தது. (1950ல் பி.எல்.பி.ஐ. மற்றும் ல.ச.ச.க. ஒன்றிணைக்கப்பட்டன.) விலைவாசி அதிகரிப்பு மற்றும் நலன்புரி சேவைகள் வெட்டுக்கும் எதிரான போராட்டங்கள் மூன்று நாட்களாக தொடர்ந்ததோடு தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகிய அனைத்து சமூகத்தவர் மத்தியிலும் பரந்த ஆதரவை உருவாக்கிவிட்டதுடன் கிராமப்புறப் பகுதிக்கும் இந்தப் போராட்டம் பரவியது. இந்த நெருக்கடி காலத்தில் யூ.என்.பி. யின் அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானிய யுத்தக் கப்பலிலேயே கூடிய அதே வேளை, அது முன்கொணர்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை சுருட்டிக்கொள்ளத் தள்ளப்பட்டது.

இந்த அச்சுறுத்தும் அனுபவங்களில் இருந்து இலங்கை முதலாளித்துவம் நிச்சயமான படிப்பினைகளை பெற்றுக்கொண்டது. 1951ல் யூ.என்.பி. யில் இருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை (ஸ்ரீ.ல.சு.க.) ஸ்தாபித்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஹர்த்தாலை அடுத்து உடனேயே சிங்கள மேலாதிக்க வேலைத்திட்டம் ஒன்றை பகிரங்கமாக அபிவிருத்தி செய்தார். தமிழைத் தள்ளிவிட்டு சிங்களமே ஒரே உத்தியோபூர்வ மொழியாக இருக்க வேண்டும் என அவர் கோரினார். ல.ச.ச.க. யின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான ஒரு வழி தமிழர் விரோத பாரபட்சத்தை கிளறிவிடுவதே என பண்டாரநாயக்க முடிவு செய்தார். அவர் "தேசிமயமாக்கம்" மற்றும் வறியவர்கள் சார்ந்த கொள்கை பற்றிய வெற்று சோசலிச வாய்வீச்சுக்களால் தனது "சிங்களம் மட்டும்" இனவாதத்துக்கு ஆடை உடுத்தினார்.

1953 அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு தீர்க்கமான ஆண்டாகும். நவம்பரில், ஏர்னஸ்ட் மன்டேல், மைக்கல் பப்லோ ஆகியோர் தலைமையிலான ஒரு சந்தர்ப்பவாத போக்கிற்கு எதிராகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு.) ஸ்தாபிக்கப்பட்டது. யுத்தத்திற்குப் பிந்திய முதலாளித்துவத்தின் மீள் ஸ்தாபிதத்தை அடுத்து சோசலிசத்திற்கான வாய்ப்புகள் பற்றி ஆழமாக சந்தேகம் கொண்ட அவர்கள், ரஷ்யப் புரட்சியின் அடிப்படை படிப்பினைகளை நிராகரித்தனர். நான்காம் அகிலத்தின் கட்சிகளால், போல்ஷிவிக்குகளின் அனுபவங்களை மீண்டும் கூறிக்கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தின் ஊடாக ஒரு புரட்சிகர இயக்கத்தின் தலைமைக்கு வர முடியாது என பப்லோவும் மண்டேலும் வலியுறுத்தினர். அதற்குப் பதிலாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தம்மை "உண்மையான வெகுஜன இயக்கங்களுடன்" இணைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் பிரகடனம் செய்தனர். இது யதார்த்தத்தில், தமது கட்சிகளை இருந்துகொண்டுள்ள ஸ்டாலினிச, சமூக ஜனநாயகவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாத தலைமைத்துவங்களுக்கு கீழ்ப்படுத்த வேண்டும் என்பதாகும்.

இந்த பிளவில் ல.ச.ச.க. எடுத்த நிலைப்பாடு இலங்கையில் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆழமான விளைவுகளைக் கொண்டிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான போராட்டம் ஒன்றை முன்னெடுத்த ல.ச.ச.க. தலைவர்கள், பப்லோவினதும் மண்டேலினதும் ஸ்டாலினிச சார்பு தகவமைவு தொடர்பாக விமர்சித்தனர். ஆனால், அவர்கள் நா.அ.அ.கு. உடன் இணைய மறுத்ததோடு, அதற்குப் பின்னர் முடிவில் ல.ச.ச.க. யின் அரசியல் பின்னடைவுக்கு ஆசீர்வாதத்தை வழங்கிய பப்லோவாத சர்வதேச செயலகத்தின் பக்கம் சாய்ந்துகொண்டனர். "உண்மையான வெகுஜன இயக்கத்தின்" திசையை நோக்கித் திரும்புவது இலங்கையில் நிச்சயமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. பண்டாரநாயக்கவின் போலி சோசலிசத்துக்கு எதிரான சளைக்காத அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, ல.ச.ச.க. தலைவர்கள் அவரது இனவாத அரசியலுக்கு அடிபணிந்தனர். சோசலிச அனைத்துலகவாதக் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கு மாறாக, பாராளுமன்றத்துக்கு தலைவணங்குவது பதிலீடு செய்யப்பட்டது.

ல.ச.ச.க. யின் அடிபணிவு ஒரே முறையில் இடம்பெறவில்லை. பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த 1956 தேர்தலில், அவரது "சிங்களம் மட்டும்" கொள்கையை ல.ச.ச.க. எதிர்த்ததோடு சிங்களத்துக்கும் தமிழுக்கும் அரச மொழிகள் என்ற சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அழைப்பும் விடுத்தது. "ஒரு மொழி, இரு நாடுகள்: இரு மொழிகள், ஒரு நாடு" என்ற ல.ச.ச.க. யின் சுலோகம், தமிழர் விரோத பாரபட்சங்களின் வன்முறை விளைவுகள் பற்றிய அதன் ஊகம், குறிப்பிடத்தக்க முன்னறிவிப்பாக இருந்தது. எவ்வாறெனினும், ல.ச.ச.க. பாராளுமன்ற திட்டங்களில் முன்னீடுபாடு கொண்டிருந்ததோடு அது பண்டாரநாயக்கவுக்கு மேலும் மேலும் அடிபணிந்து வந்தமை, 1956 முற்பகுதியில் தொடங்கிய தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஸ்ரீ.ல.சு.க. உடன் அது தேர்தல் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதில் மிகத் தெளிவாகியது.

மாபெரும் காட்டிக்கொடுப்பு

பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் உதவியுடனும் ஊக்குவிப்புடனும் தசாப்தம் பூராவும் வளர்ச்சி கண்ட அரசியல் சீரழிவு, ல.ச.ச.க. 1964ல் பண்டாரநாயக்கவின் விதவை மனைவியின் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டதில் உச்ச கட்டத்தை அடைந்தது. அவர்களுக்கு கிடைத்த அமைச்சர் பதவிகளுக்கு அவர்கள் கொடுத்த விலை, தொழிலாளர்களின் வெடிக்கும் நிலையில் இருந்த "21 கோரிக்கைகள்" இயக்கத்திற்கு முடிவு கட்டுவதாகும். இந்த இயக்கம் 1953 ஹர்த்தால் மீண்டும் உருவாகுவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருந்தது. புதிய அரசாங்கம் சில மாதங்களுக்குள் கவிழ்ந்து போன அதே வேளை, சுமார் 300,000 தோட்டத் தொழிலாளர்களை தென்னிந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு கொழும்புக்கும் புது டில்லிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சிறிமா-சாஸ்த்திரி உடன்படிக்கைக்கு ஆதரவளித்ததில் ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பின் அளவு ஏற்கனவே தெளிவாகியிருந்தது. இது 1948ல் தமிழ் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை ட்ரொட்ஸ்கிச இயக்கம் பாதுகாத்ததை முழுமையாக நிராகரிப்பதற்கு சமமாகும்.

ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க. கூட்டணி 1970 தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்தே அது முழு நிறைவடைந்தது. வளர்ச்சிகண்டுவந்த பொருளாதார ஸ்திரமின்மையை எதிர்கொண்ட புதிய அரசாங்கம், அதன் தேர்தல் வாக்குறுதிகளை வேகமாக கிழித்தெறிந்ததோடு சர்வதேச நாணய நிதியம் கோரிய கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தொடங்கியது. வெளிப்படையாக முதலாளித்துவ அரசாங்கத்தில் ல.ச.ச.க. பங்கேற்றமையானது தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் பெரும் குழப்பநிலையை உருவாக்கியது. தீவிரமடைந்த இளைஞர்கள், மாவோவாதம், குவேராவாதம் மற்றும் சிங்கள பேரினவாதத்தின் நச்சு கருத்தியல்வாத கலவையைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கருவிகளின் பக்கம் திரும்பினர். ஸ்ரீமா பண்டாரநாயக்க அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, 1971ல் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியான கெரில்லாவாதத்திற்குள் நுழையும் ஜே.வி.பி. யின் ஆரம்ப நடவடிக்கையை மூர்க்கத்தனமாக நசுக்குவதாக இருந்தது. 10,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதோடு தீவு பூராவும் இருந்த சிறைச்சாலை முகாம்களில் 15,000 த்திற்கும் அதிகமானோர் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

ஜே.வி.பி. யின் சவாலுக்கு பிரதிபலிப்பாக, ல.ச.ச.க. வகித்த முன்னணிப் பாத்திரத்துடன் அரசாங்கம் மேலும் கூர்மையாக சிங்கள இனவாதத்தை நோக்கி திரும்பியது. 1972ல் புதிதாகப் பெயரிடப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கு அரசியல் யாப்பு ஒன்றை வரையும் பொறுப்பு கொல்வின் ஆர் டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அரசியல் யாப்பில் சோசலிசமோ அல்லது ஜனநாயகமோ கிடையாது. பிரித்தானிய காலனித்துவத்தின் தடங்களுக்கு முடிவுகட்டும் சாக்குப் போக்கில், டி சில்வா, சிங்களத்தை ஒரே உத்தியோகபூர்வ மொழியாக்குவதுடன் சேர்த்து பெளத்தத்தை அரச மதமாக பிரதிஷ்டை செய்ததன் மூலம் அரசியல் யாப்புக்குள் தமிழர் விரோத பாரபட்சத்தை சேர்த்துக்கொண்டார்.

பெருந்தோட்ட அமைச்சராக இருந்த டி சில்வா, சிங்கள முகாமையாளர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்த பெரும் தேயிலைத் தோட்டங்களை "தேசியமயமாக்குவதற்கும்" தலைமை வகித்தார். ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ், ஆயிரக்கணக்கான தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் பலாத்காரமாக நடுகடத்தப்பட்ட அளவில், நிலங்கள் சிங்கள விவசாயிகளுக்கு கையளிக்கப்பட்டன. நாடுகடத்துவதற்காக இலக்குவைக்கப்பட்ட தொழிலாளர்களின் ஜீவனோபாயம் பறிக்கப்பட்ட நிலையில் பெருந்தோட்டப் பிரதேசங்களில் தொழிலாளர்கள் அக்காலத்தில் பொருளாதார சிரமங்களை குறிப்பிடத்தக்களவு கடுமையாக பாதிக்கப்பட்டனர். டசின் கணக்கானவர்கள் பட்டினியால் மடிந்தனர்.

பண்டாரநாயக்க அரசாங்கம் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சையை "தரப்படுத்தியது". இது தமது தமிழ் சமதரப்பினருக்கு எதிராக சிங்கள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக திட்டமிடப்பட்டது. இந்த முடிவு பல தமிழ் இளைஞர்களை புண்படுத்திய நிலையில், அவர்கள் இலங்கை அரசுக்குள் தமக்கு எதிர்காலம் கிடையாது என்ற முடிவுக்கு வரத் தொடங்கியதோடு புலிகளின் தமிழ் பிரிவினைவாதத்தை நோக்கியும் தமது உரிமைகளுக்காகப் போராடிய ஏனைய ஆயுதக் குழுக்களை நோக்கியும் திரும்பினர்.

நாட்டின் நிதி அமைச்சரான ல.ச.ச.க. தலைவர் என்.எம். பெரேரா, பங்கீட்டை அமுல்படுத்துவதன் மூலம் ஆழமடைந்து வந்த பொருளாதார நெருக்கடிக்கு பதிலளித்தார். சோசலிசத்தை அமுல்படுத்துவதாக கேலிக்கூத்தாகக் கூறிக்கொண்ட அவர், செவ்வாய்க் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் சோறு சாப்பிடுவதற்கு தடை விதித்தார். சிறு தொகை அரிசியை எடுத்துச் செல்வது கூட குற்றவியல் செயலாக கருதப்பட்டது. தீவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் மற்றும் பூகோள பொருளாதார புயலின் தாக்கத்தை தடுக்கவும் எடுத்த இந்த முயற்சி, தவிர்க்க முடியாமல் இக்கட்டுக்குள் விழுந்து, பரந்த கசப்பான அதிருப்தியை ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் ஒன்றுகுவிந்த ஆத்திரம் 1976ல் பொது வேலை நிறுத்தமாக வெடித்தது. அது கூட்டரசாங்கத்தின் முடிவைக் குறித்தது. 1977 தேர்தலில், யூ.என்.பி. ஐந்துக்கு ஆறு பாராளுமன்ற பெரும்பான்மையில் குறுகிய வெற்றியைப் பெற்றதோடு உடனடியாக பேராவல் கொண்ட சுதந்திர சந்தை சீர்திருத்த திட்டத்தை அது முன்னெடுத்து வெளிநாட்டு மூலதனத்துக்காக பொருளாதாரத்தை திறந்து விட்டது.

25 ஆண்டுகால யுத்தம்

நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்குப் பதிலாக, சந்தை சக்திகளை கட்டவிழ்த்து விட்டமை சமூகப் பிளவை ஆழமடையச் செய்ததோடு குமுறிக்கொண்டிருந்த அதிருப்தியையும் முன்கொணர்ந்தது. தனது முன்னோடிகளைப் போலவே, யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவும் இனவாத பிளவுகளை கிளறிவிடுவதன் மூலம் எதிர்ச் செயலாற்றியதோடு ஜனநாயக விரோத வழிமுறைகளைக் கையாண்டார். 1980ல், தனியார்மயமாக்கம் மற்றும் வேலை இழப்புக்கு எதிராக நடந்த பொது வேலை நிறுத்தத்திற்கு பதிலளித்த அரசாங்கம், ஒட்டு மொத்தமாக 100,000 தொழிலாளர்களுக்கும் அதிகமானோரை வேலை நீக்கம் செய்தது. அதே சமயம், யூ.என்.பி. யை சார்ந்த சிங்கள குண்டர் கும்பல்கள், தமிழ் பிரிவினைவாதிகள் ஆங்காங்கு தொடுத்த தாக்குதல்களைப் பற்றிக்கொண்டு இனவாத கலவரங்களுக்கு தயார் செய்தன. 1981ல், யாழ்ப்பாண நூலகம் எரித்து தரைமட்டமாக்கப்பட்டு, பெறுமதிவாய்ந்த சுவடிகள் மற்றும் புத்தகங்களின் சேகரிப்பு நாசமாக்கப்பட்டது. 1983 ஜூலையில், தமிழர்களுக்கு எதிரான கொடூரமான படுகொலைகள் நாடுபூராவும் அரங்கேறின. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கான வீடுகளும் வியாபார நிலையங்களும் அழிக்கப்பட்டன. இதன் விளைவு உள்நாட்டு யுத்தமாகியது.

யுத்தமானது அதன் சொந்த பொருளாதார நலன்கள் மீது அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், கால் நூற்றாண்டு காலமாக, யுத்தத்திற்கு முடிவுகட்ட முற்றிலும் இலாயக்கற்றது என்பதை இலங்கை ஆளும் வர்க்கம் நிரூபித்துள்ளது. சமாதான தீர்வுக்கான ஒவ்வொரு முயற்சிகளும், தமிழ் சிறுபான்மையினருக்கு வழங்கும் எந்தவொரு சலுகை தொடர்பாகவும் அரசியல் ஸ்தாபனத்தினுள் சாட்டப்படும் காரசாரமான குற்றச்சாட்டுகளின் மத்தியில் கவிழ்ந்து போயின. கடந்த 60 ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான ஆயுதமாக இனவாத அரசியலை பயன்படுத்தி வந்த முதலாளித்துவ அரசியல் பிரதிநிதிகள், நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் மிகவும் அடிப்படையான ஜனநாயக உரிமைகளை வழங்குவதில் பிறப்பிலேயே இலாயக்கற்றுள்ளன.

ஆழமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அரசாங்கம் 2000ல் தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளை சந்தித்த பின்னரே யுத்தத்தை நிறுத்துவதற்கான மிக அண்மைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் 2001 செப்டெம்பர் 11ம் திகதி நடந்த தாக்குதல்களின் பின்னர், இலங்கை பெரும் நிறுவன கும்பலின் சில பிரிவினர், "பயங்கரவாத" புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குத் தள்ளுவதற்கான காலம் கணிந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தனர். ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டரசாங்கம் அதை ஏற்க மறுத்ததை அடுத்து, புதிய தேர்தல்களுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு யூ.என்.பி. அரசாங்கம் பதிலீடு செய்யப்பட்டது. அது பூகோள பொருளாதாரத்தில் தீவை ஒருங்கிணைக்கும் திட்டத்தினதும் இந்தியாவில் அபிவிருத்தி கண்டுவரும் முலதன விரைவுபடுத்தலை பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்தினதும் ஒரு பாகமாக புலிகளுடன் சமாதானக் கொடுக்கல் வாங்கல்களுக்கு அழைப்பு விடுத்தது.

ஆயினும், ஆரம்பத்தில் இருந்தே, 2002 யுத்த நிறுத்தமானது ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஜே.வி.பி. போன்ற சிங்கள அதி தீவிரவாத குழுக்கள், அதே போல் இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் அரச அதிகாரத்துவத்திடமிருந்தும் வந்த தாக்குதல்களை எதிர்கொண்டது. ஆறு தசாப்த கால இனவாதம் மற்றும் 25 ஆண்டுகால யுத்தமும், எந்தவொரு உடன்படிக்கையையும் துரோகமாகக் கருதும் பலம்வாய்ந்த நிலையான நலன்களை உருவாக்கி விட்டிருந்தது. முழு கொழும்பு ஸ்தாபனமும், எந்தவொரு தீர்வு யோசனையும் சிங்கள பெளத்த அரசை காட்டிக்கொடுத்துவிடும் என கூர்மையான நுண்ணுணர்வுடன் இருந்தது. 2005 ஜனாதிபதித் தேர்தலில், புலிகளுக்கு ஆத்திரமூட்டும் நோக்கிலான வேலைத்திட்டமொன்றை அடிப்படையாகக் கொண்டு இராஜபக்ஷ வெற்றிகண்டமை, யுத்த நிறுத்தம் விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் முடிவுக்கு வரவுள்ளதை குறித்தது.

ஜே.வி.பி. யின் தோற்றமானது ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பை அடுத்து தோன்றிய பலவித மத்தியதர வர்க்க தீவிரவாத இயக்கங்களின் அரசியல் வங்குரோத்தின் தெளிவான வெளிப்பாடாகும். தமது முன்னைய சோசலிச மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்வீச்சுக்கள் அனைத்தையும் கைவிட்டுள்ள ஜே.வி.பி., தம்மை அரசியல் ஸ்தாபனத்துடன் இணைத்துக் கொண்டுள்ளதோடு யுத்தத்தின் உறுதியான ஆதரவாளராகியுள்ளது. புலிகளைப் பொறுத்தளவில், அதன் தமிழ் பிரிவினைவாதமானது தமிழ் வெகுஜனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, அது தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. 2002-03ல் நடந்த சமாதானப் பேச்சுக்களில் புலிகளின் முன்நோக்கானது சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள் தொழிலாளர் வர்க்கத்தை கூட்டாக சேர்ந்து சுரண்டுவதற்கு வாய்ப்பளிக்கும் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கைப் பெறுவதாக இருந்தது. பேச்சுவார்த்தைகள் பொறிந்து போனவுடன், கொழும்பு அரசாங்கத்தை வழிக்கு வர அழைக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு புலிகள் இறங்கிவரத் தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தத்தையும் சமூக சமத்துவமின்மைக்கும் முடிவு கட்டுவதற்கான ஒரு வேலைத்திட்டம்

1948ல் பி.எல்.பி.ஐ. செய்ததைப் போலவே, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இன்றைய தேசியவாத மற்றும் இராணுவவாத உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களை நிராகரிக்குமாறு இலங்கை தொழிலாளர் வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், சவால் விடுத்து ட்ரொட்ஸ்கிச இயக்கம் பிரகடனம் செய்ததாவது: "சுதந்திரம் என்பதைப் புகழ்வதற்கு அதில் இந்த நாட்டு மக்களுக்கு எதாவது இருக்குமா?... இந்தக் கேள்விக்கு பி.எல்.பி.ஐ. யின் தெளிவான ஐயத்திற்கிடமற்ற பதில், "இல்லை!'. இந்த 'புதிய அந்தஸ்த்தில்' ஆர்வங் காட்டுவதற்கு வெகுஜனங்களுக்கு ஒன்றும் கிடையாது," என்பதாகும். அப்போது பி.எல்.பி.ஐ. எழுதியவை பல தடவைகள் ஒப்புவிக்கப்பட்டன.

யுத்தத்திற்கு முடிவுகட்டவும் தற்போதைய அழிவில் இருந்து விடுபடுவதற்கான ஒரு பாதையை வழங்கவும் இயலுமை கொண்டது தொழிலாளர் வர்க்கம் மட்டுமே என நாம் வலியுறுத்துகின்றோம். தொழிலாளர்களின் தலைவிதியை ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு பிரிவுடன் கட்டிப்போடுபவர்களால் தொழிலாளர் வர்க்கம் ஒன்றன் பின் ஒன்றாக துன்பங்களை அனுபவித்து வருகின்றது. "சர்வதேச சமூகத்தின்" மீது நம்பிக்கை வைக்குமாறு உழைக்கும் மக்களுக்கு விடுக்கும் அழைப்பை நிராகரிக்குமாறும் சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது. அனைத்து பெரும் வல்லரசுகளும், குறிப்பாக அமெரிக்கா, கொஞ்சமும் சிணுக்கமில்லாமல் 2002 யுத்த நிறுத்தமும் மற்றும் பெருமளவில் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிந்த "சமாதான முன்னெடுப்புகளும்" கவிழ்ந்து போயுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளன. அவர்கள் பிராந்தியம் பூராவும் தமது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதில் அக்கறை செலுத்துகிறார்களே அன்றி இலங்கை மக்களுக்காக கவலைப்படவில்லை.

கடந்த அறுபது ஆண்டுகால படிப்பினைகள், யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது சகல விதமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை -அது சிங்கள மேலாதிக்கவாதம் என்றாலும் சரி அல்லது தமிழ் பிரிவினைவாதம் என்றாலும் சரி- நிராகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கம் மொழி, மத அல்லது இன வேறுபாடின்றி அனைவரதும் ஜனநாயக உரிமைகளை ஆதரிக்க வேண்டும். முதற் படியாக, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாகவும் நிபந்தனையின்றியும் முடிவுகட்ட கோரிக்கை விடுக்க வேண்டும். இது புலிகளுக்கு வெற்றியளிக்கும் என கூச்சலிடுபவர்களுக்கு நாம் கூறிவைப்பது என்னவெனில், கொழும்பு அரசாங்கம், புலிகள் ஆகிய இரு தரப்பினரதும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த போராட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் வெகுஜனங்களை ஐக்கியப்படுத்துவதற்கு இந்தக் கோரிக்கை அத்தியாவசியமானது என்பதேயாகும்.

சோ.ச.க. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும் ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிக்கவும் போராடுகிறது. நாம் தசாப்த காலங்களாக நிலவும் மத, இன, சாதி மற்றும் பால் அடிப்படையிலான பாரபட்சங்களையும் ஒடுக்குமுறைகளையும் தூக்கியெறிய நேர்மையான அரசியலமைப்பு சபை ஒன்றை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம். சமுதாயம் உச்சி முதல் அடி வரை சோசலிச முறையில் மீள்கட்டுமானம் செய்யப்படுமாயின், தொழிலாளர் வர்க்கம் உற்பத்தி செய்யும் செல்வம், ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்திற்காக அன்றி அனைவரதும் எரியும் சமூகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட முடியும் என சோ.ச.க. வலியுறுத்துகிறது.

பி.எல்.பி.ஐ. தொடக்கத்தில் இருந்தே "தனிநாட்டில் சோசலிசம்" என்ற ஸ்டாலினிச வேலைத் திட்டத்தை நிராகரித்து வந்ததோடு சோசலிசத்துக்கான அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக அனைத்து இந்திய இயக்கமொன்றை கட்டியெழுப்பத் தொடங்கியது. இன்று சர்வதேச பொருளாதாரம் மற்றும் அதனுடன் அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கமும், முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து விதமான தேசிய பொருளாதார ஒழுங்குகளும் முற்றிலும் காலங் கடந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறிய தீவில் சோசலிசத்துக்கான போராட்டமானது தெற்காசியா மற்றும் அனைத்துலகம் முழுவதிற்குமான பரந்த தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பாகமாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். இலங்கை தொழிலாளர்களின் பங்காளிகளை பிராந்தியம் பூராவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளின் மத்தியிலேயே காணமுடியும். மாறாக, கொழும்பில் உள்ள அரசியல் ஸ்தாபனத்தில் காண முடியாது. பிராந்தியம் பூராவும் மற்றும் அனைத்துலகிலும் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறையாக தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காக சோ.ச.க. போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்நோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது. ல.ச.ச.க. யின் காட்டிக்கொடுப்பால் தோற்றுவிக்கப்பட்ட கணிசமான குழறுபடிகளின் மத்தியில், பு.க.க. சோசலிச அனைத்துலகவாத கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான கடினமானதும் நீண்டதுமான போராட்டத்தை முன்னெடுத்தது. காலப் பரீட்சையில் வேறு எந்தக் கட்சியும் முரண்பாடுகள் பற்றிய பயமின்றி நின்றது கிடையாது என்பதை சோ.ச.க. பெருமையுடன் கூறமுடியும். நாம் எமது வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் படிக்குமாறும் உலக சோசலிசப் புரட்சிக்கான இந்தக் கட்சியில் இணையுமாறும் தொழிலாளர்கள், மாணவர்கள் புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.