World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Suicide bombing at crowded station in Sri Lankan capital

இலங்கை தலைநகரின் கூட்டம் நிறைந்த புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

By Deepal Jayasekera
6 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையின் 60வது சுதந்திரத் தினத்தைக் குறிக்கும் முகமாக உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களுக்கு தயாராகிக்கொண்டிருந்த சூழ்நிலையில், ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததோடு 100 பேர் காயமடைந்தனர். அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்தும் உக்கிரமாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த வாரத்தில் நடந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் உடனடியாக புலிகள் மீது குற்றஞ்சாட்டின. பொலிசாரின் படி, அம்பேபுஸ்ஸைக்கு செல்வதற்குத் தயாராக இருந்த புகையிரதத்திற்கு அருகில் ஒரு பெண் தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். புலிகள் இதற்குப் பொறுப்பேற்காவிட்டாலும் பெரும்பாலும் இந்தத் தாக்குதலை புலிகளே செய்திருக்கக் கூடும். தற்கொலைக் குண்டுத் தாக்குதலானது புலிகளின் ஒரு தரக்குறியீடாகும்.

பாதிக்கப்பட்டவர்களில் சிங்களவர்கள் மற்றும் தமிழர்களும் அடங்குவர். பெரும்பாலானவர்கள் இரயிலில் ஏறியவர்கள் அல்லது இறங்கியவர்கள். இறந்தவர்களில் இரு பாடசாலை மாணவிகளும் அடங்குவர். டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் பேஸ் போல் குழுவைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் பயிற்றுவிப்பாளரோடு உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் முச்சக்கர வண்டிகள் மற்றும் தனியார் வாகனங்களிலும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். கோட்டை புகையிரத நிலையம் பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்ததோடு புகையிரத சேவையும் இடைநிறுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்புப் படைகள் பிரதேசத்தை சுற்றிவளைத்ததுடன் நிலையத்தை சூழ உள்ள பிரதேசங்களில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குண்டுத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும், அப்பாவி பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான இத்தகைய தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். புலிகள் இதற்கு முன்னர் வேண்டுமென்றே சிங்கள பொது மக்களை இலக்கு வைத்துள்ளனர். 1996ல் மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 100 ஊழியர்கள் கொல்லப்பட்டதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 1998ல் கோட்டை இரயில் நிலையத்திற்கு வெளியில் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டதோடு 250 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கடுங் காயமடைந்தனர். அவர்களில் பெருமளவிலானவர்கள் சிறுவர்களும் பெண்களுமாவர்.

அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் இராணுவத்தின் விமானத் தாக்குதல்கள் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு புலிகள் "சிங்கள இனத்தின்" மீது வழக்கமாக குற்றஞ்சாட்டி வந்த போதிலும், கொழும்பு அரசாங்கம் செய்யும் குற்றங்களுக்கு சாதாரண சிங்கள தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களோ பொறுப்பாளிகள் அல்ல. அப்பாவி பொது மக்களை படுகொலை செய்வதனாது ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் கிளறப்படும் இனவாத பிளவுகளையே ஆழமாக்கும் அதே வேளை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் அனைவர் மீதான ஒடுக்குமுறைக்கும் முடிவுகட்டும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தவும் பயன்படும்.

இந்தக் குண்டுத் தாக்குதலானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கைகளில் நேரடியாக பயன்படுகிறது. இராஜபக்ஷ 2006ல் தீவை மீண்டும் யுத்தத்திற்குள் முழ்கடித்ததோடு 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தத்தை கடந்த மாதம் உத்தியோகபூர்வமாக கிழித்தெறிந்தார். அரசாங்கம் அதன் போலியான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" நியாயப்படுத்தவும் குறிப்பாக தமிழர்களுக்கும் மற்றும் யுத்தத்தை எதிர்க்கும் எவருக்கும் எதிராகவும் அடக்குமுறையை உக்கிரமாக்க மட்டுமே இந்த கோரச் சம்பவத்தை பயன்படுத்தும். ஞாயிற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பை அடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய இரண்டு தாக்குதல்களும் பெருமளவில் புலிகளின் செயலாகவே இருக்கக் கூடும். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, தம்புள்ள நகரில் பஸ் ஒன்றில் பார்சல் குண்டு ஒன்று வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் 70 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர். பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானவர்கள் பெளத்த மத யாத்திரை செல்வதற்காக கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களாவர். இந்தத் தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.

திங்கள் கிழமை பிற்பகல், வெலி ஓயாவுக்கு அருகில் கிளேமோர் குண்டொன்று பஸ் ஒன்றைத் தாக்கியது. வெலி ஓயாவானது வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த முன்னரங்கு பிரதேசமாகும். இந்த நகரில் இராணுவத் தளம் ஒன்றும் தமிழ் துணைப்படைக் குழு எனக் கூறப்படுவதன் பயிற்சி முகாம் ஒன்றும் உள்ளது. இத்தாக்குதலில் இரு சிப்பாய்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். உயிரழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள விவசாயிகளாவர். புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணையம், "பதுங்கியிருந்து நடத்திய தாக்குதல்" எனத் தெரிவித்தமை இதற்கு பெரும்பாலும் புலிகளே பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது.

"புலிகளின் புதிய அநாகரிக செயல்" என தம்புள்ள தாக்குதலை இராஜபக்ஷ கண்டனம் செய்தார். "எமது நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அழிப்பதற்காக நாம் எதிர்கொண்டுள்ள போராட்டத்தின் யதார்த்தத்தை இது காட்டுகிறது" என அவர் தெரிவித்தார். ஆயினும், இனவாத யுத்தத்திற்கும் மற்றும் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணிலடங்கா பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இராஜபக்ஷவே முதல் பொறுப்பாளியாவார்.

இராணுவம் 2006 ஜூலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பிராந்தியத்தின் மீது தாக்குதல்களைத் தொடுக்கத் தொடங்கியதில் இருந்து ஒரு மதிப்பீட்டின்படி 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவத்துடனும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களுடனும் இணைந்த நிழல் கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்". பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் "பயங்கரவாத சந்தேக நபர்களாக" விசாரணையின்றியும் காலவரையறை இன்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை கோட்டை புகையிரத நிலைய குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக, ஜனவரி 28ம் திகதி வடக்கில் மன்னார் மாவட்டத்தில் மடு-பலம்பிட்டி வீதியில் பஸ் ஒன்று கிளேமோர் தாக்குதலுக்கு உள்ளாகியது. குறைந்த பட்சம் 12 பாடசாலை மாணவர்கள் உட்பட 18 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இராணுவம் பொறுப்பேற்க மறுத்த போதலும், இந்தத் தாக்குதல் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் நடத்தப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாவர். மன்னார் கத்தோலிக்க ஆயர் இராயப்பு ஜோசப், புலிகளின் பகுதிகளினுள் ஆழ ஊடுருவும் படைகளை அனுப்பும் இராணுவத்தின் மீது இந்த கோரச் சம்பவத்துக்காக குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறெனினும், இலங்கை இராணுவம் செய்யும் குற்றங்களால் பொது மக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. புலிகளின் அத்தகைய வழிமுறைகளை பயன்படுத்துகின்றமை அது நம்பிக்கையிழந்திருப்பதையும் மற்றும் அதன் அரசியல் வங்குரோத்து நிலைமையினதும் அளவுகோளாகும். கடந்த 18 மாதங்களாக கிழக்கில் தமது கோட்டைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள இந்த பிரிவினைவாத இயக்கம், இப்போது வடக்கில் தாக்குதல்களை எதிர்கொள்கின்றது. கடந்த ஆண்டு புலிகளின் சரக்குக் கப்பல்களில் பெரும்பாலானவற்றை கடற்படை மூழ்கடித்த பின்னர் புலிகளின் விநியோக வழிகள் மேலும் பலவீனமடைந்து வருகின்றன.

பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், கொழும்பு அரசாங்கத்தை வழிக்கு இழுக்குமாறு "சர்வதேச சமூகத்துக்கு" பயனற்ற வேண்டுகோள் விடுக்குமளவுக்கு புலிகள் இறங்கி வந்துள்ளனர். மிக அண்மையில், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பி. நடேசன் ஐ.நா. வுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழ் மக்களுக்கு எதிரான ஐந்து தசாப்தங்களாக நீளும், பரந்த மட்டத்திலான மற்றும் கடுமையான முடிவற்ற உரிமை மீறல்களுக்கு முடிவுகட்டும் ஆக்கப்பூர்வமான அனுகுமுறையாக தமிழர்களின் இறைமையை" அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். "சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதற்கான தமது தயார்நிலையை புலிகள் வெளிப்படுத்தியுள்ளதாகவும்" அவர் வலியுறுத்தினார்.

ஆரம்பத்தில் இருந்தே, புலிகள் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே அன்றி தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வல்லரசுகளின் உதவியுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான முதலாளித்துவ அரசு ஒன்றை ஸ்தாபித்துக்கொள்வதே புலிகளின் முன்நோக்காகும். அமெரிக்கா மற்றும் சமாதான முன்னெடுப்புகளின் ஏனைய அனுசரணையாளர்களின் அழுத்தத்தின் கீழ், புலிகள் 2002ல் தமது தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதுடன், கொழும்பு அரசாங்கத்துடன் அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கு ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகளுக்குள் நுழைந்துகொண்டனர்.

ஆயினும், இராஜபக்ஷ அரசாங்கம் "சர்வதேச சமூகத்தின்" மெளன ஆதரவுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டது. அமெரிக்காவும் மற்றும் ஏனைய வல்லரசுகளும் "சமாதான முன்னெடுப்புகளுக்கு" ஆதரவளிப்பது இலங்கை மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக, பிராந்தியம் பூராவும் தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு தடையாக இருக்கும் யுத்தத்திற்கு முடிவுகட்டும் ஒரு வழிமுறையாகவேயாகும். ஆயினும், இப்போது அவர்கள் புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க இராஜபக்ஷவால் முடியும் என ஊகிக்கின்றனர்.

அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதல்களுக்கு பிரதிபலித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பாசாங்குத் தனமாக புலிகளைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதே சமயம், இலங்கை இராணுவத்தின் குற்றவியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக அமெரிக்க அதிகாரிகள் மெளனம் காக்கின்றனர். பென்டகன் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகள், உபகரனங்கள் மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்குகிறது.