World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

Serbs protesting Kosovo independence attack US embassy in Belgrade

கொசோவோ சுதந்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சேர்பியர்கள் பெல்கிரேடில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குகின்றனர்

By Julie Hyland
22 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

சேர்பியாவில் இருந்து சுதந்திரம் என்ற கொசோவோவின் ஒருதலைப்பட்ட அறிக்கை ஞாயிறன்று வெளிவந்ததை அடுத்து முன்னாள் யூகோஸ்லாவியாவில் வன்முறை மீண்டும் வெடித்துள்ளது.

வியாழன் இரவில் மத்திய பெல்கிரேடில் கிட்டத்தட்ட 200,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிகள் மூடப்பட்டு, உத்தியோகபூர்வ அணிவகுப்பிற்கு இலவச இரயில் பயணம் ஏற்பாடு செய்யபப்பட்டது. இக்கூட்டத்தில் பிரதம மந்திரி வோயிஸ்லாவ் கொஸ்ருனிகா (Vojislav Kostunica) "கொசோவோ சேர்பியாதான்" என்று எழுதிய பதாகையின்கீழ் நின்று உரையாற்றினர்.

அமைதியான ஆர்ப்பாட்டத்தை அடுத்து, சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்தில் நுழைந்து அங்கு ஒரு அறைக்கு தீயிட்டனர். தூதரகம் அந்நேரத்தில் மூடப்பட்டிருந்ததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. குரோஷிய மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களும் தாக்கப்பட்டன; ஆனால் உயிரிழப்புக்கள் ஏதும் நேரவில்லை. கலகப் பிரிவு போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்; சிலர் குருதி சிந்தியவகையில் தரையில் கிடந்தனர்.

இதற்கு முன்பு, கொஸ்ருனிகா ஆர்ப்பாட்டக்காரர்களிடம், "கொசோவோ சேர்பிய மக்களுக்குத்தான் சொந்தம்" என்று கூறினார்; அதற்கு கூட்டம் "நாம் ஒருபொழுதும் கொசோவோவை விட்டுக் கொடுக்க மாட்டோம்; ஒரு பொழுதும் மாட்டோம்" என்று பதில் கூச்சலிட்டது. தீவிர தேசியவாத தலைவரான ரொமிஸ்லாவ் நிகோலிச் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சேர்பியாவில் இருந்து கொசோவோவைத் திருட முயற்சிப்பதாக கூறினார்.

1999 மார்ச் மாதம் சேர்பியாவிற்கு எதிராக நேட்டோ விமானப் போர் ஒன்றை மூன்றுமாத காலத்திற்கு நடத்தியதில் இருந்தே வாஷிங்டனுக்கு எதிரான ஆழ்ந்த மக்கள் விரோதப் போக்கு உள்ளது. சேர்பியாவில் இருந்து கொசோவோவை பிரிப்பதற்காக அமெரிக்கத் தலைமையில் நடந்த பிரச்சாரம் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வை உச்சகட்டத்திற்கு தள்ளியுள்ளது.

1999 தாக்குதலின்போது, அமெரிக்க, பிரிட்டிஷ் போர்விமானங்களும் ஏவுகணைகளும் பெல்கிரேடில் பாரிய அழிவை ஏற்படுத்தின; நகரத்தின் அடிப்படை கட்டுமானங்களை இலக்காக கொண்டு பாலங்களும், மின் இணைப்புக்களும் தாக்கப்பட்டன. அதே போல் சேர்பிய வானொலி தொலைக்காட்சி (RTS) அலுவலகம், சீனத் தூதரகம் ஆகியவையும் தாக்கப்பட்டன; பிந்தையதில் மூன்று சீனக் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

வியாழனன்றே, பொஸ்னிய சேர்பிய குடியரசில் நடந்த வேறு ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போலீசுடன் மோதியதில் சிலர் உயிரழந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

நாளின் தொடக்கத்தில், சீருடை அணிந்த நூற்றுக்கணக்கான சேர்பிய இராணுவ துணைப்படையினர், நேட்டோ தலைமையிலான துருப்புக்கள்மீது கற்களை வீசி, கொசோவோவின் தலைநகரம் பிரிஸ்டினாவில் இருந்து 30 மைல் வடகிழக்கில் இருக்கும் மெர்டாரே என்னும் இடத்தில் எல்லையை கடக்க முயன்றனர். சேர்பிய துணைப்படைகளின் பாதை நேட்டோ தலைமையிலான K-For படை பிரிவிலுள்ள செக் துருப்புக்களின் ஆதரவுடன் கொசோவோ போலீசாரால் தடைக்கு உட்படுத்தப்பட்டது.

கொசோவோ சுதந்திர அறிவிப்பு செய்துள்ளதையும், பல மேற்கு நாட்டு சக்திகள் அதற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதையும் சட்டவிரோதமானது, நெறியற்றது என்று சேர்பியா கண்டித்துள்ளது.

ஜூன் 1999 ல் இருந்து, நேட்டோ படைகள் சேர்பியாமீது குண்டுவீச்சு நடத்தியதில் இருந்து சேர்பிய மானிலமான கொசோவோ ஐக்கிய நாடுகள் மன்றத்தால் தீர்மானம் 1244ன் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது; அதில் சுதந்திரம் பற்றி குறிப்பு ஏதும் இல்லாததுடன், யூகோஸ்லாவியாவின் "பிராந்திய ஒருமைப்பாட்டையும்" முற்றிலும் ஏற்றிருந்தது. ஆனால் வாஷிங்டன் நீண்ட காலமாக கொசோவோ சுதந்திரத்திற்கு ஆதரவு தரும் என்பதை தெளிவாக்கியிருந்தது; இது ரஷ்ய, சீன எதிர்ப்பை மீறியதாகும். இது ஏனெனில் பால்க்கன் பிராந்தியத்தில் தனது பூகோள-அரசியல் மூலோபாயத்திற்காக தன்னுடைய இராணுவ, அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு மண்டலமாக முன்னர் இருந்த பகுதிகளின் மீது தன்னுடைய பலத்தை அதிகரித்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலின் ஒரு பகுதியும் ஆகும்.

இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் முக்கிய ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கடக்கும் வகையிலும், கொசோவோ சுதந்திரம் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளதை நெறிப்படுத்துவதிலும், செயல்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின், கிரேக்கம், சைப்ரஸ், ருமேனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் இந்த அறிவிப்பை எதிர்ப்பதால் ஆழ்ந்த பிளவுற்றுள்ளது.

வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சேர்பிய ஆர்ப்பாட்டக்காரர்களால் தகர்க்கப்பட்ட இரண்டு எல்லை சோதனைச் சாவடிகள் நேட்டோ படைகள் மீண்டும் திறந்து 24 மணிநேரத்திற்குள் நடந்தது. சில நூறில் இருந்து ஆயிரம் பேர்வரையிலானோர் புல்டோசர்கள் மற்றும் வெடிமருந்துகளை பயன்படுத்தி இனவழியில் பிரிக்கப்பட்ட நகரான Mitrovica இல் இருந்து வடக்கே 20 கிலோ மீட்டருக்குள் இருக்கும் Jarinje, Branjak என்ற இடங்களில் இருந்த எல்லைச் சாவடிகளை அகற்றினர்.

இத்தாக்குதல்கள் சேர்பிய துணை இராணுவப்படையினர் பொதுமக்களின் உடையணிந்து செய்யப்பட்டதாக சில தகவல்கள் வந்தன; இதையொட்டி கொசோவோ போலீசும் ஐ.நா. சுங்க அதிகாரிகளும் அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். இந்த எல்லை பின்னர் அமெரிக்கா, பிரான்ஸ் தலைமையிலான நேட்டோவின் K-For படையினரால் மூடப்பட்டுவிட்டது.

கொசோவோவின் புதிய சர்வதேச எல்லைகளை அமைப்பதன் ஒரு பகுதியாக இனவழி அல்பேனிய அதிகாரிகளை தங்கள் சோந்த சுங்க அலுவலகங்களை எல்லைகளில் அமைப்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க முற்பட்டனர் என்று சேர்பிய அதிகாரிகள் கூறினர். இவையோ ஒரு உள்ளூர் சேர்பிய நகரசபை தலைவரான ஸ்லாவிஸா றிஸ்டிக், "இல்லாத ஒரு நாட்டின் அமைப்புக்கள் எங்கள்மீது சுமத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; ஒரு சுதந்திர கொசோவோ அமைப்பதற்கு நாங்கள் வரிகொடுக்க மாட்டோம். இது சாத்தியமற்றது" என்று கூறினார்.

கொசோவோவிற்கான சேர்பிய மந்திரியான ஸ்லோபோடான் ஸ்மாட்சிக், சேர்பியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக, "இத்தாக்குதல் பொது [சேர்பிய] அரசாங்க கொள்கைகளுடன் இயைந்து உள்ளது" என்று கூறினார்.

"வடக்கு கொசோவோவிலும் சுங்கச் சாவடிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தை பெல்கிரேட் கொண்டுள்ளது" என்றார் அவர். "சுங்கச் சாவடிகள்தான் கொசோவோ நாட்டு எல்லைகளாக வரும் என்ற நோக்கம் இருக்கிறது; அதை நாங்கள் அனுமதியோம்".

"ஒரு இரண்டாம் கொசோவோ" சேர்பிய ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்கள் உள்ள வடமானிலத்தில் வரலாம் என்று சில வர்ணனையாளர்கள் கணித்துள்ளனர்; இதில் மிட்ரோவிகாவின் வட பகுதியும் அடங்கும்; இது இப்பொழுது சேர்பிய பாதுகாப்புப் பிரிவுகளின் கண்காணிப்பில் உள்ளதுடன், சுகாதாரப் பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற சமூக செலவுகளுக்கு பெல்கிரேடை நம்பியுள்ளது.

சேர்பிய மாணவர்கள் அன்றாடம் எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் மிட்ரோவிகாவில், மூன்று கார்கள் ஐரோப்பிய பாதுகாப்புக்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பின் (OSCE) அலுவலகத்திற்கு அருகே செவ்வாயன்று குண்டுத் தாக்குதலில் சேதமுற்றன.

ஐபர் ஆற்றை ஒட்டி மிட்ரோவிகாவை பிரிப்பதற்கான பேச்சு ஏற்கனவே உள்ளது; ஐபர் ஆறு, நகரத்தை அல்பேனியர்களுக்கும் சேர்பியர்களுக்கும் இடையில் பிரிக்கிறது. முன்னாள் அமெரிக்க தூதரும் சர்வதேச சட்டத்திற்கும் பொதுகொள்கை குழுவை சேர்ந்த ஜேம்ஸ் ஹூப்பர், "உண்மை என்னவென்றால் வடக்கு, கொசோவோவிற்கு இழக்கப்பட்டுவிட்டது, கொசோவோ சேர்பியாவிற்கு இழக்கப்பட்டுவிட்டதுபோல்" எனக் கூறியதாக Christian Science Monitor இதழ் மேற்கோளிட்டுள்ளது.

அவர் மேலும்கூறினார்: "அமெரிக்க, ஐரோப்பிய சமாதான காவலர்கள் வடக்கு மிட்ரோவிகா மற்றும் ஐபர் ஆற்றின் வட பகுதியை 1999ல் நேட்டோ போர் முடிந்ததில் இருந்தே நடைமுறையில் சேர்பிய பகுதியாகத்தான் நடத்திவந்துள்ளனர்; அதே நேரத்தில் கொசோவோவின் பிராந்திய ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசுவாசத்துடன் அறிவித்தும் வந்துள்ளனர்."

பால்கன் பகுதி வல்லுனரான, மாசச்சூட்ஸ் மெட்போர்டில் உள்ள டுப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆர்.புரூஸ் ஹிற்ஸ்னர் இன் கருத்தின்படி, "நேட்டோ சக்திகள் புதிய கொசோவோ அரசாங்கத்திற்காக பலாத்காரமாக ஐபரைக் கடப்பது என்ற முடிவிற்கு வந்தால் ஒழிய, நடைமுறையில் பிரிவினை என்பதுதான் விளைவாகும்". இதுவும் Christian Science Monitor இல் மேற்கோளிடப்பட்டுள்ளது.

வாரத்தின் தொடக்கத்தில், சேர்பிய பாராளுமன்றம், கொசோவோ சுதந்திர அறிவிப்பைக் கண்டித்து ஒரு தீர்மானத்தைய இயற்றி, பிரிஸ்டினா அரசாங்கத்தின் செயல்களை முறையாக சர்வதேச சட்டத்தின்கீழ் விரோதமானது என்று அறிவித்து இரத்தும் செய்தது. சேர்பியாவின் உள்துறை மந்திரியும் கொசோவோ அல்பேனியத் தலைவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து சேர்பிய பிராந்தியத்தில் "பொய்யான நாட்டை" அறிவித்துள்ளதாக கூறினார்.

அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி மற்றும் ஆஸ்திரியாவில் இருந்து தன்னுடைய தூதர்களை சேர்பியா திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் நாட்டின் பிரிவினைக்கு ஆதரவு தரும் மற்ற நாடுகளில் இருந்தும் தூதர்களைத் திரும்பப் பெறப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. திங்களன்று ஸ்ராஸ்பேர்க்கில் ஐரோப்பிய குழுவில் பேசிய சேர்பிய வெளியுறவு மந்திரி வுக் ஜேரிமிக் தன்னுடைய நாடு "முற்றிலும்" சுதந்திர அறிக்கையை மாற்றுவதற்கு போரிடும் என்றும் கொசோவோவை அங்கீரித்துள்ள நாடுகள் ஆபத்தான முன்னோடிக்கு வகை செய்துள்ளன என்றும் எச்சரித்தார். "சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் நடவடிக்கையினால், ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு இனவழி, மத பிரிவினை நோக்கத்தை கொண்ட இயக்கமும், அமைப்புக்களும் அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு கருவிப்பெட்டியை பெற்றுவிட்டன" என்று அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியது: " கொசோவோ அல்பேனியர்கள் ஒருவர்தான் உலகத்தில் தங்கள் தலைநகருக்கு எதிராக மனத்தாங்கல்களை கொண்ட குழு என்று இந்த அறையில் உள்ள எவரேனும் நினைக்கின்றனரா?"

சேர்பியாவின் நிலைப்பாடு ரஷ்யாவால் எதிரொலிக்கப்பட்டது; அது கொசோவோவை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பது தனக்கும் 27 நாடுகள் முகாமிற்கும் இடையே இருக்கும் உறவை சேதப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்கேய் லாவ்ரோவ், கொசோவோ போலீஸ், சுங்கம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றை நிர்வகிக்க செயற்படை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் நியமித்தது சட்ட விரோதம் என்று கூறினார்.

"ஒருதலைப்பட்சமாக, ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல் பெறாமல் ஐரோப்பிய ஒன்றியம் கொசோவோவிற்கு ஒரு குழுவை சட்டத்தின் ஆட்சியை வழங்க அனுப்பியுள்ளது. இது விந்தையான செயல் ஆகும். இதில், ஏனெனில் இந்தப் பணி மிக உயர்ந்த சட்டமான சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறியது ஆகும்." என்றார் அவர்.

தன்னுடைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சட்டபூர்வமாக செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் கொசோவோ ஒரு பிரத்தியேகமான விவகாரம் என்றும் சேர்பியா அதன் முந்தைய அடக்குமுறையின் காரணமாக அல்பேனிய பெரும்பான்மையை நிர்வாகம் செய்யும் உரிமையை இழந்து விட்டது என்று வாதிட்டது.

ஆனால் சுதந்திரத்திற்காக இத்தகைய நியாயப்படுத்துதல் சேர்பிய ஆதிக்கத்தினுள் இருக்கும் வடக்கு கொசோவோ பகுதிகளை எவர் கட்டுப்படுத்துவது என்பதையும் கூற பாவிக்கப்படலாம். ஏற்கனவே இவை ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் பிரிவினைவாத, தேசியவாத இயக்கங்களால் இத்தகைய வாதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

"தமது அடையாளம், அங்கத்துவம் ஆகியவற்றில் உள்ள பூசல்களை சமாதான முறையில், ஜனநாயக முறையில் எப்படித் தீர்த்துக் கொள்ளுவது என்பதற்கு கொசோவோ ஒரு படிப்பினை ஆகும்" என்று வடக்கு ஸ்பெயினில் உள்ள பாஸ்க் பிராந்திய அரசாங்க பேச்சாளர் மிரேன் அஸ்கராடே கூறியுள்ளார்; துருக்கிய சைப்ரஸ் இனரின் தலைவரான மெக்மட் அலி தலாட், "கொசோவோவின் சுதந்திரத்திற்கு வணங்குகிறேன். எந்த மக்களும் மற்றவர்களுடைய ஆட்சியின் கீழ் வாழுமாறு கட்டாயப்படுத்தப்படக்கூடாது" என்றார்.

புதனன்று மூத்த பாலஸ்தீனிய அதிகாரி யாசெர் அப்தெல் ரப்போ பாலஸ்தீனியர்களும் கொசோவோவின் உதாரணத்தைப் பின்பற்றி இஸ்ரேலுடன் தற்பொழுது நடக்கும் சமாதான பேச்சுவார்த்தை முறிந்தால் நாட்டுச் சுதந்திரத்தை அறிவிக்க வேண்டும் என்றார். "கொசோவோ பாலஸ்தீனத்தைவிட சிறந்தாக இல்லை. உலகம் முழுவதும் கொசோவோவின் சுதந்திரத்தை ஆரத்தழுவினால், அப்படி பாலஸ்தீனத்திலும் ஏன் நடக்கக் கூடாது" என்று ரப்போ கேட்டார்.

பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசால் இக்கருத்து நிராகரிக்கப்பட்டாலும், இத்தகைய அறிக்கைகள் இஸ்ரேலில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அது கொசோவோ சுதந்திரம் பற்றி ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்துவிட்டது. பெயரிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேல் தன்னுடைய அணுகுமுறையை தெளிவுபடுத்துவதை மெதுவாக மேற்கொள்ளும் என்றார். "இத்தகைய பிரச்சினைகள் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மூலம் இல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று கூறிய அவர் "இப்பகுதியிலும் இது பற்றிய எதிர்விளைவுகள் இருக்கக் கூடும்" என்றும் எச்சரித்தார்.

இதற்கு இடையில், சில கொசோவோ அல்பேனியர்கள் ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முக்கிய மேற்குசக்திகள் கொசோவோ விவகாரத்தில் தலையீடக்கூடாது என்று எதிர்ப்பதாக BBC அறிவித்துள்ளது; "அவை இப்பொழுது ஒரு சிறுபான்மைதான் உள்ளன".

ஒரு முன்னாள் மாணவ செயல்வீரரும் தற்பொழுது Vetevendosji (சுய நிர்ணயம்) இயக்கத் தலைவருமான அல்பின் கூர்ட்டி, ஐரோப்பிய ஒன்றியம் நிர்வகிக்கும் "சுதந்திரத்தை" முழு இறைமையின் காட்டிக் கொடுப்பு என்று கண்டித்துள்ளதுடன் கொசோவோவின் வருங்காலம் ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பரிந்துரைகள் இல்லாமல் ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.