World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Notes on the political and economic crisis of the world capitalist system and the perspective and tasks of the Socialist Equality Party

உலக முதலாளித்துவ அமைப்பின் அரசியல், பொருளாதார நெருக்கடியும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு மற்றும் பணிகளும் பற்றிய குறிப்புக்கள்

By David North
11 January 2008

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த்தால், மிச்சிகன் அன் ஆர்பரில் ஜனவரி 5-6 தேதிகளில் நடந்த தேசிய அளவிலான உறுப்பினர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.

1. 2008 உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி குறிப்பிடத்தக்கவகையில் ஆழமடைவதால் பண்பிடப்படுகிறது. உலக நிதியச் சந்தைகளில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு நிலை தற்காலிக வீழ்ச்சி என்பதின் வெளிப்பாடு என்று இல்லாமல், சர்வதேச அரசியலை ஏற்கனவே உறுதியற்றதாக்கிக் கொண்டிருக்கும் முழு அமைப்பையும் பாதிக்கின்ற ஆழ்ந்த சீர்குலைவு எனக்கூறலாம். எப்பொழுதும் போலவே ஏகாதிபத்திய பூகோள-அரசியல் சங்கிலித் தொடரில் வலிமை குறைந்த பிணைப்புக்கள்தான் முதலில் உடைய ஆரம்பிக்கும். பாக்கிஸ்தானில் பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது, கொங்கோ மற்றும் கென்யாவில் உள்நாட்டுப் போர்கள் வெடித்துள்ளது மற்றும் கொசோவோ பற்றி பால்கனில் புதுப்பிக்கப்பட்டுள்ள நெருக்கடிகள் உலக அரசியலானது அதிகரித்தளவில் வெடிப்புநிலையை அடைவதை குறிப்பாய் தெரிவிப்பவை ஆகும்.

2. உலக முதலாளித்துவத்தின் மாற்றமுடியாத, உறுதியான வெற்றியை அடையாளம் காட்டியதாகக் கூறப்படும் நிகழ்வான சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர், உலகப் பொருளாதாரம் தட்டுத்தடுமாறும் நிலையில்தான் காணப்படுகிறது. குறைந்த பிணையுள்ள கடன் (Sub-prime Mortgage) நெருக்கடியின் கட்டுப்பாடற்ற ஊகவாணிப முதலீடுகளால் எரியூட்டப்பட்டிருந்த அமெரிக்காவில் வீட்டு சந்தை குமிழின் வெடிப்பானது சர்வதேச வங்கிகள் மற்றும் பிற நிதிய அமைப்புக்களுக்கு உலகம் முழுவதுமாக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் இழப்புக்களை உருவாக்கியது. இருள்படிந்த ஆரம்பநிலை நிதியக் கருவிகளான அதாவது கட்டமைக்கப்பட்ட முதலீட்டு அமைப்புகள் (SIV- Structured investment vehicles) குறைந்த பிணையுள்ள கடன்களை "பாதுகாப்பதற்காக" உருவாக்கப்பட்டு, தங்கள் அபாயத்திற்குரிய தன்மையை மறைத்து ஏராளமான நிறுவனங்களுக்கு இடையே இழப்பு ஆபத்தை பரப்பிவிட்டது. இதன் விளைவு ஒரு சர்வதேச நிதிய நெருக்கடியைக் கண்டது ஆகும்; ஒரு ஆய்வாளரின் சொற்களில் ஆங்கிலோ-அமெரிக்க முதலாளித்துவமுறையின் நீடித்திருக்கும் மற்றும் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குரியதாக்கியுள்ளது. பைனான்சியல் டைம்ஸ் "21ம் நூற்றாண்டில் நிதிய புது வழிவகையின் மீதான நம்பிக்கை என்பது இதைத் தொடர்ந்து ஆவியாகிவிட்டது. ஆபத்து பரவுதல் என்பது நிதிய அதிர்ச்சிகளை தடுக்கமுடியாதுள்ளது மட்டுமல்லாது, மாறாக அதற்கு மேலும் எரியூட்டலாம் என்பதை கடந்த வருட நிகழ்வுகள் மிக மூர்க்கமான தெளிவுடன் எடுத்துக்காட்டுகின்றன ....." என்று எழுதியுள்ளது. (ஜனவரி 2, 2008)

3. தற்போதைய பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என்பது முதலாளித்துவ அறிவார்ந்த ஆய்வாளர்களிடையே அதுபற்றி விவாதம் இல்லமாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுள் மிகவும் கூர்மையானவர்களும், நேர்மையானவர்களும் தொடர்ந்து இன்னும் விரிந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் விளைவுகளைப் பற்றி உறுதியான கணிப்புக்களை கூறுவதற்கு அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதார உலகின் பரந்த பிரிவுகளில் ஏற்பட்டுள்ள நிதிய நெருக்கடிகளின் பாதிப்புக்கள் பற்றி போதுமான ஆதாரமுள்ள தகவல்கள் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்கின்றனர். 2007 கோடை காலத்தில் தொடங்கிய "கடன்நிலை நெருக்கடி" இன்னமும் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இயக்கத்திற்கு ஒரு முக்கிய அச்சுறுத்தலாகத்தான் உள்ளது. பில்லியன் கணக்கான டாலர்கள் சொத்துக்கள் மீளமுடியாத நஷ்டங்கள் என்று கட்டாயம் தள்ளுபடி செய்யப்படும் நிலை வந்துள்ளது என்பதை உணர்வதுடன், நிதிய அமைப்புக்கள் தங்கள் ஒவ்வொன்றினதும் கடன் தீர்க்கும் திறனில் பரஸ்பரம் கொண்டிருக்கும் நம்பிக்கை பேராபத்திற்குட்பட்ட வகையில் இல்லாது போய்விட்டன. மேலும் வீடுகள் குமிழைத் தோற்றுவித்த கடன்கொடுக்கும் முறைகள் அமெரிக்க பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கும் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்று பரவலாக ஊகிக்கப்படுகின்றது. ஒரு அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, பெருநிறுவனக் கடன் கொடுத்தல் முறையில் இருக்கும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தக்கூடும் என்ற பெருகிய அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கடுமையான சூழ்நிலையில், அமெரிக்கப் பொருளாதாரத்தில் வீட்டு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விடும் என்ற ஆரம்ப நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருக்கின்றன. "உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கடன் நெருக்கடி, வீட்டு பிரிவுச் சரிவு, மிக உயர்ந்த எண்ணெய் விலை ஆகியவற்றை எதிர்கொண்ட நிலையில் போராடும் நிலையில், 2000-01 ஆரம்பத்தில் இணையதள குமிழ் சரிந்ததற்கு பின்னர் வேறு எந்த கட்டத்திலும் இல்லாத அளவிற்கு 2008-ல் அமெரிக்கா பொருளாதாரப் பின்னடைவு நிலையை அடைந்து விடுமோ என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது (ஜனவரி 2, 2008)

4. மற்றொரு முக்கிய பொருளாதார ஆய்வு முடியுரையாகக் கூறுகிறது: "கடன் நெருக்கடி தொடரும்வரையில், எல்லாவற்றையும் மொத்தமாகக் கணக்கில் கொண்டால், தற்போதைய நெருக்கடி ஏற்கனவே அண்மைக்காலத்தில் நடந்த எந்த நெருக்கடியையும் விட மிகத் தீவிரமானது என்பது பரந்தளவில் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளதுபோல் தோன்றுகின்றது. நிதானமற்ற கடன் கொடுத்தலின் விளைவுமூலம் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய நஷ்டங்களை முக்கிய வங்கிகளும் அவற்றின் நிதிய அமைப்புக்களும் கிட்டத்தட்ட அன்றாட வாடிக்கையாக எடுத்துக் கூறுகின்றன. வீடுகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன. இன்னும் கூடுதலான சரிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பொது பயஉணர்வு உள்ளது; குறிப்பாக குறைந்த பிணையுள்ள கடன் வாங்கியவர்கள் பலர் [இன்னும் பலர் தவறான முறையில் "வட்டி மட்டும்" கடன்கள், அல்லது "ஆவலைத் தூண்டும் வகையிலான வட்டிக்கு" கடன் வாங்கியவர்கள்] வரவிருக்கும் ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் செலுத்திய வட்டியைவிடக் கூடுதலான வட்டி செலுத்த வேண்டிய கட்டத்திற்கு வரும்போது இது நிலைமையை மோசமாக்கும்." [Strategic Analysis, November 2007, Levy Institute of Bard College, p. 9]

5. அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடி என்பது நேரடியாகவும் உடனடியாகவும் உலகம் முழுவதும் தாக்கங்களை கொடுக்கும். "மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்நாட்டுத் தேவைகள் பற்றிய அபாயம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள "தொற்றுத் தன்மையின்" விளைவாக கீழ்நோக்குச் சரிவை கொண்டுள்ளன" என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை கொடுத்துள்ளது. (World Economic Outlook, October 2007, p.11). மேலும், "உலக நிதியச் சந்தைகளில் தொடரும் கொந்தளிப்புக்கள் புதிதாக உருவாகும் சந்தைகளில் நிதிய பரிமாற்றங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்நாட்டுச் சந்தைகளிலும் பிரச்சினைகளை தூண்டிவிடலாம் என்ற நிலையை" சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது... ஆசியா, இலத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சி என்பது முன்னேற்றமடைந்துள்ள பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள குறைந்த வீதமான தேவையின் வளர்ச்சியினால் பாதிப்பிற்கு உட்பட்டுவிடக்கூடும்." [ibid., p. 19]

6. அமெரிக்காவிற்குள்ளேயே வீட்டு துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி முற்றும்முதலுமாக மில்லியன் கணக்கான தொழிலாளர் மற்றும் மத்தியதரக் குடும்பங்களுக்கு ஒரு சமூகப் பேழிவு ஆகும். குறைந்தது ஒரு மில்லியன் குடும்பங்களாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டாய ஏலம்விடப்படுவதால் தங்கள் வீடுகளை இழக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கூடுதலான மில்லியன்கள் உடனடியாக ஏலம்விடப்படுவதால் அச்சுறுத்தலை கொள்ளாவிட்டாலும், நெருக்கடியினால் தீவிரமாகப் பாதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் வீடுகளின் விலைகள் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் கூடுதலாக சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சரிவுகளின் மிக அதிகமான தன்மைகள் தொழிலாள வர்க்க குடும்பங்களின் தனிப்பட்ட நிதியிலும் பேரழிவான தாக்குதல்களை ஏற்படுத்தும். வீடுகளை அடகுவைத்து எடுக்கும் கடன்கள் (Home Equity Loans) தொழிலாளர் மற்றும் மத்தியதர குடும்பங்களின் ஊதியங்களுக்கும், வருமானங்களுக்கும் சற்று துணையாக இருக்கின்ற ஒன்று என்பது நன்கு அறிந்த உண்மையாகும். இந்தக் கடன்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவவும், மருத்துவக் கட்டணங்களை கொடுக்கவும் பிற அவசர தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த மேலதிக வருமானம் மில்லியன் கணக்கான மக்களுக்கு இனி கிடைக்காது.

7. இவ்விதத்தில், மூன்றரை தசாப்தங்களான ஊதியத் தேக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்ட நிதிச்சுமைகளுக்கு எதிராகப் போரிடுவதற்கு முக்கிய வழிவகைகளில் ஒன்றாக இருந்த இவ்வுதவியை இந்த வீடுகளின் விலை வீழ்ச்சி பரந்துபட்ட அமெரிக்க உழைக்கும் மக்களின் பிரிவினருக்கு இல்லாமல் செய்கின்றது. ஒரு 30 வயதான அமெரிக்க தொழிலாளிக்கு தற்போது கிடைக்கக்கூடிய வருமானம் இதே வயதுப்பிரிவில் 1978ல் இருந்த தொழிலாளியின் ஊதியத்தைவிட 12 சதவிகிதம் குறைவானதாகும். முன்னாள் தொழிற்துறை மந்திரி ரொபேர்ட் ரைக் குறிப்பிட்டுள்ளபடி, பணப் பற்றாக்குறையை கையாள்வதற்காக "பிரச்சனையை தீர்க்கும் செயற்பாடுகள்'' பாரியளவில் மகளிரை தொழிலாளர் தொகுப்பினுள் கொண்டுவந்ததுடன் (1970ல் 38 சதவிகிதத்தில் இருந்து தற்போது 70 சதவிகிதம் என); மேலும் ஆண்டு வேலைச் சுமையில் இரண்டு வாரங்களாக அதிகரித்தது. ஒரு சராசரி ஐரோப்பியரை விட அமெரிக்கர்கள் ஆண்டு ஒன்றுக்கு 350 மணி நேரம் கூடுதலாக உழைக்கின்றனர். 21-ம் நூற்றாண்டின் பின், தொழிலாளர்கள் தங்கள் உழைப்புதிறனால் பணம் சம்பாதிப்பதற்கும் உழைப்பதற்குமான இயலுமை உயர்மட்டத்திற்கு வந்துவிட்டதால், தங்கள் வீடுகளை இணை அடைமானப் பொருளாக பயன்படுத்தி அவர்கள் கூடுதலான முறையில் கடன் வாங்குவதை நம்பத் தொடங்கினர். இவ்விதத்தில் வருமானத்திற்கும் தேவைக்கும் இடையே தொடர்ந்து அதிகரித்துவரும் பிளவை சமாளிக்கமுடியாமல் மில்லியன் கணக்கான மக்கள் மிகப் பெரிய நிதிய நெருக்கடிக்குள் விழும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். ஏற்கனவே 2007ன் முதல் பகுதியில் அமெரிக்காவில் தனிப்பட்டோரின் திவால்கள் 48 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. தொழிலாளர்கள் எந்த அளவிற்கு பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற உண்மை 27 மில்லியன் தொழிலாளர்கள் இந்த குளிர்காலத்தில் வீடுகளில் வெப்பமூட்டலுக்காக கொடுக்கப்பட வேண்டிய கட்டணத்திற்காக கடன் வாங்க வேண்டிய நிலையில் இருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இப்படி கடன் அட்டைகளை பயன்படுத்துவது, வீடுகளை அடைமானம் வைத்துப் பெறும் கடன்களைப்போல் (Home Equity Loans) பிரச்சினைக்குரியதாக ஆகின்றது. அனைத்து மரபார்ந்த, தனிப்பட்ட வழிவகைகள் மூலம் தற்போது நிலவும் பொருளாதார யதார்த்தங்களுடன் இயைந்துபோக முடியாது போகையில், தொழிலாள வர்க்கம் தன்னைக் காத்துக் கொள்ளுவதற்கு இருக்கும் ஒரே வழியான, முதலாளித்துவ முறைக்கு எதிராக கூட்டான மற்றும் நனவான சமூக மற்றும் அரசியல் போராட்டத்தை நோக்கி திரும்ப நிர்ப்பந்திக்கப்படும்.

8, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் தன்மையும் விளைவுகளும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை தன்மையினால் நிர்ணயிக்கப்படும். ஏற்கனவே கூறியது போல் பெருகிக் கொண்டிருக்கும் நெருக்கடி, ஒரு திட்டவட்டமான தன்மையை கொண்டுள்ளது. ஒரே தசாப்தத்தில் மூன்றாம் முறையாக பாரிய நிதிய ஊகவாணிபத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு குமிழின் உடைவினால் உலகப் பொருளாதாரம் ஒரு அதிர்விற்கு உட்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு கோடை காலத்தில் வெடித்த கிழக்காசிய நிதிய நெருக்கடி தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரின் பொருளாதாரங்களை சூழ்ந்ததுடன் ஒரு சர்வதேச நிதியமுறையின் உடைவை கிட்டத்தட்ட தூண்டிவிடும் அளவிற்குக் கொண்டு வந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் மிகப் பெரிய பதில் நடவடிக்கைகளினால் அழிவு தடுக்கப்பட்டது; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒன்றன் பின் ஒன்றாக பல பில்லியன் டாலர்களை அது செலவு செய்ததில் மூலம் தொடர்ச்சியான பேரழிவைத் தரக்கூடிய தேசிய பற்றாக்குறைகள் தவிர்க்கப்பட்டன. அமெரிக்காவின் உரிமை முதல் (நிறுவனத்தின் எல்லாப் பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்ப்பதற்குரிய தொகை போக எஞ்சிய பெறுமதி) சந்தைகளில் (Equity Markets) ஆசிய நெருக்கடியின் பாதிப்பும், வோல் ஸ்ட்ரீட்டின் ஏற்ற இறக்கங்கள் மூலம் பிரதிபலிப்பாயிற்று. ஆசிய நாணய சந்தையில் ஏற்பட்ட கொந்தளிப்பை எதிர்கொண்டதில் 1997 அக்டோபர் 27 அன்று ஒரே நாளில் Dow Jones சராசரியாக 554 புள்ளிகள் சரிந்தது (7.2 சதவிகிதம்). குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள் மூலம் வோல் ஸ்ட்ரீட்டை உறுதிப்படுத்தும் பின்வந்த முயற்சிகள், 1990 களின் நடுப்பகுதியில் வளர்ச்சி பெறத் தொடங்கிய முதலீட்டுக் குமிழை மேலும் கூடுதலாக ஊதிப்பெருக்கியது. 2000ம் ஆண்டை ஒட்டி, "dot.com" கிறுக்குத்தனத்தின் "பகுத்தறிவற்ற பேரார்வம்" தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது தெளிவாயிற்று. குமிழின் வெடிப்பும் அதைத் தொடர்ந்த சரிவும் மத்திய வங்கியால் தசாப்தத்திலேயே மிகக் குறைவான வகையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு சொத்துக்களை விரைவாக பணமாக மாற்றக்கூடிய தன்மையால் (liquidity) பொருளாதாரத்தினை மூடிநிரப்பியது. dot.com குமிழின் வெடிப்பு விளைவுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட வழிவகை அமெரிக்க வீட்டு சந்தையில் வெறித்தனமான ஊகப்பங்கிற்கு அரங்கு அமைத்துக் கொடுத்தது. வீட்டுச் சந்தையில் இருந்த அதிக ஊகவாணிபத்தன்மை நன்கு உணரப்பட்டாலும், நிதியக் கொள்கை இயற்றுபவர்கள் மந்தநிலைக்கு திரும்பாமல் இருக்க வேண்டும் என்றால் வீட்டுச் சந்தை, சந்தேகத்திற்கு உரியது என்றாலும், தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டும் என்று நம்பினர். Levy Economics Institute, ஆல் குறிக்கப்பட்டவாறு, "2001க்கு பின்னரான அமெரிக்க பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி பெரிதும் தங்கியிருந்த தனிநபர் செலவீனங்களின் அதிகரிப்பானது வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட வெறித்தனமான பூரிப்பால் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்தது. [Strategic Analysis, November 2007, p.7]

9. ஊக குமிழ்களை தோற்றுவிக்கும் தொடர்ச்சியான போக்கு, உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அபிவிருத்தியில் ஆழ்ந்த வேர்களை கொண்ட முரண்பாடுகளில் இருந்து வெளிப்படுவதாகும்; குறிப்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக ஸ்தானத்தின் வரலாற்று ரீதியான வீழ்ச்சியுடன் பிணைந்ததாகும். அமெரிக்காவை அடித்தளமாக கொண்ட தொழில்துறையில் இலாபம் கிடைத்தலில் நீண்டகால வீழ்ச்சி, அமெரிக்க நிதிய நிறுவனங்களை தமது முதலீட்டிற்கு அதிக இலாபம் கிடைக்கக் கூடிய மாற்றீட்டு வழிவகைகளை தேடுவதற்கு உந்துதல் கொடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க ஆளும் உயரடுக்கின் உயிர்வாழ்வின் வழிமுறையானது செல்வக்குவிப்பு நிகழ்வுப்போக்கினை தொழிற்துறை உற்பத்தி நிகழ்வுப்போக்கிலிருந்து அதிகரித்தளவில் பிரித்ததால் பண்பிடப்படுகின்றது. தன்னுடைய சொந்த செல்வக் குவிப்பின் அதிகூடிய தேவையை திருப்திப்படுத்தும் விதத்தில் இலாபவிகிதம் கூடுதலாகப் பெறப்படக்கூடியதாக இருந்தால் மட்டுமே அத்தகைய வாய்ப்புக்களை உடைய குறைவூதியம் உள்ள தொழிற்துறை உற்பத்தி மீது அது கவனம் செலுத்தியது.

10. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஒட்டுண்ணித் தன்மை பிரிக்க முடியாத வகையில் இராணுவ வாதத்தை தீவிரப்படுத்துவதுடன் பிணைந்துள்ளது. இறுதி ஆய்வில், 9/11 நிகழ்வுகளை சாக்குப்போக்காக பயன்படுத்தி நடாத்தப்பட்ட ஈராக், ஆப்கான் போர்கள், அமெரிக்காவில் உலக மேலாதிக்க நிலையை தக்கவைத்துக் கொள்ளுவதற்காக அமெரிக்க ஆளும் உயரடுக்கு பெற்றிருந்த உந்துதலின் விளைவாக ஏற்பட்டவை ஆகும். 2002ல் புஷ் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட ''முன்கூட்டி தாக்கி தனதாக்கிக் கொள்ளும் போர்'' என்னும் கொள்கைவழி தற்போதும் வழக்கத்திலுள்ளது. இப்போது உள்ள அல்லது இனி வெளிப்படக்கூடிய போட்டியாளர்களின் பூகோள-அரசியல் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளுவதற்கு இராணுவ வலிமையை பயன்படுத்துவது தேவையாக உள்ளது. ஈராக்கில் பெற்ற பின்னடைவுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான உந்துதல்களை குறைப்பதற்கு பதிலாக அமெரிக்க பலத்தை பாவிப்பதற்கான கூடுதலான புதிய அத்தியாவசியங்களை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அமெரிக்காவின் வலுவற்ற நிலைமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

11. ஈராக் போரைப் பொறுத்த வரையிலும் மற்றும் வன்முறையில் சிறிதளவு குறைவு ஏற்பட்டுள்ளது என்பது, புஷ்ஷின் "கூடுதலான படைகளை நிறுத்தியதால்" வெற்றி பெற்றுவிட்டது என்றோ அல்லது போர் முடிவிற்கு வருகின்றது என்றோ அர்த்தப்படுத்தாது. ஓரளவிற்கு வன்முறையில் தற்காலிகக் குறைவு என்பது எந்த அளவிற்கு அமெரிக்க படையெடுப்பின் விளைவான "இனச்சுத்திகரிப்பு" அப்பகுதிகள் நடந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத்தவிர, ஈராக்கில் ஏற்கனவே பாரியளவிலான மனித உயிரிழப்புக்களின் விளைவும் இதன்மீது தாக்கத்தை கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்கப் படையெடுப்பின் விளைவாக நாட்டிற்குள்ளும், அப்பிராந்தியத்திலும் சமூக, அரசியல் முரண்பாடுகள் தீவிர, ஆழ்ந்த தன்மையையடைந்துள்ளன. துருக்கிக்கும் ஈராக் குர்திஸ்களுக்கும் இடையே பெருகியுள்ள பூசல் எந்த நேரமும் ஒரு முழுப் போராக வெடிக்கக்கூடிய தன்மையை காட்டுகிறது. எப்படிப் பார்த்தாலும், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் போர் எதிர்ப்பு இயக்கம் வளர்ச்சியடைந்திருந்தபோதிலும், அமெரிக்க படைகளை திரும்பி அழைத்தல் என்பது அண்மைக் காலத்தில் நடக்கக் கூடியதாக இல்லை. Current History இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரையில் Nir Rosen குறிப்பிட்டுள்ளபடி, "அமெரிக்க படைகள் பெருக்கத்தின் நோக்கம் வெறுமனே ஈராக் பிரச்சனையை அடுத்து நிர்வாகத்திற்கு தள்ளுவதுதான் -- ஆனால் உண்மை என்னவெனில் அமெரிக்க படையினர் ஈராக்கை விட்டு ஒருபோதும் நீங்கப் போவதில்லை. அன்பார் மாநிலத்தில் இருக்கும் மிகப் பெரிய அல் அசத், டாகுடும் போன்ற பெரிய தளங்கள், ஒரு கடற்படைவீரர் என்னிடம் குறிப்பிட்டது போல், 'மிக நீண்ட காலம் நீடித்திருப்பதற்கான தளங்கள்தான். ஒதுக்கமான பாலைவனத்தில் இருக்கும் இவை தகர்க்கப்பட முடியாதவை. எப்பொழுதாவதுதான் எறிகுண்டுகள் இங்கு வீசப்படுகின்றன; இந்த தளங்கள் பல தசாப்தங்களும் நீடித்திருக்கும்." (December, p.413)

12. ஈராக்கிய படையெடுப்பு தொடங்கி ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவின் மூலோபாய நிலைமை சீரழிந்துவிட்டது. குறிப்பாக வாஷிங்டனால் உலக மேலாதிக்கத்திற்கு தேவையானது எனக் கருதப்படும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா இன்னும் கூடுதலான சவால்விடும் சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. அப்பகுதியில் ரஷ்ய செல்வாக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதும் மற்றும் சீனா, இந்தியா ஆகியவற்றின் தொடர்ந்த பொருளாதாரப் பெருக்கம் ஆகியவை அமெரிக்காவின் ஏகாதிபத்திய பேரவாக்களுக்கு தடைகொடுக்கும் திறனைக் கொண்டவை எனக் கருதப்படுகின்றன.

13. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்தை தயாரிப்பவர்களுக்கு சீனப் பிரச்சினை இன்னும் பெரிதாகக் கண்முன் தோன்றுகிறது. சீனாவின் பொருளாதார வலிமை குன்றா வளர்ச்சியை கொண்டுள்ள நிலையில், அதன் இராணுவ வலிமையும் இன்னும் கூடுதலாகும். இது அமெரிக்காவின் உலகந்தழுவிய நலன்களுடன் இயைந்து இருக்காது என்று பரந்த அளவில் கருதப்படுகின்றது. ஆபிரிக்காவில் சமீபத்தில் புதிய அமெரிக்க இராணுவ மையம் AFRICOM அமைக்கப்பட்டுள்ளது. இது அக்கண்டத்தில் சீனச் செல்வாக்கு தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருவதற்கான பதிலிறுப்பாகும். ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பற்றிய மோதல் இன்னும் கூடுதலான, உடனடி அழுத்தத்திற்கான ஆபத்தை கொண்டுள்ளது. வெளியுறவுக் கொள்கை வல்லுனரான Christopher Layne எழுதுவதாவது: "கிழக்காசியாவில் அமெரிக்கா தன்னுடைய தற்போதைய மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்தால், சீன-அமெரிக்க மோதல் உறுதியாகிவிடும்; ஏனெனில் அமெரிக்க பெரும் மூலோபாயம் முன்கூட்டியே வன்முறையில் இறங்குவது என்பதை தன் முக்கியத்துவத்தை பாதுகாக்கும் கருவியாக ஆக்கிவிட்டது. ஒரு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் மேலாதித்க சக்திக்கு, 'குழந்தையை தொட்டிலிலேயே நெரித்துவிடுவது' போல் சவால்விடக்கூடிய திறன் இருப்பவர்களை முன்கூட்டியே தாக்குதல் என்பது, அதுவும் இராணுவரீதியில் இந்த மேலாதிக்கக்காரர் கூடுதலான திறனைக் கொண்டிருக்கையில், எப்பொழுதுமே விருப்பமான ஒரு மூலோபாய தேர்வாகத்தான் இருக்கும்." [Current History, Jan.2008, pp.16-17]

14. அமெரிக்க முதலாளித்துவவாதிகளின் பூகோள-அரசியல் நலன்கள் மற்றும் நோக்கங்களில் இருந்தே போருக்கான உந்துதல் தவிர்க்க முடியாமல் வெளிப்படுகிறது. இது அமெரிக்காவிற்குள் இருக்கும் அதிகரித்துவரும் உயிராபத்தான சமூக உறவுகளில் இருந்தும் விளைகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக மிகப் பெரிய அளவில் விரிவடைந்துள்ள பொருளாதார சமத்துவமின்மை உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வின் மேல்மட்டத்திற்கு கீழேயும் மற்றும் செய்தி ஊடகத்தால் தடைசெய்யப்பட்டுள்ள பகிரங்க விவாதத்திற்கு வெளியேயும் மிகத் தீவிர சமூக அழுத்தங்கள் உருவாகிவருவதை காட்டுகின்றன. உள்நாட்டு வர்க்க மோதல் என்ற வடிவத்தை எடுக்கும் சமூக அழுத்தங்களை தடுக்கும் வகையில் ஏகாதிபத்திய இராணுவவாதம் ஆளும் உயரடுக்கினால் பயன்படுத்தும் முக்கிய அரசியல் கருவிகளில் ஒன்றாக இருக்கின்றது.

15. Levy Economics Institute of Bard College ஐ சேர்ந்த Edward N. Wolff நடத்திய சமீபத்திய ஆய்வுகள் அமெரிக்காவில் இருக்கும் சமூக சமத்துவமின்மையின் மிகத் தீவிர அளவுகளை ஆவணமிட்டுள்ளன. செல்வம், வருமானம் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது பற்றிய புள்ளிவிவரங்கள் அசாதாரண முறையில் சமூகம் பல கூறுகளாக சிதறுண்டு நிற்பதை காட்டுகின்றன. மக்கட்தொகையில் உயர்மட்ட 1 சதவிகிதம் அமெரிக்க தனியார் சொத்துக்களின் நிகர மதிப்பில் 34.3 சதவிகிதத்தை கொண்டுள்ளது. அதற்கு அடுத்த 4 சதவிகிதத்தினர் 24.6 சதவிகித நிகர மதிப்பையும், அதற்கும் அடுத்த 5 ஐந்து சதவிகிதத்தினர் 12.3 சதவிகிதத்தையும் கொண்டுள்ளனர். மொத்தத்தில் மக்கட்தொகையின் செல்வம் கொழிக்கும் 10 சதவிகிதத்தினர் நாட்டின் தனியார் சொத்துக்களில் 71 சதவிகித செல்வத்தை கொண்டுள்ளனர். அதற்கு அடுத்த பத்து சதவிகிதத்தினர் 13.4 சதவிகித சொத்தை கொண்டுள்ளனர். அடிமட்ட 80 சதவிகித அமெரிக்க குடும்பத்தினர் 13.5 சதவிகித செல்வத்தைத்தான் கொண்டுள்ளனர். 60ல் இருந்து 40 சதவிகிதப்பிரிவில் உள்ளவர்கள் 3.8 சதவிகித நிகர இருப்புக்களைக் கொண்டுள்ளனர். கீழ்மட்ட 40 சதவிகித குடும்பத்தினர் மொத்த இருப்பில் 0.2 சதவிகித செல்வத்தைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர்.

16. வீடுகள் அற்ற சொத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், பிளவுகள் இன்னும் கூடுதலாக இருக்கின்றன. உயர்மட்ட 1 சதவிகித குடும்பத்தினர் 42.2 வீடுகளற்ற செல்வக் குவிப்பை கொண்டுள்ளனர். உயர்மட்ட 10 சதவிகிதத்தினர் 80 க்கும் குறைவான வீடுகளற்ற சொத்துக்களை கொண்டுள்ளனர். கீழிருக்கும் 80 சதவிகிதம் 7.5 வீடுகளற்ற சொத்துக்களை கொண்டுள்ளது. மிக வறிய 40 சதவிகிதத்தினர் -1.1 சதவிகித வீடுகளற்ற சொத்துக்களை கொண்டுள்ளனர்.

17. வருமானத்தை அளவு கோலாகக் கொண்டால், உயர்மட்ட 1 சதவிகிதம் மொத்தத்தில் 20 சதவிகிதத்தை கொண்டிருக்கிறது. உயர்மட்ட 1 சதவிகிதம் மொத்த வருமானத்தில் 45 சதவிகிதத்தை பெற்றுள்ளது. கீழேயுள்ள 80 சதவிகிதம் 41.4 சதவிகிதத்தை கொண்டுள்ளது. மிக வறிய 40 சதவிகிதத்தினர் 10.1 சதவீத வருமானத்தைத்தான் கொண்டுள்ளது.

18. மற்றும் ஒரு முக்கியமான புள்ளிவிவரம், நடு மூன்று இருபது பிரிவுகளில் இருக்கும் குடும்பங்களின் நிதி நிலைமை பற்றிக் கூறுகிறது (80-60, 60-40, 40-20). இவர்களுடைய இல்லங்கள் அவர்களுடைய சொந்தச் சொத்தில் 66.1 சதவிகிதமாக இருப்பதை காட்டுகின்றன. அசையக்கூடிய சொத்துக்கள் அவர்களுடைய மொத்தத்தில் 8.5 சதவிகிதம்தான் உள்ளன. மூலதனக் கருவிகள் (பங்குகள், பாதுகாப்புப் பத்திரங்கள், அறக்கட்டளை நிதி போன்றவை) 4.2 சதவிகிதம்தான் உள்ளன. இது எந்த அளவிற்கு நடு மூன்று இருபது பிரிவினர் வீட்டு மதிப்பு மற்றும் வீட்டுச் சந்தையை தங்கள் நிதிநிலைமைக்கு நம்பியுள்ளன என்பது காட்டப்படுகிறது.

19. தொழிலாள வர்க்கம், மத்தியதர வர்க்கம் ஆகியவற்றில் உள்ள இப்பிரிவின் கடன்கள் தீவிரமாக உயர்ந்துள்ளதன் முக்கியத்துவத்தையும் இந்த உண்மை தெளிவாக்குகிறது. 1983ல் இப்பிரிவுகளின் கடனுக்கும் உரிமை மூலதனத்திற்கும் இடையிலான விகிதம் 37.4 ஆக இருந்தது. 2004ல் அது 61.6% ஆக இருந்தது. 1983ல் வருமானத்திற்கும் கடனுக்கும் இடையிலான விகிதம் 66.9 ஆக இருந்தது. 2004ல் அது 141.2 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது! 1983ல் வீடுகளின் மீது இந்த மூன்று இருபது பிரிவினரின் அடைமானக் கடன் வீட்டின் மதிப்பில் 28.8 சதவிகிதம் என்று இருந்தது. 2004ல் கடனின் அளவு வீட்டு மதிப்பில் 47.6 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

20. கடைசியாக மற்றொரு புள்ளிவிவரம்: Wolff கூறியுள்ளபடி, "2004ல் மிக அதிக செல்வமுடைய 1 சதவிகிதத்தினர் அனைத்து பங்குகள், நிதியப் பாதுகாப்பு பத்திரங்கள், பொறுப்பாட்சி முதலீடு, வாணிக முதலீடுகள் ஆகியவற்றில் பாதியை கொண்டிருந்தனர். உயர்மட்ட 10 சதவிகித குடும்பங்கள் ஒரு குழுவாக 80-85 சதவிகிதம் வரை பங்குகள், பத்திரங்கள், அறக்கட்டளைச் சொத்துக்கள், வாணிக முதலீடுகள், வீடு இல்லாத நிலச்சொத்துக்கள் போன்றவற்றை கொண்டிருந்தன. மேலும் 49 சதவிகிதத்தினர் நேரடியாகவோ பரஸ்பர நிதிகள் மூலமாகவோ பங்குகள், அறக்கட்டளைகள், பல ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றை கொண்டிருந்தாலும், மிக உயர்மட்ட 10 சதவிகித குடும்பங்கள்தான் இப்பங்குகளின் மொத்த மதிப்பில் 79 சதவிகிதத்தை கொண்டிருந்தனர், நேரடியாக உடைமையாக்கப்பட்டிருந்த பங்குகள், பரஸ்பர நிதிகள் ஆகியவற்றில் 85 சதவிகிதத்தை விட சற்று குறைந்ததை கணக்கில் கொண்டிருந்தனர். ["Rising Trends in Household Wealth in the United States: Rising Debt and the Middle-Class Squeeze," June 2007, p. 25]

21. இந்தப் புள்ளி விவரங்களின் அரசியல் தாக்கங்கள் யாவை? கடந்த மூன்று தசாப்தங்களில் அமெரிக்க சமூகத்தின் மிகத் தீவிர பிளவுகள், வெளிப்படையான, வன்முறையான வர்க்க மோதலை விரைவாக அணுகிக் கொண்டிருக்கிறது என்பதேயாகும். ஆளும் சிறு தன்னலக் குழுவின் நலன்களை நடைமுறைப்படுத்தும் கருவிகளாக சேவைசெய்யும் இரு கட்சிகளை கொண்ட அமெரிக்க அரசியல் முறை, முன்னேற்றமின்றி இருப்பது ஒரு புறம் இருக்க, இயல்பாகவே எவ்வித நம்பகத் தன்மை உடையவிதத்திலும் மக்களுடைய கோரிக்கைகளுக்கு ஏற்ப சமூக மாறுதல்களை கொண்டுவருவதற்கு அமைப்பு ரீதியாகவே திராணியற்ற ஒரு முறை ஆகும். இறுதி ஆய்வில் ஒரு சீர்திருத்தத் தன்மை உடைய சமூக மாறுதலுக்கான தேவைகூட, தன்னுடைய சொத்துக்களையும் சமூக நலன்களையும் பாதுகாக்க விரும்பும் ஆளும் உயரடுக்கின் விட்டுக் கொடுக்காத உறுதிப்பாட்டுடன் மோதும் நிலைதான் உள்ளது.

22. திருடப்பட்ட 2000ம் ஆண்டுத் தேர்தல் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் இரண்டும் அப்பொழுதே எச்சரித்திருந்ததுபோல், அது அமெரிக்க ஜனநாயக முறையில் சீரழிவின் ஒரு வரலாற்று ரீதியான மைல்கல்லை பிரதிபலித்தது. தேர்தல் திருட்டை ஏற்பதற்கு ஜனநாயகக் கட்சி விருப்பத்தை காட்டியமை அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தக் கணிசமான பிரிவும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரபார்ந்த அமைப்புக்களை பாதுகாக்கும் கட்டாய அக்கறையைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபணம் செய்தது. அத்தேர்தலுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அத்தீர்ப்புரையை உறுதியாக்கியுள்ளன. 9/11க்கு பின்னர் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மறைப்பில் ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் உடந்தையாக இருந்த ஜனநாயக, அரசியலமைப்புக் கொள்கைகள் முற்றிலும் மீறப்பட்டமை இன்னும் கூடுதலான வகையில் சர்வாதிகார வர்க்க ஆட்சிக்கு ஆணவத்துடனான தயாரிப்புக்கள் இருந்ததை பிரதிபலித்தன. இவை மனக்குழப்பமான செயல்கள் அல்ல, மாறாக அமெரிக்க ஜனநாயக முறையின் மரபார்ந்த வடிவமைப்புக்களை பராமரிப்பதுடன் இறுதியில் பொருந்திப்போகாத ஆழ்ந்த சமூக துருவமுனைப்படலில் இருந்து எழுபவை ஆகும். "விரிவுபடுத்தப்பட்ட விசாரணை" என்பது, அதாவது சித்திரவதை என்பது, ஹிட்லரின் கெஸ்டொபோ வழிவகையான "Verschärfte Verhemung" என்ற சொற்களின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும்.

23. எவர் முதலாளித்துவ கட்சிகளால் இறுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியானாலும், சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிகளின் தர்க்கம் வர்க்க மோதல்கள் தீவிரமாதலை நோக்கி இட்டுச்செல்லும் என்பதைத்தான் காட்டுகிறது. மேலும், சமூக நிலைமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நீடித்த சரிவு, சமூகத்தின் செல்வத்தில் எப்பொழுதும் குறைந்து வரும் அதன் பங்கு, உற்பத்தியை உடைமையாக கொண்டு கட்டுப்படுத்துபவர்கள் இடைவிடாமல் தங்கள் சுரண்டலை அதிகப்படுத்துதல் ஆகியவை தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை மற்றும் கடப்பாடுகளில் ஆழ்ந்த மாறுதலுக்கான அடித்தளங்களை இட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார வாழ்வில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாறுதல்கள், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக நனவில் ஆழ்ந்த சுவடுகளை ஏற்படுத்தியுள்ளதை காண மறுப்பவர்கள் அல்லது நிகழ்ந்ததைத்தானும் மறுப்பவர்கள் தங்கள் மனவுறுதியற்ற ஐயுறவுவாதத்தை மட்டுமல்லாது வரலாறு பற்றிய அறியாமையையும் புலப்படுத்துகின்றனர். உண்மையில் வெளிப்படையான சமூக மற்றும் வர்க்க மோதல்கள் கடந்த 25 ஆண்டுகளாக இல்லாதிருப்பது அமெரிக்க வரலாற்றின் பொது வடிவமைப்பிற்கு முற்றிலும் முரண்பட்ட தன்மையில் உள்ளது. ஆனால் சிக்கல் வாய்ந்த அசாதாரண தேசிய, சர்வதேசிய பொருளாதார அரசியல் நிகழ்வுப்போக்குகளுடன் ஆழ்ந்தும், இடைத் தொடர்பு உடைய இந்த நீடித்த சமூக அமைதியானநிலை இப்பொழுது ஒரு முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. 2008ல் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய பணி, இத்தகைய வர்க்க மோதல்களின் வெடிப்பினால் முன்வைக்கப்படும் அறைகூவல்களை எதிர்கொள்ள அதன் வேலைகளில்- தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான பணிகளின் அனைத்துக் கூறுகளிலும் தயாரிப்புச்செய்வதாகும்.

24. இத்தயாரிப்பிற்கு முக்கியமான கூறுபாடு கடந்தகால புரட்சிகர எழுச்சிகளின் படிப்பினையை நன்கு மீள்பார்வை செய்வதாகும். இந்த ஆண்டு 1968 இன் நாற்பது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கிறது; அந்த ஆண்டில் சர்வதேச அளவில் மற்றும் அமெரிக்காவில் வெடிப்புத் தன்மை வாய்ந்த போராட்டங்கள் நடந்திருந்தன. அந்த ஆண்டின் நிகழ்வுகள் நீடித்த காலத்திற்கு சர்வதேச புரட்சிகர போராட்டங்களையும் மற்றும் அமெரிக்காவிற்குள் ஆழ்ந்த வர்க்க மோதல்களையும் ஆரம்பித்து வைத்தன. குறிப்பிடத்தக்க வகையில் 1968ம் ஆண்டின் அரசியல் வெடிப்புக்கள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டு பின்னர் உலகப் பொருளாதாரத்தின் அழுந்தம் நிறைந்த தன்மையின் பின்னணியில் வளர்க்கப் பெற்றன. 1967ம் ஆண்டு பிரிட்டிஷ் பவுண்ட் மதிப்பு குறைக்கப்பட்டமை, அதனை அடுத்து 1968ம் ஆண்டு ஐரோப்பிய தங்கச் சந்தையில் உறுதியற்ற நிலை, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் சர்வதேச முதலாளித்துவம் மீளக் கட்டியமைக்கப்படுவதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கப் பங்கு வருவதற்கும் தளமாக இருந்த 1971ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கையின் (Bretton Woods system) உடைவுக்கு முன்னோடியாயின.

25. அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக ஆய்வு செய்வோம்: ஜனவரி மாதக் கடைசியில் வட வியட்நாம் அதன் வரலாற்றுத் தன்மை வாய்ந்த "Tet Offensive" ஐ தொடக்கியது; அமெரிக்கா போரை வென்று கொண்டிருக்கிறது என்ற ஜோன்சன் நிர்வாகம் மற்றும் பென்டகன் ஆகியவற்றின் கூற்றுக்களை இது முற்றிலும் இழிவிற்கு உட்படுத்தியது. பாதுகாப்பு மந்திரியாக இருந்த ரொபேர்ட் மக்னமாரா பதவியை இராஜிநாமா செய்தார்; வியட்நாம் கொள்கை பற்றி நிர்வாகத்திற்குள் கடுமையான உள்போராட்டங்கள் வெடித்தன. செக்கோஸ்லோவாக்கியாவில் ஜனவரி மாதத்தில், பழம்பெரும் ஸ்ராலினிஸ்டான ஆன்டோனின் நோவோட்னிக்கு பதிலாக அலெக்சாந்தர் டுபெக் பிரதமராக பதவியில் இருத்தப்பட்டார்; இது பின்னர் "பிராக் வசந்த காலம்" என்று அழைக்கப்பட்ட காலத்தை தொடக்கியது. பெப்ருவரி மாதம் லிண்டன் ஜோன்சன் மிகக்குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் நியூ ஹாம்ப்ஷைர் ஆரம்ப நிலை தேர்தலில் செனட்டர் யூஜின் மக்கார்தியை தோற்கடித்தார்; இந்த முடிவு ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதிக்கு ஒரு பெரிய அரசியல் தோல்வி என்று விளக்கப்பட்டது. மார்ச் மாதம் செனட்டர் ரொபேர்ட் கென்னடி வேட்பு நியமனத்திற்கு ஜோன்சனை சவால் விடப்போவதாக அறிவித்தார். இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஜோன்சன் வட வியட்நாமில் சமாதானப் பேச்சிற்கு தான் விரும்புவதையும், மறு நியமனத்தை விரும்பவில்லை என்ற முடிவையும் அறிவித்தார். ஏப்ரல் 4ம் தேதி மெம்பிஸில் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்; அமெரிக்க நகரங்கள் முழுவதிலும் கலகங்கள் வெடித்தன. மே மாதம் பாரிஸில் சோர்போன் பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர்களின் எதிர்ப்புக்கள் வன்முறையில் அடக்கப்பட்டமை பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்து, டு கோல் அரசாங்கத்தை முடக்கி நாட்டை ஒரு சமூகப் புரட்சியின் விளிம்பில் நிறுத்தியது. ஜூன் 5ம் தேதி ரொபேர்ட் கென்னடி லொஸ் ஏஞ்சல்ஸில் படுகொலை செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாடு போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் முற்றுகைக்கு உட்பட்டது; இதை போலீஸ் வன்முறை மூலம் அடக்குவதற்கு மேயர் ரிச்சார்ட் டாலே முற்பட்டார். அதே வராத்தில் சோவியத் பீரங்கி வண்டிகள் செக்கோஸ்லோவாக்கியாவில் நுழைந்து தீவிர ஸ்ராலினிச போக்கு உடையவர்களை மீண்டும் பதவியில் இருத்தின. நவம்பர் மாதம் ரிச்சார்ட் நிக்சன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

26. 1968 நிகழ்வுகள் உலகந்தழுவிய வர்க்கப்போராட்டத்தின் பாரிய எழுச்சியின் ஆரம்பத்தைத்தான் குறித்தன; இது ஒரு தசாப்த காலம் நீடித்தது. ஒவ்வொரு கண்டத்திலும் வெகுஜனப் போராட்டம் ஒரு விதியாக இருந்ததே அன்றி, விதிவிலக்காக அல்ல. அக்காலகட்டத்தின் மிக முக்கியமான கூறுபாடு குறைந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் புரட்சிக இயக்கங்கள் இணையாக வளர்ந்ததுதான். புரட்சிக்கு முந்தைய அல்லது புரட்சிகர நிலைமைகள் பொலிவியா, சிலி, ஆர்ஜென்டினா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், போர்த்துக்கல், கிரேக்கம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நிலவின. அமெரிக்காவிற்குள் சமூகப் போராட்டங்களின் மேலாதிக்க சக்தி இந்தக் கட்டத்தில் மாணவர்கள் என்று இல்லாமல் தொழிலாள வர்க்கம் என இருந்தது. 1973, 1976 ஆண்டுகள் நீங்கலாக பெரிய வேலைநிறுத்தங்களில் பங்கு பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 1967ல் இருந்து 1979 வரையிலான காலத்தில் ஒரு மில்லியனுக்கும் குறைவாக இருந்ததே இல்லை. 1970, 1971 ஆண்டுகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை முறையே 2.4 மில்லியன், 2.5 மில்லியன் என்று இருந்தன. பிரிட்டனில் 1973-74 ல் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் எட்வார்ட் ஹீத்தின் பழைமைவாத அரசாங்கத்தை இராஜிநாமா செய்யும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.

27. இத்தகைய கொந்தளிக்கும் சமூகப் போராட்டங்கள் நடந்த காலத்தில் முதலாளித்துவ முறை தப்பிப் பிழைப்பதற்கு எது காரணமாயிற்று? அரசியல் முனையில், முதலாளித்துவ முறை தப்பிப் பிழைத்ததற்கு முக்கிய காரணம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களை நாசப்படுத்துவதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்த ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அரசாங்கங்கள், கட்சிகள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆகியவற்றின் எதிர்ப்புரட்சி- கொள்கைகளில் இருந்தது. 1950 களிலும் 1960 களின் ஆரம்பத்திலும் நான்காம் அகிலத்துடன் இருந்து உடைத்துக்கொண்ட பப்பலோவாத கட்சிகளும் அமைப்புக்களும், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் அரசியல் துரோகத்தை முடிமறைப்பதில் அழிவு தரும் பங்கைக் கொண்டிருந்தன; அவை வெகுஜன இயக்கங்களை அரசியல் ரீதியாக பயனற்ற எதிர்ப்புப் போராட்டங்களாக திசை திருப்பின. இத்திட்டத்தில் பப்லோவாதிகள் புதிய இடது என்று கூறப்பட்ட அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட்டன; புதிய இடதுகளின் முக்கிய குணாதிசயங்களாக தொழிலாள வர்க்கத்தின் பால் ஏளனம், வரலாற்றுப் படிப்பினைகளை பொருட்படுத்தாத தன்மை, மார்க்சிச தத்துவத்தின்மீது விரோதப் போக்கு மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திடம் கடுமையான வெறுப்பை கொண்டிருந்தன.

28. இந்த சக்திகளின் அரசியல் துரோகம் புறநிலைக் காரணிகள் சிலவற்றால் ஊக்கம் பெற்றன; அவற்றுள் மிக முக்கியமானது அப்பொழுது இன்னும் உலக மேலாதிக்கத்தை கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமையாகும். உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் அச்சாக டாலர் செயல்பட்டு வந்தது; இதைத் தங்கமாக 35 டாலருக்கு ஒரு அவுன்ஸ் என்ற கணக்கில் மாற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் அரசியல், பொருளாதாரரீதியில் 2008 ல் இருக்கும் இன்றைய உலகம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகை விட பரந்த அளவில் மாறுபட்டது ஆகும். உலகின் முக்கிய கடன்கொடுத்த நாடு மிகவும் கடன்பட்டுள்ள நாடாக மாறிவிட்டது. முன்பு பிரெட்டன் வூட்ஸ் காலத்தில் இருந்ததின் மதிப்பில் ஒரு பகுதியை மட்டும் சர்வதேச சந்தைகளில் கொண்டிருக்கும் அமெரிக்க டாலரானது கிட்டத்தட்ட ஒரு உலக நாணயம் என்பதின் அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது. யூரோ அல்லது சர்வதேச நாணயங்களின் ஒரு "கூடையால்" அது பதிலீடு செய்யப்படல் தவிர்க்க முடியாதது எனக் கூறும் வகையிலான வளர்ச்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள மேலாதிக்க சகாப்தம் என்பது முடிவிற்கு வந்துவிட்டது என்ற ஏற்கனவே வெளிப்படையாக இருந்த தன்மையைத்தான் உறுதிப்படுத்துகிறது. மேலும் "பூகோளமயமாதல்" என்ற நிகழ்வுப்போக்கினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படும் அசாதாரண முறையிலான தொழில்நுட்ப மாறுதல்கள் ஆழ்ந்த புரட்சிகர தன்மையையும் மற்றும் தாக்கங்களையும் கொண்டுள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களில் பாரிய உலகந்தழுவிய சர்வதேச தொழிலாளர் இயக்க சக்திகள் விரிவடைவதல் காணப்படுகிறது. அதன் சமூக சக்தி மற்றும் உலகப் பொருளாதாரத்தை சோசலிச வழிவகையில் சீரமைப்பதற்கான திறமையின் திறன் ஆகியவை, --அதாவது வறுமையை மற்றும் சுரண்டலை முடிவிற்கு கொண்டுவர நனவுடன் இயக்கப்பெறும் நோக்கம் மற்றும் மனிதகுலத்தின் தேவைகளுக்கு பணிபுரிய வேண்டும் என்ற தன்மை ஆகியவை உலக வரலாற்றின் முந்தைய எந்தக்கால கட்டத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கின்றன.

29. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் மறு எழுச்சியை பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. முதலாளித்துவ அமைப்பின் புறநிலை நெருக்கடி அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எழுச்சிக்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நாங்கள் உறுதியாக கருதுகிறோம். ஆனால் வரவிருக்கும் எழுச்சி சோசலிச நனவை அபிவிருத்திசெய்வதில் இருக்கும் பிரச்சினைகளை தானாகவே எளிதில் தீர்த்துவிடாது.

30. சமீப மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் தொடக்கப் போராட்டங்கள் நிரூபித்துள்ளது போல், நெருக்கடியின் புறநிலை புரட்சிகர தாக்கங்களுக்கும் தற்போதைய அரசியல் நனவின் மட்டத்திற்கும் இடையே பாரிய பிளவு இன்னமும் உள்ளது. புறநிலைமைகள் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு இட்டுச் சென்று நனவில் ஒரு மகத்தான பாய்ச்சல் வருவதற்கான சூழலையும் தோற்றுவிக்கும். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் நனவை உயர்த்தி அதிகாரத்துவங்களின் பிற்போக்கு செல்வாக்கை கடப்பதற்காக கட்சியினால் நடத்தப்படும் போராட்டத்தின் தரத்தை குறைமதிப்பீடு செய்வது ஒரு தவறாகிவிடுவதுடன், அதிகாரத்துவம் வலிமை குறைந்துள்ளபோதிலும்கூட, அபாயமானதும், முதலாளித்துவ ஆட்சிக்கு ஒரு முக்கிய தூணாகவும் இருக்கிறது. பல "தீவிரவாத" குட்டி முதலாளித்துவ போக்குகளின் பங்கையும் நாம் அசட்டை செய்யமுடியாது; அவை தொடர்ச்சியாக தொழிலாள வர்க்கத்தை திசைதிருப்ப விட்டுக்கொடுக்காது முனைவதுடன், முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான" பகுதிகளுக்கு அடிபணிய செய்ய வைக்கவும் பார்க்கிறது. இந்த ஆளும் வர்க்கத்தின் மாறுபட்ட அரசியல் முகவாண்மைகளின் செல்வாக்கை, கடந்த புரட்சிகர போராட்டங்களின் மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக் கொள்வதற்காக போராடுவதன் மூலமும் மற்றும் உலக முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் நெருக்கடியின் தாக்கங்களை புரிந்து கொள்வதன் மூலமும்தான் வெல்ல முடியும்.

31. 2008ல் சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய செல்வாக்கை தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் இளைஞர்களுக்குள்ளேயும் விரிவாகப் படர வகைக்கும் வகையில் அரசியல் ஆர்வமிக்க பிரச்சாரத்தை எடுத்துக் கொள்ளும். இந்த பிரச்சாரத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்;

(A) 2008 தேர்தல்களில் தன்னுடைய வேட்பாளர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாநிலங்களிலும் நிறுத்தி வைப்பதின் மூலம் சோசலிச சமத்துவக் கட்சி பங்கு பெறும். இப்பிரச்சாரத்தின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதும், அதன் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை புரிந்து கொள்ள வைப்பதும், முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுடன் அதன் அரசியல் முறிவை விரைவுபடுத்துவதும், வறுமை, சுரண்டல் மற்றும் அனைத்துவித சமூக சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவதும், அமெரிக்க இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிர்ப்பை கட்டியமைப்பதும் சோசலிச சமத்துவக் கட்சிக்குள் புதிய சக்திகளை சேர்ப்பதுமாகும்.

(B) இந்த வளர்ச்சி, அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில் இருக்கும் எமது அரசியல் சக சிந்தனையாளர்களுடன் இணைந்ததாகும். இதில் வாசிக்கக்கூடியதாக இருக்கும் வகையில் வலைத் தளத்தில் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றம் மற்றும் நவீன வலை தொழில்நுட்பத்தை இயலுமான வலையில் திறமையாக பயன்படுத்துதலும் உள்ளடங்கும். உலக சோசலிச வலைத் தளம் தகவல்களை தொகுத்தளிப்பதில் மாற்றங்களை கொண்டு வரும்; அவை அரசியல், பண்பாடு மற்றும் தத்துவார்த்த உள்ளடக்கத்தில் வலிமையை சேர்க்கும். இந்த மாறுதல்கள் அனைத்தின் நோக்கம் வாசகர் எண்ணிக்கையை அதிகரித்தல், தளத்தின் அரசியல் செல்வாக்கை அதிகரித்தல் மற்றும் இதை ஒரு சோசலிச சிந்தனைக்கும் செயற்பாடுகளுக்குமான கருவியாக மாற்றுவது என்பதாக இருக்கும்.

(C) ISSE என்னும் சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கப் பிரிவு தன்னுடைய பணிகளை அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழக வளாகங்கள் அனைத்திலும் விரிவுபடுத்தும். அனைத்துலகக் குழுவில் இருக்கும் நம்முடைய அரசியல் சக சிந்தனையாளர்களின் முயற்சியுடன் இணைந்து, உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் அரசியல் ஐக்க்யம் மற்றும் ஒற்றுமைக்காகப் போராடும் ஒரு உண்மையான சர்வதேச அமைப்பாக ISSE -ஐ வளர்த்தெடுப்பதற்கு பாடுபடுவோம்.

32. 2008ல் கட்சியின் வேலையை விரிவுபடுத்துவதற்காக இந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முன்னோக்கின் அடிப்படையில் போராடுமாறு நாம் அனைத்து சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களையும் வேண்டுகிறோம். அதே நேரத்தில், உலக சோசலிச வலைத் தள வாசகர்களும் ஆதரவாளர்களும் அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் அவசரத் தன்மையையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் சோசலிசத்திற்கான போராட்டத்தில் எங்களுடன் இணைந்து போராடுமாறு முழு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் அழைப்பு விடுகின்றோம்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைக! சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பில் இணைவதற்கு இங்கே அழுத்தவும்.