World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Polish workers oppose government plan to restrict right to strike

வேலைநிறுத்த உரிமையை கட்டுப்படுத்தும் அரசாங்க திட்டத்தை போலந்து தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள்

By Tadeusz Sikorski and Marius Heuser
19 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

வேலைநிறுத்த உரிமையை கட்டுப்படுத்துவதற்கான பழமைவாத கட்சியின் திட்டங்களை எதிர்க்க இந்த வெள்ளியன்று போலாந்தின் வார்ஷோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஓர் ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் அறிக்கை வினியோகிக்கப்பட்டது.

போலந்தில் ஏற்பட்டுள்ள பாரிய அளவிலான சமூக துருவமுனைப்படுத்தல் தொழில்துறை மோதல்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு வழி வகுத்துள்ளது. தற்போது பொதுத்துறை தொழிலாளர்கள் டோனால்டு டுஸ்க் தலைமையிலான பழமைவாத கட்சியுடன் தீவிர மோதல்ககளில் ஈடுபட்டு வருகிறார்கள். எவ்வாறிருப்பினும், நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களை தடுக்கவும், தொழில்துறை பிரச்சனைகளை தனிமைப்படுத்தவும் மற்றும் தொழிலாளர்களின் எவ்வித சுயாதீனமான நடவடிக்கையையும் நசுக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. தொழிலாளர்கள் மீதான மிக வன்மையான தாக்குதலுக்குரிய ஆயத்தங்களின் ஒரு பகுதியாக வேலைநிறுத்த உரிமைக்கு குழிதோண்டும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தற்போது அவர்கள் ஆதரவளிக்கும் எல்லையை தொட்டிருக்கிறார்கள்.

போலந்தில் தொழில்துறை மோதல்களின் வேகமும், தீவிரமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தெளிவாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்து இணைந்தால், சமூக சூழலில் சில முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கைகளும் இல்லாதுபோயுள்ளது. அதற்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்து அங்கத்துவநாடாகியதால், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி மட்டுமே அதிகரிக்கரித்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவிலான வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு மாறியதால், தொழில்துறையின் சில துறைகளில் கூலிகள் உயர்ந்திருக்கும் போதினும், பணவீக்கத்தின் விரைவான உயர்வால், குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் உயர்வால் சம்பளத்தில் ஏற்படும் எவ்வித உயர்வும் ஏற்கனவே சுரண்டப்பட்டு விடுகிறது.

போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பின்னர் வாழ்க்கை செலவுகள் கணிசமான அளவில் உயர்ந்துள்ளன. பல அடிப்படை உணவுப்பொருட்களின் விலைகள் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளன, சில பொருட்களுக்கு விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது. வாடகை மற்றும் வீடு கட்டுமான சந்தையில் ஏற்பட்டுள்ள பெரியளவிலான விலையுயர்வுகளுடன் மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதற்கிடையில், யூரோ மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் சுலோட்டியின் (போலாந்து நாணயம்) மதிப்பு வலுவாக இருப்பது, விலையுயர்வை குறைக்க உதவி இருந்தாலும் கூட, வார்ஷா, கிராகெள, பிரெஸ்லா அல்லது டன்சிக் போன்ற பெரிய போலாந்து நகரங்களில் வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள் தற்போது மேற்கு ஐரோப்பிய நகரங்களுக்கு இணையாக வளர்ந்துள்ளன. எதிர்காலத்தில் சுலோட்டியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால், மீண்டும் திடீர் விலையுயர்வு தவிர்க்க முடியாததாய் இருக்கும்.

இந்த பணவீக்கத்தால், சில தொழில்துறையில் அதிக சம்பளங்கள் பெற்று வரும் தொழிலாளர்கள் கூட வருமானத்தில் ஒரு பெரியளவிலான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற பரந்த மக்கள் அடுக்கு, குறிப்பாக பொதுத்துறை சேவை தொழிலாளர்கள், முற்றிலும் பலனடையவில்லை என்பதுடன் அவர்கள் வறுமைகோட்டின் கீழ் அல்லது அதற்கு அண்மித்த நிலையில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிறுபான்மை பணக்கார அடுக்கு மட்டும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வரும் நிலையில், ஒரு சிறுபான்மை மத்திய வர்க்கம் உருவாகி உள்ளது, குறிப்பாக முக்கிய நகரங்களில் இது உருவாகியுள்ளது. பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தொடர்ந்து சிக்கலாகி வருகிறது.

போலந்து புள்ளிவிபர அலுவலக தகவலின்படி, குடும்பங்களில் வாழும் மொத்த குழந்தைகளில் 66 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள். போலந்தில் உள்ள மொத்த குழந்தைகளில் சுமார் மூன்று பங்கினர் போதிய ஊட்டச்சத்தை பெற்றிருக்கவில்லை. மேலும் 2005 இல் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதத்தினர் உத்தியோகபூர்வ பிழைப்பாதார அளவான மாதத்திற்கு 387 சுலோட்டிக்கும் (அண்ணளவாக 100 யூரோ) குறைவான வருமானத்தில் வாழ வேண்டி இருந்தது. 1996 இல், இந்த மொத்த அளவு வெறும் 4 சதவீதமாக இருந்தது.

பெருமளவிலான மக்கள் வாழ்க்கை படுமோசமாகி வரும் நிலையில், இதுவரை டுஸ்க் அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார அற்புதம் பணக்காரர்களுக்கு மட்டுமே பலனளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் குடிமக்கள் திட்டக்குழு, மேலும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்க திட்டமிடுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 740 திற்கு குறைவில்லாத அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. இந்த நிறுவனங்களின் விற்பனையால் மொத்தமாக 30 பில்லியன் சுலோட்டி (அண்ணளவாக 8.82 பில்லியன் யூரோ) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் அந்நாட்டில் யுத்தத்திற்கு பின்னர் ஸ்ராலினிச ஆட்சியினால் தேசியமயமாக்கப்பட்டன என்பதால் இந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களுக்கு இந்த தொகையில் பாதி வழங்கப்பட இருக்கிறது.

முன்னாள் ஸ்ராலினிச ஆட்சி தூக்கி எறியப்பட்டதிலிருந்து, போலந்தில் ஏற்கனவே பின்பற்றப்படும் தனியார்துறை சம்பளங்கள் வேலைவாய்ப்பின்மை மற்றும் சம்பள குறைப்புகளின் திடீர் உயர்வுக்கு இட்டுச்சென்றுள்ளது.

''அதிகாரத்துவத்தை இல்லாதொழிக்கின்றோம்'' என்ற சாக்குபோக்குகளின் கீழ், நாட்டின் தொழில்துறை சட்டங்களை மாற்றவும் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. வேலை நேரத்தின் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன, கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் தாய்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்பட உள்ளன மற்றும் மாற்று ஏற்பாடுகளைச் செயல்படுத்துவது எளிதாக்கப்பட இருக்கிறது. நீண்டகாலப்போக்கில், குறைந்த மற்றும் உயர்ந்த அனைத்து சம்பளங்களுக்கும் ஒரே சீராக ஒருமட்ட வரி (flat tax) என அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது. இது சமூகத்தை ஒட்டுமொத்தமாக சுரண்டி பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குவதற்கு வழி வகுக்கும்.

இதுபோன்ற கொள்கைகளுக்கு தற்போது தொழிலாளர்கள் தங்களின் கோபத்தை காட்டி வருகிறார்கள். இலாப கொள்கைக்காக வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் அடிபணிய செய்வதை ஏற்றுக் கொள்ள அவர்கள் இனியும் தயாராக இல்லை. சமீபத்திய வாரங்களில், தபால்துறை தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதிய சம்பளத்தை வலியுறுத்து வேலைநிறுத்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களுக்கு முன்னர், சுரங்க தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுங்க அதிகாரிகளும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் தற்போது தங்களின் சொந்த நடவடிக்கையைத் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இவற்றில் எதுவும் வெற்றிகரமான தீர்வுக்கோ அல்லது குறைந்தபட்சம் பணவீக்கத்தை சமாளிப்பதற்கும், வறுமை வாழ்விலிருந்து தொழிலாளர்களை மீட்டெடுக்கும் சம்பள உயர்வுக்கோ எடுத்துச் செல்லவில்லை.

தொழிலாளர்களுக்கு முன்னிருக்கும் முக்கிய தடை என்பது முதன்மை தொழிற்சங்க கூட்டமைப்புகளே ஆகும். முன்னாள் ஸ்ராலினிச அரசு தொழிற்சங்கமான OPZZ (அனைத்து போலந்து தொழிற்சங்களின் கூட்டணி) மற்றும் கூட்டொருமை தொழிற்சங்க இயக்கம் (Solidarity) ஆகிய இரண்டும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுவதற்கு பதிலாக போலந்து அரசை ஸ்திரப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு இடையில் முதலாளித்துவத்தை மீண்டும் நிறுவுவதில் Solidarity தொழிற்சங்க இயக்கத்தின் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். போலாந்து தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான நலன்களுக்கான OPZZ ஒருபோதும் முன்நிற்கவில்லை. இரண்டு தொழிற்சங்க இயந்திரங்களும் அரசாங்க இயந்திரத்துடன் நெருங்கிய உறவுகள் கொண்டுள்ளன என்பதுடன் சமீபத்திய அரசாங்கங்களின் பங்கெடுத்துக்கொண்டுள்ளன. தற்போதைய வேலைநிறுத்த பிரச்சனைகளில், தனி வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களை படிப்படியாக விலை பேசவும் தொழிற்சங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன. போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் பொதுத்துறை தொழிலாளர்கள் என்பதுடன் அவர்களின் பொதுவான ஒரே தொழில்வழங்குனர் டுஸ்க் அரசாங்கமே ஆகும்.

தொழிற்சங்கங்களுக்கும் தொழில்வழங்குனர்களுக்கு இடையிலான நெருங்கிய உறவு ஏற்கனவே தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கை குறைத்து விட்டிருக்கிறது. கடந்த 20 வருடங்களில், Solidarity 90 சதவீத அதன் உறுப்பினர்களை இழந்திருக்கிறது. OPZZ பொறுத்த வரையிலும் கூட அதேபோன்ற சூழ்நிலை உள்ளது. தொழிலாளர்கள் சுயாதீனமான வேலைநிறுத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது அதிகரித்துள்ளது அல்லது அவர்கள் சிறு தொழிற்சங்கங்களின் தலைமையை ஏற்கிறார்கள். சிலேசியன் டிராம் சாரதிகளின் விடயத்திலும் மற்றும் கடந்த ஆண்டு முடிவில் பட்ரிக் சுரங்கத்தை ஆக்கிரமித்த தொழிலாளர்கள் விடயத்திலும் கூட இதுவே நடந்தது.

பட்ரிக் சுரங்க விடயத்தில், OPZZ மற்றும் Solidarity இயக்கங்களின் துணை இல்லாமலேயே சராசரி சுரங்க தொழிலாளர்களின் சம்பளத்திற்கு இணையாக கூலி உயர்வை கொண்டு வர வேண்டுமென தொழிலாளர்கள் தங்கள் சுரங்கத்தை ஆக்கிரமித்து சுயேட்சையாக போராட்டத்தைக் கையில் எடுத்தனர். OPZZ மற்றும் Solidarity இயக்கம் இரண்டும் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துடன், வேலைநிறுத்தத்தை உடைக்க வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களையும் ஏற்பாடு செய்ய முனைந்தன.

எவ்வாறிருப்பினும், பெரிய தொழிற்சங்கங்கள் இல்லாமல் சுயேட்சையாக தங்களால் போராட முடியும் என பட்ரிக் சுரங்க தொழிலாளர்கள் மட்டுமின்றி போலந்து தொழிலாளர்கள் அனைவரும் எடுத்துக்காட்டினார்கள். இந்த சமூக சூழ்நிலையில், அதன் வெற்றி குறைந்தளவே இருப்பினும், இந்த பிரச்சனை பொதுமக்களின் கவனத்தைக் கணிசமான அளவு ஈர்த்தது. குறிப்பாக, அந்த போராட்டம் எதிர்வரவிருக்கும் மோதல்களின் தொழிற்சங்கங்களால் எடுக்கப்படும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது.

அரசுடன் நெருங்கி செயல்பட்டதன் மூலமாகவும், பொது ஒழுங்கை உறுதிப்படுத்த அரசின் கைகளாக செயற்பட முடியும் என்பதை காட்டியதன் மூலமும் OPZZ மற்றும் Solidarity இயக்கம் அந்த பிரச்சனைக்கு தமது பிரதிபலிப்பு காட்டின. இவ்வாறு, வேலைநிறுத்த உரிமை தொடர்பான அரசாங்கத்தின் ஒரு வரைவு மசோதாவிற்கு இரண்டு தொழிற்சங்கங்களின் தலைவர்களும் (ஒரு பகுதியாகவேனும்) ஆதரவளிக்கிறார்கள். தற்போது ஒரு சட்டப்பூர்வ வேலைநிறுத்தத்தை நடத்த ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்களில் 25 சதவீதத்தினராவது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இந்த எண்ணிக்கை புதிய சட்டத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அதே நேரத்தில், நிறுவனத்தில் குறைந்தபட்சம் 33 சதவீத தொழிலாளர்களைத் தங்கள் பக்கம் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே, சம்பள பேச்சுவார்த்தைகளில் அனுமதிக்கப்படும்.

தற்போது, போலாந்து தொழிலாளர்களில் 15 சதவீதத்தினர் மட்டுமே சங்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் பல்வேறு தொற்சங்கங்களுக்கு இடையே சிதறி இருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறதென்றால், இந்த புதிய சட்டம் நடைமுறையில் வேலைநிறுத்தங்களுக்கு தடைவிதிக்கும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அந்த இரண்டு முதன்மை கூட்டமைப்புகளை சார்ந்து தான் எவ்வித எதிர்கால வேலைநிறுத்த நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் சாத்தியப்படக்கூடும். பட்ரிக்கில் நடந்தது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படலாம்.

முதன்மை தொழிற்சங்கங்கள் வெளிப்படையாகவே வேலைநிறுத்தங்களை எதிர்க்கின்றன என்பதுடன் சிறு சங்கங்களில் ஒருங்கிணைந்துள்ள தொழிலாளர்கள் மீதும், ஒருங்கிணையாத அடுக்குகளில் உள்ள தொழிலாளர்கள் மீதும் கட்டுப்பாட்டை உருவாக்க அரசாங்கம், போலீஸ் மற்றும் பொது நீதிமன்றங்களுடன் இணைந்து செயலாற்றுகின்றன. "தொழிற்சங்கங்கள் உடைவதை" தடுக்கவும், "பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்களை" வலுப்படுத்தும் ஒரு முறைமையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு OPZZ தனது ஆதரவை வெளியிட்டது.

தற்போதைய சமூக சூழலில், வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்கும் திட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் யுத்த அறிவிப்பாகவே இருக்கும். டோனால்டு டுஸ்க் உழைக்கும் மக்கள் மீதான ஓர் ஒடுக்குமுறைக்கு தயாராகிறார். அதில் போலீஸின் முழு படையை அல்லது அதற்கும் கடுமையான முறைமைகளைக் கையாள அவரின் அரசாங்கம் தயாராகி வருகிறது. தன்னுடன் இணைந்து நிற்கும் OPZZ மற்றும் Solidarity அதிகாரத்துவங்களுடன், தமக்கு முன்னால் பதவியில் இருந்த கசின்ஸ்கி சகோதரர்களால் உருவாக்கப்பட்ட அரசு இயந்திரங்களின் முழு அதிகாரங்களையும் பயன்படுத்த டுஸ்க் தயாராக உள்ளார்.

இந்த மோதலுக்கு தொழிலாளர்கள் எந்த அளவு தயாராக இருக்கிறார்கள் என்பதையே அனைத்தும் சார்ந்திருக்கிறது. போர்க்குணமிக்க நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களின் வீராவேச போராட்டங்களால் போலாந்தின் வரலாறு நிரம்பியுள்ளது. ஆனால் ஆளும் மேற்தட்டுக்கள் தொழிலாளர் இயக்கங்களை நிராயுதபாணி ஆக்கவும், தங்களின் சொந்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்ட நிகழ்வுகளாலும் கூட அது நிரம்பியுள்ளது. 1981 இல், ''சுய-கட்டுப்பாட்டு புரட்சி'' என்று அழைக்கப்பட்ட யாசெக் குரோனின் கோட்பாட்டின் அடிப்படையில், Solidarity தலைவர்கள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு சவால் விட மறுத்ததுடன் இராணுவச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வழியையும் திறந்து விட்டார்கள். 1989 இல் ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்திற்கு அழைப்பு விடுத்து தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் இயக்கத்தை இதே குழுக்கள் தான் முதலாளித்துவ மறுசீரமைப்பிற்கு திசை திருப்பி விட்டு, தொழிலாளர்கள் உரிமைகளின் மீதும் இவை இடைவிடாத தாக்குதல்களுக்கு வழியமைத்தன.

இந்த அனுபவங்களின் அடிப்படையில், பல தொழிலாளர்கள் பழைய அதிகாரத்துவங்களுக்கு புறமுதுகு காட்டியதுடன் மாற்று வழியைத் தேட தொடங்கியுள்ளனர். தீவிர தேசியவாத மற்றும் வலதுசாரி அடித்தளத்தில் 1990 களில் உருவாக்கப்பட்ட "ஆகஸ்டு 80" போன்ற சிறு தொழிற்சங்கங்களும் சமீபத்தில் இடதுபக்கம் மாற்றம் காணத் தொடங்கியுள்ளன என்பதுடன் கொஞ்சம் செல்வாக்கைப் பெறவும் தொடங்கியுள்ளன. ஆனால் வெறும் தொழிற்சங்கங்களை மாற்றுவதால் மட்டும் போதாது. OPZZ மற்றும் Solidarity இரண்டின் அரசியலை அவர்களின் ஊழல்மிக்க தலைமை அல்லது அதிகாரத்துவ கட்டமைப்புகளின் அடிப்படையில் மட்டும் விளக்கி விட முடியாது. தொழிற்சங்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது ஒரு சர்வதேச விடயம் என்பதுடன் அது ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது.

யுத்தம் மற்றும் இராணுவவாதத்தின் மறு-வெளிப்பாடு மற்றும் அமெரிக்காவின் குறைந்த பிணையுள்ள அடைமான ஊழலால் விரைவுபடுத்தப்பட்ட அதிகரிக்கும் நிதி பின்னடைவு ஆகியவை முதலாளித்துவ அமைப்பின் தீவிர நெருக்கடிக்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற நிலைமைகளில் ஒரு தனித்த தொழிற்சங்க முன்னோக்கு முன்கூட்டியே தோல்விக்குரியதாய் கருதப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு இடையிலான ஒவ்வொரு பிரச்சனையும் உடனடியாக ஓர் அரசியல் பரிமாணத்தைக் எடுக்கின்றன. இதுபோன்ற பிரச்சனைகளின் அடியில், இலாப விஸ்தரிப்பு அடிப்படையில் சமூகம் ஒழுங்கமைக்கப்படவேண்டுமா அல்லது பெருமளவிலான மக்களின் நலன்களை முன்னிறுத்திய அறிவுஜீவித்தனமான பொருளாதார திட்டங்களின் அடிப்படையில் சமூகம் அமைக்கப்பட வேண்டுமா என்ற பிரச்சனை தான் இருக்கிறது. ஏனென்றால் முதலாளித்துவ அமைப்புக்குள் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை அதிகரிக்கும் கொள்கையின் அடிப்படையில் தான் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவை அவ்வமைப்பு நெருக்கடிக்குள்ளாகும் காலகட்டத்தில் தாங்களாகவே ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்ளும்.அதாவது முதலாளித்துவத்தின் பக்கத்திற்கு சென்றுவிடும்.

அதே வேளையில், உற்பத்தியின் பூகோளமயமாக்குதல் என்பது சந்தையை தேசிய வரைமுறைக்குள் ஒழுங்கமைப்பதை பரவலாக இல்லாதொழித்துள்ளது. தொழில்வழங்குனர்கள் குறைந்த காலகட்டத்தில் தேசிய எல்லைகளை தாண்டி தங்களின் உற்பத்தியை மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலைமையின் கீழ் தொழிலாளர்கள் தங்களின் உயர்ந்த கூலி மற்றும் நல்ல பணி நிலைமைகளுக்கான போராட்டங்களுக்காக பிற நாடுகளில் உள்ள தங்களின் தொழிலாள வர்க்க தோழர்களை நேரடியாக சார்ந்திருக்கிறார்கள். தொழிற்சங்கங்கள் ஆரம்பத்திலிருந்தே தேசிய அரசமைப்பினுள்ளேயே வேரூன்றியிருந்தன. தேசிய வருமானத்தில் பெரிய பங்கை தொழிலாளர்களுக்கு அளிப்பதற்கான உத்தரவாதத்தை வழங்குவதும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கும் மூலதனத்திற்கும் இடையிலான முரண்பாட்டை குறைப்பதே அவர்களின் முக்கிய இலக்காகும். தேசிய அரசால் தேசிய வருமானத்தின் தலைவிதியை தீர்மானிக்க முடியாத நிலை அதிகரித்திருப்பதால், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அரசிற்கு இணக்கமாக செல்வதன் மூலம் பிரதிபலிப்பைக் காட்டியுள்ளன.

அனைத்திற்கும் மேலாக தொழிலாளர்களுக்கான ஒரு சர்வதேச மூலோபாயத்தின் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது. அதே வேளையில், போலந்து வரலாற்றிலிருந்தும் பல பாடங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முந்தைய போராட்டங்களில் தொழிலாளர்கள் எது இல்லாதிருந்தது என்றால், ஸ்ராலினிச ஆட்சி மற்றும் முதலாளித்துவ மறுசீரமைப்பு ஆகிய இரண்டிற்கும் சவால் விடும் ஒரு அரசியல் முன்னோக்காகும். யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோசலிச தத்துவங்களை மோசமாக துஷ்பிரயோகம் செய்ததுடன், அதன் சொந்த சர்வாதிகாரத்தை சமூகத்தின் மீது திணித்தது. இதற்கான ஒரே தீர்வு சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் அதிகாரத்தை தூக்கி எறியும் ஓர் அரசியல் புரட்சி மட்டுமே ஆகும். 1981 மற்றும் 1989 ஆகிய வருடங்களில் உருவான அரசியல் நெருக்கடியானது, ஒரு சிறுபான்மையினரின் இலாபங்களை பாதுகாக்கும் அடிப்படையில் முதலாளித்துவ நலன்களை மறுபங்கீடு செய்துகொள்ள அவர்களின் கைகளில் சமூக சொத்துக்களை ஒப்படைப்பதற்கு பதிலாக உண்மையான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பதற்கான ஒரு முன்னோக்கே தேவையாக இருந்தது.

டுஸ்க் அரசாங்கத்துடன் வளர்ந்து வரும் போராட்டங்கள் முக்கியமாக இந்த கேள்வியைச் சுற்றியே சுழன்று வருகிறது. அவர்கள் வெறும் தீவிரமான தொழிற்சங்க போராட்டம் அல்லது ஒரு தேசிய முன்னோக்கின் அடிப்படையில் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது. முதலாளித்துவ மறுசீரமைப்பினால் ஏற்படும் அழிவுக்குரிய விளைவுகள் மற்றும் இலாப அதிகரிப்பிற்கான இரும்பு சட்டங்களுக்கு சமூகத்தின் அனைத்து தேவைகளையும் அடிபணிய செய்வது ஆகியவற்றை ஒரு சர்வதேச சோசலிச கட்சியை கட்டமைப்பதன் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். இதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் நோக்கமாகும். வாசகர்கள் எங்கள் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொண்டு போலந்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவை உருவாக்க உதவுமாறு நாங்கள் அழைப்புவிடுகின்றோம்.