World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

More high-level threats against the Sri Lankan media

இலங்கை ஊடகங்களுக்கு எதிராக மேலும் உயர்மட்ட அச்சுறுத்தல்கள்

By Sarath Kumara
2 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஜூன் 15 சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில், கொழும்பு ஊடகங்களுக்கு எதிரான புதிய தொல்லைகொடுக்கும் அச்சுறுத்தலுக்கு சமமான கருத்தை வெளியிட்டார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் விமர்சித்து கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் "பயங்கரவாதத்திற்கு" உதவுவதாக அவர் ஊடகங்களை கண்டித்தார்.

பொதுநலவாய நாடுகளின் சிறிய மாநாடு ஒன்றுக்காக லண்டனில் இருந்த போது இலங்கை பத்திரிகைக்கு இராஜபக்ஷ தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இராணுவ ரீதியில் [புலிகளை] பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை கீழறுக்கும் விதத்தில் புலிகளுக்கு நன்மை அளிக்கக் கூடிய தகவல்கள் மற்றும் விபரங்களை வெளியிட வேண்டாம்" என அவர் ஊடகங்களைக் கோரினார். புலிகளின் ஆய்வாளர்கள் "இராணுவத்தின் பலத்தையும் மற்றும் பலவீனத்தையும் பற்றிய ஒரு ஒன்றுபடுத்தப்பட்ட சித்திரத்தை அமைத்துக்கொண்டு நடவடிக்கைகளை முன்கூட்டி எதிர்கொள்வதற்கு" இந்தத் தகவல்களை பயன்படுத்திக்கொள்வர் என அவர் கூறிக்கொண்டார்.

எவ்வாறெனினும், இராஜபக்ஷவின் கூற்றுக்கள் முட்டாள்தனமானவையாகும். இராணுவ முன்னரங்குகளில் இருந்து செய்தி சேகரிப்பதை அரசாங்கம் அனுமதிக்காததோடு இராணுவத் தளங்களுக்குச் செல்லும் அல்லது இராணுவத்தினருடன் பேசும் எந்தவொரு பத்திரிகையாளர் தொடர்பாகவும் அது கவனமாக விசாரித்தறிகின்றது. ஏப்பிரலில் கடைசியாக முகமாலையில் ஏற்பட்ட இராணுவப் பின்னடைவை அடுத்து, காயமடைந்த சிப்பாய்களுடன் பத்திரிகையாளர்கள் பேசுவதை தவிர்ப்பதன் பேரில் கொழும்பில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கூட இராணுவத்தினரும் பொலிசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெருமளவில் கொழும்பு ஊடகங்கள் இராஜபக்ஷவின் புதிய யுத்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் உடன்பிறப்புக்களைக் கொல்லும் மோதலை நியாயப்படுத்துவதன் பேரில் "புலி பயங்கரவாதிகளுக்கு" எதிராக இனவாத பகைமையை கிளறிவிடும் ஆர்வமான பிரச்சார வாகனங்களாக செயற்படுகின்றன. யுத்தத்தை அன்றி, அது முன்னெடுக்கப்படும் முறை மற்றும் உயர்மட்ட ஊழல் விவகாரங்களை கூட விமர்சிப்பதற்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத்தல்களை ஒரு சில ஊடகவியலாளர்களே எதிர்க்கின்றனர். கடந்த காலத்தில் நடந்தது போல் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் அழிவில் முடியுமோ என்ற அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள சில தட்டுக்கள் பீதிகொண்டுள்ளதை அவர்களின் கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.

யுத்தம் பற்றிய எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தையும் அடக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் முடிவெடுத்துள்ளமை, அதன் சொந்த ஆட்டங்கண்ட அரசியல் நிலைமையையும் மற்றும் யுத்தம் இழுபடும் நிலையில் பரந்த வெகுஜனங்கள் மத்தியில் மட்டுமன்றி இராணுவத்தினுள்ளும் வளர்ச்சிகண்டுவரும் அதிருப்தியையிட்டு அது கவலையடைந்திருப்பதையும் பிரதிபலிக்கின்றது.

ஜனாதிபதியின் சகோதரர் கோடாபய இராஜபக்ஷ செயலாளர் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் அண்மைய அறிக்கை ஒன்றிலும் இராஜபக்ஷவின் கருத்துக்கள் எதிரொலித்திருந்தன. ஜூன் 4ம் திகதி வெளியான அந்த அறிக்கை, செய்தி சேகரிப்பதில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் அக்கறை செலுத்தும் நான்கு பகுதிகளை சுட்டிக்காட்டியிருந்தது. அவை "இராணுவ நடவடிக்கைகள், பதவி உயர்வுத் திட்டங்கள், ஆயுதக் கொள்வனவு தொடர்பாக விமர்சிப்பதும் மற்றும் பாதுகாப்பு தகவல்களை பெற நன்னெறி சாராத முறைகளைப் பயன்படுத்துதல்" ஆகும்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு, ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் அதே போல் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" நியாயப்படுத்தும் புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்தை இராஜபக்ஷ அரசாங்கமும் பின்பற்றுகின்றது. இது போலவே, நாடு யுத்தத்தில் ஈடுபடும் அதே வேளை "பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மக்களை விடுவிக்க" இராணுவம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற காரணத்தால் அதனது ஜனநாயக விரோத வழிமுறைகள் அவசியம் என பாதுகாப்பு அமைச்சு பிரகடனம் செய்கின்றது.

உண்மையில், 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 2006 ஜூலையில் தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தூண்டிவிட்டது இராஜபக்ஷ அரசாங்கமேயாகும். 2007 நடுப்பகுதியில் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து வடக்குப் பிரதேசத்திற்குத் அது திரும்பியது. ஜனவரியில் அரசாங்கம் பாசாங்குகளை கைவிட்டுவிட்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக கிழித்தெறிந்தது.

எவ்வாறெனினும், யுத்தம் திட்டமிட்டவாறு முன்செல்லவில்லை. இந்த ஆண்டின் முடிவில் புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் இராணுவம் கைப்பற்றும் என்ற உறுதியான நம்பிக்கை அறிகுறிகள் முழுமையாக கைவிடப்பட்டுள்ளன. உயர்ந்த பாதுகாப்புச் செலவு ஒரு பக்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தில் இடைவிடாமல் அதிகரிக்கும் பணவீக்கம், உழைக்கும் மக்கள் மத்தியில் பரந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னரங்கு பகுதிகளில் இருந்து இடைவிடாது வந்துகொண்டிருக்கும் சடலப் பொதிகளால் மேலும் குவிந்துபோயுள்ளது. ஆயுதக் கொள்வனவில் மோசடி, பதவி உயர்வுகளில் பக்கச் சார்பு மற்றும் அற்பமான உபாயங்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு கசிகின்றமை அதிகாரிகள் மட்டத்தில் ஆழமான கவலைகளை பிரதிபலிக்கின்றன. அரசாங்கத்தின் பாராளுமன்றப் பெரும்பான்மை ஸ்திரமற்ற மற்றும் துண்டு துண்டாய்போன கட்சிகளின் கூட்டணியில் தங்கியிருக்கின்றது.

இதன் விளைவாக, அரசாங்கத்தின் ஒரு கொள்கையான யுத்தம் பற்றி எந்தவொரு விமர்சனத்தையும் இராஜபக்ஷவால் சகித்துக்கொள்ள முடியாது. "யுத்த முயற்சிகளின் வெற்றிக்கு வெகுஜன ஆதரவு தேவை... பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மற்றும் ஆயுதப் படை உறுப்பினர்கள் தொடர்பாக ஆதாரமற்ற விமர்சனங்களை செய்வதன் மூலம் இராணுவத்துக்கான வெகுஜன ஆதரவை குறைக்க முயற்சிப்பதானது பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாகும்" என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை எச்சரித்துள்ளது.

எண்ணெய் மற்றும் உணவு விலை அதிகரிப்புக்கு எதிரான வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் தேசப்பற்று அல்லாதவை என முத்திரை குத்தப்படுகின்றன. ஜூன் 11 மற்றும் 12ம் திகதிகளில் ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி எதிர் நடவடிக்கையை முன்னெடுத்த போது அரசாங்கம் அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் மூடியது. வளர்ச்சிகண்டுவரும் யுத்த நிலைமைகளின் கீழ் இந்தப் போராட்டம் மாணவர்களுக்கு "பாதுகாப்பு அச்சுறுத்தலை" ஏற்படுத்தியிருப்பதாக அது கூறிக்கொண்டது.

ஊடகங்கள் குறிப்பாக இலக்குவைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அமைச்சு அக்கறை செலுத்துவது போல், "நன்னெறியற்ற வழிமுறைகள்" என்பது இராணுவத்தின் சொந்த பிரச்சாரத்தை சொற்பிறழாமல் எழுதப்படாத செய்தியும் மற்றும் சுயாதீனமாக சேகரிக்கப்பட்ட செய்திகளுமே ஆகும்.

அந்த வகையில், சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு பக்க எழுத்தாளர் இக்பால் அத்தாஸ், உக்ரெயினில் இருந்து மிக் ஜெட் விமானங்களை கொள்வனவு செய்ததில் இராஜபக்ஷவின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட உயர் மட்ட மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டமையை அடுத்து, உடனடியாக அவருக்கான பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதோடு அரசாங்கத்திற்கு சார்பான குண்டர்கள் அவரை சரீர ரீதியில் அச்சுறுத்தினர். அத்தாஸ் உடனடியாக தலைமறைவானதோடு வழமையாக எழுதும் பக்கத்தையும் எழுதாமல் விட்டுவிட்டார்.

கடந்த மாதம் நேஷன் பத்திரிகையின் துணை ஆசிரியரான கீத் நொயர், ஆயுதக் குழு ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவலையில் அவரது வீட்டுக்கு அருகில் வீசப்பட்டுக் கிடந்தார். பதவி உயர்வு மற்றும் பட்டங்களில் பக்கச்சார்பு காட்டியமைக்காக இராணுவத் தளபதியை விமர்சித்து செய்தி எழுதியமையே இந்தத் தாக்குதலுக்கான வெளிப்படையான காரணமாகும். நொயரைக் கடத்தியவர்கள், அவர் இராணுவத்தில் இருந்து எவ்வாறு தகவல்களைப் பெறுகின்றார் என்பதையே தெரிந்துகொள்ள விரும்பினர்.

நொயரோ அல்லது அத்தாசோ யுத்தத்தை எதிர்ப்பவர்கள் அல்லர்.

சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன.

* மே 27ம் திகதி, இராணுவச் சீருடை அணிந்த ஆயுதபாணிகள் இலங்கை பத்திரிகை நிறுவனத்திற்கு வந்து ஆணையாளர் உட்பட ஊழியர்கள் அனைவரதும் பெயர்களைக் கேட்டனர். அவர்களது அடையாளத்தைக் கோரியபோது, இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரி என ஒரு கோப்ரல் தெரிவித்தார்.

* மே 27 ஊடகவியலாளர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் இரு தலைவர்களான சனத் பாலசூரிய மற்றும் போதல ஜயந்தவுக்கும் கட்டளை அனுப்பிய பாதுகாப்புச் செயலாளர் இராஜபக்ஷ, இராணுவத்தை விமர்சிக்க வேண்டாம் என எச்சரித்தார். இராணுவத்தின் "பெருமதிப்பு வாய்ந்த" தளபதியை இழிவுபடுத்தும் எவருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் மறைமுகமாக சாடை காட்டினார்.

* மே 28 அன்று, சிரச, சக்தி மற்றும் எம்.டி.வீ. தொலைக்காட்சி வலையமைப்பைச் சேர்ந்த யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர் பி. தேவகுமார், வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள நகரான நாவாந்துரையில் வைத்து கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

* மே 29 அன்று, சிங்கள நாளிதழான திவியன பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் சிரிமெவன் கஸ்தூரியாராச்சியை குண்டர் குழு ஒன்றை சரீர ரீதியில் அச்சுறுத்தியதோடு இராணுவத்தைப் பற்றியும் யுத்தத்தைப் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டாம் என எச்சரித்தது. இந்தக் கும்பல் அதிகாலை 4 மணி அளவிலேயே அவரது வீட்டுக்குள் பாய்ந்து விழுந்தது.

* மொன்டேஜ் என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியரும் பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட்ட செய்திகளில் நேஷன் பத்திரிகைக்கு பங்களிப்பு செய்பவருமான பெட்ரிகா ஜேன்ஸ் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். கடந்த ஜூன் 15ம் திகதி கூட, அவரது "தேவையற்ற வேலையை" தொடர வேண்டாம் என அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

* ஜூன் 17 அன்று, லங்கா-ஈ- நியூஸ் பிரதம ஆசிரியருக்கு கட்டளை அனுப்பிய குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பாதுகாப்புச் செயலாளரை விமர்சித்து பெப்பிரவரி 21 எழுதிய செய்தி தொடர்பாக அவரை எச்சரித்தது.

* ஜூன் 30 அன்று, முன்நாள் டீ.என்.எல். செய்தி ஆசிரியரும் தற்போது இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் ஊழியருமான நாமல் பெரேரவையும் மற்றும் அவரது நண்பரான கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக அதிகாரி மஹேந்திர ரட்னவீரவையும் குண்டர்கள் தாக்கினர். பெரேராவும் ரட்னவீரவும் நாரஹேன்பிட்டிக்கும் கிருலப்பணைக்கும் இடையில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போதே குண்டர்கள் அவர்களை வழிமறித்து தாக்கினர். இந்த சம்பவத்தை அடுத்து இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

உருவாகிக்கொண்டிருப்பது என்னவெனில், முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு பொலிஸ்-அரசே ஆகும். தமது கிரிமினல் யுத்தத்தை முன்னெடுக்கும் பெயரில், இராஜபக்ஷ அரசாங்கமானது பாதுகாப்புப் படைகளின் உயரடுக்குகளுடனும், அரச அதிகாரத்துவத்துடனும் சேர்ந்துகொண்டு எந்தவொரு எதிர்ப்பையும் தேசப்பற்று அற்றது எனக் கருதுவதோடு அவற்றை நசுக்குவதற்காக மேலும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளை நாடுகின்றது.