World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: A socialist program to fight for wages and conditions

இலங்கை: சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்

By the Socialist Equality Party (Sri Lanka)
8 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 10ம் திகதி துறைமுகம், பெருந்தோட்டம், போக்குவரத்து, பெற்றோலியம், மின்சாரம், கல்வி, சுகாதாரத் துறை மற்றும் தனியார் கம்பனிகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள வேலை நிறுத்தத்தால் இலங்கையில் பெரும் பகுதி ஸ்தம்பிதம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்டமான விலைவாசி அதிகரிப்புகள் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமையை சீரழித்துள்ள நிலைமையில், தொழிற் சங்கங்கள் 5,000 ரூபா சம்பள உயர்வையும், அதே போல் பணவீக்கத்திற்கேற்ற கொடுப்பனவையும் மற்றும் பஸ், ரயில் கட்டணங்களை குறைக்குமாறும் கோருகின்றன.

எந்தவொரு குறிப்பிடத்தக்க சலுகைகளையும் வழங்க மறுக்கும் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் மத்தியில் சம்பள உயர்வுக்கு செலவிட முடியாது என வலியுறுத்துகிறது. புதுப்பிக்கப்பட்ட மோதல்களின் சுமைகளை உழைக்கும் மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட மோதல்களால் கடந்த இரு ஆண்டுகளாக மேலதிகமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருப்பதோடு இலட்சக்கணக்கான அகதிகளையும் உருவாக்கிவிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தக்காரர்கள் தொடர்பாக "கடுமையாக செயற்படுவதாக" ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

இராஜபக்ஷவை சவால் செய்வதற்குப் பதிலாக, தொழிற்சங்கங்கள் சமரசத்திற்குச் செல்லவே செயற்படுகின்றன. உடன்படிக்கை ஒன்று காணப்படுமானால் வேலை நிறுத்தத்துக்கு முடிவுகட்ட தாம் தயாராக இருப்பதாக அவை வலியுறுத்துகின்றன. அரசாங்கத்துடன் அரசியல் ரீதியில் மோதிக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்கள், ஜூலை 10ம் திகதி அன்று ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தமது கோரிக்கைகளை முன்னெடுப்பது எவ்வாறு என்பது பற்றி உறுப்பினர்கள் எந்தவிதத்திலும் கலந்துரையாடுவதை தடுக்கவும் தமது கட்டுப்பாட்டை பேணிக்கொள்ளவுமே தொழிற்சங்கத் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஒருமுகப்படுத்தப்பட்ட பிரச்சாரமொன்றை முன்னெடுப்பதற்கான தொழிற்சங்கங்களின் இயலாமை, இனவாத யுத்தத்திற்கு அவர்கள் வழங்கும் ஆதரவில் இருந்தே நேரடியாக ஊற்றெடுக்கின்றது. வேலை நிறுத்தத்தை நடத்துவதில் முன்னணியில் உள்ள தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்ததாகும். 2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதிலும் புலிகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க அவரை தூண்டிவிட்டதிலும் ஜே.வி.பி. பிரதான உபகரணமாக செயற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அங்கமாக இல்லாத போதிலும், கடந்த நவம்பரில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் உட்பட பிரதான விவகாரங்கள் அனைத்துக்கும் ஜே.வி.பி. ஆதரவளித்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில், பிரமாண்டமான பாதுகாப்புச் செலவுகளுக்காக சேவைகள் மற்றும் தொழில்களில் மேலும் கொடூரமான வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க ஜே.வி.பி. எடுத்த முடிவு, வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து வருவதால் பாதிக்கப்பட்டுள்ள ஜே.வி.பி. யின் ஆதரவுத் தளம் மேலும் சீரழிந்து போவதை தடுக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியேயாகும். யுத்தம் பற்றிய பிரச்சினையில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியாக, அரசாங்கம் வழங்கிய 1,000 ரூபா சம்பள உயர்வை நிராகரித்த ஜே.வி.பி, ஜூலை 4ம் திகதி எழுதிய கடிதத்தில் புதிய அரசியல் கோரிக்கைகளை சேர்த்துள்ளது. தொழிற்சங்கங்களின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறையாக இருப்பதற்கு "இலஞ்ச ஊழலே" காரணம் என கூறிக்கொள்வதோடு தற்போதைய பிரமாண்டமான அமைச்சரவை உறுப்பினர்களையும் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர்களையும் குறைக்குமாறும், அதே போல் பொலிஸ், தேர்தல் மற்றும் நீதித் துறைகளுக்கு சுயாதீன குழுக்களை ஸ்தாபிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கோரிக்கையாக, எதிர்வரவுள்ள மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்குமாறும் ஜே.வி.பி. கோரியுள்ளது. இந்தத் தேர்தலில் ஜே.வி.பி.யின் வாக்குகள் பெருமளவில் சரிவது நிச்சயமாகும்.

ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவர் கே.டி. லால்காந்த சண்டே லீடர் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "இந்த நான்கு கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால், ஜூலை 10ம் திகதி வேலை நிறுத்தத்திற்கு முடிவுகட்ட முடியும். யுத்தத்திற்கு பெருமளவில் பணம் செலவாவதால் இந்த வேலை நிறுத்தம் யுத்த முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால், நாங்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் பணத்தை சேகரிக்க அரசாங்கத்திற்கு உதவும்." யுத்தத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதன் மூலம், தற்போதைய சம்பள கோரிக்கையைவிட மிகவும் குறைந்த மட்டத்திலான சமரசத்திற்குச் சென்று போராட்டத்துக்கு முடிவுகட்டியதற்கான பிரதியுபகாரமாக அரசியல் இலாபத்தை கட்சிக்குப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒரு மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு இப்போதே ஜே.வி.பி. களம் அமைத்துக்கொண்டிருக்கின்றது.

வளர்ச்சிகண்டுவரும் சர்வதேச பொருளாதார நெருக்கடியுடன் சேர்த்து தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் பொருளாதார சுமைகளுக்கு முக்கிய காரணம் அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தமே அன்றி அரசாங்கத்தின் ஊழல் அல்ல. கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், இராஜபக்ஷ அரசாங்கம் கடந்த ஆண்டை விட 2008ம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவை 166 பில்லியன் ரூபாய்களாக 20 வீதத்தால் அதிகரித்தது. இந்த தொகை, அரசாங்கத்தின் 750 பில்லியன் ரூபா மொத்த வருவாயில் 22 வீதத்துக்கும் அதிகமாகும். நலன்புரி சேவைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வெட்டிக் குறைத்தும், எண்ணெய் உட்பட மானியங்களை வெட்டிச் சரிப்பதன் மூலமும் மற்றும் அரசாங்கத்துறை தொழில்கள் மற்றும் ஊதியங்களில் சிறிய ஒழுங்குபடுத்தல்களை மட்டும் செய்வதன் மூலமும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை எதிர்ப்பது மற்றும் உழைக்கும் மக்களை பாதுகாப்பது பற்றி கூச்சலிட்டவாறே ஜே.வி.பி. இத்தகைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வாக்களித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் நவசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துகொண்டுள்ள எந்தவொரு தொழிற்சங்கமும் ஜே.வி.பி. யின் வேலைத்திட்டத்திற்கு மாற்றீடான ஒரு திட்டத்தை வகுக்கவில்லை. பழமைவாத யூ.என்.பி, விலைவாசி அதிகரிப்பு மீதான வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக்கொள்ள எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. மத்தியதர வர்க்க தீவிரவாத கருவியான நவசமசமாஜக் கட்சி, யுத்தத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட போதிலும், இப்போது எந்தவொரு விமர்சனமும் இன்றி யுத்தத்தின் பேரினவாத ஆதரவாளரான ஜே.வி.பி. உடன் இணைந்துகொண்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தால் யுத்தத்துக்கு முடிவுகட்டும் வேலைத்திட்டம் இன்றி மிகவும் அடிப்படையான கோரிக்கைகளுக்காக போராடுவது சாத்தியமற்றது என சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. இராஜபக்ஷவின் யுத்தத்தை சவால் செய்வதற்கு மாறாக, அதனோடு உடன்பட்டு உழைக்கும் மக்களின் செலவில் அவரது கோரிக்கைகளுக்கு அடிபணிந்த தொழிற்சங்கத் தலைவர்களால் துறைமுகம், பெருந்தோட்டம், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற பல பகுதிகளில் இருந்தும் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் போராட்டத்தில் குதித்த தொழிலாளர் பிரிவினர் விற்றுத் தள்ளப்பட்டனர்.

அண்மையில் நடந்த ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் புதிய உதாரணமாகும். திட்டமிடப்பட்ட சுகவீன விடுமுறைப் பிரச்சாரத்தை கீழறுக்கும் முயற்சியில், முன்னெப்போதும் இல்லாதவாறு நாடு பூராவும் பாடசாலைகளை இழுத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சாக்குப் போக்காக அரசாங்கம் உண்மையிலேயே யுத்தத்தை பயன்படுத்திக்கொண்டது. ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் கூட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ ஏற்பாடு செய்யாத நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவை கணிப்பதற்கு வழி இருக்கவில்லை.

ஜூன் 27 தொழிற்சங்கத் தலைவர்களுடனான கூட்டமொன்றில், அனைத்தும் யுத்தத்திற்காக கீழ்படுத்தப்படல் வேண்டும் என இராஜபக்ஷ மீண்டும் பிரகடனம் செய்தார். "கிழக்கைப் போல் வடக்கையும் பயங்கரவாதிகளின் [புலிகளின்] பிடியில் இருந்து விடுவிப்பதே எனது முதல் நோக்கம். எமது வீரப் படையினர் நாட்டை பாதுகாப்பதைப் போல் சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை," என அவர் தெரிவித்தார். எந்த வகையிலும் இராஜபக்ஷவை சவால் செய்யாத தொழிற்சங்கத் தலைவர்கள், விளைபயனுள்ளவாறு ஆசிரியர்களை அச்சுறுத்துவதை இலக்கக் கொண்ட அரசாங்கக் கதவடைப்புக்கான அவரின் நியாயப்படுத்தலுக்கு தாங்களாகவே அடிபணிந்துபோயினர். ஜூலை 10ம் திகதி வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் வேறுவிதத்தில் செயற்படுவார்கள் என நினைப்பவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வர்.

யுத்தத்திற்கு எந்தவொரு ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பும் இல்லாமையானது, பீதி மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலையொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பை இராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளது. தமது பொருளாதார நிலைமை சீரழிந்து வருவதற்கும் சேவைகள் பற்றாக்குறைக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களும் யுத்த முயற்சிகளை கீழறுப்பவர்கள் எனவும் "பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள்" எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றனர். அரசாங்கத்தைப் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் கூட, கேடு விளைவிக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது அதை விட மோசமான ஒன்றை சந்திக்கின்றன. தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் செயற்படும் இராணுவத்துடன் தொடர்புடைய கொலைப் படைகளால் நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்" அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தீவு பூராவும் ஜூலை 10ம் திகதி நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற உள்ளார்கள் என்ற உண்மை, தற்போதைய பொருளாதார நிலைமை தாங்கமுடியாததாகியுள்ளது என்பதற்கான அறிகுறியேயாகும். இலங்கையில் பணவீக்க வீதம் 30 வீதத்தை எட்டியுள்ளது. இது 2004ல் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும். ஒரு சில செய்வந்தர்களைத் தவிர, மக்களில் அனைத்துத் தட்டினரும் எண்ணெய், போக்குவரத்து மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் விலை ராக்கட் வேகத்தில் அதிகரிக்கின்ற நிலையில் தமது செலவை சமாளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்துவரும் சர்வதேச எண்ணெய் விலை நிச்சயமாக ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும் அதே வேளை, தெற்காசியாவிலேயே இலங்கையில் தான் பணவீக்கம் அதிகம் என்ற உண்மை, பிரமாண்டமான மற்றும் அதிகரித்துவரும் யுத்தச் செலவே பிரதான காரணி என்பதை சுட்டிக்காட்டுகின்றது. புலிகளுக்கு எதிரான அதன் இடைநிறுத்த முடியாத யுத்தத்தின் பேரில் இராணுவத்துக்கான எண்ணெய், துப்பாக்கி ரவைகள் மற்றும் குண்டுகளுக்கும் செலவிடுவதற்காக பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் வரம்பு மீறி அதிகரித்துள்ளன.

தற்போதைய தொழிற்சங்கத் தலைமைத்துவத்தின் கைகளில் விடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய வேலைநிறுத்த நடவடிக்கைகள் ஏதாவதொரு வழியில் தவிர்க்க முடியாமல் காட்டிக்கொடுக்கப்படும். தொழிலாளர் வர்க்கத்தின் பொது வேலை நிறுத்த இயக்கம் இன்றைய அரசாங்கத்தை மட்டுமன்றி முழு முதலாளித்துவ ஆட்சியையே சவால் செய்கின்றது என்பதை தற்போதைய பிரச்சாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளும் புரிந்துகொண்டுள்ளன. ஆகவேதான் அவர்கள் தயக்கத்துடன் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு ஆர்ப்பாட்டங்களையோ கூட்டங்களையோ ஏற்பாடு செய்யவில்லை. மற்றும் கடைசி நிமிடத்தில் அவர்கள் வேலை நிறுத்தத்தை இரத்துச் செய்யக்கூடும். தொழிலாளர் வர்க்கத்தின் அவலங்கள் பற்றி வாயடிக்கும் அதே வேளை, இந்தத் தொழிற்சங்கத் தலைவர்களும் அவற்றைச் சார்ந்த கட்சிகளும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவும், அதே போல் தமது சொந்த அரசியல் நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சிக்கின்றன.

சம்பளக் கோரிக்கைகளில் மட்டுப்படுத்தப்பட்ட சமரசத்திற்குக் கூட இடம் கிடையாது என இராஜபக்ஷ மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். வேலை நிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்கைளயும் தூண்டிவிட்ட எரியும் பொருளாதார நெருக்கடிகளுக்கு பதில் இல்லாத ஒரே காரணத்துக்காக 2006ல் அவரது அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்தது. தமது முன்னோடிகள் சகலரையும் போலவே, தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்த தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதற்கு இராஜபக்ஷ தயங்கவில்லை. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் எந்தவொரு சவாலையும் நசுக்கும் அதன் முயற்சியில், "தேசிய பாதுகாப்பு" மற்றும் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற பெயரில் வெளிப்படையான அடக்குமுறைகளை நாடுவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டாது.

தொழிலாளர்கள் தற்போதைய சூழ்நிலையை மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். தமது அடிப்படை உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்துக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கம் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்கான தமது சொந்த வேலைத் திட்டம் ஒன்றை வகுப்பது அவசியம். யுத்தம் கொடூரமானது, பெரும் துன்பங்களை அனுபவிக்க வழிவகுத்துள்ளது என்ற பரந்த அபிப்பிராயம் சந்தேகத்திற்கிடமின்றி நிலவிய போதிலும், அது மட்டும் போதாது. இதே வர்க்க ஒடுக்குமுறைகளுக்கும் மற்றும் இதே துயர்மிகு வாழ்க்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுத்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு இடையில் இனப் பகைமைகளை தூண்டி விடுவதன் மூலம் முதலாளித்து ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் உபாயத்தை நீண்ட காலமாகவே சகல வகையறாக்களையும் சேர்ந்த இலங்கை அரசியல்வாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களின் பேரில் போராடுவதற்கான எந்தவொரு வேலைத் திட்டத்திற்கும் ஆரம்பப் புள்ளி, அனைத்து விதமான இனவாதம், வகுப்புவாதம் மற்றும் பேரினவாதத்தை நிராகரிப்பதே என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தமது சொந்த வர்க்க நலன்களின் பேரில் போராடுவதற்காக, மொழி, மத அல்லது இனப் பின்னணிகளைக் கருதாது ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர் வர்க்கத்தால் நகர்ப்புற வறியவர்களையும் கிராமப்புற வெகுஜனங்களையும் தமக்குப் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள முடியும்.

யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான முதல் நடவடிக்கை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோருவதே. கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளும், இந்தக் கோரிக்கையை புலிகளுக்கு உதவுவதற்கு சமமானது என்றும், ஆகவே அது தேசத் துரோகம் என்றும் பழித்துரைக்கின்றன. உண்மையில், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஏறத்தாழ இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமன்றி புலிகளுக்கும் எதிரான போராட்டத்தில் தெற்கில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு அத்தியாவசிமான முன் நிபந்தனை இதுவேயாகும். புலிகள் தமிழ் வெகுஜனங்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மாறாக, தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் நலன்களையே பாதுகாக்கின்றனர். இந்த தமிழ் முதலாளித்துவத் தட்டு, தமது சிங்கள சமதரப்பினருடன் மிகவும் நடுநிலையான ஒழுங்கை எதிர்பார்க்கின்றது.

உடனடி சம்பள உயர்வு மற்றும் சிறந்த நிலைமைகளுக்கான போராட்டமானது ஒரு சில செல்வந்தர்கள் மட்டுமே இலாபமடையும் சமூக அமைப்புக்கு முடிவுகட்டும் பரந்த சோசலிச முன்நோக்குடன் இணைக்கப்படல் வேண்டும். சமுதாயம் உச்சி முதல் அடி வரை மாற்றியமைக்கப்படுமாயின், உழைக்கும் மக்களால் உருவாக்கப்படும் செல்வம் ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்தை பெருக்குவதற்கு அல்லாமல், பெரும்பான்மை மக்களின் எரியும் சமூகத் தேவைகளை இட்டுநிரப்புவதற்கு பயன்படுத்தபட முடியும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச குடியரசுகளை ஸ்தாபிக்கும் பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச குடியரசை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை அமைக்க சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

இந்தக் கோரிக்கைகளில் எவையும் தற்போதைய தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளால் முன்னெடுக்கப்படுவதில்லை. தற்போதைய அரசியல் ஸ்தாபனத்துடன் தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டிப்போட சேவை செய்யும் இத்தகைய இயந்திரங்களில் இருந்து அரசியல் ரீதியில் முறித்துக்கொள்வது அவசியமானது. முதல் நடவடிக்கையாக, தற்போதைய பிரச்சாரத்தை தொழிற்சங்கத் தலைமைத்துவத்தின் கையில் இருந்து பறிப்பதற்கு, ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. நம்பிக்கைக்குரிய தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட இத்தகைய குழுக்கள், உழைக்கும் மக்களின் தேவைகளை இட்டு நிரப்பும் வகையில் வேலை நிறுத்தக் கோரிக்கைகளை அமைக்க வேண்டும். ராக்கட் வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க சம்பளத் தொகையை இரட்டிப்பாக்க வேண்டும் என அண்மையில் வெளியான ஆய்வு காட்டியுள்ளது. மிகவும் அடிப்படையில், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான அரசியல் வேலைத்திட்டம் பற்றிய சாத்தியமானளவு பரந்த கலந்துரையாடலை இத்தகைய குழுக்கள் ஆரம்பிக்க வேண்டும். இத்தகைய பணிகளை முன்னெடுக்க சோ.ச.க. அதன் முழு ஆதரவை உறுதிப்படுத்துகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியொன்று அவசியம். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, உலக சோசலிசப் புரட்சிக்கான முன்நோக்குக்காக உலகம் பூராவும் உள்ள அதன் சக சிந்தனையாளர்களுடன் இணைந்து போராடுகின்றது. நாம் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும், எமது வேலைத் திட்டத்தை அக்கறையுடன் கற்றுக்கொள்ளுமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய விண்ணப்பிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.