World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government spreads bomb scare to scuttle general strike

இலங்கை அரசாங்கம் பொது வேலை நிறுத்தத்தை தடுக்க குண்டுப் பீதியை பரப்புகிறது

By our correspondents
9 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம், நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் நாளை நடத்தவுள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை தடுப்பதற்கான வெளிப்படையான முயற்சியில் "பயங்கரவாத" பீதியை பரப்புகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த வாரம் தென் பகுதியில் குண்டுத் தாக்குதல்களை நடத்தவுள்ளதற்கான தகவல்கள் கிடைத்திருப்பதாக அது கூறிக்கொள்கின்றது.

திங்கட் கிழமை ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், "கறுப்பு ஜூலையை" குறிப்பதற்காக புலிகள் ஒரு பெரும் தாக்குதலை மேற்கொள்வர் என தெரிவித்தார் -நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்துக்கு வழிவகுத்த 1983 ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளே கறுப்பு ஜூலை எனக் குறிப்பிடப்படுகிறது. "இத்தகைய ஒரு நிலைமையில் தொழிலாளர்களை வீதிக்கு அழைப்பது பொருத்தமானதா? எங்களுக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதோடு அரச நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை" என அவர் தெரிவித்தார்.

எதிர்க் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) சார்ந்த தொழிற்சங்களால் முன்னெடுக்கப்படும் நாளைய வேலை நிறுத்தம், ரூபா 5,000 சம்பள உயர்வு கோரியும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும் மற்றும் பஸ், ரயில் கட்டணங்களை குறைக்கக் கோரியும் நடத்தப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக நிதி இல்லை எனக் கூறி இந்தக் கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.

இராஜபக்ஷவின் பிரமாண்டமான அமைச்சரவையின் இன்னுமொரு உறுப்பினரான ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமர்ந்திருந்தார். வேலை நிறுத்தத்திற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு பற்றி கேட்டபோது, "அது இரகசியமானது" என மட்டுமே அவர் தெரிவித்தார். நாட்டின் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வேலை நிறுத்தங்களை அடக்க அல்லது வேலை நிறுத்தக்காரர்களை தடுத்து வைத்திருக்க விரிவான அதிகாரங்களை அரசாங்கம் கொண்டுள்ளது. "சமூகத்தின் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்கு தொந்தரவு விளைவிக்கும் அல்லது அச்சுறுத்தல் விடுக்கும்" கைத்தொழில் நடவடிக்கைகளை தடை செய்ய அத்தியாவசிய சேவை கட்டளைகளை அமுல்படுத்துவதும் இதில் அடங்கும்.

ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. ஆகிய இரண்டும் புலிகளுக்கு எதிரான இனவாத மோதலுக்கு ஆதரவளிப்பதோடு அவசரகால அதிகாரங்களை புதுப்பிப்பதற்கு நேரடியாகவோ அல்லது வேறு வழியிலோ ஆதரவளித்து வருகின்றன. யுத்தத்தை உக்கிரமாக்க வக்காலத்து வாங்கும் பேரினவாத ஜே.வி.பி, ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டங்களை புதுப்பிப்பதற்கு வாக்களித்து வருகின்றது. வலதுசாரி யூ.என்.பி. சந்தர்ப்பவாத முறையில் வாக்கெடுப்பை பகிஷ்கரித்த போதிலும், இந்த கொடூரமான சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததே இல்லை.

ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் யாப்பா, யுத்தத்தில் இராணுவம் பெறும் வெற்றிகளை கீழறுப்பதற்காக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக தொழிற்சங்களை குற்றஞ்சாட்டினார். "பாதுகாப்புப் படைகள் இதுவரை பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகளை பின்தள்ளுவதற்கு எதிர்க் கட்சியில் உள்ள சில சக்திகள் விரும்புகின்றன," என அவர் பிரகடனம் செய்தார். இந்த குற்றச்சாட்டுக்கள், வேலை நிறுத்தம் செய்யும் தலைவர்களையும் மற்றும் எதிர்க் கட்சி அரசியல் வாதிகளையும் துரோகிகள் என முத்திரை குத்தி, ஏதேச்சதிகாரமான கைதுகளுக்கு வழியமைப்பதற்கு சமமானவையாகும்.

அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக, குறிப்பாக கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரதும் பொலிசாரினதும் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் பூராவும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தமது தேடுதல் வேட்டைகளை பாதுகாப்புப் படைகள் உக்கிரமாக்கியுள்ளன.

திங்களன்று வெளியான ஐலண்ட் பத்திரிகையில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் ஆணையாளர் லக்ஷமன் ஹலுகல்ல, வேலை நிறுத்தத்தால் ஏற்படுத்தப்படும் "எந்தவொரு பாதுகாப்பு சார்ந்த திடீர் சம்பவங்களையும் எதிர்கொள்ள நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்", எனத் தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் இலக்கு, "பயங்கரவாத தாக்குதல்கள்" மற்றும் "வேலைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை" தடுப்பதாகும் என ஹுலுகல்ல விசேடமாக சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் பிழையான தகவல் வழங்குவதையும் நாடியுள்ளது. அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கல்வி சார் தொழிற்சங்கங்கள் பங்கெடுக்க மாட்டா எனத் தெரிவித்துள்ளது. "பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும்" எதிர்க் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் எனத் தெரிவித்த ஆசிரியர்கள் தொழிற்சங்க அதிகாரியான நிஸ்ஸங்க பெர்ணான்டோ முன்னிலைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தார். உண்மையில், அரசாங்கத்திற்குச் சார்பான சில சிறிய ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து தூர விலகியுள்ளன.

அரசாங்கத்திற்குச் சார்பான ஐக்கிய தொழிற்சங்க முன்னணி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம், தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக வேலை நிறுத்தக்காரர்களை கண்மூடித்தனமாக கண்டனம் செய்கின்றது. இந்த வேலை நிறுத்தம் புலிகளுக்கு உதவி செய்கின்றது என்ற கூற்றை மீண்டும மீண்டும் கூறிய அந்த பிரசுரம்: "நாங்கள் நாட்டை பாதுகாக்கின்றோமா அல்லது புலிகளை பாதுகாக்கின்றோமா?" என கேட்கின்றது. இந்த முன்னணி, தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்த்து இன்று கொழும்பில் ஒரு ஆத்திரமூட்டல் மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும் மேல் மாகாண ஆளுனருமான அலவி மெளலானவும் இந்த வேலை நிறுத்தத்தை கண்டனம் செய்துள்ளார். வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள கட்சிகள் அனைத்தும் அவமானத்திற்குள்ளாகியுள்ளன, ஏனெனில், "அவர்கள் வடக்கில் தீர்க்கமான யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது தெற்கில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்" என மெளலானா தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்தில் முன்னணியில் உள்ள ஜே.வி.பி. தலைமையிலான தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யு.சி.), அரசாங்கத்தின் யுத்தச் சார்பு வாய்வீச்சுக்கு முழுமையாக அடிபணிந்துள்ளது. வேலை நிறுத்தம் யுத்த முயற்சிகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என பூசி மெழுகுவதற்கு இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 2005ல் இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஜே.வி.பி. அவரது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு ஆதரவளித்து வருவதோடு பிரமாண்டமான பாதுகாப்புச் செலவுக்கு நிதி ஒதுக்கிய வரவு செலவுத் திட்டம் உட்பட பிரதான விவகாரங்களில் அரசாங்கத்தை ஆதரித்துள்ளது.

என்.டி.யு.சி. சார்ந்த தொழிற்சங்கங்கள் திங்கட் கிழமையும் செவ்வாய் கிழமையும் கொழும்பில் பல இடங்களில் மறியல் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. இவை அனைத்தும் பெருமளவில் அடையாள நடவடிக்கைகளே. திங்கட் கிழமை, ஜே.வி.பி. சார்ந்த நான்கு தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்குச் சொந்தமான வெளியீட்டகமான லேக் ஹவுஸ்ஸுக்கு வெளியில் நடத்திய மறியல் போராட்டத்தில் நூறுக்கும் குறைவானவர்களே பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தவாறு, பிரதிநிதிகள் மட்டுமே இந்த போராட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

மறியல் போராட்டத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. யின் ரயில் தொழிற்சங்கத் தலைவர் சுமதிபால மானவடு, இந்த வேலை நிறுத்தம் யுத்தத்தை பாதிக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் பின்நோக்கி வளையவுள்ளன என்பதை தெளிவுபடுத்திவிட்டார். "நாங்கள் யுத்தத்தை எதிர்க்கவில்லை. அதற்கு நேரடியாக உதவி செய்தவர்கள் நாங்களே. நாங்கள் யுத்தத்திற்கு இரத்த தானம் செய்துள்ளோம். நாங்கள் யுத்தத்திற்காக ஒரு நாள் சம்பளத்தைக் கூட கொடுத்துள்ளோம். யுத்தத்திற்காக அனைத்தையும் அர்ப்பணிக்க நாம் தயார். ஒரு நாள் வேலை நிறுத்தம் யுத்தத்திற்கு தடங்கலாக இருக்கும் எனக் கூறுவது பொய். சனி, ஞாயிறு மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லையா?" என அவர் கேள்வி எழுப்பினார்.

வேலை நிறுத்தத்தின் அரசியல் தாக்கத்தை சுருக்குவதற்காக ஆரம்பத்தில் இருந்தே என்.டி.யு.சீ. செயற்பட்டு வந்துள்ளது. பெரும்பாலான தொழிலாளர்களைப் பொறுத்தளவில், இந்த வேலைநிறுத்தமானது -சம்பளமற்ற- அரசாங்க விடுமுறையைப் போன்றதாகும். இந்த கட்டத்தில், என்.டி.யு.சி. நாளைய தினம் ஊர்வலங்களுக்கு, கூட்டங்களுக்கு அல்லது மறியல் போராட்டங்களுக்குக் கூட அழைப்புவிடுக்கவில்லை. பணவீக்கம் 30 வீதத்தில் இருப்பதோடு நாளுக்கு நாள் வாழ்க்கையை சமாளிப்பதில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் போராடத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தம் கட்டுப்பாட்டை மீறும் சாத்தியத்தைப் பற்றி அரசாங்கத்தைப் போலவே ஜே.வி.பி. யும் கவலைகொண்டுள்ளது.

மானவடு வலியுறுத்தியது போல், ஜே.வி.பி. யுத்தத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசாங்கத்தின் அனைத்து வளங்களும் இராணுவச் செலவுக்காக அர்ப்பணிக்க வேண்டியுள்ள காரணத்தால் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை என்ற அரசாங்கத்தின் வலியுறுத்தல்களுக்கு ஜே.வி.பி. தலைமையிலான தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் அடிபணிந்து போயுள்ளன. நாட்டின் ஆகக் கூடிய பணவீக்கத்திற்கும் மற்றும் அரசாங்க சேவைகள் மற்றும் மானியங்கள் வெட்டுக்களுக்கும் பிரதான காரணியாக யுத்தத்திற்கான பிரமாண்டமான செலவே இருந்துகொண்டுள்ளது.

யுத்தத்தை எதிர்ப்பதற்கான ஒரு அரசியல் வேலைத் திட்டம் இன்றி, சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகள் உட்பட மிகவும் அடிப்படை உரிமைகளைக் கூட தொழிலாள வர்க்கத்தால் பாதுகாத்துக்கொள்ள முடியாது. "சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்குப் போராடுவதற்காக ஒரு சோசலிச வேலைத் திட்டம்" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கடுமையாக அக்கறை செலுத்துமாறு நாம் தொழிலாளர்களைக் கோருகிறோம். இந்த அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பல தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசினார்கள்: உள்நாட்டு வருமானவரி திணைக்கள ஊழியர் ஒருவர், திங்கட் கிழமை நடந்த மறியல் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தார். சம்பள உயர்வு அத்தியாவசியமானது என்பதால் தான் வேலைநிறுத்தத்தில் பங்குபற்றுவதாக அவர் தெரிவித்தார். "இதற்காகவே நான் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கின்றேன். நான் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர் அல்ல. நான் அவர்களது அரசியலுடன் உடன்படுவதில்லை. அவர்கள் யுத்தத்தையும் அவசரகால விதிகளையும் ஆதரிக்கின்றனர். இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களும் அவர்களே. அவர்கள் தமது ஊடகங்கள் ஊடாக இனவாதத்தை கிளறிவிடுகின்றனர்", என்றார்.

"நான் இந்த யுத்தத்தை ஆதரிக்கவில்லை. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும். தொழிலாளர்களின் ஐக்கிய இயக்கம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்போது அத்தகைய இயக்கங்கள் இல்லை. அத்தகைய இயக்கமொன்று எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் எனக்கு புரிந்துணர்வு இல்லை. எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான சரியான காரணங்கள் எனக்குத் தெரியாது. எண்ணெயின் பிரத்தியோக உரிமை ஏகாதிபத்திய பெரிய கம்பனிகளின் கைகளில் இருப்பதால் என நான் நினைக்கிறேன். உணவு உற்பத்தியும் அவர்களின் கட்டுப்பாட்டில் தான்''.

தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் சேர்ந்த சுமார் 200 ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மதிய உணவு வேளையில் மறியல் போராட்டம் நடத்தினர். "5,000 ரூபா சம்பள உயர்வும் கூட போதாது. எல்லா வெட்டுக்களுக்கும் பின்னர் எனக்கு மாதம் 18,000 ரூபா சம்பளம் கிடைக்கும். யுத்தத்தின் காரணமாக சம்பளத்தை உயர்த்த முடியாது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது," என ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம், அரசாங்கத்தை சலுகைகள் வழங்க நெருக்கும் என பல தொழிலாளர்கள் மத்தியில் உள்ள மாயையை பிரதிபலித்தவாறு அவர் தெரிவித்ததாவது: "தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசாங்கத்தின் மீது பெரும் அழுத்தத்தைத் திணித்தால் அந்தக் கோரிக்கைகளை நாம் வெற்றிகொள்ள முடியும் என நான் நினைக்கின்றேன்."

கடந்த டிசம்பரில், ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை நசுக்குவதற்காக தொலைக்காட்சி ஸ்டூடியோவுக்குள் இராணுவத்தை அனுப்ப ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டளையிட்டதை அடுத்து, ரூபவாஹினி ஊழியர்கள் அரச அடக்குமுறையை நேரடியாக அனுபவித்தனர். தனது உரை ஒன்றை ஒலிபரப்ப மறுத்தமைக்காக அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வாவும் அவரது குண்டர்களும் செய்தி ஆசிரியரை சரீர ரீதியில் தாக்கியதை அடுத்து தொழிலாளர்கள் வெளியேறினர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் தமது கருத்தை தெரிவிக்கத் தயங்கினர். படையினர் அங்கிருந்து வெளியேறி இருந்தாலும், பெருந்தொகையான புலனாய்வுத் துறை அதிகாரிகள் அங்கு தொழிலாளர்களை கண்காணிப்பதற்காக நுழைக்கப்பட்டுள்ளதாக ஒரு ரூபவாஹினி ஊழியர் தெரிவித்தார். "இந்த நிலைமையின் காரணமாக ஊழியர்கள் குழம்பிப் போயுள்ளார்கள். மனதுக்கு நிம்மதி இல்லை. மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும் கணக்கெடுப்பதில்லை" என அவர் கூறினார்.