World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lanka: Low turnout in general strike expresses lack of confidence in unions

இலங்கை: பொது வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களின் குறைந்த பங்களிப்பு தொழிற்சங்கங்கள் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது

By our correspondent
11 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் நேற்று நடந்த பொது வேலை நிறுத்தத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்ட அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் மத்தியிலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்துகொண்டனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) தலைமையிலான தொழிற்சங்கங்கள், தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்காக பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுக்க மறுத்த நிலையில் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியவர்களின் எண்ணிக்கையை சரியாக கணிப்பது சிரமமானதாகும்.

வேலை நிறுத்தம் முழுமையாக தோல்விகண்டுவிட்டதாக அரசாங்க அமைச்சர்கள் பறைசாற்றிக்கொள்ளும் அதேவேளை, "70 வீதம் வெற்றியடைந்துள்ளதாக" ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கத் தலைவருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார். ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி. எதிர்பார்த்ததை விட பங்களிப்பு செய்தவர்களின் எண்ணிக்கை ஏறுக்கு மாறானதாகவும் ஆங்காங்கே ஒட்டு போட்டது போல் ஆகியது. இந்த வேலைநிறுத்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பலமான ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், தனியார் மற்றும் அரசாங்கத் துறை தொழிலாளர்களின் பெரும்பான்மையானவர்கள் இதில் பங்குபற்றவில்லை.

இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியவர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததற்கு காரணம், வாழ்க்கைத் தரம் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு குறைவாக இருப்பது அல்ல. அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு அர்ப்பணிப்பு தேவை என அது விடுத்த அழைப்பை தொழிலாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டதால் அல்ல. மாதம் 5,000 ரூபா சம்பள உயர்வுக்கும், தொடர்ந்து அதிகரிக்கும் வாழ்க்கைத் தரத்துக்கான கொடுப்பணவுக்கும் மற்றும் பஸ், ரயில் கட்டணங்களை குறைப்பதற்குமான கோரிக்கைகளுக்கு பரந்தளவிலான ஆதரவு உள்ளது.

ஆயினும், எந்தவொரு சம்பள அதிகரிப்புக் கோரிக்கையையும் அரசாங்கம் எதிர்க்கும் போது மீண்டும் மீண்டும் அதற்கு இணங்கிப் போகும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பெருந்தொகையான தொழிலாளர்கள் தட்டினருக்கு நம்பிக்கை இல்லை. சகல வளங்களும் யுத்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் வலியுறுத்தலுக்கு பிரதிபலிப்பாக, துறைமுக தொழிலாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் போராட்டம் உட்பட வரிசையாக வந்த வேலை நிறுத்தங்களை கடந்த இரு ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. குறிப்பாக பேரினவாத ஜே.வி.பி. இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் இருந்த பலமான ஆதரவு இந்த வேலை நிறுத்தத்தின் முரண்பாடான பண்பை வெளிப்படுத்தியுள்ளது. ஜே.வி.பி. யின் சிங்கள மேலாதிக்கவாதத்தையும் யுத்தத்திற்கான அதன் ஆதரவையும் எதிர்க்கின்ற பெருமளவில் தமிழ் பேசுகின்ற இந்த தொழிலாளர்கள் மத்தியில் ஜே.வி.பி. தலைமையிலான அனைத்து இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்கு மொத்தத்தில் செல்வாக்கே கிடையாது. ஆயினும், ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா, பொகவந்தலாவ மற்றும் பண்டாரவளை போன்ற மத்திய மலையகப் பகுதிகளில் 90 வீதமான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.

தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஜே.வி.பி.க்கான ஆதரவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக, தற்போது 30 வீதம் வரை அதிகரித்துள்ள பணவீக்க நிலைமையின் கீழ் அதிகரித்துவரும் மோசமான பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகும். இலங்கை தொழிலாள வர்க்கத்தில் குறைந்த ஊதியம் பெறும் மற்றும் மிகவும் சுரண்டப்படும் பிரிவினர் தோட்டத் தொழிலாளர்களேயாவர். நேற்றைய வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியதன் மூலம், அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் எனக் கோரிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) போன்ற பிரதான தோட்டத் தொழிற்சங்கங்களின் தலைமைத்துவங்களை நிராகரித்துள்ளனர். அரசியல் கட்சிகளாகவும் செயற்படும் இ.தொ.கா. மற்றும் ம.ம.மு., இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் பங்காளிக் கட்சிகளாகும்.

சம்பள உயர்வுக்கு முன்னர் நடவடிக்கை எடுத்த ஏனைய தொழிலாளர் பிரிவினர் மத்தியிலும் பங்களிப்பு செய்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். கடந்த அக்டோபரில், ஒருநாள் வேலை நிறுத்தத்தில் சுமார் 200,000 ஆசிரியர்கள் பங்குபற்றினர். நேற்று அதில் அரைவாசிக்கும் குறைவான எண்ணிக்கையிலானவர்களே பங்குபற்றினர். அரசாங்க அச்சகம் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளின் தொழிலாளர் படை செய்தது போல், பிரதான ஆஸ்பத்திரிகளில் தொழில் புரியும் மருத்துவம் சாரா தொழிலாளர் பிரிவினர் குறிப்பிடத்தக்களவு வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். சிறு தொகையான போக்குவரத்துத் தொழிலாளர்கள் பங்குபற்றியதோடு, தனியார் நிறுவனங்களை சேர்ந்த சில நூறு தொழிலாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியவர்கள் அரசாங்கத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரத்தை எதிர்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். குண்டுத் தாக்குதல் நடப்பதற்கான புலனாய்வு செய்தி கிடைத்திருக்கின்றது என்ற சாக்குப் போக்கில், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் கொழும்பு பூராவும் உள்ள ஏனைய இடங்களிலும் பல அரசாங்க வேலைத் தளங்களிலும் பொலிசாரும் இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டிருந்தனர். புதன் கிழமை, அங்கொடை வைத்தியசாலையில் தொழிற்சங்கத் தலைவரை பொலிசார் கைது செய்தனர். தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தில் குதித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். வியாழக்கிழமை, தொழிலாளர்களை அச்சுறுத்தவும் அடக்கவும் அரசாங்கம் வேலைத் தளங்களுக்கு அமைச்சர்களையும் மாகாண சபை உறுப்பினர்களையும் அனுப்பி வைத்திருந்தது.

வேலை நிறுத்தக்காரர்கள் புலிகளின் சார்பாக செயற்படுகின்றார்கள் என அரசாங்க பாதுகாப்புப் பேச்சாளர் கேஹெலியே ரம்புக்வெல்ல புதன் கிழமை பிரகடனம் செய்தார். அரசாங்கம் 5,000 ரூபா கோரிக்கையை வழங்கினால், "பாதுகாப்பு செலவை வெட்டிக் குறைக்க வேண்டும். புலிகளின் தேவையும் இதுவே... எனவே இந்த இரு தரப்புக்கும் இடையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கக் கூடும் (தொழிற்சங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில்)," என அவர் தெரிவித்தார்.

புதன் கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, "தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை உண்டு" என எச்சரிக்கை செய்தார். "தேவையான போது வேலைக்கு அமர்த்திக்கொண்டு பின்னர் வெளியேற்றும் கொள்கையின் ஊடாக சீனாவில் கூட தொழிற்சங்க நடவடிக்கைகள் நசுக்கப்படுகின்றன" என அவர் மேலும் தெரிவித்தார். கடைசியாக சொன்ன இந்த கருத்து, அடிக்கடி "சோசலிஸ்டுகள்" என சொல்லிக்கொண்டு சீன ஸ்டாலினிச அதிகாரத்துவத்துடன் நெருக்கமான பிணைப்பை பராமரிக்கும் ஜே.வி.பி. க்கு ஒரு அடியாகும்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய தொழிற்சங்க மையம் (என்.டி.யூ.சி.) அரசாங்கத்தின் யுத்தச் சார்பு பிரச்சாரத்துக்கு ஏற்கனவே அடிபணிந்து தற்போதைய சம்பளப் பிரச்சாரத்துக்கு முடிவுகட்ட தயாராகிக்கொண்டிருப்பதற்கான சகல அறிகுறிகளும் காணப்படுகின்றன. அரசாங்கம் யுத்தத்தின் பேரில் சில அர்ப்பணிப்புக்களை செய்ய தயார் செய்யுமாயின், "அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 625 ரூபா அதிகரிப்பை ஏற்றுக்கொண்டு 'பொறுமையாக இருக்குமாறு' எங்களால் வெகுஜனங்களிடம் கேட்க முடியும்," என என்.டி.யூ.சி தலைவர் லால்காந்த இரிதா லக்பிம பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை சுவர்ணவாஹினி என்ற தொலைக்காட்சி சேவையின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய லால் காந்த, யுத்தத்திற்கு ஜே.வி.பி. யின் முழுமையான ஆதரவை வலியுறுத்தினார். "யுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே நாம் மக்களை அதன் பின்னால் அணிதிரட்டினோம். தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என ஏனைய தொழிற்சங்கங்களைக் கூட நாம் கேட்டுக்கொண்டோம்," என தெரிவித்த அவர், "நாட்டை அராஜகத்திற்குள் தள்ளாமல் நாம் எமது வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்," என அவர் வாக்குறுதியளித்தார்.

வேலை நிறுத்தத்தின் போது, சம்பள கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது, மீண்டும் வேலை நிறுத்த நடவடிக்கையை நாடினால் "நேரடி விளைவுகளை" அனுபவிக்க நேரும் என யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. க்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்த பிரச்சாரம் தொடர்பாக சங்கத் தலைவர்கள் கலந்துரையாடல் செய்வார்கள் என தெரிவித்த ஜே.வி.பி. மற்றும் என்.டி.யூ.சி. யும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என அறிவித்தன.

யுத்தத்தை எதிர்க்க ஒரு அரசியல் வேலைத்திட்டம் இன்றி, மிகவும் அடிப்படையான உரிமைகளைக் கூட தொழிலாள வர்க்கத்தால் பாதுகாத்துக்கொள்ள முடியாது என ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை செய்து வருகிறது. சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்காகப் போராடுவதற்கான ஒரு வழிமுறையை எதிர்பார்க்கும் தொழிலாளர்களை "சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்குப் போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்" என்ற தலைப்பிலான சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையை அக்கறையுடன் படிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். அந்த அறிக்கை, பிரச்சாரத்தை தொழிற்சங்கங்களின் கையில் இருந்து பறித்துக் கொள்வதற்காக தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைக்கவும் மற்றும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு புரட்சிகர முன்நோக்கை அபிவிருத்தி செய்யவும் அழைப்பு விடுக்கின்றது.

See Also:

இலங்கை: சம்பளம் மற்றும் தொழில் நிலைமைகளுக்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்