World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Indian delegation visits Sri Lanka: A sign of rising regional rivalries

இந்திய பிரதிநிதிகளின் இலங்கை விஜயம்: பிராந்திய போட்டிகள் அதிகரிப்பின் அறிகுறி

By Sarath Kumara and Athiyan Silva
5 July 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 20-21ம் திகதிகளில் இந்திய உயர்மட்ட அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி இலங்கைக்கு விஜயம் செய்தமை, தீவில் தனது மூலோபாய செல்வாக்கை பலப்படுத்திக்கொள்வதற்கான புது டில்லியின் அக்கறையை கோடிட்டுக் காட்டுகிறது. விசேட இந்திய விமானப்படை விமானத்தில் வந்திறங்கிய மூவர் அடங்கிய குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கும் அடங்குவர்.

இந்த இந்திய அதிகாரிகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட இராணுவத் தளபதிகளுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு மேலாக, அவர்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பரிந்துரையாளர்களாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட பலவித தமிழ் கட்சிகளையும் சந்தித்தனர்.

இந்த மாதக் கடைப்பகுதியில் நடக்கவிருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வதே இந்த விஜயத்துக்கான உத்தியோகபூர்வ காரணமாகும். ஆயினும், தீவில் உக்கிரமடைந்துவரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் இந்தியாவின் போட்டியாளர்கள் -பாகிஸ்தானும் சீனாவும்- இராணுவ உதவி செய்வதன் மூலம் கொழும்புடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் விதம் பற்றி புது டில்லி அக்கறை செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து உயர்ந்த வழியில் ஆயுதங்களை தொடர்ந்தும் இலங்கை பெறுவது சம்பந்தமாக இந்தியாவின் கவலையை" பிரதிநிதிகள் வெளிப்படுத்தியதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. "இந்திய பிரதிநிதிகள், 'பரஸ்பர விவகாரங்கள்' மீது விரிவாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது... இராணுவ விநியோகங்கள், புலணாய்வு மற்றும் பயிற்சி பட்டறைகளில் 'சகல உதவிகளையும்' செய்வதாக வாக்குறுதியளித்தனர்" என அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

தனது செல்வாக்கை செலுத்தும் களத்தின் ஒரு பகுதியாக இலங்கையைக் கருதும் இந்தியா, ஒரு கவனமான அரசியல் சமநிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இந்திய அரசாங்கம் இராணுவ விநியோகங்களையும் உதவிகளையும் வழங்கும் அதே வேளை, இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையையும் பாரபட்சங்களையும் பலமாக எதிர்க்கும் தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் எதிர்ப்பைத் தூண்டிவிடாமல் இருப்பதில் கவனமாக இருக்கின்றது.

இதன் விளைவாக, பாகிஸ்தானும் சீனாவும் இடை நிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இலங்கை ஜயன்-7 விமானங்கள், ஜே.வை-11 3டி ஆகாயக் கண்காணிப்பு ராடார்களையும், துருப்புக்களை கொண்டுசெல்லும் கவச வாகனங்களையும் மற்றும் ஏனைய ஆயுத முறைகளையும் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ளது. அது ஆயுதங்கள், துப்பாக்கி குண்டுகள், மோட்டார்கள் மற்றும் வெடிகுண்டுகளையும் பெற 37.6 மில்லியன் டொலர்களுக்கு சீனாவின் பொலி டெக்னொலொஜி உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் தலையீடு பாதுகாப்புடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இலங்கையின் பிரதான நிதி உதவியாளராக சீனா ஜப்பானை பிரதியீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சீனா இலங்கைக்கு கடன்களையும் ஏனைய உதவிகளையும் வழங்கியுள்ளது. தென்பகுதி நகரான ஹம்பந்தொட்டையில் புதிய துறைமுக வசதிகளை கட்டியெழுப்புவதற்காக சீனாவின் எக்ஸிம் வங்கி 1 பில்லியன் டொலர் கடன் வழங்கியுள்ளதுடன் இரு மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரு அதிவேக சாலையையும் கட்டியெழுப்புவதிலும் சீனா ஈடுபட்டு வருகின்றது.

சீனா தனது கடற்படையை விரிவாக்குவதற்காக பர்மா மற்றும் பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளில் வசதிகளை ஸ்தாபித்துக்கொள்ளும் பரந்த மூலோபாயத்தைக் கொண்டுள்ள நிலையில், ஹம்பந்தொட்டை துறைமுகம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கான தனது விநியோகப் பாதைகளை பாதுகாப்பதும் மற்றும் சீனாவை மூலோபாய ரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் முயற்சியை எதிர்ப்பதுமே பீஜிங்கின் குறிக்கோளாகும். சீனாவின் திட்டங்கள், இந்து சமுத்திரத்தில் தனது கடற்படை மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் இந்தியாவின் குறிக்கோளுடன் மோதுகின்றது.

2007 மே மாதம், "பிராந்தியத்தில் இந்தியா ஒரு பெரும் சக்தி என்பதை இலங்கை புரிந்துகொள்வதோடு எமது வெளியுறவு கொள்கையின் வரம்புத் திட்டத்திற்குள் அவர்களை இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்ற நிலையில், ஆயுதங்களுக்காக பாகிஸ்தானுக்கு அல்லது சீனாவுக்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய உச்ச கட்டம் இதுவாகும்," என இந்திய தேசிய பாதுகாப்புச் செயலாளர் நாராயணன் வெளிப்படையாக பிரகடனம் செய்தார்.

கடந்த ஆண்டு பூராவும், இலங்கை இராணுவத்துக்கான இந்தியாவின் ஆதரவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் சிறிய விமானத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, இந்தியா இலங்கைக்கு விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையும் தாழப் பறக்கும் விமானங்களை கண்டு பிடிக்க வடிவமைக்கப்பட்ட ராடார்களையும் வழங்கியுள்ளது. இந்தியா இலங்கைக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதோடு புலிகளின் விநியோகங்களை நிறுத்துவதற்கு இந்தியக் கடற்படை இலங்கையில் உள்ள தமது சமதரப்பினருக்கு உதவிக்கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு புலிகளின் பல விநியோகக் கப்பல்களை இலங்கை கடற்படை தாக்கி அழித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்பிரலில், இலங்கை இராணுவம் முகமாலையில் ஒரு கடுமையான பின்னடைவை சந்தித்ததை அடுத்து, இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 100 மில்லியன் டொலர் இலகுரக கடனை இலங்கைக்கு வழங்கியது. ஒரு செருக்குடன் இலங்கை பிரதமரான ரட்னசிறி விக்கிரமநாயக்க தினக்குரல் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில், "புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக போதிய ஆதரவை வழங்கி இந்தியா புலிகளை முழுமையாக அழிப்பதற்கு (எங்களுக்கு) ஆசீர்வாதமளித்துள்ளது. இது விரைவில் நடக்கும்" எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக இந்தியா இன்னமும் எச்சரிக்கையுடன் உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் ஒன்று நடக்க இருக்கும் நிலையில், புது டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி தமிழ் நாட்டில் ஆதரவு கிடைக்காமல் போவதை தவிர்த்துக்கொள்ள முயற்சிக்கின்றது. புலிகளை எதிர்க்கும் அதே வேளை, இந்திய அரசாங்கம் இலங்கை "இனப் பிரச்சினைக்கு" ஒரு "அரசியல் தீர்வைக்" காண அழைப்பு விடுக்கின்றது. புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு புது டில்லிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இன்னுமொரு அறிகுறியாகும்.

தமிழ் நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) காங்கிரஸின் ஒரு பங்காளியாகும். இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்த உடனேயே, எதிர்க் கட்சியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.) தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலைகளை முன்னெடுக்க இலங்கைக்கு உதவுவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மீது குற்றஞ்சாட்டி கடிதம் ஒன்றை அனுப்பியது. கொழும்பில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என ம.தி.மு.க. சிங்கைக் கேட்டுக்கொண்டது. இலங்கையை ஒரு தேர்தல் விவகாரமாக ம.தி.மு.க. காண்பது தெளிவு.

எவ்வாறெனினும், பிராந்தியத்தில் மேலாதிக்க சக்தியாக இந்தியா உருவெடுப்பதை குறிக்கோளாகக் கொண்டிருப்பதோடு சார்க் மாநாட்டை பகிஷ்கரிக்கும் நிலையிலும் இல்லை. அது புலிகளிடம் இருந்து அண்மையில் கைப்பற்றிய பிரதேசங்கள் உட்பட இலங்கையில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதார நலன்களையும் கொண்டுள்ளது. 2006ல் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய சம்பூரில் அனல் மின் நிலையம் ஒன்றை கட்டும் திட்டத்துடன் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் (ONGC) செயற்படுகின்றது.

மிகப் பரந்தளவில், இலங்கையுடன் விரிவான பொருளாதார பங்களிப்பு உடன்படிக்கை (Comprehensive Economic Partnership Agreement -CEPA) ஒன்றை இந்த மாதம் கைச்சாத்திட்டுக்கொள்ள இந்தியா எதிர்பார்க்கின்றது. இது 2000ம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் விரிவாக்கும். இலங்கையில் மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வு ஆராய்ச்சிக்கான அனுமதிப் பத்திரத்தை இந்தியக் கம்பனி ஒன்று அண்மையில் பெற்றுக்கொண்டது. இந்திய கம்பனியான RITES-IRCON, கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையிலான ரயில் பாதையை மேம்படுத்துவதில் ஈடுபடுகின்றது. இந்திய வெளியுறவு அமைச்சின் இணையம், "இந்திய கூட்டு வணிகத்தில் 50 வீதமும் தெற்காசியாவிலான இந்தியாவின் சொத்து முதலீட்டில் 54 வீதமும் இலங்கையில் இருப்பதாக" சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் நாட்டில் வெகுஜன அபிப்பிராயத்தை சாந்தப்படுத்தத் தள்ளப்பட்டுள்ள அதே வேளை, புலிகளை அழிப்பதற்கு இலங்கையில் நடக்கும் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை இந்திய அரசாங்கம் வெளிப்படையாக ஆதரிப்பதோடு இதன் மூலம் தீவில் இந்தியாவின் உயர்ந்த தலையீட்டுக்கு வழி திறக்கப்படுகிறது. இந்திய பிரதிநிதிகள் திரும்பிச் சென்ற பின்னர் இலங்கையின் தகவல் தொடர்பு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஜூன் 25 நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது: "எந்தவகையிலும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை. தற்போதுள்ள நிலைமை தொடர்பாக இந்தியா மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது."