World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Social crisis in Detroit: An investigative report

டெட்ராயிட் சமூக நெருக்கடி: ஒரு புலனாய்வு அறிக்கை

பகுதி 2: எரிவாயு விலைகளின் தாக்கம்

By Lawrence Porter and Naomi Spencer
21 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

பின்வருவது மூன்று பகுதி தொடரில் இரண்டாவதாகும். முதல் பகுதியான "திருகுசுருளாய் உயரும் உணவுப் பொருட்களின் விலைகள்" ஜூன் 19 அன்று வெளியிடப்பட்டது.

தேசமெங்கிலும் இருக்கும் சூழலைப் போல, அதிகரிக்கும் எரிபொருளின் விலைகள் டெட்ராயிட்டின் உழைக்கும் மக்களை ஏற்கனவே சூழ்ந்திருக்கும் சிக்கல்களை மேலும் அதிகமாக்குகிறது. வாழ்க்கைத் தேவைகள் மேல்நோக்கி அதிகரிக்கின்றன, வேலைவாய்ப்பு சந்தை சுருங்குகிறது, கடன் மற்றும் அவசரநிலை உதவிக்கான மூலங்கள் பற்றாக்குறை நிலை அதிகரிப்பில் வெகு வேகமாய் செல்கிறது.

வறுமையும், வேலை வாய்ப்பின்மை விகிதங்களும் அமெரிக்காவில் உயர்ந்த அளவில் இருக்கும் இடங்களில் டெட்ராயிட் ஒன்றாக இருக்கும் நிலையில், ஏற்கனவே தங்களின் வரவுசெலவு வரம்பினை எட்டியிருக்கும் ஆயிரக்கணக்கான டெட்ராயிட் குடும்பங்கள் இப்போது எரிவாயு அல்லது உணவு கொள்முதல் செய்வதா, அல்லது பயன்பாடுகளின் கட்டணங்களை செலுத்துவதா என்பதற்கு இடையில் தேர்வினை மேற்கொண்டாக வேண்டியிருக்கிறது.

இங்கு எழுதப்பட்டுள்ளதைப் போல், அமெரிக்க வாகன சம்மேளனத்தின் (Automobile Association of America -AAA) கூற்றுப்படி, எரிபொருள் தேசிய அளவில் சராசரியாக ஒரு கலனுக்கு 4.08 டொலர்கள் என்றாகி விட்டது. இருப்பினும், புதிய சாதனைகள் ஒவ்வொரு வாரமும் உடைபடுகின்றன. கவுன்டியின் (county) பிற பகுதிகளிலும் நடக்கவிருப்பதை அறிவிக்கும் ஒரு சகுனமாக, கலிபோர்னியாவின் பாகங்களில் ஏற்கனவே எரிவாயு விலைகள் ஒரு கலனுக்கு 5.00 டொலர்களையும் என்பதைத் தாண்டி விட்டன.

எரிவாயு விலை உயர்வின் காரணமாக, பிக்-அப் டிரக்குகள் மற்றும் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்களின் (SUV) - அமெரிக்க வாகனத் துறையின் முக்கிய விற்பனை பொருட்களில் ஒன்றான இது கடந்த 15 ஆண்டுகளாக லாபத்தின் மூலமாகத் திகழ்ந்து வருகிறது - விற்பனை குறிப்பிடத்தக்களவு சரிவு கண்டுள்ளது. மே மாதத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் டிரக்குகள் மற்றும் SUV க்கள் விற்பனை முந்தைய ஆண்டை விட 26 சதவீதமும், GM நிறுவனத்தின் விற்பனை இந்த பிரிவில் 37 சதவீதமும், கிரைஸ்லர் நிறுவன விற்பனை 22 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விற்பனை சரிவால், டிரக் உற்பத்தி திறனை வருடத்தில் 700,000 குறைப்பதற்கான திட்டங்களை GM அறிவித்துள்ளது. நான்கு வட அமெரிக்க ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 10,000ம் கூடுதலான வேலை இழப்புகள் நேரும். டெட்ராயிட் பகுதியில் GM Pontiac Truck and Bus Plant துவங்கி American Axle & Manufacturing's Detroit Gear & Axle Plant வரை, இது மேலும் பல ஆயிரம் வேலை இழப்புகளுக்கு வழி வகுக்கும். (பார்க்கவும் "The political lessons of the American Axle strike")

டெட்ராயிட் நகரப் பகுதியில், கடந்த 12 மாதங்களில் எரிவாயு விலைகள் கலனுக்கு ஒரு டாலருக்கும் அதிகமாக அதிகரித்திருக்கின்றன. ஏற்கனவே அதிகரித்திருக்கும் உணவு விலைகள் மற்றும் சம்பள வெட்டுகளால் துயரமுற்றுள்ள தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களால் கடும் கோபமுற்றுள்ளனர். பலர் நேரடியாக புஷ் நிர்வாகக் கொள்கைகள் மீது புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு வேலை இழந்த உணவு விடுதி பணியாளரும் மற்றும் மூன்று குழந்தைகளுக்குத் தாயுமான ஜடா பிரவுனிங் WSWS வசம் கூறினார், "இது பைத்தியக்காரத்தனம். ஒன்று நீங்கள் நடந்து போக வேண்டும் அல்லது ஒரு வேலை கிடைக்க உங்களது பணத்தை காரில் போட வேண்டும்''. உணவு விலைகள் மிக அதிகமாகி விட்டன, பயன்பாட்டு பொருட்களின் பில்களைக் கட்ட முடியவில்லை, எரிவாயுவை தனது வேனுக்கு முழு டாங்கையும் நிரப்ப இயலாத அளவுக்கு மிக அதிக விலை கொண்டதாக இருக்கிறது. "எவ்வளவு காலம் என்று நினைவில் இல்லாத அளவுக்கு நான் முழு டாங்க் நிரப்பியே வெகு காலம் ஆகி விட்டது. தெரியுமா, நான் 20-30 டொலர்கள் வரைதான் சம்பாதிக்கிறேன், இது எனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்கும் சில [வேலை] விண்ணப்பங்களை அளிப்பதற்கும் தான் சரியாக இருக்கிறது. அந்த அளவுக்கு வாழ்க்கை கடினமாக இருக்கிறது" என்று பிரவுனிங் குறிப்பிட்டார்.

டெட்ராயிட் மக்களில் கணிசமானவர்களிடம் வாகனங்களும் இல்லை. அவர்கள் பிற போக்குவரத்து வழிகளைத் தான் கண்டாக வேண்டியிருக்கிறது. உண்மையில், அமெரிக்க கருத்துக்கணிப்பு வாரியத்தின் புள்ளிவிவரப்படி, 21.9 சதவீத இல்லத்தினர் - ஐந்தில் ஒன்றை விட அதிகம் - கார் எதுவும் கொண்டிருக்கவில்லை. மெட்ரோ பகுதியில் வேலை, உணவு, பாடசாலை, மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு இடங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கும் அந்த மக்களுக்கு வாழ்க்கைத் தரத்தில் கடுமையான பாதிப்பை இது கொணர்ந்துள்ளது.

தொழிலாளர் பணம் திருப்பியளிக்கும் செலவுகளில் நிபுணத்துவம் கொண்ட விஸ்கோன்சினில் அமைந்திருக்கும் ஒரு மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ரன்ஸிமர் இன்டர்னேஷனல், டெட்ராயிட் தான் ஒரு கார் வைத்திருப்பதும் உபயோகிப்பதும் மிகவும் செலவு பிடிக்கும் நகரமாகும் என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வாகன காப்பீட்டுக்கு மட்டும் டெட்ராயிட்வாசிகள் சராசரியாக 5,894 டொலர்களை செலவிடுகிறார்கள். மொத்தத்தில், எரிவாயு, டயர்கள், எண்ணெய், பராமரிப்பு மற்றும் காப்பீடு போன்ற உரிமைத்துவ செலவுகள் நகரவாசிகளுக்கு மொத்தமாய் 11,844 டொலர்கள் வரை வந்து விடுகிறது. ஒரு கார் வைத்திருப்பது என்பது பலருக்கு எட்டாத விஷயமாக ஆகியிருக்கும் ஒரு பெரும் செலவினமாகும்.

46 வயது ஊனமுற்றவரான லான் ருபென்ஸ்டின் ஒரு Save-a-Lot மார்க்கெட்டில் நேர்முகத்திற்கு சைக்கிளில் தான் சென்றார். "இந்த விலைகள் பயங்கரமாய் இருக்கிறது" என்று அவர் கூறியதுடன், "நான் மாதத்திற்கு 600 டொலரில் வாழ்கிறேன். அங்கே இங்கே போவதற்கு நான் சைக்கிளைத் தான் உபயோகித்தாக வேண்டும். எனது காரில் போகும் அளவுக்கு என்னால் எரிவாயு வாங்க முடியவில்லை. எனவே, சாப்பிடலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம் என்பது தான் எனது நிலையாக இருக்கிறது".

இதில் தப்பிப்பதே அபூர்வமாகி விட்டது என்பதால் பின்னாளுக்கு அல்லது ஓய்வு காலத்துக்கு சேர்த்து வைப்பது என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்டது என்றார் அவர்.

பொது போக்குவரத்திற்கு மாறும் கூடுதலான மக்கள்

தேசிய அளவில், பொது போக்குவரத்தினை எடுத்துக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை பரந்த அளவில் அதிகரித்திருக்கிறது. சில பகுதிகளில் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் நிற்கும்-அறை-மட்டும் கூட்டங்கள் நிறைந்து காணப்பட முடிகிறது.

டெட்ராயிட்டின் இரண்டு பேருந்து போக்குவரத்து அமைப்புகளும் சமீப காலத்தில் கூர்மையான அதிகரிப்புகளைப் பெற்றுள்ளன. புறநகர் பேருந்து அமைப்பான SMART (Suburban Mobility for Regional Transportation) 6.5 சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளது. அத்துடன் தற்போது அதில் ஒரு நாளைக்கு 44,000 பயணிகள் பயணிக்கிறார்கள். டெட்ராயிட் போக்குவரத்து துறையும் (DDOT) தினசரி பயணிகளில் 7 சதவீத அதிகரிப்பினைக் கண்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு நாளைக்கு 130,000 பயணிகள் எனும் அளவாக இருந்த இது, இப்போது ஒரு நாளைக்கு 140,000 என்பதாக அதிகரித்துள்ளது.

SMART பொது மேலாளரான ஹெய்ஸ் W. ஜோன்ஸ் இது குறித்து கூறும்போது, பொதுமக்கள் போக்குவரத்து 50 ஆண்டுகளில் மிகப்பெரும் பயணிகள் எண்ணிக்கையை இப்போது கண்டு வருவதாக தெரிவித்தார். "பல குடும்பங்களுக்கு, இரண்டு கார் வைத்திருப்பதை விடுங்கள், ஒரு கார் வைத்திருப்பது என்பதே இந்த பொருளாதாரத்தில் ஆடம்பரமான விஷயமாக இருக்கிறது. பல குடும்பங்களுக்கு எரிவாயு விலை என்பது பெரும் பற்றாக்குறை ஆகும்" என்று ஜோன்ஸ் குறிப்பிட்டார்.

டெட்ராயிட் மேயர் க்வேம் கில்பாட்ரிக்கின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் கேனிங் WSWS வசம் கூறும் போது, "எரிவாயு விலைகள் தான் இதற்கு [பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது] ஒரு பகுதி காரணம். இன்னொரு பகுதி காரணம் மேயர் கில்பாட்ரிக் 200 புதிய பேருந்துகளை கொண்டு வந்து சேவைகளை மேம்படுத்த நிறைய செய்திருப்பது" என்று குறிப்பிட்டார்.

டெட்ராயிட் நகரப் பகுதியில் பொது போக்குவரத்து என்பது பெருமளவில் நிதிப் பற்றாக்குறை உடையதாகவும் போதுமானதாக இல்லாததாகவும் இருக்கிறது. தனது விமர்சகர்களுக்கு பதிலளிக்க, நகரின் இரண்டு பெரிய வழித்தடங்களுக்கு இடையே மேம்பட்ட போக்குவரத்தினை வழங்க ஒரு புதிய இலகுரக ரயில் அமைப்புக்கான நகர அரசாங்கத்தின் முன்முயற்சி திட்டங்களை கேனிங் சுட்டிக் காட்டினார்.

இத்தகையதொரு அமைப்புக்கு நிதி உருவாக்கத்திற்கான வாய்ப்பு குறைவு என்கிற நிலை ஒரு பக்கமிருக்க, தொழிலாளர்கள் போக்குவரத்துக்கு கார் வாங்க நிர்ப்பந்திக்கும் வகையில் முந்தைய பொது ரெயில் அமைப்பினை மூடுவதற்கு ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டு செய்த கொள்கை குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை.

GM, Firestone Tire மற்றும் Standard Oil of California ஆகியவை சேர்ந்து மக்களை கார்கள் வாங்கச் செய்வதற்காக எலெக்ட்ரிக் ரயில் அமைப்புகளை கஸோலின் மற்றும் டீசல் பேருந்துகள் மூலம் மாற்றுவதற்கு கூட்டுச் சதியில் ஈடுபட்டன என்று ஒரு பெடரல் நீதிமன்றம் 1949 இல் தீர்ப்பளித்தது. டெட்ராயிட் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உட்பட 45 நகரங்களில் இருந்த 100 க்கும் அதிகமான போக்குவரத்து அமைப்புகளை பற்றாக்குறையான பேருந்து வரிசைகள் மூலம் மாற்றுவதற்கு திட்டமிட்டு GM வேலை செய்திருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது. இந்தக் கொள்கை இன்று வரை நீடித்து வந்திருக்கிறது. பொதுமக்கள் திறனற்ற, செலவு மிகுந்த, மற்றும் சுற்றுச்சூழலை மாசடைய வைக்கும், வாகனத் துறை இலாபங்களை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே செயல்பட்டு வந்த ஒரு கொள்கைக்கு செலவிட்டு வந்திருக்கிறார்கள்.

தங்களது கார்களை பயன்படுத்துவது மிகவும் செலவு பிடிப்பதாக இருப்பதால் பேருந்துகளில் பயணம் செய்ய முடிவெடுத்த பல டெட்ராயிட் நகர தொழிலாளர்களை WSWS நேர்முகம் கண்டது.

"மே மாதம் துவங்கி நான் பேருந்தில் வர முடிவு செய்தேன்....அவர்கள் எங்களது ஓவர் டைமை குறைத்து விட்டார்கள், எனவே எனக்கு வேலைக்கு வருவதற்கு செலவு அதிகம் செய்ய இயலவில்லை" என்று மேரி விதெரோ என்னும் வங்கி ஊழியர் எங்களிடம் கூறினார்.

"நான் வேலை செய்யும் இடத்தில், வாகனங்களை நிறுத்தும் வசதிக்கான கட்டணம் நவம்பர் முதல் மாதத்திற்கு 100 டொலர்கள் என அதிகரித்து விட்டது. எனவே, அது வேறு எரிவாயு விலை வேறு என்று, கார் செலவு கட்டுபடியாகவில்லை" என்றார் விதெரோ.

அவரைப் போன்ற சூழலில் பலர் இருக்கிறார்களா என்று கேட்டபோது, "ஆமாம், சந்தேகமே இல்லை. காலையில் என்னுடன் சேர்ந்து பேருந்தில் வரும் ஐந்து பேர்கள் இதே காரணத்திற்காக தான் சமீபத்தில் பேருந்தில் வரத் துவங்கியிருப்பதாக தெரிவித்தனர். இது இன்னும் மோசமாகத் தான் செல்லும் என்பதால் நான் பேருந்திற்கு திரும்பினேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டெட்ராயிட்டின் வட கிழக்கில் இருக்கும் ஒரு புறநகர்ப் பகுதியான கிளின்டன் குடியிருப்பில் வசிக்கும் ஒரு மெடிக்கல் டிரைவரான வில்லியம், தானும் அதிகமான எரிவாயு விலைகளின் காரணமாய் பேருந்து பயணத்தை எடுக்க துவங்கியிருப்பதாகத் தெரிவித்தார். "சம்பளங்கள் அப்படியே தான் இருக்கின்றன, எரிவாயு விலைகள் உயர்ந்து விட்டன, எல்லாமே விலையேறுகிறது, எனவே எனது காரைப் பயன்படுத்துவதை விட பேருந்தை எடுத்துக் கொள்வதே எனக்கு செலவு குறைவானது, கிளின்டன் குடியிருப்பில் இருந்து டெட்ராயிட்டுக்கு வர ஒருமணி நேரமாகும், காரில் வந்தாலும் அதே நேரம் தான், எனவே நான் செலவைக் குறைக்க முடிவு செய்தேன்" என்று வில்லியம் குறிப்பிட்டார்.

புஷ் நிர்வாகம் குறித்த பரவலான உழைக்கும் மக்களின் உணர்வினை வில்லியம் பிரதிபலித்தார். "ஜோர்ஜ் புஷ்ஷின் கீழிருக்கும் நடப்பு நிர்வாகம் ஏழை மக்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை". அத்தோடு, ஜனநாயகக் கட்சியினரும்கூட எதையும் செய்து விடவில்லை என்று வில்லியம் குறிப்பிட்டார்.

தொடரும்....