World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

The tsunami in Sri Lanka: A case study in US humanitarian missions

இலங்கையில் சுனாமி: அமெரிக்க மனிதநேய நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஆய்வு

By K. Ratnayake
14 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

பர்மாவை மே 03ம் திகதி சூறாவளி மூழ்கடித்ததிலிருந்து, உதவி பணியாளர்களுடன் சேர்த்து வெளிநாட்டு இராணுவத்தை நாட்டுக்குள் அணுமதிக்குமாறு சர்வதேச ஊடகங்கள் பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. மனித நேய உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்காவினதும் ஏனய வல்லரசுகளதும் பெருந்தன்மையான விருப்பத்தோடு, பர்மிய இராணுவ ஆட்சியின் சித்தப் பிரமை, இரக்கமின்மை மற்றும் தகுதியின்மை வேறுபாட்டைப் பற்றி கட்டுரைக்கு பின் கட்டுரையாக ஒப்பிட்டு காட்டப்படுகின்றன.

பர்மிய ஜுண்டா தனது ஒடுக்குமுறை வழிமுறைகளையும் மனித உயிர் சம்பந்தமான கொடூரமான அலட்சியத்தையும் மீண்டும் ஒருமுறை தெளிவாக வெளிக்கட்டிக்கொண்டுள்ளது. ஆனால் வாஷிங்டனும் அதன் நேசசக்திகளும் பர்மிய மக்களின் நலனுக்காக தூய்மையாக தொழிற்படுகின்றன எனக் கூறுவது சாதாரணமான பொய்யாகும். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் போலவே, புஷ் நிர்வாகம் தனது மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை பர்மாவிலும் முன்னெடுக்கின்றது. பர்மாவைப் பொறுத்தவரையில் அதன் நேச நாடான, ஆபத்தான வளர்ந்து வரும் போட்டியாளராக அமெரிக்கா கருதும் சீனாவின் ஆட்சியை கீழறுக்க முயற்சிப்பதாகும்.

பர்மாவில் தலையீடு செய்வதற்கான காரணிகளை உருவாக்குவதற்காக, ஊடகங்கள் 2004 சுனாமியைப் பற்றி அடிக்கடி கருத்துத் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு இராணுவத்தை அனுப்புதல் உட்பட்ட சர்வதேச பிரதிபலிப்பானது பயனுள்ள மற்றும் மனிதாபிமானமிக்க ஒரு முன்மாதிரி என அவை கூறிக்கொள்கின்றன. 2004ல் உண்மையாக என்ன நடைபெற்றது, அதன் அரசியல் தொடர்பு என்ன மற்றும் வங்காள விரிகுடாவைச் சூழ உள்ள நாடுகளில் இன்னமும் பிழைப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் உயிர்தப்பிய பத்தாயிரக்கணக்கானவர்களின் தலைவிதி என்ன என்ற விடயங்கள் இங்கு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை விவகாரம் முக்கியமான படிப்பினைகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. இந்தோனேஷியாவை அடுத்து சுனாமியால் கடுமையாக தாக்கப்பட்ட நாடு இலங்கையாகும். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, குறைந்தபட்சம் 30,920 பேர் கொல்லப்பட்டதோடு. 519,063 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். 103,836 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிவு பயங்கரமானது. வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள், புகையிரத பாதைகள், தொலைத் தொடர்புகள் எல்லாம் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. கிராமங்கள் முழுமையாக மறைந்து போயின. உயிர் தப்பியோர் உறைவிடம், உணவு, சுத்தமான குடி தண்ணீர் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் குறிப்பாக மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்துள்ளனர்.

செயற்திறமற்ற, ஒடுக்குமுறை நிர்வாகத்தை கொண்டிருப்பது பர்மா மாத்திரம் அல்ல. ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பதட்டமான யுத்த நிறுத்தத்தைக் கொண்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கில் எதுவுமே செய்யப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக டாக்டர்கள் மற்றும் தாதிமார்கள் போன்ற கைதேர்ந்தவர்கள் உட்பட சாதாரண தொழிலாளர்களே கொழும்பில் இருந்து வெளியேறி அவநம்பிக்கையுடன் உயிர்தப்பியிருந்தோருக்கு முதலாவதாக உதவினார்கள்.

இராணுவத்தையும் துருப்புக்களையும் அனுப்பி, தொண்டர் குழுக்கள் உட்பட சகல உதவி நடவடிக்கைகளையும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. அவர்களுடைய கரிசனை, இழிநிலையிலான முன் ஆயத்தங்கள் எதுவுமற்ற அகதிகள் முகாமில் பயங்கரமான நிலைமையை எதிர்கொண்டிருந்த உயிர் தப்பியோருக்கு உதவுவதற்கு மாறாக, அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் உதவி இல்லாமையினால் எழும் எதிர்ப்புகளை ஒடுக்குவதிலேயே முதலாவதாக அக்கறை செலுத்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல தசாப்தங்களாக கொழும்பு அரசியல் ஸ்தாபனங்கள் தங்கியிருந்த தமிழர் விரோத இனவாதத்தை குறுக்கே வெட்டியவாறு, சாதாரண சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தாமாகவே முன் வந்து ஒருவருக்கு ஒருவர் உதவுவதை தடுப்பதாக இருந்தது.

இந்த சூழ்நிலையிலேயே புஷ் நிர்வாகம் அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியது. முன்னாள் இராஐாங்க செயலாளர் கொலின் பவல் தீவின் தெற்குக்கு கப்பல்களை அனுமதிக்கப் படவேண்டும் என்று பெரிதாக கோரவில்லை. ஆளும் வட்டாரத்துக்குள் கூட, அமெரிக்க துருப்புக்களை முதல் தடவையாக அனுமதித்தமை தொடர்பாக புருவங்கள் உயர்ந்தன. டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், இந்த இராணுவ தலையீட்டிற்குப் பின்னால் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க நலன் தொடர்பான அந்தரங்க நோக்கம் இருக்கின்றதா என கேள்வி எழுப்பியிருந்தது.

எவ்வாறெனினும், குமாரதுங்கா விரைவாக உடன்பாட்டுக்கு வந்தார். 300 கடற்படையினர் தீவின் தெற்கில் தரை இறக்கப்பட்டு அங்கு நிலைகொண்டதோடு கிழக்கில் உள்ள அறுகம் குடாவுக்கும் அனுப்பப்பட்டனர். உதவி நடவடிக்கை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. அந்தப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதற்கு உதவியதோடு சில நிவாரண உதவிகளை வழங்கி, ஊடகங்களுக்கு பாவனை காட்டியதை அடுத்து சில மாதங்களின் பின் வெளியேறினர். சந்தேகமின்றி பாதிப்படைந்தோர் சில உதவிகளை பெற்றார்கள். ஆனால், அமெரிக்க இராணுவ வருகையின் உண்மையான நோக்கம் அரசியல் ரீதியானது.

இந்த நடவடிக்கைகள் பல நோக்கங்களை கொண்டவை: அவை, அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்பந்தமாக இலங்கை மக்கள் மத்தியில் உள்ள தசாப்த கால ஆழமான பகைமையில் இருந்து மீள்வதும் மற்றும் இப்பொழுது பர்மா விடயத்தில் கோரப்படும் முன்நிகழ்வையும் அமைப்பதாகும். ஆனால், சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தது போல், எல்லாவற்றுக்கும் மேலாக, வாஷிங்டன் தன்னுடைய பொருளாதார மற்றும் மூலோபாய நோக்கங்களை இந்தப் பிராந்தியம் பூராகவும் முன்னெடுப்பதற்கு, இலங்கை உட்பட்ட நாடுகளுடன் நெருங்கிய இராணுவ உறவை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றது.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம்

அந்த எச்சரிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான மூலோபாய முக்கியத்துவம், அது மத்திய கிழக்கிலிருந்து மலாக்கா நீரிணைக்கூடான பசிபிக்குக்கான பிரதான பாதை உட்பட இந்து சமுத்திரத்தின் பிரதான கடற்பாதைக்கு அருகில் இருப்பதேயாகும். குறிப்பாக, கிழக்கு கடற்கரையில் உள்ள ஆழமான திருகோணமலை துறைமுகம், நீண்ட காலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகின்றது. 2002 ஆண்டு புலிகளுடன் யுத்த நிறுத்தம் கைசாத்திடப்பட்ட பின்னர், அமெரிக்க பசுபிக் படைத்தளத்தில் இருந்து உயர் மட்டக் குழு ஒன்று திருகோணமலை துறைமுகத்தைப் பற்றி விபரமாகக் கற்பதற்காக இலங்கைக்கு வந்ததோடு அது புலிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்பு பற்றியும் மதிப்பிட்டது.

இந்தக் காலகட்டத்தில், புஷ் நிர்வாகம், தீவின் 20 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் நிமித்தம் சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் என்று அழைக்கப்படுவதற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்தது. எவ்வாறெனினும் யுத்தம் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி வாஷிங்டன் கவலைகொள்ளவில்லை. மாறாக, இந்த மோதலானது இந்தப் பிராந்தியத்தில், குறிப்பாக இந்தியாவில், அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஸ்திரமின்மைக்கு காரணமாகலாம் என்பதையிட்டே அது கவலைகொண்டுள்ளது.

ஆயினும், 2004 டிசம்பரில் யுத்த நிறுத்தம் ஏற்கனவே பொறியும் நிலைக்கு வந்திருந்தது. 2003 ஏப்பிரலில் சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததோடு 2004 ஆரம்பத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை "தேசிய பாதுகாப்பை கீழறுக்கிறது" என்ற போர்வையின் கீழ் திடீரென பதவிவிலக்கினார். பின்னணியில், குமாரதுங்காவின் புதிய அரசாங்கத்தின் பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற சிங்கள அதி தீவிரவாத கட்சிகளினதும், இராணுவத்தினரும் ஏற்கனவே யுத்தத்தை புதுப்பிப்பதற்கு நெருக்கிவந்தன.

அமெரிக்காவும் ஏனைய பிரதான சக்திகளும், சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவை பயன்படுத்தி, சர்வதேச உதவிகளை பகிர்ந்தளிப்பதற்காக அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஒரு கூட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தன. அந்தப் பிரேரணை, சமாதான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான முதலாவது படி என கருதப்பட்டது. எல்லா இலங்கையர்களும் ஒரே பிரச்சினைக்கே முகம் கொடுக்கின்றார்கள் மற்றும் உடன் பிறப்புக்களை கொல்லுகின்ற யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்ற பரந்த வெகுஜன உணர்வை சுனாமி வெளிப்படுத்தியதன் காரணமாக, குமாரதுங்க ஒரு பகுதி இந்த யோசனையை பரீட்சார்த்தமாக ஏற்றுக்கொண்டார். ஆயினும், இராணுவ உயர் மட்டத்தினரும் மற்றும் ஜே.வி.பி. யும் இந்த தற்காலிக உதவி கட்டமைப்பை புலிகளுக்கு வழங்கும் ஏற்றுக்கொள்ள முடியாத சலுகையாக கருதினர்.

வாஷிங்டனுடன் அரசியல் மற்றும் இராணுவ உறவை ஏற்படுத்துவதற்கு வசதியான சாக்குப் போக்காக சுனாமி பயன்படுத்தப்பட்டது. பவல், ஐனவரி மாத ஆரம்பத்தில் பாதிப்படைந்த நாடுகளுக்கு மேற்கொண்ட விஐயத்தின் பகுதியாக கொழும்புக்கும் வருகை தந்தார். ஏப்பிரலில், அப்போது அமெரிக்க பசுபிக் கட்டளை தளபதியாக இருந்த வில்லியம் ஐெ. ஃபல்லன் இலங்கைக்கு வருகை தந்து அரசாங்க தலைவர்களை சந்தித்ததுடன், திருகோணமலை உட்பட சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்றார். அதே மாதம் தெற்காசியாவுக்கான இராஐாங்க உதவிச் செயலாளர் கிறிஸ்ரினா றொக்கா, கூட்டு நிவாரண பொறிமுறையை கலந்துரையாடுவதற்காக இலங்கைக்கு விஐயம் செய்தார்.

புஷ் நிர்வாகம் தெளிவாக இரண்டு முட்கள் உள்ள மூலோபாயத்தை நகர்த்தியது. வெளிப்படையாக சமாதான பேச்சு வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கும் அதேநேரம், இலங்கை இராணுவத்துடன் சாத்தியமான யுத்த திட்டங்கள் பற்றியும் தனிப்பட்ட ரீதியில் உயர்மட்ட பேச்சுவார்தையை நடத்துகின்றது. கூட்டு நிவாரண பொறிமுறை சம்பந்தமான கலந்துரையாடல், பல மாதங்களாக இழுபட்டன. மே 16-17 ல் நடைபெற்ற பிரதான நிதி வழங்குபவர்களின் மகாநாடு, கொழும்புக்கு காலக்கெடுவை கொடுத்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி பொதியை வழங்குவதாயின் நிவாரணம் வழங்குவதற்கான கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இறுதி நிபந்தனையை விதித்தது.

குமாரதுங்கா தயக்கத்துடன் சுனாமிக்கு பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ கட்டமைப்பை (பொதுக் கட்டமைப்பு) புலிகளுடன் அமைத்த போதிலும், அது ஆரம்பத்தில் இருந்தே நொண்டி வாத்தாக விளங்கியது. ஜே.வி.பி. அரசாங்கத்திலிருந்நு விலகி, உயர் நீதிமன்றத்தில் அரசியல் அமைப்பு ரீதியாக பொதுக் கட்டமைப்பை வெற்றிகரமாக சவால் செய்தது. 2005 ம் ஆண்டு ஐனாதிபதி தேர்தலில், குமாரதுங்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய வேட்பாளரான மகிந்த இராஐபக்ஷவுக்கு, பொதுக் கட்டமைப்பை கிழித்தெறிந்து புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு களம் அமைப்பதன் அடிப்படையில் ஐே.வி.பி ஆதரவு கொடுத்தது.

குறுகிய வெற்றியில் ஆட்சிக்கு வந்த இராஐபக்ஷ, உடனடியாக வாஷிங்டனின் ஆதரவுடன் புலிகளுக்கு எதிராக பெரும் ஆத்திரமூட்டல் நிலைப்பாட்டை எடுத்தார். 2006 ஐனவரியில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஐெஃப்ரி லன்ஸ்டட், பேச்சுவார்தைக்கு புலிகள் அரசாங்கத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு வாஷிங்டனின் சமிக்ஞையை காட்டினார். ''புலிகள் சமாதானத்தை கைவிடத் தீர்மானித்தால், பலம்வாய்ந்த, மேலும் ஆற்றல் மிக்க மற்றும் உறுதியான இலங்கை இராணுவத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை நாம் தெளிவாகக் கூற விரும்புகிறோம். மீண்டும் யுத்தம் வெடித்தால் பெரும் விலை கொடுக்க வேண்டிவரும், என லன்ஸ்டட் எச்சரித்தார்.

2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை வெளிப்படையாக மீறி, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு இராஐபக்ஷ இராணுவத்திற்கு கட்டளையிட்ட பொழுது, மறைமுகமான ஆத்திரமூட்டல்களும் கொலைகளும் வெளிப்படையான மோதலாக மாறின. இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பு நடவடிக்கையையிட்டு அமெரிக்காவிடம் இருந்தோ அல்லது ஏனைய "சமாதான முன்னெடுப்பு'' அணுசரணையாளர்களிடமிருந்தோ முணுமுணுப்பு விமர்சனம் கூட வரவில்லை. தீவு இன்று அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உதவியுடன் கொடூரமான உள்நாட்டு யுத்தத்தினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அமெரிக்க விஞ்ஞானிகளின் சம்மேளனத்தின் அறிக்கையின்படி, இலங்கைக்கான பாதுகாப்பு உபகரணங்களின் நேரடி விற்பனை, 2004ம் ஆண்டில் 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்தது 2005ம் ஆண்டில் 3.1 மில்லியன் டொலராகவும், 2006ம் ஆண்டில் 3.9 மில்லியன் டொலராகவும் அதிகரித்துள்ளது. இதற்கு பிரதியுபகராமாக, இராஐபக்ஷ அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்புக்கு அமைதியாக ஆதரவு கொடுத்ததுடன், தீவை இராணுவ விநியோக ஒத்துழைப்புக்கு பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்திலும் கடந்த ஆண்டு கையெழுத்திட்டது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டோரைப் பொறுத்தவரையில், அவர்கள் முழுமையாக மறக்கப்பட்டார்கள். அரசாங்கத்தின் மீள்கட்டுமான அபிவிருத்தி முகவர் நிலையத்தின் அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் -சுனாமி ஏற்பட்டு மூன்று வருடம் கடந்த நிலையில்- 6,718 குடும்பங்கள் அல்லது 25,000 பேர் இன்னமும் திகைப்பூட்டும் நிலையில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கிறார்கள். பெரும்பான்மையான குடும்பங்கள் -5820 குடும்பங்கள்- புதுப்பிக்கப்பட்ட யுத்தம் நடைபெறும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கிறார்கள். தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள மாவட்டத்திலும் கூட 803 குடும்பங்கள் முகாம்களில் வாழ்கின்றார்கள்.

இத்தகைய உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் சந்தேகமின்றி குறைத்து மதிப்பிடப்பட்டவையாகும். பெரும்பாலும், மீண்டும் வீடுகளில் குடியேறியோர் உட்பட உயிர்தப்பியோரில் பெரும்பான்மையானவர்கள், இன்னமும் தாங்கமுடியாத பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். பெரும்பான்மையான மீனவர்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்ததோடு அவர்கள் கரையோரப் பகுதிகளுக்கு அப்பால் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் போர்வையின் கீழ், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை கட்ட வழிவகுப்பதற்காக மீனவ கிராமங்களை அகற்றுவதற்கு இந்த சந்தர்ப்பத்தை சுரண்டிக்கொண்டது.

இந்த அகதிகளின் துன்பகரமான நிலை, அவர்களை பேச வைத்தது. கிழக்கில் கிராமப்புற நகரமான மருதமுனையில் உள்ள ஹக்கீம் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசினார்: "எங்களுடைய கிராமத்தில் சுனாமியால் 186 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சுனாமி தாக்கியபோது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்." எமது கிராமத்தில் ஒருவருக்கும் வீடு இருக்கவில்லை என அவர் தெரிவித்தார். பெரும்பாலானோருக்கு முழு நேர வேலை கிடையாது. அவர்கள் கைக்கூலி தொழிலாளராக வேலை செய்து சிறிய தொகை பணத்தையே சம்பாதித்தார்கள். மருதமுனை மத்திய பாடசாலை கட்டிமுடிக்கப்படவில்லை.

மேல் மாகாணத்திலும் இதே போன்ற நிலைமையே உள்ளது. கொழும்பு புறநகர் பகுதியான கட்டுப்பத்தையில் உள்ள கைவிடப்பட்ட பழைய கட்டிடத்தில் 56 குடும்பங்கள் இப்பொழுது வசிக்கின்றனர். கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 சதுர மீற்றர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மலசல கூடங்கள் நிறைந்து வழிந்து ஓடுகின்றன. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மின்சாரக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. வயது வந்தோர் ஒருவருக்கும் பொருத்தமான தொழில் கிடையாது.

19 வயது யுவதி WSWS நிருபர்களிடம் கூறியதாவது: ''பர்மாவின் நிலைமை பற்றி நீங்கள் கேட்டீர்கள். எங்களால் தொலைக்காட்சியை பார்க்கவோ அல்லது வேறு எதாவது ஊடகங்களை நெருங்கவோ முடியாத நிலையில் எங்களுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. நிலைமை பற்றி நான் உங்களிடமிருந்தே அறிந்துகொண்டேன். இது ஒரே மாதிரியானதாகவே தோன்றுகிறது. உலகம் பூராகவும் இயற்கை அழிவினால் சாதாரண மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள், ஆட்சியாளர்கள் அவர்களை எவ்விதம் நடத்துகிறார்கள் என்பதை காண்கின்றோம்.''

அமெரிக்க கடற்படையினர் விலகி நீண்ட காலமாகவிட்டது, இலங்கைக்கான சர்வதேச சுனாமி உதவி வரண்டு போய்விட்டதோடு அரசாங்கம் அடிப்படை தேவைகளுக்கான நிதியை அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு திருப்பியுள்ளது. பர்மாவிலும் இது போன்ற நிலைமையே நிலவும் என்பதில் சந்தேகமில்லை. பர்மாவில் தலையிடுவதற்கான உந்துதல், பிரதான வல்லரசுகளின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களால் இயக்கப்படுகின்றது. இது பெரும்பான்மையான பர்மியர்களுக்கு எதிரானதாக இருப்பதோடு தவிர்க்கமுடியாதபடி புதிய துன்பங்களை சிருஷ்டிக்கும்.