World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Two more bombs kill 25 civilians in Sri Lanka

இலங்கையில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

By Deepal Jayasekera
9 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை பஸ்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 25 பேர் கொல்லப்பட்டு 100 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவை தீவின் தென் பகுதியில் ஒரு வாரத்துக்குள் வெடித்த நான்காவதும் ஐந்தாவதுமான குண்டுகளாகும்.

கொழும்பின் தென் புறநகர் பகுதியான கட்டுபெத்தைக்கும் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் சுமார் காலை 7.30 மணியளவில் கொட்டாவையில் இருந்து கல்கிசை நோக்கி வந்த பஸ்ஸை ஒரு குண்டு தாக்கியது. அந்த பஸ்ஸில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். எட்டு பெண்கள் உட்பட 21 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 80 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அவர்களில் மூவர் உயிரிழந்தனர்.

இன்னுமொரு குண்டு மத்திய மலையகப் பகுதியின் தலைநகரான கண்டிக்கு அருகில் பொல்கொல்லயில் பி.ப. 3.45 மணியளவில் தனியார் பஸ் ஒன்றினுள் வெடித்தது. இதில் குறைந்தபட்சம் இருவர் கொல்லப்பட்டதோடு சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். காலையில் தாக்குதலுக்குள்ளான பஸ்ஸை விட இந்த பஸ்ஸில் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லையேல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும்.

அப்பாவி பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட மோசமான தொடர் தாக்குதல்களில் வெள்ளிக்கிழமை குண்டுத் தாக்குதல்கள் புதியவையாகும். இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் மேலும் பல வெடி குண்டுகளைக் கண்டு பிடித்ததாகவும் கூறிக்கொள்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கொழும்புக்கு தெற்காக தெஹிவலைக்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டில் 27 பயணிகள் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கான பயணிகள் இதில் பயணித்தனர். மே 31 அன்று மாலை கொழும்பு வெள்ளவத்தையில் நடத்தப்பட்ட கிரனேட் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 10 பேர் காயமடைந்தனர். மே 26 அன்று தெஹிவலை ரயில் நிலையத்தில் வேலை முடித்து வீடு திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற ரயிலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதோடு 80 பேர் வரை காயமடைந்தனர்.

அப்பாவி பொது மக்கள் மீது இத்தகைய பயங்கரமான தாக்குதல்களுக்கு பொறுப்பாளிகள் யார் என்பதற்கு முடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இவற்றை எவர் திட்டமிட்டிருந்தாலும் இவை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்குவதற்கு திட்டமிடப்பட்ட கொடூரமான குற்றமாகும். எவ்வாறெனினும், நிச்சயமாக தீர்மானிக்கக் கூடியது என்னவெனில், இந்தக் குண்டுத்தாக்குதல்கள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க பற்றிக்கொள்ளப்படும்.

முன்னைய குண்டு வெடிப்புகளைப் போலவே, கொழும்பு அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக ஆதாரங்களை வழங்காமல் புலிகளை குற்றஞ்சாட்டின. மொரட்டுவை குண்டு வெடிப்பை "இரக்கமற்ற ஒரு அமைப்பால்" மேற்கொள்ளப்பட்ட "கோழைத்தனமான தாக்குதல்" என விவரித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் புலிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தமது ஏஜன்டுகளை பயன்படுத்துவது இலங்கை இராணுவத்திற்குப் புதிதாக இல்லாத போதிலும், புலிகள் தமது சொந்த பிற்போக்கு இனவாத அரசியலின் காரணமாக சிங்கள பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தும் நீண்ட சாதனையைக் கொண்டுள்ளனர். கொழும்பு ஆளும் தட்டின் இனவாத மற்றும் இராணுவவாத கொள்கைகளை எதிர்க்க சிங்கள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, புலிகள், 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்திற்கும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தசாப்த கால பாரபட்சங்களுக்கும் முழு "சிங்கள மக்களையும்" குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த பிரிவினைவாத இயக்கத்தின் தாக்குதல்கள் ஆட்சியில் இருக்கும் கொழும்பு அரசாங்கங்களின் கைகளில் பயன்பட்டுள்ளன -அவை இனவாதத்தை கிளறிவிடவும் யுத்தத்தை முன்னெடுக்கவும் எண்ணெய் வார்க்கின்றன.

மொரட்டுவை குண்டுவெடிப்பை அடுத்து உடனடியாக மொரட்டுவைப் பல்கலைக்கழகம் உட்பட பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பல மணித்தியாலங்கள் அப்பகுதிக்கு சீல் வைத்து பொலிசாரும் இராணுவத்தினரும் வீட்டுக்கு வீடு தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்தனர். பொலிஸ் பேச்சாளரான ரஞ்சித் குணசேகர, 58 "சந்தேக நபர்கள்" கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பொலிஸ் தேடுதல் நடவடிக்கையின் பிரதான இலக்கு, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இங்கு வந்து கல்வி கற்கும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் ஆகும். பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் எமது வலைத் தளத்துடன் பேசுகையில்: "குண்டு வெடிப்பு நடந்து 2 மணித்தியாலங்களுக்குள் பொலிசார் பல்கலைக்கழகத்திற்கு விரைந்தனர். மாணவர்களோ ஊழியர்களோ அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை. மாணவர் சங்கத்தினரின் உதவியுடன் தங்குமிடங்கள் கடுமையாக சோதனையிடப்பட்டன. இந்தத் தேடுதலில் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினரும் பொலிசாரும் பங்குபற்றினர்.

பகல் உணவு வேளையில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சென்று தனது மகளை அழைத்துவர நேர்ந்த போதிலும், அங்கிருந்து வெளியேற அவர் பலமுறை பொலிசாரை கெஞ்சத் தள்ளப்பட்டார். கடைசியாக ஒரு உத்தியோகத்தர் அவரை கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர் செல்ல அனுமதித்தார். "அவர் (பொலிஸ் உத்தியோகத்தர்) எனது அலுவலக பையையும் அதனுள் இருந்து அனைத்து ஆவணங்களையும் சுமார் ஐந்து நிமிடங்கள் சோதித்தார். அன்று எனக்கு தமிழ் வகுப்பு இருந்தது. அவர் தமிழ் பாடப் புத்தகங்களைப் பற்றி கூட என்னிடம் கேட்டார். என்னுடைய செல்லிடத் தொலைபேசியும் சோதனைக்குட்படுத்தப்பட்டது மற்றும் எனக்கு வந்த அழைப்பு இலக்கங்கள் தொடர்பாகவும் என்னை விசாரித்தனர்," என அந்த ஊழியர் விளக்கினார்.

பல்கலைக்கழக ஊழியர்கள் சுமார் பிற்பகல் இரண்டு மணியளவில் இறுதியாக வெளியேற அனுமதிக்கப்பட்ட போதிலும், பொலிசார் மாலை வரையும் தங்குமிடங்கள் உட்பட பல்கலைக்கழகத்தை தொடர்ந்தும் சோதனை செய்தனர். அடுத்த நாள், ஆயுதம் தரித்த பொலிசார் பல்கலைக்கழக நுழைவாயிலில் நிறுத்தப்பட்டனர்.

குண்டு வெடித்த போதுதான் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை ஆரம்பித்திருந்த தமிழ் பொறியியல் மாணவர் ஒருவர் WSWS உடன் பேசினார். "பொலிசார் தேடுதலுக்காக உள்ளே வந்த போது, எனது சக சிங்கள மாணவர்கள் என்னை பாதுகாத்தார்கள். என்னுடைய அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டது. எங்களது விரிவுரைகள் இரத்துச் செய்யப்பட்டன. தேடுதல் நடவடிக்கையின் பின்னர் எனது தங்குமிடம் வரையும் என்னுடைய சிங்கள நண்பர்கள் என்னுடன் கூடவே வந்தனர். வெளியில் அறைகள் எடுத்து தங்கியிருந்த மேலும் ஐந்து மாணவர்களும் கைதுசெய்யப்பட்டு மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர்."

கைதுசெய்யப்படாத தமிழ் மாணவர்கள் வடக்கு அல்லது கிழக்கில் உள்ள அவர்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து தொலைவான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விசாரிக்கப்பட்டார்கள் என இந்த பொறியியல் மாணவர் தெரிவித்தார். "எப்படி மீண்டும் விரிவுரைகளுக்குச் செல்வது என்பது பற்றி நான் இப்போது சிந்திக்கின்றேன். நான் பாதுகாப்பின்மையை உணர்கிறேன். அது ஒரு கடுமையான பிரச்சினை," என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு சிங்கள பொறியியல் மாணவர் WSWS க்குத் தெரிவித்ததாவது: "தமிழ் மாணவர்கள் தங்கியிருக்கும் தங்குமிடங்களை பொலிசாருக்கும் இராணுவத்துக்கும் காட்டியது பல்கலைக்கழக நிர்வாகமே. சுமார் 20 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதோடு ஒருவருக்கு விலங்கிடப்பட்டது. அதே சமயம், மாணவர்களுக்கு மத்தியில் உள்ள ஒரு சில சிங்கள இனவாத சக்திகள் 'அவனைக் கொல்ல வேண்டும்' என சத்தமிட்டதோடு அவர் மீது கற்களையும் எறிந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும்பான்மையான சிங்கள மாணவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை."

தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி சிங்கள மாணவர்களும், தமது உணர்வுகளையும் வெளிப்படுத்தினர்: "தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வந்த பல இனவாத குண்டர்கள், தமிழ் மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என சத்தமிட்டனர். பல்கலைக்கழகத்திற்குள் பொலிசாரையும் இராணுவத்தினரையும் அடிக்கடி நுழைப்பதற்கு இந்த குண்டு வெடிப்பு பயன்படுத்தப்படுகிறது என நான் நினைக்கிறேன். அது மாணவர்கள் தமது உரிமைகளுக்காக நடத்தும் எந்தவொரு போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் விடுப்பதாகும்."

கடந்த வார குண்டுத் தாக்குதலில் இருந்தே, வடக்கில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் இருந்து தமிழர்கள் தலைநகருக்கு வருவதை இராஜபக்ஷ அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற முறையில் கட்டுப்படுத்தியுள்ளது. கொழும்புக்கு வர விரும்புபவர்கள் காரணங்களை சொல்ல வேண்டும், அவர்கள் தங்குமிடத்தையும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். பொலிசாரால் அவர்களுக்கு இந்தப் பயணத்தைத் தொடர்வதற்கான அனுமதி அட்டையை நிராகரிக்கவும் முடியும்.

பொலிசாரின் அதிகாரங்களை அதிகரிப்பது மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான கொடூரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பது இந்த குண்டுத் தாக்குதல்களின் நேரடி பிரதிபலிப்புகளாகவேயாகும். இதன் காரணமாக இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு விசுவாசமான இராணுவப் புலனாய்வுத் துறை, அரசாங்க ஏஜன்டுகள் அல்லது துணைப்படைக் குழுக்களில் உள்ள சக்திகளின் தலையீட்டை ஒதுக்கித் தள்ளவிட முடியாது.

இலங்கை அதிகாரிகள் இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக பல நிச்சயமில்லாத கதைகளை விடுகின்றனர். உதாரணமாக, மொரட்டுவை குண்டு ரிமோட் கன்றோல் மூலம் இயக்கப்பட்டதாக பொலிசார் ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் ஒரு சோடி இறப்பர் செருப்புகளும், கிழக்கில் மட்டக்களப்பு முகவரி ஒன்றைக் கொண்ட பெண் ஒருவரின் அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதல்காரர் ஒரு தமிழர் என்பதை இந்த முகவரி அர்த்தப்படுத்திய போதிலும், திட்டமிட்டவர்கள் தங்களுடன் அடையாள அட்டையையும் எடுத்து வந்தனர் என நம்புவது கடினமாகும்.

மொரட்டுவை குண்டுத் தாக்குதல் தொடர்பான ஒரு அறிக்கையில், ஜனாதிபதி இராஜபக்ஷ, சிங்களப் பெரும்பான்மையினரை தூண்டிவிட முயற்சிக்கின்றனர் என புலிகள் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். "இந்த கொடூரம்... தமிழ் மக்களுக்கு எதிரான எதிர் தாக்குதலை தூண்டி விடுவதற்கான புலிகளின் முயற்சிகளை காட்டுகின்றன. இதில் அவர்கள் நன்மையடைய முயற்சிக்கின்றனர்." "எமது நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பணியில் பொலிசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்ந்தும் உதவுமாறு" அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை பாராளுமன்றத்தில் "போர் வீரர்கள்" நினைவுதின ஆரம்பத்தின் போது, அரசாங்கம் "அடுத்த பரம்பரைக்கு யுத்தத்தை விட்டுச்செல்லாது" என அவர் வாக்குறுதியளித்தார்.

அரசாங்கம், தான் 2006ல் புதுப்பித்த ஆழமாக வெறுக்கப்பட்ட யுத்தத்துக்கு ஆதரவு பெற்றுக்கொள்வதில் அவநம்பிக்கையுடன் உள்ளது. அது தனது ஆட்டங்கண்டு போன கூட்டணியை பாதுகாப்பதன் பேரில் நியமித்துள்ள 110 அமைச்சர்களுடன் அதிகளவில் ஸ்திரமற்றுள்ளது. இந்த அமைச்சர்களின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டிலும் இல்லாததாகும். வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை உறுதியான எதிர் தாகுதல்களை எதிர்கொள்வதோடு அதிகளவு இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

மே மாதத்தில் மட்டும் 138 படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு 549 துருப்புக்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்துள்ளனர் என பாராளுமன்றத்தில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோசமடைந்துவரும் பூகோள பண வீக்கம், குறிப்பாக உணவு மற்றும் எண்ணெய் விலை, வெகுஜனங்களில் பரந்த தட்டினரின் வாழ்க்கைத் தரத்தின் மீது அதிகரித்துவரும் நெருக்குவாரத்திற்கு வழிவகுத்துள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தம்மை சுகயீன விடுமுறை பிரச்சாரத்திற்குள் கட்டிப்போட முயற்சித்தாலும், இலங்கை ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரி இந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் இரண்டு நாள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பர். அரசாங்கத்தின் பிரமாண்டமான யுத்த வரவு செலவுத்திட்டம் வறியவர்களுக்கான சமூக சேவை மற்றும் மானியங்களை விழுங்குகின்ற நிலையில், ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களும் தமது நிலைமைகளை பாதுகாத்துக்கொள்ள நெருக்கப்படுகிறார்கள்.

இந்த உயர்ந்த ஸ்திரமற்ற நிலைமையினுள், தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்தி, பிளவுபடுத்துவதையும் மற்றும் அதை யுத்த முயற்சிகளின் பின்னால் இழுத்துச் செல்வதையும் இலக்காகக் கொண்ட தனது பிற்போக்கு இனவாத பிரச்சாரத்தை உக்கிரப்படுத்துவதற்காக இராஜபக்ஷ அரசாங்கம் இந்தக் குண்டுத் தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.