World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government closes public schools to break up teachers' protest

இலங்கை அரசாங்கம் ஆசிரியர்களின் எதிர்ப்பை தகர்க்க அரசாங்க பாடசாலைகளை மூடியது

By Panini Wijesiriwardane
13 June 2008

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம், "பாதுகாப்பு" என்ற பெயரில் எடுத்த அசாதாரணமான நடவடிக்கையில், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை பிரச்சாரத்தை தடுப்பதன் பேரில் கடந்த புதன் கிழமையும் வியாழக் கிழமையும் நாட்டின் 9,714 அரசாங்க பாடசாலைகள் அனைத்தையும் மூடியது. சுமார் மாதம் 5,000 ரூபா (45 அமெரிக்க டொலர்) சம்பள உயர்வு கோரிக்கைக்கான இன்னுமொரு வேலை நிறுத்தத்தை தவிர்க்கும் வழிமுறையாக இந்த மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன -இந்தக் கோரிக்கை 1997ல் இருந்தே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அளவுக்கதிகமான பணவீக்கம் வாழ்க்கைத் தரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதிபர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இரண்டு நாட்கள் பாடசாலைக்கு செல்லாமல் இருக்கத் தீர்மானித்தனர். அதை தவிர்ப்பதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சித்திருந்த போதிலும், சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வெளியேறுவதாக விடுத்த அச்சுறுத்தல், அரசாங்கத்தின் கடுமையான செயற்பாடுகளையும் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்த அது எடுத்த முயற்சிகளையும் நேரடி சவாலுக்குள்ளாக்கியது.

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு யுத்தத்திற்கு செலவிடுவதன் பேரில், மேலும் சம்பளங்களையும் வாழ்க்கை நிலைமைகளையும் அர்ப்பணிக்க வேண்டும் எனக் கோரி வருகின்ற நிலைமையின் கீழ், பாடசாலைகளை மூடியமையானது, ஆசிரியர்களையும் மற்றும் அனைத்து உழைக்கும் மக்களையும் அச்சுறுத்துவதற்கு எடுத்த வெளிப்படையான முயற்சியாகும்.

நீண்ட காலமாக ஆசிரியர்களை பாதித்துள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பணம் இல்லை என அரசாங்கம் வலியுறுத்துகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 9,600 மில்லியன் ரூபா தேவை என லக்பிம பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். "இது தீவு பூராவும் உள்ள 'சமுர்த்தி' நிவாரணம் பெறும் 1.9 மில்லியன் குடும்பங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு சமமாகும்," என அவர் கூறினார். (சமுர்த்தி, அரசால் வழங்கப்படும் மிகச் சிறிய நலன்புரி திட்டமாகும். இதன் கீழ் மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சிறிய தொகை பணம் வழங்கப்படுகின்றது.)

2006ல் இருந்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை புதுப்பித்தமையே அதிகரித்துவரும் நிதி நெருக்கடிக்கான உண்மையான காரணமாக இருக்கும் அதேவேளை, இத்தகைய கூற்றுக்கள் வறியவர்களுக்கு எதிராக ஆசிரியர்களை இருத்தும் ஒரு பண்பற்ற முயற்சியாகும்.

கடந்த செப்டெம்பரில் 200,000 ஆசிரியர்கள் தமது சம்பளத்தை உயர்த்தக் கோரி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, "இதற்கு ஒதுக்குவதற்கு எங்களிடம் பணம் இல்லை. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்களா?" என ஆசிரியர் தொழிற்சங்க தலைவர்களிடம் ஜனாதிபதி இராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். இதற்கு முழுமையாக சரணடைந்த தொழிற்சங்கத் தலைவர்கள், இரண்டாவது வேலை நிறுத்தத்தை இரத்து செய்தனர் -இது அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் இழிவான முறையில் ஆதரிப்பதையும் மற்றும் யுத்தத்தின் முழு சுமைகளையும் தொழிலாளர் வர்க்கத்தின் முதுகில் கட்டியடிப்பதற்கான அவர்களின் முயற்சியையும் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் ஏனைய அடிப்படை தேவைகளின் விலை அதிகரிப்பும், இப்போது பூகோள ரீதியிலான விலைவாசி அதிகரிப்பும், ஆசிரியர்களை போராட்டத்தை நோக்கி தள்ளியுள்ளது. அவர்கள் 5,000 ரூபா சம்பள உயர்வை பெற்றாலும், அது அவர்களின் தேவையை விட குறைவாகவே இருக்கும். மார்ச் மாதத்தில் இருந்து பஸ் கட்டணங்கள் 27 வீதத்தாலும் புகையிரத கட்டணங்கள் 300 வீதத்தாலும் உயர்ந்துள்ளன.

தற்போது இழந்துள்ள நேரத்திற்காக மூன்றாவது தவணையில் இரண்டு நாட்கள் மேலதிகமாக பாடசாலைக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளை மூடியமை, மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களுக்கு எதிராக இருத்தும் கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரகால நிலைமையின் கீழ், அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் புலிகளுக்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என கண்டனம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் இந்த மூடுவிழா அவசரகால சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதற்கான இன்னுமொரு முயற்சியாகும்.

கல்வி அமைச்சர் பிரேம ஜயந்த வியாழக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில்: "தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்க பாடசாலை அதிகாரிகள் தவறும் பட்சத்தில், நாட்டில் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்." என பிரகடனம் செய்தார்.

இராஜபக்ஷ அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தை புதுப்பிப்பதன் மூலம் நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கிவிட்டுள்ளது என்பதே உண்மையாகும். யுத்தத்தின் குறிக்கோள் புலிகளை தோற்கடிப்பது மட்டுமன்றி, சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் இனவாத பதட்டங்களை திணிப்பதன் மூலம் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி வைப்பதுமாகும். தீவின் வடக்கில் இராணுவ பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், கைத்தொழில் மற்றும் சமூக அமைதியின்மைக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வகையில், பொலிஸ் அதிகாரங்களையும் ஏனைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் அதிகரிப்பதற்கு அண்மைய வாரங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஒரு தொகை குண்டுத் தாக்குதல்களை பற்றிக்கொண்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் அடிபணிவு

வேலை நிறுத்தத்தையோ அல்லது பொதுக் கூட்டங்களையோ ஏற்பாடு செய்ய துணிவில்லாத ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு முன்னால் மண்டியிட்டுள்ளனர். சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டீ.எஸ்.யு.) கல்விசார் பணியாளர்கள் சங்கம் (ஈ.பி.யூ.) மற்றும் அனைத்து இலங்கை ஆசிரியர்கள் சங்கம் (ஏ.சி.யூ.டீ.யூ.) ஆகியவற்றுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த கலந்துரையாடல்கள் முறிந்துபோனதை அடுத்தே அரசாங்கம் பாடசாலைகளை மூடுவதற்குத் தீர்மானித்தது.

இந்தப் பிரச்சாரத்தில் முன்னணி வகிக்கும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டீ.எஸ்.யூ.), சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) சார்ந்ததாகும். 2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வருவதில் தீர்க்கமான பாத்திரம் வகித்த ஜே.வி.பி., பாராளுமன்றத்தில் மிகவும் போர்வெறி கொண்ட கட்சியாகவும் இருந்து வருகின்றது. ஒவ்வொரு மாதத்திலும், அவசரகால ஆட்சியை தொடர்வதற்கும் அத்தியாவசிய சமூக சேவைகளுக்கு பதிலாக இராணுவச் செலவை அதிகரிப்பதற்கும் ஜே.வி.பி. தொடர்ந்தும் வாக்களித்து வருகின்றது. அது யுத்த முயற்சிகளுக்கு தடங்களாக இருக்கும் எவரையும் "தாய்நாட்டின் துரோகி" என அடிக்கடி முத்திரை குத்தியும் வருகின்றது.

அரசாங்க அதிகாரிகளுடனான சந்திப்பை அடுத்து, டெயிலி மிரர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த சி.டீ.எஸ்.யூ. பொதுச் செயாலளர் மஹிந்த ஜயசிங்க, தொழிற்சங்கம் முதலாவதாக அக்கறை செலுத்துவது அரசாங்கத்தின் நிதி நெருக்கடியிலேயே என தெரிவித்தார். "ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பள உயர்வு கொடுக்க அரசாங்கம் கொள்கை அளவில் உடன்பட்டு அதை கட்டம் கட்டமாக வழங்க உடன்படுமானால், நாட்டின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு ஆசிரியர்களும் அதிபர்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்," என அவர் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சம்பள அதிகரிப்பும் அரசாங்கத்தின் யுத்த செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதேயாகும்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) உரையாடிய ஆசிரியர்கள், யுத்தத்தை எதிர்க்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். கொழும்பு மத்திய பாடசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது: "தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களின் மத்தியில் பாதுகாப்பு விவகாரத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றார்கள் மற்றும் சாதாரண மக்கள் மத்தியில் பகைமையை விதைப்பதே அரசாங்கத்தின் எண்ணமாகும். சமுதாயத்தில் வேலை நிறுத்தங்களுக்கு எதிரான உணர்வை உருவாக்கிவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது."

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் அணுகுவார்கள் என அந்த ஆசிரியர் நம்பவில்லை. மற்றும் அரசாங்கத்தை கடுமையாக சவால் செய்ய தொழிற்சங்கத் தலைவர்களால் முடியும் என்றும் அவர் நம்பவில்லை. "ஆசிரியர்கள் என்ற வகையில், பாடசாலையில் நாங்கள் பலவித நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்கின்றோம். எங்களது பாடசாலையில் மாணவர்கள் இடப் பற்றாக்குறையால் வகுப்பறைகளில் நிரப்பப்பட்டுள்ளனர். வருடத்தில் பாதி கடந்து போயிருந்தாலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சில பாடப் புத்தகங்கள் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை. சில வகுப்பறைகளுக்கு வெளிச்ச வசதி இல்லை. போக்குவரத்து பிரச்சினைகளையும் நாம் எதிர்கொள்கின்றோம். எங்களுக்கு அரசாங்க போக்குவரத்து வசதி கிடையாது," என அவர் மேலும் தெரிவித்தார்.

இன பேதங்களுக்கு அப்பால் முழு தொழிலாளர் வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அந்த ஆசிரியர் சுட்டிக்காட்டினார். "இனவாதம் மற்றும் மத பேதங்கள் போன்ற நச்சுத்தனமான உணர்வுகளை தூண்டிவிட்டு அதிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தங்கியிருக்கின்றனர். இந்த அனைத்து உணர்வுகளையும் நாம் எதிர்ப்பதோடு ஆசிரியர்களாக மட்டுமன்றி தொழிலாளர்களாகவும் நாம் அனைவரும் ஒரு பொதுக் களத்தில் ஐக்கியப்பட வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

கண்டி கனிஷ்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியர் (வயது 56) தெரிவித்ததாவது: "இந்த சம்பளப் போராட்டத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும். அரசாங்கம் யுத்தத்தை முன்னுக்குத் தள்ளி எங்களை எதற்காகவும் கோரிக்கை விடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு யுத்தம் ஒரு வழிவகை என நான் நினைக்கின்றேன். எங்களுக்கு இந்த யுத்தம் தேவையில்லை."

கண்டியைச் சேர்ந்த அந்த ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்களின் பாத்திரத்தை எதிர்த்து கருத்துத் தெரிவித்தார். "இந்த வகையிலான சுகயீன விடுமுறை போராட்டங்களை நான் விரும்பவில்லை. கடந்த காலத்தில், எங்களது கோரிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் வேலை நிறுத்தங்கள் செய்துள்ளோம். இந்த வகையிலான போராட்டங்களில் அரசாங்கத்தின் பலமே ஓங்கும். தொழிற்சங்க தலைமைத்துவத்தில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. அவர்கள் ஏனைய தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இருந்து எங்களது பிரச்சினையை வேறுபடுத்துகிறார்கள்."

1997ல் இருந்தே, ஜே.வி.பி. தலைமையிலான ஆசிரியர் சங்கங்களின் கூட்டு, சிறந்த சம்பளத்திற்கான ஆசிரியர்களின் போராட்டத்தை திசை திருப்பவும் மட்டுப்படுத்தவும் "சம்பள முரண்பாட்டை தீர்க்கும்" கோரிக்கையை பயன்படுத்தி வந்துள்ளது. தாதியர் போன்ற ஏனைய தொழில்களுக்கு சமமாக ஆசிரியர் தொழிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதே போன்ற சம்பள மட்டமும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதில் இருந்தே இந்த "சம்பள முரண்பாட்டு" கோரிக்கை முன்கொண்டுவரப்படுகிறது. எவ்வாறெனினும் அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கை ஆசிரியர் சங்கம் (சி.டி.யூ.) மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் (டீ.டீ.யூ.) உட்பட வேறு பல தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி. யின் இனவாதத்திற்கும் மற்றும் அது அரசாங்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதை எதிர்த்து தனியான ஒரு கூட்டணியை அமைத்துள்ள அதே வேளை, ஜே.வி.பி. யின் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கும் ஆதரவளித்துள்ளன. எவ்வாறெனினும், தம்மை ஜே.வி.பி. யில் இருந்து தூர விலக்கிக்கொள்வதற்கு மாறாக, ஆசிரியர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கும் இத்தகைய தொழிற்சங்கங்களின் செயற்பாட்டில் வேறுபாடுகள் கிடையாது.

கடந்த ஆண்டு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்டதில் சி.டி.யூ. வும் இணைந்து கொண்டது. இப்போது அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு ஜூன் கடைசிவரை காலக்கெடு விதித்தாலும், இந்தக் காலக்கெடுவுக்குள் அரசாங்கம் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொழிற்சங்கங்கள் என்ன செய்யவுள்ளன என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. WSWS க்கு கருத்துத் தெரிவித்த ஸ்டாலின், பாடசாலைகள் மூடப்பட்டமை ஆசிரியர்களுக்கு ஒரு "வெற்றியே" என கூறிக்கொண்ட போதிலும், சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவரும் நிலையில் அது எப்படி வெற்றியாக அமையும் என விளக்கத் தவறிவிட்டார்.

கொழும்பு அரசாங்கத்தின் யுத்தக் கொள்கைக்கு எதிராக உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதன் பேரில் இந்தத் தொழிற்சங்கங்களில் இருந்து அவர்கள் பிரிவது அவசியமாகும். ஆசிரியர்களின் விவகாரம் தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) இந்த வார முற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில்: "இராஜபக்ஷ யுத்தத்தை உக்கிரமாக்குவதானது, பொதுக் கல்வி மற்றும் ஏனைய ஒவ்வொரு சமூக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வற்றச் செய்வது மட்டுமன்றி, பெரும் வர்த்தகர்களின் திட்டங்களுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க எதிர்ப்பை இனவாதத்தினுள்ளும் தேசியவாதத்தினுள்ளும் மூழ்கடிக்கும் முயற்சியையும் கொண்டுள்ளது. அதன் சகல முன்னோடிகளையும் போலவே, இராஜபக்ஷவின் ஸ்திரமற்ற கூட்டணியானது அழிவுகரமான ஆயுத மோதலுக்குள் நாட்டை மீண்டும் தள்ளிவிடுவதன் மூலம் வளர்ந்துவரும் சமூக அமைதியின்மைக்கு பதிலளிக்கின்றது.

"யுத்தம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீது அதிகரிக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு, அனைத்துலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தொழிலாளர்களுக்கு அவசியம். ஒரு சிலரின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையானவர்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியவாறு சமுதாயத்தை முழுமையாக மறு ஒழுங்க செய்வதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தை ஆசிரியர்களும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் முன்னெடுக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் வர்க்கமும், தெற்காசியாவிலும் மற்றும் அனைத்துலகிலும் சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்திற்காக ஐக்கியப்பட வேண்டும்.''