World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Kosovo independence fuels regionalist divisions in Spain

கொசோவோ சுதந்திரம் ஸ்பெயினில் பிராந்தியவாதப் பிளவுகளுக்கு எண்ணெய் ஊற்றுகிறது

By Paul Bond
27 February 2008

Use this version to print | Send this link by email | Email the author

சேர்பியாவில் இருந்து சுதந்திரம் பெற்று விட்டதாக கொசோவோ பிரகடனம் செய்துள்ளது ஸ்பெயினில் உள்நாட்டு அரசியல் பதற்றத்தை படு மோசமாக்கியுள்ளது, அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஏற்கனவே கொந்தளிப்பாக இருந்த சூழ்நிலை மீது இது இன்னும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருக்கிறது. சுதந்திர பிரகடனம் ஸ்பெயினின் பல உள் பிராந்தியங்களுக்குள்ளாக பிரிவினைவாதத்தை நோக்கிய இயக்கத்தை ஊக்கப்படுத்துவதாக உள்ளது, இதனால் ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் சிதறும் சாத்தியக் கூற்றினை அதிகமாக்கி உள்ளது.

ஸ்பெயின் அரசாங்கம் சுதந்திர கொசோவோவுக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்துள்ளது. இவ்வாறு மறுத்துள்ள நாடுகள் பலவும் கொசோவோவுக்கு புவிரீதியாக அருகிலிருக்கும் நாடுகள் என்றும் அவை இந்த பிராந்தியம் குறித்து நன்கு அறிந்தவை என்றும் அயலுறவுத் துறை அமைச்சர் மிகில் ஏஞ்சல் மொராடினோஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை" ஸ்பெயின் அங்கீகரிக்க முடியாது ஏனெனில் இது "சர்வதேச சட்டத்தை மதிக்காத நடவடிக்கை" என்று அவர் கூறினார்.

தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் "ஸ்பெயின் சூழலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை", ஆனால் கொசோவாவின் சுதந்திரம் "பால்கன் பகுதியில் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியாத மர்மப் பெட்டியை"த் திறந்து விட்டது போல் ஆகி விடும் என்கிற கவலையால் தான் இந்த நிலைப்பாடு தோன்றியுள்ளது என்று மொராடினோஸ் தெரிவித்தாலும், அவர் குறிப்பிட்டுப் பேசியது தெளிவாக, பாஸ்க் பிராந்தியம் மற்றும் கடலோனியாவில் பிரிவினைவாதம் அல்லது குறைந்தபட்சம் கூடுதல் சுய அதிகார கோரிக்கைகளை ஏற்கனவே கடுமையாக முன்நிறுத்தி வரும் நடவடிக்கைகளை குறி வைத்துத் தான். ஆளும் ஸ்பானிய சோசலிச தொழிலாளர் கட்சியும் (PSOE) மற்றும் பிரதான எதிர்க்கட்சியான வலதுசாரி பொதுமக்கள் கட்சியும் (PP), கொசோவோ விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டையே எடுத்திருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஸ்பெயின் குழு, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய முக்கிய ஐரோப்பிய சக்திகள் கொசோவோவுக்கு அங்கீகாரம் அளிப்பதை எதிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது, ஒரு பொது நிலைப்பாட்டை வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில். அங்கீகாரத்திற்கு எதிராக பெரும்பான்மையை வெல்வதற்கு இயலாமல் போனாலும், கொசோவோ ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படக் கூடாது என்று வலியுறுத்திய ஸ்பெயின், இது ஒரு "சிறப்பு விவகாரம்" என்று அறிவிக்க நிர்ப்பந்தித்ததற்கான பெருமையை பெற்றுக் கொண்டது.

சட்டபூர்வமாக, பிரிவினை என்பதற்கு இரண்டு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தமோ அல்லது ஒரு ஐநா பாதுகாப்பு சபை தீர்மானமோ தேவை என்று கூறிய மொராடினோஸ், சுதந்திர பிரகடனம் ஐநா விதிமுறைகளுக்கு எதிராக நடந்த ஒன்று என்று சுட்டிக் காட்டினார்.

ஸ்பெயினின் வற்புறுத்தலின் பேரில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, "இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக் கோட்பாடுகளுக்கு இணக்கமாக செயல்பட" உறுப்பு நாடுகளுக்கு உள்ள கடமைப்பாட்டை உள்ளடக்கியதாக இருந்தது, அத்துடன் கொசோவோவினை ஒரு "சுதந்திரமான அரசாக" குறிப்பிட்டிருந்ததும் நீக்கப்பட்டிருந்தது. மற்றுமொரு சரத்து கொசோவோவினை அங்கீகரிக்கும் முடிவானது "சர்வதேச சட்டத்துடன்" இயைந்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது.

PSOE க்கு நெருக்கமான பத்திரிகையான El Pais தனது ஆசிரிய தலையங்கத்தில் பிரகடனத்தின் சட்டவிரோதத்தன்மை குறித்த அரசின் நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்திருந்தது. அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததன் காரணம் கொசோவோவின் உகந்த நிலை "எந்த வகையிலும் தெளிவுற" இல்லாதது தான் என்று தெரிவித்த இந்த பத்திரிகை, "மற்ற மோதல்கள் விஷயத்தில் இந்த பிரகடனம் ஒரு தவறான முன்னுதாரணத்தை நிறுவுவதாக"வும் தெரிவித்தது.

வலது சாரி விமர்சகர்களும் இந்த முன்னுதாரணத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். PP மீது அனுதாபம் கொண்ட தினசரியான ABC எச்சரித்தது, "ஒன்றுமே இல்லாமல் ஒரு புதிய அரசாங்கம் உருவாவதற்கு சம்மதிப்பதன் மூலம்.........மேற்கத்திய சக்திகள் வெறும் தத்துவார்த்த அறிக்கைகள் மூலம் அகற்ற முடியாத ஒரு முன்னுதாரணத்தை நிறுவி இருக்கின்றன".

கொசோவோ விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளானது PSOE ஐ கல்லுக்கும் கடினத்தரைக்கும் இடையில் சிக்குண்டதைப் போல் ஆக்கி விட்டது, தனது ஐரோப்பிய கூட்டாளிகளுடன் நட்புரீதியான உறவுகளையும் பராமரிக்க வேண்டும், ஸ்பெயினுக்குள்ளாக பிராந்தியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தையும் எதிர்த்தாக வேண்டும். ஆனால் இது எளிதாகத் தீர்த்து விடக் கூடிய ஒரு பிரச்சினை அல்ல. இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரகடன அறிக்கை தங்களுக்கு ஏற்புடையதே ஏனென்றால் இது கொசோவோவினை ஒரு தனி அரசு என கூறாமல் சமாளித்திருக்கிறது என்று கூறினார் மொராடினோஸ்.

எது எப்படியோ, ஸ்பெயின் கொசோவோ சதுப்புகுழிக்குள்ளே இழுக்கப்படத் தொடங்கி விட்டது. கொசோவோவில் உள்ள நேட்டோ அமைதிப் படையில் 1,200 ஸ்பெயின் துருப்புகளுக்கு மொராடினோஸ் உறுதியளித்திருக்கிறார், தவிரவும் ஐநா படைகளை மாற்றுவதற்கு அனுப்பப்படும் 1800 பேர் கொண்ட வலிமையான ஐரோப்பிய ஒன்றிய பணிக்குழுவிற்கான போலிஸ் பிரிவு ஒன்றிற்கும் மற்றும் சுமார் 20 நிபுணர்களுக்கும் உறுதி அளித்துள்ளார்.

கொசோவோ பிரகடனத்திற்கு சற்று முன்னதாக ரஷ்யாவுடன் ஏற்பட்ட ஒரு மோதலின் போது ஸ்பெயினின் சிக்கல்கள் கொட்டித் தீர்க்கப்பட்டது. பிரகடனம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே கொசோவோ சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பிராந்திய பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில் ஐரோப்பிய "இரட்டை வேடத்தின்" மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

"பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்துவதால் என்ன பலன்?" என்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் வினவினார். "ஒரு ஸ்பெயினில் ஒற்றை அரசின் இதயத்தில் மக்கள் வாழ விரும்பவில்லை. சரி, அப்போது அவர்களையும் நாம் ஆதரிக்கலாம் தானே!".

பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக புட்டின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார் என்றாலும் கூட, கொசோவோவினை வெளிப்படையாக கட்டலோனியா மற்றும் பாஸ்க் பிராந்தியத்துடன் ஒப்பிட்டதே ஸ்பெயின் அரசாங்கத்தால் சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த பேச்சு குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டார். அவரோ உடனடியாக இவை ஸ்பெயினின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நோக்கத்தில் கூறப்பட்டவை அல்ல என்றும், ரஷ்யா "ஸ்பெயினின் அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு முழுமையாக" மரியாதையளிக்கிறது என்றும் கூறி மறுதலிப்பதாக அறிக்கை விடுத்து விட்டார்.

பாஸ்க் மற்றும் கட்டலோன் பிராந்திய பிரிவினைவாதிகள் ஒருதரப்பான கொசோவோ பிரகடனத்தினை வரவேற்பதில் துரிதம் காட்டினர், தங்களது சொந்த இலட்சியங்களுக்கு இது ஒரு முன்னுதாரணம் என்று பாராட்டு தெரிவித்தனர்.

கொசோவோ சுதந்திர வடிவத்தின் மீது தந்திரோபாய சம்மதமின்மையின் வெளிப்பாடுகள் இருப்பினும் கூட, மார்ச் 9 இல் தேர்தல் வர இருக்கும் நிலையில் இது பிரிவினைவாத சக்திகளுக்கு அரசியல் ரீதியான ஊக்கத்தை அளிக்கும் என்று இந்த பிராந்தியங்களில் ஒரு பரந்துபட்ட கருத்து இருந்தது. பிராந்திய தன்னாட்சி என்பது ஏற்கனவே தேர்தலில் ஒரு அரசியல் விவகாரமாக இருக்கிறது, PSOE பிரதமர் ஜோஸ் லூயிஸ் ஸபடெரோ ETA (பாஸ்க் தாயகம் மற்றும் சுதந்திரம்) உடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்ததன் மூலம் பாஸ்க் பிரிவினைவாதத்தை ஊக்குவித்திருப்பதாக PP குற்றம் சாட்டி வருகிறது. பிரச்சாரத்திற்கு முன்னோடியாக பிரிவினைவாத விவகாரத்தில் PSOE கடுமையான நிலை எடுத்துள்ளது, இரண்டு பாஸ்க் கட்சிகள் நிற்பதை தடுக்க முயற்சி செய்துள்ளது.

ஸ்பெயினின் 17 சுயாட்சி பிராந்தியங்களுமே குறிப்பிடத்தக்க அரசாங்க அதிகாரங்களை கொண்டுள்ளன, ஆனால் பணம் மிகுந்த பிராந்தியங்கள், குறிப்பாக பாஸ்க் தேசம் மற்றும் கடலோனியா ஆகியவை, பொருளாதார முடிவுகள் மேற்கொள்ளும் சுதந்திரத்திற்கான நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி வருகின்றன. பிரிவினைவாத இயக்கங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புகளை நோக்கிய நோக்குநிலையையே கொண்டுள்ளன. இவை பெருநிறுவன வரிகளைக் குறைப்பதன் மூலமும், ஸ்பெயினின் ஏழைப் பிராந்தியங்களுக்கான அனுமதிக்கப்படாத மானியமாக சித்தரிக்கப்படும் தேசிய வரிகளை செலுத்தாமல் இருப்பதன் மூலமும் சர்வதேச முதலீட்டினை கவர்வதற்கு முயல்கின்றன.

பாஸ்க் தேசத்தில் அரசியல் சட்ட பாஸ்க் தேசிய கட்சி (PNV) பிராந்திய கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமையேற்றிருக்கிறது. இக்கட்சி கொசோவோவினை அங்கீகரிக்க ஸ்பெயினை வலியுறுத்தும் என்று PNV கட்சித் தலைவர் இனிகோ உர்குல்லு தெரிவித்துள்ளார்.

கொசோவோ பிரகடனம் "அடையாளத்திற்கான மோதல்கள்" பற்றிய விவகாரங்களை தீர்ப்பதில் "பின்பற்ற வேண்டிய ஒரு பாடம்" என்று பாஸ்க் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பு பெண்மணியான மிரென் அஸ்கரதே தெரிவித்துள்ளார். "மக்கள் விருப்பத்திற்கு" மரியாதை அளிப்பது "அரசியல் இடையூறுகளுக்கு தீர்வு காண்பதற்கான திறவுகோல்" என்றார் அவர்.

இது கொசோவோ விவகாரத்தை பொறுத்தவரை முழுக்க உண்மையில்லை, சுதந்திர பிரகடனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. புதிய கொசோவோ பிரதமர் ஹஸிம் தாஸியே கூட, அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் இரகசியமாக ஆயுதம் வழங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டடும் ஒரு குடிப்படையான கொசோவோ விடுதலை இராணுவத்தின் (KLA) ஒரு உறுப்பினர் தான்.

மற்றொரு பிரிவினைவாதக் கட்சியான அரலார் கட்சியும் இந்த நடவடிக்கை "உரிமைகள் பாதுகாப்பில் ஒரு பாடம்" என்று வர்ணித்துள்ளது, தேசிய அரசு "பாஸ்க் பிராந்திய மக்களுக்கு தங்களது எதிர்காலத்தை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் முடிவு செய்து கொள்ளும் உரிமையை அளிக்க வேண்டும்" என்றும் அது அழைப்பு விடுத்துள்ளது.

PNV இல் இருந்து பிரிந்து ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் இஸ்கோ அல்கர்தாசுனா (EA), ஒருதலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்வதை விட சுதந்திரத்தின் மீது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துவதையே தாங்கள் விரும்பியதாகக் கூறியுள்ளது.

இன்னுமொரு எட்டு மாத காலத்தில் பாஸ்க் பிராந்தியத்தின் வருங்காலம் மீது இத்தகையதொரு கருத்துக் கணிப்பினை நடத்துவதற்கு PNV விரும்புகிறது. தேசிய அரசாங்கத்தால் சட்டவிரோதம் என்று கருதப்படுகின்ற நிலையிலும், இது பிராந்தியத்திற்கான சுதந்திரம் உள்ளிட்ட வருங்கால வாய்ப்புகள் மீதான பிராந்திய மக்களின் "தீர்மானிக்கும் உரிமையை" குறித்தது என்று இது கருதுகிறது.

இந்த திட்டத்தை வகுத்தவரான PNV இன் பிராந்திய பிரதமர் ஜுவான் ஜோஸ் இபார்ட்க்ஸ் இதனை அவரது கட்சி ETA உடன் கொண்டுள்ள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான இறுதி வழியாக கருதுகிறார். கொசோவோ சூழலை பொறுத்து தான் தங்களது வருங்கால நடவடிக்கைகள் அமையும் என்று பிரகடனத்திற்கு முன்னதாக ETA அறிவித்திருந்தது.

கட்டலோனிய வடகிழக்குப் பிராந்தியத்தில், கட்டலோன் குடியரசு இடது கட்சியும் (ERC) கொசோவோ பிரகடனத்தை "ஒரு முக்கியமான முன்னுதாரணமாக" வர்ணித்துள்ளது. ERC இன் தலைவரும் பிராந்திய துணை ஜனாதிபதியுமான ஜோசப் லூயிஸ் கரோட்-ரோவிரா அங்கீகாரத்திற்கு வலியுறுத்தினார். முன்னதாக அவர் 2014 க்குள்ளாக சுதந்திரத்திற்கான கட்டலோன் கருத்துக்கணிப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்து வந்திருக்கிறார்.

தேசியவாத கான்வெர்ஜின்சியா இ உனியா (CiU) கட்சியின் தலைவரான ஆர்தஸ் மாஸ் ஸ்பெயின் கொசோவோவினை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "ஐரோப்பிய ஒன்றியத்தின் அநேக நாடுகள் அங்கீகரித்துள்ள ஒன்றினை PSOE அங்கீகரிக்க மறுக்குமானால், அது பயப்படுகிறது என்பதையோ அல்லது அதற்கு ஜனநாயகம் என்பதே மனதில் இல்லை என்பதையோ தான் காட்டுகிறது" என்றார் மாஸ்.

பாஸ்க் பிராந்தியத்தை போலல்லாது, கட்டலோனியா எந்த ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. மாஸ் கூறியதைப் போல பிராந்திய அரசியல்வாதிகள் கஷ்டப்பட்டு "கட்டலோனியா கொசோவோ இல்லை" என்று வாய் வலிக்கக் கூறி வருகிறார்கள். கொசோவோவின் வன்முறை நிறைந்த கடந்த காலம் காரணமாக அது தங்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது என்று CiU இன் பெரெ மசியாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினுக்குள்ளான தேசியவாத பிரிவினைவாதம் என்பது இரண்டு அதிமுக்கிய பிராந்தியங்களுக்குள் மட்டும் அடங்கி விட்டிருக்கவில்லை. கலிசியாவில் இருக்கும் பிராந்தியவாதிகளும் கொசோவோ சுதந்திரத்தை வரவேற்றுள்ளனர். "சுய-தீர்மானத்தின் எந்த ஒரு செயல்முறையும் ஐரோப்பாவின் எந்த ஒரு பகுதியிலும் சட்டப்பூர்வமானது தான்" என்று கலிசிய தேசிய கட்சியின் (BNG) ஃபிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிராந்திய தன்னாட்சிக்கு கூடுதலான விரிவுகளை அளிப்பது தான் PSOE இன் பதிலிறுப்பாக இருக்கிறது. "பாஸ்க்கும் கொசோவோவும்" எனத் தலைப்பிட்ட சமீபத்திய ஆசிரியர் தலையங்க கட்டுரை ஒன்றில் பிரபல மூத்த EL Pais செய்தியாளர் மிகெல் ஏஞ்சல் அகுய்லார், கொசோவோவின் "கவலையளிக்கும் காட்சிகளுக்கும்" பாஸ்க் பிராந்தியத்தின் "பிராந்திய தன்னாட்சிக்கான எடுத்துக்காட்டாய் பின்பற்றத்தக்க அமைப்புக்கும்" உள்ள வேறுபாடுகளை பட்டியலிட்டிருக்கிறார். ஐபார்ட்க்ஸின் திட்டங்கள் "கொசோவோ படுகுழியுடன் ஏதேனும் ஒற்றுமைகள் கொண்டிருக்குமானால், பாஸ்க் மக்கள் இந்த ஒட்டுமொத்த யோசனையில் இருந்தும் தள்ளி நிற்பதற்கு தெரிந்தவர்கள்" என்று அவர் எச்சரித்தார்.

இது போன்ற எச்சரிக்கைகள் இருந்தாலும் கூட, அரசியல் நிகழ்வுகள் தங்களுக்கென்று தனி தர்க்க காரணங்களை கொள்ளக் கூடியவை. கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம், போர் அபாயத்தை தீவிரமாக்கக் கூடிய வகையில் நிலவும் அரசியல் கட்டமைப்புகள் மற்றும் அரசுகளின் சுமூக சமரச உறவுமுறையை உடைப்பதில் புதியதொரு கட்டத்தைக் குறிக்கிறது, இந்த தவறான நிலைப்பாடுகள் பால்கன்களை தாண்டியும் வெகுதூரம் வரை எட்டியிருக்கிறது.