World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China cracks down on Tibetan protests

திபெத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது சீனா கடும்நடவடிக்கை

By John Chan
19 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

1959ல் தலாய் லாமா தலைமையில் நடத்தப்பட்டு தோல்வியுற்ற கிளர்ச்சியின் 49வது வருட நிறைவை ஒட்டி மார்ச் 10 முதல் ஆர்ப்பரிக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கலகங்களும் திபெத்தை உலுக்கி வருகின்றன. இந்த கிளர்ச்சியானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமையை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது - மூர்க்கமான அடக்குமுறையை கையாண்டால் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில மாதங்களே இருக்கின்ற சூழ்நிலையில் கூடுதலான சர்வதேச கண்டனங்களை சந்திக்க நேரும், சலுகைகள் எதனையும் அளித்தால் அது சீனாவின் பிற எங்கிலும் மற்றும் சனியன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் தைவானிலும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக அமையக் கூடும். இது தவிர, திபெத்தில் போராட்டங்கள் 12 வருடங்களில் வேலை இல்லாத் திண்டாட்டமும், பணவீக்க விகிதமும் மிக உயர்ந்த நிலைகளுக்கு சென்றிருப்பதன் மீதான சமூக அதிருப்தியை பரவலாக்கக் கூடும் என்பதனை சீனா நன்கு அறிந்தே வைத்துள்ளது.

இந்த ஆண்டு சீனாவில் நிலவும் அரசியல் சூழலானது 1980களின் பிற்பகுதியை நினைவூட்டுகிறது, அப்போதும் விலைவாசி உயர்வு மற்றும் சந்தை சீர்திருத்த விளைவு இவற்றின் மீதான வெறுப்பு ஏராளமான போராட்டங்களுக்கு வித்திட்டது. மார்ச் 1989 இல், திபெத்தின் மதத் தலைவரான 10வது பஞ்சன் லாமாவின் மரணம், திபெத் தலைநகர் லாஸாவில் அடுத்து வந்த தொடர்ச்சியான கலவரத்தின் குவிமையமாக அமைந்தது. ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ, அப்போது திபெத் CCP -இன் தலைவராக இருந்த அவர், நகரில் இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த அபிவிருத்திகள் அடுத்து சில மாதங்களில் கூடுதலான சம்பவங்கள் வெடிப்பதை முன்னறிவித்தன, தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் நாடுதழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இறுதியில் ஜூன் 4ல் பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் இரத்தம் தோய்ந்த இராணுவ ஒடுக்குமுறையில் முடிந்தது. திபெத்தில் ஹூவின் ஒடுக்குமுறையானது டெங் சியாவோபிங்கின் வாரிசாவதற்கு CCP ஆதரவை அவருக்கு பெற்றுத் தந்தது.

1959 சிஐஏ ஆதரவுடன் நிகழ்ந்த கிளர்ச்சியின் ஆண்டு நினைவையொட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ட்ரெபெங் மடாலயத்தை சேர்ந்த 60 துறவிகள் சீன போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து சமீபத்திய கிளர்ச்சி வெடித்தது. அதேநாளில், நாடு கடத்தப்பட்டு இந்தியாவில் இருந்த தலாய் லாமா அறிவித்தார்: "ஏறக்குறைய ஆறு தசாப்தங்களாக சீன ஒடுக்குமுறைக்கு தொடர்ந்து அஞ்சி திபெத்தியர்கள் வாழ நேர்ந்திருக்கிறது" என்று. அடுத்த நாள் கைது செய்யப்பட்ட துறவிகளை விடுதலை செய்யக் கோரி லாஸா காவல்துறை தலைமையகத்திற்கு முன்னால் சுமார் 600 துறவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்ற வாரம் ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் நகரில் பலர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளியன்று, ரமோசே மடாலயத்தின் துறவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை உள்ளூர் போலீசார் தடுத்தனர். இது தசாப்த தசாப்தங்களாக பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இரண்டாம் நிலைக் குடிமகன்களாக நடத்தப்பட்டு வரும் சாதாரண திபெத்திய குடிமக்களிடம் இருந்து கோபமான எதிர்வினையை தூண்டியது. நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளூரின் ஹான் சீனர்களுக்கு சொந்தமான சுமார் 100 கடைகள், வங்கிகள் மற்றும் ஹோட்டல்களையாவது அடித்து நொருக்கியதோடு தீவைத்து கொளுத்தினர். கார்களும் பஸ்களும் கூட தீவைத்துக்கொளுத்தப்பட்டன.

ஆயிரக்கணக்கான இணை இராணுவ போலீஸ் அதிகாரிகள் கலவரத்தை அடக்க குவிக்கப்பட்டனர். முற்றிலுமாக இந்த விவகாரங்களை மூடி மறைக்க முயலாமல், சர்வதேச விமர்சனங்களில் இருந்து தப்பிக்கும் பொருட்டு அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகமானது திபெத் போராட்டங்களை அளவோடு ஒளிபரப்பியது. "சம்பவம் முழுவதிலும், லாஸா போலிஸ் அதிகாரிகள் பெரும் அளவில் பொறுமையை கையாண்டனர். அவர்கள் அமைதியாகவும், வேலைநுட்பத்துடனும் இருந்தனர், அவர்களுக்கு பலப் பிரயோகம் செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு இருந்தது", என்று அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஸின்குவா தெரிவித்தது.

இருப்பினும், இந்த கூற்றுகளுக்கு எல்லாம் எந்த நம்பகத்தன்மையுமில்லை. வெளிநாட்டு செய்தியாளர்கள் திபெத்துக்குள் செல்வதில் இருந்து தடை செய்யப்பட்டார்கள், அனுமதிக்கப்பட்ட ஒரே செய்தி நிறுவனமான CNN ஒளிபரப்ப இயலாமல் செய்யப்பட்டது. சீனாவின் இணைய போலிசும் இந்த கலகம் தொடர்பான தகவல்களை வடிகட்டி வருகிறது. திபெத்தில் கைபேசி சிக்னல்கள் கூட வெளிப்படையாக தடை செய்யப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் வெளியேறக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

சென்ற வெள்ளியன்று லாஸாவில் நடந்த கலகத்தின் போது குறைந்தபட்சம் 13 "அப்பாவி பொதுமக்களாவது" கொல்லப்பட்டனர் என்று சீன ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் தெளிவின்றி தான் இருக்கிறது. கலகக்காரர்களை போலீசார் சுற்றி வளைத்தவுடன் மூன்று பேர் மாடியில் இருந்து குதித்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கலகக்காரர்கள் ஹான் சீன மற்றும் ஹூய் முஸ்லீம் பொதுமக்களை மற்றும் கடைகளை அடித்து நொறுக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய அரசு ஊடகம், போலீஸ் அடக்குமுறையின் காட்சிகள் எதனையும் காட்டவில்லை. கலகக்காரர்களை "ரவுடித்தன" மற்றும் "போக்கிரித்தன" உறுப்புகள் என்று அரசு அதிகாரிகள் வர்ணித்தனர், இதே வார்த்தைகள் தான் 1989 இல் தியானென்மென் சதுக்க ஆர்ப்பாட்டக்காரர்களை வர்ணிக்கவும் பயன்படுத்தப்பட்டது. தாமாக நிறுவிக்கொண்ட புலம்பெயர்ந்த நிலையிலுள்ள தலாய் லாமாவின் அரசாங்கமானது, சீன துருப்புகளால் குறைந்தபட்சம் 99 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

லாஸாவின் பெரும்பகுதிகள் இணை இராணுவப் படையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன, ஆயுத வாகனங்கள் தெருக்களில் ரோந்து சுற்றி வருகின்றன. திங்கள் நள்ளிரவு கெடுவுக்குள் சரணடையுமாறும் இல்லாவிட்டால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கலகக்காரர்களுக்கு இராணுவ வாகனங்களில் வந்த படையினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 105 பேர் சரணடைந்ததாக கூறப்படுகிறது. தெருவாசிகள் "நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் பேதமறிந்து நடந்து கொள்ளுமாறும், ஒழுங்கை பராமரிக்குமாறும்" தெருக்களில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன. திபெத் புத்தமதத்தின் மிகப் புனித கோவிலாக கருதப்படும் புராதன ஜோகாங் கோவிலை சுற்றி பெரும் ஆயுதமேந்திய சீன துருப்புகள் ரோந்து சுற்றியதாக கூறப்படுகிறது.

திங்களன்று, சுமார் 600 ஆர்ப்பாட்டக்காரர்கள் சீன பாதுகாப்பு படையால் சுற்றி வளைக்கப்பட்டனர். பொதுமக்களை பயமுறுத்துவதற்காக, 40 கைதிகள் தெருக்கள் வழி அழைத்துச் செல்லப்பட்டதாக லண்டனில் இருந்து வரும் டைம்ஸ் கூறுகிறது. இந்த நடவடிக்கைகள் திபெத்தின் சொந்த "மதத் தலைவராக" சீனாவால் அங்கீகாரம் பெற்றவரான பஞ்சான் லாமாவால் ஆதரிக்கப்பட்டன, ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த "வன்முறைக்கும்" அவர் கண்டனம் தெரிவித்தார்.

இந்த கிளர்ச்சியானது அண்டை மாகாணங்களான கன்சு, கிங்காய் மற்றும் சிச்சுவானுக்கும் பரவி விட்டது. சென்ற ஞாயிறன்று, சிச்சுவானில் ஒரு போலீஸ் ஸ்டேஷன், மார்க்கெட் மற்றும் வீடுகள் மீது திபெத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை எறிந்ததோடு ஒரு போலீஸ் ஸ்டேஷனையும் தீவைத்துக் கொளுத்தினர். கான்சு மாகாண தலைநகரான லான்ஸோவில், ஞாயிறன்று மாலை வடமேற்கு சிறுபான்மையினர் பல்கலைக்கழகத்தில் திபெத்திய மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். கான்சுவின் மற்றொரு நகரான ஸியாஹெவில், ஞாயிறன்று லப்ராங் மடாலயத்தின் துறவிகள் உள்ளிட்ட 1,000 திபெத்தியர்களைக் கொண்ட போராட்டத்தை போலீசார் அடக்கிய பிறகு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பெய்ஜிங்கிலும் கூட, திங்களன்று இரவு சீனாவின் அரசியல் போலிசாரின் கண்காணிப்பின் கீழ் மத்திய தேசிய இனங்களின் பல்கலைக்கழகத்தின் 200 மாணவர்கள் ஒரு அமைதியான மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்தினார்கள்.

சமூகப் பதட்டங்கள்

ஆரம்பத்தில் தலாய் லாமா அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், சர்வதேச ஊடகங்களின் வெளிச்சம் அதிகரித்ததும், திபெத்தியர்களுக்கு எதிரான "தீவிரவாத அடக்குமுறை" மற்றும் "கலாச்சார படுகொலைக்காக" சீன அரசை அவர் விமர்சிக்க தொடங்கியிருக்கிறார். இந்த கலவரங்களின் பின்னணியில் அவர் இருப்பதாக சீனா கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ள போதிலும், அவரது கருத்துகள் சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள திபெத்தியர்களை மேலும் தூண்டி விட்டிருக்கிறது என்பது உண்மை. உலகெங்கும் பல நகரங்களில் சீனத் தூதரகங்களுக்கு வெளியே திபெத்தியர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் சிறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன.

திபெத்துக்கு இன்னும் அதிகமான தன்னாட்சி அதிகாரத்தை பெற சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு இந்த போராட்டங்களை பயன்படுத்திக் கொள்ள தலாய் லாமா முயற்சிக்கிறார். சுதந்திரத்திற்கான தங்களது முந்தைய கோரிக்கைகளைக் கைவிட்டு விட்டு, முன்னாளில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கினை போலவே, ஒரு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் மூலம் சீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தங்களது எதிர்காலத்தை இணைத்துப் பார்க்கும் திபெத்திய மேல்தட்டின் ஒரு பகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பெய்ஜிங்கை அளவுக்கதிகமாக குற்றச்சாட்டுகளில் தள்ள விரும்பாமல், வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கான பொறுப்பினை தலாய் லாமா மறுத்திருக்கிறார். "நாம் சீன எதிர்ப்பு உணர்வுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் அருகருகில் தான் வசித்தாக வேண்டியிருக்கிறது" என்று வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர நேற்று அவர் விடுத்த வேண்டுகோளின் போது தெரிவித்தார். நிலைமை "கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமானால்" தான் நாடு கடத்தப்பட்ட நிலையிலுள்ள திபெத்திய அரசாங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும் அவர் கூறினார்.

தலாய் லாமாவின் கோரிக்கைகளின் குவிமையமானது எதிர்ப்பினை திபெத்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதான விவகாரத்திற்குள் மட்டும் செலுத்துவது என்பதாகும். இருந்தாலும் லாஸா போராட்டங்களுக்கு பின்னால், திபெத்தின் நகர மற்றும் கிராம ஏழைகள் சீனா முழுவதும் உள்ள தங்களது சக மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார வறுமையின் அதிருப்தி ஆழத்தில் இருக்கிறது. சீன அரசாங்கத்தைப் போலவே, மொழி மற்றும் கலாச்சாரப் பிளவின் வழி ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்க்கும் ஒரு சமூக இயக்கம் குறித்து தலாய் லாமாவும் பயந்து போய் தான் இருக்கிறார்.

Financial Times பத்திரிகையில் மார்ச் 16 அன்று வெளியான ஆசிரிய தலையங்கத்தில், திபெத்தில் வறுமையை குறைப்பது குறித்த தனது சொந்த பரப்புரை குறித்து சீனா பிழையாக நம்பிக் கொண்டிருந்தது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "இந்த அணுகுமுறையின் அபாயம் கடந்த சில நாட்களில் தெளிவாகியிருக்கிறது. நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பலன்களுக்கு சீனாவுக்கு நன்றிவயப்படுவது என்பதையெல்லாம் கடந்து, இப்போது அரசாங்கத்தின் மீதும், திபெத்திற்குள் ஏராளமாக குடியேறி இங்கு வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஹான் சீன குடியேற்றக்காரர்கள் மீதும் திபெத்தியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்".

சீன ஆட்சியால் 1990களில் அமலாக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்களானது, சுமார் 3 மில்லியன் பேர் கொண்ட திபெத் மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட திபெத்தின் விவசாயிகள் மற்றும் மேய்ச்சல்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை பாழ்படுத்தி விட்டது. அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டு நிலையான ஆண்டுக்கு 150 டாலர் என்கிற நிலைக்கு கீழ் ஒரு மில்லியன் மக்கள் வாழும் நிலையில், திபெத் தான் ஏற்கனவே சீனாவின் மிகுந்த ஏழைப் பிராந்தியமாக இருக்கிறது. 2006 இல் கிங்காய்-திபெத் ரயில்வே திறப்பு சமூகப் பிளவுகளை துரிதப்படுத்தியிருக்கிறது. விரிவடையும் சுற்றுலாத் துறை, மற்றும் சில்லறை வியாபாரத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் எல்லாமும் ஹான் குடியேற்றக்காரர்கள் மற்றும் திபெத்திய மேல்தட்டின் ஒரு சிறு பணக்கார அடுக்கால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது, நகர மற்றும் கிராம ஏழைகளால் அல்ல.

திபெத்தின் மேய்ச்சல்காரர்களை நகர்ப்புற பகுதிகளுக்கு நகர்த்த 2000 முதல் சீனா மேற்கொண்டு வரும் பிரச்சாரமானது 700,000 மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியிருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் அறிக்கை எச்சரிக்கிறது. மேய்ச்சல்காரர்களை நகரமயமாக்குவது "நவீனமயமாக்கலின் ஒரு ஞானம் பெற்றதான ஒரு வடிவமாகும்" என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள், ஆனால் அவர்களின் அணுகுமுறையானது அதிகாரத்துவத்தினுடையதாக இருக்கிறது, அவர்களின் முக்கிய இலக்கு முதலீட்டாளர்களுக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிலத்தை ஏற்பாடு செய்து தருவதே. இவ்வாறு இடம் மாற்றப்பட்ட திபெத்திய மேய்ச்சல்காரர்கள், சீன மொழி பேசத் தெரியாத நிலையில், மிகக் குறைவான சம்பளத்துடனான கூலித் தொழிலாளிகளாக தான் இருக்க முடியும் என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. சிறு வர்த்தகங்கள் தொடக்குவதற்கு அவர்களிடம் பணம் எதுவும் இல்லை. சில மேய்ச்சல்காரர்கள் விவசாயிகளாக மாறுவதற்கு முயற்சித்தனர், ஆனால் அரசாங்கம் அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை.

F.R. HRW வசம் கூறியதாவது: "சீனர்கள் எங்களது வேலையைத் [மேய்ச்சல்] தொடர விடாமல் எங்களை சீனா கட்டியுள்ள நகரங்களில் வாழ நிர்ப்பந்திக்கிறார்கள், இதனால் கால்நடைகளும் இன்றி நாங்கள் வேறு எந்த தொழிலும் செய்ய முடியாது, பிச்சைக்காரர்களாக தான் நாங்கள் ஆகப் போகிறோம்". Z.R. கூறினார்: "புதிய வீடுகள் எதுவும் கட்டப்படவில்லை, பழைய சிறைச்சாலை கட்டடங்களில் வெறுமனே புதிய கதவுகளையும் சன்னல்களையும் தான் போட்டிருக்கிறார்கள். மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை கொண்டு வருவது பற்றி அரசாங்கம் அதிகமாய் விளம்பரங்கள் செய்தது, ஆனால் அங்கே நகர்ந்தவர்களோ அங்கு அத்தகைய வசதிகள் இல்லை என்கிறார்கள். கடைசியாக உணவு மானியம் வழங்குவது குறித்து அரசாங்கம் பேசிக் கொண்டிருந்தது, ஆனால் இதுவரை எதுவும் கிடைத்தபாடில்லை...."

அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் சீனாவின் அடக்குமுறை குறித்து எச்சரிக்கையுடன் விமர்சனம் செய்துள்ளன. "ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாளுவதில் கவனமாகச் செயல்படுமாறு" சென்ற ஞாயிறன்று சீனாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொன்டலிஸா ரைஸ், சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார். சென்ற ஆண்டு தலாய் லாமாவுடன் சந்திப்பு நிகழ்த்தி சீனாவுக்கு வெறுப்பூட்டிய ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கெலின் செய்தித் தொடர்பாளர், ஜேர்மனி "திபெத்தின் கலாச்சார மற்றும் மத சுயாட்சிக்கான உறுதியை புரிந்து கொள்ளவும் ஆதரிக்கவும் செய்வதான" அதே நேரத்தில், சீனாவின் "பிராந்திய ஒருமைப்பாட்டையும், 'ஒரே சீனா' கொள்கையுடன் இயைந்ததான எந்த ஒன்றினைவையும்" ஆதரிக்கிறது என்று திங்களன்று அறிவித்தார்.

இன்று வரை, ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க கோரி சில திபெத்திய நடவடிக்கைக் குழுவினர் விடுத்து வரும் அழைப்புகளுக்கு, நாடு கடத்தப்பட்ட தலாய் லாமா அரசு உட்பட எந்த அரசாங்கமும் ஆதரவளிக்கவில்லை. தொடக்க விழாவை புறக்கணிப்பதான ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசிக்கலாம் என்று நேற்று அப்போதைக்கு கூறிய பிரான்சின் வெளியுறவு அமைச்சர் பேர்னார்ட் குஷ்னேர், இது போன்றதொரு திட்டத்தை இந்த நேரத்தில் பிரான்ஸ் அரசு ஆதரிக்கவில்லை என்றும் உடனடியாக சேர்த்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் தலைவரான ஹான்ஸ்-ஜெர்ட் போயடடரிங் அரசியல்வாதிகள் தனிப்பட்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதை சிந்திக்கலாம் என்ற ஆலோசனையை எடுத்து விட்டார். இரண்டு ஆலோசனைகளுக்குமே குறிப்பிடத்தக்க ஆதரவு எதுவும் இல்லை.

இந்த அளவான சர்வதேச விமர்சனமும் சாமானிய திபெத்தியர்களின் கவலையால் விளைந்தது இல்லை. சீன தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுடன் ஒப்பிட்டால் திபெத்தின் கிளர்ச்சி மிகச் சிறியது, ஆனால் சர்வதேச ஊடகங்களில் இது ஏறக்குறைய முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது. இதன் காரணம் வெளிப்படை: உலகளாவிய பெருநிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களின் அதீத-சுரண்டலைத் தான் நம்பியிருக்கின்றன, போலீஸ்-அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மூலம் ஒட்டச்சுரண்டல் சூழல் நிலைகளை பராமரிப்பதற்கு. பெரும் ஆயுதங்களேந்திய துருப்புகளைப் பயன்படுத்துவதும், ஒட்டுமொத்த பகுதிகளையும் இராணுவ அடைப்பு செய்வதும், மொத்த மொத்தமான கைதுகளும் உழைக்கும் வர்க்கத்தை ஒழுங்குபடுத்தி, உலகளாவிய முதலீட்டாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

ஒரு "சுதந்திரமான திபெத்"துக்கான போராட்டம் மீதான விரிவான பத்திரிகை செய்திகள் ஒரு வேறுபட்ட அரசியல் நோக்கம் கொண்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவில் ஆதிக்கத்திற்கான "பெரும் மோதலில்" பிரிட்டனும் ரஷ்யாவும் ஈடுபட்டிருந்தபோது, இந்த பிராந்தியம் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டு வந்தது. மாவோவின் துருப்புகள் 1950 இல் திபெத்தை அபகரித்த பின்னர், தலாய் லாமா பல தசாப்தங்களாக சீனாவை பலவீனப்படுத்துவதற்கான அமெரிக்காவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வந்தார். ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்ஸன் மாவோயிச ஆட்சியுடன் 1972 இல் சமரசம் செய்து கொண்ட பின்பு தான், திபெத்துக்குள்ளான தலாய் லாமாவின் கெரில்லா நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளிப்பதை அமெரிக்கா நிறுத்தியது.

திபெத் மீது புதுப்பிக்கப்பட்ட சர்வதேச ஆர்வம் தோன்றியிருப்பது ஒட்டுமொத்த பிராந்தியமும் மறுபடியும் பெரிய சக்திகளின் அதிகாரப் போட்டிக்கான மையப் பொருளாக ஆகியிருப்பதற்கான ஒரு அறிகுறியாகும். 2001 இன் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்ததன் காரணம் "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரினால்" உந்தப்பட்டு அல்ல, மாறாக எரிசக்தி வளம் மிகுந்த மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்செலுத்தும் பொருட்டே. அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகள், சீனா மற்றும் ரஷ்யா அனைத்தும் இந்த பிராந்தியத்தின் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களுக்கான அணுகல் மற்றும் ஆதிக்கத்திற்கு போட்டி போடுகின்றன.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், "சுதந்திரமான திபெத்திற்கான" அழைப்புகளை ஆதரித்து சீனாவை விலகிச் செல்லும் வண்ணம் வைத்து விடாமல், அதே சமயத்தில் இந்த விவகாரமும் மரித்து விடாமல் இருப்பதற்காக, தலாய் லாமாவுடன் உறவுகளை பராமரிப்பதைத் தொடர்ந்து கொண்டும், அவ்வப்போது வேஷதாரித்தனத்துடன் திபெத்திய உரிமைகள் குறித்து கவலைகளை எழுப்பிக் கொண்டும் இருக்கின்றன. இது போன்ற பிரிவினைவாத இயக்கங்களை தனது புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளும் திறன் அமெரிக்காவுக்கு உண்டு என்பதும், அதனைத் தான் "சுதந்திர" கோசோவோவை ஆதரித்த விவகாரத்திலேயே அமெரிக்கா செய்தது என்பதும் சீனா நன்கு அறிந்ததே.