World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: ISSE demonstration demands the release of jailed Iranian students

இலங்கை: சிறை வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாணவர்களின் விடுதலையைக் கோரி ஐ.எஸ்.எஸ்.ஈ. ஆர்ப்பாட்டம்

By our reporters
14 March 2008

Use this version to print | Send this link by email | Email the author

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) இயக்கத்தின் இலங்கைப் பகுதி, ஜனாதிபதி மொஹமட் அஹ்மதுஜாட்டின் ஈரானிய அரசாங்கத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள இடதுசாரி மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் கடந்த திங்கட் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த மாணவர்களைப் பாதுகாப்பதற்காக ஐ.எஸ்.எஸ்.ஈ. முன்னெடுக்கும் அனைத்துலகப் பிரச்சாரத்தின் ஒரு பாகமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிசம்பர் 4ம் திகதி, "மாணவர்கள் தினத்தை" நினைவு கூருவதற்காக ஆர்ப்பாட்டம் செய்த 33 மாணவர்களை ஈரான் பொலிஸ் கைது செய்தது. இந்த மாணவர்கள் தினமானது 1953ல் அமெரிக்க உப ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனின் வருகைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று மாணவர்கள் பொலிசாரால் கொல்லப்பட்டதன் நினைவு தினமாகும். இந்த ஆண்டு ஜனவரி மாதமும் தமது சக மாணவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மேலும் பல மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) இந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் விலக்கிக்கொள்ளப்படல் வேண்டும் எனவும் கோரின. பிரச்சாரத்தின் பாகமாக, ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோ.ச.க. ஆதரவாளர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தலைநகரில் உள்ள வேலைத் தளங்களிலும் "இடதுசாரி எதிர்ப்பின் மீதான தாக்குதலை ஈரான் அரசாங்கம் உக்கிரப்படுத்துகிறது" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் ஆயிரக்கணக்கான பிரதிகளை விநியோகித்தனர்.

2 மணி முதல் ஈரான் தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் தீவிர இடதுகள் என்றும் சொல்லப்படும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்துக்கான மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறும் மற்றும் அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினர். "சிறை வைக்கப்பட்டுள்ள ஈரானிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்", "இடதுசாரி மாணவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதை நிறுத்து", "ஈரானுக்கு எதிராக யுத்தம் தொடுக்கும் அமெரிக்க அச்சுறுத்தலை நிறுத்து", "மத்திய கிழக்கில் இருந்து ஏகாதிபத்திய துருப்புக்களை வெளியேற்று", "யுத்தத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அனைத்துலக சோசலிசத்துக்காகப் போராடு" ஆகிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்துகொண்டிருந்தனர்.

சுலோக அட்டைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஃபார்சி மொழியிலும் எழுதப்பட்டிருந்ததோடு சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சிலரின் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. பாதசாரிகள் மத்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதோடு பாடசாலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களையும் இந்த நிகழ்வு ஈர்த்துக்கொண்டிருந்தது.

மாணவர்களின் விடுதலையைக் கோரி ஐ.எஸ்.எஸ்.ஈ. கடிதம் ஒன்றை கையளிக்க இருப்பதாக சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஈரான் தூதரக அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தார். ஆயினும், அந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அந்த மனுவைப் பெற்றுக்கொள்ள அவர்கள் வெளியில் வர மறுத்துவிட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஈரான் தூதர் அங்கு காரில் வந்து சேர்ந்தார். ஆர்ப்பாட்டத்தையிட்டு விழிப்படைந்த அவர் சுமார் 15 நிமிடங்களுக்குள் பின் கதவால் திரும்பிச் சென்றுவிட்டார். இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவர் கபில பெர்ணான்டோ வாயிலில் பாதுகாப்புக் கடமையில் இருந்த உத்தியோகத்தரிடம் கடிதத்தை கையளிக்க முயற்சித்த போதும் அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஒதுக்குப் புறமாக உள்ள செல்வந்தர்கள் வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள தூதரகத்தின் முன்னால் ஒரு மணித்தியாலம் மறியல் போராட்டம் செய்த பின்னர், ஐ.எஸ்.எஸ்.ஈ. இன் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீடு திரும்பும் கொழும்பு மத்தியில் உள்ள சுறுசுறுப்பான கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன்பு மாற்றப்பட்டது. ஒரு மணித்தியாலத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அங்கு விநியோகிக்கப்பட்டன.

இந்த விவகாரம் பற்றி கலந்துரையாட நின்றவர்களுடன் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் உரையாடினர்.

தபால் திணைக்களத்தில் கடிதங்களை வகைப்படுத்துபவரான T தெரிவித்ததாவது: "இந்தகைய ஒரு நிகழ்வை முதற் தடவையாகவே நான் பார்க்கிறேன். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இங்கும் அங்கும் பல மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆயினும், அவர்கள் சர்வதேச சம்பவங்கள் பற்றி கவனமெடுப்பதை நான் கண்டதில்லை. நான் ஆர்ப்பாட்டத்தை கவனமாக பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிய எண்ணிக்கையிலானவர்களே பங்குபற்றிய போதிலும், அதன் வெளியிடும் செய்தி சக்தி வாய்ந்தது மற்றும் அது சர்வதேச ரீதியில் தொழிலாளர்களின் கவனத்தை திருப்பும் என்பதை நான் புரிந்துகொண்டேன். நீங்கள் தெளிவுபடுத்திய பின்னரே, லங்கா சமசமாஜக் கட்சி சோசலிசத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த காலத்தில் இருந்தது போல் இலங்கையில் இத்தகைய ஒரு போராட்ட மரபு இருப்பதை புரிந்துகொண்டேன்.

"மத்திய கிழக்கில் நடக்கும் யுத்தத்தை நாம் எதிர்க்கின்ற அதே வேளை, இலங்கையில் நடக்கும் யுத்தமும் நிறுத்தப்படல் வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன். எவ்வாறெனினும், தற்போதைய அமைப்பின் கீழ் அதை நிறுத்த முடியாததுடன், அப்படி நிறுத்தப்பட்டாலும் ஒடுக்குமுறை கொள்கைகள் தொடரும். ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதில் ஈரான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது.

"நான் நிறைய விடயங்களை சொல்ல விரும்பிய போதிலும், நாட்டில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நிலைமை என்னைத் தடுக்கின்றது. சாதாரண மக்கள் மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதற்காக கடத்தப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். எவ்வாறாயினும், இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம் என்பதை நான் கூறியாக வேண்டும்."

வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் குழுவில் ஒருவர் குறிப்பிட்டதாவது: "ஈரானிய மாணவர்களை விடுதலை செய்யக் கோரி இலங்கையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதில் பயன் இல்லை என்றே நாங்கள் முதலில் நினைத்தோம். இப்போது, நீங்கள் தெளிவுபடுத்திய பின்னர், அனைத்துலக மரபுக்கு புத்துயிர் அளிப்பதை இலக்காகக் கொண்டது என்ற வகையில் அது அர்த்தமுள்ளது என நாங்கள் நினைக்கின்றோம்."

"மாணவர்களுக்காக குரல் எழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் எங்களது எதிர்கால சந்ததியினர். ஈரான் விவகாரம் சம்பந்தமாக இலங்கையில் பிரச்சாரம் நடப்பதை நான் முதல் தடவையாகவே கண்டேன்," என ஒரு நடு வயது புகையிரத ஊழியர் கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர் ஒருவர் தெரிவித்ததாவது: "இந்த மாணவர்கள் அமெரிக்க யுத்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த வேளையிலேயே ஈரான் அரசாங்கம் அவர்களைக் கைது செய்துள்ளது. நீங்கள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்களை எதிர்ப்பதோடு கைதுசெய்யப்பட்டுள்ள ஈரானிய மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். அவர்கள் நான்காம் அகிலத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும் நீங்கள் அவர்களை பாதுகாக்க இங்கு மறியல் போராட்டம் நடத்துகின்றீர்கள். அனைவரதும் ஜனநாயக உரிமைகளைப் பொறுத்தளவில் அது ஒரு உயர்ந்த மரபாகும்.

கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர், ஐ.எஸ்.எஸ்.ஈ. மற்றும் சோ.ச.க. கூட்டமொன்றை நடத்தின. அடுத்து வரும் நாட்களில் கூட்டம் பற்றிய அறிக்கை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவரும்.

* * *

ஈரானிய தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றோம்:

ஜனாதிபதி மஹ்மட் அஹ்மதுஜாட் பெருந்தலைவர் அயதொல்லா அலி காமெனி

ஜனாதிபதி மஹ்மட் அஹ்மதுஜாட் மற்றும் அயதொல்லா காமெனி,

தங்களது அரசாங்கத்தால் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அஸெடி பராபெரி (சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்குமான மாணவர்கள்) குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கோருவதற்கே நாம் இக்கடிதத்தை எழுதுகிறோம். நாங்கள் இங்கு அவர்களின் பெயர் பட்டியலையும் உள்ளடக்கியுள்ளோம். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படல் வேண்டும் எனவும் நாம் உங்களைக் கோருகின்றோம். இந்த மாணவர்கள் எந்தவொரு குற்றத்தையும் செய்தவர்கள் அல்ல. அவர்கள் அமெரிக்காவின் யுத்த திட்டங்களுக்கும் மற்றும் ஈரானிய அரசியல் ஸ்தாபனத்தின் கொள்கைகளுக்கும் எதிராக சட்டப்பூர்வமான மறியல் போராட்டத்திலேயே ஈடுபட்டனர்.

அவர்கள் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனாலும், நாம் உலகம் பூராவும் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை கவனமாக கவனித்துக் கொண்டிருப்பதுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு மற்றும் அவர்களுக்கு எதிரான நியாயமற்ற வழக்கு முடியும் வரை அவர்களது வழக்குகள் தொடர்பாக நாம் பிரசுரித்துக்கொண்டே இருப்போம். அவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் மேலும் எந்தவொரு தொல்லைக்கும் உள்ளாகக் கூடாது. அவர்களுக்கு வெளிப்படையாக தமது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும்.

ஈரான் அதிகாரிகள் அந்த மாணவர்களை பலவிதமான சரீர சித்திரவதைகளுக்கும் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கியுள்ளனர் என்ற செய்தி எங்களை மேலும் சீற்றமடையச் செய்துள்ளது. அவர்கள் தொலைக்காட்சி கமராக்களுக்கு முன்னால் பொய் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கவும் நெருக்கப்படக்கூடும் என்பதும் எங்களுக்குத் தெரியும். குறிப்பாக இங்கு இலங்கையில் அத்தகைய பேர்போன வழிமுறைகளின் பயங்கரமான விளைவுகளை நடப்பில் கண்டுள்ளோம். இலங்கையில் ஆட்சியில் இருந்துவரும் அரசாங்கங்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதற்காக இது போன்ற ஜனநாயக விரோத மற்றும் ஒடுக்குமுறை வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றன.

அமெரிக்க கைப்பொம்மையாக இருந்த ஷா ரேஸா பலாவி, உழைக்கும் மக்களும் இளைஞர்களும் சட்டப்பூர்வமாக அரசியல் கருத்து வெளியிடுவதையும் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் நசுக்குவதற்காக இதே வழிமுறைகளை பாவித்ததை சுட்டிக் காட்டுவது முக்கியமானதாகும். கடந்த ஆண்டு டிசம்பரில் மாணவர்களை கைதுசெய்யும் ஆரம்ப அலை, 1953ல் அமெரிக்க உப ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனின் வருகையின் போது ஷாவால் மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் மாணவர்கள் தினத்தை குறிக்க ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்ததை அடுத்தே தலைநீட்டியுள்ளன என்பதை நாம் கூறிவைக்க விரும்புகிறோம்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அரசாங்கத்தின் யுத்த பேரிகை கொட்டும் கடந்தகால மற்றும் தற்கால கொள்கையை கடுமையாக எதிர்க்கும் இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் ஐ.எஸ்.எஸ்.ஈ. வாதிடுகிறது. நீங்கள் கம்பிகளுக்குப் பின்னால் தடுத்துவைத்துள்ள மாணவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களாவர். அவர்களது சிறைவாசம், முழு பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் வெகுஜனங்களை ஆபத்துக்குள் தள்ளும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டத்தையும் தடுப்பதற்கு மட்டுமே வழிசெய்யும்.

உங்களது அரசாங்கம் உற்சாகமாக மாணவர்களை சிறை வைத்து பிழையாக நடத்துவதானது ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மீதான படு மோசமான தாக்குதலாகும். இது உங்களது அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ள அநீதியை, ஈரானுக்கு எதிரான தமது யுத்த திட்டங்களை நியாயப்படுத்துவதற்காக சுரண்டிக்கொள்ளும் ஏகாதிபத்திய இராணுவவாதிகளின் கைகளையே பலப்படுத்தும்.