World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government installs paramilitary leader as chief minister in the East

இலங்கை அரசாங்கம் துணைப்படைத் தலைவரை கிழக்கின் முதலமைச்சராக நியமித்துள்ளது

By K. Ratnayake
19 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

கிழக்கு மாகாண சபைக்காக மே 10ம் திகதி நடைபெற் தேர்தல், "விடுவிக்கப்பட்ட" மாகாணம் ஜனநாயகத்திற்கு திரும்புவதை பிரதிநிதித்துவம் செய்கின்றது என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கூற்றுக்கள் மோசடியானவை. சுமார் 20,000 துருப்புக்கள் மற்றும் ஏனைய இராணுவ சிப்பாய்கள், அதே போல் 27,000 பொலிசாரும் குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்தல், வாக்குச் சீட்டு மோசடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டர் நடவடிக்கைகளின் களமாக விளங்கியது.

கடந்த வெள்ளிக்கிழமை பிள்ளையான் என அழைக்கப்படும் எஸ். சந்திரகாந்தனை முதல் அமைச்சராக நியமித்தமை புதிய மாகாண ஆட்சியின் பண்பை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது. பிள்ளையான் இழிபுகழ்பெற்ற துணைப்படை குழுவொன்றின் தலைவராவார். அவரின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (டீ.எம்.வி.பி.) கட்சி, 2004ல் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிளவுண்டு அமைக்கப்பட்டதாகும்.

புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தில் இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்த டீ.எம்.வி.பீ, ஆட்கடத்தல்கள், சிறுவர்களை பலாத்காரமாக படையில் சேர்த்தல், காணாமல் ஆக்குதல் மற்றும் படுகொலைகள் போன்ற பரந்தளவிலான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது. டீ.எம்.வி.பீ. உடன் இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியொன்றை அமைத்ததில் இருந்து, இந்த துணைப்படைக் குழுவை நிராயுதபாணியாக்குமாறு எதிர்க் கட்சிகள் விடுத்த கோரிக்கையை அவரது அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை (பஃபரல்), தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மையம் (சி.எம்.ஈ.வி.) ஆகிய இரு தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பான சம்பவங்களை அறிக்கை செய்துள்ளன. 14 சரீர ரீதியான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 21 தேர்தல் சாவடிகளில் எதிர்க்கட்சிகளை தடுத்தமை உட்பட "கடுமையான சம்வங்கள்" பலவற்றை பஃபரல் அமைப்பு கண்டறிந்துள்ளது. பெரும்பாலான முறைப்பாடுகள் டீ.எம்.வி.பீ. க்கு எதிராகவே செய்யப்பட்டுள்ளன. 48 "பிரதான குற்றங்கள்" உட்பட 64 தேர்தல் வன்முறை நடவடிக்கைகளை சி.எம்.ஈ.வி. அமைப்பு பதிவுசெய்துள்ளது.

தேர்தல் பிரச்சார காலம் பூராவும் ஏறத்தாழ முழு அமைச்சரவையும் அந்த மாகாணத்தில் முகாமிட்டு இருந்ததுடன் இராஜபக்ஷ அரசாங்கம் அனைத்து சாத்தியமான வளங்களையும் தேர்தலுக்காகப் பயன்படுத்தியது. இலங்கை துறைமுக அதிகார சபையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் துறைமுக வேலைகளை செய்யும் சாக்குப் போக்கில் தேர்தல் களத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்ததாக அம்பாறையில் உள்ள உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். ஏனைய அமைச்சர்கள் நீண்டகாலமாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு இடம் மாற்றம் பெற்றுத் தருவதாகவும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தொழில் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா.) பெற்ற 250,732 வாக்குகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - டீ.எம்.வி.பீ. ஆகியன அரசாங்கத்தின் வளங்களை வெட்கமின்றி பயன்படுத்தியதோடு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயற்சித்த போதிலும், 308,886 வாக்குகளில் ஒரு குறுகிய வெற்றியையே அது பெற்றுள்ளது. மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான திருகோணமலையில் சுதந்திர கூட்டமைப்பு எதிர்க் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளது.

தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு முஸ்லிம் இன கட்சிகளும் அடங்கிய அரசாங்கத்தின் முழு கூட்டணியும் பெற்ற அதிக வாக்குகளுக்கு, 18 தேர்தல் ஆசனங்ளையும் இரண்டு மேலதிக ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழ் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எதிர்க் கட்சிகள் 17 ஆசனங்களை வென்றுள்ளன.

கிழக்கில் "வெற்றி" பெற்று ஒரு வாரத்துக்குள், பதவிக்கான உள் மோதலின் மத்தியில் ஆளும் கூட்டணி உடையத் தொடங்கியுள்ளது. டீ.எம்.வி.பீ. யை விட அதிக ஆசனங்களை முஸ்லிம் கட்சிகள் பெறும் பட்சத்தில், தன்னை முதலமைச்சராக்க இராஜபக்ஷ வாக்குறுதியளித்ததாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்ததை அடுத்து அவரது தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது.

வேறுபாடுகளுக்கு ஒட்டுப்போட எடுத்த முயற்சிகளின் பின்னர், இராஜபக்ஷ இறுதியாக பிள்ளையானை நியமித்தார். இது ஹிஸ்புல்லாவின் சீற்றம் நிறைந்த பிரதிபலிப்பைத் தூண்டியதோடு "முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்துவிட்டதாக" அவர் ஜனாதிபதியை குற்றஞ்சாட்டினார். ஹிஸ்புல்லா நேற்று சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்ததாவது: "ஜனாதிபதி எங்களுக்கு சொன்னதெல்லாம், அவர் யுத்தத்தை விரைவில் முடிவுக்கொண்டுவர விரும்புவதாகவும், ஆகவே பிள்ளையானை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே."

இராஜபக்ஷவின் முடிவானது, கிழக்கில் எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு மட்டுமன்றி, வடக்கில் இராணுவம் தற்போது முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க டீ.எம்.வி.பீ. ஆயுதக் குண்டர்களை தொடர்ந்தும் பயன்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும். சுதந்திர கூட்டமைப்பு-டீ.எம்.வி.பீ. யை 17 ஆசனங்களுடன் சிறுபான்மையாக விட்டுவிட்டு தனது குழுவில் உள்ள மூன்று உறுப்பினர்கள் மாகாண சபையில் சுயாதீனமான குழுவொன்றை அமைப்பார்கள் என ஹிஸ்புல்லா அறிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது கோட்டையான காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் ஒரு பொது கடையடைப்புக்கு அழைப்புவிடுத்திருந்தனர். நேற்றைய சண்டே டைம்ஸ் பத்திரிகை, "சில கடைகள் எதிர்ப்புக்காக பூட்டப்பட்டிருந்த போதும், பிற்பகலில் டீ.எம்.வி.பீ. உறுப்பினர்களுடன் இராணுவப் படைப்பிரிவினர் காத்தான்குடிக்கு வந்ததோடு கடைகளை வியாபாரத்திற்காக மீண்டும் திறக்குமாறு கட்டளையிட்டனர். இது பெரும்பாலும் புதிய முதலமைச்சரின் முதல் நடவடிக்கையாக இருக்கலாம்," என தெரிவித்திருந்தது.

மாகாண சபையில் உயர்மட்ட பதவிக்காக ஹிஸ்புல்லாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவு, முழு பிரச்சாரத்தினதும் இனவாத பண்பை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கிழக்கில் உள்ள புலிப் போராளிகளுக்கு எதிராக "வடக்கில்" உள்ள தலைவர்கள் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி புலிகள் அமைப்பில் இருந்து 2004ல் த.ம.வி.புலிகள் பிரிந்தது. இந்த மாகாணத்தில் வசதிபடைத்த தமிழ் உயரடுக்கின் பிரிவுகளுக்கு ஒரு சிறப்புரிமைகள் உள்ள நிலையை பாதுகாத்துக் கொள்ளும் எதிர்பார்ப்பில் த.ம.வி.புலிகள் அரசாங்கத்துடனும் இராணுவத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கியது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அது பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் உயரடுக்கின் பிரிவுகளுக்கு பதவியின் உரிமைகள் கிடைக்காத காரணத்தால் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கின்றது.

தொடரும் யுத்தம்

"பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்தவும், நாட்டில் ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் பலப்படுத்த தெளிவான மக்கள் ஆணை" கிடைத்திருப்பதாக தேர்தல் முடிந்த உடன் இராஜபக்ஷ கூறிக்கொண்டார். இராணுவத்தின் உடனடி வெற்றிக்கான திட்டங்கள் பின்னடைவை கண்டிருந்தாலும், புலிகளுக்கு எதிரான தனது புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பதை அவரது கருத்துக்கள் சாதாரணமாக உறுதிப்படுத்துகின்றன.

இதே வரியில், 12ம் திகதி திங்கட்கிழமை ஐலண்ட் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, "அரசாங்கம்-டீ.எம்.வி.பி. கூட்டு பெற்றுக்கொண்டுள்ள இலகுவான வெற்றி, வன்னியில் இராணுவ பிரச்சாரத்துக்கு மிகப்பெரிய உந்துகோலாகும்," என்றார். "முன்னெப்போதும் இல்லாத இந்த வெற்றி... எதிரிகளின் (வடக்கு) வன்னி தளத்தை தகர்ப்பதை நிச்சயமாக விரைவாக்கும்" என பிதற்றிக்கொண்டார்.

யுத்தம் கிழக்கிற்கு சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் மற்றும் அபிவிருத்தியையும் கொண்டுவந்துள்ளது என்ற கூற்று முட்டாள்தனமானதாகும். கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கோட்டைகளைக் கைப்பற்ற கிழக்கில் புலிகளின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிளவை சுரண்டிக்கொள்ள இராணுவத்தால் முடிந்தது. அங்கு சுமார் 4,000 பேர் கொல்லப்பட்டதோடு 200,000 ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இன்னமும் மிகமோசமான அகதி முகாம்களில் வசிப்பதோடு அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாமலும் போய்விட்டது.

நாடு பூராவும் யுத்தத்திற்கும் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான அதன் தாக்கத்திற்கும் பரந்த எதிர்ப்பு காணப்படுகிறது. உணவு மற்றும் எண்ணெயின் சர்வதேச விலை அதிகரிப்போடு சேர்த்து, பிரமாண்டமான இராணுவச் செலவின் தாக்கத்தால் அடிப்படை பொருட்களின் விலைகள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளன. அரசாங்கம் தனது "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின்" பெயரால், சம்பள உயர்வை நிராகரித்துள்ளதுடன் சமூக சேவைகளுக்கு செலவிடுவதை வெட்டிக் குறைத்துள்ளதோடு நடைமுறையில் தணிக்கையையும் அமுல்படுத்தி, விசாரணையின்றி காலவரையறையின்றி தடுத்துவைக்க அனுமதிக்கும் கொடூரமான அவசரகாலச் சட்டத்தையும் பேணிவருகின்றது.

மோதல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதை எந்தவொரு எதிர்க்கட்சியும் எதிர்க்கவில்லை. இராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் போலவே, 1983ல் யுத்தத்தை தொடக்கிவைத்த யூ.என்.பி. யும் சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ளது. கடந்த டிசம்பரில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியடைந்து கவிழ்ந்து போகும் என்ற நம்பிக்கையில் அதில் இருந்து வெளியேறும் வரை, ஸ்ரீ.ல.மு.கா. இராஜபக்ஷவின் கூட்டரசாங்கத்தில் பங்காளியாக இருந்தது. மாகாண சபை தேர்தலை அடுத்து, யூ.என்.பி.-ஸ்ரீ.ல.மு.கா. கூட்டணியானது அரசாங்கத்தின் தேர்தல் "கொள்ளைக்கு" எதிரான ஒரு மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புப் பிரச்சாரத்தை அறிவித்தன.

யுத்தம் மேலும் உக்கிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), குறிப்பிடத்தக்க வகையில் 9,390 வாக்குகளையும் ஒரு ஆசனத்தையும் மட்டுமே பெற்றுள்ளது. கிழக்கில் 2006ல் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அது பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அதன் ஆதரவு 10,000 வாக்குகளால் சரிந்துபோயுள்ளது. ஜே.வி.பி.க்கான ஆதரவு சரியத் தொடங்கியமையானது அரசாங்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக ஜே.வி.பி. யின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பலவீனமாக்கும் பிளவுக்கு வழிவகுத்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காதது தவறு எனக் கூறி, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் பிரிந்து சென்ற குழு தேசிய சுதந்திர முன்னணி (தே.சு.மு.) ஒன்றை கடந்த வாரம் ஸ்தாபித்துள்ளது.

மிகவும் விமர்சனபூர்வமான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் தனது ஆதரவிற்கான தளத்தை திருத்திக்கொள்ள மறுபுறம் ஜே.வி.பி. முயற்சிக்கின்றது. கிழக்குத் தேர்தலில் அரசாங்க கட்சிகள் "மோசடி, தேர்தல் கொள்ளை மற்றும் அரசாங்க அனுசரணையிலான குண்டர்களின் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டதாக" ஜே.வி.பி. தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதே சமயம், தேர்தலை நடத்துவதற்காக இந்தியா கொடுத்த அழுத்தத்திற்கு அடிபணிந்துவிட்டதாக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுவதன் மூலம் ஜே.வி.பி. தமிழர் விரோத அதி தீவிரவாதத்தை கிளறுவதற்கு முயற்சிக்கின்றது. பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், அவரை "இந்திய ஏஜன்ட்" என ஜே.வி.பி. தலைவர் விஜித ஹேரத் முத்திரை குத்தினார்.

தீவின் 25 ஆண்டுகால கொடூரமான இனவாத யுத்தத்தை தீர்ப்பதற்கு முழு அரசியல் ஸ்தாபனமும் இலாயக்கற்றுள்ளதையே கிழக்கில் தேர்தல் முடிவுகள் மேலும் வெளிக்கொணர்ந்துள்ளன. வடக்கில் இராணுவ முட்டுக்கட்டை நிலைமையை தகர்ப்பதற்கான இன்னுமொரு முயற்சிக்கு மேலும் உயிர்களை அர்ப்பணிக்க ஜனாதிபதி கொடுத்துள்ள உறுதிமொழியுடன் சேர்த்து, ஒரு துணைப்படை குண்டரின் தலைமையில் கிழக்கின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டிருப்பதே இதன் விளைவாகும்.