World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's earthquake: the most destructive in modern history

சீனா பூகம்பம்: நவீன வரலாற்றில் மிகப் பெரிய பேரழிவு

By John Chan
19 May 2008

Use this version to print | Send this link by email | Email the author

சீசுவான் மாகாணத்தில் மே 12ல் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ஒரு வாரம் பின்னதாக, சீன அரசாங்கம் இன்றிலிருந்து தொடங்கி மூன்று நாட்களை அந்த பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக தேசிய துக்க தினமாக அறிவித்தது. 1997ல் சீன தலைவர் டெங் ஜியாவோபிங்கின் மறைவிற்கு அளிக்கப்பட்டதற்கு பின்னர் அறிவிக்கப்பட்டிருக்கும் நீண்ட துக்க காலம் இதுவேயாகும். மூன்று நாட்களுக்கு, அனைத்து தேசிய கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கும் மற்றும் ஒலிம்பிக் தீப ஓட்டம் உட்பட அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படும்.

ஆரம்பத்தில் 7.8 ரிக்டர் அளவாக அறிவிக்கப்பட்ட நிலநடுக்க அதிர்வை, சீன அதிகாரிகள் 8 ரிக்டர் அளவாக நேற்று திருத்தி அறிவித்தனர். பூகம்பத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த பேரழிவு, கடந்த 60 ஆண்டு கால சீன மக்கள் குடியரசு வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாகும் என பிரதமர் வென் ஜியாபோவா அறிவித்திருக்கிறார். 1976ல் சுமார் 300,000 மக்களை டாங்சான் பூகம்பம் பலி கொண்டது, ஆனால் அதன் பெருமளவு பாதிப்பு ஒரே ஒரு நகரில் மட்டுமே ஏற்பட்டது. சீசுவானில், பாரியளவு பிரதேசத்தில் ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

உறுதி செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கை 32,000 த்திற்கும் மேலாக உயர்ந்திருக்கிறது என்பதுடன், உத்தியோகபூர்வ கணிப்பான 50,000 உயிரிழப்பு எட்டும் அல்லது அதையும் தாண்டும் என கருதப்படுகிறது. 220,000 த்திற்கும் மேலான மக்கள் காயமடைந்திருக்கலாம். குறைந்தபட்சம் 3 மில்லியன் வீடுகள் அழிந்திருக்கும் மற்றும் 12 மில்லியன் வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மீட்பு மற்றும் மறுவாழ்வு பணியில் தனியார் அவசரகால ஊழியர்களுடன் இணைந்து சுமார் 130,000 சீன துருப்புகளும் களமிறக்கி விடப்பட்டிருக்கின்றன. ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தெற்கு கொரியா ஆகியவற்றுடன் தாய்வான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளும் தங்களின் சிறு மீட்பு குழுவை அனுப்பி இருக்கின்றன.

அமெரிக்காவின் 1.6 மில்லியன் டாலர் உதவியை சீனா ஏற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று அமெரிக்காவின் இரண்டு C-17 சரக்கு விமானங்கள் உதவி வினியோகப் பொருட்களுடன் சீனாவை வந்தடைந்தன. அதே சமயம், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குழுக்களை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்க பெய்ஜிங் மறுத்துவிட்டது. இதற்கான எவ்வித உத்தியோகபூர்வ காரணமும் தெரிவிக்கப்படாத போதினும், அதிநவீன அணு ஆயுத தொழிற்சாலைகளும், பிற இராணுவ நிலையங்களும் சீசுவானில் உள்ளன.

தமது எந்த அணுசக்தி நிலையமும் பாதிக்கப்படவில்லை என சீன இராணுவம் உறுதிப்படுத்தி இருக்கிறது. கதிரிய மற்றும் அணுசக்தி பாதுகாப்புக்கான பிரெஞ்சு பயிலகத்தின் கருத்துப்படி, இரண்டு அணுசக்தி எரிபொருள் உற்பத்தி நிலையங்கள், இரண்டு அணுஆயுத நிலையங்கள் மற்றும் ஓர் அணுமின்னுலை ஆய்வகம் ஆகியவை பூகம்பத்தின் மையத்தின் ஆரத்திலிருந்து 145 கி.மீ. தூரத்தில் இருந்தன. செயற்கைகோளால் கண்டறிய முடியாத ஏவுகணை ஜனவரி 2007ல் சீனாவால் சீசுவானில் உள்ள சீசாங் வான்தளத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த நிலையங்களை முக்கிய தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற இராணுவ நிலையங்கள் சீசுவானின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்றன.

பேரழிவுக்குள்ளான நகரங்கள் மற்றும் கிராமங்களின் இடர்பாடுகளை மீட்பு ஊழியர்கள் மற்றும் படையினர் தோண்டி வருவதால், பிழைப்பதற்காக போராடுபவர்களின் கதைகள் பல இன்றும் வெளியாகின்றன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் வெளியில் எடுப்பதற்கான வாய்ப்புகள் மங்கி வருகின்றன. வெள்ள அபாயம் மற்றும் தொடர்ந்த நிலநடுக்கங்களால் மீட்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று கியாங்யானின் மேற்கில் 80 கிலோமீட்டரில் ஏற்பட்ட 6 ரிக்டார் அளவிலான ஒரு நிலநடுக்கத்தில், மூவர் உயிரிழந்தனர் என்பதுடன் மேலும் 1,000 பேர் காயமடைந்தனர்.

சனியன்று, பூகம்பத்தின் மையத்திற்கு அருகில் இருக்கும் பீசுவானில் இருந்த மீட்பு குழுவினர் மற்றும் குடியிருப்போர் ஓர் உடனடி வெள்ள அபாய எச்சரிக்கைக்கு இடையில் உயரமான இடங்களுக்கு நகர்ந்து சென்றனர். அந்த பகுதி ஒரு பள்ளத்தாக்கு என்பதுடன் நிலச்சரிவுகள் உள்ளூர் ஆறுகளின் ஓட்டத்தையும் தடுத்துவிட்டிருந்தன. அபாய எச்சரிக்கை சரியான நேரத்திற்கு கொடுக்கப்பதாத நிலையில், உயர்ந்து வந்த நீரின் அளவானது, அடைப்புகளின் வழியே உடைத்துக் கொண்டு வெளியேறி திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தலாம். மேலும், 17 அணைகள் மற்றும் நீர்தேக்கங்களும் பாதிக்கப்பட்டன. அவைகளில் சில பாதுகாப்பிற்கல்லாமல் உடனடி இலாபத்திற்காக மிக சமீபத்தில் தான் கட்டப்பட்டவையாகும்.

வெப்பம், ஈரமான காலநிலை மற்றும் தற்காலிகமான கூடாரங்களில் அளவுக்கதிமான கூட்டம் ஆகியவை பிழைத்திருப்பவர்கள் இடையே தொற்றுநோய் பரவுவதற்கான அபாயத்தை அதிகரித்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஆர்தர் பெசிகன் எச்சரித்ததாவது: "பாதுகாப்பற்ற உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் இன்மை, தனிநபர் உடல்நலத்திற்கான வசதிகள் மற்றும் முறையான கழிவுநீர் வெளியேற்றும் வசதிகளின்மை ஆகியவை எந்நேரத்திலும் தொற்றுநோய் பரவுவதற்கான அபாயத்தை அதிகரித்திருக்கிறது.

அரசியல் ரீதியான அமைதியின்மையின் ஒவ்வொரு அறிகுறி தொடர்பான மிகவும் கவனத்தினால், சீன தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்களின் அனுதாபங்களை பெரியளவில் வெளிப்படுத்தி இருந்தார்கள். தமது தனிப்பட்ட கவலைகளை வெளிக்காட்ட பேரழிவு பகுதியின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவிக் கொண்டிருந்த பிரதமர் வென்னை விடுவிக்க மே 16 அன்று ஜனாதிபதி ஹூ ஜின்டோ சீசிவான் வந்தார். எதிர்பாராத வகையில் வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி, மியான்யாங் விமான நிலையத்தில் வென்னுடன் ஹூ கை குலுக்கியது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்டது. பொதுவாக மூத்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் முழுமையான இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும்.

எவ்வாறிருப்பினும், சீன அரசாங்கத்தின் மீட்புமுயற்சிகள் மற்றும் அதிகளவிலான இறப்பு எண்ணிக்கை, குறிப்பாக பள்ளிக்கூட சிறுவர்களின் உயிரிழப்புகள் குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் இணையம் வழியாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. அசோசேடேட் பிரஸின் செய்திப்படி, பேன்போ வலைப்பதிவு தளத்தின் ஒரு பதிவு வியாழன்று பின்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தது: "பூகம்பத்தில் இறந்தவர்களில் அதிகபட்சம் குழந்தைகளாக இருப்பது எதனால்?" மற்றொரு கேள்வியானது: "உண்மையில் பேரழிவு பகுதிக்கு எவ்வளவு நன்கொடைகள் கிடைக்கும்? இது சந்தேகத்திற்குரியது தான்." என்பதாகும்.

வதந்திகள், உணர்ச்சிபூர்வமான அறிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் இணைய தகவல்களுக்கு எதிராக அரசின் ஹின்ஹூவா செய்தி நிறுவனம் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. குறிப்பாக எவ்வித அரசியல் எதிர்ப்பின் அறிகுறியையும் முடக்குவதற்கு சீனா பெரியளவிலான இணைய போலீஸ் படையைக் கொண்டிருக்கிறது.

பிரபலமான டியன்யா இணைய தளத்தில், வெளியடப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பதிவு குறிப்பிட்டதாவது: "இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாக டூஜியன்ங்யானைப் பார்வையிட்ட ஓர் அரசியல்வாதியிடம் இருந்து போலீஸ் மக்களை விலக்கி வைத்தது. அவர் அங்கு வந்ததைக் கூட குடியிருப்போர் பலரால் அறிய முடியவில்லை! நகர அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் எங்கு கிடைக்கிறது என்று யாரால் என்னிடம் கூற முடியும்? ... இந்த நரகத்திலிருந்து என்னை ஏற்றிச் செல்லும் ஒரு வாகனத்திற்காக நான் 50 கியா [சுமார் 7 டாலர்] அளித்தேன்."

மிகமோசமான கட்டுமானம்

பூகம்பத்தால் 6,900 த்திற்கும் மேலான வகுப்பறைகள் அழிந்து போன அப்பகுதியின் மிகமோசமான பள்ளி கட்டிடங்கள் மீது அதிகரித்து வரும் கோபம் திரும்பி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சில நகரங்களில், வெளிப்படையாகவே ஒரு முழு தலைமுறையும் துடைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் "ஒரு குழந்தை" திட்டத்தால் பல பெற்றோர்கள் தங்களின் ஒரே ஒரு குழந்தையையும் இழந்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய செய்தித்தாள் இன்று ஹன்வாங் நகரில் நடந்த ஒரு சோக காட்சியை வர்ணித்திருந்தது. ஜீ கொ எனும் 35 வயதான ஒரு தாய், இடிந்து உடைந்திருந்த ஒரு நான்கு மாடி பள்ளிக்கட்டிடத்தின் முன் நின்றிருந்தார். அந்த இடிபாடுகளில் அவரின் 10 வயது நிரம்பிய மகள் டூ ஜிங் மாட்டிக் கொண்டிருந்தாள். அச்சிறுமி இரண்டு நாட்களுக்கு சுயநினைவுடன் உயிருடன் இருந்தாள், ஆனால் மீட்பு குழு வருவதற்குள்ளாக, அவளின் "கால்கள் செயலிழந்துவிட்டன." அவ்விடத்தில் சுமார் 300 குழந்தைகள் பலியாயினர்.

பொதுமக்களின் கோபத்தை அமைதிப்படுத்த, தரமில்லாத கட்டிடங்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு, அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதாக சீன அதிகாரிகள் உறுதியளித்தனர். எவ்வாறிருப்பினும், ஒரு சில கருப்பு ஆடுகளை கண்டறிவதில் சந்தேகத்திற்கிடமின்றி இந்த விசாரணை கட்டுப்படுத்தப்படும். அடிப்படை கட்டிடங்களின் தரங்கள் பற்றிய கவனமின்மைக்கான உண்மையான காரணம் என்னவென்றால், பெய்ஜிங்கின் அதன் சொந்த சந்தைக் கொள்கைகளாலும் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் மேலெழுந்திருந்த ஊழலாலும் ஊக்குவிக்கப்பட்ட ஊகவாணிப இலாப நோக்கமேயாகும்.

சீசுவானின் அழிவுகள், சீனா முழுவதும் தரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய பரந்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது. பல உள்ளூர் அரசாங்கலகள் அவற்றின் நகர்புற பகுதிகளை மிக விரைவாக விரிவாக்க முனைவதில் ஈடுபட்டிருந்ததாக ஏசியா டைம்ஸ் இணையத்தளத்தில் மே 16ல் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிட்டது. கட்டிட விதிகள் மீதான அதிருப்தி மட்டுமின்றி, குடியிருப்போரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களைக் கட்டாயமாகக் கையகப்படுத்தவும் போலீஸைச் சார்ந்திருந்த கட்டிட அமைப்பாளர்கள் மீதும் பெருமளவிலான மனக்கசப்பு இருந்தது.

சீசுவானின் தலைநகர மாகாணமான செங்டூ மாகாணத்தின் வடக்கில் முழுவதும் புதியதொரு நகரத்தை உருவாக்க 10 பில்லியன் யுவான் (1.4 பில்லியன் டாலர்) செலவிடப்படும் என இவ்வாண்டின் தொடக்கத்தில் அது அறிவித்திருந்தது. "நகர புதுப்பிக்கும் பணிகளின் இந்த புதிய சுற்று சாதாரண மக்களுக்கு பலனளிப்பதற்கு பதிலாக அவர்களை பாதிக்கவே செய்யும் என தற்போது, மோசமாக திட்டமிடப்பட்ட புதுப்பிக்கும் பணிகள் மற்றும் போலியான கட்டிட மேம்பாடுகள் குறித்து கட்டிட வல்லுனர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்." என ஏசியா டைம்ஸ் குறிப்பிட்டது. செங்டூவில் மட்டும் இது செய்யப்படவில்லை. பிற சீன நகரங்களும் தங்கள் பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவம் பெற்ற முதலீட்டாளர்களை சமாதானப்படுத்தவும், கம்யூனிஸ்ட் கட்சியின் பதவி நிலைகளில் தங்களின் உயர்மட்டத்தினரை ஈர்க்கவும் இதையே செய்து வருகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் சீன நிலபேர சந்தையில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியானது, தனிநபர் சொத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் நிலத்தின் விலைகளை அதிகரிக்க செய்திருக்கிறது. பூகம்பம் உட்பட பொதுமக்களின் பாதுக்காப்பிற்கான கட்டிட விதிமுறைகளை அமுலாக்குவது என்பது பெரிய பெருநிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் தவிர மற்றவைகளில் இறுதியாகவே கவனிக்கப்படுகிறது.

ஏசியா டைம்ஸ் கட்டுரை மேலும் குறிப்பிட்டதாவது: "உண்மையில், "நகர மறுசீரமைப்பு" என்ற திரையில், அரசாங்கத்தின் பெயரால் உள்ளூர் அதிகாரிகள் குடியிருப்போரை அவர்களின் இடங்களில் இருந்து தூக்கி எறியவும், அவ்விடங்களைத் தங்களின் சொந்த தேவைக்குப் பயன்படுத்தவும் செய்யலாம். அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் அவர்களாகவே அபிவிருத்திகளைத் துவக்கலாம் அல்லது கைநிறைய இலாபங்கள் ஈட்ட பிறரிடம் அந்நிலங்களை விற்கலாம். இது போன்ற நில ஏமாற்றில், குடியிருப்போரினதும் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் இழப்பில் இந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மில்லியன் கணக்கான யான்களைச் சம்பாதிக்கலாம்."

பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்களுக்கு தேவையான முக்கிய வசதிகள் அரசின் நிதி ஒதுக்கீட்டு பற்றாக்குறையில் இருப்பதுடன் அவற்றின் கட்டுமானம் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதற்கான விளைவு, பொதுக்கட்டிடங்கள் மற்றும் ஏழைகளின் வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்ட சீசுவானில் வெளிப்பட்ட சோகமான சான்றைப் போன்ற ஒரு பேரழிவு நடக்க காத்துக் கொண்டிருப்பதேயாகும். பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சீன ஆட்சியின் அனைத்து வெளிப்படையான அனுதாபங்களுக்கு மத்தியிலும், தற்போதைய இறப்பு எண்ணிக்கை மற்றும் அழிவுகளின் முழு பொறுப்பும் சீன ஆட்சியையே சாரும்.