World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Mass arrests of protesters at Republican National Convention

குடியரசுக் கட்சியின் தேசிய பேரவைக்கூட்ட இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மொத்த கைது நடவடிக்கைகள்

By Jerry White
4 September 2008


Use this version to print | Send this link by email | Email the author

குடியரசுக் கட்சியின் தேசிய அமைப்பு கூட்ட கட்டிடத்திற்கு வெளியே குடியரசுக் கட்சியின் இராணுவவாதம் மற்றும் சமூக பிற்போக்குவாத வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பளிப்பதற்கு அதிகாரிகள் மத்திய, அரசாங்க மற்றும் உள்ளூர் போலிசாரின் ஒரு பெரும் திரட்டலை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களில், சுமார் 300 பேர் எக்செல் எனேர்ஜி மையத்தை சுற்றி கைது செய்யப்பட்டிருக்கின்றனர், மின்னசோட்டோவின் செயின்ட் போல் ஏறக்குறைய ஆர்ப்பாட்டக்காரர்களை பயமுறுத்துவதற்கும் அதிருப்தியாளரை வாய்மூடப் பண்ணுவதற்குமான ஒரு இராணுவ முகாமைப் போல் மாறியிருந்தது.

செவ்வாயன்று தாங்கள் மேலும் 11 பேரை கைது செய்திருப்பதாகவும், இதில் வறுமை-ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரும் அடக்கம் என்றும் புதனன்று போலிசார் தெரிவித்தனர், அது குறித்த கூடுதல் விவரங்கள் எதனையும் அவர்கள் அளிக்கவில்லை. சுமார் 3000 பேர் இருக்கக் கூடிய அந்த ஊர்வலம் கட்டிடத்தின் அருகே முடிவுற்ற போது, பாதுகாப்பு வளையங்களை கடக்க ஆர்ப்பாட்டக்காரகள் முயற்சித்ததாக கூறி கூட்டத்தை கலைக்க போலிசார் கண்ணீர் குண்டுகளையும் ஃபிளாஷ் கையெறி குண்டுகளையும் வீசினர்.

மொத்தம் 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் "கலகம் விளைவிக்க சதி தீட்டியது" போன்ற குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 137 பேரும் உள்ளடங்குவர். பலர் இன்னும் கைதில் தொடர்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் பேரவை தொடக்க தினமான திங்களன்று நடைபெற்ற 10000 பேர் கலந்து கொண்ட போர் எதிர்ப்பு ஊர்வலத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் கலக-எதிர்ப்பு மற்றும் கறுப்பு உடை போலிசார், FBI ஏஜெண்டுகள் மற்றும் கவசம் தாங்கிய 150 தேசிய பாதுகாப்பு துருப்புகள் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்யும் படலத்தின் போது போலிசார் கண்ணீர் புகை, பீன்பைகள் மற்றும் ஸ்தம்பிப்பு கையெறி குண்டுகளையும் பயன்படுத்தினர். சார்பற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்காணிக்கும் குழுக்கள் ஆகியோரும் குறி வைக்கப்பட்டனர். அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரர், கென்டகி பல்கலைக்கழகத்தின் மாணவர் பத்திரிகையாளர்களின் ஒரு குழு மற்றும் லிபரல் வானொலி நிகழ்ச்சியான "இன்றே ஜனநாயகம்!" இன் நடத்துநரான ஆமி குட்மேன் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் இருந்தனர். தனது நிகழ்ச்சியின் இரண்டு தயாரிப்பாளர்களை கைது செய்ததையும் தாக்கியதையும் குறித்து அவர் போலிசாரிடம் கேள்வி எழுப்பிய போது "அமைதிகாக்கும் அதிகாரிகளின் பணியில் குறுக்கீடு செய்ததாக" குட்மேன் கைது செய்யப்பட்டார்.

WSWS செய்தியாளரான ரோன் ஜோர்ஜென்சன் காட்சியை விவரிக்கிறார்:

"செயிண்ட் போல் பகுதிக்கு மேல் ஒரு ஹெலிகாப்டர் நாள் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தது. செயிண்ட் போல், மின்னபோலிஸ் மற்றும் மின்னசோட்டோவின் பிற நகரங்கள், அத்துடன் டெக்சாஸின் ஆர்லிங்டனில் இருந்தான பெரும் எண்ணிக்கையிலானோர் உள்பட நாடெங்கிலும் இருந்தான போலீசார் மற்றும் ஷெரிபின் உதவியாளர்கள் அங்கு இருந்ததை நான் பார்த்தேன். பெரும் எண்ணிக்கையில் அடர்ந்த நீலம் அல்லது கருப்பு உடை அணிந்திருந்த வேறு அடையாளம் இன்றி இருந்த கலக தடுப்பு போலிசார் இருந்தனர். அவர்கள் தடிகளையும் பிற ஆயுதங்களையும் கொண்டிருந்தனர். பல்வகை ஆயுதமேந்திய கருப்பு டிரக்குகள் வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தன, போலீசார் சைக்கிள்களிலும் குதிரைகளிலும் சுற்றிக் கொண்டிருந்தனர்.

"கலகத் தடுப்பு போலீசார் வரிசையும் அதிகரித்த போலீசார் வரிசையும் தங்களது நிலைகளுக்கு நகர்வதைக் கண்டதும், நான் நகராவிட்டால் மாட்டிக் கொள்ளக் கூடும் என்று உண்மையாக நம்பினேன். ஊடகத்தினர் பொதிந்திருப்பது போல் தோன்றியது. ஸ்தாபிக்கப்பட்ட ஊடகத்தினர் போலிசார் வரிசைக்கு உள்ளும் வெளியுமாய் நகர முடியும் என்பது போல் எனக்குத் தோன்றியது. ஒருமுறை அதை நான் செய்ய முயன்று ஒரு போலிஸ்காரரால் கடுமையான எச்சரிக்கைக்குள்ளானேன். அதனை படம் எடுக்கும்போது நான் செய்ய முயற்சித்திருந்தால், அரங்கை விட்டே நான் அகற்றப்பட்டிருக்கக் கூடும்".

தங்களை "அராஜகவாதிகள்" (Anarchist) என்று கூறிக் கொண்ட 150 பேர்களுக்கு மிகாத ஒரு சிறு குழுவினர் கல் எறிந்ததாகவும் சன்னல்களை உடைத்ததாகவும் கூறி, அளவுகடந்த படைபலத்தையும் பெரும் கைது நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொண்டதை அதிகாரிகள் பின்னர் நியாயப்படுத்தினர். அரசியல் எதிர்ப்பினை வலுவிழக்கச் செய்வதற்கும் போலீஸ் அடக்குமுறைக்கான ஒரு சூழலை உருவாக்குவதற்குமான நோக்கத்தில் வன்முறையைத் தூண்டி விடுவதை வேலையாகக் கொண்ட போலிஸ் ஏஜெண்டுகளும் தூண்டுவோரும் கூட இந்த குழுவில் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் அநேகம்.

ஒரு வருடத்திற்கும் முன்னதாக, ரம்ஸே கவுண்டி ஷெரிபின் அலுவலகம் "குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு வரவேற்பு கமிட்டி" எனப்படும் ஒரு குழுவின் மீது 'தொடர்ந்த கண்காணிப்பை' தொடக்கியது என்றும், "இதில் உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்ட இரண்டு துப்பு கொடுப்பவர்கள் மற்றும் ஒரு இரகசிய ஏஜெண்டும் உள்ளடங்குவர்" என்று St. Paul Pioneer Press தெரிவித்தது. இந்த துப்பு கொடுப்பவர்கள் மின்னஞ்சல்களையும் உரையாடல்களையும் கண்காணித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 'பிரதிநிதிகளைக் கடத்துவது' மற்றும் மொலோடோவ் காக்டெயில்களை போலிசார் மீது எறிவது ஆகியவை உள்ளிட்ட விரும்பத்தகாத திட்டங்களைக் கொண்டிருந்ததாக இந்த துப்பு கொடுப்பவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை போலிசார் சமர்ப்பித்தனர். ஆதாரமாகக் காட்டப்படும் இந்த வாக்குமூலங்களின் உண்மையைக் கண்டறிவது சாத்தியமில்லை, ஏனெனில் "இது எல்லாமே அடையாளம் காணப்படாத நபர்களின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, அது தான் உண்மையான பிரச்சினை" என்று கைது செய்யப்பட்டவர்கள் பலருக்காக ஆஜராகும் Geneva Finn of the National Lawyers Guild தெரிவித்தது.

இந்த கூற்றுகளின் அடிப்படையில், கூட்ட சமயத்தில் போலிசார் பல ஆர்ப்பாட்ட தலைமையகங்களில் சோதனை நடத்தி காரியாளர்கள் கைது, கம்ப்யூட்டர்கள், அரசியல் இலக்கியம் மற்றும் பிற சொத்துகளை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களின் போது போலீசார் நடத்தையை கண்காணிக்கும் I-Witness Video என்னும் நியூயோர்க் குழு ஒன்றும் சோதனைக்குள்ளானதில் உள்ளடங்கும். வன்முறை திட்டங்களாக போலீசார் குற்றம் சாட்டுவதை நிரூபிக்க எந்த முக்கிய ஆதாரங்களையும் இந்த சோதனைகள் கொண்டு வரவில்லை என்றாலும், இவற்றின் நோக்கமே பயமுறுத்துவதன் மூலமும், "கலகத்திற்கான சதித்திட்டத்திற்காக" பெரும் கைது நடவடிக்கைகளுக்கான போலியான-சட்ட நியாயப்படுத்தல்களை உருவாக்குவதன் மூலமும் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்களை சீர்குலைப்பது தான்.

அரசியல் எதிர்ப்புக்கு எதிராக போலிஸ் மற்றும் அரசாங்கத்தால் அளிக்கப்படும் நடவடிக்கைகள் மீது தேசிய செய்தி ஊடகங்கள் டென்வரில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டுக் கூட்ட சமயத்தில் நடந்த பெரும் அடக்குமுறையின் போது போலவே மீண்டுமொரு முறை ஒரு ஏறக்குறைய முற்றிலுமான ஒரு அமைதியைப் பராமரித்தது.

பல சந்தர்ப்பங்களில், உள்ளூர் ஊடகங்கள் போலிசார் அடக்குமுறையை புகழ்ந்து தள்ளின. Minneapolis Star Tribune தனது செப்டம்பர் 2 தலையங்கத்திற்கு "ஒரு பொருத்தமான காவல் படை நடவடிக்கை" என்று தலைப்பிட்டது.

வீதிகளில் கலக தடுப்பு தீவிரத்துடன் போலீசார் இருந்தது பல குடிமகன்களை அதிருப்திக்குள்ளாக்கியது என்று தலையங்கம் குறிப்பிட்டது. "மின்னசோட்டோவில் இப்படி எல்லாம் நடக்கிறதே" என்று அங்கிருந்த ஒருவர் வேதனைப்பட்டதை தன்னால் காண முடிந்தது என்று அந்த தலையங்க ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

"நல்லவேளையாக இந்த பாதுகாப்பு இருந்தது" என்று கூறிய அந்த தலையங்கம், "சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, போலீசாரை தாக்குவது மற்றும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு கூட்ட பணிக்கு இடையூறு செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே" இரட்டை நகரங்களுக்கு பயணம் செய்திருக்கும் இந்த போக்கிரி ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டித்தது.

செயிண்ட் போல் மேயர் கிரிஸ் கோல்மேன், போலீஸ் தலைவர் ஜோன் ஹாரிங்டன், ரம்ஸே கவுன்டி ஷெரிப் பாப் பிளெட்சர் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளின் "விரிவான திட்டமிடலின்" காரணமாக "இதுவரை வீதிகளில் அராஜகவாதத்தை பொது இட பாதுகாப்பு வென்றிருக்கிறது" என்று தலையங்கம் முடிவு கூறியது.

தனது அதிகாரிகளின் "தீரமான முயற்சிகளை" அங்கீகரித்ததற்காக போலீஸ் தலைவரான ஜோன் ஹாரிங்டன் ஊடகங்களை பாராட்டினார். "எண்ணிக்கை, கலகம், மற்றும் கிரிமினல்களின் கூட்டம் இவற்றின் அளவைக் கொண்டு பார்த்தால், அதிகார பலமானது கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்பட்டதை நீங்கள் இன்று கண்டதாக குறிப்பிடும் சொற்றொடர் பயன்பாடுகள் எனக்கு விருப்பமுடையதாக இருந்தது. அதிகாரிகள் இன்று செய்ததின் சரியானதொரு விவரிப்பாக அது இருந்தது என்றே நான் கருதுகிறேன்."

போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து கூறிய தேசிய வழக்கறிஞர்கள் அமைப்பின் மின்னஸ்டோ சாப்டரின் சட்ட பார்வையாளரும் வழக்கறிஞருமான கினா பெர்க்லான்ட் கூறும் போது, "இது ஈவிரக்கமற்றது, கட்டுப்பாடு அற்றதானது என்று நாங்கள் கருதுகிறோம். போலீசார் எதிர்கொண்டவற்றுடன் ஒப்பிட்டால் அவர்களின் பதிலிறுப்பு முழுக்கவும் வரம்பு கடந்தது".

ஹோம்லாண்ட் பாதுகாப்பு துறையின் எல்லைக்குட்பட்ட "தேசிய பாதுகாப்பு நிகழ்வுகள்" எனக் கூறப்படுவதான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருகட்சியின் கூட்டங்களும் பரவலான அரசியல் அடக்குமுறையைக்கான வழிமுறைகளை சோதிக்க பயன்படுத்தப்படுகின்றன. நவம்பரில் யார் தேர்தலில் வென்றாலும், போருக்கான வெகுஜன எதிர்ப்பும், சமூக சமத்துவமின்மையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும் அரசாங்கத்தால் எவ்வாறு கையாளப்படும் என்பதற்கான மங்கலான எச்சரிக்கைகளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.