World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Two years since the disappearance of SEP member Nadarajah Wimaleswaran

இலங்கை: சோ.ச.க. அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரன் காணாமல் போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன

By K. Ratnayake
26 March 2009

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அங்கத்தவர் நடராசா விமலேஸ்வரனும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போய் கடந்து ஞாயிற்றுக் கிழமையுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இவர்கள் இருவரும் வட இலங்கையில் ஊர்காவற்றுறை தீவை வசிப்பிடமாகக் கொண்டவர்கள்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் அருகில் உள்ள புங்குடுதீவில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது, 2007 மார்ச் 22 அன்று காணாமல் போனார்கள். புங்குடு தீவானது நீண்ட கடற்பாலத்தால் ஊர்காவற்துறையின் வேலணை பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும், கடற்பாலத்தின் புங்குடுதீவு முடிவில் உள்ள கடற்படை சோதனைச் சாவடி ஊடாக கடக்கும் போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதியாகக் கண்டுள்ளார்கள்.

அந்த இருவரையும் கண்டுபிடித்து விடுதலை செய்ய இலங்கை அதிகாரிகள் முழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என சோ.ச.க. உடனடியாகக் கோரியது. ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து, 2006 நடுப்பகுதியில் தீவை மீண்டும் யுத்தத்துக்குள் மூழ்கடித்ததில் இருந்து, நூற்றுக் கணக்கானவர்கள், கூடுதலாக தமிழர்கள், இராணுவம் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் துணைப்படைகளால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அல்லது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்கான கோரிக்கையை ஆதரித்து சோ.ச.க. ஆதரவாளர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களும் டசின் கணக்கான கடிதங்களையும் மனுக்களையும் அனுப்பி வைத்திருந்தனர்.

அதிகாரிகள் விடயத்தினை மழுப்பி முட்டுக்கட்டையிட்ட அதே வேளை, அந்த இருவரும் கடற்பாலத்தின் வேலணை தொங்கலில் உள்ள கடற்படைச் சோதனைச் சாவடியில் வைத்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், என்ற உண்மையை சுட்டிக் காட்டும் ஆதாரங்களை சோ.ச.க திரட்டியது. வேலணை மற்றும் புங்குடுதீவு என்பன யாழ் குடாநாட்டுக்கு அருகில் இருக்கும் தீவுப் பகுதிகளாகும். இங்கு ரோந்து நடவடிக்கை, சோதனைச் சாவடிகள், ஊரடங்குச் சட்டங்கள் மற்றும் மீன்பிடித்தடை போன்றவற்றுடன் கடற்படையினர் கடுமையான பாதுகாப்பை பேணிவருகின்றனர்.

விமலேஸ்வரனும் மதிவதனனும் மாலை 5.30 மணிக்கு புங்குடுதீவுக்குள் நுழைந்து மாலை 6.30 மணிக்கு வெளியேறிவிட்டதாக புங்குடுதீவு கோடைம்பர கடற்படை முகாம் கட்டளை அதிகாரி ஹேமாந்த பீரீஸ் உறுதிப்படுத்தினார். அன்று இரவு நடைபெறவிருந்த திருமண விருந்தொன்றிற்கு தேவையான ஆடைகளை எடுத்துச் செல்வதற்காக அவர்கள் மதிவதனனின் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந்தனர். புங்குடுதீவு சோதனைச் சாவடி ஊடாக கடந்து கடற்பாலத்துக்குள் நுழைந்ததை ஒருவர் கண்ணால் கண்டுள்ளார்.

கடற்பாலத்தின் வேலணை முடிவில் என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடிக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனற்றவையாக இருந்தன. வேலணை கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி சில்வா, கடற்பாலத்தின் வேலணை தொங்கலில் கடற்படை எவ்விதமான வீதித்தடைகளையும் வைத்திருக்கவில்லை, அதனால் அங்கு எதுவித பதிவுகளும் இல்லை என பொய் பிரகடனம் செய்தார். விமலேஸ்வரனும் மதிவதனனும் புங்குடுதீவுக்கு சென்றுகொண்டிருந்த போது, கடற்படை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு, சிவில் உடையில் இருந்த இரு புலனாய்வு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்துகின்றனர். அவர்கள் திரும்பி வரும்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சுயாதீனமான சாட்சிகள் இல்லை.

சோ.ச.க. இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தது. இருவரது மனைவிமாரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த இரு வழக்குகளிலும் விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் இருக்கும் இடத்தினைக் கண்டுபிடிக்கவோ அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கோ எவ்வித தக்க நடவடிக்கைகளும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. 2007 மார்ச் 22 நடந்தவை பற்றி, அடிப்படைத் தகவல்களைக் பெற்றுக் கொள்ளக் கூட கடற்படைக்கு அழுத்தம் கொடுக்க, பொலிஸ் விசாரணையாளர்களும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளும் மறுத்துவிட்டனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை, சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் கொடுத்த புகார் சம்பந்தமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த புகாரில் பிரதி வாதிகளாக இலங்கை கடற்படை தளபதி, பொலிஸ் மா அதிபர், வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசக் கடற்படை கட்டளைத் தளபதிகள் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, 2007 ஜூன் 14 மற்றும் 2007 ஜூலை 6 ஆகிய தினங்களில் இரண்டு விசாரணைகளை மட்டுமே நடத்தியிருந்தது. பொலிஸ் மா அதிபரும் கடற்படைத் தளபதியும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தனர். ஆனாலும் பிரதேச கட்டளைத் தளபதிகளும் பொலிஸ் இன்ஸ்பெக்டரும் விசாரணைக்கு வருகைதரவோ அல்லது பிரதிநிதிகளை அனுப்பவோ தவறிவிட்டனர். முதல் விசாரணையின் போது, ஆணைக்குழு அலுவலர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் அதிகாரிக்கு அழைப்பாணை அனுப்பிய போதிலும் அவர் மீண்டும் வருகைதரத் தவறிவிட்டார். இரண்டாம் கட்ட விசாரணையின் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியே வருகைதர தவறிவிட்டார். சோ.ச.க.யின் எதிர்ப்பின் பின்னர் வேறொரு அலுவலரால் விசாரணை நடத்தப்பட்டது.

2007 செப்டம்பரில், சோ.ச.க. கண்கண்ட சாட்சிகளிடமிருந்து சத்தியக் கடதாசிகளைப் பெற்று ஆணைக்குழுவிடம் கையளித்திருந்தது. ஐந்து மாதங்களின் பின்னர் 2007 டிசம்பர் 4 அன்று முறைப்பாட்டாளருக்கு அறிவிக்காமலே திடீரென வழக்குக்கு முடிவுகட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு, தனது கருத்தை அறிவித்தது. காணாமல் போனவர்கள் சம்பந்தமாக சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்கவோ அல்லது தமது நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டிய கடமையை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கடற்படை சிப்பாய்களுக்கும் வலியுறுத்தவோ தனது விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்த ஆணைக்குழு தவறியுள்ளதையே அதன் ஆவணம் தெளிவுபடுத்துகிறது.

"இலங்கை இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு வழங்குகின்ற அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழும் நபர்கள் காணாமல் போவது தொடர்பாக பொறுப்புச் சொல்ல அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது" என்பதை ஆனைக்குழு உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. தக்க உடனடியான மற்றும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக இத்தகைய நிலைமைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனித உரிமைகள் ஆணைக்குழு கடற்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போனமையை விசாரிப்பதற்கு, ஊர்காவற்றுறைப் பொலிசுக்கு மேலதிகமாக ஒரு "விசேட செயற் திறன் மிக்க குழுவை" நியமிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு சிபார்சு செய்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறும் கோரியது. இந்த இறுதி சிபார்சு குறிப்பாக ஒரு சகுனம் மிக்கதாகும்: இது இருவரும் காணாமல் போனதற்கு அரசாங்கமே பொறுப்பாகும் மற்றும் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு சமமானதாகும்.

இந்த சிபார்சுகளின் பிரகாரம் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு 2008 யூன் 27 அன்று இரண்டாவது நினைவூட்டலை அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அதற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஒரு ஆணைக்குழு அதிகாரி சோ.ச.க. க்குத் தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கோவை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ளது. எவ்வாறெனினும், கிட்டத்தட்ட 200 கோவைகள் வரை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்றைப் பற்றியேனும் ஆணைக்குழுவுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் ஒரு அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2007 மே மாதத்தில் இருந்து 9 மாதங்களாக இழுபட்டது. நீதிமன்றுக்கு வருகைதந்த பொலிசார், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன என அறிவித்ததுடன், ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை என்று அறிவித்தனர். ஆயினும், தக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்படவே இல்லை என்பது தெளிவு. 2007 மார்ச் 22 அன்று, வேலனை சோதனைச் சாவடியில் இருந்த கடற்படை சிப்பாய்கள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை விசாரித்து வாக்குமூலம் எடுப்பது ஒருபுறம் இருக்க, அவர்களை பொலிசார் அடையாளம் காணக்கூடத் தவறிவிட்டனர்.

2008 மார்ச் 26 அன்று திடீரென வழ்க்கை முடித்த நீதவான், பொலிசார் அவர்களுடைய "விசாரணைகளைத்" தொடர வேண்டும் என அறிவித்தார். அப்பொழுது முதல் பொலிசாரிடம் இருந்து எந்தவொரு பதிலும் இல்லை.

விமலேஸ்வரன் மற்றும் மதிவதனன் காணாமல் போனமை, இராஜபக்ஷ அரசாங்கமும் இலங்கை பாதுகாப்புப் படைகளும் பொறுப்புச் சொல்லவேண்டிய குற்றங்களில் ஒன்று மட்டுமே. தீவின் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் இராணுவம், அது வைத்த சட்டத்தின் படி இயங்குகிறது. முழு தமிழர்களும் -பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர் அல்லது ஆதரவாளராக- பயங்கரவாதிகளாகவே நடத்தப்படுவதோடு அவர்கள் வழக்கமாக அச்சுறுத்தல், அடக்குமுறை, எதேச்சதிகாரமான கைதுகளுக்கு உள்ளாவதோடு "காணாமல் ஆக்கப்படுகின்றனர்", சில சம்பவங்களில் கொல்லப்பட்டும் உள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி 241 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையை 2008 முற்பகுதியில் வெளியிட்டது. அதனது விசாரணைகள் மற்றும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு, இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த 2005 டிசம்பருக்கும் 2007 டிசம்பருக்கும் இடையில் ஆகக் குறைந்தது 1500 பேர் காணாமல் போயுள்ளதாக கண்டறிந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் உதவிப்பணிப்பாளர் எலைனி பியர்சன் பிரகடனம் செய்ததாவது: "ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ... தனது அரசாங்கம் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குவதை திட்டமிடுவதில் உலகிலேயே மிக மோசமான தயாரிப்பாளனாக உருவாக இப்போது வழிவகுக்கின்றார்."

2008 இலும் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்வதாக கண்காணிப்பகத்தின் 2009 அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த சில வருடங்களாக, நூற்றுக் கணக்கான காணாமல் போகும் சம்பவங்களை கண்டறிவது தொடர்பாக அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்கு தகவல் கிடைக்கவில்லை. பெரும்பாலான காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. பலாத்காரமாக காணாமல் ஆக்கும் சம்பவங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்டவை ஆகும்," என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

சோ.ச.க. அங்கத்தவர் விமலேஸ்வரன் இலக்கு வைக்கப்பட்டது ஒரு அரசியல் குற்றமாகும். வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பாதுகாப்புப் படைகளை நிபந்தனையின்றி திருப்பியழைப்பதன் ஊடாக, அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கு உடனடியாக முடிவுகட்டக் கோரும் ஒரே கட்சி என்ற வகையில் சோ.ச.க. இலங்கையில் பிரசித்தி பெற்றதாகும். சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில், சோ.ச.க சகல வகையான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை -புலிகளின் தமிழ் பிரிவினைவாதம், அதேபோல் அரசாங்கத்தின் சிங்கள மேலாதிக்கவாதத்தையும்- எதிர்க்கிறது.

விமலேஸ்வரனும் அவரது நண்பரும் காணாமல் போனமைக்கு ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமுமே பொறுப்பு என சோ.ச.க. அறிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் விளக்கம் தரவேண்டுமென்றும் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென்றும் நாம் தொடர்ந்தும் கோருகின்றோம். தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகவும், அதன் குற்றவியல் யுத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் அரச-பொலிஸ் நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துவரும் நிலையில் சகல தொழிலாளர் வர்க்கத்துக்கும் எதிராகத் திருப்பப்படும், என நாம் எச்சரிக்கின்றோம்.

இறுதி ஆய்வுகளில், சாதாரண உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் போன்ற அபிலாஷைகளை இட்டு நிரப்ப இலங்கை முதலாளித்துவம் இயல்பாகவே இலாயக்கற்றுள்ள நிலைமையின் உற்பத்தியே கொழும்பில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் ஜனநாயக விரோத வழிமுறைகளாகும். முதலாளித்துவத்தை தூக்கி வீசி, பிராந்தியம் பூராகவும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறியவர்களை அணிதிரட்டுவதே தொழிலாள வர்க்கத்துக்குள்ள ஒரே தீர்வாகும்.