World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan military captures last LTTE town

இலங்கை இராணுவம் புலிகளிடம் கடைசியாக இருந்த நகரத்தை கைப்பற்றியது

By K. Ratnayake
7 April 2009

Use this version to print | Send this link by email | Email the author

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசியாக எஞ்சியிருந்த நகரமான புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை இராணுவம் அறிவித்தது. இந்த மோதல், புலிகளை இராணுவத் தோல்வியின் விளிம்புக்கு கொண்டுவந்த தொடர்ச்சியான தோல்விகளில் இறுதியானதாகும். எஞ்சியுள்ள புலிப் போராளிகள் இப்போது அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள பாதுகாப்பு வலைய பகுதிக்குள் இறுக்கப்பட்டுள்ளனர். கடற்கரைப் பிரதேசமான இந்த 17 சதுரக் கிலோமீட்டர் பாதுகாப்பு வலையம் இன்னமும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்தப் பிரதேசத்துக்குள் பத்தாயிரக்கணக்கான சிவிலியன் அகதிகளும் கூட்டமாக நிறைந்து போயுள்ளனர். இந்த பிரதேசத்திற்குள் தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் இராணுவம் மீண்டும் மீண்டும் அங்கு குண்டுத் தாக்குதல்களை நடத்திவருகின்றது. "தாக்குதல் நடத்தப்படாத வலையத்துக்குள்" நிலைமை மிகவும் பயங்கரமானதாகும். அங்கு உணவு, தங்குமிடம் மற்றும் மந்துகளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களை மட்டுமே அனுமதித்துள்ளது.

இப்போது கட்டவிழ்ந்து வரும் மனிதப் பேரழிவுகளைப் பற்றிய சகல செய்திகளையும் அடக்கவும் மூடிமறைக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ முயற்சிக்கின்றார். அரசாங்கம் பெரும்பாலான தொண்டு நிறுனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களோடு சேர்த்து பிரதேசத்திற்குள் சுயாதீனமான பத்திரிகையாளர்கள் செல்வதையும் தடைசெய்துள்ளது. இந்த மோதல்களில் 200,000 பொதுமக்கள் வரை சிக்கியுள்ளனர் என மதிப்பிட்டுள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் வெறுப்பைக் கொட்டுகிறது.

எவ்வாறெனினும், உயர்மட்ட ஐ.நா. மனிதாபிமான உதவி அதிகாரி ஜோன் ஹொல்ம்ஸ், மோதல்களில் 150,000 முதல் 190,000 வரையான பொதுமக்கள் சிக்கியிருப்பதாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறார். பல செய்திச் சேவைகளுக்கு கசிந்துள்ள ஐ.நா. உள்ளக அறிக்கையொன்று, ஜனவரி 20 முதல் மார்ச் 7 வரை வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில் குறைந்தபட்சம் பதிவுசெய்யப்பட்ட உயிரிழப்புக்கள் 2,683 என்றும் 7,241 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கை செய்துள்ளது. இந்த தரவுகள், ஒரு வாரத்தில் 400 பேர் உயிரிழப்பதாகவும் 1,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைவதாகவும் மாறியுள்ளது. "வடக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது," என அந்த பிரசுரிக்கப்படாத அறிக்கை தெரிவிக்கின்றது.

சுடுதிறனில் அதீதமாக மேலாதிக்கம் செலுத்தும் இலங்கை இராணுவத்தாலேயே பெரும்பாலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை மீறி 2006 ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் முன்னெடுத்ததில் இருந்தே, உள்ளூர் மக்களை பீதிக்குள்ளாக்கி மிரண்டோடச் செய்யும் உபாயமாக பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் மீண்டும் மீண்டும் இராணுவம் குண்டுத்தாக்குதல்களை நடத்திவருகின்றது.

புதுக்குடியிருப்புக்கான மோதல், அரசாங்கமும் இராணுவமும் ஆரம்பத்தில் முன்னறிவித்ததை விட நீண்டதாக இருந்தது. இராணுவத்தின் செய்திகளின்படி, தாக்குதலுக்காக 12,000 துருப்புக்கள் அணிதிரட்டப்பட்டிருந்ததோடு மேலும் 40,000 சிப்பாய்கள் புலிகள் உடைத்துக்கொண்டு வெளிவருவதை தடுக்க சுற்றிவளைத்திருந்தனர். சில நாட்களுக்குள் முடிவதற்கு மாறாக, இந்த நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக இழுபட்டதுடன் இராணுவம் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்தது.

புதுக்குடியிருப்பை கைப்பற்றியதற்கு முந்தைய மூன்று நாட்களில் 420 புலிப் போராளிகளை இராணுவம் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் தீபன், கடாபி மற்றும் விதூஷா உட்பட புலிகளின் ஆறு சிரேஷ்ட இராணுவத் தலைவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

"பாதுகாப்புக் காரணங்களை" மேற்கோள் காட்டி உயிரிழந்த சிப்பாய்களின் விபரங்களை வழங்குவது இராணுவம் கடந்த அக்டோபரில் நிறுத்திவிட்டது. இதற்கான உண்மையான காரணம் யுத்தத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு கிளம்புவது பற்றிய அரசாங்கத்தின் கவலை அதிகரித்துவருவதே ஆகும். கொழும்பிலும் அதைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்த சிப்பாய்கள் தொடர்ந்தும் நிறைந்துகொண்டிருக்கின்றனர். கிராமப்புற நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் சிப்பாய்களின் மரணத்தை குறிக்கும் வகையில் வெள்ளைக்கொடிகள் தெரிவது மேலும் மேலும் பொதுவானதாகி வருகின்றது. கடந்த வாரம் பூராவும் தென் பகுதி கிராமங்களில் ஏழு மரண வீடுகளில் வேதனையில் ஆழ்ந்திருந்த உறவினர்களை உலக சோசலிச வலைத் தள குழுவினர் சந்தித்திருந்தனர்.

ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, நேற்று பி.பி.சி. க்கு பேசிய போது, "உடனடியாக பாதுகாப்பு வலையத்துக்குள் செல்லும் திட்டம்" இராணுவத்திடம் இல்லை எனத் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்களுக்கும் சிக்கிக்கொண்டுள்ள சிவிலியன்கள் மீதான உண்மையான அக்கறைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இராணுவமும் அரசாங்கமும் சகல தமிழர்களையும் எதிரிகளாகவே நடத்துவதோடு யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் சகல பொதுமக்களையும் தடுப்பு முகாம்களுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றது. யுத்த நிறுத்தம் செய்யக் கோரி சர்வதேச ரீதியில் விடுக்கப்படும் அழைப்பை தணிப்பதே அவர் அத்தகைய கருத்தைக் கூறியதற்குக் காரணம்.

மார்ச் 26 அன்று ஐ.நா. பாதுகாப்பு சபையின் கூட்டத்தை அடுத்து, சிவிலியன்களை அப்புறப்படுத்த அனுமதிப்பதன் பேரில் ஒரு "மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு" பிரிட்டனும் அமெரிக்காவும் கூட்டாக அழைப்பு விடுத்தன. இலங்கை அரசாங்கத்தைப் போலவே இந்த இரு ஏகாதிபத்திய சக்திகளும் பொதுமக்களின் தலைவிதி பற்றி கவலையடையவில்லை. இந்த இரு நாடுகளும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தையும் ஜனநாயக உரிமை மீறல்களையும் இரகசியமாக ஆதரித்தன.

புலிகள் இராணுவத் தோல்வியின் விளிம்பில் இருக்கும் நிலையில், ஒரு மனித இரத்தக்களரியும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை அர்சாங்கம் வெளிப்படையாக நசுக்குவதும் இலங்கையிலும் மற்றும் அயலில் உள்ள இந்தியாவிலும் மேலும் அரசியல் அமைதியின்மைக்கு மட்டுமே வழிவகுக்கும் என வாஷங்டன் கவலை கொண்டுள்ளது. கடந்த தசாப்தம் பூராவும் அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை ஏற்படுத்தி வந்துள்ளது. யுத்தம் தொடர்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் வெகுஜன எதிர்ப்பையிட்டு கவலைகொண்டுள்ள இந்தியா யுத்த நிறுத்தமொன்றுக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி இராஜபக்ஷ எந்தவொரு யுத்த நிறுத்தத்தையும் அல்லது மோதல் ஓய்வையும் முழுமையாக நிராகரிப்பதோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிபந்தனையின்றி சரணடைவதற்கான தனது கோரிக்கை மீண்டும் வலியுறுத்தினார். எவ்வாறெனினும், யுத்தத்தின் அதி தீவிர ஆதரவாளர்கள் இப்போது புலிகளை காப்பாற்றுவதற்கான "ஒரு சர்வதேச சதி" பற்றி பேசுகின்ற அதே வேளை, தனது சர்வதேச பங்காளிகளை தம்பக்கம் வைத்துக்கொள்ள வேண்டிய தேவையை பற்றி அரசாங்கம் விழிப்புடன் இருக்கின்றது. புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கோ அல்லது சர்வதேச சமாதான முன்னெடுப்புகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்றோ எந்தவொரு பெரும் வல்லரசும் அழைப்புவிடுக்கவில்லை.

மாகாண சபை தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யும் இராஜபக்ஷ, இனவாத பதட்டங்களை கிளறுவதற்காக யுத்தத்தைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார். தனது அரசாங்கத்துக்கு எதிரான வாக்களிப்பின் விளைவுகளையிட்டு தெளிவாகவே கவலைகொண்டுள்ள ஜனாதிபதி பிரகடனம் செய்ததாவது: "நீங்கள் பிழையான முடிவை எடுப்பீர்களானால், மக்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு யுத்தத்தில் அரசாங்கம் ஈடுபடுவதாக சர்வதேச சமூகம் நினைக்கும்".

இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளிக்கும் அதே "சர்வதேச சமூகத்துக்கே" புலிகள் தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றனர். புலிகளின் அரசியல் துறை பேச்சாளர் பா. நடேசன், தோல்விகண்ட சமாதான முன்னெடுப்புக்கான முன்னாள் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிமுடன் தொலைபேசியில் பேசியதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. "இலங்கை படையினரால் முன்னெடுக்கப்படும் மனிதப் படுகொலைகளை நிறுத்துவதற்கு ஒரு உடனடி யுத்த நிறுத்தத்துக்கே இப்போது மிகவும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என நடேசன் பிரகடனம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1970 களில் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனியான தமிழ் அரசை ஸ்தாபிக்கும் அதன் பிரிவினைவாத முன்நோக்கு, ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியிருந்தது. இந்த பிரிவினைவாத முன்நோக்கு தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது, தமிழ் தொழிலாளர்களின் விவசாயிகளின் நலன்களை அல்ல. தமிழ் பொதுமக்களை யுத்தப் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர அனுமதிக்க புலிகள் மறுப்பதான் மூலம் சாதாரண உழைக்கும் மக்கள் மீதான புலிகளின் அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது.

சட்டியில் இருந்து அடுப்புக்குள்ளேயே விழிந்துவிடுவோமோ என்ற நியாயமான பீதியும் தமிழ் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இராஜபக்ஷ "பங்கரவாதத்தின் மீது" யுத்தம் நடத்தவில்லை. மாறாக, கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த, தசாப்தகாலங்களாக தொடரும் தமிழர் விரோத பாரபட்சங்களின் உற்பத்தியான இனவாத மோதலை தொடர்ந்தும் அவர் முன்னெடுக்கின்றார். தீவுக்கு "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவரும் ஜனாதிபதியின் கூற்று, "விடுவிக்கப்பட்ட கிழக்கு" கனமான இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கின்றது என்ற உண்மையின் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது. கிழக்கு இப்போது அரசாங்கத்துக்கு சாரபான பேர்போன ஒரு துணைப்படை குழுவின் தலைமையின் கீழ் உள்ளது.

யுத்தத்துக்கான அதன் பிரமாண்டமான செலவால் உருவாக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி, பூகோள பொருளாதார பின்னடைவினால் மேலும் குவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வரக்கூடிய ஒரு அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ, நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெருந்தொகையான 1.9 பில்லியன் டொலர் கடனைப் பெற சர்வதேச நாணய நிதியத்தை நாடத் தள்ளப்பட்டுள்ளார். மக்களை துன்பத்துக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தத் தள்ளப்படுவார் என்ற உண்மையை மறுக்கும் அதே வேளை, இராஜபக்ஷ ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

அண்மைய வாரங்களில், 10 அத்தியாவசிய பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ள அரசாங்கம், ஆயுதப் படைகளை தவிர்ந்த அரசாங்க நிறுவனங்களுக்கு ஆள்சேர்ப்பதை நிறுத்தியுள்ளதுடன், மின்சார சபையை தனியார்மயற்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. சம்பள உயர்வை நிறுத்தியுள்ளதுடன் அரசாங்கத்துறை ஊழியர்களுக்கான செலவைக் குறைக்க வழிவகுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஏப்பிரல் 25 நடக்கவுள்ள மாகாண சபை தேர்தலை அடுத்து மேலும் வெட்டுக்கள் அமுல்படுத்தப்படும் என்ற மதிப்பீடுகள் கொழும்பு ஊடகங்களில் காணப்படுகின்றன.

கடந்த வாரக் கடைசியில் வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஒரு பக்கத்தில், புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் முடிவானது ஒரு புதிய "பொருளாதர யுத்தத்தின்" ஆரம்பத்தை மட்டுமே சமிக்ஞை செய்யும் என அந்த பத்திரிகையின் அரசியல் பகுதி ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். "அச்சுறுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார யுத்தமானது புலிகளுடனான யுத்தத்துடன் ஒப்பிடும் போது இராஜபக்ஷவுக்கு கையாள்வதற்கு மிக மிக பயங்கரமான பணியாக இருக்கலாம்," என அவர் எச்சரித்துள்ளார். அவர் எதை அர்த்தப்படுத்துகிறார் என அந்த எழுத்தாளர் குறிப்பிடாவிட்டாலும், இந்த பொருளாதார நெருக்கடியானது சமூக வெடிப்புக்கான களத்தை அமைக்கின்றது என ஆளும் வட்டாரத்துக்குள் நிலவும் ஆழமான பீதியை அந்த பக்கம் தெளிவாக பிரதிபலிக்கின்றது.

இந்தக் கருத்துக்கள் இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்துக்களை கோடிட்டுக்காட்டுகிறது. புலிகளின் தோல்வி சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதற்கு மாறாக, ஏற்கனவே யுத்தத்தின் சுமைகளைத் தாங்கத் தள்ளப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது நீண்ட விளைவுகளைக் கொண்ட தாக்குதலைத் தொடுக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற போர்வையின் கீழ் கடந்த 25 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டுள்ள பொலிஸ் அரச இயந்திரம், இப்போது உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் பகைமையையும் நசுக்குவதற்கு பயன்படுத்தப்படும்.