World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Halt the war crimes in Sri Lanka

இலங்கையில் யுத்தக் குற்றங்களை நிறுத்து

By Wije Dias
23 April 2009

Use this version to print | Send feedback

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி தீவின் வடக்கில் தமிழ் வெகுஜனங்களுக்கு எதிராக இப்போது அரசாங்கம் இழைத்துக்கொண்டிருக்கும் கொடூரமான குற்றங்களை கண்டனம் செய்கின்றது. இராணுவம் தழிழீழ விடுதலைப் புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய எதிர்ப்பையும் நசுக்க முயற்சிக்கின்ற நிலையில், தமிழ் பொது மக்களின் உயிர்களை இராணுவம் குற்றவியல் முறையில் அலட்சியம் செய்வதில், நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் அதன் பிற்போக்கு இனவாத பண்பை வெளிக்காட்டியுள்ளது.

இராணுவம் "உலகின் மிகப் பெரிய பணையக் கைதிகளை விடுவிக்கும்" நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரகடனம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து அகதிகள் வெளியேறுவதை "சுதந்திரத்துக்கான மிகப்பெரும் வாக்கு" என பாராட்டினார். ஆயினும், அரசாங்கமே பிரகடனம் செய்த "பாதுகாப்பு வலயத்துக்குள்" அது வேண்டுமென்றே உருவாக்கிய பட்டினி, மருத்துவ பற்றாக்குறை நிலைமையாலும் கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களாலுமே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அரசாங்கம், ஊடகத் தணிக்கையின் பின்னால் அதன் குற்றங்களை மறைக்க முயற்சித்தாலும், அதன் தாக்குதல்களின் விளைவுகளை எதனாலும் மறைக்க முடியாது. நேற்று ஐ.நா. பேச்சாளர் மாரியா ஒகாபே, "இராணுவ நடவடிக்கையில் கனிசமானளவு மக்கள் கொல்லப்படுவதோடு காயமும் அடைகின்றனர்" என பிரகடனம் செய்ததோடு மிக மோசமான நிலைமை எதிர்வரவுள்ளதாகவும் எச்சரித்தார். கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்கள் நிறுத்தப்படாவிட்டால் "ஒரு பேரழிவு" ஏற்படும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்னறிவித்துள்ளது.

அகதிகளின் சரீர நிலைமையே சிறந்த உதாரணமாகும். மாதக் கணக்காக தேவையானளவு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ பராமரிப்பு இன்றி பலர் இளைத்துப்போயுள்ளதோடு சுகயீனமுற்றும் உள்ளனர். எல்லைகள் அற்ற மருத்துவ (Médecins Sans Frontières - MSF) அமைப்பு, யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வந்த காயமடைந்த பொதுமக்களால் வவுனியா ஆஸ்பத்திரி நிரம்பி வழிகின்றது எனத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ ஷெல்களின் துணுக்குகளால் கயமடைந்துள்ளனர். அதிகளவானவர்கள் சிகிச்சைக்கு முன் உயிரிழந்தனர். இராணுவத்தின் முற்றுகை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே.

இறுதித் தாக்குதல் விடுதலைக்கான நடவடிக்கையாக இருப்பதற்கு மாறாக, இராணுவம் பொதுமக்களை இழிநிலையிலான தடுப்பு முகாம்களுக்குள் விரட்டுகின்றது. இந்த முகாம்கள் முற்கம்பிகளாலும் ஆயுதப் படையினராலும் சூழப்பட்டுள்ளன. இவர்கள் அகதிகளாக அன்றி யுத்தக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர். இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தமானது" சிங்கள் ஆளும் கும்பலின் அரசியல் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ளும் யுத்தமாகும். இந்த மோதல்களில் ஒட்டு மொத்த தமிழ் சிறுபான்மையினரும் எதிரிகளாகக் கணிக்கப்படுகின்றனர்.

தீவின் "விடுவிக்கப்பட்ட" கிழக்கு மாகாணத்தைப் போல், வடக்கில் தயாரிக்கப்பட்டு வருவதும் ஒரு நிரந்தரமான இராணுவ ஆக்கிரமிப்பேயாகும். நாட்டின் பொருளாதர நெருக்கடி மோசமடைந்து வந்தாலும், இராணுவச் செலவில் குறைவிருக்காது என அரசாங்கம் வலியுறுத்துகின்றது. "ஆகவே யுத்தம் முடிவடைந்தாலும் கூட, தற்போதைய பாதுகாப்பு முறை குறிப்பிட்ட காலத்துக்கு நீடிக்கும்" என பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

கால் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பிரமாண்டமான பாதுகாப்பு இயந்திரம், தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக மட்டும் பராமரிக்கப்பட்டு வருவதல்ல. புலிகளின் இராணுவத் திறனை அழித்த பின்னர், முழு தொழிலாள வர்க்கத்தினதும் வாழ்க்கைத் தரத்தின் மீது பரந்த தாக்குதலைத் தொடுக்க அரசாங்கம் தயாராகிக்கொண்டிருக்கின்றது. வங்குரோத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கும் அரசாங்கம், தற்போது முன்னெப்போதும் பெறாதளவு பெரும் கடனை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றது. தமது உரிமைகள் மற்றும் நிலைமைகளை காத்துக்கொள்ள முயற்சிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அது பொலிஸ் அரச வழிமுறைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்.

புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியைப் பற்றி கொழும்பில் உள்ள அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்தால் கிளறிவிடப்படும் தேசப்பற்று ஆரவார சூழ்நிலையின் உண்மையான அர்த்தம் இதுவே. கடந்த மூன்று ஆண்டுகளாக, இராஜபக்ஷ அரசாங்கம் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களையும் "புலி பயங்கரவாதிகளுக்கு" உடந்தையானவர்கள் என குற்றஞ்சாட்டி வந்துள்ளது. புலிகளின் தோல்வியால் பலமடைந்துள்ள ஆளும் தட்டில் உள்ள அதி பிற்போக்கு பகுதிகள், புது எதிரியான தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு விரைவில் அழைப்பு விடுக்கும்.

உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூகத் தேவைகளை இட்டு நிரப்புவதற்கு முற்றிலும் இலாயக்கற்றது என்பதை ஒப்புவித்துள்ள ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பகுதியையும் 1948ல் சுதந்திரமடைந்ததற்குப் பின்னரான முழு வரலாறும் குற்றஞ்சாட்டுகிறது. தொடக்கத்தில் இருந்தே யுத்தமானது வர்க்கப் போராட்டங்களுடன் பிணைந்திருந்தது. நெருக்கடியின் ஒவ்வொரு கட்டத்திலும், பலவீனமான இலங்கை முதலாளித்துவம், தொழிலாள வர்க்கத்தை பிளவு படுத்தவும் தனது அதிகாரத்தை தூக்கி நிறுத்துவதற்குமான வழிமுறையாக தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறி வந்துள்ளது. 1983ல் கொடூரமான தமிழர் விரோத படுகொலை அலையின் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் திறந்த பொருளாதார திட்டத்தின் தாக்கத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திடம் போர்க்குணம் வளர்ச்சி கண்டதற்கு பிரதிபலிப்பாகவே இவை முன்னெடுக்கப்பட்டன.

புலிகளை நெருங்கிக்கொண்டிருக்கும் தோல்வியானது அடிப்படையில் அரசியல் ரீதியானதே அன்றி இராணுவ ரீதியானது அல்ல. புலிகளின் தனியான ஈழம் முதலாளித்துவ அரசை ஸ்தாபிக்கும் முன்நோக்கானது தமிழ் மக்களுக்கு ஒரு மரணப் பொறி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் பிரிவினைவாத நோக்கும் சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் இனவாதப் பிளவுகளை மட்டுமே விரிவடையச் செய்துள்ளதோடு கொழும்பில் உள்ள சிங்கள அதி தீவிரவாதிகளின் கைகளில் பயன்படுகின்றன.

தனியான அரசுக்கான புலிகளின் திட்டம் தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே அன்றி தமிழ் வெகுஜனங்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. இறுதி ஆய்வில், அது எப்போதும் ஏதாவதொரு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவிலேயே தங்கியிருந்தது. புலிகளின் எஞ்சியுள்ள போராளிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யுத்த நிறுத்தமொன்றுக்காக இலங்கை அரசாங்கத்தை நெருக்குமாறு "சர்வதேச சமூகத்துக்கு" பயனற்ற வேண்டுகோள் விடுக்குமளவுக்கு இறங்கிவந்துள்ளனர்.

இலங்கை நெருக்கடி தொடர்பாக கலந்துரையாட ஐ.நா. பாதுகாப்புச் சபை இன்று கூடவுள்ளது. தமிழ் அகதிகளின் அவலநிலை தொடர்பான சிடுமூஞ்சித்தனமான அனுதாபங்களுக்கு அப்பால், இராஜபக்ஷ அரசாங்கத்தை கண்டனம் செய்யவோ மோதல்களை உடனடியாக நிறுத்தவோ எந்தவொரு நடவடிக்கையும் அங்கு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்ட சகல பெரும் வல்லரசுகளும் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு அவரது அரசாங்கம் ஜனநாயாக உரிமைகளை வெளிப்படையாக மீறியதை கண்டுகொள்ளவில்லை. இப்போது அமெரிக்கா கவலை தெரிவிக்குமெனில், அது இலங்கையில் ஏற்படும் ஸ்திரமின்மை தெற்காசியாவில் அமெரிக்காவின் பரந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதாலேயே ஆகும்.

யுத்தத்தை நிறுத்தவும் தமிழர்களின் உரிமைகளை காக்கவும் கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமேயாகும். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோருமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இந்தக் கோரிக்கை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் அதன் பிற்போக்குக் கொள்கைகளுக்கும் எதிராக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான மையப் புள்ளியாக இருக்கும். சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கமொன்றை அமைப்பதற்கான போராட்டம், தமது ஜனநாயக உரிமைகளும் வாழ்க்கைத் தரமும் தாக்குதலுக்குள்ளாவதை எதிர்கொள்ளும் பிராந்தியம் பூராவும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களையும் ஈர்க்கும் ஒரு சக்திவாய்ந்த துருவமாக விளங்கும்.

இலங்கையில் இழைக்கப்படும் கொடூரமான அட்டூழியங்கள் சகல இடங்களிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். முதலாளித்துவம் 1930க்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கிப் போயுள்ள நிலைமையில், உலகம் பூராவும் உள்ள ஆளும் தட்டுக்கள் தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசியல் எதிர் நடவடிக்கை என்ற ஆயுதப் பெட்டியை கையில் எடுக்க விரைந்துகொண்டிருக்கின்றன. இலங்கையில் தமிழர் விரோத பேரினவாதமானது, புலம்பெர்ந்தவர்களுக்கு எதிரான வெளிநாட்டவர் மீதான எதிர்ப்பு, தேசியவாத ஆரவாரம் மற்றும் மதம், இனம் மற்றும் மொழி பிரிவினைகளை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான பேரினவாதங்களுக்குச் சமாந்தரமானதாகும். இவை உள்நாட்டு மற்றும் சர்வதேச யுத்தங்களுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஆகலாம். இத்தகைய காட்டுமிராண்டித்தனத்துக்கான ஒரே மாற்றீடு, அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் சோசலிசத்துக்காகப் போராடுவதே ஆகும்.