World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Vote for the SEP in the provincial election

இலங்கை: மாகாணசபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

By the Socialist Equality Party (Sri Lanka)
24 April 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நாளை நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. சோ.ச.க. கொழும்பு மாவட்டத்தில் விலானி பீரிஸ் தலைமையில் 46 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த அனைத்து வேட்பாளர்களும் சோசலிச சர்வதேசியவாதத்தை அடித்தளமாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்காக கொள்கைமிக்க போராட்டத்தை நடாத்திய வரலாற்றை கொண்டுள்ளனர்.

வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை அரசாங்கம் செய்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இந்தத் தேர்தல் நடக்கின்றது. இந்த வாரத்தில் மாத்திரம், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் பலர் கடும் காயமடைந்துள்ளனர். பத்தாயிரக்கணக்கான அகதிகள் இராணுவத்தின் காவலின் கீழ் சுற்றிவளைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குள் விரட்டப்பட்டுள்ளனர்.

இராணுவம், மனித உயிர்களை அலட்சியம் செய்து பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பிரதேசத்தின் மீது "இறுதித் தாக்குதலை" முன்னெடுக்கின்றது. அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை சோ.ச.க. கண்டனம் செய்வதோடு பாதுகாப்பற்ற நிலையில் சிக்கிக்கொண்டுள்ள பத்தாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் சார்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறும் உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு வழங்கும் ஒரு வாக்கு, அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கும் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதா ன அதன் தாக்குதல்களுக்கும் எதிரான வாக்காகும்.

அரசாங்கத்தின் பிரச்சாரம் பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும். அது "பயங்கரவாதத்தின் மீது யுத்தம்" செய்யவில்லை. மாறாக அது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் செலவில் சிங்கள ஆளும் கும்பலின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. புலிகளிடம் இருந்து தமிழர்களை "விடுவிக்கும்" அதன் உரிமை கோரல்கள், அது இடம்பெயரும் பொதுமக்களை யுத்தக் கைதிகளாக நடத்துவதன் மூலம் பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான அரசாங்கத்துக்கும் அதன் பிற்போக்கு யுத்தத்தை ஆதரிக்கும் கொழும்பில் உள்ள முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களுக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சோ.ச.க. பிரச்சாரம் முயற்சிக்கின்றது. அதே சமயம், சோ.ச.க. எந்த வகையிலும் புலிகளுக்கு அரசியல் ஆதரவு வழங்கவில்லை. ஈழம் முதலாளித்துவ அரசு ஒன்றை ஸ்தாபிக்கும் புலிகளின் முன்நோக்கு தமிழ் வெகுஜனங்களுக்கு ஒரு மரணப் பொறி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றியும் உடனடியாகவும் திருப்பியழைக்கக் கோரும் சோ.ச.க. யின் கோரிக்கை புலிகளுக்கு உதவுவது அல்ல. மாறாக, இனவாத பிளவுகளில் இருந்து விடுவித்து, சோசலிச கொள்கையின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்காக புரட்சிகர போராட்டமொன்றில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே அதன் குறிக்கோளாகும்.

இப்போது, முன்னெப்போதையும் விட, சகல முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக தனது சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக தொழிலாள வர்க்கம் போராட வேண்டியுள்ளது. புலிகளை நசுக்குவது புதிய சமாதான மற்றும் சுபீட்ச காலகட்டத்தை கொண்டுவராது. ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் கொழும்பு ஆளும் தட்டின் அதி வலதுசாரி பகுதிகளை அண்மைய இராணுவ வெற்றிகள் பலப்படுத்தியுள்ளன.

வியாழக்கிழமை வெளியான வலதுசாரி ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பில் இருந்து தெளிவான எச்சரிக்கையை பெறவேண்டும். இராஜபக்ஷவின் குற்றங்களை "உயிரைக் காப்பாற்றும் சிகிச்சை" என பாராட்டிய அந்த செய்தித்தாள் பிரகடனம் செய்ததாவது: "1971 மற்றும் 1980களின் கடைப் பகுதியிலும் தெற்கு இரத்தக் களரியில் மூழ்கியபோது, இதே வழிமுறை மறக்கமுடியாத விளைவுகளை தந்தது. முதலாவது கிளர்ச்சியை ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக அடக்கியதோடு 18 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது கிளர்ச்சியை யூ.என்.பி. அரசாங்கம் நசுக்கியது."

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான 1971 கிளர்ச்சியையும் 1989 கிளர்ச்சியையும் நசுக்கியதை சுட்டிக் காட்டுவதானது, தீவு பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்துக்காக களஞ்சியத்தில் காத்திருப்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவான எச்சரிக்கையாகும். அரச அடக்குமுறையானது, அடிப்படையில் நேரடியாக ஜே.வி.பி.க்கு எதிரானது அல்ல. மாறாக தமது வறிய நிலைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரானதாகும். இந்த "உயிர் காக்கும் சிகிச்சை" 1971ம் ஆண்டில் 17,000 உயிர்களையும் மற்றும் 1980களின் கடைப்பகுதியில் மேலும் 60,000 உயிர்களையும் பலிகொண்டது.

துரிதமாக ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கம் மீது அரசாங்கத்தால் திணிக்கவேண்டிய நடவடிக்கைகளை பற்றி விவரிக்க ஏற்கனவே பக்க எழுத்தாளர்கள் யுத்த மொழியை பயன்படுத்துகின்றனர். யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை வங்குரோத்தில் தள்ளிய இராஜபக்ஷ, 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனாகப் பெறத் தள்ளப்பட்டுள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளமை, தொழில் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளமை, புதிய வரிகள், ரூபாய் மிதக்கவிடுதல் மற்றும் தனியார் துறையில் தொழிலாளர்களை நீக்கவும் வேலை நாட்களை குறைக்கவும் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியுள்ளமையும் தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னறிவித்தல்களாகும்.

இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்புக்களை சந்திக்காமல் அமுல்படுத்த முடியாது என்பதையிட்டு கொழும்பு அரசியல் ஸ்தாபனம் விழிப்புடன் இருப்பதையே ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு தெளிவாக்கியுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அரசாங்கம் நியாயப்படுத்துகின்ற, கொடூரமான அவசரகால விதிகள், விசாரணையின்றி தடுத்து வைத்தல் மற்றும் இராணுவ ஆதரவிலான கொலைப் படைகளின் செயற்பாடுகள் போன்ற பொலிஸ் அரச நடவடிக்கைகள், தமது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும், பயன்படுத்தப்பட முடியும்.

புதன்கிழமை விடுத்த அறிக்கையொன்றில், இராஜபக்ஷ தன்னை எதிர்க்கும் எவரையும் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைப் போல் அதே கூடைக்குள் போட்டார். "அரசியல், சமூக மற்றும் கலாச்சார நீரோட்டத்தில் இன்று ஒரே ஒரு எதிரியும் இரு பக்கங்களுமே உள்ளன. இரு பக்கங்கள் என்பது தன்னை எதிர்ப்பவர்களும் தன்னை ஆதரிப்பவர்களுமாகும்," என ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.

கடந்த காலத்தில், வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகளையும் "புலி பயங்கரவாதிகளுக்கு" உடந்தையானவர்கள் என அரசாங்கம் கண்டனம் செய்தது. நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமடைகின்ற நிலையில், தமது உரிமைகள் மற்றும் அடிப்படை சமூகத் தேவைகளை கோருவதற்காக "பொருளாதார பயங்கரவாதிகள்" என உழைக்கும் மக்கள் பழி தூற்றப்படுவதற்கு வெகுகாலம் இல்லை.

பிரதான எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் (யூ.என்.பி.) ஜே.வி.பி. யும் யுத்தத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றன. சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. நீண்டகாலத்துக்கு முன்னரே தனது மாவோவாத கொரில்லா நடவடிக்கையை கைவிட்டு கொழும்பு ஸ்தாபனத்தின் பங்காளியாகிவிட்டது. ஏற்கனவே பலதடவை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மூடுவிழா நடத்தி தொழிலாளர்கள் யுத்த முயற்சிகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என கோரிய ஜே.வி.பி, தேசத்தின் பொருளாதார நலனுக்காக உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கும்.

இரு மத்தியதர வர்க்க தீவிரவாத கருவிகளான நவசமசமாஜக் கட்சியும் (ந.ச.ச.க.) ஐக்கிய சோசலிசக் கட்சியும் (ஐ.சோ.க.) யுத்தத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்கின்றன. சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை அடிப்படையில் நிராகரிக்கும் இரு கட்சிகளும், அதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் எதாவது ஒரு பகுதிக்கு அரசியல் ரீதியில் அடிபணியச் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. புலிகளைப் போலவே, ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க. யும், இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரிக்கும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இலங்கையில் தலையிடுமாறும் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறும் பயனற்ற அழைப்பை விடுக்கின்றன.

ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க., வலதுசாரி யூ.என்.பி. யை "குறைந்த கெடுதி" என ஆதரிப்பதோடு இந்த பெரும் வர்த்தகர்களின் கட்சி இராஜபக்ஷவின் அர்சாங்கத்தின் துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் என கூறிக்கொள்கின்றனர். யூ.என்.பி. 1983ல் யுத்தத்தை ஆரம்பித்தது மட்டுமன்றி, 1980களின் கடைப்பகுதியில் சிங்கள கிராமப்புற இளைஞர்களை படுகொலை செய்தது உட்பட, ஜனநாயக உரிமைகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்ததற்கு நேரடி பொறுப்பாளியாகும். யூ.என்.பி. உடன் ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், எந்தவொரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தையும் தடுப்பதற்கு ந.ச.ச.க. மற்றும் ஐ.சோ.க. எடுக்கும் முயற்சிகள், இராஜபக்ஷ அரசாங்கம் அதன் தாக்குதல்களை உக்கிரப்படுத்துவதை மட்டுமே ஊக்குவிக்கும்.

முதலாளித்துவத்தின் எந்தவொரு கட்சி மீதும் அல்லது அவர்களின் தீவிரவாத பரிந்துரையாளர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம் என சோ.ச.க. உழைக்கும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான பலத்தில் தங்கி நிற்பதோடு, இலாப முறைமையின் காட்டுமிராண்டித் தனத்துக்கும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் பிற்போக்கு கொள்கைகளுக்கும் எதிராக ஒரு சோசலிச மாற்றீட்டுக்காக போராட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

எமது வேலைத்திட்டத்தின் அடித்தளம் அனைத்துலகவாதமாகும். தொழிலாளர்கள் சிங்கள மேலாதிக்கவாதம் அதேபோல் தமிழ் பிரிவினைவாதம் உட்பட சகல வடிவிலான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரிப்பதோடு தமது பொது வர்க்க நலனைப் பாதுகாக்க ஐக்கியப்படல் வேண்டும். தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகள் மற்றும் உலக சோசலிசத்துக்கான பரந்த அரசியல் போராட்டம் இன்றி, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசுக்கான போராட்டம் நடைமுறை சாத்தியமற்றதாகும்.

இந்தத் தேர்தலில் சோசலிச அனைத்துலகவாதக் கொள்கைகளுக்காகப் போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே. 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் கூட்டரசாங்கத்துக்குள் நுழைந்துகொண்டதன் மூலம், லங்கா சமசமாஜக் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்ட, இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்துக்கான போராட்டத்தை, 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக (பு.க.க.) ஸ்தாபிக்கப்பட்ட எமது கட்சியே தொடர்ந்து முன்னெடுக்கின்றது.

எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும், எங்களது வரலாற்றை மற்றும் வேலைத்திட்டத்தை படிக்குமாறும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் நாம் எங்களது கொள்கைகளை ஆதரிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.