World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president postpones "political solution" with Tamil elite

இலங்கை ஜனாதிபதி தமிழ் தட்டுக்களுடனான "அரசியல் தீர்வை" ஒத்தி வைக்கின்றார்

By Wije Dias
18 July 2009

Use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, இந்திய பத்திரிகையான இந்து பத்திரிகைக்கு வழங்கிய நீண்ட பேட்டியில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவரது அரசாங்கம் நடத்திய யுத்தத்தின் பின்னர், தமிழ் முதலாளித்துவ தட்டின் பிரிவுக்கு அவர் உறுதியளித்த அரசியல் தீர்வு என சொல்லப்படுவதை அமுல்படுத்துவது ஒரு புறம் இருக்க, அவர் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை அது அறிவிக்கப்பட மாட்டாது என பிரகடனம் செய்துள்ளார்.

மூன்று பாகங்களாக பிரசுரிக்கப்பட்டு ஜூலை 9 முடிவடைந்த இராஜபக்ஷவின் பேட்டி, தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள 80 மில்லியன் தமிழ் வெகுஜனங்களை சமாதானப்படுத்துவதோடு இந்திய முதலாளித்துவத்தின் பிராந்திய நலன்களை பலப்படுத்துவதன் பேரில், ஒரு "அரசியல் தீர்வுக்காக" மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வரும் இந்திய அரசியல் ஸ்தாபனத்துடன் சமரசம் செய்துகொள்ளும் முயற்சியேயாகும்.

எவ்வாறெனினும், புலிகள் மீதான இராணுவ வெற்றியை அடுத்து, முதலில் "மக்கள் ஆணையை" பெற வேண்டும் என கூறிக்கொண்ட இராஜபக்ஷ, எந்தவொரு அரசியல் பொதியையும் ஒத்தி வைத்தார். அவரது முதலாவது ஜனாதிபதி பதவிக் காலத்தின் முடிவு 2011 நவம்பராக இருந்தாலும், மே மாதம் புலிகள் தோல்வியடைந்ததில் இருந்து அவரது அரசாங்கத்தால் கிளறிவிடப்பட்ட பேரினவாத சூழலை சுரண்டிக்கொள்ளும் முயற்சியில், அடுத்த ஆண்டு முற்பகுதியிலேயே அவர் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கக் கூடும் என்ற ஊகங்கள் காணப்படுகின்றன.

அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடியதாக நாட்டை உருவாக்குவதற்குத் தேவையான அரசியல் ஸ்திரப்பாட்டை பெறுவதன் பேரில், கொழும்பு அரசாங்கத்துக்கும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கே அன்றி, சாதாரண தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளை பற்றிய அக்கறையினால் அல்ல. புலிகளுக்கு எதிரான கொடூரமான இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவளித்திருந்தாலும் கூட, இந்தியாவும் மேற்கத்தைய சக்திகளும் அத்தகைய ஒரு "தீர்வுக்காக" இராஜபக்ஷவை நெருக்குகின்றன. நடந்து முடிந்த இராணுவத் தாக்குதலில் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டும் முடமாக்கப்பட்டுமுள்ளனர்.

இந்த அழுத்தத்துக்கு ஒரு சலுகையாக, "விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை" இட்டு நிரப்புவதற்கான பிரேரணைகளை தயார் செய்வதற்காக, 2006 ஜூனில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவொன்றை இராஜபக்ஷ அமைத்தார். அதே சமயம், இராஜபக்ஷ 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி, 25 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை புதுப்பிப்பதற்கான தயாரிப்புகளை துரிதப்படுத்தினார்.

இந்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு, முற்றிலும் மோசடியான ஒரு பயிற்சியாகும். இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்த போதிலும் 46 தடவைகள் கூடிய இந்தக் குழு எந்தவொரு முடிவான அறிக்கையையும் முன்வைக்கவில்லை. அதன் குறிக்கோள், யுத்தம் மற்றும் அதன் பொருளாதார தாக்கம் தொடர்பான மக்களின் எதிர்ப்பை மழுங்கடிப்பதும், இந்தியாவையும் பெரும் வல்லரசுகளையும் திருப்திப்படுத்துவதும் மற்றும் கூட்டரசாங்கத்தின் பங்காளியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மிச்சசொச்சங்கள் உட்பட புலிகளுக்கு விரோதமான தமிழ் கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதுமே ஆகும்.

அவரது பேட்டியில், இராஜபக்ஷ தாமதத்துக்கான காரணத்தை, முன்னாள் புலிகள்-சார்பு பிரதான பாராளுமன்ற தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது சுமத்தினார். அவரே தனது சிங்கள பேரினவாத ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒதுக்கித் தள்ளியிருந்தார். "தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் [அரசியல் தீர்வு பற்றிய] கலந்துரையாடல்களுக்கு வந்து பங்குபற்ற வேண்டும்," என அவர் பிரகடனம் செய்தார்.

"இலங்கையில் சிறுபான்மையினர் இல்லை, நாட்டை நேசிப்பவர்களும் நாட்டை நேசிக்காதவர்களும் மட்டுமே உள்ளனர்," என அவர் மே 19 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய வெற்றி உரையில் முதலில் வெளிப்படுத்திய தனது நிலைப்பாட்டையும் இராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடு, 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே கொழும்பு அரசாங்கங்களின் கொள்கையாக இருந்து வந்த, தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் நீண்ட கால பாரபட்ச நடவடிக்கையை முன்னெப்போதும் இல்லாதவாறு உயர்ந்த மட்டத்துக்கு உயர்த்துகிறது. இந்த நோக்கின்படி, சிறுபான்மையினரின் துன்பங்களைப் பற்றி குறிப்பிடுவதும், அல்லது மக்களில் எந்தவொரு பகுதியினரதும் அடிப்படை உரிமைகளுக்காகப் பேசுவதும் தேசத் துரோகமும் தேசப் பற்றின்மையுமாகும்.

சுதந்திரம் அடைந்த உடனேயே, சிங்கள ஆளும் தட்டு பேரினவாதத்தை கிளறிவிடவும் தொழிலாள வர்க்கத்தை இனவாத வழியில் பிளவுபடுத்துவதன் பேரிலும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கியது. 1948ல் பிரஜா உரிமை சட்டத்தின் ஊடாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சிவில் மற்றும் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டது. அவர்கள் இந்திய வம்சாவழியினர் என்ற காரணத்தினால் பிரஜா உரிமை அற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர். இந்த பாரபட்சம் 1956 அரச மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் முழு தமிழ் சமூகத்துக்கும் எதிராக விரிவுபடுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் சிங்களம் மட்டும் அரச மொழியாக்கப்பட்டதுடன், அரசாங்கத் தொழிலில் தொடர்ந்து இருக்கவும் உயர் கல்வியை முன்னெடுக்கவும் தமிழர்கள் சிங்களம் படிக்கத் தள்ளப்பட்டனர்.

தொழிலாள வர்க்க போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் கிராமப்புற அமைதியின்மையால் பீதியடைந்த அரசாங்கம், 1972ல் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் பெளத்தத்தை அரச மதமாக்குவதன் மூலம் தமிழர்-விரோத மற்றும் இந்து-விரோத கொள்கை உச்சக் கட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஸ்ரீலங்கா சுததந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) முன்னாள் ட்ரொட்ஸ்கிசத்தை பின்பற்றிய லங்கா சமசமாஜக் கட்சியும் ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் பங்காளிகளாக சேர்ந்து அமைத்த இரண்டாவது கூட்டரசாங்கத்தால் இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டமை, இன உறவுகளில் ஒரு திருப்புமுனையை குறித்ததோடு தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தது.

தனது இராணுவ வெற்றியில் குளிர் காயும் இராஜபக்ஷ, இப்போது சிறுபான்மையினரின் இருப்பைக் கூட மறுப்பதோடு அவர்கள் தனது "தீர்வை" ஏற்றுக்கொள்ள வேண்டும் என கட்டளையிடுகின்றார். சகல ஜனநாயக பாசாங்குகளையும் கொட்டி அவர் வலியுறுத்தியதாவது: "எதைக் கொடுக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும், எதைக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குத் தெரியும். மக்கள் எனக்கு ஆணையிட்டுள்ளார்கள், எனவே நான் அதை பயன்படுத்தப் போகிறேன். ஆனால் நான் இவர்களை [தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளை] உடன்பட வைக்க வேண்டும். தாங்கள் விரும்புவதை பெற முடியாது என்பதை அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்."

இராஜபக்ஷ தனது சொந்தக் கட்சியிலும், அதே போல் அதன் கூட்டணி பங்காளியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் இப்போது அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தவாறு சிங்கள மேலாதிக்கத்துக்காக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிங்கள பேரினவாதிகளின் ஆதரவிலேயே கனமாகத் தங்கியிருக்கின்றார். சமூக அமைதியின்மைக்கு பதிலளிக்கத் தயாராகுவதில் தனது சொந்த அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளை, அவரது கருத்துக்கள் இந்த பிற்போக்கு தட்டுக்களை சாந்தப்படுத்த திட்டமிடப்பட்டவையாகும்.

கிட்டத்தட்ட 300,000 தமிழ் யுத்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களே அவர் ஜனநாயக உரிமைகளை அலட்சியம் செய்வதற்கு சாட்சியாக உள்ளன. இந்த முகாங்களில் உள்ள நிலைமைகள் தொடர்பாக ஐ.நா. முகவரமைப்புக்களும், செஞ்சிலுவைச் சங்கமும், சர்வதேச மன்னிப்புச் சபையும் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களும் முன்வைக்கும் அறிக்கைகளை ஒரு பக்கம் துடைத்துத் தள்ளிய இராஜபக்ஷ, "ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது எங்களது முகாங்களில் உள்ள நிலைமை மிகவும் சிறப்பானது என நான் சொல்வேன்" எனத் தெரிவித்தார்.

தொற்று நோய்கள் பரவுவதன் காரணமாக தடுப்பு முகாங்களில் ஒவ்வொரு வாரமும் 1,400 பேர் உயிரிழப்பதாக சர்வதேச ஊடகங்கள் ஊடாக உதவி முகவரமைப்புக்கள் அறிக்கை வெளியிட்ட நிலையிலேயே இராஜபக்ஷ இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்ட நிதிகளை செலவிடுவதில் ஐ.நா. மற்றும் உதவி முகவரமைப்புக்களும் "மிகவும் மெதுவாக" செயற்படுவதாக குற்றஞ்சாட்டுவதன் மூலம், முகாங்களில் மலசல கூட வசதிகள் பற்றாக்குறை பற்றி குறிப்பிட்டு அவர் தனது கைகளை கழுவிக்கொண்டார்.

அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் இருப்பது ஏன் என கேட்ட போது, பிரதேசங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதை ஐ.நா. உறுதிப்படுத்தும் வரை மீள் குடியேற்றம் செய்யாமல் காத்திருப்பதாக இராஜபக்ஷ கூறிக்கொண்டார். 180 நாட்களுக்குள் அகதிகளை மீளக் குடியமர்த்துவதாக முன்னர் அவர் பிரகடனம் செய்த "இலக்கு" பற்றி அவரும் எதுவும் குறிப்பிடவும் இல்லை அவரிடம் கேட்கப்படவும் இல்லை.

பேட்டியின் கடைசி பாகத்தில், அவர் மீண்டும் யுத்தத்தை தொடுக்க சுற்றிய பொய்களை இராஜபக்ஷ தற்செயலாக அம்பலப்படுத்தினார். யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் இடம்பெறக்கூடியதாக இருந்த பேச்சுவார்த்தைகளை அவர் நிராகரித்தார். "ஆரம்பத்தில் இருந்தே, நான் அதற்காக [இராணுவ நடவடிக்கைகளுக்கு] தயாராக இருந்தேன். எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு அனுபவம் இருக்கிறது. அவர்கள் [புலிகள்] ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தது."

2006 ஜூலையில், குடிநீர் திட்டமொன்றை அமுல்படுத்த நெருக்குவதன் பேரில் அனைக்கட்டு ஒன்றை புலிகள் மூடிய சம்பவம் பற்றி இராஜபக்ஷவிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதி அழித்த பதில், "அவர்கள் [புலிகள்] எனக்கு பச்சைக் கொடி காட்டிய நேரம் அதுவே", என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இராஜபக்ஷ "தற்காப்பு நடவடிக்கை" என்ற பெயரில் ஒட்டு மொத்த யுத்தத்தையும் முன்னெடுக்க புலிகளின் சிறிய எதிர்ப்பு நடவடிக்கையை சாக்குப் போக்காகப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்தப் பேட்டியின் போது, 2002 யுத்த நிறுத்தத்தை பற்றி கலந்துரையாட உதவிய நோர்வே அரசியல்வாதியான எரிக் சொல்ஹெயிமுக்கும் இராஜபக்ஷவுக்கும் இடையில் 2006 மார்ச் மாதம் நடந்த சந்திப்பு தொடர்பாக ஒரு சிறு கதையை ஒப்பிடுவதற்காக, இராஜபக்ஷவின் செயலாளர் இடையில் தலையிட்டார். "ஏனைய விடயங்களுக்கு மத்தியில், 'பிரபாகரன் ஒரு இராணுவ மேதை, நடவடிக்கையிலும் ஏனையவற்றிலும் அவரை நான் பார்த்துள்ளேன்,' என சொல்ஹெயிம் கூறினார். அதற்கு ஜனாதிபதி தெரிவித்ததாவது: 'அவர் வடக்கு காட்டில் இருந்து வந்தவர். நான் தெற்கு காட்டில் இருந்து வந்தவன்'. யார் வெற்றி பெறுவார் என பார்ப்போம்!' அது மிகவும் தீர்க்க தரிசனமாக இருந்தது."

2005 நவம்பரில் இராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது, அவர் யுத்த ஜனாதிபதியாக இருப்பார் என சோசிலிச சமத்துவக் கட்சி விடுத்த எச்சரிக்கையை இந்த கருத்துக்கள் ஒப்புவிக்கின்றன. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரது உட்பட, ஜனநாயகப் பணிகளை தீர்க்க முன்னாள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியில் இலாயக்கற்றுள்ளதை இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதி தீவிரமான முறையில் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் பரம்பரை எதிரியான சீனாவுடன் இராஜபக்ஷ நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்வதன் காரணமாக, இலங்கை மற்றும் இந்திய அரசியல் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை பூசி மூடுவதற்கு இந்த பேட்டியில் முயற்சிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் வெற்றிபெற பெய்ஜிங் இராணுவ உவிகளை வழங்கியுள்ள அதே வேளை, தமிழ் நாட்டில் நிலவும் அதிருப்தியின் காரணமாக யுத்தத்தை வெளிப்படையாக ஆதரிப்பதில் வரையறைகளைப் பேண இந்தியா நெருக்கப்பட்டது.

இந்து பத்திரிகையின் ஆசிரியரான என். ராம், இராஜபக்ஷவிடம் ஒரு பிரதான கேள்வியை முன்வைத்தார்: "அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாக இந்தியாவின் முழு பிரதிபலிப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றீர்களா?" அதற்கு பதிலளித்த இராஜபக்ஷ, "ஆம், முதலில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை புரிந்துகொண்டதில் இந்தியா மிகவும் உதவியாக இருந்தது," என்றார். "சீனாவிடம் இருந்து நாம் பெற விரும்பிய ஆயுதங்களை நாம் வாங்கினோம். அது ஒரு வர்த்தக கொடுக்கல் வாங்கல். சீனா எங்களுக்கு உதவியது. யாராவது உங்களுக்கு உதவி செய்தால் அதை நீங்கள் பாராட்டுவீர்கள் தானே? ஆனால் நாங்கள் அவர்களுக்கு சர்வதேச பதத்தில் பிரதியுபகாரம் செய்துள்ளோம். நாங்கள் இதைப் பற்றி மிகவும் தெளிவாக உள்ளோம்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரு சக்திகளுக்கும் இடையில் சமநிலைபடுத்தும் முயற்சியில், இந்தியாவுக்கு அவர் உதவிய ஒரு சமயத்தை இராஜபக்ஷ நினைவுபடுத்தினார். "[பிரிட்டிஷ்] பொதுநலவாய மாநாட்டில் ஒரு செயலாளர் நாயகத்தை தேர்வு செய்யும் நடவடிக்கையின் போது நான் இந்தியாவுக்காக பிரச்சாரம் செய்தேன். வேறு எந்த நாட்டுத் தலைவரும் அதை பகிரங்கமாக செய்திருக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். தொழிலில் ஆர்வம் காட்டுபவர்கள் இலங்கையில் உள்ளார்கள். ஆனால், இந்திய வேட்பாளர் ஒருவரே எனக்குத் தேவை என நான் கூறினேன்," என அவர் கூறினார். டில்லிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்தப் பிராந்தியத்தில், எங்களுக்கு ஒரு தலைவர் இருக்க வேண்டும்."

ஆயினும், இராஜபக்ஷவின் உள்நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில், மற்றும் ஏனைய உலக சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உக்கிரமடைய மட்டுமே செய்யும். அது சூழ்ச்சித் திட்டங்களை வகுப்பதில் கொழும்பு ஸ்தாபனத்தை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும்.

இது உள்நாட்டில் சமூக மற்றும் வர்க்க பதட்ட நிலைமைகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது, தமிழ் மக்களை அடக்குவதன் மூலமும் மற்றும் பொருளாதார நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் மூலமும் அதிகரித்து வருகின்றது.