World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation unions undermine workers' pay

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பளத்தை கீழறுக்கின்றன

By S. Ajanthan
7 August 2009

Use this version to print | Send feedback

பூகோள பொருளாதார சரிவின் மத்தியில், இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இலட்சக்கணக்கன தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை வறுமை நிலையிலேயே வைத்திருக்க முதலாளிகளுடன் சம்பளப் பேச்சுவார்த்தையில் ஒத்துழைக்கின்றன.

தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையிலான முன்னைய இரண்டு வருட உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், பெப்பிரவரி மாதத்தில் இருந்தே புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இழுபட்டு வருகின்றன. தாமதத்துக்கான காரணத்தை தொழிற்சங்க தலைவர்களிடம் கேட்டபோது, உடன்படிக்கை ஒன்றை பூர்த்தி செய்வதற்கு முன்னதாக அவர்கள் ஆகஸ்ட் 8 அன்று நடக்கவுள்ள ஊவா மாகண சபைக்கான தேர்தலில் மிகவும் வேலைப் பளுவுடன் இருப்பதாக உலக சோசலிச வலைத் தள நிருபருக்கு தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட தட்டினரான பெருமளவில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வருகின்றது. 2006-07 குடும்ப வருமானம் மற்றும் செலவு பற்றிய ஆய்வின்படி, பெருந்தோட்டத் துறையில் 32 வீதமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

2006 டிசம்பரில், இரண்டு வாரம் தொடர்ந்த வேலை நிறுத்தத்துக்கு முடிவு கட்டவும் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை விட ஆகக் குறைந்த சம்பள உயர்வை திணிக்கவும் இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடனும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துடனும் கைகோர்த்துக்கொண்டன.

அப்போதிருந்தே, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்ததுக்கு அது பிரமாண்டமாக செலவிட்டதன் பாகமாக, விலைவாசி அதிகரிப்பால் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இலட்சக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை புறக்கணித்துவிட்டு சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள்.

2006 சம்பள பேச்சுவார்த்தைகளின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு கணிசமானளவு சம்பள உயர்வு கொடுப்பதையும் அரசாங்கம் எதிர்த்ததோடு யுத்த முயற்சிகளை காட்டிக்கொடுப்பதாக வேலை நிறுத்தத்தை கண்டனம் செய்தது. கடந்த மே மாதம் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த பின்னர், புதிய "பொருளாதார யுத்தம்" ஒன்றை பிரகடனம் செய்துள்ள இராஜபக்ஷ, படையினரைப் போல் தொழிலாளர்களும் "தேசத்தைக் கட்டியெழுப்ப" அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். 2006ல் நடந்தது போலவே, தொழிற்சங்கங்கள் தவிர்க்க முடியாதபடி அதன் பாகமாக ஆகும்.

அரசியல் கட்சியாகவும் இயங்கிவரும், இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) சம்பளப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பெரிய தொழிற்சங்கமாகும். எதிர் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) சார்ந்த லங்கா ஜாதிக தோட்டத் தொழிலாளர் சங்கம், மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியையும் (ல.ச.க.க.) ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியையும் (சி.பி.) உள்ளடக்கிய, இடது கட்சிகள் என சொல்லப்படுவனவற்றை சார்ந்த கூட்டமைப்பான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் ஏனைய சங்கங்களாகும். ல.ச.ச.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தின் பங்காளிகளாகும்.

தற்போது, 200 ரூபா அடிப்படை சம்பளமும் 20 ரூபா மாறாத ஊதியமும் மற்றும் வருகைக்கான கொடுப்பணவு 70 ரூபாவும் உள்ளடங்கலாக தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 290 ரூபா (2.47 அமெரிக்க டொலர்) ஆகும். கம்பனிகளால் வழங்கப்படும் வேலை நாட்களில் 75 வீதம் வேலை செய்திருந்தால் மட்டுமே இந்தக் கொடுப்பணவு வழங்கப்படும்.

ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் மொத்த நாள் சம்பளமாக 750 ரூபா கேட்டதாக இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம் எமது வலைத் தளத்துக்கு தெரிவித்தார். ஆயினும், முதலாளிமார் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, தொழிற் சங்கங்கள் இந்தக் கோரிக்கையை 500 ரூபாவாக குறைத்துக் கொண்டன. அதையும் நிராகரித்த தோட்ட உரிமையாளர்கள், அடுத்து வரும் இரண்டு ஆண்டு காலத்துக்கு 12 வீத சம்பள அதிகரிப்பாக 24 ரூபா வழங்குவது பற்றி சிந்திப்பதாக தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் பதிலடி பற்றி கவலை கொண்ட தொழிற்சங்க தலைவர்கள், சனிக்கிழமை நடக்கவுள்ள ஊவா மாகாண சபை தேர்தல் முடியும் வரை பேச்சுவார்த்தைகளை ஒத்தி வைத்தனர். பேச்சுவார்த்தைகள் செல்லும் வழி ஏற்கனவே தெளிவாக்குவது போல், தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் அவசர சமூகத் தேவைகளில் அக்கறை காட்டுவதற்கு மாறாக, முதலாளிமாரின் இலாபத்துக்கே முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தேயிலை 21 வீதத்தாலும் இறப்பர் 30 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த வருட முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி 40.9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பூகோளரீதியில் கொள்வனவு சரிந்தமை, வறட்சியான காலநிலை மற்றும் அதிக செலவின் காரணமாக வளமாக்கி பயன்பாட்டில் 16 வீத குறைப்பும் இந்த வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக இருந்துள்ளன.

கென்யா, இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் நிலைமைகளை திணிக்க முதலாளிகளும் அரசாங்கங்களும் முயற்சிக்கின்ற நிலையில், உலக தேயிலை சந்தையில் கடுமையான செலவுக் குறைப்பு யுத்தமொன்று இடம்பெறுகின்றது. கென்யாவில் தேயிலை உற்பத்திக்கான உழைப்புச் செலவு 43.5 வீதமாக இருக்கும் அதே வேளை இலங்கையில் சுமார் 60 வீதமாக உள்ளது என இலங்கை கம்பனிகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில், தொழிலாளர்கள் வேலை இழப்புக்களையும், வேலைப் பளு அதிகரிப்பையும் வருமான வீழ்ச்சியையும் எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டு முற்பகுதியில், ஊவா மாகணத்தின் பதுளை மாவட்டத்தில் நமுனுகுல பெருந்தோட்டத்திலும் நுவெரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா தோட்டங்களிலும் ஏழு தொழிற்சாலைகள் மூடப்பட்டு நூற்றுக்கணக்கான தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தோட்டங்களில் வேலை நாட்கள் 3 அல்லது 4 நாட்களாக குறைக்கப்பட்டுள்ள அதே வேளை, தேயிலை பறிப்பவர்களின் வேலைச் சுமை 12 கிலோவிலிருந்து 17 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கம்பனிகள் எந்தவொரு சம்பள அதிகரிப்பையும் எதிர்ப்பதாக அச்சுறுத்துகின்றன. இந்தியாவின் டாட்டா தேயிலை கம்பனியின் துணை நிறுவனமான வட்டவள பெருந்தோட்டத்தின் தலைவரான ஜி. சதாசிவம், கம்பனியின் ஆண்டறிக்கையில் அதன் பங்குதாரர்களுக்கு தெரிவித்துள்ளதாவது: "சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான வழமையான அனுகுமுறை கடந்த காலத்தில் எதிர்பார்த்த விளைவை தரவில்லை... பெருந்தோட்டக் கம்பனிகள் நிதி நெருக்கடியின் மத்தியில் இருக்கின்ற நிலையில் இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகள் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."

சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க தலைவர்கள் முதலாளிகளுக்கு அடிபணிய வழிகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ. இராமையா, "உற்பத்தியின் அடிப்படையிலான சம்பளத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்கு பொருத்தமான நேரத்துக்காக காத்திருக்கிறோம்," என தெரிவிக்கின்றார். இது உற்பத்தியுடன் சம்பளத்தை பிணைப்பதையே அர்த்தப்படுத்துகிறது.

பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் தலைவரும், லங்கா சமசமாஜக் கட்சி சார்பு லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் செயலாற்றும் சுப்பையா இராமநாதன் தெரிவிக்கையில், தொழிற்சங்கங்கள் தேயிலை வீலை வீழ்ச்சியடைவதையும் கணக்கில் கொண்டு "தேயிலை விலை அதிகரிக்கும் போது தொழிலாளர்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கக் கூடியவாறு ஒரு உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும்," என்றார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான அனைத்து இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் மற்றும் இ.தொ.கா. வில் இருந்து பிரிந்து சென்ற மலையக மக்கள் முன்னணியும் (ம.ம.மு.) சம்பளப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. ஏனைய சங்கங்களை விட மிகவும் போராளிக் குணமுடையாவர்களாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, அவர்களும் 2006 டிசம்பரில் சம்பளப் போராட்ட காட்டிக்கொடுப்பை ஆதரித்திருந்தனர்.

ம.ம.மு. தலைவர் பி. சந்திரசேகரன் இன்னமும் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அமைச்சராக இருப்பதோடு அதன் கொள்கைகளையும் ஆதரிக்கின்றார். எவ்வாறெனினும், அரசாங்கத்தில் இருந்து தம்மை தூர வைத்துக்கொள்வதன் பேரில், ம.ம.மு. ஊவா மாகாண சேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து தனித்து போட்டியிடுகிறது. சம்பள பேச்சுக்களில் பங்கெடுக்காத அதேவேளை, அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய பிரச்சாரமொன்றை முன்னெடுக்கும் எண்ணமும் மலையக மக்கள் முன்னணியிடம் கிடையாது.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்து இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், "பலமான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு" அழைப்பு விடுத்துள்ளார். "முதலாளிகளுக்கு நாம் சொல்வது என்னவென்றால், தொழிலாளர்களை ஏமாற்றுவதை நிறுத்தி கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க வேண்டும்" என்பதாகும், என அவர் ரது லங்கா என்ற ஜே.வி.பி.யின் தொழிற்சங்க பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஜே.வி.பி. படகை கவிழ்க்கப் போவதில்லை. எதிர்க் கட்சியான ஜே.வி.பி. "தேசத்தை கட்டியெழுப்ப" தனது சொந்த மூலோபாயத்தை முன்வைத்துள்தோடு அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசாங்கத்தை ஆதரிக்க முடியும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

கம்பனி மற்றும் கூட்டுத்தாபன உயர் தட்டுக்களின் இலாப நோக்கங்களுக்கு மேலாக, தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை காப்பதை முன்கொணரும் சோசலிச மூலோபாயத்தை இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் எதிர்க்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் உண்மையான போராட்டமானது, பூகோள பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கென்யா, சீனா, இந்தியா மற்றும் வேறெங்கிலும் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள் உட்பட, இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்க பகுதியினரை நாடுவதை அவசியமாக்குகின்றது. இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து விலகி சுயாதீனமாக அணிதிரண்டு சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதன் பேரில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக போராட வேண்டும்.