World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Thousands protest against police killings

இலங்கை: பொலிஸ் படுகொலைக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By W. A. Sunil
18 August 2009

Use this version to print | Send feedback

கொழும்பின் தெற்கு புறநகர் பகுதியான அங்குலானையில் ஆகஸ்ட் 13 அன்று பொலிசாரால் இரு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த மரண ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்துகொண்டனர். இந்தப் படுகொலைகள், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் "பாதாள உலகத்துக்கு எதிரான யுத்தம்" என்ற மோசடியின் கீழ் மிக அண்மையில் நடந்த அட்டூழியங்களாகும்.

தன்னை கிண்டல் செய்ததாக பெண்னொருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து, அங்குலானை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் புதன் கிழமை இரவு 10 மணியளவில் எம்.பி. தினேஷ் தரங்க பெர்ணான்டோ, 22, தனுஷ்க உதயங்க அபோன்சு, 26, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமித் குமார டெய்லி மிரருக்கு தெரிவித்ததாவது: "இரு இளைஞர்களையும் அவர்கள் அழைத்து வரும் போது நான் சிறைக் கூடத்துக்குள் இருந்தேன். ஐந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களை உதைப்பதையும், குத்துவதையும் மற்றும் பொருட்களை அவர்கள் மேல் வீசுவதையும் என்னால் காணக்கூடியதாக இருந்தது. பின்னர் அங்குலான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நியூட்டன் அங்கு வந்தார். அவர்கள் அவரை அதிகாரியின் அறைக்குள் அழைத்துச் சென்றனர். அவர்கள் தோல் வாரால் தாக்கப்படுவது எனக்கு கேட்டதோடு அந்த அதிகாரி தனக்கு நெருப்பு கொண்டுவந்து தருமாறு இன்னுமொரு பொலிஸ் அலுவலருக்கு சத்தம் போட்டுக் கூறுவதையும், பின்னர் அவர் அவர்களை விட்டு விட்டு சுடுவதும் அடிப்பதுமாக இருந்தது எனக்கு கேட்டது."

தமது மகன்மார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்படும் செய்தி அறிந்த அவர்களது பெற்றோர்கள் வியாழக்கிழமை விடியற் காலை 1 மணிக்கு அங்கு சென்றனர். ஆயினும், அவர்களது மகன்மாரை பார்க்க அனுமதிக்க மறுத்த பொலிசார் அவர்களை காலையில் வருமாறு கூறினர். அந்த இரு இளைஞர்களும் சுமார் விடியற் கலை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியில் இழுத்துச் செல்லப்பட்டனர். அடுத்த நாள் காலை, தினேஷின் சடலம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பாலத்துக்கு அருகில் கிடந்ததோடு தனுஷ்கவின் சடலம் கடற்கரை ஓரத்தில் கிடந்தது.
 

A section of funeral procession
மரண ஊர்வலத்தின் ஒரு பகுதி

மரண விசாரணைகளை மேற்கொண்ட அரச மருத்துவ அதிகாரி சுனில் குமார, இரு சடலங்களது கால்களிலும் நெஞ்சிலும் பன்மடங்கு துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதாக முடிவு செய்தார். ஒருவரின் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்ததோடு அடிகாயங்களும் காணப்பட்டன.

அங்குலான ஒரு தொழிலாள வர்க்க பிரதேசமாகும். தினேஷும் தனுஷ்கவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளின் மகன்களாவர். தினேஷ் வருமானத்துக்காக மீன் விற்பனை செய்தார். அரச-அனுசரணையிலான தேசிய இளைஞர் சேவை சபையில் கைத்தொழில் பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த தனுஷ்க, தேகப் பயிற்சி நிலைய போதகராகவும் இருந்தார்.

வியாழக்கிழமை காலை, ஆத்திரமடைந்த சுமார் ஆயிரம் பேர், படுகொலைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்தனர். பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீசிய கூட்டத்தினர் கொழும்புக்கும் மாத்தறைக்கும் இடையிலான பிரதான தெற்கு இரயில் பாதையை அரை மணித்தியாலத்துக்கும் மேலாக தடை செய்தனர்.

கலகம் அடக்கும் பொலிசாரும் படையினரும் பொலிஸ் நிலையத்தையும் மற்றும் அங்குலான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.வி. நியூட்டன் உட்பட பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்ற அங்கு விரைந்தனர். பொலிசார் முதலில் இந்த இரு இளைஞர்களும் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் என கூற முயற்சித்த போதிலும், பதட்ட நிலைமை தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் ஐந்து பொலிசாரையும் கைது செய்வதாக அறிவித்தனர். கொலைகள் தொடர்பாக "பக்க சார்பற்ற விசாரணை" நடத்துவதாக ஒரு சிரேஷ்ட அதிகாரி வாக்குறுதி அழித்த பின்னரே கூட்டம் கலைந்தது.

Protest near Life Line Fitness Centre
லைஃப் லைன் ஃபிட்னஸ் சென்டருக்கு அருகில் நடந்த மறியல் போராட்டம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை மரண ஊர்வலத்துக்கு முன்னதாக, சுமார் 100 பேர் காலி வீதியில் உள்ள தனுஷ்க வேலை செய்த லைஃப் லைன் ஃபிட்னஸ் சென்டருக்கு அருகில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர். கையால் எழுதப்பட்ட பாதைகளை ஏந்தியிருந்த அவர்கள், "அப்பாவிகளை கொல்வதையும் அவர்களை பாதாள உலகத்தினர் என முத்திரை குத்துவதையும் நிறுத்து!", "பொலிஸ் பாதாள உலகத்தை நசுக்குகிறதா அல்லது மேம்படுத்துகிறதா?", "இது நியாயத்தின் உச்சத்துக்கு செல்லும் வழியா?" போன்ற சுலோகங்களை கூறி கோசமிட்டனர்.

அங்குலானை பொலிஸ் நிலைய வாயில் உட்பட பிரதேசத்தின் ஏனைய பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பொலிஸ் நிலையத்தை பாதுகாக்க கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் பொலிஸ் கமாண்டோக்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொலிசார் நிலைகொண்டிருந்தனர். மரண ஊர்வலம் தினேஷின் வீட்டில் இருந்து தொடங்கியதோடு மக்கள் வழியில் அதிகாரி நியூட்டனின் கொடும்பாவியையும் கொழுத்தினர்.

Dhanushka's distressed father at funeral procession
மரண ஊர்வலத்தில் வேதனையுடன் செல்லும் தனுஷ்கவின் தந்தை

தினேஷன் அப்பா M.B. சங்கதாச பெர்ணான்டோ உலக சோசலிச வலைத் தளத்துக்கு (WSWS) தெரிவித்ததாவது: "இந்த இரு இளைஞர்களுக்கும் பாதாள உலக முத்திரை குத்த பொலிசார் முனைந்தனர். அவர்கள் அப்பாவிகள். தினேஷ் பாடசாலையில் சாதாரண தரம் வரை கற்றார். வேறு தொழில்கள் தேடிக்கொள்ள முடியாமல் போனதால் அவர் மீன் வியாபாரம் செய்தார். பொலிஸ் இந்தக் குற்றத்தை செய்தது ஏன்? அவர்களுக்கு தண்டனையும் எங்களது பிள்ளைகளுக்கு நியாயமும் வேண்டும். இந்த வகையிலான குற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். பொலிசாருக்கு தாம் விரும்பிய முறையில் செயற்பட அதிகாரம் வழங்கப்படும் போது, இந்தக் குற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும்."

தச்சு வேலை செய்யும் தனுஷ்கவின் தந்தை ஜி.எம். சமன் உதயகான்த தெரிவித்ததாவது: "எனது மகன் உயர் தரம் வரை படித்துள்ளார். அவர் விளையாட்டு துறையை விரும்பியதோடு அந்தத் துறையில் முன்னேறவும் விரும்பினார். அவர் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்வார் என நான் கணவு கண்டேன். எனது எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தகரந்து போய்விட்டன. விசாரணைகளில் எங்களது பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்கும் என நான் நம்பவில்லை."

தனுஷ்க ஒரு பெண்னை கிண்டல் செய்தார் என்ற பொலிசாரின் குற்றச்சாட்டை அவருடன் படிக்கும் தேசிய இளைஞர் சேவை சபை மாணவர் நிராகரித்தார். "அவர் ஒரு ஒழுக்கமான மாணவன். அவரது மரணம் எங்களுக்கு பெரும் இழப்பு. பாதாள உலகத்தினரை அழித்தல் என்ற பெயரில் அரசாங்கம் அவர்களுக்கு கொடுத்துள்ள அதிகாரங்கள பயன்படுத்திக் கொண்டு பொலிசார் சொந்தமாக செயற்படுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும். இது தொடருமானால் சிவிலியன்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்ளத் தள்ளப்படுவார்கள்," என அவர் கூறினார்.

WSWS நிருபருடன் பேசிய உள்ளூர்வாசி ஒருவர்: "இத்தகை சம்பவம் இடம்பெறுவது முதலாவதோ அல்லது கடைசியானதோ அல்ல. இது வெறுமனே பொலிஸ் அதிகாரி நியூட்டன் சம்பத்தப்பட்ட பிரச்சினையும் அல்ல. இது இந்த நாட்டு மக்களுக்கு எதிரான பொலிஸ் பயங்கரவாதமாகும். இன்று நான் பாதிக்கப்பட்டால் நாளை நீங்களாக இருப்பீர்கள். ஆளும் வர்க்கம் முழு சமூகத்துக்கும் எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. [தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான] யுத்தத்தின் மத்தியில், அரசாங்கம் முழு சமுதாயத்துக்கும் எதிரான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

"இந்த நாட்டில் ஜனநாயம் இல்லை. கடந்த காலத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள். பொலிசார் அவர்களை கொன்றுவிட்டு பாதால உலக குண்டர்கள் என கூறிவிடுகின்றது. எவரும் அந்தக் கொலைகளை நீதிமன்றத்தில் சவால் செய்வதில்லை. எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்? அரசாங்கம் பாரபட்சமற்ற விசாரணைகளை அறிவித்தாலும் எதுவும் நடக்கவில்லை. அரசாங்கத்தின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப முடியாது. அதனால் இத்தகைய கொலைகள் தொடர்பாக சமுதாயத்தில் ஒரு கலந்துரையாடல் இருக்க வேண்டும், மற்றும் இந்த நீதிமன்றத்துக்கு புறம்பான கொலைகளை நிறுத்த மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்," என்றார்.

லைஃப் லைன் ஃபிட்னஸ் சென்டரின் உரிமையாளர் தெரிவித்தாவது: "தனுஷ்க எனது ஜிம்மில் வேலை செய்ததோடு அவர் தனது குறிக்கோளுக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். இப்போது நாங்கள் அவரை இழந்து விட்டோம். யுத்தத்தின் முடிவின் பின்னர் சமாதானம் வரும் என மக்கள் நினைத்த போதும் அது அவ்வாறில்லை என்பதை இந்தக் கொலைகள் காட்டுகின்றன. அரசாங்கம் அரச பயங்கரவதத்தை வடக்கில் இருந்து தெற்குக்கு கொண்டுவந்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும். இந்த அப்பாவி இளைஞனுக்கு நியாயம் கிடைக்கும் வரை நாம் எமது பிரச்சாரத்தை தொடர்வோம்."

இந்த இரு இளைஞர்களின் கொலை தனிமைப்பட்ட சம்பவம் அல்ல. புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் செயற்பட்ட கொலைப் படைகள், நூற்றுக்கணக்கான கொலைகள் மற்றும் கடத்தல்களை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றியுள்ளன. பத்திரிகையாளர்களும் எதிர்க் கட்சி அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இப்போது வெகுஜனங்களுக்கு எதிராக திருப்பப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தின் பாகமாக அரசாங்கம் "பாதாள உலகத்துக்கு எதிரான யுத்தத்தை" கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 6 அன்று, மாலபேயில் உள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (எஸ்.எல்.ஐ.ஐ.டி) மாணவனான நிபுன ராமநாயக்கவை பொலிஸ் குழுவொன்று கடத்திச் சென்றது. நிபுன தெரிவித்தவாறு, கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன உட்பட பல பொலிசார் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

Riot squad protects Angulana police station
அங்குலான பொலிஸ் நிலையத்தை கலகம் அடக்கும் பொலிசார் காவல் காக்கின்றனர்

பின்னர் நிபுன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் பாதாள உலக குழுவுடன் தொடர்புபட்டவர் என அறிக்கையொன்றில் கையெழுத்து வாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிபுனவின் தாயார் தலையிட்டதனால் அறிக்கை கையெழுத்திடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 10ம் திகதி, பொறுப்பாளிகள் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் எனக் கோரி தமது நிறுவனத்தின் முன்னால் எஸ்.எல்.ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த சம்பவத்தை நசுக்குவதன் பேரில், "விரைவான நடவடிக்கை" எடுக்குமாறு ஜனாதிபதி இராஜபக்ஷ பொலிசாருக்கு பணித்தார். ஒரு பொலிஸ் அதிகாரியும் மற்றும் அவருக்கு கீழ் இருந்த பல அலுவலர்களும் பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்ட போதிலும் எவர் மீதும் குற்றஞ்சாட்டப்படவில்லை.

பொலிஸ் மீதும் அரசாங்கத்தின் மீதும் வெகுஜன சீற்றத்தை தனிக்கும் முயற்சியில் அரசாங்க பத்திரிகையான டெயிலி நியூஸ் ஆசிரியர் தலயங்கம் ஒன்றை சனிக்கிழமை வெளியிட்டது. "எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் மா அதிபரும் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும், சேவையில் இருக்கும் சில அழுகிய முட்டைகள் முழு பொலிசையும் அழுக்காக்குவதை அனுமதிக்க கூடாது... தமது உயர்ந்த சேவைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் எவரையும் பொலிஸ் களையெடுக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு 'தூய்மையான' பொலிஸ் சேவையை ஏற்படுத்துவது அவசியம்."

அதே தினம், இதே போன்ற வரிகளில் ஐலண்ட் பத்திரிகை ஒரு ஆசிரியர் தலைப்பை வெளியிட்டிருந்தது. "உண்மையில், திணைக்களத்தில் நல்ல அதிகாரிகளும் உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் அவர்களின் நெறிதிரும்பிய சமதரப்பினர், சட்டத்தின் காவலர்களின் பெயரை திருத்த முடியாதவாறு தகர்த்து விடுகின்றனர்." என அது தெரிவித்திருந்தது.

பொலிஸ் பயங்கரவாத பிரச்சாரம் நெறி தவறிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளைவு அல்ல. மாறாக அது அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கையின் விளைவே ஆகும். கடந்த வியாழக்கிழமை, நீதிமன்றத்துக்கு புறம்பான கொலைகளை தொடர்ந்தும் நியாயப்படுத்திய ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, "தேசத்தின் சிறப்புக்காக சிலவற்றை முறையற்ற விதத்தில் செய்யத் தள்ளப்படுவதோடு சில தொந்தரவை ஏற்படுத்திவிடுகின்றன," என்றார்.

இராஜபக்ஷவின் "பாதாள உலகத்தின் மீதான யுத்தம்" ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதுமான கடுமையான தாக்குதலுக்கான தயாரிப்பாகும். ஜனாதிபதி ஏற்கனவே நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்காக, "தேசத்தை கட்டியெழுப்பும்" "பொருளாதார யுத்தம்" என்ற ஒன்றை அறிவித்துள்ளார். கால் நூற்றாண்டு உள்நாட்டு யுத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச இயந்திரம், தமது வாழ்க்கைத் தரத்தை காக்க முயற்சிக்கும் தொழிலாளர், இளைஞர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராக திருப்பி விடப்படும்.