World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government announces "release" of Tamil detainees

இலங்கை அரசாங்கம் தமிழ் கைதிகளின் "விடுதலையை" அறிவிக்கின்றது

By Sarath Kumara
27 November 2009

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களுக்கு "நடமாடும் சுதந்திரத்தை" வழங்குவதற்கு இறுதி முடிவெடுத்துள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இதே போல் எதிர்வரும் ஜனவரி 31 அளவில் சகல முகாம்களும் மூடப்பட்டு மக்கள் தமது சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் "குடியமர்த்தப்படுவார்கள்" என்றும் அது அறிவித்துள்ளது.

தடுப்பு நிலையங்கள் சம்பந்தமாக சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் குவிந்துவரும் விமர்சனங்கைள எதிர்கொண்ட நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு முற்றிலும் போலித் தனமானதாகும். மே மாத நடுப்பகுதியில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியில் இருந்து, இலங்கை இராணுவம் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பை தயார்படுத்தியுள்ளது. "விடுவிக்கப்படும்" பொதுமக்கள் தமது நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளில் சிறைச்சாலை போன்ற கட்டுப்பாடுகளுக்கு தொடர்ந்தும் முகங்கொடுப்பார்கள்

இராணுவம், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பியோடிய சுமார் 280,000 தமிழ் பொதுமக்களை "நலன்புரி கிராமங்கள்" என் குறிப்பிடப்படும் முகாங்களில் தடுத்து வைத்திருந்தது. வடக்கு நகரமான வவுனியாவுக்கு அருகில் உள்ள பிரமாண்டமான மெனிக்பாம் முகாமில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 160,000 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

"உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்" அல்லது "அகதிகள்" யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இராணுவத்தால் நடத்தப்படும் இந்த முகாம்கள் முள் மற்றும் சுருள் கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்டு கனரக ஆயுதங்கள் தாங்கியுள்ள சிப்பாய்களால் காவல் காக்கப்படுகின்றன. தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் வெளியில் சென்று வருவதற்கு அனுமதிக்கப்படாததுடன், அவர்களை பார்க்க வரும் உறவினர்களும் நண்பர்களும் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மீளக் குடியர்த்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் 130,000 பேர் மட்டுமே முகாங்களில் எஞ்சியுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மகாங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சில சர்வதேச உதவி அமைப்புக்கள் மீதும் கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டுள்ளதாலும் இந்தப் புள்ளிவிபரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை. 10,000 க்கும் மேற்பட்டு இளைஞர்களும் யுவதிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு எந்த விதமான குற்றச் சாட்டுக்களும் இன்றி "புலி சந்தேக" நபர்களாக தனியான "புனர்வாழ்வு முகாம்களில்" வெளியாருடன் தொடர்பின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபிதியின் சகோதரரும் வடக்கு அபிவிருத்திச் செயலணித் தலைவருமான பசில் ராஜபக்ஷ முகாம்கள் திறக்கப்படுகின்றன என்ற முடிவை பெரும் ஏக்காளத்துடன் அறிவித்தார். "அவர்கள் முகாமுக்கு உள்ளேயும் வெளியேயும் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் விரும்பினால் வீட்டுக்கும் போக முடியும்." என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், "பாதுகாப்பான பிரதேசங்கள்" என்று இராணுவத்தால் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களால் மேலும் அச்சுறுத்தல் வருவதற்கில்லை என்பதில் இராணுவம் உடன்பாடுகொண்டுள்ளது என இராஜபக்ஸ கூறினார் -இது, அத்தகையை முடிவுகள் மீது ஜெனரல்கள் ஏறத்தாழ இரத்து அதிகாரத்தை அமுல்படுத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. பொது மக்கள் மத்தியில் "புலி பயங்கரவாதிகள்" ஒழிந்திருப்பதால், இளம் பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் உட்பட கைதிகளை வீட்டுக்கு செல்லவோ அல்லது முகாமுக்கு வெளியில் செல்லவோ அனுமதிக்க முடியாது என முன்னர் அரசாங்கம் வலியுறுத்தி வந்தது. கால் மில்லியன் தமிழ் பொது மக்கள் பலாத்காரமாக தடுத்து வைக்கப்பட்டமை, சகல தமிழர்களும் எதிரிகளாக கருதப்பட்ட நாட்டின் நீண்டகால யுத்தத்தின் இனவாத பண்பை கோடிட்டுக் காட்டுகிறது.

கைதிகளின் விடுதலை சம்பந்தமான அரசாங்கத்தின் முடிவு, எந்தவிதமான ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறையுடன் சம்பந்தப்பட்டதல்ல. எதிர்வரும் ஜனவரி 23ல் முன்கூட்டியே நடத்தப்பட உள்ள ஜனாதிபதி தேர்தல் பற்றி ஜனாதிபதி இராஜபக்ஷ அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. இது ஆளும் கூட்டணிக்குள் உள்ள தமிழ் அரசியல்வாதிகளின் முண்டு கொடுப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும் மற்றும் வாக்காளர்களின் பரந்த பகுதியினரின் குறிப்பாக தமிழர்களின் மத்தியிலான பரந்த அதிருப்தி மற்றும் எதிர்ப்பை தணிக்கவும் மேற்கொள்ளப்பட்ட தெளிவான முயற்சியாகும்.

முகாம்களை மூடுவதானது, தடுப்பு நிலையங்களுக்கான நுழைவு அனுமதியின்மை மற்றும் மிகவும் பரந்தளவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் விமர்சனங்களை நிறுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது. அண்மையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களம், யுத்தத்தின் இறுதி மாதங்களில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட யுத்தக் குற்றங்களின் பட்டியல் ஒன்றிணைத் தயாரித்திருந்தது. வைத்தியசாலை உட்பட புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் மீது இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக் காரணமாக 7,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. தடுப்பு முகாமுக்குள் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதற்கான ஒரு காரணம், இராணுவத்தால் ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பொய்யை எவரும் அம்பலப்படுத்தி விடுவதை தடுப்பதேயாகும்.

இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்தை இரகசியமாக ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், ஜனநாயகத்தின் அல்லது மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் அல்ல. சிவிலியன்களை எதேச்சதிகாரமாக அடைத்து வைப்பது உட்பட கொழும்பின் யுத்த முன்னெடுப்புகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான யுத்தங்களின் எடுத்துக்காட்டைக் கொண்டவையாகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும், தமது எதிரிகளின் செலவில் குறிப்பாக சீனாவின் செலவில் கொழும்பில், தமது பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ளும் உபகரணமாக யுத்தக் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை சுரண்டிக்கொள்கின்றன.

ஐ.நா. அதனது நடவடிக்கைகள் ஊடாக கணிசமானளவு நிதிகளை வழிங்கியிருந்தாலும் கூட, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. துணைச் செயலாளர் ஜோன் ஹொர்ம்ஸ், முன்னதாக இந்த முகாம்களை விமர்சித்திருந்தார். சகல கைதிகளையும் மீண்டும் குடியமர்த்தும் முடிவை அவர் பாராட்டிய போதிலும், "இந்த மீளத் திரும்பும் நடவடிக்கையின் தரத்தைப் பற்றி" அவர் தன்னடக்கத்தை வெளிப்படுத்தினார். ஏனைய சில உதவிகளையும் சேர்த்து கைதிகளுக்கு 25,000 ரூபா (220 அமெரிக்க டொலர்) பணமாக கொடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்ட போதிலும், அது சிரமமான காரியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை" என சேர்த்துக் கூறினார். தமது இருப்பிடங்களையும் உடமைகளையும் இழந்த மக்களுக்கு, இந்த உதவி முற்றிலும் போதாது.

யதார்த்தத்தில், விடுதலை செய்யப்பட்ட கைதிகள் கொஞ்சம் உதவிகளைப் பெறுவதோடு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுவர். யாழ்ப்பாண குடாநாட்டைச் சூழவுள்ள தீவுகளுக்கு திரும்பி வந்துள்ளவர்கள், நண்பர்களின் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் அல்லது தற்காலிக குடில்களிலும் கூட்டமாக தங்கியிருக்கின்றனர். அவர்களில் எவருக்கும் உதவிகள் கிடைக்கவில்லை. உக்கிரமான மோதல்களால் மோசமாக சேதமான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகரங்களில், நிலைமை இன்னமும் மோசமாக இருக்கும். மீள் கட்டுமான வேலைகளில் புதிய இராணுவ முகாங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை கட்டுவதிலேயே பிரதானமாக அக்கறை காட்டப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாண குடாநாட்டை சூழவுள்ள பல பகுதிகளுக்கு திரும்பி வந்துள்ள மக்கள், அவர்களின் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகள் மீறப்பட்டு குடியேறியுள்ள பிரதேசத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களது அடையாள அட்டையில் விசேட அடையாளம் இடப்பட்டுள்ளதோடு அவர்கள் குறித்த காலத்துக்கு புதிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியாது. யாழ்ப்பாண குடாநாட்டில் குடியிருந்த பலர் அங்கிருந்து வெளியேறி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னி பிரதேசத்தில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொண்டுள்ள போதிலும், அவர்களது சொந்த கிரமங்கள் மற்றும் நகரங்களுக்கு திரும்பிச் செல்ல நெருக்கப்படுகிறார்கள்.

உதவிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், "25,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதோடு புனர்வாழ்வும் புனரமைப்பும் தமது அசல் கிராமங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மீளக் குடியேறுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்" என கூறினார். அந்தப் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளமையால் பலர் அங்கு சென்று குடியேற விரும்புகிறார்கள் இல்லை என முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் சுட்டிக் காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சி, தமிழ் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும், முகாங்களை மூடுவதற்கும், அவர்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தக்க உதவிகளை வழங்கவும் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல பாதுகாப்பு படைகளையும் திருப்பி அழைக்கவும் கோரி பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை கண்டித்து கடிதங்களை அனுப்பி, கூட்டங்களை நடத்தி மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவருக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரிகள்:

Gotabhaya Rajapakse
Secretary of Defence, Public Security, Law & Order.
Ministry of Defence, Colombo, Sri Lanka.
Email:
gotabaya@defence.lk

Lalith Weeratunga
Permanent Secretary to the President of Sri Lanka
Old Parliament Building, Colombo, Sri Lanka.

சோசலிச சமத்துவக் கட்சிக்கும் பிரதிகளை அனுப்பி வையுங்கள்:

301 1/1,
Main Road, Attidiya, Dehiwala, Sri Lanka.
Tel/Fax: 0094 11 2712104

World Socialist Web Site,
E-mail:
editor@wsws.org

***

மத்திய வங்கி ஊழியர் சங்கம் கீழ்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் நவம்பர் 12 அன்று இலங்கை பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அன்பின் ஐயா,

வடக்கில் தடுப்பு முகாங்களில் உள்ள தமிழ் பொது மக்களை விடுதலை செய்க

மேல் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக எங்களது தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழு கீழ்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை தங்களுக்கு அறியத் தர விரும்புகிறோம்:

வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டிலான தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 250,000 தமிழ் சிவிலியன்களை விடுதலை செய்யவும் அவர்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கு திரும்ப அனுமதிக்கவும் கோரும் பிரச்சாரத்தை மத்திய வங்கி ஊழியர் சங்கம் முழுமையாக ஆதரிக்கின்றது. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதன் ஒரு பாகமே இவர்களை விடுவிப்பதற்கான போராட்டம் என மத்திய வங்கி ஊழியர் சங்கம் கருதுகிறது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை அரசாங்கத்தின் கடுப்பாட்டில் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்பட்ட இராணுவத் தாக்குதல்களால் வெளியேறத் தள்ளப்பட்ட மற்றும் ஷெல் வீச்சுக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் முகங்கொடுத்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக அனைத்து தமிழர்களும் முகாங்களுள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தால் குற்றவாளிகளாக நடத்தப்படுகிறார்கள். இந்த இனவாத ஒடுக்குமுறையை எமது தொழிற்சங்கம் கண்டனம் செய்கின்றது.

நாட்டின் அரசியலமைப்பு, சட்ட முறைமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறி தமிழ் பொது மக்கள் முகாங்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம் இந்த முகாங்களுக்கு "நலன்புரி கிராமங்கள்" என பெயர் சூட்டியிருந்தாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வெளியுலகை தொடர்புகொள்ளவோ அல்லது வெளியில் உள்ளவர்கள் உள்ளே உள்ளவர்களை தொடர்புகொள்ளவோ முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்தபட்ச உணவு, உடை, சுகாதார வசதி மற்றும் மருத்து வசதிகளும் வழங்கப்பட்டு துன்பகரமான நிலைமையில் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். பத்தாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் ஏனைய முகாங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு தனியாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி ஊழியர் சங்கம் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டனம் செய்வதோடு இந்த முகாங்களை அகற்றுமாறும் மற்றும் தமிழ் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் கோருகிறது.

தலைவர்,
எம்.டபிள்யு. பியரத்ன
மத்திய வங்கி ஊழியர் சங்கம்.