World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP announces presidential candidate

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka)
9 December 2009

Use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இலங்கையில் ஜனவரி 26 நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அதன் பொதுச் செயலாளர் விஜே டயஸை வேட்பாளராக நிறுத்தவுள்ளது. தேர்தலில் பங்குபற்றும் கட்சிகளில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது உக்கிரமடைந்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும்.

கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தனது அரசாங்கத்தின் எதேச்சதிகார வழிமுறையிலான ஆட்சி, மோசமடைந்து வரும் சமூக நெருக்கடிக்கு அது பொறுப்புச்சொல்ல வேண்டிய நிலை ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்வியை சுரண்டிக்கொள்ள கணக்கிட்டிருந்தார். தேர்தல் தாமதமாகுமளவுக்கு பொருளாதார நிலை மோசமடையக் கூடும், அதனால் இராஜபக்ஷ மீண்டும் தெரிவாகுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

தான் ஒரு பிளவுபட்ட எதிர்க் கட்சிக்கு முகங்கொடுக்கக் கூடும் என ஜனாதிபதி கணித்தார். அவர் ஏற்கனவே தொடர்ச்சியாக நடத்திய மாகாண சபை தேர்தல்களை பரீட்சார்த்தமாக எடுத்துக்கொண்டதோடு எதிர்க் கட்சிகளை தீர்க்கமாகத் தோற்கடித்தார். அவர் வெற்றி கண்டது ஐக்கிய தேசியக் கட்சியும் (யு.என்.பி.) மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) மாற்றீட்டை வழங்காததாலேயே அன்றி, அரசாங்கம் பரந்தளவில் புகழ் பெற்றிருந்ததால் அல்ல. இந்த இரு கட்சிகளும் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்ததோடு அவை இரண்டும் அரசாங்கத்தின் சந்தை சார்பு பொருளாதார திட்டத்துடன் எந்தவொரு அடிப்படை வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை.

எவ்வாறெனினும், யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யும் தமது சொந்த வேட்பாளர்களை நிறுத்துவதற்கு பதிலாக, ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது "பொது வேட்பாளராக" ஆதரிக்கின்றன. பொன்சேகா கடந்த மாதம் இராஜினாமா செய்யும் வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக இராஜபக்ஷவின் யுத்தத்தை இரக்கமின்றி முன்னெடுத்த நாட்டின் உயர் மட்ட ஜெனரலாக இருந்தார். யு.என்.பி. யும் ஜே.வி.பி. யும் தமது சொந்த "யுத்த வீரனை" நிறுத்துவதன் மூலம், புலிகளின் தோல்விக்கு மேல் உயர்ந்து நின்ற இராஜபக்ஷவை இறக்கிவைக்க எதிர்பார்த்தன. பொன்சேகாவின் வேட்பாளர் நிலையின் உண்மையான முக்கியத்துவம், அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல்தடவையாக இராணுவம் நேரடியாக தலையிடுவதையும் பாராளுமன்ற ஆட்சி மேலும் நலிவுறுவதையும் குறிப்பதாகும்.

விஜே டயஸ் ஏனைய வேட்பாளர்களுக்கு எதிராக, சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்யும் இலக்குடன், தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை அணிதிரட்டவும் அவர்களுக்குப் பின்னால் கிராமப்புற மக்களை அணிதிரட்டவும் பிரச்சாரம் செய்கின்றார். சோ.ச.க. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவுகட்டுமாறும், யுத்தம் முடிவடைந்ததில் இருந்தே சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை நிபந்தனையின்றி விடுலை செய்யுமாறும் மற்றும் சகல ஒடுக்குமுறை சட்டங்களையும் அவசரகால விதிகளையும் நீக்குமாறும் கோருகிறது.

தேர்தலில் யார் வென்றாலும், அடுத்த அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது பல விளைவுகளை தரக்கூடிய தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் என சோ.ச.க. எச்சரிக்கின்றது. 2005 ஜனாதிபதி தேர்தலின் போது சமாதானத்தை கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த பின்னர், இராஜபக்ஷ உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் மற்றும் குவிந்துவரும் சமூக பொருளாதார பிரச்சினைகளில் இருந்து அவதானத்தை திசை திருப்பவும் சில மாதங்களுக்குள் நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளினார்.

ஆயினும், யுத்தம் ஆளும் வர்க்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை மட்டுமே அதிகப்படுத்தியது. இராஜபக்ஷ தனது பிரமாண்டமான இராணுவ செலவுத் திட்டத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை முடிந்தவரை ஈடுவைத்த போதிலும், குறைந்த வட்டியுடன் சர்வதேச கடன் வாங்க அவருக்கு இருந்த வாய்ப்பு, கடந்த ஆண்டின் பூகோள நிதி நெருக்கடியுடன் இல்லாமல் போய்விட்டது. சர்வதேச பொருளாதார பின்னடைவு நாட்டின் ஏற்றுமதியையும் பாதித்தது. அந்நிய செலாவனி நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில், அரசாங்கம் சர்வதேச நிதி நிறுவனத்திடம் 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறத் தள்ளப்பட்டது.

சர்வதேச நிதி நிறுவனத்தின் கடுமையான வயிற்றிலடிக்கும் கோரிக்கைகளை இட்டு நிரப்புவதற்காக, ஏற்கனவே அரசாங்க துறையில் சம்பள மற்றும் தொழில் வாய்ப்பு அதிகரிப்பை நிறுத்தியுள்ள இராஜபக்ஷ, மேலும் தனியார்மயமாக்கலை தொடங்கியுள்ளார். மேலும் மோசமான நிலைமைகள் வரவுள்ளன. சர்வதேச நிதி நிறுவனம், வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை இந்த ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 9 வீதத்தில் இருந்து 7 வீதமாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் 2 வீதமாகவும் தீவிரமாக குறைக்க வேண்டும் என கோருகிறது. இராஜபக்ஷ அடுத்த தேர்தல் வரை 2010ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாமதப்படுத்துவதன் மூலம், வாக்காளர்களின் சீற்றத்தை தணித்து வைக்க முயற்சித்துள்ளார்.

அடுத்த அரசாங்கம், அரசாங்க துறை தொழில்கள் மற்றும் சம்பளம் அதே போல் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விலை மானியங்களிலும் ஆழமான வெட்டுக்களை மேற்கொள்ளத் தள்ளப்படுவதோடு எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அரச இயந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்த தள்ளப்படும். அடுத்து வரவிருப்பதில் கொஞ்சத்தை ஏற்கனவே தொழிலாளர்கள் சந்தித்துள்ளனர். தனது போலியான "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற சாக்குப் போக்கைப் பயன்படுத்தி, இராஜபக்ஷ அவசரகால சட்டத்தை பேணி வந்தார். அதற்கான உண்மையான காரணம், துறைமுகத்திலும் மற்றும் அரசுக்கு சொந்தமான மின்சார சபை, நீர்வழங்கல் சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலும் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை சட்டவிரோதமாக்க அவர் அவசரகால சட்டத்தை பயன்படுத்தியதன் மூலம் தெளிவாகியது. அரசாங்கத்துக்கும் வர்த்தகர்களுக்கும் தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படும் இந்த தொழிற்சங்கங்கள், உடனடியாக பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டன.

இராஜபக்ஷ தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்த தயங்காத அதே வேளை, ஆளும் கும்பலில் ஒரு பகுதியினர், பதட்டமடைந்துவரும் சமூக வெடிப்பை அடக்குவதற்கு அவரது ஆட்டங்கண்ட கூட்டணி அரசாங்கம் இலாயக்கானதா என்பது பற்றி பீதிகொண்டுள்ளனர். அவர்கள், தேவையான பொருளாதார நடவடிக்கைகள் ஊடாகவும் சகல எதிர்ப்புக்களையும் இரக்கமின்றி நசுக்குவதன் மூலமும் ஆட்சியை முன்னெடுக்க, ஜெனரல் பொன்சேகாவின் பக்கம் திரும்பியுள்ளனர். ஒரு பொனபாட்டிசவாத புள்ளியான பொன்சேகா, எந்தவொரு கட்சியிலும் உறுப்பினர் அல்லாத நிலையில், கட்சி ஒழுங்குக்கும் வேலைத் திட்டத்துக்கும் கட்டுப்பட்டவர் அல்ல.

இராஜபக்ஷவும் பொன்சேகாவும் ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை தொழிலாளர்கள் அலட்சியத்துடன் நிராகரிக்க வேண்டும். இப்போது தமிழர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுமாக நூற்றுக்கணக்கானவர்களை கடத்தவும் படுகொலை செய்யவும் கொலைப் படைகளை பயன்படுத்தியது உட்பட, கடந்த நான்கு ஆண்டுகளாக பாதுகாப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்கள் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொள்கின்றனர். நீதிக்குப் புறம்பான கொலைகளில் எந்த வகையிலும் பாதுகாப்பு படைகள் தலையிடவில்லை என அவர்கள் முழுமையாக மறுத்த போதிலும், இவர்கள் இருவரும் இவற்றுக்கும் மற்றும் ஏனைய குற்றங்களுக்கும் பொறுப்பாளிகளாவர்.

இராஜபக்ஷ "ஒரு தரங்குறைந்த சர்வாதிகாரி" என பொன்சேகா வகைப்படுத்துவதோடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளார். எவ்வாறெனினும், இராஜபக்ஷவின் அரசியல்-இராணுவ குழுவின் பங்காளியாக இருந்த ஜெனரல், அதன் ஜனநாயக விரோத வழிமுறைகளை ஆதரித்தார். பொன்சேகா வெற்றி பெற்றால், தனக்கு முன்பிருந்தவரை விட மிகவும் அதிகளவு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களில் தங்கியிருப்பார். அரச இயந்திரத்தை தவிர, குறிப்பாக 300,000 சிப்பாய்களின் எண்ணிக்கையை எட்டியுள்ள மற்றும் இன்னமும் வளர்ந்துவருகின்ற இராணுவத்தை தவிர வேறு ஆதரவு தளங்கள் அவருக்கு கிடையாது. ஜெனரலுடைய பிரச்சாரத்தின் மைய நோக்கம், சமுதாயத்துக்குள் "சட்டத்தையும் ஒழுங்கையும்" மற்றும் "ஒழுக்கத்தையும்" கொண்டுவருவதாகும்.

யூ.என்.பி. யின் ஆதரவினாலேயே பொன்சேகாவால் ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ள முடிகிறது. மறுபக்கம் யூ.என்.பி., இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஜனநாயக மாற்றீடாக அதை பண்புமயப்படுத்திய முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி (ந.ச.ச.க) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியில் தங்கியிருக்கின்றது. இந்த ஆண்டு முற்பகுதியில், சுதந்திரத்துக்கான களம் என தவறாக பெயரிடப்பட்டிருந்த யூ.என்.பி. யின் இயக்கத்தில் அதனுடன் கூட்டுச் சேர்ந்துகொண்ட நவசமசமாஜக் கட்சியும், ஐக்கிய சோசலிச கட்சியும், தீவில் உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்து அதை முன்னெடுத்த பழமைவாத முதலாளித்துவ கட்சியான யூ.என்.பி. யால் ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்க முடியும் என்ற மாயையை உழைக்கும் மக்கள் மத்தியில் பரப்பிவந்தன.

நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் தங்களை பொன்சேகாவிடம் இருந்து தூர விலக்கிக் கொண்டு தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அதே வேளை, யூ.என்.பி. க்கு ஜனநாயக ஆடைகளை உடுத்தியமைக்கும், அதை பொன்சேகாவின் பிரச்சாரத்தில் பிரதான பாத்திரம் வகிக்க அனுமதித்தமைக்கும் அரசியல் ரீதியில் பொறுப்பேற்க வேண்டும். கடந்த வாரம் யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலத்தில் தமக்கு ஆதரவளித்தமைக்காக நவசமசமாஜக் கட்சிக்கும் ஐக்கிய சோசலிச கட்சிக்கும் நன்றி தெரிவித்ததோடு அவர்களது பிரச்சாரத்துக்கும் பகிரங்கமாக வாழ்த்துத் தெரிவித்தார். ஆளும் வர்க்கத்தின் ஏதாவதொரு பகுதிக்கு மாறி மாறி தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதில் சந்தர்ப்பவாத அரசியல் ஆற்றுகின்ற பாத்திரத்துக்கு இதைவிட வேறு குற்றச்சாட்டு வேண்டியதில்லை.

நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, அடிப்படை அரசியல் மறுதிசையமைவை ஏற்படுத்தவும் சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் சகல பகுதியில் இருந்தும் விலகி தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரளவேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தசாப்த காலங்களாக, தொழிலாளர்களை இனவாத வழியில் பிளவுபடுத்தி வைக்கவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கவும் ஒரு வழிமுறையாக தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறி வந்துள்ளது. இராஜபக்ஷ கூறிக்கொள்வது போல், யுத்தத்தின் முடிவானது சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவந்துவிடவில்லை. மாறாக வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான உக்கிரமான தாக்குதலையே கொண்டுவந்துள்ளது.

தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் இத்தகைய பிரச்சினைகளை மிக அருகில் எதிர்கொள்கின்றனர். புலிகள் நசுக்கப்பட்டமை வெறுமனே ஒரு இராணுவத் தோல்வியல்ல. மாறாக, எந்தவொரு முன்னேற்றமான பொருளாதார அல்லது அரசியல் பொருத்தமும் இல்லாத ஒரு முன்நோக்கின் விளைவேயாகும். உத்தியோகபூர்வ தமிழர் விரோத பாரபட்சங்களுக்கு சிறிய இலங்கை தீவில் ஒரு பகுதியில் தமிழ் சிறுபான்மையினருக்காக ஒரு முதலாளித்துவ தனி அரசை செதுக்கிக்கொள்ள முயற்சிப்பதே புலிகளின் பதிலாக இருந்தது. சிங்கள பொது மக்கள் மீதான புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள், கொழும்பு அரசாங்கம் இழைத்த குற்றங்களுக்கு ஒட்டு மொத்த "சிங்கள மக்களையும்" குற்றஞ்சாட்டும் அவர்களின் தேசியவாத நோக்கின் விளைவே அன்றி, தந்திரோபாய பிழையல்ல. சிங்கள தொழிலாளர்களுக்கு எந்தவிதத்திலும் வேண்டுகோள் விடுக்க இயற்கையாகவே இலாயக்கற்ற புலிகள், சகல வெளிநாட்டு பெரும் வல்லரசுகளும் இராஜபக்ஷவை ஆதரித்த போதிலும் கூட, யுத்தத்தின் கடைசி மாதங்களில் "சர்வதேச சமூகத்துக்கு" பயனற்ற வேண்டுகோள்களை விடுக்குமளவுக்கு இறங்கி வந்தனர்.

யுத்தம் முடிவடைந்தில் இருந்தே, புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, மேலம் மேலும் கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் ஒத்துப் போகின்றது. அது தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை. இப்போது தமது சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவதா அல்லது இராஜபக்ஷவையோ அல்லது பொன்சேகாவையோ ஆதரிப்பதா என்பது பற்றி வாதிட்டு வருவதாக தெரியவருகிறது. முடிவு என்னவாக இருந்தாலும், தமிழ் கூட்டமைப்பின் அரசியலானது தமிழ் ஆளும் கும்பலின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கிறதே ஒழிய, தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அல்ல. தொழிலாள வர்க்கத்துடனான எந்தவொரு முரண்பாட்டின் போதும், அவர்களின் தேசிய அடையாளத்தை கருதாமல் தொழிலாளர்களை நசுக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்க்க முடியாமல் அரசாங்கத்தின் பக்கம் நிற்கும்.

சோ.ச.க. பிரச்சாரத்தின் மையக் கரு சோசலிச அனைத்துலகவாதமாகும். சகல விதமான தேசியவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரிக்குமாறும் தமது பொது வர்க்க நலன்களுக்காக போராடுமாறும் நாம் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் இந்த சிறிய தீவுக்குள் தீர்த்துவிட முடியாது. பூகோள முதலாளித்துவம் 1930களின் பின்னர் அதன் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் உலகை மூழ்கடித்து, தேசிய பகைமைகளையும், இராணுவவாதத்தையும் மற்றும் புதிய யுத்த ஆபத்துக்களையும் உக்கிரமாக்கியுள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, இந்த எதேச்சதிகார மற்றும் காலங்கடந்த இலாப அமைப்பை தூக்கி வீசி, உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதாரம் ஒன்றை பதிலீடு செய்வதற்காக உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த சோ.ச.க. முயற்சிக்கின்றது.

ஆளும் தட்டுக்களின் சகல பகுதியில் இருந்தும் பிரிந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்துக்காக சோ.ச.க. போராடுகின்றது. ஏதாவதொரு முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதியை "குறைந்த கெடுதியாக" கருதி ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறும் முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியின் மாற்றமுறாத வேண்டுகோளை நிராகரிக்குமாறு நாம் தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம். தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வர்க்க நலன்களுக்காக போராட சுயாதீனமாக அணிதிரளாத வரை, அது ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படும் தாங்க முடியாத சுமைகளை ஏற்றுக்கொள்ள நெருக்கப்படும். அனைவருக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கவும் மற்றும் ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அல்லாமல் உழைக்கும் மக்களின் அவசர தேவைகளை இட்டு நிரப்பக் கூடிய சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தால் மட்டுமே முடியும். தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக சோ.ச.க. போராடுகிறது.

சோ.ச.க. வேட்பாளர் விஜே டயஸ், இலங்கையிலும் உலகம் பூராவும் சோசலிசத்துக்கான கொள்கைப் பிடிப்பான போராட்டத்துக்காக தமது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்தவராவார். அவர் 1968ல் சோ.ச.க. யின் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினராக இருந்து, பின்னர் 1987ல் கீர்த்தி பாலசூரிய அகால மரணமான பின்னர் அதன் பொதுச் செயலாளர் ஆனார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினராவார்.

சோசலிச சமத்துவக் கட்சி, அதன் முன்நோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை விவரிக்கும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும். எங்களது பொதுக் கூட்டங்களுக்கு சமூகமளித்து, விஜே டயஸ் பேசுவதற்காக கூட்டங்களை ஒழுங்கு செய்து, எங்களது இலக்கியங்களை விநியோகிக்க உதவி செய்து மற்றும் எங்களது பிரச்சார நிதிக்கு உயர்ந்தளவு நன்கொடைகளை வழங்குவதன் மூலம் எங்களது பிரச்சாரத்துக்கு நடைமுறையில் ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை கட்டியெழுப்புமாறு எமது அரசியல் வேலைத்திட்டத்துடன் உடன்பாடுகொண்ட அனைவருக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.