World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands of Sri Lankan soldiers perish in northern offensive

வடக்கு மோதல்களில் ஆயிரக்கணக்கான இலங்கை சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்

By the our reporters
2 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத்தின் தமிழீழ விடுதைலப் புலிகளுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள், வடக்கில் வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் பிரமாண்டமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தவில்லை. வன்னிப் பிரதேசத்தில் தங்குமிடம் அல்லது போதிய உணவு இன்றி 250,000 தமிழ் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஆயிரக்கணக்கான இலங்கை சிப்பாய்களும் முன்னரங்குப் பகுதிகளில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமை பற்றிக்கொண்டிருக்கும் கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களாவர். யுத்தத்தில் வெற்றிபெறும் ஆவலில், அரசாங்கமும் இராணுவமும் பத்தாயிரக்கணக்கான வேலையற்ற இளைஞர்களை அணிதிரட்டி, அவர்களுக்கு மூன்று முதல் நான்கு மாத பயிற்சியை மட்டும் கொடுத்து மோதலுக்கு சென்று உயிரிழக்க அனுப்புகின்றன.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் பொது மக்கள் உயிரிழப்புகளை மூடி மறைக்க முயற்சிப்பது போலவே, உயிரிழந்த படையினரின் எண்ணிக்கையையும் மூடி மறைக்க முயற்சிக்கின்றது. கடந்த அக்டோபரில், "பாதுகாப்பு காரணங்களை" காட்டி உயிரழக்கும் சிப்பாய்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பாதுகாப்பு அமைச்சு நிறுத்திவிட்டது.

கடந்த மாதம், சண்டே ஐலண்ட் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர், மூன்று மாதங்களில் 15,000 சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) கூறுவதைப் பற்றி அரசாங்கப் பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்லவிடம் கேட்டார். பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை மறுக்கும் முயற்சியில் ரம்புக்வெல்ல பிரகடனம் செய்ததாவது: "எங்களுடைய மதிப்பீட்டின் படி, 2008 அக்டோபரில் இருந்து கிட்டத்தட்ட 3,000 சிப்பாய்கள் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்."

இந்த குறைந்த எண்ணிக்கை உண்மையாக இருந்தாலும் கூட, 20 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், மூன்று மாதங்களுக்குள் பல இளம் சிப்பாய்கள் கொல்லப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். இந்த உயர்ந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையானது, தான் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் சிங்கள வறியவர்கள் உட்பட மனித உயிர் தொடர்பான அரசாங்கத்தின் அலட்சியத்தை காட்டுவதோடு, தீவு பூராவும் உள்ள குடும்பங்கள் மீது யுத்தத்தின் அழிவுகரமான சமூகத் தாக்கத்தை சுட்டிக் காட்டுகிறது.

ரம்புக்வெல்ல இதைத் தெரிவித்து சில நாட்களின் பின்னர், இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார, கடந்த மூன்று ஆண்டுகளில் புலிகள் 13,000 பேரை இழந்துள்ள அதே வேளை, மோதல்களில் 3,7000 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். இராணுவ இழப்புக்களை மூடி மறைப்பதன் பேரில் பிரிகேடியரின் மதிப்பீடுகள் பதட்டத்தை வெளிக்காட்டின.

எவ்வாறெனினும், நாடு பூராவும் சிப்பாய்களின் சவப் பெட்டிகள் வந்துகொண்டிருக்கின்றன. இறந்த சிப்பாய்களை "யுத்த வீரர்கள்" என வர்ணிப்பதை அரசாங்கம் வழமையாக்கிக் கொண்டுள்ள அதே வேளை, குடும்பங்கள் தனது அன்புக்குரியவர்களையும் குடும்பத்துக்கு உழைப்பவர்களையும் இழந்து தவிக்கின்றன.

கடந்த வாரம், சமர்களத்தில் கொல்லப்பட்ட சில சிப்பாய்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களையும் காண WSWS நிருபர்கள் சென்றிருந்தனர். பெரும்பாலானவர்கள் கிராமப் புறங்களை சேர்ந்தவர்களாக இருந்ததோடு மோசமான வறுமை மற்றும் வேலையின்மையால் ஆயுதப் படையில் சேரத் தள்ளப்பட்டவர்கள். தமது வீடுகளுக்கு வந்த போது பலர் தமது குடும்பத்தினருடன் தெரிவித்ததாவது: "நான் உங்களை பார்ப்பது இதுவே கடைசி தடவையாக இருக்கலாம்."

முகமாலை மோதலில் கொல்லப்பட்ட கோப்ரல் ஜி. தினேஷ் பிரியங்கரவின், 25, மரணச் சடங்கு ஜனவரி 10 அன்று கொழும்புக்கு தெற்கில் 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறையில் நடந்தது. "தங்க நிலத்தின் மகன்" என அவரது மரண அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமது முடிவை பெற்றோர்கள் மறுப்பார்கள் என்ற அச்சத்தால், அவர்களுக்கு சொல்லாமலேயே அவர் இராணுவத்தில் சேர்ந்து கொண்டதாக பெரேராவின் அம்மாவும் சகோதரியும் WSWS க்குத் தெரிவித்தார்கள். 2006ல், தென் இலக்கையில் பூஸ்ஸ முகாமில் நான்கு மாத பயிற்சிகளைப் பெற்ற பின்பு அவர் நேரடியாக யுத்தக் களத்துக்கு அனுப்பப்பட்டார். அவர்களது பெற்றோர் அவரை போகவேண்டாம் என கெஞ்சியதோடு அவரை இராணுவத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான பிணைப் பணத்தை தமது வீட்டை விற்றேனும் தருவதாகக் கூறினார்கள். ஆனால் அவர் உடன்படவில்லை.

அந்த குடும்பம் ஒரு சிறிய சுவர் பூச்சு பூசப்படாத வீட்டில் வசிக்கின்றது. பெரேராவின் தாய் வேலையற்றவர் மற்றும் அவரது அப்பா தொழிலை இழந்துவிட்டார். இரு சகோதரிகளும் மணம் முடித்துவிட்டனர். குடும்பத்துக்கு வருமானம் வர வழியில்லை.

அவரது தாய் தெரிவித்ததாவது: "எங்களது வீடு அடகு வைக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு கட்டுவதற்காக எனது மகன் மாதம் 10,000 ரூபா (சுமார் 90 அமெரிக்க டொலர்) அனுப்புவார். வீடு இல்லாத தனது சகோதரிக்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொடுக்க அவர் விரும்பினார்." "அவர் எங்களுக்கு அப்பா மாதிரி. அவரது அக்காவின் வீட்டுக் கூரையைத் திருத்துவதற்காக அவர் 40,000 ரூபா கொடுத்தார். இப்போது எங்களுக்கு வாழ வழியில்லை," என அவர் அழுதுகொண்டே கூறினார்.

"இந்த யுத்தத்தினால் நான் எனது மகனை இழந்துவிட்டேன். எங்களை அடிக்கடி வந்து பார்ப்பதாக மரணச் சடங்குக்கு வந்த ஒரு சிப்பாய் வாக்குறுதியளித்தார். ஆனால் ஒரு வாரத்தின் பின்னர் அவர் தனது காலை இழந்துவிட்டார். அவர்களுக்காகப் பிரார்த்திப்பதை தவிர வேறு என்ன செய்வதென்பது எமக்குத் தெரியாது," என அவர் மேலும் கூறினார்.

ஜனவரி 5 அன்று கடைசியாக பெரேரா வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு பங்கரில் இருந்தார். "யுத்த களம் பற்றி எதுவும் சொல்வது தடைசெய்யப்பட்டுள்ளதால் எனது மகன் அது பற்றி எதுவும் சொல்லவில்லை," என அவரது தாய் தெரிவித்தார்.

பெரேராவின் மரணத்தை அறிவிக்க அவரது வீட்டுக்கு பொலிசார் வந்த போது, அவர்களிடம் 10 பேரின் பட்டியல் இருந்தது. "அதே தினம், 10 சிப்பாய்களின் சவப் பெட்டிகள் பாணந்துறை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது போல் தெரிகிறது," என பெரேராவின் உறவினர்களில் ஒருவர் தெரிவித்தார்.

புலிகளின் முன்நாள் நிர்வாக மையமான கிளிநொச்சிக்கான போரில் டிசம்பர் 10 அன்று பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானக்க எனும் சிப்பாய் கடும் காயமடைந்தார். அவர் தென் மாகாணத்தில் காலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், ஜனவரி 8 அன்று காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

ஜனாக்க திருமணம் முடித்தவர். களி மண்ணால் செய்யப்பட்ட ஒரே அறை கொண்ட ஒரு சிறிய வீட்டில் அவரும் அவரது மணைவியும் அம்மா மற்றும் இரு சகோதரிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு சகோதரிக்கு 17 வயது மற்றையவருக்கு 19 வயது. குடும்ப உறுப்பினர்களின் படி, ஒரு முறை ஜானக்க காயமடைந்ததை அடுத்து அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை.

இன்னுமொரு சிப்பாயான மதுஷங்க ருவன், முல்லைத் தீவுக்கான போரில் காயமடைந்ததோடு ஜனவரி 27 வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார். "நாட்டையும் இனத்தையும் காப்பதாகக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் இளைஞர்களை சாவுக்குள் தள்ளுகிறது," என குடும்ப உறுப்பினர்கள் WSWS க்குத் தெரிவித்தனர். "வாழ்வதற்கு வழியின்றியே எனது சகோதரர் இராணுவத்தில் சேர்ந்தார். எங்களுக்கு விவசாயம் செய்ய நிலம் கிடையாது. அரசாங்கம் யுத்தத்துக்காக பெருந்தொகையான பணத்தை செலவிடுகின்றது. நாங்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லை," என ருவனின் சகோதரி தெரிவித்தார்.

கண்டிக்கு அருகில் கம்பளையைச் சேர்ந்த சரித் பிரியங்க, கிளிநொச்சி சமர்க்களத்தில் ஜனவரி 21 கொல்லப்பட்டார். அவரது கதையும் இது போன்றதே. இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டுக் வந்த போது, யுத்தம் "மிகக் கடினமானது" என குடும்பத்தவருக்கும் நண்பர்களுகுகம் கூறியிருந்ததோடு தான் உயிருடன் திரும்புவது பற்றி அவருக்கு நிச்சயம் இருக்கவில்லை.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதை விட அதிகமாக இருக்கும் என சிப்பாய்களின் குடும்பத்தவர்கள் மத்தியில் ஒரு மதிப்பீடு இருக்கின்றது. சில செய்திகளின் படி, உண்மையான நிலைமையை மறைப்பதன் பேரில், அரசாங்கம் அனைத்து சடலங்களையும் வீடுகளுக்கு அனுப்பவில்லை.

கொல்லப்படுவதில் இருந்து தப்புவதற்காக ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் இராணுவத்தை விட்டு ஓடியுள்ளதால், சுதந்திரத் தினமான பெப்பிரவரி 4 அன்று இராணுவத்தை விட்டு ஓடியவர்களுக்கு மன்னிப்பு வழங்க அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் இராணுவத்தை விட்டு ஓடிவந்த ஒருவர் விளக்கியதாவது: "நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தின் தொண்டர் படையில் சேர்ந்தேன். பெருந்தொகையான சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் நான் வெளியேறிவிட்டேன். தொண்டர்கள் என்ற வகையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை காப்பதே எமது வேலை. சிப்பாய்கள் பற்றாக்குறையின் காரணமாக எங்களில் சிலரை உயர் அதிகாரிகள் யுத்த முனைகளுக்கு அனுப்பிவிட்டனர். எனவே நான் இராணுவத்தை விட்டு ஓடிவந்துவிட்டேன்."

"எனது அப்பா சுகயீனமுற்றவர். அவரால் எதுவும் செய்ய முடியாது. எனக்கு இரு மகள்மார் உள்ளனர். ஒருவருக்கு 8 வயது மற்றவளுக்கு நான்கு வயது. எனது மனைவி மீண்டும் கர்ப்பிணியாக உள்ளார். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. நாங்கள் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இருக்கின்றோம். பொலிஸ் என்னைக் கைது செய்யலாம் என்பதால் நான் ஒழிந்து வாழ்கின்றேன்.

"இராணுவத்தில் இணைவதற்கு முன்னர் நான் ஒரு மீனவன். இப்போது என்னால் மீன் பிடிக்க முடியாது மற்றும் எனக்கு வேறு தொழிலும் கிடையாது. எனவே நான் மீண்டும் இராணுவத்தில் சேர முடிவெடுத்துள்ளேன்."

இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் சிறைவைக்கப்பட்டிருப்பது பற்றி ஜனவரி 9, கொழும்பு பேஜ் இணையம் செய்தி வெளியிட்டிருந்தது. இராணுவத்தை விட்டு தப்பிச் சென்ற 2,500 சிப்பாய்கள் இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட பின்னர் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை ஆனையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்தன இந்த ஊடகத்துக்கு தெரிவித்திருந்தார். இன்னும் 4,000 பேர் விசாரிக்கப்பட இருக்கின்றனர். இராணுவத்தால் வழங்கப்பட்ட மன்னிப்பின் பிரதிபலனாக 3,000 பேர் மட்டுமே திரும்பியுள்ளனர். திரும்பி வந்தவர்கள் மீண்டும் முன்னரங்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தப்பிவந்தவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு முகாமைப் பற்றி அலுவலர் ஒருவர் எமது வலைத் தளத்திடம் தெரிவித்தார். "கொழும்பில் உள்ள எமது முகாமில் ஒரு அறையை காவல் காத்துக்கொண்டு நான் இரண்டு வாரங்களை கழித்தேன். அதில் 80 தப்பிச் சென்ற சிப்பாய்கள் இறுக்கமாக அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரைக் காற்சட்டை மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்டிருந்தது.

"அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை சோறும், காலையிலும் மாலையிலும் மரக்கறி மற்றும் தானியத்துடன் இரண்டு பாண் துண்டுகளும் வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் நாற்றமடிக்கும் ஒரே மலசல கூடத்தை பாவிக்க வேண்டும். எந்தளவு சித்திரவதையை அவர்கள் அனுபவிக்கின்றனர். 40 நாட்களின் பின்னர் அவர்கள் இராணுவ நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டு நீண்ட காலத்துக்கு சிறைக்கு அனுப்பப்படுவர். இத்தகைய பல ஆயிரம் கைதிகள் [கொழும்பில்] வெலிக்கடை சிறையில் உள்ளனர்."

சிப்பாய்கள், அதேபோல் பொது மக்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரித்த போதிலும், இராணுவத் தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நூற்றுக்ககணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டும், ஆட்டிலறித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தும் உள்ளதோடு மோதலில் சிக்கியுள்ள இரண்டரை இலட்சம் பொது மக்களை மனிதப் பேரவலம் அச்சுறுத்திக்கொண்டிருப்பதாக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் அறிவித்த பின்னரும், "மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு" விடுத்த அழைப்பை கடந்த வெள்ளிக் கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.