World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP holds election meeting in Sri Lankan plantation district

சோ.ச.க. இலங்கை பெருந்தோட்ட மாவட்டத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தியது

By our reporters
27 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி அதன் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஜனவரி 17 ஹட்டனில் நடத்தியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு கவனமாக செவிமடுத்தனர்.

பெப்பிரவரி 14 நடக்கவுள்ள தேர்தலில் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் 19 வேட்பாளர்களை கட்சி நிறுத்தியுள்ளது. ஹட்டன் மத்திய மலைநாட்டின் சிறிய நகரமாகும். இலங்கையின் பிரதான தேயிலை பெருந்தோட்டப் பிரதேசமான இங்கு, பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.

சோ.ச.க. வட மத்திய மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திலும் 19 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

நுவரெலியாவில் சோ.ச.க. வேட்பாளர்களில் ஒருவரான அழகப்பன் சாந்தகுமார் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். பிரதான அரசியல் கட்சிகளின் துரோகத்தால் தோட்டத் தொழிலாளர்கள் வெறுப்படைந்திருப்பதாகவும் எந்தவொரு வேட்பாளரையும் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். "எமது பிரச்சாரத்தில் சோ.ச.க. உறுப்பினர்கள் தொழிலாள வர்க்கத்துக்கான எமது சுயாதீன அரசியல் முன்நோக்கை விளக்கினால் மட்டுமே அவர்கள் செவிமடுக்கின்றனர்," என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டனில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டங்கல்ட் தேயிலைத் தோட்டத்தில் ஜனவரி 16 அன்று இராணுவமும் பொலிசும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையைப் பற்றி சாந்த குமார் பேசினார். ஜனவரி 25 அன்று அருகில் உள்ள நோர்வுட் நகரில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ உரையாற்றிய கூட்டத்திற்கு முன்னதாக அந்தப் பிரதேசம் பூராவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

"பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம் நடத்தப்படுகின்ற அதே வேளை, தெற்கில் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்க இந்த யுத்தம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களை சந்தேகத்துடன் பார்ப்பதோடு, அவர்களது அறைகளில் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பல இளைஞர்கள் 'புலி பயங்கரவாதிகள்' அல்லது சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்."

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு) கட்சிகளின் ஐந்து தலைவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர்கள் என்பதை சாந்த குமார் சுட்டிக்காட்டினார். இவர்களில் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானும் ம.ம.மு. தலைவர் பெரியசாமி சந்திரசேகரனும் அடங்குவர். இரு அமைப்புகளும் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு சேவை செய்துள்ளன.

"அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் நன்மையடைய முடியும் என்பது அவர்களது பேர்போன கூற்றாகும். ஆனால் தொழிலாளர்களின் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றமும் கிடையாது. தொழிலாளர்களின் போராட்டங்களை தடுப்பதையும் அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் உதவுவதையுமே அவர்கள் செய்கின்றார்கள். தொழிலாளர்கள் அனைத்துலக சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதிலீட்டு அமைப்பாக சோ.ச.க. யை சொந்தமாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது," என சாந்த குமார் தெரிவித்தார்.

சோ.ச.க. வேட்பாளரும் அரசியல் குழு உறுப்பினருமான பாணினி விஜேசிரிவர்தன, பூகோளத்தின் ஒவ்வொரு மூலையையும் பற்றிக் கொண்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்களை விளக்கினார். "இது 1930ல் நேர்ந்த மாபெரும் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடியாகும். அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள அரசாங்கங்கள் பணக்காரர்களுக்கு பிணையெடுப்பு பொதிகளை வழங்கும் அதே வேளை, தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை வெட்டித் தள்ளுகின்றன," என அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் செலவிலும் மற்றும் உற்பத்தி திறனை அழித்து, தொழிற்சாலைகளையும் நிறுவனங்களையும் மூடுவதன் மூலமும் இந்த நெருக்கடியை தீர்த்துக்கொள்ள ஏகாதிபத்திய நாடுகள் முற்படுகின்றன என விஜேசிரிவர்தன தெரிவித்தார். அதே சமயம், அமெரிக்கா இராணுவ பலத்தை நாடி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதோடு உலக பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்த புதிய-காலனித்துவ கொள்கையை கட்டவிழ்த்து விடுகின்றது. இது அழிவுகரமான யுத்தத்துக்கும் மற்றும் உலக யுத்தத்துக்குமே வழிவகுக்கும். இந்த உலக நிலைமைகளின் மூலமே இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் இயக்கப்படுகின்றன என விஜேசிரிவர்தன மேலும் தெரிவித்தார்.

இன்னுமொரு வேட்பாளரும் தோட்டத் தொழிலாளருமான எஸ். சவரிமுத்து, கசப்பான அனுபவங்களின் ஊடாக சோ.ச.க. யின் அரசியல் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை புரிந்துகொண்டு ஒரு தசாப்தத்துக்கும் முன்னதாக சோ.ச.க. யில் இணைந்து கொண்டதாக தெரிவித்தார். 1995ல் புலி சந்தேக நபர்கள் என்ற போலி குற்றச்சாட்டின் கீழ் தான் உட்பட பல பெருந்தோட்ட இளைஞர்கள் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவர்களை விடுதலை செய்துகொள்ள சோ.ச.க. யின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த வெற்றிகரமான பிரச்சாரத்தை அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இருந்து இதுவரை தோட்டத் தொழிலாளர்களின் நிலைமைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை என சவரிமுத்து தெரிவித்தார். பெரும்பாலான தொழிலாளர்கள் இன்னமும் மிகச் சிறிய லயன் அறைகளில் வாழ்வதோடு அற்ப நாள் சம்பளத்திற்கு உழைக்கின்றனர். 1948ல் சுதந்திரத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முதலாவது இலங்கை அரசாங்கம், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை பறித்தது. அது தமிழர்-விரோத இனவாதத்தை கிளறுவதன் மூலம் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கான ஆளும் தட்டின் நடவடிக்கையின் ஆரம்பமாகும். அடுத்த வந்த அரசாங்கங்கள் பிரஜா உரிமை வழங்கத் தள்ளப்பட்டாலும், இந்த தொழிலாளர்கள் இன்னமும் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

ஆரம்பத்தில், ட்ரொட்ஸ்கிசக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராடியது. ஆனால், 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சமசமாஜக் கட்சி நுழைந்துகொண்டது. பெருந்தோட்ட மாவட்டங்களில், இந்தத் துரோகத்தை இ.தொ.கா. சுரண்டிக் கொண்டது. சோசலிசத்துக்குப் போராடுவதன் மூலம் மட்டுமே இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் என சவரிமுத்து வலியுறுத்தினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரும் நுவரெலியாவில் தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் தேவராஜா, பிரதான உரையாற்றினார். உலக நிதி நெருக்கடியின் பொருளாதாரத் தாக்கத்தையும் பிற்போக்கு உள்நாட்டு யுத்தத்தையும் பற்றி விளக்கி உரையை ஆரம்பித்த அவர், உழைக்கும் மக்கள் மீது ஆழமடைந்துவரும் தாக்குதல்கள் பற்றியும் எச்சரித்தார்.

"கென்யா, இந்தியா மற்றும் வியட்னாமுடன் ஒப்பிடும் போது, இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மிகவும் அதிகம். ஆனால், அவர்களது உற்பத்தி மிகவும் குறைவு என குற்றஞ்சாட்டிய பெருந்தோட்ட சேவைகள் குழு முதலாளிகளின் தலைவரான லலித் ஒபேசகரவை தேவராஜா மேற்கோள் காட்டினார்.

"உண்மையில், தோட்டத்தில் வசிக்கும் ஒரு தொழிலாளியின் ஆகக்கூடிய நாள் சம்பளம் 280 ரூபாவுக்கும் [2.50 அமெரிக்க டொலர்] அதிகம் அல்ல. தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய உண்மையான சம்பளம் 1992ன் சம்பள மட்டத்தை விட குறைவாகும் என உலக வங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. நாட்டில் உயர்ந்த வறுமை நிலை காணப்படுவது பெருந்தோட்டங்களிலேயே ஆகும்," என தேவராஜா சுட்டிக் காட்டினார்.

பூகோள பொருளாதார வீழ்ச்சி உக்கிரமடைகின்ற நிலையில், பெருந்தோட்டக் கம்பனிகள் சம்பளத்தை குறைத்து உற்பத்தியை கூட்டவும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் முயற்சிக்கின்றன. இதற்கு முரணாக, ஒழுங்கான சம்பளம், வீடு, சுகாதார சேவை மற்றும் தொழில் பாதுகாப்பும் தொழிலாளர்களின் அவசர தேவையாகும்.

2006 டிசம்பர் நடந்த சம்பள உயர்வுப் போராட்டம் பற்றி குறிப்பிட்ட தேவராஜா, தொழிலாளர்களின் போராட்டங்களில் படிப்பினைகளைப் பெறவேண்டிய தேவையை வலியுறுத்தினார். இ.தொ.கா. மற்றும ம.ம.மு. உட்பட தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷவுடன் கதவுக்குப் பின்னால் ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு ஏற்பாடு செய்ததோடு ஒரு அற்ப ஊதியத்துக்காக போராட்டத்தை காட்டிக்கொடுத்தன. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும், போலி விமர்சனங்களை முன்வைத்த போதிலும் இந்தக் காட்டிக் கொடுப்பில் சேர்ந்துகொண்டது.

யுத்தத்தை முன்னெடுத்துக் கொண்டு மற்றும் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் தொழில்கள் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கின்ற ஆளும் கூட்டணியின் ஒரு பாகமாக இ.தொ.கா. மற்றும் மலையக மக்கள் முன்னணியும் தேர்தலில் போட்டியிடுகின்றன, என தேவராஜா மேலும் கூறினார். வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் மிகவும் போர்க்குணம் மிக்கவர்களாக இருந்தனர், ஆனால் அது மட்டும் போதாது. தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் சோ.ச.க. யை தவிர தேர்தலில் போட்டியிடும் வேறு கட்சிகளுக்கு கிடையாது.

அண்மையில், ஜனவரி 6 அன்று, சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டது மற்றும் இன்னுமொரு கும்பலால் எம்.டி.வி/சிரச மற்றும் அதன் வானொலி நிலையமும் தாக்கி அழிக்கப்பட்டது பற்றியும் தேவராஜா எச்சரிக்கை விடுத்தார். அரசாங்கத்தின் மற்றும் பாதுகாப்பு படைகளின் ஆதரவின்றி இந்தக் குண்டர்களால் செயற்பட முடியாது என அவர் தெளிவுபடுத்தினார். ஊடகங்களின் மீதான உக்கிரமான தாக்குதலானது, எந்தவொரு விமர்சனத்தையும் எதிர்ப்பையும் மேலும் நசுக்குவதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கம் தமது நிலைமைகளை பாதுகாத்துக்கொள்ள முன்வரும் போது அடக்குவதற்கும் அரசாங்கம் தயாராகிக் கொண்டிருப்பதையே குறிக்கின்றது.

"யுத்தத்தை நிறுத்த அரசாங்கத்துக்கு எதிராகவும் மற்றும் சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் ஒரு சுயாதீனமான அரசியல் வேலைத் திட்டம் இன்றி, தொழிலாள வர்க்கத்தால் தொழில் மற்றும் சம்பளத்தை பாதுகாக்கவும் முடியாது சமூக நிலைமைகளை மேம்படுத்தவும் முடியாது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட புத்திஜீவிகளுடன் இந்த வேலைத்திட்டத்தை கலந்துரையாடவே சோ.ச.க. இந்தத் தேர்தலில் தலையீடு செய்கின்றது.

"சோ.ச.க. யுத்தத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திருப்பியழைக்க கோருவதோடு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு முன்நோக்கை அபிவிருத்தி செய்கின்றது. அது சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசாகும். சோசலிசத்துக்காக தெற்காசியாவிலும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே இந்த போராட்டத்தை அபிவிருத்தி செய்ய முடியும்."

கூட்டத்தின் பின்னர், வருகை தந்திருந்தவர்களில் பலர் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர். அவர்களில் பலர் சோ.ச.க. வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிட்டிகளில் இணைந்துகொள்ளவும் உடன்பட்டனர்.

ஒரு இளம் கட்டுமான தொழிலாளியான பிரியந்த குமார தெரிவித்தாவது: "முதலாளித்துவ சுரண்டலை மாற்றுதற்கான ஒரே வழி தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியமே என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். கட்டுமான தொழிலாளர்களாகிய நாம் வீடு கட்டுகிறோம். ஆனால், எங்களில் பலருக்கு வாழ்வதற்கு ஒழுங்கான வீடு கிடையாது. இந்த நாட்களில் பல கட்டுமான தொழிலாளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தொழில் தேடிக்கொள்வதில் சிரமப்படுகிறார்கள். சர்வதேச நெருக்கடியை பற்றி சோ.ச.க. விளக்கியது. வேறு எந்தக் கட்சியும் தொழிலாளர்களுக்கு இந்த உண்மைகளை சொல்வதில்லை."

சாந்தா என்ற சிங்கள பெண் தெரிவித்தாவது: "தொழிலாளர்கள் மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர். நான் ஹட்டன் பிரதேசத்தில் தெருப் பெருக்கும் வறிய தொழிலாளர்களுடன் வேலை செய்துள்ளேன். பிரச்சினைகளை தீர்த்தல் என்ற பெயரில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் இங்கு செயற்படுகின்றன. அத்தகைய வேலைத் திட்டங்கள் அனைத்தும் மாயைகள் மற்றும் திசை திருப்பல்கள் என எனது நீண்ட அனுபவத்தின் மூலம் கண்டுகொண்டேன். தொழிலாளர்களுக்கு உங்களுடைய முன்நோக்கு தேவை."

ஜோன் என்ற ஒரு இளம் ஊழியர் தெரிவித்தாவது: "சோசலிசத்துக்காக தொழிலாளர்களை சர்வதேச ரீதியில் ஐக்கியப்படுத்தும் உங்களது முன்நோக்கால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். யுத்தம், தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டல் போன்ற நாங்கள் அனுபவிக்கும் நரகங்கள் நிரந்தரமானவையாக தோன்றுகின்றன. நீங்கள் சந்தர்ப்பவாத அசியல்வாதிகளின் பிற்போக்கு கொள்கைகளில் இருந்து வேறுபடுகின்றீர்கள். இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளில் பலர் தொழிற்சங்கத் தலைவர்களே. அவர்கள் அனைவரும் தமது சொந்த நலனுக்காக தொழிலாளர்களை விற்கின்றனர். இவர்களில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது."