World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Human tragedy continues in northern Sri Lanka

வட இலங்கையில் மனித அவலம் தொடர்கின்றது

By Sarath Kumara
23 February 2009

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கில் வன்னிப் பிராந்தியத்தில், இலங்கை இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்ற நிலையில் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை மோசமடைந்துவருகின்றது.

பாதுகாப்பு படைகள் வாரக் கடைசியில் புதுக்குடியிருப்பு நகரத்தை சுற்றி வளைத்துள்ளதோடு புலிகளை இப்போது 73 சதுரக் கிலோமீட்டர் காட்டுக்குள் முடக்கியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். பிரதேசத்துக்குள் சுயாதீன ஊடகங்கள் செல்வதை அரசாங்கமும் இராணுவமும் தடுத்துள்ள நிலையில், இந்தக் கூற்றுக்களை உறுதிப்படுத்திக்கொள்ள வழியில்லை.

யுத்தத்துக்கு எதிரான சர்வதேச கண்டனங்களை அடுத்து, அரசாங்கம் மனிதாபிமான நெருக்கடியை மூடி மறைக்க முயற்சித்து வருகின்றது. இப்போது 70,000 மக்களே இன்னமும் யுத்த வலயத்தில் உள்ளனர், பலவித தொண்டு நிறுவனங்களால் மதிப்பீடு செய்யப்பட்டவாறு 250,000 மக்கள் அங்கில்லை என வலியுறுத்துகிறது. நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களுக்கு இராணுவத்தின் கண்மூடித்தனமான ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களைக் குற்றஞ்சாட்டுவதற்கு மாறாக, புலிகள் பொதுமக்களை "மனிதக் கேடயங்களாக" வைத்திருப்பதாக அரசாங்கப் பேச்சாளர்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பெப்பிரவரி 13 அன்று அசோசியேடட் பிரஸ்ஸில் வெளியிட்ட கருத்துக்களில், அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழ் பொதுமக்களை இராணுவம் எதிரிகளாகக் கருதுகிறது என்பதை சுற்றிவளைத்து ஏற்றுக்கொண்டார். "பொதுமகனையும் பயங்கரவாதியையும் எவ்வாறு நீங்கள் அடையாளம் காண்பீர்கள்?" என அவர் பத்திரிகையாளர் மாநாட்டில் வியந்துரைத்தார். சமரசிங்கவின்படி, கொல்லப்பட்ட அனைத்து சிவிலியன்களும் சீருடையணியாத புலிகள் ஆவர்.

தமக்கு சாதகமற்ற செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் முயற்சியில், அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைத் தவிர ஏனைய அனைத்து தொண்டு நிறுவனங்களையும் வெளியேறக் கட்டளையிட்டுள்ளது. கடந்த சில நாட்களில், ஐ.நா. மனித உரிமை பேரவையை சேர்ந்த அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். கட்டவிழ்த்துவிடப்படும் மனித அவலம் பற்றி அரைகுறையாக தெரிவிக்கும் எந்தவொரு ஊடக அறிக்கைகளும், அரசாங்கப் பேச்சாளரால் புலி "பயங்கரவாதிகளுக்கு" உதவுவதாக கண்டனம் செய்யப்படுகின்றன.

ஊடக இருட்டடிப்புகள் இருந்த போதிலும், அரசாங்கத்தின் இனவாத யுத்தம் பேரழிவை உருவாக்கிவிட்டுள்ளது என்பது தெளிவு. புதுமாத்தளன் என்ற கரையோர கிராமத்தில் இருந்த தற்காலிக ஆஸ்பத்திரியில் இருந்து செஞ்சிலுவைச் சங்கம் நான்குமுறை நோயாளர்களை அப்புறப்படுத்தியது. இதுவரை 1,477 காயமடைந்தவர்களும் அவர்களது உறவினர்களும் திருகோணமலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மேலும் அதிகமானோர் காத்திருக்கின்றனர். வெள்ளிக்கிழமை, 397 நோயாளர்கள் அகற்றப்பட்டனர்.

மோதல்களால் உருவாக்கப்பட்டுவரும் அழிவின் அளவை தெரிந்துகொள்ள, அப்புறப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு அறிகுறியாகும். புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி மீண்டும் மீண்டும் ஆட்டிலறித் தாக்குதல்களுக்கு உள்ளானதை அடுத்தே புதுமாத்தளனில் தற்காலிக மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டது. யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைகள் இந்தத் தாக்குதல்களை உறுதிப்படுத்தின. ஆஸ்பத்திரி மீதான தாக்குதலை இராணுவம் மறுத்த அதே வேளை, அதன் பேச்சாளர் அங்குள்ள நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த மறுத்தார்.

பெப்பிரவரி 18 ல் விடுத்த அறிக்கையொன்றில், புதுமாத்தளனில் காணப்படும் அவநம்பிக்கையான நிலைமையை செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் போல் காஸ்டெல்லா விபரித்தார்: "இன்று நாங்கள் [படகுகளின் மூலம்] உயிர்களைப் பாதுகாத்தாலும், பலபேர் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக உதவியின்றியும் கவலையுடனும் காத்திருக்கின்றனர். இப்போது இது வாழ்வா சாவா என்ற பிரச்சினை." செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் சரசி விஜேரட்ன ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவைக்குத் தெரிவித்ததாவது: "மேலும் மேலும் மக்கள் புதுமாத்தளனுக்கு வந்துகொண்டிருக்கின்றனர். அங்கு தற்காலிக மருத்துவ மற்றும் முதலுதவி வசதியும் இருப்பதோடு சுகயீனமுற்றோரையும் காயமடைந்தோரையும் அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக படகுகளை ஒழுங்கு செய்துகொண்டிருப்போம்."

புதுமாத்தளன் ஆஸ்பத்திரியில் வேலை செய்துகொண்டிருக்கும் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரான டாக்டர் துரைராஜா வரதராஜா, உக்கிரமான ஷெல் தாக்குதலில் அன்றாடம் சுமார் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டுவருவதோடு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைகின்றனர் என பெப்பிரவரி 13 அசோசியேடட் பிரஸ்சுக்குத் தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் தெறிகுண்டுகளால் காயமடைந்த போதிலும், சுவாசிக்கும் ஆவி மற்றும் புகையில் இருந்து ஏற்படும் சுவாச தொற்றுக்கள், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற துன்பங்களை அனுபவிக்கும் நோயாளர்களும் உள்ளனர். பிரதேசத்தில் எட்டு வைத்தியர்களே உள்ள நிலையில், ஆபத்து காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வருவதை நிறுத்தியுள்ளனர். பென்சிலின் உட்பட அத்தியாவசிய நோய்தடுப்பு மருந்துகள் இன்றியே ஆஸ்பத்திரி இயங்கிவருவதாக வரதராஜா தெரிவித்தார்.

அரசாங்கம் உணவு மற்றும் மருந்து உட்பட அத்தியாவசிய விநியோகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பிரதேசங்களுக்கு செல்வதை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது. ஜனவரி 29ம் திகதிக்கு பின்னர் முதல் தடவையாக பெப்பிரவரி 18 அன்றே 30 மெற்றிக் டொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் 20 டொன் மா, 6 டொன் பருப்புவகை மற்றும் 4 டொன் சீனியும் அடங்கும். இவை புலிகளின் கைக்கு போகாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என கூறுவதன் மூலம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரட்னே விநியோகக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்தினார்.

புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தின் கடந்த 30 மாத மோதல்களில், புலிகளை பலவீனப்படுத்தவும் மக்களுக்கு கிலியேற்படுத்தவும் எண்ணிக்கையிலும் சுடுதிறனிலும் மட்டுமீறிய ஆற்றலை பயன்படுத்துவதே அசாங்கத்தினதும் இராணுவத்தினதும் மூலோபாயமாக இருந்து வந்தது. ஒரு சிறு பகுதி நிலத்துக்குள் புலிகளை முடக்கியுள்ள இராணுவம், சிவிலியன்களை அங்கிருந்து வெளியேதள்ள முயற்சிக்கின்றது. ஆகவே அந்தப் பிரதேசத்தை சுதந்திரமாக தாக்குதல் நடத்தும் பிரதேசமாக மாற்றலாம்.

உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை, வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடும் என்ற பீதியில், இராணுவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையே வெளியிடுவதை இராணுவம் கடந்த அக்டோபரில் இருந்து நிறுத்திவிட்டது. பெரும்பாலான சிப்பாய்கள் தொழில் அல்லது ஏனைய வாய்ப்புகள் இல்லாத வறிய கிராமப்புறங்களில் இருந்து வந்து பொருளாதார நோக்கத்துக்காக இராணுவத்தில் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படாத அதே வேளை, அண்மைய மாதங்களில் நடந்த மோதல்களில் 3,000 சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஏற்றுக்கொண்டார். கிராமப்புற பிரதேசங்களில், வெள்ளைக் கொடிகளும் சிப்பாய்களின் மரண அறிவித்தல் பிரசுரங்களும் பொதுவான விடயமாகியுள்ளது.

மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளார். பான் இந்த அழைப்பை மறுத்த போதிலும், கடந்த வாரம் தன் சார்பாக மனிதாபிமான விவகார செயலாளர் நாயகம் ஜோன் ஹொல்ம்ஸை அனுப்பி வைத்தார்.

இராஜபக்ஷவை சந்தித்த பின்னரும் வட இலங்கையில் வவுனியாவுக்கு சென்றுவந்த பின்னரும், ஹொல்ம்ஸ் கூறியதை அசாங்கத்துக்கும் அதன் யுத்தத்துக்கும் வெள்ளை பூசும் நடவடிக்கையாக மட்டுமே விவரிக்க முடியும். "கொல்லப்பட்டவர்களில் எத்தனைபேர் பொதுமக்கள் என்பதையும் எந்தவொரு குறிப்பிட்ட சம்பவத்துக்கும் பொறுப்பாளி யார் என்பதையும் கூறுவது கடினமானது," என அவர் பிரகடனம் செய்தார். சிவிலியன்களை பாதுகாக்குமாறு புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழைப்புவிடுத்த பின்னர், புலிகள் மீது குவிமையப்படுத்திய ஹொல்ம்ஸ், தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என புலிகளிடம் கோரினார்.

மோதல்களில் இருந்து தப்பிவரும் மக்களை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பது சம்பந்தமான விமர்சனங்களின் மத்தியிலும், தமிழ் அகதிகளை "மிகச் சிறப்பாக" நடத்துவதாக அரசாங்கத்தை பாராட்டினார். 200,000 அளவிலான யுத்த அகதிகளை வலுக்கட்டாயமாக மூன்று ஆண்டுகளுக்கு தடுத்து வைக்க பிரமாண்டமான "நலன்புரி கிராமங்களை" ஸ்தாபிப்பது பற்றி இப்போது அரசாங்கம் பிரேரித்துள்ளதோடு சர்வதேச நிதியையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றது.

கடந்த வாரம், புலிகளின் பேச்சாளர் பி. நடேசன், ஐ.நா. சிவிலியன்களுக்கு உதவி செய்யாதது தொடர்பாக தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். தமிழ் மக்களை "பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை விளபயனுள்ள நடவடிக்கைகளை எடுக்காததையிட்டு" புலிகள் "ஆழமான கவலையும் திகைப்பும் அடைந்துள்ளனர்" என அவர் தெரிவித்தார். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கும் பின்னால் தமது ஆதரவை வழங்கிய "சர்வதேச சமூகத்துக்கு" இன்னுமொரு முறை பயனற்ற வேண்டுகோள் விடுப்பதே அவரது நம்பமுடியாத திகைப்பாகும்.

உளவலிமையை தூக்கி நிறுத்தும் அவநம்பிக்கையான முயற்சியில், கடந்த வெள்ளிக்கிழமை தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்த புலிகள் இரண்டு இலகு விமானங்களை அனுப்பியிருந்தனர். ஒரு விமானம் கொழும்பில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மோதியதோடு மற்றையது கட்டுநாயக்கவில் உள்ள இலங்கையின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. யுத்தத்தின் இலக்கை மாற்றியமைக்காத இத்தகைய தாக்குதல்கள், தனியான தமிழ் அரசுக்கு ஆதரவு தேடி ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆயுதப் போராட்டம் நடத்தும் புலிகளின் முன்நோக்கின் முடிவையே சுட்டிக்காட்டுகிறது.

மோதல்களில் சிக்கியுள்ள தமிழ் அகதிகளின் தலைவிதி தொடர்பான இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிடுமூஞ்சித்தனமான அலட்சியம், தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். புலிகள் மீதான இராணுவ வெற்றி ஜனநாயகத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவரப் போவதில்லை. மாறாக, அது நாட்டின் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலையில், இராஜபக்ஷவின் வலதுசாரி ஆளும் கும்பலின் நிலையை மட்டுமே பலப்படுத்தும். யுத்தத்தின் முடிவானது, வர்க்கப் போராட்டத்தை உக்கிரமாக்குவதை மட்டுமே செய்யும். இதன் போது, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் பொலிஸ் அரச நடைமுறைகள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக விரிவுபடுத்தப்படும்.