World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Washington's criminal role in the Sri Lankan state's anti-Tamil war

இலங்கை அரசின் தமிழர் விரோத யுத்தத்தில் வாஷிங்டனின் குற்றவியல் பாத்திரம்

By Keith Jones
12 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அண்மையில் இலங்கை அரசு பெற்ற வெற்றிகளை வரவேற்றதோடு புலிகளை நிர்மூலமாக்குவதை துரிதப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் ஊக்குவித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள ஒரு பிரதான பகுதி தெரிவிப்பதாவது: "1997ல் இருந்து அமெரிக்காவால் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்ட குழுவான புலிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா பரிந்துரைக்கவில்லை."

25 ஆண்டுகால யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கான தனது ஆதரவை வாஷிங்டன் உத்தியோகபூர்வமாக கைவிட்டு சில மணித்தியாலங்களுக்குள், இலங்கை அரசாங்கம் புலிகளை தடைசெய்தது.

இப்போது இலங்கை அரசு, புலிகளை "ஆதரிப்பதாக" அது குற்றஞ்சாட்டுபவர்களை 20 ஆண்டுகளுக்கு சிறைவைக்கும் அதிகாரத்தை தானாகவே உரிமையின்றி எடுத்துக்கொண்டுள்ளது. 2006ல் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை புதுப்பித்ததில் இருந்தே, ஏறத்தாழ யுத்தத்தை அல்லது அரசாங்கத்தின் வலதுசாரி சமூக-பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் எவருக்கும் எதிராக, சோசலிஸ்டுகள் மற்றும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் முதல் புலிகளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமிழர்களின் ஒரே சட்டரீதியான பிரதிநிதிகளாக கருதும் தமிழ் கூட்டமைப்பு வரை அனவருக்கும் எதிராக அரசாங்கமும் இராணுவமும் இந்த குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கொழும்பு முன்னர் புலிகளை தடைசெய்திருந்த போதும், 2002ல் யுத்த நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கை அரசும் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு செல்ல உடன்பட்ட போது தடை நீக்கப்பட்டது.

அமெரிக்கா "சமாதான முன்னெடுப்புகளை" மறுத்ததற்கும் இலங்கை அரசாங்கம் புலிகளை தடை செய்ததற்கும் இடையிலான மிகக் குறுகிய கால இடைவெளியானது, இலங்கையின் சிங்கள முதலாளித்துவ தட்டால் முன்னெடுக்கப்படும் இனவாத யுத்தத்தை தூண்டிவிடுவதிலும் துணைபுரிவதிலும் வாஷங்டனின் குற்றவியல் பாத்திரத்தை எடுத்துக் காட்டுகிறது.

வாஷிங்டன் 2006ல் உள்நாட்டு யுத்தத்தை மீண்டும் தொடங்க கொழும்பை ஊக்குவித்ததோடு இலங்கை இராணுவத்தின் இரத்தக்களரி மிக்க முன்னேற்றத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் உற்சாகமும் உதவியும் வழங்கியுள்ளது. இலங்கை இராணுவத்தின் புதிய போராற்றலானது அது வாஷிங்டனில் இருந்து நேரடியாகவோ அல்லது பிரதான அமெரிக்க பங்காளிகளிடமிருந்து கிடைத்த ஆதரவில் இருந்தோ உருவானதாகும்.

இலங்கை துருப்புக்களுக்கு கிளர்ச்சி-எதிர்ப்பு பயிற்சிகளையும், அதே போல் புலனாய்வு சேவைகள் மற்றும் "மரணம் ஏற்படுத்தாத" ஆயுதங்களையும் வழங்கிக்கொண்டிருப்பதாக பென்டகன் ஏற்றுக்கொள்கின்றது. இதில் இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான விநியோகப் பாதையை இடையூறு செய்ய கொழும்புக்கு கிடைத்துள்ள கடல் கண்காணிப்பு ராடார் உபகரண வசதியும் அடங்கும். அதே சமயம், அமெரிக்காவுடன் நெருக்கமாக பங்களிப்பு செய்யும் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கொண்ட இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தானும் தொழில்நுட்ப ரிதியில் முன்னேற்றமான பெருந்தொகை ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு வழங்கியுள்ளன.

கனடா, ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் மற்றும் ஏனைய நாடுகளும் புலிகளை தடை செய்ய நெருக்குவதில் அமெரிக்காவின் அழுத்தம் தீர்க்கமான பங்காற்றியுள்ளது. இந்தத் தடைகள், உள்நாட்டு யுத்தத்தால் நாட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களின் நிதி ஆதரவு புலிகளுக்கு கிடைப்பதை தடுத்தன.

முந்தைய அரசாங்கம் புலிகளுக்கு மிதமிஞ்சிய சலுகைகளை வழங்கிவிட்டதாக கண்டனம் செய்த புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு சில வாரங்களுக்குள், 2006 ஜனவரியில், அப்போது அமெரிக்க தூதராக இருந்த ஜெப்ரி லன்ஸ்டன்ட், கொழும்பின் நிபந்தனைகளின் படி தீர்வுகாண புலிகள் உடனடியாக உடன்படாவிட்டால், "பலமான, மிகவும் திறமை கொண்ட மற்றும் மிகவும் உறுதியான இலங்கை இராணுவத்தை" சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

விடயத்தை பிழையின்றி தெளிவுபடுத்த லன்ஸ்டன்ட் மேலும் தெரிவித்ததாவது: "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவது மற்றும் சட்ட விரோதமாக நிதி வழங்குவதை தடுப்பது போன்ற முயற்சிகள் உட்பட, எமது இராணுவப் பயிற்சி மற்றும் உதவித் திட்டங்கள் ஊடாக நாம் தனது மக்களை பாதுகாக்கவும் தனது நலன்களை காக்கவும் இலங்கை அரசாங்கத்தின் திறமையை வலுப்படுத்தவுமே உதவுகின்றோம்."

இந்த ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, 2007 மார்ச்சில் கைச்சாத்திடப்பட்ட நுழைவு வசதி மற்றும் சேவை உடன்படிக்கையின் கீழ் (Access and Cross Servicing Agreement) இலங்கையில் உள்ள வசதிகளை அமெரிக்க யுத்தக் கப்பல்களும் விமானங்களும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளிக்கப்படும்.

கடந்த புதன் கிழமை அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை, கிளிநொச்சியின் "விடுதலையை" புகழ்வதில் சிங்கள ஸ்தாபனத்துடன் வாஷிங்டனையும் இணைத்துள்ளது. கிளிநொச்சியானது, தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த புலிகளின் கட்டுப்பாட்டிலான பகுதிகளுக்கு அதன் தலைமையகமாக ஒரு தசாப்தமாக பயன்படுத்தப்பட்டது.

கண்மூடித்தனமான விமானத் தாக்குதல் மற்றும் ஆட்டிலறி குண்டுமாரிகளின் மூலம் நடத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களால் மாபெரும் மனிதப் பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும். சுமார் 300,000 பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கம் தொண்டு நிறுவனங்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுமாறு கடந்த செப்டெம்பரில் கட்டளையிட்டு, திட்டமிட்டு அடிப்படை நிவாரண விநியோகங்களை தடுத்துள்ளதால் அகதிகளில் பெரும்பாலானவர்கள் பட்டினி மற்றும் தொற்றுநோய் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

புலிகளுக்கு எதிரான அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகம், பத்து மாதங்களுக்கு முன்னர் வன்னி பிராந்தியத்தில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து "விடுவித்துக்கொண்டதாக" கூறும் "ஒட்டுமொத்த" தமிழ் பொதுமக்களையும் இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதையும் மற்றும் இதுவரையும் கண்காணிப்பு தடுப்பு முகாம்களில் அவர்களை வைத்திருப்பதையும் கண்டனம் செய்துள்ளது.

இஸ்ரேல் அரசாங்கத்தின் காஸா மீதான தாக்குதலைப் போல், வாஷிங்டனும் மேற்கத்தைய ஊடகங்களும் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் வரலாற்றை திட்டமிட்டு திரிபுபடுத்தி, ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் கண்டனம் செய்யும் அதே வேளை, மக்களை அடக்கிவைக்கும் இலக்கில் அரச பயங்கரவாதத்திற்கு சிடுமூஞ்சித்தனமாக விலக்களிக்கின்றன. உண்மையில் அதை கொண்டாடுகின்றன.

தீவின் தமிழ் சிறுபான்மையினர் மீதான சிங்கள முதலாளித்துவத்தின் தசாப்தகால மற்றும் தொடர்ந்தும் உக்கிரமாக்கப்பட்ட ஒடுக்குமுறையின் விளைவே இலங்கை உள்நாட்டு யுத்தம் என்பதையும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் சிங்கள ஆளும் தட்டின் அதிகாரம் மற்றும் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டு இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதையும் அங்கீகரிப்பது, புலிகளின் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலை நியாயப்படுத்துவதாகாது.

காலனித்துவத்தால் வழங்கப்பட்ட பிற்போக்கு சாசன மரபுக்கும் தொடர்ச்சியான ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கும் எந்தவொரு முன்னேற்றமான தீர்வையும் வழங்க முடியாத சிங்கள முதலாளித்துவம், இலங்கை அரசின் பிறப்பில் இருந்தே தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி தமது ஆட்சிக்கு சமூக அடித்தளத்தை உருவாக்க தமிழர்-விரோத பேரினவாதத்தை தூண்டி வந்துள்ளது.

1948ல் சுதந்திரம் கிடைத்த உடனேயே, மிகப் பிரமாண்டமான, தொழிலாள வர்க்கத்தில் மிகவும் போர்க்குணம் மிக்க பகுதியினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையை சிங்கள முதலாளித்துவம் பறித்தது. ஒரு தசாப்தத்திற்குள் சிங்கள மொழி அரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1970ல் பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் செய்யப்பட்டது -தமிழர்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களும் அடங்குவர். தமிழர்கள் பல்கலைக்கழகம் செல்வதை மட்டுப்படுத்த பாரபட்சமான கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் திறந்த பொருளாதார மற்றும் புதிய-தாராளவாத மூலோபாயத்துக்கு திரும்புவதை சவால் செய்த ஒரு பொது வேலை நிறுத்தத்தை நசுக்கி மூன்று ஆண்டுகளின் பின்னர், 1983ல் இலங்கை அரசாங்கம் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக படுகொலைகளை கிளறிவிட்டது.

இதே போல், இலங்கை அரசு "சமாதான முன்னெடுப்புகளை" மீள ஆயுதபாணிகளாவதற்கு பயன்படுத்திக்கொண்டு, வாஷிங்டனின் தாராளமான உதவிகளுடன் 2006ல் அது மீண்டும் யுத்தத்தை முன்னெடுத்தது. கடந்த செப்டெம்பரில் கனேடிய பத்திரிகை ஒன்றுக்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி, சிங்கள ஸ்தாபனத்தின் மனநிலையை மிகவும் தெளிவுபடுத்தியது. "இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என நான் பலமாக நம்புகிறேன். நாட்டில் 75 வீத பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாம், இதை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இந்த நாட்டை பாதுகாக்கும் உரிமை எங்களுக்கு உண்டு. அவர்களால் [சிறுபான்மையினர்] எங்களுடன் இந்த நாட்டில் வாழ முடியும். ஆனால், அவர்கள் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்ற சாக்குப் போக்கின் கீழ் ஒவ்வாத விடயங்களை கோர முயற்சிக்கக் கூடாது," என பொன்சேகா பிரகடனம் செய்தார்.

எந்தளவில் எடுத்தாலும், 25 ஆண்டுகால நீண்ட இலங்கை உள்நாட்டு யுத்தம், சிங்களம் மற்றும் தமிழ் உட்பட இலங்கை மக்களுக்கு பேரழிவைத் தந்துள்ளது. 19 மில்லியன் ஜனத்தொகையை கொண்ட ஒரு நாட்டில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 800,000 தமிழர்கள் தீவைவிட்டு வெளியேறியுள்ளதோடு இன்னும் ஐந்து லட்சம் மக்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் அர்த்தம் முழு தமிழ் ஜனத்தொகையில் மூன்று மடங்கினர் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட அழிவினாலும் யுத்தத்தை முன்னெடுக்க பில்லியன்கள் செலவிடப்பட்டமையினாலும் தீவின் பொருளாதார முன்னேற்றும் பின்னடைந்துள்ளது. இப்போது தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 17 வீதத்தை இராணுவச் செலவு விழுங்கிக்கொள்கிறது.

இந்த யுத்தம் தொழிலாள வர்க்கத்தை அர்ப்பணிக்குமாறு மீண்டும் மீண்டும் கோருவதற்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. காணாமல் போகும் சம்பவங்களும் அரசியல் படுகொலைகளும் வழமையாகியுள்ளன. இராஜபக்ஷவின் குடும்பமும் அதற்கு நெருக்கமானவர்களும் மற்றும் இராணுவமும் நாட்டை ஆளுகின்ற நிலையில், பாராளுமன்றம் மேலும் மேலும் இந்த சிறிய சதிகார அரசியல்வாதிகள் குழுவிற்கு பின்னால் உள்ள ஒரு புறத்தோற்றமாகியுள்ளது.

இலங்கை அரசு கிளிநொச்சியில் "வரலாற்று" வெற்றி கண்டதை அடுத்து, மேலும் "அர்ப்பணிக்க" வேண்டும் என வெகுஜனங்களை ஜனாதிபதி இராஜபக்ஷ தெளிவாக எச்சரித்தார். மேலும், அரசாங்கம் புலிகள் மீது கடுமையான தடையை விதித்துள்ளதோடு முன்னணி எதிர்தரப்பு பத்திரிகையொன்றின் ஆசிரியரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசால் தமிழ் மக்கள் இனரீதியாக துன்புறுத்தப்படுவதன் பிரதிபலனாக, ஒரு வெகுஜன இயக்கமாக தோன்றிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான நிர்மூலமாக்கும் யுத்தத்தை வாஷிங்டன் வெளிப்படையாக ஆதரிப்பது, அமெரிக்க ஆளும் தட்டு பூகோளம் பூராவும் யுத்தத்தையும் எதிர்ப்போக்கையும் அனைத்துக்கொள்வதற்கான மேலும் ஒரு உறைய வைக்கும் உதாரணமாகும்.

பிற்போக்கு இலங்கை அரசை பலப்படுத்துவதையும், தமிழர்களையும் தொழிலாள வர்க்கத்தையும் நிரந்தரமாக ஒடுக்குவதை இலக்காகக் கொண்டு புலிகளை துடைத்துக்கட்ட வாஷிங்டனும் கொழும்பும் எடுக்கும் முயற்சிகளை அனைத்துலக தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது புலிகளின் அரசியலை ஆதரிப்பதாகாது.

தமிழ் தட்டுக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகள், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளிடம் ஆதரவு வேண்டுவதன் மூலம், ஒரு முதலாளித்துவ தேசிய அரசை நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றனர். புலிகள் இயக்கம் ஒரே சக்தியான இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும். யுத்தத்துக்கு முடிவுகட்டி, இலங்கை முதலாளித்துவ அரசை தூக்கி வீசுவதோடு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதிலேயே தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் தங்கியிருக்கின்றன. மற்றும் அவ்வாறு செய்யக்கூடிய ஒரே சமூக சக்தியும் தொழிலாள வர்க்கமே ஆகும்.

இந்த அனைத்துலக சோசலிச முன்நோக்குக்காகவே இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) போராடுகின்றது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதை அறிவிக்கும் ஒரு அறிக்கையில் சோ.ச.க. பிரகடனம் செய்திருப்பதாவது: "ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிராக, சோ.ச.க. வேட்பாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கின்ற யுத்தத்தை உறுதியாக எதிர்ப்பதோடு, வடக்கு கிழக்கில் இருந்து அனைத்து துருப்புக்களும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கப்பட வேண்டுமெனவும் கோருகின்றனர்."

"இது விடுதலைக்கான அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் அல்ல. மாறாக சிங்கள ஆளும் தட்டின் அதிகாரத்தையும் சொத்துக்களையும் தக்கவைத்துக்கொள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய முழு தொழிலாள வர்க்கத்தின் மீதும் முன்னெடுக்கப்படும் யுத்தமாகும். தொழிலாளர்கள் இனவாத அரசியலின் பிரிவினை நிலைப்பாட்டை தீர்க்கமாக நிராகரித்து, சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமது பொது வர்க்க அவசியங்களுக்கான ஒரு போராட்டத்தில் ஐக்கியப்பட வேண்டும் என சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது."

"இந்தப் பிராந்தியம் பூராவும் உள்ள முதலாளித்துவ வர்க்கம், மிகவும் அடிப்படையான ஜனநாயக மற்றும் தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலாயக்கற்றது என்பதற்கு மிகத் தெளிவான உதாரணமே இலங்கை யுத்தமாகும். பல தசாப்தங்களாக மத, இன மற்றும் மொழி பேதங்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டுகொடுக்கவும், இலட்சக்கணக்கான சாதாரண மக்களுக்கு பேரழிவை உருவாக்கவுமே சுரண்டிக் கொள்ளப்பட்டுள்ளன. மீண்டும் ஒருமுறை மும்பை அட்டூழியத்தை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் யுத்தப் பேரிகை கொட்டுகின்றன. இன மற்றும் மத வகுப்புவாதத்திற்கும் இராணுவவாதத்திற்கும் எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம், இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தெற்காசியா பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு முன்னணி பாதையை காட்டுவார்கள்," என அந்த அறிக்கை மேலும் பிரகடனம் செய்துள்ளது.