World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Troops out of north and eastern Sri Lanka!

இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!

By Richard Phillips
29 January 2009

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் வடக்கிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட இரண்டரை இலட்சம் மக்கள் மீது இலங்கை இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குற்றம்மிக்க தாக்குதலை நிராகரிக்கும்படி தொழிலாளர்களையும், இளைஞர்களையும் உலக சோசலிச வலைத் தளம் அழைக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 25 வருட இரத்தம்தோய்ந்த யுத்தத்திற்கு பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நகரத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதுடன், இன்னும் எஞ்சியுள்ள பிரிவினைவாத இயக்கத்தினரை நோக்கி தனது தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளதுடன், அப்பாவி உள்ளூர்மக்களை பயமுறுத்த தனது இராணுவ மேலாதிக்கத்தை குற்றமிக்கதன்மையுடன் பயன்படுத்துகின்றது.

இலங்கை இராணுவம் ''பாதுகாப்பு வலையங்கள்'' என கூறப்பட்ட பிரதேசங்கள் மீதும், தற்காலிக வைத்தியசாலைகள், முதலுதவி வாகனங்கள் மீதும் தாக்குதலை நடாத்தி, குண்டுகளை வீசியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோரை கொலை செய்தும் மற்றும் காயமடையவும் செய்துள்ளது.

நேற்று, செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு (ICRC) விடுத்த அவசர அறிக்கை ஒன்றின்படி, நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 250,000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் போதிய உணவுகளும், மருத்துகளும் இல்லாது யுத்த பிராந்தியத்துள் அகப்பட்டுள்ளனர். மோசமாக காயமடைந்த 200 பேரை அங்கிருந்து அகற்றுவதற்கான செஞ்சிலுவை சங்கத்தின் முயற்சியையும், அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் அப்பகுதியினுள் கொண்டு செல்லப்படுவதையும் இலங்கை இராணுவம் தடுத்துள்ளது.

வடக்கு இலங்கையின் மீதான இராணுவ தாக்குதல்கள் காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தால் 22 நாட்கள் நடாத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலை ஒத்துள்ளது. அதேபோல் அவ்வரசாங்களின் பொய்களையும், பிரச்சாரங்களையும் ஒத்திருக்கின்றன. இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ இராணுவம் ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்'' ஈடுபட்டுள்ளதாகவும், அத்தீவின் தமிழ் சிறுபான்மையினர் மீது மோசமான இனவாத யுத்தம் நடைபெறவில்லை எனவும் அறிவித்துள்ளார்.

இராணுவ பேச்சாளர் வெட்கங்கெட்டவிதத்தில் யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை நிராகரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை ''மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுக்கொண்டு, அது தொடர்ச்சியாக சாத்தியமில்லை எனவும், சிறிய, மக்கள் நெருக்கமாகவுள்ள பகுதிகள் மீது குண்டுவீசுவதை தவிர இராணுவத்திற்கு ''வேறு சாத்தியமில்லை'' என கூறுகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை தடுத்துவைத்திருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டுகின்றது. ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களுக்கு தப்பிச்செல்லும் மக்கள், ஒரு தடுப்பு முகாம்கள் போன்றவற்றில் போதிய உணவு, மருத்துவ மற்றும் வாழ்விற்கு அவசியமான அடிப்படை வசதிகளற்ற நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். உண்மை என்னவெனில், அரசாங்கமும், இராணுவமும் முழுத்தமிழ்மக்களையும் எதிரிகளாவே பார்க்கின்றது.

காசாவில் நடாத்தப்பட்ட இரத்தக்களரியை போலவே, இன்று இலங்கையில் நடைபெறும் புதிய கொடூரங்கள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். அமெரிக்காவின் தலைமையில் முக்கிய நாடுகள் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததுபோல், இன்று இராஜபக்ஷ அரசாங்கத்தின் பின் அணிவகுத்து நிற்கின்றன. மக்களின் பரிதாபம் குறித்த தனது போலியான அக்கறைகளுக்கு அப்பால், 2002ல் இராஜபக்ஷ யுத்தநிறுத்தத்தை மீறியதற்கும், 2006 இலிருந்து தாக்குதல்களை நடாத்துவதற்கும் வாஷிங்டன் ஆதரவளித்துள்ளதுடன், இலங்கை இராணுவத்திற்கு கிளர்ச்சி எதிர்ப்பு பயிற்சிகளையும், உளவுத்தகவல்களையும் மற்றும் தளவாடங்களையும் வழங்கியுள்ளது.

இதுபோன்ற குற்றங்களையே இந்திய அரசாங்கமும் செய்துள்ளது. தமிழர்களின் ''பாதுகாப்பு'' குறித்த தனது போலியான கவலைகளை வெளிப்படுத்துகையில் இராணுவ தாக்குதல்களுக்கான முற்றுமுழுதான ஆதரவை அது கொடுக்கின்றது. இந்திய வெளிநாட்டு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கான தனது செவ்வாய்க்கிழமை விஜயத்தின்போது, இராணுவ வெற்றிகள் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் ''சமாதானத்தை கொண்டுவரும்'' என ஆத்திரமூட்டும் வகையில் குறிப்பிட்டார். இராஜபக்ஷ அரசாங்கம் வடக்கிற்கு வழங்குவதற்கு எதை வைத்திருக்கின்றது என்பதை, மதிப்பிழந்த துணைப்படைகளின் தலைமையின் உதவியுடன் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பு நீடித்திருக்கும் ''விடுவிக்கப்பட்ட'' கிழக்கு எடுத்துக்காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என முத்திரை குத்தியமை, 1948ல் இருந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமிழ் சிறுபான்மையினரை திட்டமிட்டவகையில் பாராமுகமாக நடாத்தப்பட்டதில் வேரூன்றியுள்ள 25 வருட உள்நாட்டு யுத்தத்தின் உண்மையான காரணங்களை மூடிமறைக்கும் நோக்கத்தை கொண்டதாகும். நாட்டின் பொருளாதார பின்தங்கிய நிலைமை, ஏழ்மை போன்றவற்றிற்கு இயல்பாகவே ஒரு முற்போக்கான தீர்வை முன்வைக்கமுடியாத கொழும்பு அரசியல்வாதிகள் தமது முன்னைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களின் புத்தகத்தில் ஒரு பக்கத்தை எடுத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிரித்தாளுவதற்காக தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிட்டுள்ளனர்.

இராஜபக்ஷ நாட்டிற்கு ''ஜனநாயகத்தை'' கொண்டுவருவதாக கூறுகின்றார். ஆனால் ஜனநாயகத்திற்கான அடிப்படை தேவையாகவுள்ளது என்னவெனில் அனைவருக்கும் அடிப்படை உரிமையை வழங்குவதாகும். தமிழர்கள் தொழில், கல்வி, அரசாங்க வேலைகளை பெற்றுக்கொள்வது உட்பட அவர்களின் வாழ்வின் அனைத்து துறைகளிலும் பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். இனவாதம் என்பது புத்த மதத்தை அரசமதமாக பிரகடனம் செய்துள்ள இலங்கையின் அரசியலமைப்பிலேயே ஊறியிணைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தமானது தீவில் சிங்கள ஆளும் வர்க்கத்தின் முழுஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கானதாகும்.

இதைவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளாலும், தமிழ் மக்களுக்கான ஒரு சாத்தியமான முன்னோக்கை அபிவிருத்திசெய்ய முடியாதுள்ளது. கடந்த வருடங்களில் அதன் இராணுவத் தோல்வியானது ஏதாவது ஒரு ஏகாதிபத்திய சக்தியின் துணையுடன் வட-கிழக்கு இலங்கையில் ஒரு தனித்த முதலாளித்துவ தமிழ் குட்டி அரசு ஒன்றை உருவாக்க முயன்ற முன்னோக்கின் வங்குரோத்தின் வெளிப்பாடாகும். ''சர்வதேச சமூகம்'' இலங்கை அரசாங்கத்தின் குற்றம்மிக்க யுத்தத்தை ஆதரித்து வருகையிலும் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் அதே ஏகாதிபத்திய சக்திகளிடம் ஆதரவு தருமாறு தொடர்ந்து முக்கிய அழைப்புகளை விடுத்துவருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொந்த இனவாத முன்னோக்கானது, யுத்தத்திற்கு காரணமென அவர்களால் குற்றம்சாட்டப்படும் சிங்கள தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் எவ்வித அழைப்புவிடுவதையும் செய்யவிடாது தடுக்கின்றது. சிங்கள பொதுமக்கள் மீதான அவர்களின் பலாத்காரமான தாக்குதல்கள் சிங்கள தீவிரவாதிகளினதும், இராணுவவாதிகளினதும் கரங்களையே பலப்படுத்தியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைவும், தமிழ் மக்களுக்கு அவர்களால் ஒரு முற்போக்கான பாதையை காட்ட முடியாததும், தமிழ் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஒரு புதிய மூலோபாயம் தேவை என்பதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. தமிழ் மக்களின் உண்மையான கூட்டாளி, இலங்கையில் இரத்தம்தோய்ந்த அழிவினை முடிவிற்கு கொண்டுவருவதற்கும் மற்றும் இனவாதத்திற்கும் யுத்தத்திற்கும் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு உண்மையான போராட்டத்தை அபிவிருத்தி செய்யக்கூடியதுமான சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.

இந்த முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்து பிரிவுகளும் மற்றும் அதன் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் போராடிவருகின்றன. எதிர்வரும் 14ம் திகதி நுவரெலியா, புத்தளம் மாகாணசபை தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் இந்த யுத்தத்தின் வர்க்கத்தன்மை குறித்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளக்கமளித்து வருவதுடன், இலங்கை துருப்புகள் நாட்டின் வட-கிழக்கு பகுதியில் இருந்து உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் எனவும், தமிழ் மக்களுக்கு உடனடி உதவி வழங்கப்பட வேண்டும் எனவும் அழைப்புவிடுகின்றனர்.

தமிழ்மக்களுக்கு எதிரான 25 வருட யுத்தமானது, தமிழ், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்களுக்கு ஏழ்மையையும், மேலும் 70,000 இற்கு மேற்பட்ட உயிரிழப்பிற்கும், ஆயிரக்கணக்கானோர் அகதிகளாவதற்கும், ஆயிரக்கணக்கான தொழில் அழிப்பிற்கும், மோசமான நிலைமைக்கும் மற்றும் தொழிலாளிகளினதும் விவசாயிகளினதும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு மட்டுமே வழிவகுத்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினரிடமும் உங்கள் வாழ்க்கைத் தரங்களை தியாகம் செய்யவேண்டும் என கூறப்படுகின்றது. அரசாங்கத்தின் கட்டளைக்கு அடிபணிய மறுப்போர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கூட்டினர் எனவும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எனவும் முத்திரை குத்தப்படுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் ''காணாமல் போயுள்ளனர்'' அல்லது இராணுவ ஆதரவுடனான கொலைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடைமுறைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஒரு இராணுவ வெற்றியுடன் நிறுத்தப்படப்போவதில்லை என்பது மட்டுமல்லாது அதிகரித்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடியால் இலங்கை பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படுகையில் இன்னமும் தீவிரமடையும்.

இலங்கை அரசாங்கத்தின் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கும் அதன் குற்றம்மிக்க யுத்தத்திற்கும் எதிராக, ஆளும் வர்க்கத்தின் இலாப தேவைகளுக்காக அல்லாமல் அடிப்படை மனித தேவைகளின் அடித்தளத்தில் சமுதாயத்தை மறுஒழுங்கு செய்வதற்காக, இன-வகுப்புவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இலங்கையிலும் இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்திற்கு ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கையே சோசலிச சமத்துவக் கட்சி தீர்வாக வலியுறுத்துகின்றது.