World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government hands greater powers to Chief of Defence Staff

இலங்கை அரசாங்கம் கூட்டுப் படைகளின் தளபதிக்கு பெரும் அதிகாரங்களை கையளிக்கிறது

By Sarath Kumara
17 June 2009

Use this version to print | Send feedback

இலங்கை பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க, கணிசமான அதிகாரங்களுடன் ஒரு புதிய கூட்டுப் படைகளின் தளபதி பதவியை உருவாக்க ஜூன் 9 அன்று பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை முன்வைத்தார். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியை அறிவித்து மூன்றே வாரங்கள் ஆன நிலையில், இது இராணுவத்தின் பாத்திரத்தை பலப்படுத்தவும் இப்போது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைச் சூழவுள்ள அரசியல்-இராணுவ சதிக்கூட்டத்தை ஒன்றுசேர்ப்பதற்கும் எடுக்கப்பட்ட இன்னுமொரு நகர்வாகும்.

இந்த மசோதா வெறுமனே ஆளும் கூட்டணியின் அங்கீகாரத்துடன் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய பிரதான எதிர்க் கட்சிகளின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுவது நிச்சயம். இரு கட்சிகளும் யுத்தத்தை ஆதரித்ததோடு புலிகளின் கடைசித் தோல்வியின் பின்னரும் சுமார் 300,000 தமிழ் சிவிலியன்களை தடுத்து வைக்கப்பட்ட பின்னரும் இராணுவத்தை போற்றுவதில் இணைந்துகொண்டனர்.

தற்போதுள்ள கூட்டுப்படைகளின் தளபதி பதவி, இலங்கை ஜனாதிபதியும் தேசிய பாதுகாப்புச் சபையும் விடுக்கும் கட்டளைகளை அமுல்படுத்துதல் மற்றும் ஆயுதப் படைகளை தயார்படுத்துவது தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஆலோசனை தெரிவித்தல் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் 1999 ஜூன் மாதம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளதும் தளபதிகளுக்கு தமது திட்டங்களை முன்னெடுக்க கணிசமான சுய உரிமை உள்ளது.

இதற்கு மாறாக, இந்த புதிய கூட்டுப்படைகளின் தளபதி, ஒரு ஒருங்கிணைப்பட்ட கட்டளை மையத்தை இயக்குவதோடு மூன்று படைகளின் தளபதிகள் மீது அதிக இறுக்கமான கட்டுப்பாட்டை செலுத்துவார். முப்படைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் சேவையில் இருக்கும் தளபதிகளில் இருந்து கூட்டுப் படைகளின் தளபதியை நியமிப்பார். இந்தக் கூட்டுப் படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் "கட்டளை, மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவார்". பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஜனாதிபதி இராஜபக்ஷவின் சகோதரர் கோடாபய ஆவார்.

இந்த மசோதாவின் படி, "ஆயுதப் படைகளுக்கு மூலோபாய இலக்குகளை வழங்குவது", "ஆயுதப் படைகளின் கூட்டுப்பணிக்கான ஒரு கொள்கையை வகுப்பது", "மூலோபாய திட்டங்களுக்கான தயாரிப்புகளை ஏற்பாடு செய்தல்" ஆகியவையும் கூட்டுப் படைகளின் தளபதியின் இயக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. "புலனாய்வுத் துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை ஒருதரப்படுத்துதல்", அதே போல் நடவடிக்கை மற்றும் படைத்துறை திட்டங்களை தயார் செய்தல் மற்றும் இராணுவ ஆள் சேர்ப்பு மற்றும் கொள்வனவு ஒப்பந்தங்களுக்கு ஆலோசனை வழங்குவதையும் இவரே செய்வார்.

மூன்று படைகளினதும் தளபதிகள் அடங்கிய கூட்டுப் படை தளபதியின் குழுவுக்கும் இவர் தலைமை வகிப்பதோடு ஆயுதப் படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான உறவுகளுக்கு இவர் பொறுப்பாக இருப்பார். இந்தக் கூட்டுப்படைகளின் தளபதியின் அதிகாரக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும் அதே வேளை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மற்றும் "அவசரகால சூழ்நிலையொன்றின் போது" எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் இவரது பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதியால் முடியும்.

தற்போது கூட்டுப் படைகளின் தளபதியாக இருப்பவர் எயார் சீஃப் மார்ஷல் டொனால் பெரேரா. ஆனால், இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என கொழும்பு ஊடகங்கள் ஊகிக்கின்றன. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டு கால யுத்தத்தின் போது ஜெனரல் பொன்சேகா மிகவும் அதிகாரம் வாய்ந்த மற்றும் இரக்கமற்ற ஜெனரலாக தோன்றியுள்ளார். இக்கால கட்டத்தில் யுத்தத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்தி அவர் மீண்டும் மீண்டும் அறிக்கைகளை விடுத்துள்ளார்.

கடந்த டிசம்பரில், உத்தியோகபூர்வ அரசாங்க செய்தி இணையமொன்று பொன்சேகாவுடனான பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தது. "லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா-இப்போதைய மனிதன்", என தலைப்பிடப்பட்டிருந்த அந்த செவ்வியில், அவர் இராணுவத்தின் மீதான சிவிலியன் கட்டுப்பாட்டை கேள்விக்குள்ளாக்கினார். "நான் நினைக்கின்றேன், ஏனைய நாடுகளைப் போல், அரசாங்கம் மாறினாலும் கூட தேசிய பாதுகாப்பு மாற்றப்படக் கூடாது. ஜனாதிபதி தேசப்பற்றுள்ளவராக இருக்க வேண்டும். நாம் பெருமையுடனும் கெளரவத்துடனும் வாழ வேண்டும் மற்றும் இந்தத் தேவை ஆட்சியில் இருக்கும் எவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்," என அவர் தெரிவித்தார். இறுதியில், "ஜனாதிபதிகளும் அரசியல்வாதிகளும் வருவார்கள் போவார்கள். ஆனால் பிரஜைகள் இருந்துகொண்டே இருப்பர். அவர்களுக்கு பாதுகாப்பு தேவை," என கூறி முடித்தார்.

யுத்தம் முடிந்த உடனேயே, அரசாங்கத்தின் முடிவில்லாத இராணுவக் கொண்டாட்டங்களின் பாகமாக, ஜனாதிபதி மூன்று படைகளதும் தளபதிகளுக்கு முழு நான்கு நட்சத்திர அந்தஸ்த்தை வழங்கி முன்நிலைப்படுத்தினார். பதவியில் இருக்கும் தளபதிகள் அந்த மட்டத்திற்கு பதவி உயர்த்தப்பட்டது இதுவே முதற் தடவையாகும். பொன்சேகா ஜெனரலாகவும், கடற்படை தளபதி வசந்த கரன்னகொட அட்மிரலாகவும் மற்றும் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக ஏயார் சீஃப் மார்ஷலாகவும் பதவி உயர்த்தப்பட்டனர்.

அரசாங்கம் இராணுவத்தின் அதிகாரங்களை கூட்டுப் படைகளின் தளபதியின் கைகளில் ஒருங்கிணைப்பதும் பலப்படுத்துவதும் நாட்டை இராணுவமயமாக்குவதன் ஒரு புதிய கட்டத்தின் பாகமாகும். நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான தசாப்தகால உத்தியோகபூர்வ பாரபட்சங்களின் பின்னர் இலங்கை ஆளும் கும்பல் 1983ல் நாட்டை யுத்தத்துக்குள் தள்ளியது. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தவும் சிங்கள பிரபுக்களின் ஆட்சியை முன்நிறுத்தவும் தமிழர்-விரோத பேரினவாதத்தை பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தன.

யுத்தம் தொடர்ந்த நிலையில், இராணுவம் அரசியல் வாழ்வில் ஒரு முன்னணி பாத்திரத்தை மேலும் மேலும் பெற்றது. 1982 மற்றும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில், மூன்று ஆயுதப் படைகளும் 15,000 முதல் 36,000 வரை வளர்ந்தன. 2006ல் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை புதுப்பித்ததில் இருந்து, மூன்று படைகளதும் மொத்த அளவு 300,000 த்தை தாண்டியது. 1978ல் பாதுகாப்புச் செலவு மொத்த தேசிய உற்பத்தியில் 1.5 வீதமாக அல்லது 40 மில்லியன் அமெரிக் டொலராக இருந்தது. 1985ல் இது மொத்த தேசிய உற்பத்தில் 3.5 வீதத்தை அல்லது 215 மில்லியன் டொலர்களை எட்டியது. 2008ல் அது 4.5 வீதமாக அல்லது கிட்டத்தட்ட 1.7 பில்லியனாக அதிகரித்தது.

பாதுகாப்பு செயலாளர் இராஜபக்ஷவும் ஆயுதப் படைகளின் தளபதிகளும், யுத்தத்தின் போது தாம் கேட்ட அனைத்தையும் ஜனாதிபதி வழங்கியதாகவும் தமது இராணுவ திட்டங்களை முன்னெடுக்க அவர்களுக்கு சுதந்திரம் வழங்கியதாகவும் ஜனாதிபதி இராஜபக்ஷவை பாராட்டினர். இந்த நடவடிக்கையின் கொடூரம் யுத்தத்தின் கடைசி நாட்களில் காணக்கூடியதாக இருந்தது. ஜனவரி 20ல் இருந்து மே 7ம் திகதி வரை 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயரத் தள்ளப்பட்ட கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் எந்தவொரு அரசியலமைப்பு அல்லது சட்ட அதிகாரமும் இன்றி இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாங்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்துக்கு இராஜபக்ஷ அரசாங்கம் வழங்கும் ஆதரவில், அதன் யுத்தக் குற்றங்கள் மற்றும் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறியதை மூடி மறைப்பதையும் உள்ளடக்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இராணுவம் துணைப் படைக் குழுக்களையும் கொலைப் படைகளையும் உருவாக்கி விட்டுள்ளது. இவை அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசாங்கத்தையும் இராணுவத்தையும் விமர்சிக்கும் எவருக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன.

புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, இராணுவம் பெரும்பகுதி தமிழர்கள் வாழும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கை நிரந்தர ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றது. இராணுவம் வன்னி பிரதேசத்தில் புலிகளின் முன்னாள் தலைமையகம் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவில் இரு தலைமையகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கொழும்பைத் தளமாகக் கொண்ட வாரப் பத்திரிகையான நேஷன் பத்திரிகைக்கு பொன்சேகா தெரிவித்ததாவது: "அவற்றில் இருந்து இயங்கும் சிப்பாய்கள் அன்றாட பாதுகாப்பு வேலையில் ஈடுபடுவர். நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதற்காக அத்தகைய பிரிவுகளை தேவைப்படுகின்றன. இராணுவத் தளபதிகளின் பிரிவுகள் மேலதிக தாக்குதல் படைப்பிரிவுகளாக சேவையாற்ற வேண்டும்."

புலிகள் மீதான வெற்றியின் பின்னர், இராணுவத்தின் அளவும் நடவடிக்கைகளின் நோக்கமும் குறைக்கப்படுவதற்கு மாறாக, அவை பெருப்பிக்கப்படுகின்றன. இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கை 200,000 முதல் 300,000 வரை அதிகரிக்கப்படுவதோடு இராணுவம் நவீனமயப்படுத்தப்படும் என இதற்கு முன்னர் பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். விமானப் படைக்கும் இராணுவத்துக்கும் புதிதாக ஆள் சேர்க்கும் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இராணுவத்தின் மேலதிக விரிவாக்கமானது வெறுமனே கொழும்பு ஆட்சிக்கு எதிரான தமிழ் எதிர்ப்பை நசுக்கும் விவகாரம் அல்ல. "தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற பெயரில் அரசாங்கம் யுத்தத்தினதும் ஆழமடைந்துவரும் பூகோள நெருக்கடியினதும் பொருளாதாரச் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தத் தயாராகிக்கொண்டிருக்கின்றது. மார்ச் மாதம் வரையான 12 மாதங்களுக்குள் ஆடைத் தொழில் துறையில் மட்டும் 100,000 தொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளதாக தொழில் அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அரசாங்கத்தின் புதிய "பொருளாதார யுத்தத்துக்கு" விரோதமான எந்தவொரு வெகுஜன எதிர்ப்பையும் நசுக்குவதை இலக்காகக் கொண்டதே பாதுகாப்பு படைகளை கட்டியெழுப்புவதன் இலக்காகும்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் மீதான எதிர்ப்பை நசுக்குவதில் இராணுவம் கொடூரமான சாதனைகளை செய்துள்ளது. 1953 ஆகஸ்ட்டில், ஹர்த்தாலில் அல்லது தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் நாடு பூராவும் மூடப்பட்டு அரசாங்கம் மண்டியிடத் தள்ளப்பட்ட போது, பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 1971ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமும் 1989-1990ல் யூ.என்.பி. அரசாங்கமும், தீவின் தெற்கில் சிங்கள கிராமப்புற இளைஞர்களின் கிளர்ச்சியை நசுக்கிய போது முறையே 20,000 மற்றும் 60,000 பேர் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது, ஒரு மதிப்பீட்டின்படி 100,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் சிறுபான்மையினரின் அல்லது உழைக்கும் மக்களின் துன்பங்களை தீர்க்க இலாயக்கற்ற முதலாளித்துவ கும்பல், தமது ஆட்சியை காத்துக்கொள்ள மேலும் மேலும் இராணுவப் படைகளை சார்ந்து வருகின்றன. பிரதியுபகாரமாக இராணுவத்துக்கு பெரும் அதிகாரங்கள் கொடுக்கப்படுவதோடு ஆளும் ஸ்தாபனத்தில், அது ஒரு பிரதான காரணியாகவும் தலையெடுக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் இந்த முன்னெடுப்புகள் ஒரு பாய்ச்சலை எடுத்துள்ளன. இராணுவத் தலைமைத்துவத்தை பலப்படுத்தவும் அதே போல் ஆள்சேர்ப்பை விரிவுபடுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவானது அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகள் மீதான எந்தவொரு எதிர்ப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தயாரிக்கப்பட்டுவரும் வழிமுறைகள் பற்றி சகல உழைக்கும் மக்களுக்கும் விடுக்கப்படும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்.