World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: LTTE exile group announces "transnational government"

இலங்கை: புலிகளின் புலம்பெயர் குழுவானது "நாடுகடந்த அரசாங்கத்தை" அறிவிக்கின்றது

By Athiyan Silva and K. Ratnayake
3 July 2009

Use this version to print | Send feedback

இலங்கையில் கடந்த மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோல்விகண்ட பின்னர், அதன் வெளிநாடுகளில் வாழும் குழுவொன்று கடந்த மாதம் "ஒரு தற்பொழுதிற்்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை" அமைக்கும் ஒரு ஆரவாரமான திட்டத்தை அறிவித்துள்ளது. புலிகள்-சார்பு தமிழ்நெட் இணையம் ஆசிரியர் தலைப்பு ஒன்றை முதல் நாள் வெளியிட்டதன் பின்னர் ஜூன் 16 அன்று புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் செல்வராசா பத்மநாதன் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டார்.

மே மாதம் நடத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதல்களில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உட்பட இலங்கையில் இருந்த புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இராணுவத்தின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். யுத்த வலயத்தில் இருந்து தப்பிவந்த கிட்டத்தட்ட 300,000 தமிழ் பொது மக்கள் தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நெட் அறிக்கை, 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் புலிகளின் இராணுத் தோல்வியில் இருந்து அரசியல் படிப்பிணைகளை வெளிக்கொணராததோடு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தனியான தமிழீழ முதலாளித்துவ அரசுக்கான அரசியல் போராட்டத்தை இந்த புதிய "நாடுகடந்த அரசாங்கம்" தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் பிரகடனம் செய்துள்ளது. இந்த முன்நோக்கு நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு ஒரு மரணப் பொறி என்பது துல்லியமாக நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட அது இவ்வாறு தெரிவித்துள்ளது.

புலிகளின் வேலைத் திட்டமானது ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் தசாப்த காலங்களாக மேற்கொண்ட தமிழர்-விரோத பாகுபாட்டுக்கு எதிரான தமிழ் முதலாளித்துவத் தட்டின் பிரதிபலிப்புக்களை பிரதிநிதித்துவம் செய்தது. தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு ஒட்டு மொத்த சிங்கள மக்கள் மீதும் குற்றஞ் சாட்டியதோடு பொது மக்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொண்ட புலிகள், உழைக்கும் மக்கள் மத்தியிலான இனவாத பிளவை ஆழமடையச் செய்தனர். தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச முன்நோக்கை நிராகரித்த புலிகள், ஒரு முதலாளித்துவ தமிழீழத்தை ஸ்தாபிக்க பலவித பெரும் மற்றும் பிராந்திய வல்லரசுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தனர்.

பத்மநாதன் புலிகளின் சகல இராஜதந்திர சூழ்ச்சித் திட்டங்களிலும் அதே போல் சர்வதேச நிதி வழங்கல் மற்றும் ஆயுதக் கொள்வனவிலும் சம்பந்தப்பட்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் கடைசியாக எஞ்சியிருந்த பகுதிகளை இலங்கை இராணுவம் நெருங்கிய நிலையில், பிரபாகரன் புதிய சர்வதேச பிரிவுக்குப் பொறுப்பாக பத்மநாதனை நியமித்தார். கடைசி மாதங்களில் யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவும் கொழும்பு அரசாங்கத்தை தெளிவாக ஆதரித்த போதும் அந்த நாடுகளிடம் ஆதரவை எதிர்பார்த்து பத்மநாதன் ஒரு தொகை வேண்டுகோள்களை விடுத்தார்.

பத்மநாதன் தனது "நாடுகடந்த அரசாங்கத்தை" அறிவித்திருப்பது தொடர்ந்தும் பெரும் வல்லரசுகளின் பின்னால் திரிவதற்கும் கொடுக்கல் வாங்கல் செய்வதற்குமேயாகும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவுடன் சமரசம் செய்துகொள்ளும் முயற்சியில், அவர் தமது கோரிக்கைகளுக்காக ஒரு "அரசியல் தீர்வுக்கு" பேச்சுவார்த்தை நடத்தும் விருப்பத்தின் பேரில் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக பரீட்சார்த்தமாக சுட்டிக்காட்டினார். அமெரிக்காவும் இந்தியாவும் தமது பகைவர்களின் செலவில், குறிப்பாக சீனாவின் செலவில் கொழும்பில் தமது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறையாக, அரசியல் தீர்வொன்றுக்கு -தீவின் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கிடையிலான ஒரு பேரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தியா டுடே சஞ்சிகைக்கு ஜூன்25 அன்று வழங்கிய பேட்டியில் பத்மநாதன் பிரகடனம் செய்ததாவது: "எமது ஆயுதங்களை மெளனமாக்குவதற்கான முடிவு எமது தலைவர் உயிரிழப்பதற்கு முன்னரே எடுக்கப்பட்டது. நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்... தமிழ் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழர்களை ஒரு இனமாக அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்... தமிழ் மக்களின் இத்தகைய அபிலாஷைகள் யதார்த்தமாக்கப்படும் வரை நாம் அரசியல் ரீதியில் எமது போராட்டத்தை தொடர்வோம்."

தனது திசையமைவை தெளிவுபடுத்திய பத்மநாதன் தொடர்ந்தும் கூறியதாவது: "சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியாவும் மேற்குலகும், எமது புதிய பாதையை வரவேற்பதோடு அரசியலில் ஈடுபடுவதற்காக கதவைத் திறப்பதன் பேரில் எமது அமைப்பின் மீதான தடைகளை அகற்றுவதன் மூலம் அதற்கு வசதியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்." நேரடியாக புது டில்லிக்கு வேண்டுகோள் விடுத்த அவர், "ஏனைய நாடுகளுடனான, குறிப்பாக சீனாவுடனான தனது சொந்த பூகோள-அரசியல் போராட்டத்தில் இந்தியாவின் உண்மையான பொருத்தமான நண்பர்களாக தமிழ் மக்கள் இருப்பார்கள் என கருதுகிறோம். எதிர்காலத்தில் ஒரு நாள் இந்தியா இதை உணர்வதோடு சுய நிர்ணய உரிமைக்கான ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்," என்றார்.

இந்தியாவுக்கு புலிகளின் சேவைகளை வழங்குவதன் மூலம், பிரதியுபகாரமாக சில அரசியல் துணுக்குகளைப் தான் பெற்றுக்கொள்ளலாம் என பத்மநாதன் தெளிவாக கணக்கிடுகின்றார். ஆயினும், தனியான தமிழீழத்தை ஆதரிப்பது உள்நாட்டில், குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் பிரிவினைவாத இயக்கங்களை மட்டுமே உக்குவிக்கும் என அஞ்சிய இந்தியா, தெளிவாக அதை நிராகரித்து விட்டது. "அரசியல் தீர்வுன்றுக்கான" இந்த சகல அற்பத்தனமான சூழ்ச்சித்திட்டங்களும், தமிழ் முதலாளித்துவ கும்பலுக்காக ஒரு சிறந்த பேரம்பேசும் நிலையை தக்க வைத்துக்கொள்வதை இலக்காகக் கொண்டதே அன்றி, சாதாரண தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை நிலைமைகளை எளிதாக்குவதை இலக்காகக் கொண்டதல்ல.

பத்மநாதனின் "நாடுகடந்த அரசாங்கத்தின்" பிரிதான குறிக்கோள், தனது கும்பலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த புலிகளின் சிதறிப்போன அமைப்பின் மிச்சங்களை ஒன்றிணைப்பதற்கானதாகவே தோன்றுகிறது. பெரும் முழக்கங்களின் மத்தியில், வெளிநாட்டில் இந்த அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான "முன்னெடுப்புகளை" வரைவதற்காக புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமாரன் விசுவநாதனின் தலைமையிலான கல்விமான்கள் குழுவை அவர் நியமித்தார். எவ்வாறெனினும், இந்தக் கட்டத்தில், வெளிநாட்டில் எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு அவருக்கு உள்ளதா என்பது கூட தெளிவில்லை.

ஜூன் 9 அன்று ஏசியா டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையொன்று, புலிகளின் புலனாய்வு வலையமைப்புடன் சேர்ந்து இயங்கும் புலிகளின் கடும்போக்கு பிரிவு ஒன்று, புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிடுவர் என்ற பத்மநாதனின் தற்காலிக அறிவித்தலை எதிர்க்கின்றது என சுட்டிக் காட்டியது. இராணுவத்தின் கடைசி தாக்குதலில் இருந்து பிரபாகரன் உயிர் தப்பிவிட்டார் என புலிகளின் புலனாய்வு பிரிவு தொடர்ந்தும் தெரிவித்து வந்த போதிலும், அவர் கொல்லப்பட்டதை பத்மநாதன் அறிவித்திருந்ததை அந்த இணையம் சுட்டிக் காட்டியிருந்தது.

"பத்மநாதன் [இந்திய புலனாய்வுத் துறை] ரோ அல்லது சீ.ஐ.ஏ. அல்லது இலங்கை அரசாங்கத்திடம் சம்பளம் பெறும் ஒரு துரோகி என திட்டமிட்டு அவரை அவதூறு செய்யும்" ஒரு பிரச்சாரத்தை அவரின் எதிரிகள் தொடக்கியுள்ளதாக தெரிவிக்கும், டொரன்டோவை தளமாகக் கொண்ட ஆய்வாளர் டி.பி.எஸ். ஜெயராஜை அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியிருந்தது. "பிரபாகரனை காட்டிக்கொடுத்துவிட்டதாகக் கூட அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது." இவை அனைத்தும் புலிகளின் புலம்பெயர் அமைப்பில் கசப்பான குழு மோதல்களை சுட்டிக் காட்டுகின்றன.

அவரது அறிக்கையில், இந்த "நாடுகடந்த அரசாங்கம்", இலங்கையில் புலிகள்-சார்பு பாராளுமன்றக் குழுவான "தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்புடன் செயற்படும்" என கூறப்படுகிறது. புலிகள் "தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்" என்பதை அங்கீகரிப்பதன் அடிப்படையில், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு சற்று முன்னதாக 2001ல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணியே தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.

ஆயினும், புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு அரசாங்கத்தின் பக்கம் சாய முயற்சிப்பதோடு இந்தியாவுடன் தனது சொந்த உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டுள்ளது. புலம்பெயர் அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்படவிலலை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் ஈடுபடவில்லை... இலங்கையின் ஒற்றை ஆட்சியின் கீழ் ஒரு அரசியல் தீர்வை நாம் அடையும் வரை எமது போராட்டம் தொடரும்," என்றும் அவர் கூறினார்.

பத்மநாதனின் அறிவித்தலை இலங்கை ஊடக அமைச்சர் அனுர பிரயதர்ஷன யாப்பா நிராகரித்தார். "புலிகள் இப்போது இல்லை, அதனால் அது 'தற்பொழுதிற்கான நாடுகடந்த' அரசாங்கம் என சொல்லப்படுவதை அமைத்துள்ளதாக கூறிக்கொள்வதை பற்றி அரசாங்கம் அக்கறைகாட்ட முடியாது. புலிகள் இனிமேலும் ஒரு காரணியாக இருக்கமுடியாது," என அவர் தெரிவித்தார். பத்மநாதன் மற்றும் புலம்பெயர் தலைவர்களை கைது செய்வது உட்பட புலிகளின் எஞ்சியுள்ள சர்வதேச வலையமைப்பை நசுக்குவதில் கொழும்பு அரசாங்கம் சர்வதேச ஆதரவுக்கு முயற்சித்து வருகின்றது.

புலிகளின் தோல்வியை அடுத்து, பத்மநாதனோ அல்லது வேறு புலிகளின் தலைவர்களோ சாதாரண தமிழர்களின் உரிமைகளை மற்றும் வாழ்க்கைத் தரத்தை காக்கும் வேலைத்திட்டமொன்றை முன்வைப்பது ஒரு புறம் இருக்க, அதற்கான எந்தவொரு அரசியல் விளக்கத்தைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. கால் நூற்றாண்டு யுத்தத்தின் முழு அனுபவங்களும் புலிகளின் இனவாத அரசியலின் வங்குரோத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அரசியல் முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி, சகல விதமான தேசியவாதத்தையும் நிராகரித்து தொழிலாளர் வர்க்கத்தை அதன் சொந்த பொது வர்க்க நலன்களைச் சூழ ஐக்கியப்படுத்தும் சோசலிச முன்நோக்கின் பக்கம் திரும்புவதே ஆகும்.