World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government prepares broad attack on democratic rights

இலங்கை அரசாங்கம் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கு தயாராகின்றது

By S. Jayanth
30 May 2009

Use this version to print | Send feedback

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியை பிரகடனம் செய்துள்ள இலங்கை அதிகாரிகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தமது தாக்குதல்களை உக்கிரப்படுத்துகின்றனர். அரசாங்கம் நாட்டின் அவசரகால நிலைமையையும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அகற்றுவதை முழுமையாக நிராகரித்துள்ளது. இந்த சட்டம் "புலி சந்தேக நபர்களை" எந்தவொரு விசாரணையுமின்றி எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்க பாதுகாப்புப் படைகளை அனுமதிக்கின்றது.

தமிழ் பொதுமக்கள், அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகங்களை தொடர்ந்தும் சட்ட ஒடுக்குமுறைக்குள்ளாக்குவது, கொழும்பு அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் மற்றும் ஜனநாயக உரிமை துஷ்பிரயோகங்கள் மீது சுன்னாம்பு பூசி இந்த வாரம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (யூ.என்.எச்.ஆர்.சி) நிறைவேற்றப்பட்ட, இலங்கை முன்வைத்த தீர்மானத்தை பொய்யாக்கியுள்ளது. இந்தத் தீர்மானம், "சகல மனித உரிமைகளையும் முன்நிலைப்படுத்தி பாதுகாக்க இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்பதை" வரவேற்கிறது.

துருப்புக்களின் காவலின் கீழ் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்காமல் கிட்டத்தட்ட 300,000 தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை யூ.என்.எச்.ஆர்.சி. ஓரங்கட்டி விட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகள் பூராவும் அரசாங்க சார்பு கொலைப் படைகள் முன்னெடுத்த படுகொலைகள் மற்றும் "காணாமல் ஆக்குதல்" சம்பவங்கள் மற்றும் கைதிகள் சித்திரவதை செய்யப்படுதல் பற்றியும் கூட அது கண் திறந்து பார்க்கவில்லை. இந்த தீர்மானம் உழைக்கும் மக்களின் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மேலும் மீறுவதற்கு அரசாங்கத்தையும் இராணுவத்தையும் ஊக்குவிப்பதற்கு மட்டுமே உதவும் (பார்க்க "ஐ.நா.வின் சபை இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கின்றது) என நேற்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்திருந்தது.

செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பாதுகாப்புப் படைகள் "துடைத்துக் கட்டும் நடவடிக்கைகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளையும்" தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற நிலையில், அவசரகால நிலைமையும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் தொடர்ந்தும் இருக்கும் என பிரகடனம் செய்தார். "புலிகளுக்கு உதவி செய்த, உடந்தையாய் இருந்த மேலும் பலரை நாம் கைது செய்ய வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களை குற்றச்சாட்டுக்கள் இன்றி அல்லது விசாரணைகள் இன்றி எதேச்சதிகாரமாக கைதுசெய்து தடுத்து வைக்க இந்த அவசரகால விதிகள் இராணுவத்துக்கும் பொலிசுக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன. ஒரு வேலைத் தளத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பதன் மூலம் எந்தவொரு வேலை நிறுத்தத்தையும் அல்லது தொழிற்சங்க நடவடிக்கையையும் சட்ட விரோதமானதாக ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட முடியும். அவரால் அரசாங்கத்துக்கும் அரச அதிகாரத்துவத்துக்கும் எதிரான வர்க்க நடவடிக்கைகளை தடுக்கவும் ஊடகங்களை தணிக்கை செய்யவும் அவரால் முடியும். குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்க பயங்கரவாத தடைச்ச சட்டம் அதிகாரம் வழங்குவதோடு கைதிகளை அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும், சில சமயங்களில் சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டும் கைதிகளுக்கு தண்டனை வழங்கவும் அதை பயன்படுத்த முடியும்.

தடுப்பு முகாம்களில் உள்ள பாதுகாப்பு படையினரிடம் 9,100 பேர் "சரணடைந்துள்ளதாக டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையங்களில் இருந்து கசியும் மட்டுப்படுத்தப்பட்ட செய்திகள் கூட முற்றிலும் வேறுபட்ட நிலைமையை காட்டுகின்றன. இராணுவ புலனாய்வுத் துறை, துணை ஆயுதக்குழுக்கள் மற்றும் வஞ்சக தகவல்காரர்களுடன் செயற்படும் பாதுகாப்புப் படையினரால், நூற்றுக்கணக்கானவர்கள் குறிப்பாக இளைஞர்களும் யுவதிகளும் இழுத்துச் செல்லப்படுகின்றனர். 7,500 பேருக்கு "புணர்வாழ்வு அழிக்கப்படும்" என அமைச்சர் கூறிக்கொள்ளும் அதே வேளை, எஞ்சிய 1,600 கைதிகளின் தலைவிதி தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் செயற்படும் பாதுகாப்பு படையினரின் கைகளில் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக தமிழர்கள் அவசரகால விதிகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பலர் பல மாதங்களாக, வருடக்கணக்காக கூட விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, 2007 மார்ச் மாதம் சரிநிகர் அச்சகத்தின் உரிமையாளர்கள் வி. ஜெசிஹரன் மற்றும் அவரது மனைவி வி. வளர்மதியுடன் கைது செய்யப்பட்ட சண்டே லீடர் கட்டுரையாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யூ.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் பிரகடனம் செய்வது போல், "சிறுபான்மையினருக்கு எதிராக பாரபட்சங்கள் காட்டப்படுவதில்லை" என்பதை உறுதி செய்வதற்கு மாறாக, பாதுகாப்பு படைகள் சகல தமிழர்களையும் "பயங்கரவாதிகளாகவே" நடத்துகிறது. பொலிஸ் பாய்ச்சல், வீட்டுச் சோதனை மற்றும் வீதத் தடைகள் மற்றும் பாதைகளில் இடைவிடாத அடையாள அட்டை பரிசோதனை உட்பட பரந்தளவான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமே இந்த கைதுகளாகும். உழைக்கும் மக்களை பிரிக்கவும் தமது சொந்த ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் தசாப்த காலங்களாக சுரண்டிக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ தமிழர்-விரோத பாரபட்சங்களின் நேரடி உற்பத்தியே இந்த 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தமாகும்.

அவசரகால சட்டத்தை நீக்குமாறு இந்த வாரம் அழைப்பு விடுத்த எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), "கால நேரம் பாராமல் விடுத்த கோரிக்கை" என அரசாங்க அமைச்சர்கள் கண்டனம் செய்ததை அடுத்து அதற்காக மேலும் அழுத்தம் கொடுக்கவில்லை. தேசப்பற்று "வெற்றிக்" கொண்டாட்டங்களில் யூ.என்.பி. தலைவர்களும் உத்வேகத்துடன் இணைந்து கொண்டனர்.

1983ல் யுத்தத்தை முன்னெடுத்ததற்குப் பொறுப்பாளியான யூ.என்.பி., இராணுவ நடவடிக்கைகளை அது முன்னெடுத்தபோதும் இதே ஜனநாயக-விரோத வழிமுறைகளையே பயன்படுத்தியது.

யுத்தத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, குறிப்பாக ஊடகங்களில் உள்ளவர்களுக்கு எதிராக தமது பழிவாங்கும் நடவடிக்கையை இராணுவமும் பொலிசும் முன்னெடுக்கத் திட்டமிடுகின்றன. திங்கட் கிழமை அரசுக்குச் சொந்தமான ஐ.டி.என். தொலைக்காட்சி சேவையில் பேட்டியளித்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனநாயக உரிமைகளை ஆதரித்த பத்திரிகையாளர்களை புலி ஆதரவாளர்கள் என வகைப்படுத்தியதோடு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிடுவதாகவும் அறிவித்தார். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள், என அவர் மேலும் தெரிவித்தார்.

"ஊடக சுதந்திரத்துக்காக [கொழும்பில்] லிப்டன் சுற்று வட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்துவந்த குறிப்பிட்ட சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய ஊடக அனுபவசாலிகளும், மாதாந்தம் இலட்சக்கணக்கான ரூபாய்களை புலிகளிடமிருந்து சம்பளமாகப் பெற்றுள்ளார்கள்" என பொன்சேகா குற்றஞ்சாட்டினார். "இராணுவத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தடுத்ததாக" அவர்கள் மீது குற்றஞ்சாட்டிய அவர், "தேசத் துரோகத்துக்காக அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" எனவும் பிரகடனம் செய்தார்.

வியாழக் கிழமை, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன, புலிகளிடம் சம்பளம் பெற்ற சில "சிங்கள பத்திரிகையாளர்களையும்" பொலிஸ் அடையாளங் கண்டுள்ளதாக ஐ.டி.என். சேவைக்குத் தெரிவித்தார். அவர்களில் பலர் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்றும் எப்போதும் ஊடக சுதந்திரத்துக்காக கூச்சலிட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். "யுத்தக் குற்றங்களுக்காக இலங்கை தலைவர்களுக்கு தண்டனை வழங்குவதன்" பேரில், வெளியேறும் பொதுமக்கள் மீது புலிகள் சுடும் போது பொதுமக்கள் மீது இராணுவம் ஷெல் வீசியதாக "அவர்கள் புலிகளின் கட்டளைக்கேற்ப தவறான தகவல்களை வழங்கினர்" என அவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டினார்.

"இந்தத் துரோகங்களைப் பற்றி பொலிசாருக்கு அதிக விபரங்கள் தெரிந்த போதிலும், அவை அனைத்தையும் வெளியிடுவது மேலும் விசாரணைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்படுத்தலாம் என்பதால் அதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என விக்கிரமரட்ன பிரகடனம் செய்தார். துரோகத்துக்காக பத்திரிகையாளர்களுக்கு தண்டனை வழங்கும் இந்த அச்சுறுத்தல், அண்மைய வாரங்களில் புலிகளிடம் கடைசியாக எஞ்சியிருந்த பகுதியை இராணுவம் நெருங்கிய போது, இராணுவத்தால் தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டதைச் சூழ அரசாங்கம் சொல்லிய பொய்களை குறைந்த பட்சம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் அம்பலப்படுத்திய "சர்வதேச அமைப்புக்களையே" மிகவும் பரந்தளவில் இலக்காக்க கொண்டுள்ளது.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு விசாரணையை முடுக்கி விடுவதற்கு ஐரோப்பிய சக்திகள் எடுக்கும் முயற்சிகளை அரசாங்கமும் இராணுவமும் சிங்கள பேரினவாத குழுக்களும் கசப்புடன் எதிர்க்கின்றன. இறுதியில் இந்த விசாரணையை தொடங்கும் நகர்வு புதன் கிழமை யூ.என்.எச்.ஆர்.சி. கூட்டத்தில் தடுக்கப்பட்டது. அதே தினம், கனேடிய தூதரகத்துக்கு வெளியில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான சிங்கள அதி தீவிரவாதிகள், கற்களை வீசியதோடு புலிக் கொடியை ஏற்றி, தூதரக சுவரில் "புலிகளின் கொழும்பு தலைமையகம்" என பெயின்டினால் எழுதினர்.

ஏனைய ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து கனடாவும் யுத்தக் குற்ற விசாரணையை ஆதரித்தது இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய எந்தவொரு அக்கறையினாலும் அல்ல. மாறாக, கொழும்பில் மேற்கத்தைய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னேற்றுவதற்கே ஆகும். எவ்வாறெனினும், அரசாங்கத்தை மற்றும் இராணுவத்தை பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் நசுக்குவதையும் மற்றும் அவர்களின் குற்றங்கள் அம்பலப்படுவதை தடுப்பதையும் இலக்காகக் கொண்ட பரந்த பிரச்சாரத்தின் ஒரு பாகமே கனேடிய தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத கடுஞ்செயல்களாகும்.

இந்த முயற்சிகள் சிங்கள அதி தீவிரவாத சிறு குழுக்களோடு வரையறுக்கப்பட்டதல்ல. இந்திய வம்சாவளி தென் ஆபிரிக்கரும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகருமான நாவி பிள்ளே, கொழும்பு ஊடகங்களில் இனவாத தாக்குதல்களுக்கு இலக்கானார். அரசாங்கத்தின் பதிவுகளைப் பற்றிய அவர் மெல்லியதாக விமர்சித்ததற்காக அவர் ஒரு புலி ஆதரவாளர் என குறித்துக் காட்டப்பட்டார். யூ.என்.எச்.ஆர்.சி. யில் விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்து அவர் ஆற்றிய உரையில், பிள்ளே பிரகடனம் செய்ததாவது: "பொதுமக்களின் உயர் நிலை பற்றிய அடிப்படை கொள்கையை இரு தரப்பினரும் [இராணுவமும் புலிகளும்] பெருமளவில் அலட்சியம் செய்துள்ளனர் என நம்புவதற்கு பலமான காரணங்கள் உள்ளன."

இலங்கை அரசாங்கத்தின் குற்றங்களின் அளவு இன்னமும் அம்பலத்துக்கு வந்துகொண்டிருக்கின்றது. முதலில் கசிந்த ஐ.நா. அறிக்கைகள், ஜனவரி 20 முதல் மே 7 வரையான காலப் பகுதியில் யுத்த வலயத்தில் குறைந்தபட்சம் 7,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. மோதலின் இறுதி நாட்களில், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லண்டனை தளமாகக் கொண்ட டைம்சில் இந்த வாரம் வெளியான, ஐ.நா. தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை, கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 20,000 என கூறியதன் மூலம் கொழும்பு ஆளும் வட்டாரத்தில் ஒரு பெருங்கூச்சலை உருவாக்கிவிட்டுள்ளது.

"தேசத்துரோகத்துக்காக" பத்திரிகையாளர்களை இலக்கு வைக்க பாதுகாப்புப் படைகள் எடுத்துள்ள முடிவு, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்" என கொழும்பில் அடிக்கடி குற்றச்சாட்டுக்குள்ளாகும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு எதிராக பரந்த தாக்குதலொன்று தயாராகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறியே ஆகும். கைதுகள் மற்றும் தண்டனை வழங்கும் வழிமுறைகள் மட்டுமே பின்பற்றப்படாது. அரசாங்கத்தை விமர்சித்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, கடந்த ஜனவரி மாதம் பட்டப் பகலில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அரசாங்க சார்பு கொலைப் படைகள் சம்பந்தப்பட்ட ஏனைய பல சம்பவங்களில், பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை.

வளர்ச்சி கண்டுவரும் சமூக மற்றும் அரசியல் அதிருப்தி பற்றிய பீதியின் காரணமாக, அரசாங்கம் மிகவும் பரந்தளவில் யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய பொலிஸ் அரச இயந்திரத்தை பராமரித்து வருகின்றது. 26 ஆண்டுகால அழிவுகரமான யுத்தத்தின் பின்னர், அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனம் கிளறிவிட முயற்சித்த போதிலும், பெரும்பாலான சாதாரண சிங்கள மக்கள் யுத்த ஆரவாரத்தில் இணைந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, யுத்தத்தினதும் ஆழமடைந்துவரும் பூகோள பொருளாதார நெருக்கடியினதும் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க முயற்சிக்கின்ற நிலையில், தவிர்க்க முடியாத எதிர்ப்புக்கள் கிளம்பும். அரசாங்கமானது தமது வாழ்க்கைத் தரத்தையும் அடிப்படை உரிமைகளையும் காக்கும் முயற்சியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் ஆகிய புதிய "துரோகிகளை" கவனிக்க அவசரகால சட்டத்தை அமுலில் வைத்திருக்கின்றது.