World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN body covers up Sri Lankan government's war crimes

இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை ஐ.நா அமைப்பு மூடிமறைக்கின்றது

By Wije Dias
29 May 2009

Use this version to print | Send feedback

ஐ.நா மனித உரிமைகள் சபை (யூ.என்.எச்.ஆர்.சி) இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய எந்தவொரு சுதந்திரமான விசாரணையையும் தடுப்பதற்கான தீர்மானத்தை ஜெனிவாவில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றியதுடன், பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தின் வெற்றியையும் புகழ்ந்துள்ளது.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான ஐரோப்பிய சக்திகளின் வேண்டுகோளின்படி இந்த இரண்டு நாள் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் யுத்தகாலத்தில் இராணுவமும் புலிகளும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறியதை பற்றிய ஒரு விசாரணக்கு அழைப்புவிடும் சுவிஸ்லாந்தின் தீர்மானத்தை அவை ஆதரித்தன.

இலங்கை அரசாங்கம், அது யுத்தத்தை முன்னெடுத்த விதம், இராணுவம் தமிழ் பொது மக்களை கொலை செய்தது மற்றும் சுமார் 300,000 தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக தடுப்புக்காவலில் வைத்திருப்பதையும் மூடிமறைக்கும் ஒரு எதிர் தீர்மானத்தை சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் ஆதரவுடன் முன்வைத்தது. இரண்டு நாட்கள் நடந்த கசப்பான விவாதங்களின் பின்னர், யூ.என்.எச்.ஆர்.சி. 29க்கு 12 என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை நிறைவேற்றியது. 6 நாடுகள் வாக்கெடுப்பை பகிஷ்கரித்தன.

இந்தத் தீர்மானமானது யூ.என்.எச்.ஆர்.சி. அடிப்படை ஜனநாயக உரிமைகள், சர்வதேச சட்டம் ஆகியவற்றின் பாதுகாவலன் என உரிமை கோருவதை கேலிக்கூத்தாக்கின்றது. கொழும்பு அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் உள்நாட்டு யுத்தத்தை ஒரு உள்நாட்டு பிரச்சனை என்றே வலியுறுத்தினர். இத்தீர்மானம் "அரசுகளின் உள்நாட்டு சட்ட அதிகார வரம்புக்குள் தலையிடுவதில்லை என்ற கொள்கையை மீண்டும் உறுதிசெய்தது".

இலங்கை அரசாங்கத்தின் பிரச்சார மொழியில் எழுதப்பட்டிருந்த இந்தத் தீர்மானம், புலிகள் மக்களை "மனிதக் கேடயங்களாக" பாவிப்பதை கண்டித்து, தீவின் வடபகுதியை "விடுதலை" செய்ததை வரவேற்றதுடன் அரசாங்கம் தமிழ் அகதிகளின் தேவைகளை வழங்குவதாக அதை "பாராட்டி", "சகல மனித உரிமைகளையும் பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும்" அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வரவேற்றதோடு, இலங்கை பொருளாதாரத்திற்கு நிதி உதவி வழங்குமாறு "சர்வதேச சமூகத்திற்கும்" வேண்டுகோள் விடுத்தது.

இத் தீர்மானம் யதார்த்தத்தை தலைகீழாக நிறுத்தி வைத்துள்ளது. யுத்த வலயத்தில் சிக்கிக்கொண்டிருந்த 250,000 தமிழ் பொது மக்களை பற்றிய குற்றவியல் அலட்சியத்துடன், புலிகளின் கட்டுப்பாட்டில் இறுதியாக எஞ்சியிருந்த சிறிய பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் பல மாதங்களாக இரக்கமற்ற தாக்குதலை தொடுத்தது. ஐ.நா. கணிப்பின்படி ஜனவரி இறுதியிலிருந்து மே நடுப்பகுதி வரை 7,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள். பெரும்பாலானவர்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான குண்டு வீச்சினால் கொல்லப்பட்டனர். பெருந்தொகையானவர்கள் காயமடைந்தும் முடமாகியும் உள்ளனர்.

தமிழ் மக்களை "விடுதலை" செய்வதற்கு மாறாக, இராணுவம் அவர்களை கனமான ஆயுதம் ஏந்திய படையினரின் காவலின் கீழுள்ள, முற்கம்பிகளால் சுற்றிவளைக்கப்பட்ட பாரிய தடுப்புமுகாம்களில் அடைத்து வைத்துள்ளது. இந்த முகாம்களுக்கு இராணுவ புலனாய்வு ஒற்றர்களும், பலவித அரசாங்க சார்பு துணைப்படைகளும் "புலி சந்தேக நபர்கள்" என சொல்லப்படுபவர்களை கைது செய்து கண்காணாத சிறையில் அடைத்து வைக்க சுதந்திரமாக செயற்படுகின்றனர். தடுப்புக்காவலில் உள்ள பலர் போசாக்கின்மை, நோய் மற்றும் காயத்தினாலும் துன்பப்படுகின்றார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு தேவையான வசதிகள் ஒன்றும் கிடையாது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பலவித சர்வதேச அமைப்புக்கள், இந்த தடுப்பு முகாம்களில் உள்ள நிலைமைகள் சம்பந்தமாக ஆழமான கவலையை தெரிவித்துள்ளதுடன் அவற்றை பார்வையிடுவதற்கான தடைகளை நீக்குமாறும் அரசாங்கத்தை கேட்டுள்ளன. ஆயினும், இந்த யூ.என்.எச்.ஆர்.சி. தீர்மானம், தடுப்புக்காவலில் வைத்திருப்போரை அரசாங்கம் பராமரிக்கும் முறையையும் மற்றும் சர்வதேச உதவி நிதி நிறுவனங்கள் மட்டும் "பார்வையிட வழியமைக்கும்" அதன் தீர்மானத்தையும் அங்கீகரித்து முத்திரை குத்தியுள்ளது.

இந்தத் தீர்மானம், நாட்டின் தமிழ் சிறுபான்மையினர் மீது பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட உத்தியோகபூர்வ பாகுபாட்டின் உற்பத்தியான இந்த யுத்தத்தின் உண்மையான தோற்றுவாயை மூடி மறைப்பதோடு "சமாதானத்தையும் ஒற்றுமையையும்" உருவாக்குவதாக மகிந்த இராஜபக்ஷ அளித்த பொய் வாக்குறுதிக்கு நம்பகத் தன்மையும் அளிக்கிறது. இத் தீர்மானம் வடக்கு மற்றும் கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைப்பதன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை பலப்படுத்துவதை நோக்கமாக கொண்ட, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்தின் வலதுசாரி இனவாத தட்டினரின் கையை மட்டுமே பலப்படுத்தும்.

இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இந்த முடிவைப் பற்றி தெளிவாக குதூகளித்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான எமது முயற்சிக்கு ஒரு தெளிவான அங்கீகாரம் என பிரகடனம் செய்தார். வெளிநாட்டு அமைச்சர் றோகித போகல்லாகம, ''இலங்கை உலகரீதியில் பரந்தளவு ஆதரவைப் பெரும் அரசுகள் என்ற வரிசையில் முதலில் உள்ளது என்பதையே" இந்த வாக்கெடுப்பு காட்டுகிறது என பெருமைப்பட்டார்.

இந்த தீர்மானம் சிறீலங்காவிற்கு கிடைத்த மற்றொரு பெரிய வெற்றியென கொழும்பு ஊடகங்களின் இன்றைய ஆசிரியர் தலையங்கங்கள் புகழ்ந்தன. சிறீலங்காவின் ஜெனிவா தூதுவர் தயான் ஜெயத்திலகாவின் "புத்திகூர்மையான இராஜ தந்திர நடவடிக்கை" என புகழ்ந்த, டெய்லி மிரர் பத்திரிகை, இந்த "திகைபூட்டும் வெற்றி, ஆசியர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் தமது உண்மையான ஆற்றலை உணரத் தொடங்கியுள்ளதை" வெளிக்காட்டியுள்ளது என பிரகடனப்படுத்தியது.

ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தின் தலைப்பு, "பயங்கரவாத இராஜ தந்திரத்திற்கு மேலான வெற்றி" என பிரகடனப்படுத்தியது. ''டேவிட் ஜெனிவாவில் கோலியாத்தை தோற்கடித்து... மேற்குநாடுகளின் முகாம் இலங்கைக்கு சேறு பூசி அதை தொங்க விடுவதற்கு எடுத்த தீவிர முயற்சிகளை கண்டு, அதற்கு எதிராக உலகம் இலங்கைக்கு அதிகளவு ஆதரவு கொடுத்தது," என அது பிரகடனம் செய்துள்ளது. இந்த வலதுசாரி பத்திரிகை, அதன் முன்னைய ஆய்வுகளில், தானே உருவாக்கிய சொற் பதங்களை பயன்படுத்தி, மேற்கு நவ-காலனித்துவத்தின் எதிரில் எழுந்து நிற்பதற்கு இராஜபக்ஷவுக்கு முழு ஆதரவு கொடுத்தது.

ஐ.நா. வாக்கெடுப்பு நவ-காலனித்துவத்திற்கு எதிராக எழுந்து நிற்கவோ அல்லது இலங்கையின் இராஜதத்திர ஆற்றலுக்கோ எதுவும் செய்யவில்லை. தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்த சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட சகல நாடுகளும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தலைமையிலான நவ-காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு எதாவது ஒரு வழியில் ஆதரவு கொடுக்கின்றன. இலங்கையின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய சகல நாடுகளும் தங்களுடைய சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலனுக்காகவும், அதே போல் தமது சொந்த நாட்டில் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிரான ஒரு முன் பாதுகாப்புக்காவுமே ஆதரவளித்தன.

இலங்கை "டேவிட்டை" பொறுத்தளவில், தனது பக்கத்தில் ஒரு சில கோலியாத்துக்களை, விசேடமாக சீனாவை வைத்துக்கொள்ளாமல் மேற்குக்கு எதிராக எழுந்து நிற்பது முற்றிலும் சாத்தியமற்றதாக இருக்கும். தனது வழமையான குறைந்தபட்ச இராஜதத்திரத்தை ஒருபுறம் வைத்து விட்டு, அமெரிக்காவையும் ஐரோப்பிய சக்திகளையும் நேரடியாக சவால் செய்ய பெய்ஜிங் எடுத்த முடிவானது தனது செல்வாக்கை வலியுறுத்துவதற்கான சீனாவின் வளர்ச்சி கண்டுவரும் உறுதிப்பாட்டின் ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். குறிப்பாக பூகோள பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வருகின்ற நிலையில், நலிவுறும் வாஷிங்டனுக்கு ஒரு எதிர் சக்தியாக பெய்ஜிங்கைக் காண்பது இலங்கை மாத்திமல்ல, அதனால் ஊக்குவிக்கப்படும் சீனா மேலும் தன்முறைப்புப் பெறும்.

சீனா இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அரசியல் ஆதரவு மட்டுமன்றி நிதி மற்றும் இராணுவ உதவிகளையும் வழங்கியது. அமெரிக்கா மற்றும் ஜப்பானை விஞ்சும் பெஜிங், இப்போது இலங்கைக்கு மிகப் பெரிய உதவி வழங்கும் நாடாக உள்ளது. தெரியவந்துள்ளவாறு, ஆறு போர் விமானங்களை இலவசமாக வழங்கியது உட்பட, அது மிகப்பெரிய ஆயுத வழங்குனராக இருந்துள்ளது. அதற்கு பிரதியுபகாரமாக, இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் ஆய்வுகளை நடத்தும் உரிமையும், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்குக்கான அதன் வர்த்தக போக்குவரத்தை பாதுகாக்கும் பெஜிங்கின் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு தீர்க்கமானதாக இருக்கக் கூடிய, தீவின் தெற்கில் ஹம்பாந்தொட்டையில் ஒரு துறைமுகத்தை கட்டி அதை இயக்கும் உரிமையும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவும் இந்தியாவும் கூட யூ.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை ஆதரித்தது கொழும்பில் தமது செல்வாக்கை விரிவாக்கிக்கொள்ளவதற்கே. புது டில்லி, தனது "உள்நாட்டு விவகாரங்களில்", குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில், ஐ.நா. தலையீட்டை தவிர்ப்பதில் அக்கறை காட்டுவதோடு, தனது சொந்த செல்வாக்கு எல்லை என அது கருதும் பிராந்தியத்தில் போட்டியாளனாக சீனா வளர்ச்சியடைவதை எதிர்ப்பதிலும் அக்கறை காட்டுகிறது.

அமெரிக்காவினால் திரைமறைவில் உந்தப்படும் ஐரோப்பிய சக்திகள், யூ.என்.எச்.ஆர்.சி. மாநாட்டில் தமது பின்னடைவை கண்டு திகைத்துப் போனது தெளிவு. ஐரோப்பிய யூனியனின் அறிக்கை ஒன்று, இலங்கையில் "கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடி பற்றிய விடயத்தில் கவனம் செலுத்திய ஐ.நா. அமைப்பினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அந்த முடிவுகளுடன்" உடன்பட முடியாது, என "கவலை" வெளியிட்டது. "எங்களுடைய நியாயமான பிரேரணை நிராகரிக்கப்பட்டதையிட்டு நாம் கவலையடைகிறோம், மற்றும் இந்த முடிவினால் சபையினுடைய மதிப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது," என கனேடிய பிரதிநிதி டெரி கொமியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றிய இந்த தோரணைகள் ஒரு புறம் இருக்க, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டும், எப்போதும் தமது சொந்த நலன்களை மேம்படுத்தவே இந்த மனித உரிமைகள் பிரச்சினையை, விசேடமாக தெரிவு செய்து உபயோகிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பில் யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளிகள் என்ற விடயம் ஒரு புறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியமானது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நோர்வேயுடன் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளுக்கான சர்வதேச இணைத் தலைமை நாடுகள் என சொல்லப்படும் நான்கு நாடுகளில் ஒன்றாகும். யுத்தம் முடிவை நெருங்குவது அண்மைய மாதங்களில் தெளிவாகிய நிலையில், இந்த விவகாரம் கொழும்பு அரசாங்கத்தின் மீது அரசியல் நெம்புகோலை செலுத்துவதற்கு வசதியானதாக வரும் வரையும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த இணைத் தலைமை நாடுகள், இலங்கை அரசாங்கம் 2002ம் ஆண்டு கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தத்தை மீறியதையும் மனித உரிமை மீறல்களையும் நிராகரித்து வந்தன.

"கொள்கை" வேறுபாடுகள் என்ற பதாகையின் கீழ், தமது நலன்களுக்காக யூ.என்.எச்.ஆர்.சி. யில் பேரம் பேசிய பெரிய மற்றும் சிறிய சக்திகளின் இழிந்த தோற்றம், "திருடர்களின் குகை" என லீக் ஒவ் நேஷன்சுக்கு (League of Nations - நாடுகளின் கழகம்) லெனின் வகுத்த பிரசித்தி பெற்ற வரைவிலக்கனத்தை நினைவுபடுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மனித உரிமைகள் சபைக்கோ, ஐ.நா. பாதுகாப்பு சபைக்கோ அல்லது பொதுச் சபைக்கோ இருக்கின்ற அந்தஸ்த்து அல்லது அதிகாரமோ இல்லாத போதிலும், இந்த இராஜதந்திர மோதல்கள், பூகோள மோதல்கள் கூர்மையடைந்து வருவதற்கான அறிகுறியாக இருப்பதோடு மிகவும் ஆபத்தான எதிர்கால மோதல்களை முன்னறிவிக்கும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான கோளாறுகளின் அறிகுறியாகவும் இருக்கிறது.