World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president's speech: another warning to working people

இலங்கை ஜனாதிபதியின் உரை: உழைக்கும் மக்களுக்கு இன்னுமொரு எச்சரிக்கை

By K. Ratnayake
5 June 2009

Use this version to print | Send feedback

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியை கொண்டாடுவதற்காக புதன் கிழமை ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 40 நிமிடங்கள் ஆற்றிய நீண்ட உரையில் இராணுவத்துக்கு பாராட்டுக்களை குவித்ததோடு, அந்த உரையில் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு மூடி மறைக்கப்பட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

மத்திய கொழும்பின் சுற்றுலா கடற் பிரதேசமான காலிமுகத் திடலில் நடந்த இந்தக் கொண்டாட்டம், மே 19 அன்று இராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வெற்றியை அறிவித்ததில் இருந்து தொடர்ந்த 16 நாள் கொண்டாட்டங்களின் "சிறப்பு இறுதிக் கொண்டாட்டமாக" இருந்தது.

கடந்த இரு வாரங்களாக, அரசாங்கம் இராணுவத்தின் சாதனை பற்றிய வெகுஜன உற்சாகத்தை தூண்டிவிட முயற்சித்து வந்தது. புராதன சிங்கள மன்னர்களின் அவதாரமாக இராஜபக்ஷவை சித்தரிக்கும் பிரமாண்டமான படங்களுடன் கொழும்பிலும் மற்றும் மாகாண நகரங்களிலும் ஒவ்வொரு மூலையிலும் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், இத்தகைய கொண்டாட்டங்களின் இனவாத பண்பை வெளிக்காட்டியது.

மே 24 அன்று, கண்டியில் நடந்த விழாவொன்றில், பெளத்த உயர் பீடத்தினர், விஷ்வகீர்த்தி ஸ்ரீ சிங்கலாதீஸ்வர (உலகம் புகழும் சிங்களவர்களின் தலைவர்) என்ற தமது உயர்ந்த கெளரவத்தை இராஜபக்ஷவுக்கு வழங்கினர். தான் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" முன்னெடுப்பதாக இராஜபக்ஷ வலியுறுத்தும் அதே வேளை, தமது சொந்த அதிகாரத்தையும் சொத்துக்களையும் காப்பதே அதன் இலக்கு என்பதை சிங்கள ஆளும் கும்பல் தெளிவாக புரிந்துகொண்டுள்ளது.

புதன் கிழமை அணிவகுப்பானது இராணுவத்தின் பலத்தை காட்டவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்காக அழைத்துவரப்பட்ட சிப்பாய்கள் மற்றும் பொலிசாரை தங்க வைப்பதற்காக தலைநகரில் இருபதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன. வெகுஜனங்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்ட போதும் பல மணித்தியாலங்கள் பிரதான வீதிகள் மூடப்பட்டு இரண்டு நாட்களாக ஒத்திகை பார்க்கப்பட்டது.

புலி ஆதரவாளர்களை வேட்டையாடும் பேரில், கொழும்பில் தமிழர் பிரதேசங்கள் பூராவும் தேடுதல் வேட்டையை பொலிசார் முன்னெடுத்தனர். இதன் குறிக்கோள் நகரத்தில் உள்ள தமிழ் வெகுஜனங்களை அச்சுறுத்துவதே என்பது தெளிவு. பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகருக்குள் நுழையும் வாகனங்கள் மற்றும் மக்களை சோதனையிடுவதுடன் பாதுகாப்பு இறுக்கமாக்கப்பட்டிருந்தது. பொது ஜனங்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வருமாறும், அங்கிருந்து நிகழ்வு நடக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர். ஒரு சில டசின் கணக்கானவர்களே பங்குபற்றியமை இந்த நிகழ்வு பற்றிய பொதுவான ஆர்வமின்மையை காட்டியது.

அவரது முன்னைய உரைகளைப் போல், புலிகளை "தோற்கடிக்க முடியாது" என பெரும்பாலானவர்கள் நம்பிய ஒரு பிரமாண்டமான படையாகவும் மற்றும் அதை தோற்கடிக்க "ஒரு உலக இராணுவ சக்தி படைத்த இராணுவம்" தேவைப் பட்டது போலும் இராஜபக்ஷ சித்தரிக்க முயற்சித்தார். ஆனால், தனது தலைமையிலான இராணுவமும் ஜெனரல்களும் வெற்றியை பெற்றதாக ஜனாதிபதி பெருமைபட்டுக்கொண்டார்.

அணிவகுப்பில் இருந்த சுடு திறன் விடயத்தை மாற்றிக் காட்டியது. தலைக்கு ஒன்று என்ற அடிப்பைடையில் இலங்கை இராணுவமானது உலகின் பிரமாண்டமான இராணுவங்களில் ஒன்றாக உள்ளது. புலிகளின் ஒப்பீட்டளவில் சிறிய கொரில்லா படைகளுக்கு எதிராக தொலைதூரம் ஏவக்கூடிய ஆயுதங்களும் தளபாடங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆயுதங்கள், தளபாடங்கள், பயிற்சி, புலனாய்வு மற்றும் ஆலோசனையும் வழங்குவதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்று அனைத்து நாடுகளும் உதவின.

கனரக ஆயுதங்கள் தரித்த பிரமாண்டமான எண்ணிக்கையிலான துருப்புக்கள், ஆட்டிலறிகள் மற்றும் செக்கோஸ்லாவியா உற்பத்தியான செல்லிட பல்குழல் ரொக்கட் ஏவிகள், செல்லிட இந்திய ராடார்கள், சீன மற்றும் ரஷ்ய உற்பத்திகளான கவச வாகனங்கள் மற்றும் இந்தியா மற்றும் ஏனைய பல நாடுகளில் இருந்து கிடைத்த விமானத் தாக்குதல் துப்பாக்கிகளும் அணிவகுப்புக் காட்சியில் இடம்பெற்றன. அமெரிக்க கடற்காவல் படகுகள் மற்றும் இஸ்ரேல் மற்றும் சீன துப்பாக்கிப் படகுகள் உட்பட கடற்படை படகுகள் கரையை அண்மித்தவாறு பயணித்தன. அமெரிக்க பெல் ஹெலிகொப்டர்கள், ரஷ்ய மிக் விமானங்கள், சீன மற்றும் இஸ்ரேல் போர் ஜெட்டுகள் உட்பட விமானங்களும் பறந்தன.

தமது நலன்களை பாதுகாத்துக்கொள்ள ஆளும் தட்டிடம் பிரமாண்டமான ஆயுத இயந்திரங்கள் உள்ளன என்ற செய்தியை தொழிலாள வர்க்கத்துக்கு கூற இராஜபக்ஷவும் இராணுவ உயர் மட்டத்தினரும் விரும்பினர். புலிகளைத் தோற்கடித்த பின்னர் இராணுவத்தைக் குறைப்பதற்கு பதிலாக, துருப்புக்களின் எண்ணிக்கையை 50 வீதத்தால் 300,000 வரை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்தார். இளைஞர்களை இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்க அரசாங்க பேச்சாளர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில், "பயங்கரவாதத்தை" தோற்கடிக்க தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாக பிரகடனம் செய்யும் பத்திரங்களை மூன்று படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் இராஜபக்ஷவிடம் கையளித்தனர். இந்தச் செயல், சிங்கள மன்னர்களின் நாட்களை நினைவூட்டுவதும் மற்றும் இராஜபக்ஷவின் அதிகரித்துவரும் எதேச்சதிகார ஆட்சிக்கான அறிகுறியுமாகும்.

தனது உரையில் இராஜபக்ஷ பிரகடனம் செய்ததாவது: "புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல." புலிகளின் பிடியில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்க தமது உயிரைத் தியாகம் செய்தமைக்காக "வீர துருப்புக்களை" அவர் பாராட்டினார். இன்னுமொரு பாசாங்குத் தோரணையில், அவர் சில வசனங்களை தமிழிலும் பேசினார்.

எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தின் இனவாதப் பண்பை மூடி மறைப்பது சாத்தியமற்றது. புலிகளிடம் இருந்து "விடுவிக்கப்பட்ட" சுமார் 300,000 தமிழ் பொதுமக்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளதோடு பயங்கரமான நிலைமைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். யுத்தத்தின் கடைசி மாதங்களில், புலிகளின் பிராந்தியத்துள் இராணுவம் அதனது கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் ஆயிரக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்ததோடு பெருந்தொகையானவர்களை ஊனமாக்கியது.

யுத்தத்துக்கு ஆதரவளித்தமைக்காக ஆசிய மற்றும் ஆபிரிக்க அரசாங்கங்களை இராஜபக்ஷ குறிப்பாக பாராட்டினார். "ஆசியாவில் உள்ள எமது அயல் நாடுகளுடன் நாம் நேர்மையான, நெருக்கமான மற்றும் சினேகப்பூர்வமான உறவுகளை வைத்துள்ளோம். அராபிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் கூட எங்களால் உண்மையான நல்ல உறவுகளை கட்டியெழுப்பிக்கொள்ள முடிந்தது," என அவர் கூறினார்.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) விசாரணைக்காக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையும் இராஜபக்ஷ விட்டுவிட்டார். இந்த தீர்மானத்தை சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் பலமான ஆதரவுடன் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தது. இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், மனித உரிமைகளைப் பற்றி எந்த அக்கறையும் காட்ட வில்லை. மாறாக, இராஜபக்ஷவை நெருக்கவும் சீனா போன்ற எதிரிகளுக்கு எதிராக கொழும்பில் தமது சொந்த நலன்களை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகளைப் பயன்படுத்துகின்றன.

"எமது பூமியின் கிட்டத்தட்ட 24,000 துணிவுமிக்க பிள்ளைகள் சுதந்திரத்துக்காக பாடுபட்டு தமது தாய்நாட்டில் நிரந்தரமாக ஓய்வெடுக்கின்றனர். அதே போல், கிட்டத்தட்ட 5,000 இலங்கை பிள்ளைகள் நிரந்தரமாக ஊனமுற்றுள்ளனர்," என இராஜபக்ஷ பாராட்டினார். "ஏனையவர்களின் உயிர்களைக் காக்க, தேசத்துக்காக தமது பிள்ளைகளையும் அன்புக்குரியவர்களையும் அர்ப்பணித்த" தாய்மார், தந்தைமார் மற்றும் மனைவிமாரையும் அவர் பாராட்டினார்.

உண்மையில், அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் பீரங்கிக்கு இரையாகப் பயன்படுத்தப்பட்ட உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற சிப்பாய்கள், நாட்டின் மிகவும் வறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பொருளாதாரத்துக்காக இராணுவத்தில் சேர்ந்தவர்கள். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்கள் மீது 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் கடுமையான தாக்கத்தின் விளைவின் ஒரு பாகமே, புலிகள் மீதான இராணுவத்தின் வெற்றி தொடர்பான அதிகாரத்துக்குட்படுத்தப்பட்ட பொதுமக்களின் பிரதிபலிப்பாகும்.

இராஜபக்ஷவின் உரையின் மிகவும் கெடுநோக்கான பார்வை, அவர் எதிர்காலத்துக்கு வரும்போது வெளிப்பட்டது. அவர் முன்னர் தேசத்தைக் கட்டியெழுப்ப ஒரு "பொருளாதார யுத்தத்தின்" தேவையைப் பற்றி பேசினார். பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வரும் நிலையில், இதற்கு ஒரே ஒரு அர்த்தமே உள்ளது: அது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நகர்ப்புற, கிராமப்புற வறியவர்களின் சமூக நிலைமைகள் மீதான பெரும் தாக்குதலாகும்.

அரசாங்கம் எதிர்ப்புக்களை பொறுத்துக்கொள்ளாது என்பதை இராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். "அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் போது, கருத்து வேறுபாடுகள் மற்றும் நோக்கம் பற்றிய அணுகுமுறை காரணமாக பல தடைகள் இருக்கும். இவை தாமதத்துக்கு வழிவகுக்கும். கருத்து, அரசியல் கொள்கைகள், நோக்கம் பற்றிய பிரச்சினையும் நாட்டுக்கானதாக இருக்க வேண்டும்... முன்னணிக்குச் செல்லவேண்டியது [அரசியல்] போராட்டம் அல்ல, நாடே முன் செல்ல வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்புக்கள், அடிப்படையில் புலிகள் தோல்வியடைந்தவுடன் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் வெற்றிக்காகப் பாராட்டிய உத்தியோகபூர்வ எதிர்க் கட்சிகளை இலக்காக்க கொண்டதல்ல. இந்தக் கருத்துக்கள், தமது உரிமைகளை கேட்க வேண்டாம், தமது வாழ்க்கைத் தரங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்க வேண்டாம் மற்றும் அரசாங்கத்தின் "தேசத்தைக் கட்டியெழுப்பும்" திட்டங்களை எதிர்க்க வேண்டாம் என தொழிலாளர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகும்.

மக்கள்வாத அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது என இராஜபக்ஷ தெரிவித்தார். "மக்கள்வாத அரசியல் முடிவுகளின் அடிப்படையில் உயர் கல்வியை முன்னெடுப்பது, மின்சாரம் வழங்குவது, நகர அபிவிருத்திகளை செய்வது மற்றும் பல விடயங்களை முன்னெடுப்பது நாட்டுக்கு பெரும் காயத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்" என அவர் கூறினார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் கனவை அரசாங்கம் யதார்த்தமாக்கியுள்ளது என பிரகடனம் செய்த ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது: "எமது நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கூட, அதே நடவடிக்கை போன்றே இருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டும்." இந்தக் கருத்து தொழிலாள வர்க்கத்துக்கு இன்னுமொரு எச்சரிக்கையாகும். இராஜபக்ஷ அரசாங்கம், புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தில் பயன்படுத்திய அதே இரக்கமற்ற மற்றும் பொலிஸ் அரச வழிமுறைகளுடன் அதன் "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்க திட்டமிடுகிறது என்பதே அந்த எச்சரிக்கை ஆகும்.