World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Sri Lanka becomes a diplomatic battleground

இலங்கை இராஜதந்திர மோதல் களமாகின்றது

By Peter Symonds
25 May 2009

Use this version to print | Send feedback

இலங்கைக்கு கடந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ-மூன் மேற்கொண்ட விஜயம், தீவின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் முடிவை அடுத்து உக்கிரமான சர்வதேச பகைமைகளுக்கு தெளிவான நிவாரணமாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் நிலைப்பாட்டை பிரதிபலித்த பான், தடுப்பு முகாம்களுக்குள் நுழைவதற்கு அதிக வசதிகளைக் கோரினார். இந்த முகாம்களில் இலங்கை இராணுவம் 265,000 தமிழ் அகதிகளை அடைத்து வைத்துள்ளது. தமிழ் சிறுபான்மையினரின் துன்பங்களை அணுகுவதன் மூலம், 26 ஆண்டுகால மோதல்களின் "காயங்களை குணப்படுத்துமாறு" கொழும்பு அரசாங்கத்துக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வராம் கொழும்பு மீதான அழுத்தத்தை அதோ போக்கில் வைத்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை கடந்த வியாழக் கிழமை தொடர்பு கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், தடுப்பு முகாம்களுக்கு ஐ.நா. முகவரமைப்புக்களுக்கு நுழைவு வசதி வழங்க வேண்டும் எனக் கோரியதோடு தமிழ் சிறுபான்மையினருடனான சமரசத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் நிச்சயமாக யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பாளிகள். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கடைசியாக எஞ்சியிருந்த சிறிய நிலப் பிரதேசத்தை இலங்கை இராணுவம் நெருங்கிய நிலையில், ஜனவரியில் இருந்து யுத்த வலயத்தில் குறைந்தபட்சம் 7,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. பான் உடன் வந்த பத்திரிகையாளர்கள் பிரதேசத்தின் மீது பறந்துகொண்டிருந்த போது எடுத்த படங்கள், நாசமான கட்டிடங்கள், எரிந்து போன வாகனங்கள் மற்றும் குண்டுகளால் ஏற்பட்ட குழிகள் உட்பட அழிவின் காட்சிகளை காட்டின.

எவ்வாறெனினும், அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெளியிடும் கவலைகளுக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான எந்தவொரு உண்மையான அனுதாபத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இதே சக்திகள் இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை ஆதரித்ததோடு, 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்தத்தை இராணுவம் வெளிப்படையாக மீறியதையும் பொதுமக்கள் இலக்குகள் மீது அது குண்டுத் தாக்குதல் நடத்தியதையும் மற்றும் அரசாங்க சார்பு கொலைப்படைகளின் நடவடிக்கை உட்பட ஜனநாயக உரிமை மீறல்களையும் பற்றி திட்டமிட்டு அமைதி காத்தன.

பிரிட்டன் மற்றும் பிரான்சின் தலைமையில், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 17 உறுப்பு நாடுகள் இலங்கை பற்றி கலந்துரையாடுவதற்காக இந்த வாரம் ஒரு விசேட கூட்டத்தில் அமர்ந்தன. உண்மையில், இதே உறுப்பு நாடுகள், ஐரோப்பிய சக்திகள் நேரடி பங்குபற்றலுடன் அல்லது உடந்தையுடன் ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தக் குற்றங்களைப் பற்றி மற்றும் பொதுமக்கள் படுகொலைகள் பற்றி மற்றும் வெளிப்படையான ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றி கலந்துரையாட ஒரு விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான தமது அரசியல் செல்வாக்கை பெருப்பித்துக்கொள்ளும் நெம்புகோளாக இந்த யுத்தக் குற்ற விசாரணை அச்சுறுத்தல்களை சாதாரணமாக சுரண்டிக்கொள்கின்றன, அதே போல், மிகவும் அத்தியாவசியமாகியுள்ள சர்வதேச நாணய நிதிய கடனை தடுக்கின்றன. அடிப்படை கவனம் எதுவெனில், எதிர் சக்திகள், எல்லாற்றுக்கும் மேலாக சீனா, கொழும்பில் தனது நிலையை பலப்படுத்திக்கொள்ள யுத்தத்தை பயன்படுத்தியுள்ளது. சீனா தன் பக்கம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில், யுத்த நிறுத்தத்துக்காக அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுத்த அழைப்பை இராஜபக்ஷவால் ஓரங்கட்ட முடிந்தது, என மேற்கத்தைய எழுத்தாளர்கள் சற்று கசப்புடன் குறிப்பிட்டுள்ளனர்.

உதாரணமாக, கடந்த வாரக் கடைசியில் வெளியான சிட்னி மோர்னிங் ஹெரால் பத்திரிகையில் "இலங்கை கிழக்கு நோக்கி அடியெடுத்து வைக்கின்றது" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை ஒன்று, எவ்வாறு இராஜபக்ஷவால் மேற்கத்தைய அழுத்தத்தை நிராகரிக்க முடிந்தது என கேள்வியெழுப்பியுள்ளது. "என்டர் த ட்றகன் மற்றும் ஏனைய புதிய நண்பர்களின் உபசரிப்பும்" என அது விவரித்துள்ளது. "பெருமளவில் அதிவேகப் பாதை, இரு மின்சார நிலையங்கள் மற்றும் இராஜபக்ஷவின் சொந்த நகரான தெற்கில் உள்ள ஹம்பந்தொட்டையில் ஒரு புதிய சர்வதேச கப்பல் துறைமுகம் போன்ற பார்வைக்குத் தோன்றும் பெரும் திட்டங்களுக்காக, சீனா கடந்த ஆண்டு வழங்கிய நிதி உதவி கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலராக உள்ளது."

சீனா இலங்கை இராணுவத்துக்கு ஒரு பெரும் ஆயுத விநியோகஸ்தராகும். கட்டணம் இன்றி ஆறு போர் விமானங்களை வழங்கியதாகவும் தெரியவருகின்றது. அதற்கு பிரதியுபகாரமாக, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கான அதன் தீர்க்கமான வர்த்தகப் பாதையை தக்க வைத்துக்கொள்ளும் அதன் மூலோபாயத்தின் ஒரு பாகமாக, ஹம்பந்தொட்ட துறைமுகமும் அதே போல் தீவின் வடமேல் கடற் பகுதியில் எண்ணெய் அகல்வாராய்ச்சி செய்யும் உரிமையும் பெய்ஜிங்கிற்கு கிடைத்துள்ளது. தீவில் தனது முதலீட்டாளர்களுக்காக "ஒதுக்கப்பட்டுள்ள வலயங்களை" பற்றி கலந்துரையாட கடந்த வாரம் சீன கைத்தொழில் துறை பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தனர்.

இதுவரை ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளை மட்டும் உள்ளடக்கிய, யூரோயேசியன் பூமியை பிரதானமாகக் கொண்ட பிராந்திய குழுவான, சங்ஹாய் கூட்டுத்தாபன அமைப்புக்குள் [எஸ்.சி.ஓ.] இலங்கை வரவேற்கப்படுகிறது" என சிட்னி மோர்னிங் ஹெரால்ட் குறிப்பிட்டிருந்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி டவ்ரோவின் படி, இந்த ஆண்டு இலங்கையும் பெலருஸும் எஸ்.சி.ஓ. வின் முதல் பேச்சுவார்த்தை பங்காளிகளாகும்.

அரசியல் தளத்துக்குள், சீனாவின் ஆதரவு குறிப்பாக அதிக உதவியாக இருந்தது. இலங்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடுவதையோ அல்லது எந்தொரு தடை பிரேரணையையும் கொண்டுவருவதையோ பெய்ஜிங்கும் மொஸ்கோவும் மீண்டும் மீண்டும் தடுத்தன. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரு விசேட கூட்டத்தை நடத்துவது தொடர்பாக பிரதிபலித்த போதும், சீனாவின் மற்றும் ரஷ்யாவின் தலைமையில் 12 நாடுகள், ஒரு "பயங்கரவாத குழுவுக்கு" எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டமைக்காக கொழும்பை பாராட்டி ஒரு எதிர் தீர்மானத்தை முன்வைத்ததோடு இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நிதி வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தன.

குறிப்பிடத்தக்க வகையில், தென்னிந்தியாவில் தமிழர்கள் மத்தியில் எழுந்த ஆத்திரத்தை தணிப்பதன் பேரில் யுத்த நிறுத்தமொன்றுக்கு ஆதரவளித்து வந்த இந்தியாவும், இந்த எதிர் தீர்மானத்தில் தனது பெயரை சேர்த்துக் கொண்டது. எதிரி சீனாவின் செல்வாக்கு கொழும்பில் அதிகரிப்பதையிட்டு தெளிவாகவே கவலையடைந்துள்ள புது டில்லி, தனது செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பாகமாக நீண்டகாலமாக கருதிவரும் ஒரு நாட்டில் தனது நிலையை மீண்டும் பற்றிக்கொள்ள முயற்சிக்கின்றது.

கொழும்பில், இராஜபக்ஷ அரசாங்கம், சீனாவின் ஆதரவு தீர்க்கமானது என்பதில் மிகவும் விழிப்புடன் உள்ளது. இந்த மாத முற்பகுதியில், இராஜபக்ஷவின் சகோதரர் கோடாபயவின் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சு, இலங்கை தொடர்பாக "மேற்கத்தைய சக்திகளின் பாசாங்கு மற்றும் பகட்டுத்தனம்" என கண்டனம் செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. தனது விமர்சனத்துக்கு இலக்காகுபவர்களை பெயர் குறிப்பிடாத அதே வேளை, சீனா மற்றும் ரஷ்யா உட்பட ஏனைய நாடுகளின் "மனப்பூர்வமான ஆதரவுக்கு கொழும்பு நன்றி பாராட்டுகிறது" என அந்த அறிக்கை பிரகடனம் செய்கின்றது.

கடந்த வாரம், ஜனாதிபதி இராஜபக்ஷ, அவரது சகோதரர் கோடாபய மற்றும் இலங்கை இராணுவத் தளபதியும் தமது வெற்றி உரைகளிலும் அறிக்கைகளிலும் சீனாவுக்கு புகழாரம் சூட்டினர். அரசாங்கத்தின் பங்காளியும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பெளத்த பிக்குவுமான அதுரலியே ரத்ன, "பயங்கரவாதிகளை காப்பாற்ற" முயற்சித்தமைக்காக அமெரிக்காவையும் பிரிட்டனையும் பகிரங்கமாக திட்டியோடு "சீனாவும் ரஷ்யாவும் எமது நண்பர்கள்" எனவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் வெளியான ஆசிரியர் தலைப்பில், வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை வெற்றியாரவாரத்துடன் பிரகடனம் செய்ததாவது: "சிறிய இலங்கையின் வெற்றியானது சந்திரனில் மனிதன் இறங்கியது போல், மனிதத்துவத்தின் நினைத்துப் பார்க்க முடியாத அரிதான தடங்களுக்கும் இரண்டாம் பட்சம் அல்ல. அதன் யுத்தம் மேற்கத்தைய சக்திகளுக்கு எதிராக தாவீது-கோலியாத் போரிட்ட பொறியைக் கொண்டுள்ளது... ஐ.நா. புலிகளை ஒரு உறுப்பு நாடாகக் கருதி இலங்கை யுத்தத்தில் செயற்பட்டிருக்குமானால், அத்தகைய சூழ்நிலையிலும் கூட பயங்கரவாதத்தை நசுக்கும் இயலுமை இலங்கைக்கு இருப்பது அதிசயமாகும்."

இலங்கையில் நடந்த யுத்தம் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அல்ல. மாறாக, அது தசாப்தகால உத்தியோகபூர்வ தமிழர் விரோத பாகுபாட்டின் விளைவாக ஏற்பட்ட இரத்தக்களரி மிக்க இனவாத மோதலேயாகும். இந்த வெற்றி ஒரு அற்புதம் அல்ல. பெரிய மற்றும் சிறிய, சகல சக்திகளதும் ஆதரவைக் கொண்ட இலங்கை இராணுவம், எண்ணிக்கையிலும் ஆயுதப் பலத்திலும் புலிகளை விஞ்சியிருந்ததோடு அது, தனது முற்றுகை யுத்தத்தை பொதுமக்களின் உயிர் பற்றி வரம்பு மீறிய அலட்சியத்துடனேயே முன்னெடுத்தது.

கடந்த வாரம் புலிகளின் எஞ்சியிருந்த போராளிகளையும் கொன்றதை அடுத்து, இலங்கை பல்வேறு விதமான மோதல்களின் மையமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்பட்ட வெளிப்படையான பிளவு, பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பிளவுகள் ஆழமடைந்து வருவது, பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலும் தனது எதிரிகள் மீது பொருளாதார மற்றும் மூலோபாய முன்னேற்றத்துக்காக போராடும் நிலையில், பரந்த சர்வதேச மோதல்களின் ஆபத்து வளர்ச்சியடைவது பற்றிய ஒரு அளவுகோளாகும்.