World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka and India seek to patch up relations

இலங்கையும் இந்தியாவும் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன

By Wije Dias
4 June 2009

Use this version to print | Send feedback

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மாதங்களில் இலங்கை இராணுவம் தொடுத்த தாக்குதல்களால் சேதமாகிப் போனது. அந்தத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். வட இலங்கையில் பொதுமக்களின் பாதுகாவலர்கள் என காட்டிக்கொண்ட அரசியல்வாதிகள், தென்னிந்தியாவில் தமிழ் வாக்காளர்கள் மீது ஒரு கண் வைத்திருந்த நிலையில், இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் இந்திய பொதுத் தேர்தலின் மறுபக்கமாக இருந்தது. தேர்தல் முடிவடைந்ததோடு புலிகளின் இறுதி தாக்குதல் பலமும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், இரு அரசாங்கங்களும் உறவுகளை சீர்செய்ய முயற்சிக்கின்றன.

கொழும்பு அரசாங்கத்தின் கொடூரமான யுத்தத்தை அங்கீகரித்து, ஒரு மதிப்பீட்டின்படி 300,000 தமிழ் பொதுமக்களை இழிவான தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதற்கும் ஒப்புதல் அளித்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) இலங்கையின் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா ஆதரித்ததன் மூலம், கடந்த வாரம் அது திட்டமிட்ட நகர்வை மேற்கொண்டது. இந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கையில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்காக அமெரிக்காவின் ஆதரவுடன் ஐரோப்பிய சக்திகள் மேற்கொண்ட முயற்சியை எதிர்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.

யூ.என்.எச்.ஆர்.சி. விசேட கூட்டத்தில் இருந்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்தியா 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை புணர்வாழ்வு வேலைகளுக்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவதாக பின்னர் அறிவித்தார். "அதற்கு மேற்கு நாடுகள் என்ன செய்யும்?" என அவர் வியந்துரைத்தார்.

இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ புது டில்லிக்கு செல்லவுள்ளார். இது புலிகள் மீதான வெற்றியைப் பிரகடனப்படுத்திய பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டு பயணமாகும். கடந்த வாரம் ஊடகங்களுக்கு பேசிய இராஜபக்ஷ, இந்தியாவுடனான நெருங்கிய உறவுகள் பற்றி உணர்ச்சிவசப்பட்டார். இரு தேசங்களுக்கும் இடையில் ஒரு புதிய உறவுகளின் யுகம் ஒன்று தொடங்கும். இந்தியா எனது அயல்நாடும் நண்பனுமாகும்," என தெரிவித்த அவர், தென்னிந்திய அரசான தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களையும் சந்திக்க விரும்புவதாவும் மேலும் தெரிவித்தார்.

யூ.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா எடுத்த முடிவு எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. புது டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக இராஜபக்ஷவின் யுத்தத்தை இரகசியமாக ஆதரித்தது. 1991ல் முன்னாள் காங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் புலிகளை தடை செய்த முதல் நாடு இந்தியாவாகும். ஒரு தனியான தமிழ் அரசை ஸ்தாபிக்கும் புலிகளின் இலக்கு, இந்தியாவினுள்ளேயே பிரிவினைவாத இயக்கங்களை மட்டும் ஊக்குவிக்கும் ஒரு ஆபத்தான ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் காரணியாக இந்திய ஆளும் தட்டால் கருதப்பட்டது.

அதே சமயம், குறிப்பாக தமிழ் நாட்டில் இலங்கை யுத்தம் சம்பந்தமான பரந்த வெகுஜன எதிர்ப்பால் வரம்புக்குள் தள்ளப்பட்டிருந்தது. ஆயினும், அது இலங்கை இராணுவ சிப்பாய்களை பயிற்றுவிக்க உதவுவதிலும், புலிகளின் இலகு விமானங்களை கண்டுபிடிக்க தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ராடார் உபகரணங்களை விநியோகிப்பதிலும் புது டில்லியை தடுக்கவில்லை. மற்றும் புலிகளின் விநியோகக் கப்பல்களை மூழ்கடிப்பதற்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும் தெரியவருகிறது. இவை அனைத்தும் "தாக்குதலுக்கு பயன்படாத" உதவிகள் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டன.

ஜனவரி முற்பகுதியில் புலிகளின் நிர்வாக மையமான கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து அதன் எதிர்ப்பு துரிதமாக குழம்பிப் போனது. 250,000 க்கும் அதிகமான பொதுமக்களுடன் புலி போராளிகளும் வடகிழக்கு கரையோரப் பகுதியில் உள்ள குறுகிய பிரதேசத்துக்குள் விரட்டப்பட்டனர். இலங்கை இராணுவம் மறுப்புத் தெரிவித்த போதிலும், சுற்றி வளைக்கப்பட்ட பிரதேசத்தை பொடியாக்க கடுமையான ஆட்டிலறி மற்றும் விமானத் தாக்குதல்களை முன்னெடுப்பதில் அதற்கு ஈவிரக்கம் இருக்காததோடு இதன் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் சர்வதேச ரீதியில் எதிர்ப்புக்களும் கிளம்பியது.

இந்தியாவில், இலங்கை யுத்தம் தொடர்பாக பெருமளவில் மெளனமாக இருந்த அரசியல்வாதிகளும் கட்சிகளும், தேர்தல் காலத்தில் ஒவ்வொருவரும் இலங்கை தமிழர்களின் தீவிர பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டு திடீரென போட்டியில் இறங்கினர். தமிழ் நாட்டில், முதலமைச்சர் மு. கருணாநிதி இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நெருக்கவேண்டும் என புது டில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்த போதிலும், அது பயனளிக்கவில்லை. கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் தேசிய கூட்டணியின் பங்காளியாகும்.

மே 13 அன்று தேர்தல் முடியும் வரை இலங்கை யுத்தம் பற்றி அதன் முன்னெச்சரிக்கையான சமநிலைப்படுத்தும் செயலில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டிருந்து. இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த போதே, மே 19 அன்று புலிகள் மீதான வெற்றியை இராஜபக்ஷ அறிவித்தார். இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மையை வழங்கியது.

இரண்டு நாட்களின் பின்னர், மே 21 அன்று, இரு உயர் மட்ட இந்திய அதிகாரிகளான வெளியுறவுச் செயலாளர் சிவ சங்கர் மேனன் மற்றும் பிரதம பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணனும் இராஜபக்ஷவுடன் மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்புக்கு பறந்தனர். இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்ததாவது: "இலங்கையில் இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு உட்பட நிவாரணம், புணர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் சமரசம் பற்றி கவனத்தை குவிமையப்படுத்த வேண்டிய தருணம் இது என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்."

ஒரு கலப்படமற்ற மொழியில், வழமைபோல் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க தனது தயார் நிலையை புது டில்லி வெளிப்படுத்தியது. இலங்கை தமிழர்களின் துன்பம் பற்றி அவ்வப்போது பகிரங்கமாக முதலைக் கண்ணீர் வடித்த தமிழ் நாடு உட்பட, இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் முழு பாசாங்குத்தனத்தையும் இந்த துரிதமான மீள் நல்லினக்க நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு வாரத்தின் பின்னர், அரசாங்கத்தின் குற்றவியல் யுத்தத்தை அங்கீகரிக்கும் இலங்கை தீர்மானத்துக்கு சார்பாக யூ.என்.எச்.ஆர்.சி. விசேட கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது.

இரு தரப்பும் நகருகின்ற வேகமும், பந்தயத்தில் உள்ள மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான ஒரு அறிகுறியாகும். எதிரிகளான பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவின் செலவில் கொழும்புடனான தமது செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ளும் என்பதையிட்டு புது டில்லி கவலைகொண்டுள்ளது. இந்தியா போலன்றி, சீனாவும் பாகிஸ்தானும் இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்று உள்நாட்டு அரசியல் தேவைகளால் உந்தப்படவில்லை.

சீனா இராணுவ உதவிகளை மட்டும் வழங்கவில்லை, மாறாக நிதி உதவியும் செய்துள்ளதோடு ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை யுத்தம் பற்றிய கலந்துரையாடலை தடுப்பதில் இராஜதந்திர உதவியும் செய்துள்ளது. அதற்கு பிரதியுபகாரமாக, சீனாவுக்கு கடலோரத்தில் எண்ணெய் அகல்வாராய்ச்சிக்கான உரிமையும் மற்றும் மத்திய கிழக்குக்கும் ஆபிரிக்காவுக்குமான சீனாவின் இன்றியமையாத வர்த்தகப் பாதைக்கு அருகில் உள்ள இலங்கையின் தென்பகுதியில் ஹம்பந்தொட்டையில் ஒரு பிரதான துறைமுகத்தையும் கட்டியெழுப்பி அதை பராமரிக்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

தனது செல்வாக்குப் பிராந்தியமாக கருதும் பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவது பற்றி இந்தியா ஆழமாக அக்கறை காட்டுகிறது. வெளிவிவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜி கடந்த அக்டோபரில் இந்திய பாராளுமன்றத்தில் தெரிவித்ததாவது: "[இலங்கை யுத்த அகதிகள் மீதான] எமது அக்கறையில், தீவின் மூலோபாய முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது, மற்றும் அது அவர்களுடைய பாதுகாப்பு மட்டும் அல்ல, அது எங்களுடைய பாதுகாப்புடன் நெருக்கமாக இணைந்துள்ளது... எங்களது கொல்லைப் புறத்தில் சர்வதேச விளையாட்டு வீரர்களின் மைதானம் ஒன்றை வைத்திருக்க நிச்சயமாக நாம் விரும்பவில்லை."

இந்திய கூட்டுத்தாபனங்களும் வர்த்தக வாய்ப்புகளுக்காக இலங்கையை எதிர்பார்த்துள்ளன. தீவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடுவதாக கடந்த வாரம் அரசுக்குச் சொந்தமான இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி.) அறிவித்தது. ஏற்கனவே 150 விநியோக நிலையங்களை இயக்கிவரும் ஐ.ஓ.சி., அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இன்னும் 300 நிலையங்களுக்கு அங்கீகாரம் பெற அரசாங்கத்துக்கு விண்ணப்பித்துள்ளது. இந்தியாவின் 300 மில்லியன் டொலர் புணர்வாழ்வுப் பொதியானது இன்னும் கூடுதலான இந்திய வர்த்தகத்தை திறப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகும். குறிப்பாக அழிந்து போயுள்ள தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் மலிவு உழைப்பை சுரண்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், தன் பங்கிற்கு தன்னால் பெறக்கூடிய சகல அரசியல் மற்றும் மூலோபாய ஆதரவை எதிர்பார்க்கின்றது. உயர்ந்த இராணுவச் செலவினால் ஏற்பட்ட பிரமாண்டமான கடனால் பொருளாதாரம் சரிந்து போயுள்ளதோடு கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது. அதே சமயம், பூகோள பின்னடைவின் காரணமாக அதன் பிரதான ஏற்றுமதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை கூட்டுத்தாபன தலைவர்கள், இன்னமும் வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவின் பொருளாதாரத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்புக்கான நீண்டகால திட்டங்களுக்காக அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன.

இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு இன்றியமையாத அரசியல் ஆதரவை நீண்டகாலமாக வழங்கியுள்ளது. 1971ல் தீவின் தெற்கில் கிராமப்புற இளைஞர்களின் ஆயுத எழுச்சியை இலங்கை பாதுகாப்புப் படைகள் நசுக்கிய போது, அது கொழும்பை ஆதரித்தது. இதன்போது 20,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை உடன்படிக்கையை கைச்சாத்திட்டு, தீவின் வடக்கை ஆக்கிரமிப்பதற்காக இந்தியத் துருப்புக்களை அனுப்பியதோடு விரிவடைந்துவந்த பிரிவினைவாத கிளர்ச்சியை நசுக்கியதன் மூலம் 1987ல் புது டில்லி இலங்கையை காப்பாற்ற கைகொடுத்தது.

கடந்தவாரம் சிங்கப்பூரில் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர், ரோஹித்த போகொல்லாகம, இந்தியா "ஒரு முக்கியமான பங்காளி" என இந்து பத்திரிகைக்குத் தெரிவித்தார். தமிழ் சிறுபான்மையினர் மீதான யுத்தத்துக்கு தனது "அரசியல் தீர்வை" அமுல்படுத்த இந்தியாவின் ஆதரவை இராஜபக்ஷ அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். "இந்தியா எப்பொழுதும் [இலங்கையின்] உள்நாட்டு வளர்ச்சி முன்னெடுப்பில் ஒரு பங்காளியாக இருந்து வந்துள்ளது... இலங்கையில் சம்பந்தமான பிரேரணைகளில் புது டில்லி உள்நாட்டு சூத்திரத்துக்கு மதிப்பளித்துள்ளது," என அவர் கூறினார்.

"அரசியல் தீர்வு" பற்றிய கலந்துரையாடலானது இலங்கையின் 26 ஆண்டுகால யுத்தம் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" அல்ல, மாறாக அது ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தசாப்தகால தமிழர் விரோத பாகுபாட்டின் விளைவே என்ற உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது. தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு ஒப்பனை சலுகைகளை வழங்க தயாராகும் அதே வேளை, இலங்கை அரசியலமைப்பின் சிங்கள மேலாதிக்கவாத மற்றும் அரச இயந்திர பண்பையும் சீர்திருத்தும் எண்ணம் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு இல்லை. அவரது "அரசியல் தீர்வின்" ஊடாக முன்செல்லும் பணி, இந்தியாவின் உதவியுடன் இலகுவானதாக இருக்கும்.

எவ்வாறெனினும், இராஜபக்ஷ, புலிகள் மீதான இராணுவ வெற்றியின் பின்னர், கொழும்பில் சிங்கள வெற்றி ஆரவார சூழ்நிலையை கிளப்பிவிட்டார். மூன்று ஆண்டுகால யுத்தம் பூராவும், அவர் மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட சிங்கள அதி தீவிரவாத கட்சிகளின் ஆதவிலேயே தங்கியிருந்தார். இராஜபக்ஷவின் சொந்தக் கட்சியில் உள்ள சிங்கள பேரினவாதிகளைப் பற்றி கூற வேண்டியதில்லை. இத்தகைய கட்சிகள், தமிழ் சிறுபான்மையினருக்கு சலுகைகள் வழங்குவதை கடுமையாக எதிர்ப்பதோடு இந்தியாவை தமிழர்களின் உரிமைகளின் நயவஞ்சகமான ஆதரவாளனாக கருதுகின்றன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடக்க நடவடிக்கைகள், இந்தியா மற்றும் சீனா மட்டுமன்றி, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சக்திகளும் கொழும்பில் செல்வாக்கு செலுத்துவதற்காக மேற்கொள்ளும் பரந்த மூலோபாய மோதல்களின் பாகமாகும். இலங்கையில் யுத்தத்தின் முடிவு இனவாத மோதல்களுக்கு முடிவுகட்டுவதற்கு மாறாக, இந்த போட்டிகள், தமது சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய குறிக்கோள்களை அடைவதற்காக அரசியல் பிளவுகளை சுரண்டிக்கொள்ளும் பெரும் வல்லரசுகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் பதட்ட நிலைமையை எரியூட்டுவதாகவே தோன்றுகிறது.